/ கலி காலம்: August 2012

Sunday, August 26, 2012

முகத்தில் கரி பூசலாம் வாருங்கள்!


தலைப்பை படித்தவுடன் நமக்கு மகிழ்ச்சியாக இருக்குமே? ஒருவர் முகத்தில் கரி பூச வேண்டுமென்றால் நம் அனைவருக்கும் வரும் மகிழ்ச்சியை கேட்கவா வேண்டும்! ஆனால் யார் முகத்தில் பூச வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்...

ஒரு வாரமாக "நிலக்கரி வெட்டுவதற்கு ஒதுக்கீடு செய்வதில் ஊழல்" என்று நாடே அல்லோலகல்லோலப்படுகிறது. போதாத குறைக்கு அன்றாட பாராளுமன்ற நடவடிக்கைகளும் நிறுத்தப் படுகின்றன. இவர்கள் "வேலை" பார்ப்பதே ஆண்டுக்கு சில நாட்கள்தான். அதிலும் இப்போது இந்த "புதிய அணுகுமுறை" வேறு! உத்தம சிகாமணிகள் நிரம்பிய எதிர்கட்சிகள், கரித்துறையை வைத்திருந்த உத்தமருக்கும் உத்தமரான பிரதமர், பதவி விலகினால்தான் ஆயிற்று என்று கிளம்பியிருக்கிறார்கள்.

இந்த அரசு "பூசி மெழுகும்" துறை ஒன்றை வைத்திருக்கிறது. "நிதி" இல்லாமல் எதையாவது பூச முடியுமா? எனவே நிதி அமைச்சர் தான் இந்தத் துறையின் தலைவர். எந்தக் கொள்ளை ஊருக்குத் தெரியும்படி "ஒழுக" ஆரம்பிக்கிறதோ உடனே "பூசி மெழுகும்" துறையின் தலைவர் அனைத்து ஊடகங்களுக்கும் பேட்டி என்ற பெயரில் விளக்கம் கொடுப்பார். இப்படித்தான், நிலக்கரி ஒதுக்கீட்டின் ஓட்டைகளை பூசி மெழுக‌, சில நாட்களுக்கு முன், நம் "ice cream" புகழ் சிந்தனை சிற்பி ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது, நிலக்கரி வெட்டி எடுக்காத வரை ஒரு நட்டமும் இல்லையாம். உரிமம் தானே வழங்கப்பட்டது என்றொரு விளக்கம். அதாவது சார், நமக்கு ஒரு நூறு ஏக்கர் நன்செய் நிலம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம் (கனவில் தான்!). அதை நமக்கு "வேண்டப்பட்டவர்களுக்கு" குறைந்த விலைக்கு ஒத்திக்கு விடுகிறோம். உடனே பொறுப்புள்ள உறவினர் ஒருவர், ஏனப்பா இதனால் உனக்கு எத்தனை நட்டம் என்று கேட்டால், நாம், "என்ன புத்தியில்லாமல் பேசுகிறீர்கள், அவர் இன்னும் அந்த நிலத்தில் விளைச்சல் ஏதும் செய்யவில்லையே? நிலத்தை தானே ஒத்திக்கு விட்டேன்..." என்று நாம் சொன்னால் அதில் எவ்வளவு "புத்தி" இருக்கிறதோ அவ்வளவு அர்த்தமுள்ளது இந்த விளக்கம்.

சரி சார் இப்போது இன்னொரு பக்கம் பார்ப்போம் இந்த எதிர்கட்சி இருக்கிறதே...ஆஹா தேச நலனில் எவ்வளவு அக்கறை பார்த்தீர்களா? இவர்கள் கர்நாடகாவில் அடிக்கும் கூத்தென்ன டெல்லியில் பேசும் பேச்சென்ன! ஆனால் ஒன்று சொல்ல வேண்டும். மற்ற‌ கட்சிகள் போல் இல்லாமல், இவர்களின் வண்டவாளத்தை இவர்களே தண்டவாளத்தில் ஏற்றும் பழக்கம் இருக்கிறது. இதை நாம் பாராட்டாமல் இருக்க முடியுமா?

இந்த கரி விஷயத்திலும் அப்படித்தான். பிரதமரை போட்டுத் தாக்கும் இவர்களின் கட்சியில் ஒரு மாநிலத்தின் முதல்வர், 2007ல் பிரதமருக்கு இவர் கடிதம் எழுதியிருக்கிறார்  (தமிழ்நாட்டிலிருந்து மட்டும் தான் டெல்லிக்கு தபால் சேவை இருக்கிறதா என்ன?). இன்னும் துவங்காத ஒரு தனியார் நிறுவனத்தின் விபரம் எழுதி, அதற்கு நிலக்கரி உரிமம் வழங்க வேண்டும் என்று சிபாரிசு செய்கிறார். ஒரு முதல்வருக்கு, இன்னும் ஆரம்பிக்காத ஒரு தனியார் நிறுவனத்தை பற்றிய தகவல்கள் எப்படி தெரியும்? எதற்கு இந்த அக்கறை? இதை எவரேனும் கேட்டால், இந்த எதிர்கட்சி, வாழைப்பழத்தை உறித்து எண்ணெய் உள்ளே போட்டால் போல வழுக்கு வழுக்கென்று வழுக்குகிறார்கள்.

இந்த இரண்டு தேசிய கட்சிகளின் பின்னே சந்தர்பவாதம் மட்டுமே சாக்காய் வைத்து கோஷ்டி கானம் பாடித்திரியும் சுயநலமிக்க உதிரிக்கட்சிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் நான்கைந்து தேறும்.

இப்போது யார் முகத்தில் கரி பூச வேண்டும் என்று கேட்கிறீர்களா? வாருங்கள், ரகசியமாக காதில் சொல்கிறேன். ஆளுக்கொரு கரிக்கட்டையை எடுத்துக்கொள்வோம். வேறு யாரும் அறியாத வண்ணம் கண்ணாடி முன்னால் நின்று நம் முகத்தில் நாமே பூசிக்கொள்வோம். சும்மா பூசிக்கொள்ள கூடாது சார், "பாரத நாடு பழம்பெரும் நாடு நீர் அதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்" என்று கண்ணாடியை பார்த்து உரக்கச் சத்தம் போட்டபடி பூசிக்கொள்ள வேண்டும்! முடிந்தால் கண்ணாடியிலும் கரி பூசி வைப்போம். கண்ணாடியில் மனசாட்சி தெரியும் என்று பெரியவர்கள் சொல்கிறார்களே!


Friday, August 17, 2012

ரயிலில் பயணம் செய்வது எப்படி? பகுதி 7


இப்போதெல்லாம் நம்மூர் ரயிலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் சார். பெண்ணைத் தூக்கி வெளியில் வீசுகிறார்கள், பெட்டி திடீரென்று தீப்பிடித்து எரிகிறது, கழிவறையில் மலைப்பாம்பு பயணம் செய்கிறது...இப்படி கற்பனைக்கு எட்டாத களேபரங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே ஒவ்வொரு ரயில் பயணமும் "எதிர்பார்ப்பு" மிக்கதாக ஆகி விட்டது இல்லையா?

சமீபத்தில் மதுரையிலிருந்து பெங்களூருக்கு இரவு நேரத்தில் ரயில் ஏறினேன். அமர்ந்த சற்று நேரத்தில் மூன்று இளைஞர்கள் அருகிலுள்ள இருக்கைகளுக்கு வந்தார்கள். இந்த காது இருக்கிறதே சார் காது...நாம் சும்மா இருந்தாலும் அது சும்மா இருக்காமல் அக்கம் பக்கத்து பேச்சுகளை வாங்கி மூளைக்கு அனுப்பியபடியே இருக்கும். பயணங்களில் ஒரு "பக்க" பேச்சு மட்டும் கேட்டால் போதுமா? எனவேதான் இரண்டு காதுகள் நமக்கு இருக்கிறது போலும்!

அந்த இளைஞர்கள் "புதிதாக வேலை"க்கு சேர்ந்தவர்கள் என்பதும் பெங்களூரில் ஒன்றாக அறை எடுத்து தங்கியிருக்கிறார்கள் என்பதும் சில நிமிடங்களிலேயே புரிந்து போனது. மூவருமே "நான் அடிச்சா தாங்க மாட்ட" என்று பாட்டுப் பாடும் தகுதி பெற்ற திடகாத்திரமான உடல்வாகுடன் இருந்தனர். திடுக்கிடும் திருப்பங்கள் இனிமேல் தான் துவங்கின."அந்தப்பக்கம் காட்டுப்பள்ளம், இந்தப்பக்கம் உச்சிமலை. நடுவில இருக்கிற மூங்கில்காடு வழியா போனா  check post போகலாம்" என்று ஒரு map வைத்துக் கொண்டு காட்டில் தீவிரவாதிகளை பிடிப்பதற்கு திட்டம் போடுவாரே விஜயகாந்த்...அது போல ஒரு பேப்பரை மூன்று பேரும் சூழ்ந்து குசுகுசுவென ஏதோ பேசிக்கொண்டனர்.

ஒருவர் சத்தமாக பேசினால் கூட கவனிக்காமல் விட்டுவிடுவோம். ஆனால் ரகசியம் பேசுவது போல பேசினால் நம் காது சும்மா இருக்குமா சார்? எனவே காதை தீட்டிய போதுதான் ஒரு இளைஞர் என் வயிற்றில் "குண்டு" போட்டார். "S7ல‌ இரண்டு, S11 ஒன்னு, S4ல‌ இரண்டு" என்று அவர் சொல்ல, S7ல‌ இரண்டுமே toilet பக்கம் இருக்கு.வைக்கறதுக்கும் கவனிக்கறதுக்கும் வசதியாக இருக்கும்." என்று மற்றொருவர் சொல்ல...சந்தேகப் பொறி சட்டென மனதில் அமர்ந்தது. இவர்களை பார்த்தால் அப்படிப்பட்ட செயல்கள் செய்பவர்கள் போலத்தெரியவில்லையே என்று ஒரு மனது சொன்னாலும், இந்தக் காலத்தில் எவரையுமே நம்ப முடியாது என்று மற்றொரு மனது சொல்ல, இவர்களிடம் பேசித்தான் பார்ப்போமே என்று பேச்சு கொடுத்தேன்...

நட்பு பூசிய சிரிப்புடன் அவர்களும் பேச, நம்பிக்கை பூத்தது எனக்கு. ஆனாலும், நம்ப வைத்து கழுத்தறுப்பதில் நாம் அனைவருமே கைதேர்ந்தவர்கள் ஆயிற்றே...எனவே சந்தேக சைத்தான் மீண்டும் எனக்குள் ஏறியது.

மூவரில் ஒருவர் வேகமாக எங்கோ போனார். போனவர் சுமார் பதினைந்து நிமிடங்கள் கழித்துத் திரும்பினார். இந்த இடைவெளியில் " "நான் ஈ புகழ்" நடிகை சமந்தாவுக்கு கடல்நீர் அலர்ஜியா?" போன்ற நாட்டை உலுக்கும் சிக்கல்களையும், திரிஷா வீட்டின் மூன்று நாய்குட்டிகளின் பெயர்களை அறிந்து கொள்ள வாய்ப்பளிக்கும் "பொது அறிவு" களஞ்சிய பக்கங்களையும் கொண்ட பத்திரிகைகளைப் புரட்டி முடித்தேன் நான்.

போனவர் திரும்பி வந்தார். ரயில் பெட்டிகள் அனைத்திற்கும் சென்று வந்திருப்பார் போலும். அவர் அமர்ந்தபடி மற்றவரிடம் சொன்ன வரிகளை கேட்டு, மீனாட்சி பவனின் வாங்கி வந்த இட்லியை சாப்பிட ஆரம்பித்திருந்த எனது நம்பிக்கை அந்த இட்லிகளுக்கடியில் இருந்த சட்னி போல நசுங்கியது.

அப்படி என்ன சொன்னார் அவர்? அடுத்த வாரம் தொடர்வோம்...ஏன் சார், தொடர்கதையிலும் சினிமாவிலும் தான் suspense வைக்கலாமா? வலைப்பதிவிலும் வைத்துப் பார்ப்போமே சார்.


Sunday, August 12, 2012

ஆடையில்லா மனிதனும் Android கைபேசியும் பகுதி 2


நம்மூர் பேருந்து நிலையங்களில் இருக்கும் பெட்டிக்கடைகளில் கூட, அங்கு தொங்க விடப்பட்டிருக்கும் தண்ணீர் பாட்டில், பழங்களுக்கு இடையில் "இங்கு சிம் கார்டு கிடைக்கும்" என்று அட்டையில் எழுதி தொங்க விட்டு சில ஆண்டுகள் ஆகி விட்டன. அந்த அளவு "முன்னேற்றம்" கண்டிருக்கிறது நம் நாடு. இப்படிப்பட்ட நிலையில்தான் android phone வாங்க கடையில் நுழைந்த அந்த நன்னாள் வந்தது.

கடையில் நுழைந்ததும் கண்ணில் பட்டது ஒரு மாணவர் கும்பல். நம் காலத்தில் மாணவர் கூட்டம் கடலை மிட்டாய் வாங்கும். மிஞ்சிப் போனால் நீளமான பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட பெப்ஸி ஐஸ் வாங்கும். இப்போது செல் போன் வாங்குகிறது. அதில் ஒரு மாணவர் போன் கேமராவை பரிசோதிக்கும் பொருட்டு தெருவில் போய் வருபவர்களை குறிப்பாக பெண்களை படம் எடுத்து போனை "பரிசோதனை" செய்து கொண்டிருந்தார். அவரைப் போன்றவர்களின் விரலில், வயது, விஷம் ஏற்றாமல் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வதைத் தவிர நம்மால் வேறு என்ன செய்ய முடியும்?

"tie" கட்டிக் கொண்டிருந்த ஒரு விற்பனையாளர், விருந்தோம்பலின் சாயலில் என்னை "tablet" இருந்த வரிசை பக்கம் தள்ளிக்கொண்டு போனார். சமீபகாலமாக விற்பனையில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் ஒரு நிறுவன "tablet" ஒன்றை கையில் எடுத்தேன். அவர் விற்பனை மந்திரங்களை "side"ல் ஓதத்துவங்கினார். அதாவது, இது கையில் இருந்தால் உலகத்தில் சகல சம்பத்துக்களோடும் நீங்கள் 24 மணி நேரமும் "தொடர்பில்" இருக்கலாமாம். பொதுவாக "tablet" மாடல்களில் போன் வசதி இருக்காது. இதில் voice call வசதியும் உண்டாம். "பத்து ரூபாய்க்கு மேல் கொடுத்தவங்க எல்லாம் கையை தூக்குங்க" என்னும் "தாயத்து" காமெடி ஞாபகம் இருக்கிறதா? அதில் வடிவேலு சொல்வாரே..."நாங்க ஏன்டா தாயத்தை கட்டிகிட்டு நடு ராத்திரி சுடுகாட்டுக்கு போகப்போறோம்" ‍- அதுதான் என் நினைவுக்கு வந்தது. விலைமதிப்பற்ற ஒரு நாளை எப்படி பயன்படுத்தப்போகிறோம் என்பதை ஒரு தகவல் தொழில்நுட்ப சாதனம் தீர்மானிக்க முடிகிற நிலையில்தான் நாம் உறவுகளையும், நம்மையும் வைத்திருக்கிறோம் போலும். அதனால்தான் நம்மால் உலகின் மறு கோடியில் இருப்பவருடன் "இன்று இட்லிக்கு சட்னியா" என்று கேட்க முடிகிறது. பக்கத்து வீட்டுகாரருடன் பேசி பல நாட்கள் ஆகிறது.முன்னேற்றம் சார் முன்னேற்றம்.

சமீபத்தில் கொடைக்கானலில் ஒரு பெண்மணி மாலை முரசை நான்காக மடித்தது போன்ற சைஸில் இருந்த  "tablet" பயன்படுத்தி போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார். பொருத்தமற்ற வசதிகளை ஒரே சாதனத்தின் உள்ளே வைத்தால் எப்படியிருக்கும்? கொடுமையாகத்தான் இருக்கும். அதைவிட அவரின் குடும்பத்தினர், அவர் அதை கீழே போட்டுவிடப்போகிறாரே என்ற டென்ஷனுடன் உலவியதை பார்க்க தமாஷாக இருந்தது. அனேகமாக டூர் முடிந்து ஊர் திரும்பும் வரை அவர்கள் நிம்மதியாக இருந்திருக்க மாட்டார்கள். பாவம், அவர்கள் எந்த நிம்மதி பெற சுற்றுலா வந்தார்களோ?

நான் "tablet" வாங்கப்போகும் ஆளாகத் தெரியவில்லை என்று நொந்து போன விற்பனையாளர், அடுத்த பிரிவுக்கு நான் போவதற்கு காத்திருந்தார். போகும் வழியில் ஒரு பெண் ஒரு போனை பார்த்தபடி உதட்டுச்சாயம் பூசிக்கொண்டிருந்தார். உலகம் போகும் போக்கில், போன் உள்ளேயிருந்து உதட்டுச்சாயம் ஊறி வந்தாலும் ஆச்சரியப்படமுடியாதுதான். நல்ல வேளை. இந்த போன் அவ்வளவு தூரம் போகவில்லை. ஆனால் "கண்ணாடி" வைத்திருக்கிறார்கள் (உண்மையிலேயே இந்த வெள்ளை கலர் போனைத் தயாரிக்கும் சீனா கம்பெனி, ரூம் போட்டு யோசித்திருப்பாய்ங்களோ?). போதாத குறைக்கு இந்த போனை சுற்றி டை"மண்டு"கள் வேறு!

சரி சார், கடை முழுதும் கும்பலாய் இருக்கிறதே...ஆளாளுக்கு ஒரு போனை எடுத்து "நோண்டி"க் கொண்டிருக்கிறார்களே...ஒருவர் கூட போனின் அடிப்படை  வேலையான, voice  நன்றாக கேட்குமா...அலைவரிசை துல்லியம் எவ்வளவு என்றெல்லாம் பார்ப்பதாக தெரியவில்லை. அதாவது, ஒரு கல்யாணப் பந்தியில் முழுதும் பரிமாறப்பட்ட இலையில், ஓரத்தில் இருக்கும் ஊறுகாய் போன்றவை நன்றாய் இருக்கிறதா என்று பார்த்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் நாம் போன் வாங்குகிறோம்...என்ன பைத்தியக்காரனாக இருக்கிறாய்? உனக்கு பழைய காலத்தில் விரல் விட்டு சுழற்றும் சிகப்பு கலர் கறுப்பு கலர் போனே போதுமே உன்னை யார் கடைக்கு போகச்சொன்னது என்கிறீர்களா?

அடப்போங்க சார்... பழைய போனை வைத்து நாம் என்ன சாதித்தோம்? ஆனால் இந்த மொபைல் போனைப் பாருங்கள்...நம் நாட்டுக்குள் புகுந்து பதினைந்து ஆண்டுகள் கூட ஆகவில்லை...ஆனால் அதை வைத்து குருவி என்ற உயிரினத்தையே காலி செய்த நம் சாதனை சாதாரணமானதா?  முன்னெல்லாம் மாலைப்பொழுதில் வானத்தைப் பார்த்தால் கூட்டம் கூட்டமாக பறவையினங்கள் கூடு நோக்கிப் பறக்கும் காட்சி உள்ளத்தை நிறைக்கும். இப்போது வானத்தை பார்க்கவே நமக்கு நேரமில்லை. இதில் கொக்காவது குருவியாவது?

ஊருக்குள் பறவைகளை காலி செய்த மகிழ்ச்சி மட்டும் போதுமா நமக்கு? எனவேதான் நாம் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறோம். என்ன என்கிறீர்களா? அதான் சார், நாம் உழைத்து உழைத்து களைத்துப் போனால் இப்போது "உல்லாச சுற்றுலா" என்ற பெயரில் இயற்கை வளமிக்க இடங்களுக்குப் போகிறோமே...அங்கெல்லாம் கூட்டம் பின்னியெடுக்கிறதே ...அங்கெல்லாம் சும்மா போக முடியுமா? மொமைல் போன் சகிதமாகத் தானே போகிறோம். போதாத குறைக்கு, வனாந்தரத்தில் சிக்னல் கிடைக்கவில்லை என்று கோபம் வேறு நமக்கு வரும். இன்னும் ஒரு இருபது முப்பது வருடங்களில் மற்ற பறவையினங்களையும் அழித்தால் தானே சார் நமக்கு திருப்தி? அப்புறம் ஒய்யாரமாக உட்கார்ந்து "angry birds" விளையாடி மகிழலாமே? அது போரடித்தால் "angry மயில்" "angry குயில்" என்று விதவிதமாய் விளையாட்டு கண்டுபிடிக்க மாட்டோமா என்ன? உயிருள்ள மயிலையும் குயிலையும் பற்றி கவலைப்பட நமக்கு என்ன பைத்தியமா?

Wednesday, August 1, 2012

இந்தியர்களுக்கு எதிரான ஒலிம்பிக்ஸ் சதிகள்...


நூறு கோடிக்கு மேல் மக்கள் தொகை இருந்தால் என்ன? நூறு பேர் கூட லண்டன் ஒலிம்பிக்ஸுக்கு தகுதி பெற முடியாத வெட்கக்கேட்டை எப்படி எதிர்கொள்வது?கவலை வேண்டாம். மக்களுக்காகவே வாழும் நம் அரசியல்வாதிகளின் ஐடியாவையே நாமும் கடைபிடிப்போம். அதான் சார், ஒரு சிக்கலை எதிர்கொள்ள முடியாவிட்டால், "இதில் அன்னிய சக்திகளின் சதி இருக்கிறது" என்று அறிக்கை விடுகிறார்கள் இல்லையா, அது போல நாமும் இதில் சதி இருக்கிறது என்று சொன்னால் போயிற்று!எப்படிப்பட்ட சதி என்று பார்ப்போம் வாருங்கள்.

குதிரையேற்றம்: இப்படி ஒரு விளையாட்டு இருக்கிறது என்பதே நமக்கு ஒலிம்பிக்ஸ், ஆசிய விளையாட்டு போட்டிகளை பார்க்கும் போதுதான் ஞாபகம் வரும். இந்தியர்கள் குண்டுச்சட்டியில் மட்டுமே நன்றாக குதிரை ஓட்டுவார்கள் என்று உலகத்திற்கு நன்றாக தெரிந்திருக்கிறது. நம் வாழ்க்கை முறையும் அப்படித்தானே இருக்கிறது. போனால் போகிறது என்று வாழ்க்கையின் மறக்க முடியாத அனுபவமாக ஊட்டி, சிம்லா போன்ற இடங்களில் குதிரையில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்வதோடு சரி. எனவே தான் நிஜக்குதிரை ஏற்றம் என்று விளையாட்டை சேர்த்திருக்கிறார்கள். வன்மையாக கண்டிப்போம் சார். ஏன் கழுதையேற்றம் இல்லை என்று நாம் போர்க்கொடி தூக்குவோம்.

வில்வித்தை: கண்ணைக் கட்டிக் கொண்டு வில்லால் மாம்பழம் அடித்தவர்களை புராணத்தில் படித்து விட்டு நம்மவர்களின் வில்வித்தை பார்க்க வேண்டும் சார். பார்க்கும் குறி இருக்கிறதே...அப்பப்பா! எவ்வளவு அதிக நேரம் குறி பார்க்கிறார்களோ அவ்வளவு குறைவாக "மதிப்பெண்" வாங்கும் விசித்திரம் நமக்கு மட்டுமே சாத்தியம். அதுவும், நாட்டுப்பற்று தேவைக்கு அதிகமாகவே உள்ள நம் வர்ணனையாளர்கள், "காற்று அதிகம் வீசி விட்டது", "மழைத் தூறல் குறிக்கீடு" என்று நம் வீரர்களை சாக்கு மூட்டைக்குள் அமுக்கும் போது நம்மால் சிரிப்பை அடக்காமல் இருக்க முடியாது. மற்ற வீரர்களும் அதே காற்று மழையில்தான் விளையாடுகிறார்கள் என்று பார்ப்பவர்களுக்கு தெரியாது என்று நினைத்து விட்டார்கள் போதும். இது நம்மவர்களே நமக்கு செய்யும் சதி."எங்கள் சொல் ஒவ்வொன்றும் வில்" என்று மேடையில் முழங்குபவர்களை வேண்டுமானால் அனுப்பிப் பார்க்கலாமா சார்?

வாள்வீச்சு: எத்தனை முறை பார்த்தாலும் இந்த விளையாட்டின் விதிகள் தெரிய மாட்டேன் என்கிறது சார். நம்மூர்களில் இதை விளையாடுபவர்களை விரல் விட்டு எண்ண, கால் கூட தேவைப்படாது என்பது உறுதி. இந்த விளையாட்டில் நம் மக்களுக்கு ஈடுபாடு இல்லாததற்கு சரித்திரமே சதி செய்து விட்டது. பின் என்ன சார்? புலியை கூட முறத்தால் விரட்டுவோம் நாம் என்று தெரிந்தபின் வாள் எதற்கு சார் நமக்கு?

ஜிம்னாஸ்டிக்ஸ்: மற்ற நாட்டு வீரர்கள் "நாட்டியம்" ஆடும் இந்த களத்தில் நம் ஆட்கள் நடந்து போகவாவது மாட்டார்களா என்ற ஏக்கம் நமக்கு இருக்கும் (துவக்க விழாவில் திடீரென்று புகுந்த நம்மூர் பெண், gymnastics அரங்கத்தில் புகுந்திலிருந்தாவது "gymnastics அரங்கில் இந்தியப் பெண்" என்ற பெயர் கிடைத்திருக்கும்!). இந்த விளையாட்டிலிருந்து நாம் விலகியிருப்பது மேற்கத்திய நாடுகளின் சதி சார். நாம் "மொழி உணர்வு" மிக்கவர்கள் என்று தெரிந்து கொண்டு சரியான தமிழ் பெயர் கிடைக்காமல் இவர்கள் திண்டாடட்டும் என்று வேண்டுமென்றே "gymnastics" என்று பெயர் வைத்திருக்கிறார்கள். தமிழில் பெயர் வைக்க முடியாததால் gymnastics விளையாட தன்மானம் இடம் தரவில்லை என்று நாம் அறிக்கை விட்டால் முடிந்தது கதை!

ஜூடோ (Judo): உண்மையிலேயே நாம் அதிர்ச்சி அடைய வேண்டியது இந்த விளையாட்டுக்காகத்தான். அடுத்தவரை கவிழ்த்துவதும், கீழே தள்ளி அமுக்குவதில்லும் நாம் தலைமுறை தலைமுறையாக எப்படி சிறந்து விளங்குகிறோம் என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிவோம். ஆனால் ஜூடோவில் கூட நாம் சோடை போவது ஏன்? புரியவே இல்லை சார். பேசாமல் ஒரு விசாரணை கமிஷன் வைத்தால்தான் காரணம் தெரியும். அது வரை, "ஜூடோ ரத்னம்" சினிமாவுக்கு போனதால்தான் நமக்கு ஒரு பதக்கம் போயிற்று என்று சொன்னால் யார் எதிர் கேள்வி கேட்கப்போகிறார்கள்?

படகுப் போட்டி: அநியாயத்தை பாருங்கள்! நீரில் பலம் யாருக்கு என்று போட்டி வைக்கிறார்களே, கரையில் பலம் யாருக்கு என்று போட்டி வைத்தார்களா? தேம்ஸ் நதிக்கரையில் மண் அள்ளும் போட்டி வைத்தால் நாம் மண்ணையும் பதக்கத்தையும் சேர்த்தே அள்ளிக் கொண்டு வருவோமே...சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் சதி வேலை சார் இது. பாவம். அப்படி ஒரு போட்டி வைத்தால் நம்மவர்கள் புண்ணியத்தில் இங்கிலாந்து மக்கள் தேம்ஸ் நதியை தேட வேண்டியிருக்கும் என்று அவர்கள் பயந்திருக்கக் கூடும்...


என்னய்யா நீ? நம் நிலை பற்றி கவலைப்படாமல் கிண்டல் பேச்சு பேசுகிறாய் என்று கேட்கிறீர்களா? நம் நூறு கோடி பேர்களுக்கும் சேர்த்து கவலைப்படுவதற்கென்றே நாம் ஒருவரை டெல்லி செங்கோட்டையில் அமர்த்தியிருக்கிறோம். அவர் அனைத்துக்கும் கவலைப்படுவார். சீனாவின் அத்துமீறல் துவங்கி சீயக்காய் விலை உயர்வு வரை தினமும் கவலைப்படுவது மட்டுமே அவர் வேலை. அதுவும் "மக்களில் ஒருவராக" கவலைப்படுவார். விரைவில் "ஒலிம்பிக்ஸ் போட்டியில் நாம் பதக்கங்கள் குவிக்காததற்கு மக்களில் ஒருவனாக நான் கவலைப்படுகிறேன்" என்று அறிக்கை விட்டாலும் விடுவார். அப்புறம் எதற்கு சார் நமக்கு கவலை?

பின் குறிப்பு: இந்தப் பதிவை "சாமானியனின் ஒலிம்பிக்ஸ் கனவுகள்... பகுதி 2" என்றும் தலைப்பாக வைத்துக் கொள்ளலாம்.