/ கலி காலம்: புலி பார்த்த கதை...

Sunday, June 10, 2012

புலி பார்த்த கதை...

காக்கை குருவி கூட கண்ணில் தென்படுவது குறைந்து விட்டது. இந்த லட்சணத்தில், புலி பார்த்ததாக புருடா வேறு விடுகிறாயா...என்று நீங்கள் கேட்கலாம். (வீடியோ காட்சிகள் பதிவின் இறுதியில்...). நம் வளர்ச்சியின் பொருட்டு நகரங்களை எல்லாம் நாம் பொட்டலாய் மாற்றியிருக்கிறோம். காடுகளிலும் நாம் கை வைத்து இயற்கையின் இடுப்பை ஒடிக்க நம்மாலான முயற்சி செய்கிறோம். zoo தவிர வேறெங்கும் புலி என்றொரு விலங்கு உலாவும் என்று எவரேனும் சொன்னால் நக்கலாக சிரிக்கும் அளவுக்கு அல்லவா நாம் நம் இயற்கை வளங்களை பாதுகாக்கிறோம்.

பல வருடம் பற்றுடன் காடுகளில் திரிந்தால், புலியின் புத்தியும் மனதும் இளகி நமக்கு காட்சி தரும் சாத்தியக்கூறுகள் உண்டு என்று நம்ப வைக்கிறது நான் புலி பார்த்த கதை.

குளிருக்கு போர்வை போர்த்த கோடை தயாராகும் பிப்ரவரி மாதம். வாழ்க்கையின் மறக்க முடியாத நிமிடங்களில் ஒன்றை எங்களுக்காக ஏற்பாடு செய்து வைத்திருந்த காலத்தின் ஒரு துளி அதிகாலை பொழுது. guide இரண்டு பேர் நாங்கள் மூன்று பேர், பல வருடம் மனதில் படிந்த‌ ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் மற்றுமொறு trekking துவங்கினோம்.புலி பற்றிய பதிவு என்பதால் காட்டின் அழகு பற்றி கதை சொல்லாமல் சட்டென்று விஷயத்திற்கு வருவோம்.

அந்த உச்சக்கட்ட நிமிடங்களுக்குள் எங்களை இழுத்துச் செல்வது போல‌ langur குரங்குகள் ஒலி எழுப்பியபடி, வழி நடத்தியபடி இருந்தன. ஒரு புலியோ சிறுத்தையோ எங்கள் பக்கத்தில் எங்கோ இருக்கிறது என்பது உறுதியாகி விட்டது.
புலியின் சென்ட் மணம் மூக்கு உணர்கிறது. அதன் கால் தடங்கள் கடவுள் போன பாதை போல பரவசம் ஏற்படுத்துகிறது.  காய்ந்த சருகுகளின் மீது நடக்கும் போது கூட, பூ மீது நடப்பது போல் சத்தமின்றி நடக்கும் சாதுரியம் மிக்க புலியை எப்படி கண்டுபிடிப்பது?..புலியே முன்வந்து "இது தான் நான். பார்த்துக் கொள் உன் ஏக்கத்தை தீர்த்துக் கொள்" என்று தானே தரிசனம் காட்டினால்தான் உண்டு.

அந்த நொடியை எதிர்பார்த்து ஏங்கி ஏங்கியே நாக்கு வறண்டு போனது. அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. "அபூர்வ சகோதரர்கள்" படத்தில் golf  மைதான புல்வெளியை ஒட்டியுள்ள புதர்களில் புலி வால் தெரியுமே...அது போல ஒரு வால். கனவா? நினைவா? கண்டுபிடிக்க கிள்ளிப் பார்க்க வேண்டுமே...அது கூட செய்யத் தோன்றாமல் சிலை போல நின்ற எங்களிடம் சிலிர்ப்பு என்ற உணர்வு மட்டும் உயிர் பெற்றிருந்தது.

வானவில் தரையில் நடப்பது போல் புதர்களுக்கு இடையில் இலைகளின் நிறங்களும் புலிவால் நிறமும் நகர, கண்கள் நிலைக்குத்தி காட்சியில் பதிந்தது. நாங்கள் ஒரு வெட்டவெளியை கடக்க இருக்கும் நிலையில் புலியும் காட்டின் ஒரு சோலையிலிருந்து மறு சோலைக்குள் புக‌ அதே வெட்ட வெளியை நோக்கி வந்து கொண்டிருந்தது.

புலியின் புத்திசாலித்த‌ன‌த்தை பாருங்க‌ள்...திற‌ந்த‌வெளிக்கு வ‌ருவ‌த‌ற்கு முன், நின்று நிதானித்து தன் முன்னே உள்ள‌ ப‌குதி முழுவ‌தையும் scan செய்த‌து. நெஞ்சின் ப‌ட‌ப‌ட‌ப்பு காத‌ருகே வைக்க‌ப்ப‌ட்ட‌ க‌ல்யாண‌ ம‌ண்ட‌ப‌ ஒலிப்பெருக்கி போல‌ இடி இடிக்க‌ ச‌ர‌ணாக‌தி நிலையில் ச‌ட்டென்று அனைவ‌ரும் நேர்கோட்டில் ப‌டுத்து விட்டோம்.

புலியின் க‌ண்க‌ள் எங்க‌ளை ஒரே ஒரு நொடி நேரே துளைத்த‌து. உயிரை உறிஞ்சுவது போன்ற கூரிய பார்வை! அந்த‌ பார்வையின் வீரிய‌ம் உட‌லெங்கும் ப‌ர‌வி, காலைக் குளிரிலும் முதுகுத் த‌ண்டில் வ‌ழிய‌த் துவ‌ங்கிய‌ விய‌ர்வையில் இய‌ற்கையின் வ‌ன‌ப்பும் சிற‌ப்பும் அத‌ன் வீச்சு குறித்த‌ பிர‌மிப்பும் ஜொலித்த‌து. "ஏன்டா, க‌ணிப்பொறி முன் அமர்ந்தே காலத்தை களிப்பதாக நினைத்துக் கொண்டு கருத்தின்றி கழித்து, காய்ந்து கிடக்கும் வாழ்க்கையின் வாட்டத்தை போக்க, வார இறுதிகளில் காட்டுக்கு ஓடி வரும் கோமாளிக் கூட்டத்தில் ஒருவன் தானே நீ?" என்றொரு எக‌த்தாள‌ப் பார்வை...அந்த‌ப் பார்வையை ச‌ந்திக்க‌ முடியாம‌ல் நான் த‌லை குனிந்த‌து ப‌ய‌த்தினால் ம‌ட்டும் இருக்காது. குற்ற‌ உண‌ர்ச்சி. ந‌ம் அனைவ‌ருக்கும் இருக்க‌ வேண்டிய‌ குற்ற‌ உண‌ர்ச்சி...எப்பேர்ப‌ட்ட புவி உயிர் சுழ‌ற்சியின் அங்க‌மாக இருக்கிற‌து புலி.அது அழிந்து கொண்டிருப்ப‌தில் ந‌ம் அனைவ‌ருக்குமே ப‌ங்கிருக்கிற‌து என்ப‌தை நாம் அனைவ‌ருமே அறிவோம்.

ந‌ல்ல‌ வேளை...ம‌னுச‌ பயலுகளின் முக‌த்திலேயே முழிக்க‌க் கூடாது என்று நினைத்திருக்குமோ என்ன‌வோ, பார்வையை வேறுப‌க்க‌ம் திருப்பி குறுக்கு வாட்டில் ந‌ட‌க்க‌த் துவ‌ங்கியது. "உயிர் ஊசலாடியது" என்பதை இங்கே "உயிர் ஊஞ்சலாடியது" என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். வ‌யிற்றுக்கும் வாய்க்கும் இடையே காற்று உருளை ஓடுவது போல ஒரு ஆட்டம்...அந்த உருளை தான் உயிரோ?...இமைக‌ள் இய‌ங்க‌ ம‌றுக்க‌, மூச்சு சத்தம் மூங்கில் காற்றாக‌, விய‌ர்வை ஆறாக‌ வ‌ழிந்தோட‌, வார்த்தைக‌ள் "வ‌ன‌வாச‌ம்" போய்விட‌,மூளையின் வேலை நிறுத்த‌ம் கால் வ‌ரை தெரிந்திட‌, எண்ண‌ங்க‌ள் ஏதுமின்றி "வெற்றிட நிமிடத்தில்" துவைத்தெடுத்த‌ ம‌னதை, காய‌ப்போட்டு மாய‌ம் செய்து, க‌ண் முன்னே ம‌றைந்த புலி காலத்துக்கும் மறக்காது.

நம் corporate யோகிகள் தியான வகுப்புக்களுக்கு ஆயிரக்கணக்கில் பணம் வாங்குகிறார்கள். இந்த புலி ஆசானை பாருங்கள்...இரு நிமிட நடையில் நமக்கு "meditation" பயிற்சி கொடுத்து விட்டு க‌ம்பீர‌மாக‌ க‌ட‌ந்து போகிற‌து...ந‌க‌ர‌த்து "ம‌ன‌ப் ப‌யிற்சி" வ‌குப்புக‌ளில் CD த‌ருவார்க‌ளே என்கிறீர்க‌ளா? எத்த‌னையோ சேன‌ல்க‌ளில் எத்த‌னையோ நேர‌ங்க‌ளில் எங்கோ ஒரு காட்டில் ஏதோ ஒரு புலி ந‌ட‌ந்து போகும் காட்சி வ‌ரும். அதை பார்த்தால் போதும் சார். அன்றைக்கு அதைவிட வேறு "meditation" தேவையில்லை.

video link: (ஆங்காங்கே வீடியோ உதறுவதில் என் பதறலும் புரியுமே!). இறுதியில் Sambar மான் செய்யும் எச்சரிக்கை ஒலியையும் ரசிக்கத் தவறாதீர்கள்!

http://www.youtube.com/watch?v=iULDmLN9xME

2 comments:

  1. அருமையான கட்டுரை மற்றும் காணொளி. எங்கே எடுத்தது என்று சொல்லவேயில்லையே நண்பரே....

    நாங்களும் சமீபத்தில் புலி பார்க்கச் சென்றிருந்தோம் பாந்தவ்கர் காடுகளுக்கு....

    ReplyDelete
  2. "உயிர் ஊசலாடியது" என்பதை இங்கே "உயிர் ஊஞ்சலாடியது" என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். வ‌யிற்றுக்கும் வாய்க்கும் இடையே காற்று உருளை ஓடுவது போல ஒரு ஆட்டம்...அந்த உருளை தான் உயிரோ?...இமைக‌ள் இய‌ங்க‌ ம‌றுக்க‌, மூச்சு சத்தம் மூங்கில் காற்றாக‌, விய‌ர்வை ஆறாக‌ வ‌ழிந்தோட‌, வார்த்தைக‌ள் "வ‌ன‌வாச‌ம்" போய்விட‌,மூளையின் வேலை நிறுத்த‌ம் கால் வ‌ரை தெரிந்திட‌, எண்ண‌ங்க‌ள் ஏதுமின்றி "வெற்றிட நிமிடத்தில்" துவைத்தெடுத்த‌ ம‌னதை, காய‌ப்போட்டு மாய‌ம் செய்து//

    திகில் உட‌னான‌ த்ரில் வியாபித்த‌ வ‌ர்ண‌னை!

    ReplyDelete