/ கலி காலம்: May 2013

Sunday, May 5, 2013

நாம் எப்பவுமே இப்படித்தானா?


"ஜம்பக்கு ஜம்பக்கு" என்று நாம் கூத்தடித்துக் கொண்டிருக்கையில், ஒரு பக்கம் பார்த்தால் பாகிஸ்தான் நம் ஆட்களை அவ்வப்பொழுது பார்சல் கட்டி அனுப்பிக் கொண்டே இருக்கிறது. மற்றொரு பக்கம் சீனா பனிமலையில் என்ன, பக்கத்து தெருவில் கூடாரம் போட்டாலும் கூட, அடை மழையில் அசையாது நிற்கும் எருமை மாடு போல செயலற்று இருக்க உறுதி பூண்டிருக்கிறோம் நாம். நாளொரு ஊழல் நாற்றமெடுக்கும் நாட்டில், ஒரு புதுவித மோசடியும் அதைவிட புதுவிதமான சமாளிப்பும் நடந்திருப்பதை நாம் அறிந்தால் நமக்கு கூடுதல் பொழுதுபோக்கு தானே?

சமீப காலமாக நாளிதழ்களில் அரைப் பக்க விளம்பரம் ஒன்றை நாம் அடிக்கடி பார்த்திருக்கலாம். பல்வேறு தொழில்களில் இறங்கியிருக்கும் ஒரு பெரிய "பரிவாரம்" தரும் விளம்பரம் அது. பாரத மாதாவை தொழுவது மட்டுமே தங்கள் நிறுவனத்தின் கொள்கை என்ற ரேஞ்சில் இருக்கும் இந்த விளம்பரங்கள். அதுவும் கடந்த சில தினங்களாக அந்த குழும நிறுவனம் கொடுக்கும் விளம்பரம் நகைச்சுவையின் எல்லை! வேறொன்றுமில்லை சார்...மே ஆறாம் தேதி ஒரு நாள் நாம் அனைவரும் "ஜனகனமன" பாட வேண்டுமாம். பண்பாட்டுக்கும் தனி மனித மற்றும் சமூக ஒழுக்கத்திற்கும் நாம் தான் எப்போதோ ஜனகனமன "பாடி" விட்டோமே என்கிறீர்களா? சரிதான் சார். ஆனால் இந்த விளம்பரம் மூலம் இவர்கள் கேட்பது, நாம் வீட்டிலோ, தெருமுனையிலோ கூட்டம் கூட்டமாக கூடி தேசிய கீதம் பாட வேண்டுமாம். என்னே ஒரு தேசப்பற்று என்று நமக்கு உடம்பெல்லாம் புல்லரிக்குமே? நாம் கூட்டமாக தேசிய கீதம் பாடி அதை வீடியோ எடுத்து சமூக வலைதள ஊடகங்களில் upload செய்ய வேண்டுமாம். கின்னஸ் சாதனையாம். இதில், மோசடி பரிவாரத்தின் ஒரு லட்சம் ஊழியர்கள் வேறு லக்னோ நகரில் தேசிய கீதம் பாடுவார்களாம்! இதைப் படித்தவுடன் "கூட்டத்தில் கூடி நின்று கூவி பிதற்றலன்றி நாட்டத்தில் கொள்ளாரடி" வரி வேறு ஞாபகம் வந்து தொலைக்கிறது சார்.  சரி விடுங்கள். இப்பொழுது, எதற்கு இவர்கள் திடீரென்று இப்படி பாரதத் தாயின் பாதத்தை பற்றியிருப்பதாக கூவிக் கூவி விளம்பரம் கொடுக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? வாருங்கள்...

இந்த நிறுவனம் தங்கள் "சேவை"யை விரிவுபடுத்த மக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் நிதி திரட்டியது. அதாவது, கடனாகக் கொடுத்ததை மக்கள் பங்காக பெற்றுக் கொள்ளலாம் என்பது போலத் திட்டம். "செபி" அமைப்பிடம் அனுமதி பெறாமல், இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி இந்த வழியில் பணம் திரட்டியது நம் தேசபக்தி நிறுவனம். இவர்களை தட்டிக் கேட்க முடியாமல் தவித்த‌ செபி அமைப்பு வேறுவழியின்றி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குப் போட்டது. திரட்டிய முதலீட்டை மக்களிடம் திருப்பித் தர வேண்டும் என்று உத்தரவிட்ட உச்ச நீதி மன்றத்திற்கும் செபிக்கும் ஒரே கல்லில் இரண்டு அடி போட திட்டம் போட்டது பாலைவனத்தை தன் பெயரில் வைத்திருக்கும் நிறுவனம்.

தாங்கள் அந்த பணம் முழுவதையும் செபியிடம் கொடுத்து விடுவதாகவும், அவர்களே அதை மக்களிடம் திருப்பித் தரட்டும் என்றும் நீதிமன்றத்தில் சொல்லி, அதற்கான முதல் தவணையை செபியிடம் கொடுத்தது. தனது முதலீட்டார்கள் பலருக்கு வங்கிக் கணக்கு கூட இல்லையென்றும், அவர்களுக்கு தபால் மூலம்தான் பணம் வழங்க முடியுமென்றும் புருடா விட்டது. முதல் கட்டமாக ரிஜிஸ்டர் தபாலில் செபி அனுப்பிய அனைத்து முகவரிகளும் தவறு என்று திரும்பி வந்து விட்டன. பொறுப்பை ஏற்றுக் கொண்ட செபி தலையை பிய்த்துக் கொண்டு நிற்கிறது.

ஊழல் செய்ததோடு நில்லாமல், முக்கிய‌ அமைப்பான செபியையே மாட்டி விட்டு மகிழ்ச்சியில் திளைக்கிறது இந்த "பாலைவன பரிவாரம்". இப்படிப்பட்டவர்கள்தான் நம்மை தேசிய கீதம் பாடுமாறு அழைக்கிறார்கள். தனது பொய்புரட்டும் வெளியில் வந்து விட்டதால், அதை மக்களின் மனதிலிருந்து மறக்கடிக்கச் செய்யத்தான் இந்த தேசபக்தி புல்லரிப்புகள்!


சரி சார். நேரமாகிறது...பூனே அணி விளையாடும் ஆட்டம் பார்க்க வேண்டும். நம் தேசபக்தி வழியும் மோசடி நிறுவனம் தானே பூனே அணிக்கு சொந்தக் காரர்கள். இதன் குழுமத்தலைவர் எவரேனும் குளிர்கண்ணாடி அணிந்தபடி சிக்ஸர்கள் பறப்பதை பார்த்து குதூகலிப்பதை தொலைக்காட்சியில் zoom செய்து காட்டுவார்கள். அதை நாம் பார்த்து மகிழ வேண்டாமா? ஊழலாவது புடலங்காயாவது? நாடு எக்கேடு கெட்டால் என்ன சார்? நமக்குத் தேவை "ஜம்பக்கு ஜம்பக்கு" கூத்து.

மறுமுறை ஒரு முறை சொல்லிப் பார்ப்போம் சார். நமக்காகவே,  நம் அனைவருக்காகவே எழுதியது போல இருக்கிறதே சார்..."கூட்டத்தில் கூடி நின்று கூவிப் பிதற்றலன்றி நாட்டத்தில் கொள்ளாரடி..." அதாவது, நம்மூர் நகைச்சுவையாளர் தொனியில் சொன்னால், "நாம எப்பவுமே இப்படித்தானா அல்லது இப்படித்தான் எப்பவுமேவா?"