/ கலி காலம்: 2012

Thursday, December 20, 2012

தமிழரும் தண்ணீரும்...


"பொங்கல் சாப்பிடு தமிழா, பொங்கல் சாப்பிடு" - இந்த வாசகத்தை நீங்கள் எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா? எங்கள் ஊரில், ரயில் நிலையத்திற்கு வெளியே உள்ளே சாலையின் சுவர்களில், நான் சிறுவனாக இருந்த வருடங்களில் இது நிரந்தரமாக இருந்தது.

பொங்கல் சாப்பிடச் சொல்லும் வரிக்கு மேலும் கீழும் அன்றைய சமூக சூழலுக்கு பொருத்தமான‌ "சிக்கல்களை" மாற்றி மாற்றி எழுதுவார்கள். இன்று,  அந்த சுவரில்  "கொக்கோ கோலா" குடித்தால் ஏற்படும் குதூகலம் குறித்து தமிழர்களுக்கு ஒரு விளம்பர யுவதி விளக்கிக் கொண்டிருக்கிறார்...

பழைய வரியும் சுவரும் இன்று இருந்திருந்தால், "நிலத்தில் நீர் தங்கலை நீ வைக்காதே பொங்கலை" என்று எழுதியிருப்பார்கள்.

இன்று 1 டிஎம்சிக்கும் 2 டிஎம்சிக்கும் காய்ந்து கிடக்கும் நம் நீர் மேலாண்மை (water management) எப்படிப் பட்டது? கல்லணையை எடுத்துக் கொள்வோம்... நம்மவர்களுக்கு, செய்யும் வேலைக்கு அலங்காரமாக பெயர்கள் வைத்து விளம்பரப்படுத்த தெரியவில்லை அல்லது மனமில்லை. எனவே, கல்லணை ஆயிரம் வருடமாக‌ இருக்கிறது என்பதை தவிர நமக்கு வேறெதுவும் தெரியவில்லை. இது ஒரு அற்புதமான முன்னோடி என்பதை சொல்வதற்கும் நமக்கு ஆங்கிலேயர்கள் வேண்டியிருந்தது. அமெரிக்காவில் 19ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் முயற்சிக்கப்பட்ட "rock fill method" என்பது வேறொன்றுமில்லை. ஆயிரம் வருடங்களுக்கு முன் வெவ்வேறு அளவுகளில் உள்ள கற்களை வெவ்வேறு காலங்களில் கொட்டி, கட்டப்பட்ட கல்லணையின் "design" தான். இப்படிப்பட்ட நுணுக்கங்களை அன்றே வடிவமைத்த நாம் எப்பொழுது இத்தகைய ஆற்றல்களை இழக்கத் துவங்கினோம்?

பிரபலமான தேசிய ஊடகங்கள் எதிலும் காவிரி பற்றி ஒரு விவாதம் கூட வரவில்லையே...ஏன்? அதிலும், சமூக பொறுப்புகளை மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டது போல காட்டிக் கொள்ளும் ஒரு சேனலின் "செய்தி நேரத்தில்" கூட இது அரசியல் தவிர வேறு காரணங்களுக்காக வருவதில்லையே...ஏன்? ஆனால், இதே சேனலுக்கு, "கொலை வெறி" பாடலின் மகத்துவத்தை நாட்டுக்கு விளக்க பத்து நிமிடம் ஒதுக்க முடிகிறது...வெட்கக்கேடு!

உள்ளூர் சேனல்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை...நடிகைகளின் பாதி முகத்தைக் காட்டி அவர் யார் என்று கண்டுபிடிக்கச் சொல்லும் புல்லரிக்கும் புதிர்கள் போடவே இவைகளுக்கு நேரம் சரியாக இருக்கிறது. காவிரி பற்றி இவர்களை நிகழ்ச்சி தயாரிக்கச் சொன்னால், ஒகேனக்கல் அருவி வரும் சினிமா படக் காட்சிகளாகக் காட்டி ஒப்பேற்றினாலும் வியப்பில்லை. அத்தகைய அறிவுக் களஞ்சியங்கள் கொட்டிக் கிடக்கின்றன பல தமிழ் சேனல்களில்...

எதையும் அரசியலாக்க மட்டும் நாம் நன்றாக கற்று விட்டோம். மற்றவற்றையெல்லாம் விற்று விட்டோம். நதியை காக்க மறக்கும் சமூகத்தின் கதி அதோகதி தான் என்பதை அறிய‌ விதி தேவையில்லை. சாதாரண மதி போதும்.

நான் விவசாயி அல்ல. என்னிடமும் நிலமும் இல்லை. ஆனால், தினமும் தொலைக்காட்சித் திரையின் அடியில் ஓடும் மேட்டூர் அணையின் அளவு குறைந்து கொண்டே வருவதை பார்க்கும் பொழுது மனதுக்குள் ஏதோ ஒன்று சட்டென்று குத்தி விட்டு போகிறது. உங்களுக்கும் அதே உணர்வு இருக்கும்.
நமக்கே இப்படி என்றால், நாளை காலை தனது பயிர் குடிக்க நீர் இல்லை என்பதை நினைக்கும் விவசாயிக்கு எப்படியிருக்கும்?

நமக்கு iphone 5 modelல் என்னவெல்லாம் புதுசு என்று பார்த்து முன்னேறத் துடிப்பதற்கே நேரமில்லை. இதில் ஐஆர் எட்டு என்னவானால் என்ன? பொங்கல் சாப்பிடுவோம் சார் பொங்கல்!

Friday, December 14, 2012

குத்தானந்தாவின் குத்துப் பாட்டு பகுதி 3


தெரு முனையில் இருக்கும் ""அண்ணாச்சி"" கடையில் உப்பு வாங்கிக் கொண்டிருந்தேன். "அஞ்சு ரூபாய்க்கு மிளகு"..."நூறு உளுத்தம் பருப்பு" என்ற குரல்களை தினசரி பேப்பரை கிழித்து மடமடவென்று பொட்டலமாக்கிக் கொண்டிருந்தார் "555 சோப் நன்றாக வெளுக்கும்" என்று உலகுக்கு அறிவிக்கும் முண்டா பனியன் போட்டிருந்த நம்மூர் "அண்ணன்".

"அன்னிய முதலீடு பாரு
பண்ணிடும் நாட்டுக்கு கேடு
சில்லறை வணிகம்னு பேரு
கல்லறை ஆகிடும் ஊரு"

என்று பாடியபடி வந்தார் குத்தானந்தா. "என்ன தம்பி உப்பு வாங்குறயா? உப்பத் தின்னா தண்ணி குடிச்சு தானே ஆகணும்" என்றார். "சாமி, உப்பை வச்சே பாட்டுக்குள்ளெ "பொடி" தூவறீங்களோ?" என்றேன். "என்னப்பா செய்யறது...அப்படி இப்படி நாட்டோட‌ அடிமடியிலேயே கைவச்சுருவாங்க போல" என்று சீறுவதற்கு தயாரானார்.

"சாமி, அன்னிய முதலீடு நல்லது தானே...சில்லிடும் அடுக்கு மாடி கடைகளில் மிடுக்குடன் பொருள் வாங்கி மிதப்புடன் இருந்து நம் மக்கள் மகிழ்வார்களே...அத்துடன், பருப்பு முதல் செருப்பு வரை, நமக்காய் காய் உணவு முதல் நாய்க்கான உணவு வரை, கீரை, கெட்டி மோரை, விட்டால் ஊரையே அமுக்கி பிளாஸ்டிக் கவரில் போட்டு விற்பனைக்கு வைத்திருப்பதில் எத்தனை வசதி..." என்றேன்.

"உன்னைய மாதிரி ஏட்டுச் சுரைக்காய்க்கு எத்தனை பாட்டு படிச்சாலும் புத்தியில் ஏறாது" என்று கத்திய குத்தானந்தா, "தம்பி, பகட்டா இருக்கும் எதுவும் கரெக்டா இருக்கும்னு நினைக்கற காலமாகிப் போச்சு...விலை நிறைய அப்படின்னா தரமும் அதிகம்னு நம்புற நாகரீக கோமாளிகள் தானே நாம்.

"சாமி, இதுனால நமக்கு என்ன நஷ்டம், தெளிவா சொல்லுங்க..." என்றேன்.

"முதல்ல சில்லறை வர்த்தகம் அப்படினுதான் ஆரம்பிக்கும். அப்புறம், சீப்பா கிடைக்கறதுனால இறக்குமதி பண்றேன், அதை சேமிச்சு வைக்க கோடவுன் கட்றோம்னு இடம் போடுவான். ஆயிரக்கணக்கான‌ ஏக்கர் நிலத்தை வாங்கி, "corporate agriculture join venture" விவசாயம் பண்றேன் அப்படின்னு ஒட்டகத்தை கூடாரத்துக்குள்ள விடுவான். அதுல விதையை போடுறானா விஷத்தைப் போடுறானா நம்ம அரசாங்கமா பார்க்கப் போகுது? எவ்வளவு சீக்கிரம் லாபம் பார்க்கலாமோ அதுக்குத் தகுந்த மாதிரி "BT கத்திரிக்காய்" "BT வெண்டைக்காய்" அப்படினு இயற்கைக்கு எதிரா உருவாக்கின பொருட்களை புழக்கத்துல விடுவான். பார்க்க பளபளப்பா, கவர்ல போட்டு ரெடியா இருக்கும். நம்மூர் இல்லத்தரசிகளின் இன்னல் குறைக்கறேன்னு காய்கறியை வெட்டி கவர்ல போட்டு அதுக்கு விலையை ரெண்டு மடங்காக்கி laebl ஒட்டி விற்பான்...பாலிஷ் செய்யப்பட்ட பருப்பை நமக்கு plastic பாக்கெட்டில் போடுவான்...லாபத்தை அள்ளி தனது பாக்கெட்டில் போடுவான்"

பத்து பதினஞ்சு வருஷத்துக்கு நாமளும், "ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்..." கணக்கா பந்தா பண்ணுவோம். அப்புறம் அடுத்த இளிச்சவாய நாடு ஏதாவது மாட்டும். நம்ம நாட்டை விட அங்க லாபம் அதிகமா வரும் அப்படின்னா "வந்தாரை வாழ வைக்கும் நன்னாடே...உனக்கு மொத்தமா டாடாடே" என்று அனைத்தையும் மூடி விட்டு போவான். அப்புறம் நம்ம நிலத்தை உழுதா புழு கூட வராது...கட்டாந்தரையான நிலத்தை காலால சுரண்டிக்கிட்டே இருக்க வேண்டியது தான்" என்றார்.

எனக்கு லேசாக கவலை வந்தது. "உணவு பொருட்களுக்கு மட்டும் முதலீட்டுக்கு தடை விதிக்கலாமே" என்றேன். "ஓ நீ அப்படி வரயா?" என்ற குத்தானந்தா "அன்னிய முதலீடு எதுலப்பா வரும்?" என்றார். "டாலர்ல‌ சாமி" என்றேன்.

"அங்கதான் இருக்கு நமக்கு அடுத்த ஆப்பு" என்ற சொல்லியபடி, "அதை அடுத்த வாரம் சொல்றேன். இந்த வாரத்துக்கான உன்னோட இலக்கியப் பாட்டு எங்க?" என்றார். "ஆஹா மாட்டிகிட்டோமே என்று முழித்த என் கண்ணில் peacock brand அரிசி மாவு பாக்கெட் கண்ணில் பட்டது. போன வாரம் படித்த பாட்டு வரி நினைவுக்கு வந்தது ‍ - "மயிலடி இலைய மாக்குரல் நொச்சி".  சாமி, இந்தப் பாட்டு எழுதி ஆயிரம் வருஷத்துக்கு மேல ஆச்சு...எத்தனை ரசனையான மனுசங்க நம்ம மண்ணுல வாழ்ந்து போயிருக்காங்க சாமி...மயில், குயில் அப்படினு நிறைய பாட்டு பார்த்திருக்கோம். ஆனா இந்த வரியிலே, மயிலோட காலடி வடிவம் நொச்சி இலை மாதிரி இருக்கும்னு சொல்றாரு சாமி...என்றேன். "இப்ப நம்மூருல மயிலையே பார்க்க முடியல இதுல அதனோட காலடிய எப்படி பார்க்கறது...அது சரி, நொச்சி இலை பார்த்திருக்கிறாயா? என்றார்...". "அடுத்த வாரம் பேசலாம் சாமி" என்று கடையை விட்டு நகர்ந்தேன்.

Wednesday, December 5, 2012

காலம் கெட்டுப் போச்சு சார்...! பகுதி 2


சென்ற பதிவில், திருப்பரங்குன்றம் கோயிலில் நுழைந்த உடனேயே, "காலம் கெட்டுப் போச்சு" என்பதற்கு கந்தன் காட்டிய "sample" பார்த்தோம். அப்படியே "யானை மகால்" பக்கம் சென்றேன். சுத்தமாக இருந்த அந்த விசாலமான அறையில் யானையின் போட்டோவிற்கு மாலை போட்டு வைத்திருந்தார்கள். அறை முழுதுவதும் யானை வாசம் இன்னும் வீசிக்கொண்டிருந்தது. இப்படித்தானே சார் நம் எல்லோருக்கும், கால யானை கடந்து போன பின்னும் மன அறையில் ஞாபக வாசனை வீசிக் கொண்டிருக்கிறது...

"புது யானை எப்போ வரும்" என்று அங்கிருந்தவரிடம் கேட்டேன். என் "யானை(க்) காதல்" தெரிந்திருக்க வாய்ப்பில்லாத அவர், "லூசா நீ" என்பது போல் என்னைப் பார்த்து விட்டு, நாகரீகம் கருதி "கொஞ்ச நாள் ஆகுங்க" என்றார். முப்பது வருடங்களுக்கு முன், என் அப்பாவின் பாதுகாப்பில், நான் வாரம் தோறும் வருடிக் கொடுத்த திருப்பரங்குன்றம் யானையின் கரும்புள்ளிகள் நிறைந்த ரோஸ் நிற தும்பிக்கை நிழல் படமாய் வீற்றிருக்க, அங்கிருந்து நகர்ந்து, உள்ளத்திற்கு உவகை தரும் பொய்கைக்கு போனேன்.

சரவணப் பொய்கையில் முன்னரெல்லாம் பொரி தூவிய சில நிமிடங்களில் அதற்கான அடையாளமே நீரில் இருக்காது. கால் வைத்த மறு நொடி, மீன்கள் கூட்டம் கூட்டமாக கடிக்கத் துவங்கும். இப்பொழுதோ, ஒரு மீன் கூட கண்ணிலும் காலிலும் படவில்லை. யாரோ எப்பொழுதோ போட்ட பொறி கூட நீரில் மிதக்கிறது...நம் பொய் வாழ்க்கை முறையை எள்ளல் செய்யும் விதமாக பொய்கையிலும் மீன்கள் பொய்த்து போனது போலும்...கோயில் குளத்து மீன்கள் நம்மை விட்டு விலக சில ஆண்டுகள் என்றால், நம் கோயில்களில் இருந்து கடவுள்கள் புறப்பட்டு போய் பல நூற்றாண்டுகள் ஆகியிருக்குமோ? logic சரிதானே சார்?

அங்கிருந்து சன்னதிக்கு வரும் வழியில் நந்த‌வனத்தில் ஒரு பெருங்குரங்கு பூச்செடிகளை சேதம் செய்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது. தமிழ் தெரிந்த குரங்கோ என்று எனக்கொரு சந்தேகம் ‍ அதாவது "உள்ளுறை உவமம்" வைத்து நம்மையும் நம் சமூகத்தையும் நக்கல் செய்கிறதோ அந்த குரங்கு என்று தோன்றியதில் வெட்கம் வந்ததால் வேகமாக நடையைக் கட்டினேன்...

கோயில் நிர்வாகம் பக்தர்களை குஷிப்படுத்த புதிர் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது சார்...அதிர்ச்சியடையாதீர்கள்! பத்திரிகைகளில் ஒரு சிக்கலின் ஒரு நுனியில் நுழைந்து மறு நுனியில் வெளியில் வரச் சொல்லி புதிர் வருமே...அது போல, ஏகத்துக்கும் அங்கிட்டும் இங்கிட்டுமாய் சாரம் கட்டி வழியை மறித்து, மறைத்து...பாவம் முதியவர்கள்... படிகள் நிறைந்த கோயிலில் இந்த "புதிர்கள்" வேறு அலைக்கழிக்க, பெருமூச்சுடன் பேரின்பம் தேடி நடந்தார்கள்.

மலையின் பாறைகள் தெரிவதனால், அவையே கூரையாக இருப்பதால், இந்த சன்னதி எனக்கு எப்பொழுதுமே பிடித்தமான ஒன்று. எத்தனை யுகமாக‌ அவை இங்கிருக்கிறதோ...எத்தனை தலைமுறைகளின் வேண்டுதல்களை அவை பார்த்துக் கொண்டிருக்கிறதோ...!

சட்டென்று என் கையில் ஒரு "அபிஷேக பாட்டில்" ஒன்றை கொடுத்தார் பட்டர். பிளாஸ்டிக் மூடி இன்னும் திறக்கப்படாததால், கடையில் இருந்து "direct"டாக‌ வந்தது என்று தெரிந்தது. கொடுத்ததோடு மட்டுமல்லாமல் "இருபது ரூபாய்" என்றார். அவரிடம் பாட்டிலை திருப்பிக் கொடுத்தேன். முருகனின் முகம் அசைவற்று இருந்தது. கலி காலத்தில் இப்படித்தான் நடக்கும் என்று முருகனுக்கு முன்னரே தெரிந்திருந்து தான் அசைவின்றி இருக்கிறார் என்று நாம் எதிர்பார்ப்பது நியாயம்தானே சார்?

Friday, November 16, 2012

இவர்களின் தீபாவளி ரகசியங்கள்...


என்ன சார்...ரகசியம் என்றவுடன் நமக்கு ஆர்வமாய் இருக்குமே...அதுவும் அடுத்தவர் பற்றிய ரகசியம் என்றால் வெறும் வாயில் போட்ட அவல் என்பதை விட வெல்லத்தில் போட்ட‌ அவல் போல நமக்கு இனிக்குமே...சரி, விஷயத்திற்கு வருவோம். பதிவை படித்த பின், நீங்கள் எதிபார்த்தது வேறு இங்கு இருப்பது வேறு என்றால் என்னை குற்றம் சொல்லாதீர்கள் என்று இப்போதே சொல்லி விடுகிறேன் சார்.

நாம் பார்க்கப் போகும் "இவர்கள்" யார்?

தீபாவளி அன்று காலை நம் அரசு பேருந்தை கடமையுடன் ஓட்டிக் கொண்டு போகும் ஓட்டுனர் மற்றும் அவரது குடும்பத்து தீபாவளி எப்படி இருக்கும்? பல வருடங்களுக்கு முன், சில தாமதங்கள் காரணமாக, முன்னரே ஊர் சேர்ந்திருக்க வேண்டிய நான், தீபாவளி காலையில் மதுரை நோக்கிய பேருந்தில் இருந்தேன். கைபேசி தன் கைவரிசையை சமூகத்தில் காட்டத் துவங்காத காலம் அது. சுமார் பதினோறு மணியளவில் வண்டியை ஒரு சிற்றூரின் துவக்கத்தில் இருந்த பெட்டிக்கடையை ஒட்டி நிறுத்தியவர், பயணிகளை நோக்கி சத்தமான குரலில், தான் நேற்றிரவே "trip" முடித்து வீடு செல்ல வேண்டியவர் என்றும், இன்னமும் "duty"யில் இருப்பதாகவும், வீட்டில் காத்துக் கொண்டிருப்பவர்களிடம் பேசிவிட்டு வருவதாகவும் சொல்லி இறங்கினார். பயணிகள் அனைவரும் அவரின் மேல் கரிசனம் கொண்டதோடு மட்டுமல்லாமல், பெரும்பாலோருக்கு தங்கள் வீடு மனதில் ஓட, அந்த "telephone booth" நீளமானது...அந்த ஓட்டுனர் தொலைபேசியில் தனது குழந்தையிடம், "கட்டாயம் இரவு வரும் பொழுது பட்டாசு வாங்கி வருகிறேன்" என்று  மன்றாடியதும், மதுரை வந்து சேர்ந்த பொழுது இரவாகிப் போனாலும், அப்பொழுதும் அக்கறையுடன் சில பயணிகள் பேருந்திலிருந்து இறங்கும் பொழுது ஓட்டுனரிடம், "மறக்காம பட்டாசு வாங்கிட்டு போங்க பிள்ளைங்க காத்துக் கிடக்க போகுதுங்க..." என்று சொல்லிப் போனதும்  ஒரு படி மேலே போய் ஒருவர் தான் கொண்டு போகும் மத்தாப்புகளில் ஒன்றை அவரிடம் கொடுத்ததும் இன்றும் நினைவில் நிற்கிறது.! இனி நம் சமூகத்தில் இக்காட்சி மீண்டும் நிகழ்வது அரிதினும் அரிது.

தீபாவளிக்கு முந்தைய நாட்களில் அனைத்து கடைத்தெருக்களிலும் அலைமோதும் கூட்டத்தின் நடுவே "எலி மருந்து" விற்பவர் ஒரு சிறு அட்டையில் சக்கரத்தை பொருத்தி தள்ளிக் கொண்டே போவதை பார்த்திருப்போம்.... அந்த விற்பனை பொருட்களின் மொத்த மதிப்பே இன்றைய வேகமான உலகின் சில "mobile recharge"களுக்குள் அடங்கி விடும். எலி மருந்து விற்று வரும் வருமானத்தில் ஊசலாடிக் கொண்டிருக்கும் இவரைச் சார்ந்தவர்களின் தீபாவளி எதிர்பார்ப்பு எத்தனை துயரமிக்கது? அதை சுமக்கும் இவரின் முகத்தை நாம் கூர்ந்து நோக்கியிருக்கிறோமா?

தீபாவளியை காரணம் காட்டி, பல வித உணவுகளை அதிகமாக புசித்து, அதன் காரணமாக மதியம் நீண்ட தூக்கம் போட்டு, மாலையில் மறுபடியும் கேளிக்கைகளுக்குத் தயாராகும் நம் கண்ணில், தெரு முழுதும் குவிந்து கிடக்கும் வெடிப் பேப்பர்களுக்கிடையில், வெடிக்காத வெடிகளை தேடிக் கொண்டிருக்கும் சிறுவனின் முகம் கவனத்தில் விழுந்திருக்கிறதா? அந்த சிறுவனிடம் தீபாவளியை பற்றிய எத்தகைய எண்ணம் ஓடிக் கொண்டிருக்கும்?

"இவர்கள்" பார்த்த பின் "இவரை" பார்ப்போம்...

சென்ற வாரம் பிரபல வார இதழின் தீபாவளி சிறப்பிதழில் வந்திருக்கிறது இவரின் பேட்டி. "தீபாவளி கொண்டாடுவதில்லை" என்ற தலைப்பைப் பார்த்து, "ஆஹா, ஒரு வேளை சமூக அவலங்களையும் மேற்கூறியன‌வற்றை போன்ற மனதில் வலி ஏற்படுத்தும் காட்சிகளையும் கண்டு கங்கையென பொங்கியெழுந்த மங்கை எடுத்த முடிவோ..." என்று ஆர்வத்துடன் பக்கத்தை திருப்பினால், அவரோ, "என் நாய்க்கு வெடிச்சத்தம் கண்டு பயம் எனவே நான் தீபாவளி கொண்டாடுவதில்லை" என்று போட்டிருக்கிறார் ஒரு போடு!

அடுத்த வருடம், இந்த பேட்டி வந்த இதழின் பக்கம், ஒரு லட்சுமி வெடியின் சிதறிய‌ பேப்பராக வீதியில் கிடக்கையில், வெடிக்காத வெடி தேடி வீதி வீதியாக  வரும் சிறுவன்  அந்த பேப்பரை வெறுப்புடன் வீசியெறியும் குப்பையிலிருந்து குப்பென்று அடிக்குமே ஒன்று...அதற்கு ஆன்றோரும் சான்றோருமாய் சேர்ந்து வைத்திருக்கும் பெயர் "சமூகம்".

பின் குறிப்பு: தற்காலத் திரையுலகத் தாரகைகள் மற்றும் தமிழகத்தை தாங்கிப் பிடிக்கும் புரட்சி நாயகர்கள் தங்கள் தீபாவளி ரகசியங்களை பகிர்ந்து கொள்ளும் பதிவோ என்றெண்ணி இங்கு வந்தவர்கள் என்னை மன்னித்து அருள்வார்களாக...


Friday, November 9, 2012

தீபாவளி விளம்பரங்கள்...உஷார்!

அனுஷ்கா ஆடியபடி வந்து தீபாவளி தள்ளுபடி விலையில் பூச்சிக் கொல்லி மருந்து வாங்குங்கள் என்று விளம்பரம் செய்து விவசாயிகளின் வாழ்வில் தீப ஒளி ஏற்ற முயல்வதை பார்த்திருக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். தீபாவளிக்கு வரும் விளம்பரங்களைப் பார்த்தால், எங்கேயாவது இது போன்ற விளம்பரமும் வந்து விடுமோ என்று பயந்து கொண்டிருந்தேன். நல்ல வேளை அப்படி ஏதும் நடைபெறவில்லை. விவசாயிகள் தப்பித்தார்கள்.

ஆனால் மற்ற வகை விளம்பரங்களில் நமக்கு இந்த அதிர்ஷ்டம் கிட்டவில்லை சார். இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு வரை, தீபாவளி தள்ளுபடி என்பது துணிக்கடையில் மட்டுமே இருந்தது. பின்னர் மெதுவாக Mixie, Grinder, TV, Fridge எனப் பரவத்துவங்கியது. இன்றோ, பொதுக் கழிப்பறையில் "சிறுநீர் கழிக்க 1 ரூபாய் தீபாவளி சிறப்பு தள்ளுபடி" என்று போடாதது ஒன்றுதான் பாக்கி.

அதிலும் இந்த "பம்பர் பரிசு" இருக்கிறதே சார் பம்பர் பரிசு...எனக்கொரு தீராத சந்தேகம். ஏன் சார் நமக்கோ, நமக்கு தெரிந்தவர்களுக்கோ அல்லது நமக்குத் தெரிந்தவர்களுக்குத் தெரிந்தவர்களுக்கோ பம்பர் பரிசு விழுவதே இல்லையே?

கவிவேந்தன் மட்டும் இன்று இருந்திருந்தால்,

பம்பர் பரிசு உண்டெனும்
வம்பர் வார்த்தை பொய்
அன்பர் நன்மைக்கு - இந்த‌
கம்பர் சொல்வது மெய்.

என்று பாடியிருப்பார்!

சில நாட்களுக்கு முன் ஒரு பிரபல நிறுவனத்தின் தீபாவளி பம்பர் பரிசு விளம்பரம் பார்த்தேன். ‍அதில், இந்த தீபாவளி சீசனில், இதுவரை பரிசு பெற்றவர்கள் போட்டோ வேறு! இதில் காமெடி என்னவென்றால், பொய்யை சரியாக செய்யத் தவறி விட்டார்கள். ஒரே போட்டோவை, பக்கத்தின் இரண்டு இடத்தில், வெவ்வேறு பொருளுக்கு பரிசு பெற்றவராக, வெவ்வேறு முகவரியுடன் போட்டு விட்டார்கள்...அனேகமாக அந்த விளம்பர மேலாளருக்கு சீட்டு கிழிந்திருக்கும் என்று நம்பலாம்.

தொலைக்காட்சியின் எந்த சேனல் பக்கம் திரும்பினாலும் அல்லது பத்திரிகைகளின் எந்தப் பக்கம் திருப்பினாலும், தீபாவளி விளம்பரங்கள் எப்படியிருக்கின்றன? அந்த பொருளுக்கு சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, ஒரு நவநாகரீக யுவதியோ அல்லது பண்பாட்டு திலகம் போன்ற பழந்தமிழ் நங்கையோ செயற்கை புன்னகை காட்டியபடி ஒரு அகல் விளக்கின் தீபம் கைகளில் ஏந்தி செயற்கை புன்னகை சிந்துகிறார்கள்.! அதாவது அவர்கள் விளம்பரப் படுத்தும் பொருள் மூலம் நம் வீட்டில் மகிழ்ச்சி தீபம் ஒளிருமாம்...

சும்மா சொல்லக் கூடாது சார்...நம் ஆட்கள் உண்மையிலேயே "ரூம் போட்டு" யோசிப்பவர்கள் தான். இந்த வகையில், எனக்கு ஒரு விளம்பரம் பிடித்திருந்தது ‍"தீபாவளிக்கு தலையில் எண்ணெய் வைக்காமல் குளிக்கின்ற‌ வருத்தமா?" என்று கேள்வி கேட்டு, "சிகிச்சைக்கு முன்" "சிகிச்சைக்கு பின்" என்று இரண்டு போட்டோக்கள். முன்னதில் வழுக்கையுடன் இருக்கும் ஒருவர் பின்னதில் பாகவதர் போல இருக்கிறார். அதன் கீழே "விரைந்து வாருங்கள்...சிறப்பு தள்ளுபடி..." என்று நீள்கிறது விளம்பரம்!

ஆனால் நான் கீழே எழுதியிருப்பது போல் ஒரு விளம்பரத்தை இந்த வருட தீபாவளிக்கு எதிர்பார்த்தேன்:

1. ஒரு இல்லத்தரசி கம்பி மத்தாப்பை நீட்டியபடி சமையல் செய்கிறார். நாம் வியப்புடன் பார்க்கையிலேயே, "இது abc கம்பி மத்தாப்பு. நீண்ட நேரம் எரியும். சமையலே செய்யலாம்னா பாருங்களேன்..." என்பது போன்ற விளம்பரம்.

அனேகமாக, வரும் வருடங்களில் இது போன்றதொரு விளம்பரம் வந்தாலும் வியப்பில்லை:

2. தீபாவளியன்று அனைவரும் வீட்டில் அவரவரது TV அல்லது mobile phone உற்று பார்த்துக் கொண்டிருக்கின்றனர் - cut - பயங்கரமான தொடர் பட்டாசு சத்தம் - cut -  பின்னே ஒரு குரல், "வெளியில் சென்று, வெடியை பத்த வைத்து...எதற்கு இத்தனை கஷ்டம்...எங்கள் smart phone / smart tv மூலம் வீட்டில் அமர்ந்தபடி பற்ற வைத்து,   உட்கார்ந்த இடத்திலிருந்தே வெடி வெடித்து, அதை அப்படியே கண்டு மகிழுங்கள்..." என்பது போன்ற விளம்பரம்.

கலி காலத்தில் கண்டதெல்லாம் கெட்டுக் கிடக்கையில் தீபாவளி மட்டும் அப்படியே பழைய மாதிரியாகவேவா இருக்கும்?

Friday, October 26, 2012

காலம் கெட்டுப் போச்சு சார்...! பகுதி 1


மனுசப் பயலுக பல தினுசு. அந்த ஒவ்வொரு தினுசுக்குள்ளே எத்தனை எத்தனை விதமான மனசு....அப்பப்போ பழைய நினைப்பை நிகழ்காலத்தில முக்கி எடுத்து மனசுக்குள்ள காயப் போடற பழக்கம் உள்ளவங்க ஒரு தினுசு. நான் அந்த வகை ஆசாமி. இந்தப் பதிவை படிக்கற உங்கள்ல நிறைய பேரும் அப்படித்தானே சார்? வீட்டுல இருக்கற பொருளையே அப்பப்போ தூசி தட்டி, சுத்தம் செய்யறோம்...எப்பேர்பட்ட காலம்...! அதுல எத்தனை எத்தனை பேரோட எத்தனை விதமான நினைப்பு ஒட்டிகிட்டுருக்கு...அதை எவ்வளவு பத்திரமா சுத்தப்படுத்தி வச்சுக்கனும் ? நான் சொல்றது சரிதானே?

இந்த திருப்பரங்குன்றம் யானை இறந்த செய்தி படிச்சு, ஒரு மாசமா மனசோட மூலையில ஒரு "நினைப்பு" நீந்திக்கிட்டே இருந்துச்சு சார். சமீபத்துல மதுரைக்கு போயிருந்த போது, இந்த "தூசி தட்டற" வேலைக்காக திருப்பரங்குன்றம் கோயிலுக்கு போயிருந்தேன். சின்ன வயசுல நூத்துக் கணக்கான  செவ்வாய் கிழமைகள் இந்தக் கோயிலுக்கு அப்பாவோட போனதுண்டு. முருகனை பார்க்க முந்தி அடிக்கற கூட்டத்துக்கு நடுவிலே, கோயிலுக்கு உள்ளே நுழைஞ்சு, கடைகளைத் தாண்டிப் போனவுடன், கண் தானாகவே வலது பக்கம் போகும் சார். அங்கே தான் தலையை ஆட்டியபடி நம்ம ஆள் நிக்கும். யானைக்கு அபார நினைவாற்றல் என்ற நம்பிக்கை எப்போதுமே எனக்கு உண்டு. அது தலையாட்டும் அழகைப் பார்த்தால், நம்மை ஞாபகம் வைத்துக் கொண்டு வரவேற்கிறதோ என்பது போல இருக்கும். அந்த யானை இருந்த இடத்தையும், காலடி நீளத்துக்கு நம்ம கால் விரலை கடிச்சு விளையாடும் மீன்கள் கூட்டம் கூட்டமாத் திரியும் சரவணப் பொய்கையையும் பார்க்கப் போயிருந்தேன்.

கோயில் படிகளேறி உள்ளே போனதும், இடது பக்கம் ஒரே சத்தம். நமக்குத்தான் ஏதாவது சண்டை பார்த்தா என்னன்னு கவனிக்காம‌ தாண்டிப் போனா மண்டை வெடிச்சுடுமே...சரின்னு காதைக் கொஞ்சம் தீட்டிக்கிட்டேன். விஷயம் இதுதான் சார் ‍ வெளியூர் வாசிகள் இரண்டு பேரு வெள்ளந்தி மனசோட, கோயில் அப்படின்னா அங்க நல்லவங்கதான் இருப்பாங்கன்னு வந்திருக்காங்க பாவம். காளி சிலை முன்னாடி பவ்யமா ஒருத்தர் "வெண்ணெய் சாத்துங்க" அப்படின்னு அரை நெல்லிக்காய் size வெண்ணெய் உருண்டை இரண்டு கொடுத்திருக்கார். அவங்களும், "ஆஹா...இப்படி ஒரு புண்ணிய சேவையா" அப்படின்னு அகமகிழ்ந்து போய் ஆளுக்கு ரெண்டா வாங்கி காளி மேல வீசியிருக்காங்க.

அவங்க புன்னகையை புஸ்வானம் ஆக்கற மாதிரி, 20 ரூபாய் கொடுங்க என்று வெண்ணெய் காரர் கேட்டிருக்கிறார். "நடந்து போனவனங்கள கூப்பிட்டு கொடுத்துட்டு காசு கேக்கறீங்க..." என்று அவர்கள் கேட்க, "போற வரவங்களுக்கு வெண்ணெய் சும்மா கொடுக்க நான் கேனயனா?" என்று நம்மூர்காரர் எகிற, வேலனை பார்க்க வந்த கூட்டம் வந்த வேலையை மறந்து விட்டு  குஷியாகி, வேடிக்கை பார்த்தது. கூட்டம் என்று இருந்தால் உபதேசம் செய்ய அங்கு ஒருவர் இருப்பாரே! அதுதானே நம்மூர் வழக்கம். இங்கும் ஒருவர் தோன்றினார்.

"ஏன்யா, ஒரு போர்டு கீர்டு இல்ல. சும்மா ஒரு basin வெண்ணெய் உருண்டை வெச்சுகிட்டு, போறவங்களை கூப்பிட்டு கொடுத்தா அவங்களுக்கு எப்படிய்யா தெரியும் நீ வெண்ணெய் விற்பனை செய்யறன்னு" என்று ஆரம்பித்தார். ஆளாளுக்கு ஒருவர் மற்றவரை வார்த்தை சாக்கடையில் புரட்டி எடுத்தனர். அதனால் வீசிய "நாற்றத்தை" ரசிக்கவும் கூட்டம் தவறவில்லை. எல்லாவற்றையும் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்த காளியைப் பார்த்தேன். முப்பது ஆண்டுகள் முன்னால் என் அப்பா தன் தோள் மேல ஏத்தி, நான் வீசின வெண்ணெய் உருண்டையோட பிசுபிசுப்பு இன்னும் இந்த காளி சிலையோட ஏதோ ஒரு துளியில் ஒட்டியிருக்கும்னு தோணிச்சு - அந்த ஞாபகம் எனக்குள்ள ஒட்டியிருக்கற மாதிரி! காலம் தானே சார் கடவுள்...

என்னப்பா நீ? காலம் தான் சாமி அப்படின்னு சொல்லிட்டு "காலம் கெட்டுப் போச்சு" தலைப்பு வச்சுருக்க என்று உங்களுக்கு கேள்வி தோணுமே? அதான் சார், நாம கதவு மேல மோதிட்டு "கதவு இடிச்சுருச்சு" அப்படின்னு சொல்லுவோமே..அது மாதிரி "காலம் கெட்டு போச்சு" சார்!

சரவணப் பொய்கை கதை என்னாச்சுன்னு அடுத்த வாரம் பார்ப்போம்.

Thursday, October 18, 2012

காவிரி ‍ - ஏமாளிகளும் கோமாளிகளும்

நேரம் வந்தாச்சு. வருடம் தவறாமல் நடக்கும் காவிரி தமாஷ் இந்த வருடமும் அதே பொலிவுடன் நடைபெற ஏராளமானோர் காமெடி செய்யும் நேரம் வந்தாச்சு. ஏதோ நாம் எல்லாவற்றையும் பக்காவாக செய்வது போல, பக்கத்து மாநிலத்தை மட்டும் குற்றம் சொல்வதை தள்ளி வைத்து விட்டு நம் லட்சணத்தையும் கொஞ்சம் பார்க்கலாம் சார்...

முப்போகம் என்பதெல்லாம் முன்னோர் கதை என்றாகி, இப்போது இயற்கை இருக்கும் நிலையில், தமிழ் நாட்டில் எவரேனும், தொலைநோக்கில் ஒரு துரும்பையாவது கடந்த முப்பது நாற்பது வருடங்களில் கிள்ளிப் போட்டிருக்கிறார்களா? காமராஜருக்குப் பிறகு நம்மூரில் ஒரு அணை கூட‌ கட்டப்படவில்லை சார். அணைகளை விடுங்கள். தடுப்பணை (check dams) கட்டுவதற்குள்ளேயே நமக்கு தட்டுத் தடுமாறி தலைசுற்றுகிறது.

நல்ல வேளை, இவர்கள் சாலை மற்றும் பாலம் கட்டும் லட்சணம் பார்த்த பின்பு அணை கட்டக் கிளம்பாமல் பேசாமல் இருக்கிறார்களே என்று நிம்மதி அடைய வேண்டியதுதான். சாலை பல்லைக் காட்டினால், மக்கள், தங்கள் தலைவிதி என்று மேடுபள்ளங்களை ஏற்றுக் கொள்ளப் பழகி விட்டார்கள். அணை பல்லைக் காட்டினால் பல ஊர்கள் காணாமல் விடுமே சார்! அது நேராமல் நம்மை காப்பாற்றும் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் அநேக வந்தனங்கள்!

ஆழியாரிலிருந்து பரம்பிக்குளம் செல்லும் வழியில் top slip வனச்சரக அலுவலகத்தில் பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்தின் மாதிரி வைத்திருக்கிறார்கள். அதீத வசதிகள் ஏதுமற்ற காலத்தில்  மலையை குடைந்து (tunnel) ராட்சஸ குழாய் இறக்கியிருக்கிறார்கள். அதை பராமரிப்பதற்குக் கூட இன்று நாம் திணறிக் கொண்டிருக்கிறோம். நம்மூர் தெருவில் சாக்கடைக் குழாய் உடைந்தாலே சரி செய்ய பல நாட்கள் ஆகிறது! என்ன செய்வது சொல்லுங்கள்?

காமராஜரை பற்றி படித்தவையும் கேட்டவையும் நினைவுக்கு வருகிறது சார். அவர் ஆட்சி காலத்தில் எத்தனை புதிய அணைகள் மூலம் எத்தனை அற்புதமான நீர் பாசன திட்டங்களை அறிமுகம் செய்தார் என்று நாம் அறிந்து கொண்டால், கடந்த நாற்பது வருடங்களில் இவர்கள் அனைவரும் எத்தனை காமெடி செய்து (அவர் பெயரைச் சொல்லியே பிழைப்பை ஓட்டும் கட்சியையும் சேர்த்து) தமிழ்நாட்டை எப்படி சீரழித்திருக்கிறார்கள் என்பது புரியும்.

ஆழியார் மட்டுமல்ல, வைகை, மணிமுத்தாறு, சாத்தனூர் என்று எத்தனை அணைகள் காமராஜரால் கட்டப்பட்டன! இதில் மற்றுமொரு நம்ப முடியாத ஆச்சரியம், தன்னை எதிர்த்த பக்தவக்சலத்தையே விவசாய மந்திரியாக ஆக்கி இத்திட்டங்களை செயல்படுத்தியது!

இப்படியிருந்த நாம், எப்படி சார் இப்படி கெட்டுப் போனோம்? காரணம் இருக்கிறது - ‍‍ நாம் நன்றி கெட்ட ஜென்மங்கள். மேற்கூறிய நீர்வளத் திட்டங்கள் மட்டுமல்லாது மற்ற துறைகளிலும் மக்களின் தேவைகளுக்காகவே உழைத்த காமராஜரை, அவரின் சொந்த ஊரில், அரசியல் அரிச்சுவடி கூடத் தெரியாத ஒருவரை வைத்து தோற்கடித்த அற்பர்கள் அல்லவா நாம்! "தெய்வம் நின்று கொல்லும்" என்பார்கள். தெய்வம் இருக்கிறதா இல்லையா என்பது நமக்கு இங்கு தேவை இல்லை. ஆனால், நம் கண் முன்னே, அனைத்தையும் காலம் பார்த்துக் கொண்டிருக்கிறது. காலம் நின்று கொல்லும். எனவே தான், காவிரிக்கு கர்நாடகத்திடமும், கிருஷ்ணாவிற்கு ஆந்திராவிடமும், பெரியாருக்கு கேரளாவிடமும் பழியைப் போட்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் கட்சிகளை வேடிக்கை பார்க்க வைத்து, என்ன செய்வதென்று தெரியாமல் நம்மை தவிக்க வைத்து, நம் மூலமே தமிழ் நாட்டை  தண்ணீருக்காக ஏங்க‌ வைத்திருக்கிறது காலம்!

பரவாயில்லை விடுங்கள் சார். "கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை" என்றொரு நல்ல பழைய பாட்டு இருக்கிறது. இன்புற கேட்போம் வாருங்கள்!Tuesday, October 2, 2012

குத்தானந்தாவின் குத்துப் பாட்டு பகுதி 2

அடுத்த விடுமுறை எப்போது? எந்த ஊர் சுற்றிப் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் காலண்டர் தேதிகளை பார்த்துக் கொண்டிருக்கையில் பின்னாலிருந்து குரல் கொடுத்தபடி வந்தார் குத்தானந்தா. "என்ன சிஷ்யா...காந்தி ஜெயந்தி அன்று காலண்டரை பார்த்தபடி நின்று கொண்டிருக்கிறாய்?" என்றார். "அடுத்த லீவ் எப்போது என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்றேன். "நல்ல வேளை. நான் கூட, வருடா வருடம் நடக்கும் காவிரி கூத்தை இப்போது காலண்டரிலும் "காவிரி பந்த். அரசு விடுமுறை" என்று போட்டு விட்டார்களோ என்று நினைத்து விட்டேன்." என்றார் கண் சிமிட்டியபடி.

"சாமி, இந்த காவிரி சிக்கல் தீரவே தீராதா?" என்றேன். "நல்ல கேள்வி தம்பி. நம்ம "புரட்சி" "எழுச்சி" பட்டமுள்ள அல்லது பட்டமற்ற நாயகர்கள் மற்றும் கலைச்சேவை செய்யும் தவப்புதல்விகள் அனைவரும் நெய்வேலிக்கு போய் கூலிங்கிளாஸ் அணிந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தால் சிக்கல் தீர்ந்துவிடுமே" என்றார். "சிக்கல் பற்றி பேசினால் நக்கல் அடிக்கிறீர்கள் மக்கள் தவறாக நினைக்க மாட்டார்களா?" என்றேன். "அடப்போப்பா, நம்ம எல்லாரும் காவிரி பத்தி உண்மையாகவே கவலைப்பட்டிருந்தா, இந்நேரத்துக்கு என்ன செஞ்சிருப்போம் தெரியுமா?" என்றவர் தொடர்ந்தார்..."நாம தினமும் முப்பது, நாப்பது ரூபாய் கொடுத்து தண்ணீர் can வாங்கறோமே... ஆளாளுக்கு காவிரி பேரைச் சொல்லி அடிக்கிற லூட்டியை வேடிக்கை பார்க்காம, ஒரே ஒரு மாசம் அந்த தண்ணீர் can வாங்க‌ செய்யற‌ செலவை ஒவ்வொரு வீடும் கொடுத்தா, மக்களே நதி நீர் இணைப்பு செய்யலாமே....ஆனா, நம்ம வீட்டுக் குழாய்ல தண்ணி நின்னு போனாத்தானே நமக்கு ரோஷம் வரும். அப்பக்கூட பக்கத்து வீட்டிலும் "தண்ணி வருதா" என்று கேட்டு விட்டு ஆறுதல் அடையறது தானே நமக்கு பழக்கம்" என்றார்.

"ரொம்ப சூடா இருக்கீங்க போல...இந்த வார குத்து சொல்லுங்க" என்றேன்.

"விவசாயத்தை மதிக்காத வெக்கங்கெட்ட நாடு
வாய்கிழிய பேசியே பிடிச்சது பார் கேடு
தண்ணியே பார்க்காம வறண்டு போச்சு காடு
வறுமையின் வயித்திலே ஈரத்துண்டு போடு"

என்று குத்தானந்தா குதித்தார்.

"சாமி, எனக்கு எதுவும் சொல்லத் தெரியலை. ஆனா என்னமோ வருத்தமா இருக்கு. சரி விடுங்க...போன வாரம் ஏதோ நான் செய்யனும்னு சொன்னீங்களே...அதச்சொல்லுங்க" என்றேன். "டேய்,அடுத்த வாரத்திலே இருந்து ஒரு நல்ல தமிழ் இலக்கியத்திலே இருந்து நீ ஏதாவது கொண்டு வந்து விளக்கம் சொல்" என்றார். "சாமி, நல்லாருக்கு. ஆனா இலக்கியம் அப்படினா என்ன?" என்றேன். என்னை மேலும் கீழுமாக பார்த்த குத்தானந்தா,

"படிச்சா பத்திக்கணும்
மனசோட ஒட்டிக்கணும்
மண்டையில‌ ஏத்திக்கணும்
ஆயுசுக்கும் யோசிக்கணும்"

இப்படி இருக்கற எழுத்து தான் இலக்கியம் என்றார். "கிளப்பிட்டீங்க சாமி. இப்படிப்பட்ட சரக்கு தமிழ் முழுக்கக் கொட்டிக் கிடக்கு. நமக்குத் தான் தெரியல" என்றேன். "ஆனா சாமி..." என்று இழுத்த நான், "why this kolaveri பாட்டுக் கூட நிறைய பேருக்கு நீங்க மேல சொன்ன மாதிரியே இருக்குன்னு சொல்றாங்களே...அதுவும் இலக்கியமா?" என்றேன். "கலிகாலம் தம்பி கலிகாலம்"  என்று தலையில் இரண்டு கைகளாலும் அடித்துக் கொண்ட‌ குத்தானந்தா, "இன்னிக்கு காந்தி ஜெயந்தி. எப்படியும் குத்தாட்டம் கும்மாளம் என்று அர்த்தமில்லாமல் ஆண்டு முழுவதும் ஓ(ட்)டிக்கொண்டிருக்கும் சேனல்கள் ஏதாவது ஒன்றில், சம்பந்தமில்லாமல் "காந்தி" படம் இன்று போடுவார்கள். அந்தப் படத்துல காந்தி பத்தி Albert Einstein சொன்னதா ஒரு வரி காட்டுவாங்க "Generations to come, will scarce believe that such a man as this one ever in flesh and blood walked upon this Earth". நம்ம நாட்டுக்காரங்களுக்கு எதையுமே வெளிநாட்டில் இருந்து யாராவது சொன்னாத்தான் ஏத்துப்பாங்க‌............... பாவம் Einstein. அவர் சொன்னது பலிக்க இருநூறு முன்னூறு வருடங்களாவது ஆகும் அப்படின்னு நம்பியிருப்பார். அவருக்கு இந்தியா பத்தி தெரியல. நாமெல்லாம் யாரு? எப்படி வேகமா வளர்ந்து கிழிக்கிறோம்...அவர் சொன்ன வார்த்தைகளை எவ்வளவு சீக்கரமா எழுபது வருஷத்திலேயே உண்மையாக்கிட்டோம் பார்த்தியா..." என்றபடி டாடா காட்டினார் குத்தானந்தா...
   .

Saturday, September 22, 2012

விருப்பப்படி விலையேற்றுவோம் ‍- சிதம்பரம் அதிரடி!டீசல் விலை உயர்வுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுக்கிறது. கட்சிகளும் வழக்கம் போல தங்கள் நாடகங்களை ஆரம்பித்துள்ளன. நம் நாட்டில் தான் என்ன வேண்டுமானாலும் நடக்கலாமே சார். எனவே, வரும் வாரம் இந்தப் பதிவில் வருவதைப் போல ஏதேனும் நடந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது. அப்படி ஏதும் நிகழ்ந்து விடாமல் இருக்க பாரத மாதாவை வேண்டிக் கொள்வோம். இனி கற்பனைக்கு போகலாம். இன்றைய கற்பனை நம் நாட்டில் நாளைய செய்தி ஆகாது என்று என்ன சார் நிச்சயம்?

டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு குறித்து மன்மோகன் சிங், சிதம்பரத்திற்கு போன் செய்கிறார். "என்னப்பா சிதம்பரம், மக்கள் எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே...நாம் எதில் கை வைத்தாலும் கதை கந்தலாகிறதே...ஏதாவது செய்யப்பா" என்கிறார். சிதம்பரம், "கவலைப்படாதீர்கள். நம் மக்கள் எந்த எதிர்ப்பையும் நாலு நாள் செய்வார்கள். பிறகு ஆர்வம் வேறு விஷயங்களின் மீது போய் விடும். இருந்தாலும், நான் என் கடமையை செய்யாமல் இருக்க முடியுமா? நாளையே பத்திரிகையாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறேன். நான் பேசுவதற்கு தலையாட்ட இரண்டு அமைச்சர்களை வரச்சொல்லுங்கள்" என்கிறார்.

கூட்டம் ஏற்பாடாகிறது. "Times Now" போன்ற TV channels நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. இனி பத்திரிகையாளர்களின் கேள்விகளையும், சிதம்பரத்தின் பதில்களையும் பார்ப்போம்:

பத்தி: சார், மீண்டும் ஒரு விலையேற்றமா என்று மக்கள் கொதிக்கிறார்கள். அரசு என்ன செய்யப் போகிறது?

சிதம்பரம்: நீங்கள் அரசின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பாராட்டுகிறேன். எதையுமே செய்ய முடியாத அரசை பார்த்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று ஆக்கபூர்வமாக கேள்வி கேட்டதற்கு நன்றி.

பத்தி: நீங்கள் இன்னும் கேள்விக்கு பதில் சொல்லவில்லை.

சிதம்பரம்: மன்மோகன் சிங் ஏற்கனவே, ஒரு மெளனம் ஓராயிரம் பதில்களுக்கு சமம் என்று உங்களிடம்தானே போன வாரம் சொன்னார்? அவரின் அமைச்சரின் மெளனம் ஐநூறு மெளனங்களுக்காவது சமம் என்பதுதான் என் பதில்.

பத்தி: டீசல் விலை ஏறினால் அனைத்து பொருட்களின் விலையும் ஏறி விடுமே?

சிதம்பரம்: நாங்கள் இறங்கி விடும் என்று சொன்னோமா?

பத்தி: நீங்கள் மூத்த அமைச்சர். மக்கள் உங்களிடமிருந்து தீர்வுகளை எதிர்பார்க்கின்றனர்.

சிதம்பரம்: நான் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். ஐந்து வருடங்களுக்கு முன் உங்கள் சம்பளம் எவ்வளவு? (நிருபர் சொல்கிறார்). இப்போது எவ்வளவு? (நிருபர் சொல்கிறார்). (இன்னொருவரை எழுப்பி இதே கேள்வி கேட்கிறார். அவரும் பதில் சொல்கிறார்). பாருங்கள், அனைவரின் சம்பளமும் வருடா வருடம் கூடிகிறது. விலைவாசி கூடினால் மட்டும் குறை சொல்கிறீர்கள்? சம்பளம் கூடினால் வரும் அதிக பணத்தை விலைவாசி கூடினால் தானே செலவழிக்க முடியும்? (பதிலைக் கேட்ட பலர் மயக்கம் போட்டு விழுகின்றனர்!).

பத்தி: அப்படியென்றால் எந்த பொருளின் விலை உயர்ந்தாலும் நீங்கள் தடுக்க மாட்டீர்களா?

சிதம்பரம்: நாங்கள் டீசல் விலையைத்தான் உயர்த்தினோம். மற்ற பொருட்களின் விலை உயர்ந்தால், அந்தந்த அமைச்சர்கள் உங்களுக்கு விளக்கம் கொடுப்பார்கள்.

பத்தி: இந்த காஸ் சிலிண்டர் ரேஷன் முறை....(அவர் முடிக்கும் முன் சிதம்பரம் பதில் சொல்கிறார்)

சிதம்பரம்: என்ன கேள்வி இது? நம்ம நாட்டில் எத்தனை வீட்டில் தினமும் சமைக்கிறார்கள்? Pizza சாப்பிட்டு விட்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு சிலிண்டர் எதற்கு?

பத்தி: சார், உங்க ice cream - அரிசி விளக்கம் மாதிரிதானே சார் இதுவும்? நல்லா தெளிவாயிடுச்சு. நன்றி.

சிதம்பரம்: தலைப்புச் செய்தியா போடுங்க. அது மட்டுமில்லை. விருப்பப்பட்டா நாங்க விலையேத்துவோம்.அதையும் தெளிவாக போடுங்க...

(இதைக் கேள்விப்பட்டு நாடே கொந்தளிக்கிறது. நிலைமையை சமாளிக்க அடுத்த நாளே மற்றொமொரு பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடாகிறது)

சிதம்பரம்: பத்திரிகையாளர்கள் பொறுப்புடன் செய்திகள் போட வேண்டும். நான் "விருப்பப்படி விலையேற்றுவோம்" என்று சொன்னேன். ஆனால் யார் விருப்பப்படி என்று நீங்கள் கேட்டீர்களா? கேட்டிருந்தால், "மக்கள் விருப்பப்படி விலையேற்றுவோம்" என்று தெளிவுபடுத்தியிருப்பேன்...இப்போது பாருங்கள்...நான் சொன்னது எவ்வளவு தவறாக மக்களிடம் போய்ச்சேர்ந்திருக்கிறது...


என்ன பேசுவது என்று தெரியாமல் வாய் பிளந்தபடி நின்றிருந்த நிருபர்கள் வாயில் சிவகங்கையிலிருந்து சிறப்பாக வரவழைக்கப்பட்டிருந்த அல்வா வைக்கும்படி தன் உதவியாளரிடம் சொல்லிக்கொண்டிருந்தார் சிதம்பரம்.

நிருபர்களுக்கு மட்டுமா? நம் அனைவருக்குமே கொடுக்கக் கூடிய திறமையுள்ளவர்தானே அவர்!


Saturday, September 15, 2012

குத்தானந்தாவின் குத்துப் பாட்டு பகுதி 1

ஞாயிறு காலை...சூரியன் முதுகை சுட்டு எழுப்பும் சோம்பல் மிகுந்த வேளை..."உங்கள் tooth pasteல் உப்பு இருக்கிறதா" என்று தொலைக்காட்சியில் ஒருவர் நம்மை விசாரித்துக் கொண்டிருக்க, பற்களின் மேலும் கீழுமாய் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தன எனக்கு நம்பகமான பற்பசையை தாங்கிய tooth brush.

தண்ணீரை முகத்தில் நனைத்து துடைத்தபடி கண்ணாடியை பார்த்தால், என்னைப் பார்த்து சிரித்தபடி ஒரு உருவம் நின்றிருந்தது. ""அய்யா, யார் நீங்கள்?" என்றேன்..."நித்தம் ஓடியாடி சித்தம் ஓய்ந்து போகும் மக்களை குத்துப் பாட்டு மூலம் குஷிப்படுத்த வந்திருக்கும் குத்தானந்தா நான்" என்றார் அவர். "அய்யா, "ஆனந்தா" என்று முடியும் பெயர்கள் கேட்டாலே ஆத்திரத்தில் மக்கள் கொதிக்கும் நேரத்தில் இப்படி ஒரு பெயர் தேவையா?" என்று கேட்க நினைத்தேன். அதற்குள் அவரே,"நான் வெறும் குத்தானந்தா அல்ல. ஸ்ரீ குத்தானந்தா" என்று விளக்கம் கொடுத்தார். இப்பொழுதெல்லாம் தகுதி இருக்கிறதோ இல்லையோ, பெயருக்குப் முன்னாலும் பின்னாலும் எதையாவது சேர்த்துக் கொள்வதுதானே fashion என்று சொல்லத் தோன்றியது. "நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா" என்று கண்ணதாசன் ஒரு பாட்டு வரியில் சொல்வாரே அதைப் போல் பேசாமல் இருந்து விட்டேன்.

"கலிகாலம் சாமி. பன்னாட்டு கம்பெனி போல செயல்படும் ஆன்மீக குருக்கள் புற்றீசல் போல கிளம்பி விட்டார்கள். அவர்களைப் போல உங்கள் புகழும் பல நாடுகள் பரவ வேண்டுமென்றால் ஒரு "ஸ்ரீ " போதாது இரண்டு "ஸ்ரீ " குறைந்தபட்சம் போட்டுக் கொள்ள வேண்டும்" என்றேன். குதூகலமான குத்தானந்தா, "சபாஷ் தம்பி. உன்னை போன்றவர்கள்தான் சிஷ்யர்களாக தகுதி படைத்தவர்கள். இரண்டு ஸ்ரீ  போட்டுக்கொள்ளலாம்" என்று தன் பெயரை "ஸ்ரீ  ஸ்ரீ  குத்தானந்தா" என்று சில முறை சொல்லிப் பார்த்துக் கொண்டார். "ஆனால் சாமி, அதை சற்று தமிழாக்கம் செய்தால் "சீ சீ குத்தானந்தா" என்று வருமே...அழைப்பதற்கும் கேட்பதற்கும் ஒரு மாதிரியாக இருக்குமே..." என்றேன். "ஓ நீ என்னையே ஆழம் பார்க்கிறாயா" என்று கோபம் கொண்டார் குத்தானந்தா. கபால் என்று காலில் விழுந்து "என்னை மன்னித்து சீடனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்ற என் கெஞ்சலுக்கு கொஞ்சம் செவி சாய்த்து, "சரி சரி எழுந்திரு" என்றார்.

நன்றி சாமி. குத்துப்பாட்டு என்பதன் இலக்கணம் என்ன? என்றேன் நான்.

"மிதமிஞ்சிய சந்தம்
குத்துக்கு சொந்தம்
பொருளற்ற சத்தம்
குத்துக்கு குத்தம்"

என்று பாட்டாகவே ஒரு போடு போட்டார். "சாமி இதுவே ஒரு குத்து போல இருக்கிறதே" என்றேன்."ரொம்ப ice வைக்காதே. நான் ஒன்றும் இலவசமாய் உனக்கு குத்துப்பாட்டு சொல்ல மாட்டேன். பதிலுக்கு நீ வாரம் ஒன்று தர வேண்டும். என்னவென்று அடுத்த வாரம் சொல்கிறேன் என்றார். "சரி சாமி" என்று ஒத்துக் கொண்ட நான், "நம் நாட்டில் திட்டம் நல்லாத்தான் போடுவோம். ஆனால் ஒன்றும் வேலைக்கு ஆகாது. அது போல வாரா வாரம் உங்கள் குத்துப் பாட்டை பதிவாக போடும் திட்டத்திற்கு தடையாக நாட்டில் ஆயிரம் அக்கிரமங்கள் நடந்து அதைப் பற்றிய‌ பதிவு போடும்படி தூண்டுமே சாமி என்ன செய்வது?" என்றேன். "அதற்கென்ன சீடா...நம் நாட்டில் நம் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் பேசலாம் செய்யலாம் எவரும் கண்டு கொள்ள மாட்டார்கள். ஜனநாயகம் என்பதற்கு புதிய அர்த்தம் கொடுப்பவர்கள் அல்லவா நாம்" என்று சொன்னதோடு நில்லாமல், "சமீபத்திய எடுத்துக்காட்டு சொல்கிறேன் கேள்" என்றார்...

"சீடா, சென்ற வாரம் ஏதோ ஒரு உப்புச்சப்பில்லாத இலங்கை பல்கலைகழக அணி தமிழ்நாட்டில் விளையாட வந்ததற்காக இங்குள்ள address இல்லா அமைப்புகள் முதல் அரசாங்கம் வரை அப்படியொரு குதிகுதித்து அவர்களை திருப்பி அனுப்பினவே...அடுத்த வாரம் t20 cricket world cup இலங்கையில் நடக்க உள்ளது. இந்திய அணியில் தமிழ்நாட்டின் Ashwin விளையாடுகிறார். அதாவது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் இலங்கை சென்று விளையாடுகிறார். இது மட்டும் சரியா? சொல்லு பார்ப்போம் என்றார். "சாமி நீங்க டேஞ்சரான ஆசாமியா இருப்பீங்க போலிருக்கே, குத்துப் பாட்டு நடுவிலே நிறைய "உள்குத்து" வேற குத்துவீங்க போல..." என்றேன்.

"கண்ணாடியோட என்ன பேச்சு" என்று கடுப்பாகிப் போன என் மனைவியின் குரல் கேட்க அப்புறம் பார்க்கலாம் என்று அவசரமாக காணாமல் போனார் குத்தானந்தா...

Saturday, September 8, 2012

முப்பத்தி இரண்டு பற்களும் தெரியும்படி சிரியுங்கள்!

ஆமாம் சார். நமக்கிருக்கும் தினசரி சிக்கல்களில் சிரிப்பதற்கு எங்கே நேரம் கிடைக்கிறது? ஆனால், அதிகம் சிரித்தால் ஆரோக்கியம் என்று சொல்கிறார்களே! எனவே தான் நம் மத்திய அரசு, "நகைச்சுவை வளர்ச்சித் துறை" என்று தனியே ஒரு இலாகா துவக்கியுள்ளது.

"என்னய்யா இது எந்த பத்திரிகைகளிலும் வராத செய்தியாக இருக்கிறதே!" என்கிறீர்களா? ஏன் சார், அரசாங்க ரகசியங்கள் எல்லாம் வெளிவரும் பொழுது, இது போன்ற, வெளியே  தெரிய வேண்டிய விஷயங்கள் ரகசியமாகத்தானே இருக்கும்?

இந்த "நகைச்சுவை வளர்ச்சித் துறை"யில் நீண்ட நாட்களாகவே சிதம்பரமும் கபில் சிபலும் ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள். நகைச்சுவையிலும், உருக்கமான நகைச்சுவை என்று ஒன்று இருக்க முடியும் என்று அவ்வப்போது மன்மோகன் சிங் நிரூபித்து வந்தார். இவர்கள் மட்டுமே நாட்டு மக்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்தால் போதுமா சார்? பார்த்தார்கள் மற்ற அமைச்சர்கள். எப்படியும் எந்தத் துறையிலும் உருப்படியான வேலை எதுவும் நடைபெறவில்லை. நாமும் ஏன் "நகைச்சுவை வளர்ச்சித் துறை"யில் பணியாற்றக் கூடாது என்று கிளம்பி விட்டார்கள்.

இதில் புதிதாக சேர்ந்திருப்பவர் தான் "பெனி பிரசாத் வர்மா". என்ன சார் இது, கேள்விப்படாத பெயராக இருக்கிறதே...இப்படி ஒரு அமைச்சரா? என்று கேட்பீர்கள்தானே? சரிதான் சார். முன்னரெல்லாம் ஒரு மந்திரி பல ஆண்டுகள் ஒரு துறையில் இருப்பார். வேலையும் செய்வார். நமக்கெல்லாம் அந்த மந்திரியின் பெயர் மட்டுமின்றி மற்ற தகவல்களும் நினைவில் இருக்கும். இப்பொழுதோ நாளொரு மந்திரி பொழுதொரு துறைக்கு வருகிறார் போகிறார். நாட்டுப்பணி என்று எந்த வேலையும் கிடையாது. அப்புறம் எப்படி சார் மந்திரியின் பெயர்கள் நமக்குத் தெரியும்? எனவே, பெனி பிரசாத் வர்மா ஒரு மந்திரி சார். எந்தத் துறை என்பதெல்லாம் நமக்கு எதற்கு? எந்த வேலையுமே நடைபெறாத நாட்டில் எந்தத் துறைக்கு யார் மந்திரியாக‌ இருந்தால் என்ன?

இவர், "நகைச்சுவை அமைச்சகத்தின்" புதிய உறுப்பினராகி சில முத்துக்களை உதிர்த்திருக்கிறார். "விலைவாசி உயர்வு மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாயிகள் பயன்பெறுவார்கள்" என்று சொல்லியிருக்கிறார் இவர். நாம் இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். மன்மோகன் சிங், "விலைவாசி உயர்வு கவலை அளிக்கிறது. தூக்கம் கூட எனக்கு கிடையாது" என்று சொல்லியிருக்கிறார். இந்த வர்மா, சிங்கின் அமைச்சரவையில் உள்ளவர். அவரோ மகிழ்ச்சியில் திளைக்கிறார். மன்மோகனோ துயரத்தில் உழல்கிறார்.
அதுவும் ஒரே விஷயத்திற்காக!

அதாவது, ஒரே விஷயத்திற்காக பிரதமர் கவலைப்படுவதாக கூறுகிறார். அவரின் அமைச்சரோ, அதே விஷயம் சந்தோஷமாக இருக்கிறது என்கிறார். என்ன சார் நடக்கிறது? இப்படி ஆளாளுக்கு தங்கள் விருப்பப்படி பொறுப்பில்லாமல் பேசுகிறீர்களே என்று கேட்டால் போச்சு...அவ்வளவுதான். சிதம்பரமோ கபில்சிபலோ பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து விடுவார்கள். அங்கு அவர்கள் அளிக்கும் விளக்கமோ, சம்பந்தப்பட்டவர் முன்னர் பேசியதே பரவாயில்லை என்ற அளவுக்கு நம்மை கொண்டு போய் விடும்.

எனக்கு இந்த சிதம்பரம் மீது சந்தேகம் சார். அதாவது, முன்னரெல்லாம் சிதம்பரம் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது நடு நடுவே திருக்குறள் சிலவற்றை எடுத்து விடுவார். நமக்கும், "ஆஹா! தமிழர் ஒருவர் நாட்டுக்கு பட்ஜெட் சமர்க்கிறார்...அந்த உரையில் திருக்குறள் வேறு சொல்கிறார்" என்று புல்லரித்து போவோம் (இப்போது இவரது பேச்சுக்கள் செல்லரித்து கிடக்கின்றன என்பது வேறு விஷயம்). ஒரு வேளை இவர் சம்பந்தம் இல்லாமல் "இடுக்கண் வருங்கால் நகுக" குறளை வர்மாவுக்கு சொல்லிக் கொடுத்து, "சும்மா பேசி வைங்க. ஏதாவது சிக்கலாச்சுனா வள்ளுவரே சொல்லியிருக்கார்னு விளக்கம் கொடுத்துரலாம்" என்று சொல்லியிருப்பாரோ?

இப்போது சொல்லுங்கள் நாம் பற்கள் அனைத்தும் தெரியும்படி சிரிக்க வேண்டுமா வேண்டாமா?Saturday, September 1, 2012

ரயிலில் பயணம் செய்வது எப்படி? பகுதி 8


பாருங்கள்...ஒரு பதிவை ஒரு வாரம் எழுதி அடுத்த வாரம் தொடர்வதற்குள் ஒன்பது ஊழல்கள் நம் நாட்டில். ரயில் திகில் எழுதலாம் என்றால் கரி கிலி கிளப்புகிறது...சரி விடுங்கள், நம் கதைக்கு மீண்டும் வருவோம்.

புதிதாக "கலி காலம்" வருபவர்கள்,  ரயிலில் பயணம் செய்வது எப்படி? பகுதி 7 படித்து விட்டு மீண்டும் இங்கு வரவும். அதன் தொடர்ச்சியே இந்தப் பதிவு.

என்னுடன் வந்த இளைஞர் ரயில் முழுதும் ரோந்து போய்விட்டு வந்தவுடன் என்னை திகிலடைய வைக்கும்படி அப்படி என்னதான் சொன்னார்? "S7 மட்டும் தான் நமக்கு சரிப்படும். இரண்டும் பாத்ரூம் பக்கம். வைப்பதற்கும் கவனிக்கவும் வசதி." மேலும் தனது நண்பரின் பெயரைச் சொல்லி, "அவனைத்தான் பார்த்துக் கொள்ள சொல்லியிருக்கிறேன் எலித் தொல்லை வேறு கடித்து கிடித்து வைத்து விடாமல் இருக்க வேண்டும்" என்றார்.

ஆஹா... ஒரு வேளை ஒயர் கியர் பாத்ரூமில் fit பண்ணியிருப்பார்களோ? என்று என் எண்ணம் எட்டு ஊருக்கு கட்டம் போட மற்றொருவர் என் வயிற்றில் கத்தியை சொருகினார். ஆம். "சரி கத்தி யார்கிட்ட இருக்கு?" என்று அவர் கேட்டவுடன் பசியிலுள்ள வயிறு பச்சை மிளகாய் சாப்பிட்டது போல  ஒரு உணர்வு வாயிலிருந்து வயிறு வரை பரவியது. மணி பதினொன்றை தாண்டியது. அவர்களின் மேல் ஒரு பார்வையை வைத்தபடி, "upper berth" ஏறி காலை நீட்டி படுத்தபடி கண்களை அவர்கள் பக்கம் ஓட்டினேன். அனைவரும் எங்கோ கிளம்பிச் சென்றனர். 1997 டிசம்பரில் Srirangam அருகே Pandian Express ரயிலில் குண்டு வெடித்தபோது நான், குண்டு வெடித்த பாத்ரூமிற்கு பக்கத்து பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அந்த ஞாபகம் மூளையிலிருந்து கிளம்பி கிட்டத்தட்ட கண்களை பிளந்து வெளிவந்து விடும் போல இருந்தது.

12 மணி அடிக்க பத்து நிமிடங்கள் இருக்கையில், பெட்டியின் விளக்குகள் மீண்டும் போடப்பட்டன ‍ அவர்கள் மூன்று பேர் திரும்பி விட்டனர். அவர்களின் கையில் இப்போது ஒரு அட்டைபெட்டி இருந்தது. எல்லாம் ரெடி என்றார் ஒருவர். கட்டை விரலை உயர்த்திக் காட்டினார் மற்றொருவர். வண்டி கிளம்பியதிலிருந்து முதல் முறையாக அவர்கள் அனைவரும் செல்போனை வெளியில் எடுத்தனர். "10 minutesதான் இருக்கு எல்லாரையும் இங்க வந்துர சொல்லு" என்றார் ஒருவர். வரிசையாக நான்கைந்து போன் உரையாடல்கள் சட்சட்டென்று நடந்தேறின. போதாத குறைக்கு "ரயிலையே உலுக்கனும்டா" என்று ஒருவர் punch line வேறு வைத்தார்.அடுத்த ஐந்து நிமிடங்களில் அங்கு 7 பேர் இருந்தனர்.

இயற்கை அழைப்பின் சாக்கில் நான் berth விட்டு கீழே இறங்கினேன். நான் கீழே இறங்குவதை பார்த்த அவர்கள், என்னைப் பார்த்து குறுநகை பூத்தனர். ‍ நானோ, மூன்று நாட்கள் முன்பு செய்த‌ பூரியை வாயில் மெல்லுகையில் சிரிக்கச் சொன்னால் எப்படியிருக்குமோ அதைப் போல அவர்களை பார்த்து "ஒரு மாதிரி"யாக சிரித்து வைத்தேன்.

கழிவறையின் உள்ளே நான் இருக்கையில் "ஹோ" என்ற இரைச்சல் வெளியில் கேட்டது. ஒரு நிமிடம் கழித்து நான் என் இடத்திற்கு வந்தால்...

அந்த அட்டைப் பெட்டி பிரிக்கப்பட்டிருந்தது....ஒருவர் முகம் முழுக்க cake வழிய நின்று கொண்டிருந்தார். வேறொன்றுமில்லை சார்...அந்த நண்பர் குழுவில் ஒருவருக்கு பிறந்த நாள். ஒவ்வொருவரும் வெவ்வேறு பெட்டியில் RACயில் அகப்பட்டு கொண்டதால் இத்தனை களேபரம். அனைவரையும் தேடிப்பிடித்து கூட்டி வந்திருக்கிறார்கள். எனக்கும் சிறிது கேக் கொடுத்தார்கள். அவர்களிடம், "நான் ரயிலில் ஏறியதிலிருந்தே அல்வா சாப்பிட்டுக்கொண்டே தான் வந்தேன்" என்று சொல்ல முடியுமா? கேக், அல்வா இரண்டுமே இனிப்புதான் இல்லையா சார்? நான் வாங்கிக் கொண்ட கேக் அல்வா போன்றே இருந்தது!Sunday, August 26, 2012

முகத்தில் கரி பூசலாம் வாருங்கள்!


தலைப்பை படித்தவுடன் நமக்கு மகிழ்ச்சியாக இருக்குமே? ஒருவர் முகத்தில் கரி பூச வேண்டுமென்றால் நம் அனைவருக்கும் வரும் மகிழ்ச்சியை கேட்கவா வேண்டும்! ஆனால் யார் முகத்தில் பூச வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்...

ஒரு வாரமாக "நிலக்கரி வெட்டுவதற்கு ஒதுக்கீடு செய்வதில் ஊழல்" என்று நாடே அல்லோலகல்லோலப்படுகிறது. போதாத குறைக்கு அன்றாட பாராளுமன்ற நடவடிக்கைகளும் நிறுத்தப் படுகின்றன. இவர்கள் "வேலை" பார்ப்பதே ஆண்டுக்கு சில நாட்கள்தான். அதிலும் இப்போது இந்த "புதிய அணுகுமுறை" வேறு! உத்தம சிகாமணிகள் நிரம்பிய எதிர்கட்சிகள், கரித்துறையை வைத்திருந்த உத்தமருக்கும் உத்தமரான பிரதமர், பதவி விலகினால்தான் ஆயிற்று என்று கிளம்பியிருக்கிறார்கள்.

இந்த அரசு "பூசி மெழுகும்" துறை ஒன்றை வைத்திருக்கிறது. "நிதி" இல்லாமல் எதையாவது பூச முடியுமா? எனவே நிதி அமைச்சர் தான் இந்தத் துறையின் தலைவர். எந்தக் கொள்ளை ஊருக்குத் தெரியும்படி "ஒழுக" ஆரம்பிக்கிறதோ உடனே "பூசி மெழுகும்" துறையின் தலைவர் அனைத்து ஊடகங்களுக்கும் பேட்டி என்ற பெயரில் விளக்கம் கொடுப்பார். இப்படித்தான், நிலக்கரி ஒதுக்கீட்டின் ஓட்டைகளை பூசி மெழுக‌, சில நாட்களுக்கு முன், நம் "ice cream" புகழ் சிந்தனை சிற்பி ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது, நிலக்கரி வெட்டி எடுக்காத வரை ஒரு நட்டமும் இல்லையாம். உரிமம் தானே வழங்கப்பட்டது என்றொரு விளக்கம். அதாவது சார், நமக்கு ஒரு நூறு ஏக்கர் நன்செய் நிலம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம் (கனவில் தான்!). அதை நமக்கு "வேண்டப்பட்டவர்களுக்கு" குறைந்த விலைக்கு ஒத்திக்கு விடுகிறோம். உடனே பொறுப்புள்ள உறவினர் ஒருவர், ஏனப்பா இதனால் உனக்கு எத்தனை நட்டம் என்று கேட்டால், நாம், "என்ன புத்தியில்லாமல் பேசுகிறீர்கள், அவர் இன்னும் அந்த நிலத்தில் விளைச்சல் ஏதும் செய்யவில்லையே? நிலத்தை தானே ஒத்திக்கு விட்டேன்..." என்று நாம் சொன்னால் அதில் எவ்வளவு "புத்தி" இருக்கிறதோ அவ்வளவு அர்த்தமுள்ளது இந்த விளக்கம்.

சரி சார் இப்போது இன்னொரு பக்கம் பார்ப்போம் இந்த எதிர்கட்சி இருக்கிறதே...ஆஹா தேச நலனில் எவ்வளவு அக்கறை பார்த்தீர்களா? இவர்கள் கர்நாடகாவில் அடிக்கும் கூத்தென்ன டெல்லியில் பேசும் பேச்சென்ன! ஆனால் ஒன்று சொல்ல வேண்டும். மற்ற‌ கட்சிகள் போல் இல்லாமல், இவர்களின் வண்டவாளத்தை இவர்களே தண்டவாளத்தில் ஏற்றும் பழக்கம் இருக்கிறது. இதை நாம் பாராட்டாமல் இருக்க முடியுமா?

இந்த கரி விஷயத்திலும் அப்படித்தான். பிரதமரை போட்டுத் தாக்கும் இவர்களின் கட்சியில் ஒரு மாநிலத்தின் முதல்வர், 2007ல் பிரதமருக்கு இவர் கடிதம் எழுதியிருக்கிறார்  (தமிழ்நாட்டிலிருந்து மட்டும் தான் டெல்லிக்கு தபால் சேவை இருக்கிறதா என்ன?). இன்னும் துவங்காத ஒரு தனியார் நிறுவனத்தின் விபரம் எழுதி, அதற்கு நிலக்கரி உரிமம் வழங்க வேண்டும் என்று சிபாரிசு செய்கிறார். ஒரு முதல்வருக்கு, இன்னும் ஆரம்பிக்காத ஒரு தனியார் நிறுவனத்தை பற்றிய தகவல்கள் எப்படி தெரியும்? எதற்கு இந்த அக்கறை? இதை எவரேனும் கேட்டால், இந்த எதிர்கட்சி, வாழைப்பழத்தை உறித்து எண்ணெய் உள்ளே போட்டால் போல வழுக்கு வழுக்கென்று வழுக்குகிறார்கள்.

இந்த இரண்டு தேசிய கட்சிகளின் பின்னே சந்தர்பவாதம் மட்டுமே சாக்காய் வைத்து கோஷ்டி கானம் பாடித்திரியும் சுயநலமிக்க உதிரிக்கட்சிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் நான்கைந்து தேறும்.

இப்போது யார் முகத்தில் கரி பூச வேண்டும் என்று கேட்கிறீர்களா? வாருங்கள், ரகசியமாக காதில் சொல்கிறேன். ஆளுக்கொரு கரிக்கட்டையை எடுத்துக்கொள்வோம். வேறு யாரும் அறியாத வண்ணம் கண்ணாடி முன்னால் நின்று நம் முகத்தில் நாமே பூசிக்கொள்வோம். சும்மா பூசிக்கொள்ள கூடாது சார், "பாரத நாடு பழம்பெரும் நாடு நீர் அதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்" என்று கண்ணாடியை பார்த்து உரக்கச் சத்தம் போட்டபடி பூசிக்கொள்ள வேண்டும்! முடிந்தால் கண்ணாடியிலும் கரி பூசி வைப்போம். கண்ணாடியில் மனசாட்சி தெரியும் என்று பெரியவர்கள் சொல்கிறார்களே!


Friday, August 17, 2012

ரயிலில் பயணம் செய்வது எப்படி? பகுதி 7


இப்போதெல்லாம் நம்மூர் ரயிலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் சார். பெண்ணைத் தூக்கி வெளியில் வீசுகிறார்கள், பெட்டி திடீரென்று தீப்பிடித்து எரிகிறது, கழிவறையில் மலைப்பாம்பு பயணம் செய்கிறது...இப்படி கற்பனைக்கு எட்டாத களேபரங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே ஒவ்வொரு ரயில் பயணமும் "எதிர்பார்ப்பு" மிக்கதாக ஆகி விட்டது இல்லையா?

சமீபத்தில் மதுரையிலிருந்து பெங்களூருக்கு இரவு நேரத்தில் ரயில் ஏறினேன். அமர்ந்த சற்று நேரத்தில் மூன்று இளைஞர்கள் அருகிலுள்ள இருக்கைகளுக்கு வந்தார்கள். இந்த காது இருக்கிறதே சார் காது...நாம் சும்மா இருந்தாலும் அது சும்மா இருக்காமல் அக்கம் பக்கத்து பேச்சுகளை வாங்கி மூளைக்கு அனுப்பியபடியே இருக்கும். பயணங்களில் ஒரு "பக்க" பேச்சு மட்டும் கேட்டால் போதுமா? எனவேதான் இரண்டு காதுகள் நமக்கு இருக்கிறது போலும்!

அந்த இளைஞர்கள் "புதிதாக வேலை"க்கு சேர்ந்தவர்கள் என்பதும் பெங்களூரில் ஒன்றாக அறை எடுத்து தங்கியிருக்கிறார்கள் என்பதும் சில நிமிடங்களிலேயே புரிந்து போனது. மூவருமே "நான் அடிச்சா தாங்க மாட்ட" என்று பாட்டுப் பாடும் தகுதி பெற்ற திடகாத்திரமான உடல்வாகுடன் இருந்தனர். திடுக்கிடும் திருப்பங்கள் இனிமேல் தான் துவங்கின."அந்தப்பக்கம் காட்டுப்பள்ளம், இந்தப்பக்கம் உச்சிமலை. நடுவில இருக்கிற மூங்கில்காடு வழியா போனா  check post போகலாம்" என்று ஒரு map வைத்துக் கொண்டு காட்டில் தீவிரவாதிகளை பிடிப்பதற்கு திட்டம் போடுவாரே விஜயகாந்த்...அது போல ஒரு பேப்பரை மூன்று பேரும் சூழ்ந்து குசுகுசுவென ஏதோ பேசிக்கொண்டனர்.

ஒருவர் சத்தமாக பேசினால் கூட கவனிக்காமல் விட்டுவிடுவோம். ஆனால் ரகசியம் பேசுவது போல பேசினால் நம் காது சும்மா இருக்குமா சார்? எனவே காதை தீட்டிய போதுதான் ஒரு இளைஞர் என் வயிற்றில் "குண்டு" போட்டார். "S7ல‌ இரண்டு, S11 ஒன்னு, S4ல‌ இரண்டு" என்று அவர் சொல்ல, S7ல‌ இரண்டுமே toilet பக்கம் இருக்கு.வைக்கறதுக்கும் கவனிக்கறதுக்கும் வசதியாக இருக்கும்." என்று மற்றொருவர் சொல்ல...சந்தேகப் பொறி சட்டென மனதில் அமர்ந்தது. இவர்களை பார்த்தால் அப்படிப்பட்ட செயல்கள் செய்பவர்கள் போலத்தெரியவில்லையே என்று ஒரு மனது சொன்னாலும், இந்தக் காலத்தில் எவரையுமே நம்ப முடியாது என்று மற்றொரு மனது சொல்ல, இவர்களிடம் பேசித்தான் பார்ப்போமே என்று பேச்சு கொடுத்தேன்...

நட்பு பூசிய சிரிப்புடன் அவர்களும் பேச, நம்பிக்கை பூத்தது எனக்கு. ஆனாலும், நம்ப வைத்து கழுத்தறுப்பதில் நாம் அனைவருமே கைதேர்ந்தவர்கள் ஆயிற்றே...எனவே சந்தேக சைத்தான் மீண்டும் எனக்குள் ஏறியது.

மூவரில் ஒருவர் வேகமாக எங்கோ போனார். போனவர் சுமார் பதினைந்து நிமிடங்கள் கழித்துத் திரும்பினார். இந்த இடைவெளியில் " "நான் ஈ புகழ்" நடிகை சமந்தாவுக்கு கடல்நீர் அலர்ஜியா?" போன்ற நாட்டை உலுக்கும் சிக்கல்களையும், திரிஷா வீட்டின் மூன்று நாய்குட்டிகளின் பெயர்களை அறிந்து கொள்ள வாய்ப்பளிக்கும் "பொது அறிவு" களஞ்சிய பக்கங்களையும் கொண்ட பத்திரிகைகளைப் புரட்டி முடித்தேன் நான்.

போனவர் திரும்பி வந்தார். ரயில் பெட்டிகள் அனைத்திற்கும் சென்று வந்திருப்பார் போலும். அவர் அமர்ந்தபடி மற்றவரிடம் சொன்ன வரிகளை கேட்டு, மீனாட்சி பவனின் வாங்கி வந்த இட்லியை சாப்பிட ஆரம்பித்திருந்த எனது நம்பிக்கை அந்த இட்லிகளுக்கடியில் இருந்த சட்னி போல நசுங்கியது.

அப்படி என்ன சொன்னார் அவர்? அடுத்த வாரம் தொடர்வோம்...ஏன் சார், தொடர்கதையிலும் சினிமாவிலும் தான் suspense வைக்கலாமா? வலைப்பதிவிலும் வைத்துப் பார்ப்போமே சார்.


Sunday, August 12, 2012

ஆடையில்லா மனிதனும் Android கைபேசியும் பகுதி 2


நம்மூர் பேருந்து நிலையங்களில் இருக்கும் பெட்டிக்கடைகளில் கூட, அங்கு தொங்க விடப்பட்டிருக்கும் தண்ணீர் பாட்டில், பழங்களுக்கு இடையில் "இங்கு சிம் கார்டு கிடைக்கும்" என்று அட்டையில் எழுதி தொங்க விட்டு சில ஆண்டுகள் ஆகி விட்டன. அந்த அளவு "முன்னேற்றம்" கண்டிருக்கிறது நம் நாடு. இப்படிப்பட்ட நிலையில்தான் android phone வாங்க கடையில் நுழைந்த அந்த நன்னாள் வந்தது.

கடையில் நுழைந்ததும் கண்ணில் பட்டது ஒரு மாணவர் கும்பல். நம் காலத்தில் மாணவர் கூட்டம் கடலை மிட்டாய் வாங்கும். மிஞ்சிப் போனால் நீளமான பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட பெப்ஸி ஐஸ் வாங்கும். இப்போது செல் போன் வாங்குகிறது. அதில் ஒரு மாணவர் போன் கேமராவை பரிசோதிக்கும் பொருட்டு தெருவில் போய் வருபவர்களை குறிப்பாக பெண்களை படம் எடுத்து போனை "பரிசோதனை" செய்து கொண்டிருந்தார். அவரைப் போன்றவர்களின் விரலில், வயது, விஷம் ஏற்றாமல் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வதைத் தவிர நம்மால் வேறு என்ன செய்ய முடியும்?

"tie" கட்டிக் கொண்டிருந்த ஒரு விற்பனையாளர், விருந்தோம்பலின் சாயலில் என்னை "tablet" இருந்த வரிசை பக்கம் தள்ளிக்கொண்டு போனார். சமீபகாலமாக விற்பனையில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் ஒரு நிறுவன "tablet" ஒன்றை கையில் எடுத்தேன். அவர் விற்பனை மந்திரங்களை "side"ல் ஓதத்துவங்கினார். அதாவது, இது கையில் இருந்தால் உலகத்தில் சகல சம்பத்துக்களோடும் நீங்கள் 24 மணி நேரமும் "தொடர்பில்" இருக்கலாமாம். பொதுவாக "tablet" மாடல்களில் போன் வசதி இருக்காது. இதில் voice call வசதியும் உண்டாம். "பத்து ரூபாய்க்கு மேல் கொடுத்தவங்க எல்லாம் கையை தூக்குங்க" என்னும் "தாயத்து" காமெடி ஞாபகம் இருக்கிறதா? அதில் வடிவேலு சொல்வாரே..."நாங்க ஏன்டா தாயத்தை கட்டிகிட்டு நடு ராத்திரி சுடுகாட்டுக்கு போகப்போறோம்" ‍- அதுதான் என் நினைவுக்கு வந்தது. விலைமதிப்பற்ற ஒரு நாளை எப்படி பயன்படுத்தப்போகிறோம் என்பதை ஒரு தகவல் தொழில்நுட்ப சாதனம் தீர்மானிக்க முடிகிற நிலையில்தான் நாம் உறவுகளையும், நம்மையும் வைத்திருக்கிறோம் போலும். அதனால்தான் நம்மால் உலகின் மறு கோடியில் இருப்பவருடன் "இன்று இட்லிக்கு சட்னியா" என்று கேட்க முடிகிறது. பக்கத்து வீட்டுகாரருடன் பேசி பல நாட்கள் ஆகிறது.முன்னேற்றம் சார் முன்னேற்றம்.

சமீபத்தில் கொடைக்கானலில் ஒரு பெண்மணி மாலை முரசை நான்காக மடித்தது போன்ற சைஸில் இருந்த  "tablet" பயன்படுத்தி போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார். பொருத்தமற்ற வசதிகளை ஒரே சாதனத்தின் உள்ளே வைத்தால் எப்படியிருக்கும்? கொடுமையாகத்தான் இருக்கும். அதைவிட அவரின் குடும்பத்தினர், அவர் அதை கீழே போட்டுவிடப்போகிறாரே என்ற டென்ஷனுடன் உலவியதை பார்க்க தமாஷாக இருந்தது. அனேகமாக டூர் முடிந்து ஊர் திரும்பும் வரை அவர்கள் நிம்மதியாக இருந்திருக்க மாட்டார்கள். பாவம், அவர்கள் எந்த நிம்மதி பெற சுற்றுலா வந்தார்களோ?

நான் "tablet" வாங்கப்போகும் ஆளாகத் தெரியவில்லை என்று நொந்து போன விற்பனையாளர், அடுத்த பிரிவுக்கு நான் போவதற்கு காத்திருந்தார். போகும் வழியில் ஒரு பெண் ஒரு போனை பார்த்தபடி உதட்டுச்சாயம் பூசிக்கொண்டிருந்தார். உலகம் போகும் போக்கில், போன் உள்ளேயிருந்து உதட்டுச்சாயம் ஊறி வந்தாலும் ஆச்சரியப்படமுடியாதுதான். நல்ல வேளை. இந்த போன் அவ்வளவு தூரம் போகவில்லை. ஆனால் "கண்ணாடி" வைத்திருக்கிறார்கள் (உண்மையிலேயே இந்த வெள்ளை கலர் போனைத் தயாரிக்கும் சீனா கம்பெனி, ரூம் போட்டு யோசித்திருப்பாய்ங்களோ?). போதாத குறைக்கு இந்த போனை சுற்றி டை"மண்டு"கள் வேறு!

சரி சார், கடை முழுதும் கும்பலாய் இருக்கிறதே...ஆளாளுக்கு ஒரு போனை எடுத்து "நோண்டி"க் கொண்டிருக்கிறார்களே...ஒருவர் கூட போனின் அடிப்படை  வேலையான, voice  நன்றாக கேட்குமா...அலைவரிசை துல்லியம் எவ்வளவு என்றெல்லாம் பார்ப்பதாக தெரியவில்லை. அதாவது, ஒரு கல்யாணப் பந்தியில் முழுதும் பரிமாறப்பட்ட இலையில், ஓரத்தில் இருக்கும் ஊறுகாய் போன்றவை நன்றாய் இருக்கிறதா என்று பார்த்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் நாம் போன் வாங்குகிறோம்...என்ன பைத்தியக்காரனாக இருக்கிறாய்? உனக்கு பழைய காலத்தில் விரல் விட்டு சுழற்றும் சிகப்பு கலர் கறுப்பு கலர் போனே போதுமே உன்னை யார் கடைக்கு போகச்சொன்னது என்கிறீர்களா?

அடப்போங்க சார்... பழைய போனை வைத்து நாம் என்ன சாதித்தோம்? ஆனால் இந்த மொபைல் போனைப் பாருங்கள்...நம் நாட்டுக்குள் புகுந்து பதினைந்து ஆண்டுகள் கூட ஆகவில்லை...ஆனால் அதை வைத்து குருவி என்ற உயிரினத்தையே காலி செய்த நம் சாதனை சாதாரணமானதா?  முன்னெல்லாம் மாலைப்பொழுதில் வானத்தைப் பார்த்தால் கூட்டம் கூட்டமாக பறவையினங்கள் கூடு நோக்கிப் பறக்கும் காட்சி உள்ளத்தை நிறைக்கும். இப்போது வானத்தை பார்க்கவே நமக்கு நேரமில்லை. இதில் கொக்காவது குருவியாவது?

ஊருக்குள் பறவைகளை காலி செய்த மகிழ்ச்சி மட்டும் போதுமா நமக்கு? எனவேதான் நாம் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறோம். என்ன என்கிறீர்களா? அதான் சார், நாம் உழைத்து உழைத்து களைத்துப் போனால் இப்போது "உல்லாச சுற்றுலா" என்ற பெயரில் இயற்கை வளமிக்க இடங்களுக்குப் போகிறோமே...அங்கெல்லாம் கூட்டம் பின்னியெடுக்கிறதே ...அங்கெல்லாம் சும்மா போக முடியுமா? மொமைல் போன் சகிதமாகத் தானே போகிறோம். போதாத குறைக்கு, வனாந்தரத்தில் சிக்னல் கிடைக்கவில்லை என்று கோபம் வேறு நமக்கு வரும். இன்னும் ஒரு இருபது முப்பது வருடங்களில் மற்ற பறவையினங்களையும் அழித்தால் தானே சார் நமக்கு திருப்தி? அப்புறம் ஒய்யாரமாக உட்கார்ந்து "angry birds" விளையாடி மகிழலாமே? அது போரடித்தால் "angry மயில்" "angry குயில்" என்று விதவிதமாய் விளையாட்டு கண்டுபிடிக்க மாட்டோமா என்ன? உயிருள்ள மயிலையும் குயிலையும் பற்றி கவலைப்பட நமக்கு என்ன பைத்தியமா?

Wednesday, August 1, 2012

இந்தியர்களுக்கு எதிரான ஒலிம்பிக்ஸ் சதிகள்...


நூறு கோடிக்கு மேல் மக்கள் தொகை இருந்தால் என்ன? நூறு பேர் கூட லண்டன் ஒலிம்பிக்ஸுக்கு தகுதி பெற முடியாத வெட்கக்கேட்டை எப்படி எதிர்கொள்வது?கவலை வேண்டாம். மக்களுக்காகவே வாழும் நம் அரசியல்வாதிகளின் ஐடியாவையே நாமும் கடைபிடிப்போம். அதான் சார், ஒரு சிக்கலை எதிர்கொள்ள முடியாவிட்டால், "இதில் அன்னிய சக்திகளின் சதி இருக்கிறது" என்று அறிக்கை விடுகிறார்கள் இல்லையா, அது போல நாமும் இதில் சதி இருக்கிறது என்று சொன்னால் போயிற்று!எப்படிப்பட்ட சதி என்று பார்ப்போம் வாருங்கள்.

குதிரையேற்றம்: இப்படி ஒரு விளையாட்டு இருக்கிறது என்பதே நமக்கு ஒலிம்பிக்ஸ், ஆசிய விளையாட்டு போட்டிகளை பார்க்கும் போதுதான் ஞாபகம் வரும். இந்தியர்கள் குண்டுச்சட்டியில் மட்டுமே நன்றாக குதிரை ஓட்டுவார்கள் என்று உலகத்திற்கு நன்றாக தெரிந்திருக்கிறது. நம் வாழ்க்கை முறையும் அப்படித்தானே இருக்கிறது. போனால் போகிறது என்று வாழ்க்கையின் மறக்க முடியாத அனுபவமாக ஊட்டி, சிம்லா போன்ற இடங்களில் குதிரையில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்வதோடு சரி. எனவே தான் நிஜக்குதிரை ஏற்றம் என்று விளையாட்டை சேர்த்திருக்கிறார்கள். வன்மையாக கண்டிப்போம் சார். ஏன் கழுதையேற்றம் இல்லை என்று நாம் போர்க்கொடி தூக்குவோம்.

வில்வித்தை: கண்ணைக் கட்டிக் கொண்டு வில்லால் மாம்பழம் அடித்தவர்களை புராணத்தில் படித்து விட்டு நம்மவர்களின் வில்வித்தை பார்க்க வேண்டும் சார். பார்க்கும் குறி இருக்கிறதே...அப்பப்பா! எவ்வளவு அதிக நேரம் குறி பார்க்கிறார்களோ அவ்வளவு குறைவாக "மதிப்பெண்" வாங்கும் விசித்திரம் நமக்கு மட்டுமே சாத்தியம். அதுவும், நாட்டுப்பற்று தேவைக்கு அதிகமாகவே உள்ள நம் வர்ணனையாளர்கள், "காற்று அதிகம் வீசி விட்டது", "மழைத் தூறல் குறிக்கீடு" என்று நம் வீரர்களை சாக்கு மூட்டைக்குள் அமுக்கும் போது நம்மால் சிரிப்பை அடக்காமல் இருக்க முடியாது. மற்ற வீரர்களும் அதே காற்று மழையில்தான் விளையாடுகிறார்கள் என்று பார்ப்பவர்களுக்கு தெரியாது என்று நினைத்து விட்டார்கள் போதும். இது நம்மவர்களே நமக்கு செய்யும் சதி."எங்கள் சொல் ஒவ்வொன்றும் வில்" என்று மேடையில் முழங்குபவர்களை வேண்டுமானால் அனுப்பிப் பார்க்கலாமா சார்?

வாள்வீச்சு: எத்தனை முறை பார்த்தாலும் இந்த விளையாட்டின் விதிகள் தெரிய மாட்டேன் என்கிறது சார். நம்மூர்களில் இதை விளையாடுபவர்களை விரல் விட்டு எண்ண, கால் கூட தேவைப்படாது என்பது உறுதி. இந்த விளையாட்டில் நம் மக்களுக்கு ஈடுபாடு இல்லாததற்கு சரித்திரமே சதி செய்து விட்டது. பின் என்ன சார்? புலியை கூட முறத்தால் விரட்டுவோம் நாம் என்று தெரிந்தபின் வாள் எதற்கு சார் நமக்கு?

ஜிம்னாஸ்டிக்ஸ்: மற்ற நாட்டு வீரர்கள் "நாட்டியம்" ஆடும் இந்த களத்தில் நம் ஆட்கள் நடந்து போகவாவது மாட்டார்களா என்ற ஏக்கம் நமக்கு இருக்கும் (துவக்க விழாவில் திடீரென்று புகுந்த நம்மூர் பெண், gymnastics அரங்கத்தில் புகுந்திலிருந்தாவது "gymnastics அரங்கில் இந்தியப் பெண்" என்ற பெயர் கிடைத்திருக்கும்!). இந்த விளையாட்டிலிருந்து நாம் விலகியிருப்பது மேற்கத்திய நாடுகளின் சதி சார். நாம் "மொழி உணர்வு" மிக்கவர்கள் என்று தெரிந்து கொண்டு சரியான தமிழ் பெயர் கிடைக்காமல் இவர்கள் திண்டாடட்டும் என்று வேண்டுமென்றே "gymnastics" என்று பெயர் வைத்திருக்கிறார்கள். தமிழில் பெயர் வைக்க முடியாததால் gymnastics விளையாட தன்மானம் இடம் தரவில்லை என்று நாம் அறிக்கை விட்டால் முடிந்தது கதை!

ஜூடோ (Judo): உண்மையிலேயே நாம் அதிர்ச்சி அடைய வேண்டியது இந்த விளையாட்டுக்காகத்தான். அடுத்தவரை கவிழ்த்துவதும், கீழே தள்ளி அமுக்குவதில்லும் நாம் தலைமுறை தலைமுறையாக எப்படி சிறந்து விளங்குகிறோம் என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிவோம். ஆனால் ஜூடோவில் கூட நாம் சோடை போவது ஏன்? புரியவே இல்லை சார். பேசாமல் ஒரு விசாரணை கமிஷன் வைத்தால்தான் காரணம் தெரியும். அது வரை, "ஜூடோ ரத்னம்" சினிமாவுக்கு போனதால்தான் நமக்கு ஒரு பதக்கம் போயிற்று என்று சொன்னால் யார் எதிர் கேள்வி கேட்கப்போகிறார்கள்?

படகுப் போட்டி: அநியாயத்தை பாருங்கள்! நீரில் பலம் யாருக்கு என்று போட்டி வைக்கிறார்களே, கரையில் பலம் யாருக்கு என்று போட்டி வைத்தார்களா? தேம்ஸ் நதிக்கரையில் மண் அள்ளும் போட்டி வைத்தால் நாம் மண்ணையும் பதக்கத்தையும் சேர்த்தே அள்ளிக் கொண்டு வருவோமே...சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் சதி வேலை சார் இது. பாவம். அப்படி ஒரு போட்டி வைத்தால் நம்மவர்கள் புண்ணியத்தில் இங்கிலாந்து மக்கள் தேம்ஸ் நதியை தேட வேண்டியிருக்கும் என்று அவர்கள் பயந்திருக்கக் கூடும்...


என்னய்யா நீ? நம் நிலை பற்றி கவலைப்படாமல் கிண்டல் பேச்சு பேசுகிறாய் என்று கேட்கிறீர்களா? நம் நூறு கோடி பேர்களுக்கும் சேர்த்து கவலைப்படுவதற்கென்றே நாம் ஒருவரை டெல்லி செங்கோட்டையில் அமர்த்தியிருக்கிறோம். அவர் அனைத்துக்கும் கவலைப்படுவார். சீனாவின் அத்துமீறல் துவங்கி சீயக்காய் விலை உயர்வு வரை தினமும் கவலைப்படுவது மட்டுமே அவர் வேலை. அதுவும் "மக்களில் ஒருவராக" கவலைப்படுவார். விரைவில் "ஒலிம்பிக்ஸ் போட்டியில் நாம் பதக்கங்கள் குவிக்காததற்கு மக்களில் ஒருவனாக நான் கவலைப்படுகிறேன்" என்று அறிக்கை விட்டாலும் விடுவார். அப்புறம் எதற்கு சார் நமக்கு கவலை?

பின் குறிப்பு: இந்தப் பதிவை "சாமானியனின் ஒலிம்பிக்ஸ் கனவுகள்... பகுதி 2" என்றும் தலைப்பாக வைத்துக் கொள்ளலாம்.


Sunday, July 29, 2012

சாமானியனின் ஒலிம்பிக்ஸ் கனவுகள்...பகுதி 1


இந்த ஒலிம்பிக்ஸ் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரும் போது நம் விளையாட்டுத் துறை மற்றும் பல்வேறு வாரியங்களின் நகைச்சுவை உணர்வு நாட்டு மக்களுக்கு நல்லதொரு பொழுது போக்கைத் தரும். இந்த இரண்டு போட்டிகளுமே நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்தாலும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இதில் ஏதேனும் ஒன்று மாறி மாறி வந்து இவர்களை காப்பாற்றி விடும்.

எப்படிகாப்பாற்றும்? ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒரு நிர்வாகக் குழு உண்டு. இதன் தலைவர் தன் வாழ்நாள் முழுவதும் அந்தப் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பார். ஆசிய விளையாட்டுப் போட்டி வந்தால், "ஆஹா, இது எங்கள் அடுத்த ஒலிம்பிக்ஸுக்கு சரியான பயிற்சி களம்!" என்பார். அடுத்து வரும் ஒலிம்பிக்ஸ் போட்டியின் போது, "அடுத்த தலைமுறை வீரர்களுக்கான‌ பயிற்சி களம் இது!" என்பார். இப்படியே மாற்றி மாற்றி அறிக்கை விட்டே அவர் காலத்தை ஓட்ட, வீரர்கள் ஓய்வு பெற்று அவர்களின் பேரன் பேத்திகள் வயதுடையோர் "பயிற்சி" செய்ய ஆரம்பித்து விடுவார்கள். நம்மவர் அப்பொழுதும் அந்தப் பதவியில் இருப்பார் ஏராளமான சொத்துக்கள் மற்றும் மாறாத அதே பேச்சுடன்...!

சீனா போன்ற நாடுகள் 2028 ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு இப்போதே பயிற்சி திட்டங்கள் தீட்டிக் கொண்டிருக்கின்றன. பெருமைமிகு பாரதத் திருநாட்டில், நாளை லண்டன் செல்ல வேண்டிய தடகள வீரர், தனக்கு "shoe" இல்லை என்று பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். விளையாட்டுத் துறை அமைச்சரோ, தன் கோடி ரூபாய் காரின் கண்ணாடியை ஜம்பமாக இறக்கி விட்டபடி லண்டன் ஒலிம்பிக்ஸில் இந்தியா பதக்கங்கள் அள்ளும் என்று பேட்டி கொடுக்கிறார்.
வாழ்க பாரதம்!

சார், சுமார் நாற்பது வருடங்கள் "hockey" என்ற ஒன்றை வைத்தே காலத்தை ஓட்டினோம். நம் நாட்டில் ஒரு அற்புத பழக்கம் உண்டு. ஒன்றை அவமானம் செய்ய வேண்டுமென்றால் அதை "தேசிய அடையாளம்" என்று அறிவித்தால் போதும். தானாகவே அது அவமானப்பட்டு விடும். இப்படித்தான் புலி "தேசிய விலங்கு" என்றார்கள். முடிந்த வரை  அதை உண்டு இல்லை என்று ஒருவழி செய்தோம்.. இப்போது ஆயிரம் புலிகளே இருக்கின்றன என்றவுடன் நம் சிந்தனை செம்மல்கள் என்ன செய்யலாம் என்று முழித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படித்தான் ஹாக்கியும்...ஒலிம்பிக்ஸில் எட்டுத் தங்கம் என்று வீராப்பு பேசியே வீணான நாம், 1980 முடிந்தவுடன், "தேசிய விளையாட்டு"க்கு "தேசிய வினை" பிடித்து
சறுக்குகிறது என்று தெரிந்தவுடன் அடுத்து எதை வைத்து காலம் கழிக்கலாம் என்று பார்த்தோம். மாட்டினார் P.T Usha. ஏன் சார், இத்தனை பெரிய தேசத்தில், இரண்டு ஒலிம்பிக்ஸை, எட்டு வருடங்களை இந்த ஒரே ஒருவரின் பெயரைச் சொல்லியே கழித்தோமே...அநியாயமாக இல்லை?

Mohammad Shahid என்றொரு ஹாக்கி வீரர் என்பதுகளில் இந்திய அணியில் இருந்தார். அவரின் stick work கண்கட்டு வித்தை போல் அற்புதமாய் இருக்கும். kapil dev மேல் மட்டுமே கண் வைத்திருந்த நாம், இவரை கவனிக்கவில்லை. நாம் மட்டுமில்லை. ஹாக்கி அமைப்பும் முடிந்த வரை அவமானப்படுத்தியது. பிறகு தன்ராஜ் பிள்ளை வந்தார். கிரிகெட் போல் எங்களையும் கவனியுங்கள் என்று கத்திப் பார்த்தார். விடுவோமா நாம்? நமக்குத் தோதான விளையாட்டைதானே சார் நாம் பார்ப்போம்? கிரிகெட் என்றால் ஒரு பந்துக்கும் மற்றொரு பந்துக்கும் இடையே ஊர் கதை, உலகக் கதை பேசலாம், ஒரு நாள் முழுதும் உட்கார்ந்தே பொழுதை தேய்க்கலாம்...இதுதானே சார் நமக்கு சரி வரும். அதை விடுத்து ஒரு நொடி கூட நிற்காமல் லாவகமாய் பந்தை தட்டிக் கொண்டு போவதும், நமக்கு கண் சிமிட்டக் கூட நேரம் இல்லாமல் ஆட்டம் பறப்பதும் நமக்கு ஒத்து வருமா சார்? அதான் ஹாக்கி மட்டைகளை நாம் பள்ளிகளில் சாக்கில் கட்டி வைத்து விட்டோம். விளையாடுவதை விடுங்கள் சார். யாரேனும் டிவியில் ஹாக்கி போட்டி பார்க்கிறேன் என்று சொன்னால் அவரை "யார் இந்த விசித்திர பிராணி" என்று பார்க்கும் அளவிற்கல்லவா நாம் ஹாக்கியை ஆக்கி வைத்திருக்கிறோம்...

தொடர்வோம்...

பின் குறிப்பு: சிதம்பரத்தின் பேச்சும் ஒலிம்பிக்ஸும் வந்து நம் ஆடையில்லா மனிதன் சொன்ன ஆன்ட்ராய்ட் கதையின் அடுத்த பகுதியை தள்ளிப் போட்டு விட்டது சார்!

Saturday, July 21, 2012

பால் ஐஸ் சாப்பிடுவாரா ப.சிதம்பரம்?

சிறுவயதில் தொலைக்காட்சியில் சிதம்பரத்தை பார்க்கும் பொழுது அவரின் நடையின் பொலிவும் பேச்சின் தெளிவும் பார்த்து, இவர் உண்மையிலேயே நாட்டுக்காக உழைப்பதற்கு மந்திரியானவர் போலும் என்று எண்ணியிருக்கிறேன். நாம் எவரை அதிகம் நம்புகிறோமோ அவர்களிடம் அதிகம் ஏமாறுவதுதானே சார் உலக வழக்கம். இதிலும் அப்படித்தான். சில வருடங்களாகவே சிதம்பரம் "படிப்படியாக‌ இறங்கி" வருகிறார். உங்கள் வேகம் போதாது என்று எவரேனும் இவரிடம் சொல்லியிருப்பார்கள் போலும். சமீப காலமாக இரண்டு இரண்டு படிகளாக தாவித் தாவி "இறங்க" முயற்சி செய்கிறார். அவரின் பேச்சுக்கள் அப்படித்தான் இருக்கின்றன.

அதான் சமீப காலமாக இவர் வாயைத் திறந்தாலே என்ன பேசப் போகிறாரோ என்று பயமாக இருக்கிறது. சில மாதங்கள் முன்னர் ஊழல் பற்றிய முக்கியமான கேள்விக்கு, "எனக்கு மறதி அதிகம்" என்றார். மக்களுக்கு மறதி அதிகம் என்று தெரிந்துதானே இவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசுகிறார்கள், பிறகு தங்கள் வசதிக்கேற்ப மாற்றி சொல்லிக் கொள்ளலாமே...
மறதி அதிகமாக இருப்பவர் கையிலா நம் தேசத்தின் முக்கியமான பொறுப்புகளை கொடுத்து வைத்திருக்கிறோம்? சரி விடுங்கள். போன மாதம், தான் election வழக்கில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி ஆன போது, தனக்கே வெற்றி என்றார். என்ன சார் இது? தான் தாக்கல் செய்த மனு தள்ளுபடி ஆனால் தனக்கு வெற்றி என்று சொல்வதை மூளைக்குள் எப்படி விட்டுப் பார்த்தாலும் logic உதைக்கிறதே...சரி இதையும் விடுங்கள். சென்ற வாரம் இவரின் அறிவு ஊற்றில் பெருகி வழிந்த சிந்தனை ஆற்றில் சராசரி மக்கள் மூச்சு முட்டியல்லவா போனார்கள்?சிதம்பரம் என்ன சொல்கிறார்? மக்களே, நாளும் பொழுதும் இருபது ரூபாய் கொடுத்து ice cream சாப்பிடுகிறீர்களே, அரிசி விலை ஒரு ரூபாய் ஏறினால் ஏன் கூப்பாடு போடுகிறீர்கள் என்கிறார். இதற்கு எதிர்ப்பு வந்த பின் அவர் தந்த பின் விளக்கம் அதை விட அற்புதம். இந்த விலையேற்றம் செய்வதே விவசாயிகள் வாழ்வை உயர்த்தத்தானாம்...நல்ல வேளை நம் ஊரில் காது குத்தும் பழக்கம் இன்னும் இருக்கிறது. விவசாயிகள் வாழ்வா? நாற்பது ஆண்டு காலத்தில் நதிகளை தேசியமயமாக்கவும், இணைப்பு செய்யவும் ஒரு கல்லை கூட நகர்த்தாத  இவர் சார்ந்திருக்கும் அரசு, விவசாயம் பற்றி பேசுகிறது! உணவு கோடவுனில் லட்சக்கணக்கான தானியங்கள் வீண் செய்தாலும் செய்வோம். இலவசமாக ஏழைகளுக்கு கொடுக்க மாட்டோம் என்று சொல்லிய இவர் சார்ந்திருக்கும் அரசு விவசாயிகளின் ஏற்றம் பற்றி பேசுகிறது! சபாஷ் போடுவோம் சார்.

மினரல் வாட்டர் விலை கொடுத்து வாங்கி குடிக்கத் தெரிகிறதே என்கிறார்...அய்யா சிதம்பரம் அவர்களே, நாங்களா மினரல் வாட்டர் குடிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டா வளர்ந்தோம்? தேசத்தின் குறுக்கும் நெடுக்கும் உள்ள ஆறுகளில் மண் அள்ளப்படுவதை மௌனமாக பார்த்துக் கொண்டிருக்கும் அரசுகள், நாடு வளர்கிறது என்ற பெயரில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சொகுசு கட்டடங்கள் கட்ட ஊக்குவிக்கும் அரசுகள், முறையான கழிவு நீரேற்றுத் திட்டம் போடக்கூடத் தெரியாத அரசுகளினால் குடி நீரில் கலக்கும் கழிவு, எந்த தொழிற்சாலையும் எந்த ஆற்றிலும் எதையும் கலக்கலாம் என்ற உங்கள் அரசின் பெருந்தன்மை இதெல்லாம் சேர்ந்து வீட்டில் குழாய் நீர் இன்றி எங்களை பாட்டில் நீர் குடிக்க வைத்திருக்கிறது திரு சிதம்பரம் அவர்களே...

இருபது வருடங்கள் முன்பு வரை, நம் தெருக்களில் மதிய வேளையில் "ஐஸ் பால் ஐஸ்" என்று கூவிக்கொண்டே "டப் டப்" என்று ஐஸ் பெட்டி மூடியை திறந்து மூடியபடி வண்டியை தள்ளிக் கொண்டு வருவாரே...அந்த பால் ஐஸ் தான் நம் நாட்டில் கோடிக் கணக்கான பேர் அறிந்த "ice cream". கைக்கும் வாய்க்கும் சரியாக இருக்கும் வருமானத்தில் வாழ்க்கை நடத்தும் கோடிக்கணக்கான குப்பன்களும் சுப்பன்களும் குளுகுளு அறையில் அமர்ந்தபடி ice cream சாப்பிடுவதில்லை. இருபது ரூபாய் இ சாப்பிடுகிறீர்களே என்கிறார் நம் நாட்டின் மூத்த அமைச்சர்!

சரி, இவர் சொல்லும் வாதத்தையே வைத்துக் கொள்வோம். அப்படி என்றால் வசதி படைத்தவர்களுக்கு அதிக‌ விலை ஏழைகளுக்கு குறைந்த‌ விலை என்றல்லவா சொல்ல வேண்டும். அப்படி இவர் சொல்லவில்லையே? என்ன வேண்டுமானாலும் பேசலாம் பிறகு எப்படி வேண்டுமானாலும் விளக்கம் சொல்லலாம் என்று இருக்கும் நாட்டில் இவர் இத்தோடு விட்டாரே என்று நிம்மதியாக போக வேண்டியதுதான்.


இல்லையென்றால்,

"தினமும் காபி குடிக்காமலா இருக்கிறீர்கள்? பால் விலை உயர்ந்தால் மட்டும் ஏன் பொங்குகிறீர்கள்" என்று இவர் கேட்டாலும் கேட்பார்.

"தெருவில் வடை கடைகளில் எப்போதும் கூட்டமாக இருக்கிறதே...பஜ்ஜி வடை சாப்பிடத் தெரிகிறது எண்ணெய் விலை ஏறினால் எதற்கு கேள்வி கேட்கிறீர்" என்று இவர் கேட்கலாம்.

"எல்லோரும் மாட்டு வண்டியிலா போகிறீர்கள்? ஏதோ ஒரு வாகனத்தில் தானே போகிறீர்கள். பெட்ரோல் டீசல் விலை உயரத்தானே செய்யும்?" எனலாம்.

தான் பேசியது தவறு, பொறுப்பற்றது மற்றும் அர்த்தமற்றது என்பதை சிதம்பரத்திற்கு எப்படி புரிய வைக்கலாம்? அன்பால் அரவணைப்பது தான் தமிழர் பண்பாடு. எனவே இவரின் தொகுதி மக்கள் அடுத்த தேர்தல் முடிந்தபின் ஐந்து வருடங்கள் இவரை சிவகங்கையிலேயே வைத்துப் பார்த்துக் கொள்ளலாம். தினமும் ஒரு பால் ஐஸ் மற்றும் மினரல் வாட்டர் கேன் கொடுத்து உபசரிக்கலாம். ஓய்வாக‌ வீட்டில் அமர்ந்து இவர் யோசிக்கையில், தான் பேசியது தவறு என்று தோன்றாமல் போய் விடுமா என்ன?

ஒரு மிகப்பெரிய நாட்டின் மூத்த அமைச்சர், உலகமே பார்க்கும் தொலைக்காட்சியில் இவ்வளவு பக்குவமின்றி பேசுகிறார் என்றால், இவர்கள் நான்கு சுவர்களுக்குள் நடத்தும் மந்திரி சபை கூட்டங்களில் எப்படியெல்லாம் பேசுவார்கள்? "முகமது பின் துக்ளக்" படத்தில் சோ நடத்தும் மந்திரிசபையை தூக்கிச் சாப்பிட்டு ஏப்பம் விட மாட்டார்கள்?

Saturday, July 14, 2012

ஆடையில்லா மனிதனும் Android கைபேசியும் பகுதி 1ஆடையில்லா மனிதன் அரை மனிதன் என்றார்கள் நம் முன்னோர்கள். இப்போதோ, ஆள் பாதி Android மீதி என்று ஆகி, காலைக்கடன் தவிர மற்ற அனைத்து "கடன்"களையும் mobile போனிலேயே செய்யக் கூடிய நிலை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். ஊரே வடக்கு பக்கம் போகும் போது நாம் வராண்டாவில் உட்கார்ந்து வானத்தை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? பழமொழிகள் எல்லாம் எதற்கு இருக்கின்றன? நமக்கு ஏற்றபடி பயன்படுத்திக் கொள்ளத் தானே? எனவே "ஊரோடு ஒத்து வாழ்" என் உதவிக்கு வர, நானும் "latest" android mobile ஒன்றை வாங்க முடிவு செய்தேன்.

முன்னரெல்லாம் தள்ளுவண்டியில் பேரிச்சம்பழத்தை மலை போல் குவித்து கூவி விற்பார்கள். கிட்டத்தட்ட அந்த நிலையில் தான் மொமைல் சந்தையும் இருக்கிறது. ஆனால் நாம் ரோட்டில் விற்கும் பொருட்களை வாங்குவோமா? எனவேதான் மொமைல் கம்பெனிகள் குளுகுளு கடையில் புன்னகை பொருந்திய விற்பனை பிரதிநிதிகளின் புழுகு மூட்டைகளுடன்ன் ஒன்றுக்கு பத்தாய் விலை சொல்லி விற்கிறது. அதில் ஒன்றை வாங்கி கையில் வைத்துக்கொண்டே திரிந்தால் தானே நமக்கு ஒரு கெத்து?

பல் குத்தும் குச்சியில் கூட "brand" பார்த்து வாங்கும் இன்றைய காலத்தில் ஏதோ ஒரு மொபைலை வாங்கி விட முடியுமா? ஆராய்ச்சி தேவைபடுகிறது sir ஆராய்ச்சி!.முதலில் நாம் வாங்க வேண்டிய பொருளுக்கு சந்தையில் உள்ள‌ "brands" பற்றி ஊரில் என்ன பேச்சு உலவுகிறது என்று கண்ணையும் காதையும் தீட்டி வைத்துக் கொண்டு சில நாட்களோ வாரங்களோ கழிக்க வேண்டும்.

"Phone for humans" என்றொரு mobile phone விளம்பரம் வருகிறது. அதாவது "நீ மனுசனா இருந்தா இந்த போன் வாங்கு" என்பதை நாசூக்காக சொல்கிறார்களாம். கூடவே ஒரு டம்பளரில் தண்ணீர் வைத்துக் கொண்டே இதைப் பார்ப்பது நலம். இதன் விலை கேட்டால் "மனுசனுக்கு" விக்கல் வருவது நிச்சயம். நாற்பதாயிரம் ரூபாயாம். ந‌ம் மன்மோகன் சிங்கின் பொய் கணக்கு படி பார்த்தால் கூட, வறுமைக் கோட்டின் கீழ் இருக்கும் நான்கு குடும்பங்களின் ஆண்டு வருமானம் இது. எப்படி இப்படிப்பட்ட விலையில் போன் விற்கிறார்கள்? இந்த விலையில் போன் வாங்கினால் நம் வாழ்க்கை சாமியார் பூனை வளர்த்த கதை ஆகி விடாதா சார்? இந்த போனை வைத்து கொண்டு பஸ்ஸில் போக முடியுமா? கார் வேண்டியிருக்கும். ரயிலில் போக முடியுமா? கொஞ்சம் அசந்தால் நம்மூர் ரயில்களில் நம்மையே அள்ளிக் கொண்டு போய் விடுவார்கள்...போனை விடுவார்களா? எனவே விமானத்தில் தான் போக வேண்டும். போன் பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்து பார்த்தே ஏதேனும் "mobile phone syndrome" ஏதேனும் வந்தாலும் வந்து விடும். எனவே இந்த "மனுசனா இருந்தா இந்த போனை வாங்கு" விளம்பரம் பார்க்கும் போது பூனை "மியாவ் மியாவ்" என்று காதில் கத்துகிறது. ஒரு சிக்கல் பெரிதாகிக் கொண்டே வந்தால் உடனே பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு மன்மோகன் சிங் ஏற்பாடு செய்து விளக்கம் சொல்வது வழக்கம். அது போல் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்து, "பாருங்கள் பத்திரிகையாளர்களே, எங்கள் அரசின் வறுமை கோடு விளக்கத்தை விமர்சித்தீர்களே...நம் நாட்டில் எத்தனை நாற்பதாயிரம் போன்கள் விற்கின்றன பாருங்கள் இன்னுமா நாட்டில் ஏழைகள் இருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள்" என்று கேட்டால் நாம் வாயை மட்டுமா மூடிக்கொள்வோம்? ஒன்பது வாசல்களும் தானே மூடிக்கொள்ளாதா என்ன?

Android phone வாங்கும் திட்டத்தை செயல்படுத்த காத்திருந்த ஒரு நாள், busஸில் செல்லும் பொழுது ஒரு இளைஞர் கூட்டம் ஏறியது. அவர்கள் பேச்சில் "ginger bread வந்து மாதக்கணக்காச்சு,  ice cream sandwich வர இவ்வளவு தாமதமாகும் என்று நினைக்கவில்லை. எவ்வளவு பேர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்" என்று காதில் விழுந்தது. ஆஹா! நம் இளைஞர்கள் சுயநலம் மிக்கவர்கள், சமூக நலன் பற்றிய அக்கறை குறைவு என்று யார் சொன்னது என்று எனக்குள் ஆத்திரம் பொங்கியது. எத்தியோப்பியாவில் ரொட்டி கூட கிடைக்காமல் அன்னிய நாடுகளின் உதவிக்காக உணவின்றி காத்திருக்கும் மக்களைப் பற்றித் தான் இந்த இளைஞர் கூட்டம் அக்கறை காட்டுகிறதோ என்று நினைத்து அவர்களை உச்சி முகர நினைத்து எழுந்தேன். உள்மனம் என்னை இரண்டு உதை விட்டு "பேசாமல் கிட. அவர்கள் android latest version ice cream sandwich பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்" என்று அமர வைத்தது. நல்ல வேளை. நாடு அதன் போக்கில்தான் இருக்கிறது என்ற நிம்மதியுடன் பயணத்தை தொடர்ந்தேன்...

நானும் ஆன்ட்ராய்ட் சமூகத்தின் அங்கத்தினன் ஆகப் போகிறேன் என்பதை கேள்விப்பட்ட நண்பன், "tablet" வாங்கு என்றான். எனக்கோ இந்த tablet விளம்பரங்கள் பார்க்கும் பொழுது ஒரே கவலையாக இருக்கும். உலகம் போகும் போக்கில், ஏதேனும் ஒரு "காந்தக் கண்ணழகி" தொலைக்காட்சி விளம்பரத்தில் தோன்றி, "இன்னும் நீங்கள் சாப்பாடா சாப்பிடுகிறீர்கள்...தினமும் ஒரு மணி நேரம் சாப்பாட்டில் வீணடிக்கலாமா? எப்படி உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும்? இந்த tablet வாங்கினீர்கள் என்றால் சாப்பிடத் தேவையில்லை. tabletடே உங்களை நாள் முழுதும் தேவையான energy கொடுத்து சார்ஜ் செய்து விடும்" என்று ஏதேனும் சொல்லித் தொலைத்தால் நாம் சும்மா இருப்போமா? வாங்கி விடுவோமே...நல்ல வேளை, விஞ்ஞானம் அந்தளவு இன்னும் வளரவில்லை போலும். தப்பித்தோம். இப்போது வரைக்கும் tablet அதன் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பது நாம் செய்த புண்ணியம்.

ஒரு வழியாக சில phone மாடல்களையும் brandகளையும் மனதில் நிறுத்தி கடைக்கு கிளம்பினோம். இது நாள் வரை "விரல் நுனியில் உலகம்" என்ற android வலையிலிருந்து தப்பித்திருந்த ஆடு, தன் தலையில் தானே மஞ்சள் தண்ணியை ஊற்றியபடி mobile phone கடைக்குள் நுழைவதை மகிழ்ச்சியுடன் பார்த்தபடி உடன் வந்தார் மனைவி. கடையில் கண்ட கதைகளை அடுத்த வாரம் பார்ப்போம்.

Friday, July 6, 2012

அன்னா ஹசாரே பின்னால் போகலாமா? பகுதி 2

சென்ற வாரத்தின் தொடர்ச்சியாக, அன்னா ஹசாரே தன் உண்ணாவிரத திட்டங்களை கைவிடுவதற்கு சில "ஆலோசனைகள்" இந்த வாரம் வழங்குவோம்."அவர் எங்கே நீ எங்கே? யார் போய் யாருக்கு ஆலோசனை சொல்வது?" என்கிறீர்களா? என்ன சார் நீங்கள்...நம் நாட்டில் எவர் வேண்டுமானாலும் எவருக்கு வேண்டுமானாலும் ஆலோசனைகளை அள்ளி வீசலாம் சார். ஜனநாயக நாடென்றால் சும்மாவா? தனக்குத் தோன்றியதை பேசுவதும் செய்வதும்தான் ஜனநாயகம் என்று புரிந்து கொள்ளப்பட்டிருக்கும் புண்ணியத் திருநாட்டில் நாமும் நம் பங்கை செய்யாமல் இருந்தால் எப்படி?

ஆலோசனைகள்:

1. கிரிகெட்டுக்கும் தேசபக்திக்கும் வித்தியாசம் தெரியாத கோமாளிகள் நாம். கிரிகெட்டே தேசபக்தி என்ற கிறுக்குத்தனம் இங்கு தழைத்தோங்கி வருடக்கணக்காகி விட்டது. எனவே, உண்ணாவிரதத்தின் போது இந்தியா பாகிஸ்தான் போட்டி வைத்தால் போயிற்று. நாடே டீவியின் முன் அமர்ந்திருக்க உண்ணாவிரத மைதானம் காத்தாடுமே சார். "i am Anna" என்று குதித்துக் கொண்டிருக்கும் நாம் அனைவரும் "sachin is the best" என்று கூப்பாடு போட்டுக் கொண்டு மைதானங்களில் குவிய மாட்டோமா என்ன? இந்த மாதிரி சில முறை நடந்தால், உண்ணாவிரத எண்ணம் ஹசாரேவுக்கு எப்படி வரும் சொல்லுங்கள்?

2.பத்திரிகைகள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் இல்லையா? அவர்களுக்கு எந்த நேரத்தில் என்ன செய்தி போட்டால் எப்படி விற்கும் என்று தெரியாதா? இப்போது "Jism 2" என்றொரு படம் தயாரிப்பில் இருப்பதாக தினமும் செய்தி வருகிறது. நம் பண்பாட்டை உலகத் தரத்திற்கு உயர்த்தும் படமாம். இந்த "Jism 2" படத்தில் Sunny Leone என்றொரு நடிகை கலைத்தாயின் காலடியில் கிடந்து கலைக்கும் சமூகத்திற்கும் மாபெரும் சேவை புரிந்து வருவதாக ஊடகங்கள் மாய்ந்து மாய்ந்து எழுதுகின்றன. அதோடு நில்லாமல், தினமும், அவரின் கலைச்சேவையை போற்றும்படியான புகைப்படம் வேறு. ...இந்த Sunny Leone படத்தை அரைப்பக்கத்திலும் அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரத செய்தியை பெட்டிச் செய்தியாக குட்டியாக போடும் கன்றாவி நம் நாட்டில் நிகழாது என்று என்ன உத்திரவாதம்? அப்படி நடந்தால், இப்படியொரு தேசத்திற்காகவா நாம் உண்ணாவிரதம் இருக்கிறோம் என்று தோன்றி அன்னா "விழித்துக் கொள்ள" மாட்டாரா?


இந்த "Times Now" சேனலை எடுத்துக் கொள்ளுங்கள்...முதல் உண்ணாவிரதத்தின் போது "Live Telecast" என்று அத்தனை களேபரம் செய்தார்கள். சுருதி சற்று இறங்கி, அடுத்த உண்ணாவிரதம் பொழுது தலைப்பு செய்தியாக மாறியது. மூன்றாவது உண்ணாவிரதம் பிசுபிசுக்கிறது என்று தெரிந்தவுடன், பத்தில் ஒரு செய்தியாக மாறிப்போனது...இதுதான் சார் நாம்.

3.மிக எளிமையான வழி ஒன்று இருக்கிறது. அன்னா ஹசாரேவை தமிழ் நாட்டுக்கு வரவழைப்போம். காவிரி நீர் சிக்கல் துவங்கி இலங்கை தமிழர் வரை, அரை நாள் ஒரு நாள் உண்ணாவிரதத்தின் மூலம் அனைத்து சிக்கல்களையும் தீர்த்ததாக சொல்லித் திரியும் ஆற்றல்மிகு தலைவர்கள் கொண்ட அற்புதத் தமிழ் நாட்டுக்கு அன்னா ஹசாரேயை வரவழைப்போம். உடல் நோகாமல் உண்ணாவிரதம் இருக்கும் "கலை"யை இந்தத் தலைவர்கள் அன்னாவுக்கு சொல்லித் தர மாட்டார்களா என்ன?

4.அன்னாவுக்கு தமிழ் நாட்டுக்கு வர இயலாது என்று வைத்துக் கொள்வோம். பரவாயில்லை சார். எல்லாவற்றுக்கும் வழி தமிழ் நாட்டில் உண்டு. நம் தலைவர்கள் "தபால்" கலையில் சிறந்தவர்கள் என்று சொல்லித் தெரிய வேண்டுமா? தமிழ் நாட்டின் அனைத்து வகை சிக்கல்களையும் நம் தலைவர்கள் டெல்லிக்கு தபால் மூலம் மட்டுமே தெரிவிக்கிறார்கள்! ஏன் சார், தலைமைச் செயலகம், தலைவர்கள் வீடுகள் இங்கெல்லாம் டெலிபோன் கிடையாதா? அல்லது கடிதம் எழுதுதலே கழகங்களின் பண்பாடா? நல்ல வேளை, "மூவேந்தர்கள் ஆண்ட தமிழ் நாடு" எனவே புறா மூலம் தான் டெல்லிக்கு செய்தி அனுப்புவோம் என்று புறாவின் காலில் கடிதத்தை சுற்றி அனுப்பாமல் விட்டார்களே. நம் பெருந்தலைவர்களுக்கு இதயம் கனிந்த நன்றி.

இவர்கள் தயவு கூர்ந்து இத்தகைய கடிதம் எழுதும் கலையை அன்னா ஹசாரேவுக்கு (தபால் மூலமே பயிற்சி அளிக்கலாம்) கற்றுத் தந்தால் அவரும் தினமும் டெல்லிக்கு நாட்டில் தலைவிரித்தாடும் ஊழல் குறித்து கடிதம் எழுதி தள்ளிக் கொண்டே இருக்கலாமே! மன்மோகன் சிங்கும் முன்னேறி விட்டார். அவரும் டெலிபோன் பயன்படுத்துவதில்லை. நேற்று கூட இலங்கை தமிழர் நிலைமை குறித்து பதில் கடிதம் ஒன்று எழுதியிருக்கிறார் என்று செய்தியில் சொன்னார்கள்.அன்னா ஹசாரேவும் மன்மோகன் சிங்கும் தினமும் கடிதம் எழுதிக் கொண்டால் தொலைக்காட்சிகளுக்கு குஷி தானே! Arnab Goswami "I have a copy of letter from Manmohan Singh dated... " என்று தினமும் இரவு ஒன்பது மணிக்கு கடிதத்தின் நகலை நமக்குக் காட்டுவார். அனைவருக்கும் நன்றாய் பொழுது போகும்...

5. அன்னா ஹசாரே கட்டாயம் மொபைல் போன் வைத்திருப்பார். அவர் Spectrum 2g அலைவரிசையையும் பயன்படுத்தியிருப்பார். எனவே அவருக்கு மறைமுகமாக 2G சம்பந்தம் இருக்கிறது என்று எவரேனும் (அர்த்தமில்லாமல்) வழக்கு போட்டால் போதும். சில மாதங்கள் அந்த பரபரப்பில் உண்ணாவிரதம் உப்புச் சப்பில்லாமல் போகாதா என்ன?

6. நமக்கு கதை கேட்பது என்றால் கரும்பு சாப்பிடுவது போல...அதுவும் ஊர் கதை உலகக் கதை என்றால் உற்சாகத்துக்கு அளவே இல்லையே சார்...ஒவ்வொரு ஊராக "அன்னா ஹசாரே அழைக்கிறார்" என்று "flex board" வைத்து கூட்டம் சேர்த்து, Baba Ramdev, Ravi Shankar போன்றோரிடம் ஹசாரேவுக்கு நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை மேடை போட்டு சுவையாக பேசச் சொல்லலாம். நம் அரசியல்வாதிகளின் காமெடி பேச்சுக்களையே எத்தனை நாள் சார் கேட்பது? போரடிக்காது?

மேற்கூறிய ஆலோசனைகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம் மேற்கொள்ளாமல் இருக்கவும், அவரின் உடல்நிலை மோசமாகாமல் இருக்கவும் நாம் வேண்டிக் கொள்வோம்.

Saturday, June 30, 2012

அன்னா ஹசாரே பின்னால் போகலாமா? பகுதி 1

இன்னொரு "உண்ணாவிரத" சீசன் ஜூலை 25 துவங்குவது போலத் தெரிகிறது. புரட்சிப் பாலும் எழுச்சித் தேனும் தெருவெங்கும் கரைபுரண்டு ஓடுவது போல பத்திரிகைகளும் செய்தி சேனல்களும் ஒரிரு நாட்களோ ஒரு வாரமோ துள்ளிக் குதிக்கும். அதன்பின் "பழைய குருடி கதவைத் திறடி" என்று அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு, நேரம் கிடைத்தால் உண்ணாவிரத வெற்றி தோல்விகளை கால் நீட்டி அமர்ந்தபடி வீட்டில் காபி குடித்துக் கொண்டே கதையடித்துக் கொண்டிருக்கலாமே - அடுத்த உண்ணாவிரத அறிவிப்பு வரும் வரை...

ஆஹா..."ஹசாரே பின்னால் போகலாமா?" என்று தலைப்பு இருக்கிறதே அப்படியானால் அவர் பற்றிய "விஷயம்" ஏதோ இப்பதிவில் இருக்கிறது என்றெண்ணி படிக்க வந்தோர் பயன்பெறும் வகையில் பதிவில் எதுவுமில்லை. ஏனென்றால் இப்பதிவு ஹசாரே பற்றியதல்ல. நம்மை பற்றி. வெ,மா,சூ,சொ ஆகிய‌ "நான்கு குணங்கள்" மறந்து போன நம்மை பற்றி...

உண்ணாவிரத அறிவிப்பு வந்தால் போதும். உடனே நம் அனைவருக்கும், நாம் ஒவ்வொருவரும் அரிச்சந்திரனின் அண்ணன் என்ற நினைப்பு வந்து விடும். ஆனால் நாம் தினந்தோறும் நடத்தி வரும் நாடகங்களை நினைத்துப் பார்க்கிறோமா?

நம்மில் எத்தனை பேர் அரசு அலுவலகங்களில் "சுத்தமான" முறையில் வேலை முடித்திருக்கிறோம்? கேட்டால் "கொடுத்தால்தான் file move ஆகிறது" "எத்தனை நாள் அலைவது" என்று சால்ஜாப்பு வேறு. இத்தோடு நிற்காமல், எவரேனும் நேர் வழியில் போவதாக சொல்லிக் காத்துக் கிடந்தால், "உலகம் தெரியாத ஆளாய் இருக்கிறானே அவன்" என்று அறிவுரை வேறு....

பள்ளி கல்லூரிகளில் நடக்கும் பகல் கொள்ளைகளில் "பிள்ளைகளின் படிப்பு நலன் கருதி" பல்லைக் காட்டிக் கொண்டு அதிக‌ பணத்தைக் கொடுப்பவர்கள் நம்மில் எத்தனை பேர்?

இத்தனை பெரிய தேசத்தில் மருத்துவமனைகள் நம்மிடம் பிடுங்குவதை தவிர்க்க ஒரு சட்ட வரையறை இல்லாத வெட்கக்கேட்டை நாம் என்ன செய்திருக்கிறோம்? இருப்பதிலேயே அதிகம் சுரண்டும் மருத்துவமனையே நன்று என்று நம்பி, பிறரையும் நம்ப வைத்து மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

காவிரியும் தாமிரபரணியும் கண் முன்னே கரைகிறதே? என்ன செய்தோம்? வீட்டுக்கு வீடு can தண்ணீர் விலைக்கு வாங்கப் பழகிக் கொண்டோம்...நமக்கு மானாட மயிலாட பார்க்கவே நேரம் போதவில்லை. இதில் மண் பற்றிய அக்கறைக்கு எங்கே போவது? "Swami Nigamananda" பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? கங்கைக்காக மாதக்கணக்கில் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த இவருக்கு ஆதரவாகவோ இவரைப் பற்றியோ ஏன் செய்தியே வரவில்லை? இவர் இறந்த பின், ஒரு குட்டிச் செய்தியாக போட்டார்கள். ஏன் என்றால் இந்த செய்தியால் ஊடகங்களுக்கு "வரும்படி" குறைவு. தங்கள் பிழைப்பு ஓடும் வகையில் செய்திகள் இருந்தால் தானே பரபரப்பாக "ஊடக வியாபாரம்" நடக்கும்! நமக்கோ, அன்னா ஹசாரே மீது மயக்கம். வேறெதுவும் கண்ணில் படாது! பாவம்...கவனிப்பார் இன்றி இறந்து போனார் நிகமானந்தா!

இத்தனை வருடங்களாகியும் தலைநகர் சென்னையில் கூட auto meter போடுவதை கொண்டு வர இயலாமல் "அநியாயம்" என்று தினமும் புலப்பிக் கொண்டு வாழ்க்கையை ஓட்டத் தெரிந்திருக்கிறதே நமக்கு!

தெருவுக்கு ப‌த்து பேர் சேர்ந்தால் ஊர் முழுக்க‌ தேரே இழுக்க‌லாம் என்னும் பொழுது தேருக்கு பூ க‌ட்ட‌ நாரில்லை என்று புழுகித் த‌ப்பிப்ப‌துதானே ந‌ம் ப‌ழ‌க்க‌ம். இந்த‌ லட்சணத்தில் "I am Anna" என்று ந‌ம‌க்கு குல்லா வேறு...

எவ்வளவு நன்றாக "கவனித்து வளர்த்தாலும்" ஊருக்கு நாலு பேர் உண்மையாகவே உத்தமர்களாய் வாழும் முனைப்போடு வளர்ந்து விடுகிறார்கள். இவர்களின் வாழ்க்கை கதி தண்ணீரிலிருந்து தரையில் குதித்த மீன் படும் பாடுதான்...ஆனால், "உத்தமனாய் இருந்து என்னத்தை கண்டாய்?" என்று வீடும் நாடும் சாம, தான , பேத, தண்ட முறைகளை பயன்படுத்தி இது போன்றவர்களை "பக்குவம்" அடைந்த மனிதர்களாய் மாற்றி விடும் சார். இல்லையென்றால் நாம் தான் விட்டு வைப்போமா?


முதலில் நம் வேலையை நாம் ஒழுங்காக பார்ப்போம். பிறகு நம் தெரு, வார்டு சிக்கல்களை தீர்ப்பதில் நமக்குரிய பங்கை நம்மால் செய்ய முடிகிறதா என்று பார்ப்போம்.இந்த வேலைகளை நாம் செய்தாலே ஊரும் நாடும் தானாகவே உருப்படும். அதன் பிறகு நாம் "I am Anna" என்று தலையில் குல்லா மாட்டிக்கொண்டு TV சானல்கள் முன் குதித்து கூப்பாடு போடலாம். என்ன சொல்கிறீர்கள்?

அதனால் தான் இந்த உண்ணாவிரத சீசன்களுக்கு ஒரு முடிவு தேவை என்கிறேன்.உண்ணாவிரதம் குறித்து நாம் அனைவருக்கும் ஒரு கடமை இருக்கிறது. அது என்ன? அன்னா ஹசாரேவுக்கு வயதாகி விட்டது. நம்மை பற்றியும் நம் நாட்டைப் பற்றியும் நன்றாகவே அறிந்திருந்தாலும், ஏதோ அவரின் போதாத காலம், மீண்டும் மீண்டும் உண்ணாவிரதம் என்ற போக்கிலேயே இருக்கிறார். அவரின் கொள்கைகள் பற்றியோ அவரைப் பற்றியோ விவாதம் தேவையின்றி, சரியா தவறா என்பதை விடுத்து, அதையெல்லாம் மீறி, ஒரு முதியவரின் உடல்நிலை கெடாமல் இருக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில், அதை மாற்ற சில "எளிய" வழிகள் சொல்லுவோம். அத்தகைய வழிகளை அடுத்த வாரம் பார்ப்போம்...


Thursday, June 21, 2012

இளையராஜாவை நாம் இழிவு செய்கிறோமா?

இரண்டு நாட்களாக ஒரே கூத்து சார்..."இளையராஜாவுக்கு அங்கீகாரம்" என்று தமிழ்  பத்திரிக்கைகளும் மற்ற தமிழ் ஊடகங்களும் ஆனந்த அட்டகாசம் செய்ய..."Ilayaraja song in London Olympics" என்று ஆங்கில ஊடகங்கள் செய்தி பரப்ப, கிடைப்பதற்கரிய அங்கீகாரம் ஒன்றை இளையராஜா பெற்று விட்டது போல ஒரு பொய் பிம்பம் நாடெங்கும் நடை போடுகிறது.

"The Times of India" பத்திரிக்கையின் செய்தியை பாருங்கள்: "Music Maestro Ilayaraja has received a rare honour. At this year's London Olympics, scheduled to begin in July, Ilayaraja's song from the 1981 Kamal Haasan flick 'Ram Lakshman' will be played along with a few other samples of world music as part of the opening ceremony." என்று போடுகிறார்கள்.

"The Hindu" சற்று பரவாயில்லை."Who would have ever thought the London Olympics, hardly six weeks away, would have a strong Chennai connection? But thanks to music composer Ilayaraja, it will. A Tamil film song composed by him in the early 1980s has made it to the playlist of the grand opening ceremony." என்று செய்தி.

நமக்கு, "எதை" "எங்கு" "வைப்பது" என்று சுட்டுப் போட்டாலும் வராதே. சம்பந்தம் இல்லாத விஷயங்களை சம்பந்தப் படுத்துவதுதானே நம் வேலையே! ஒலிம்பிக்ஸ், விளையாட்டு சம்பந்தப்பட்டது. இதில் தகுதி பெற்ற நம் நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டும் அங்கீகாரமும் உலக அளவில் வரும், வர வேண்டும் என்று சொன்னால் அதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. அதை விடுத்து, ஒரு துவக்க நிகழ்ச்சியில் இடம்பெறும் இசை கோர்வையில் இளையராஜாவின் ஒரு துளி இடம்பெறுவதால் அவருக்கு அங்கீகாரம் என்று சொல்வது இளையராஜாவுக்கு மட்டுமல்ல, இசைக்கும் இழுக்கு. எதற்கும் எதற்கும் சார் நாம் முடிச்சு போடுகிறோம்?


சரி. தேர்வு செய்ததுதான் செய்தார்கள். எதற்கு இந்த பாட்டு? ஒரு உலகளாவிய விளையாட்டு நிகழ்ச்சியின் துவக்க விழா. "துள்ளல்" நிறைந்திருக்கும் என்பது ஏற்புடையதுதான். எனவே அங்கு "துள்ளல்" இசைதான் எடுபடும் என்பதும் சரியே. ஆனால் இளையராஜா போடாத "துள்ளல்" இசையா? அவ்வளவு ஏன் சார்? இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் "ராம் லட்சுமண்" படத்திலேயே "வாலிபமே வா வா" என்றொரு பாடல் உண்டு. அதன் fast beat இடையே கூட‌ அற்புதமான சங்கதிகள் வைத்திருப்பார் இளையராஜா. அது கண்ணில் படாமல் போனது எப்படி?"வாழ்க்கை" படத்தில் "மெல்ல மெல்ல என்னைத் தொட்டு" என்ற பாடல்...இதன் தாளக்கட்டையும் வயலினையும் உலகமே ரசிக்கலாமே? "ராஜ பார்வை" படத்தின் title music  பிற்பகுதியில் வரும் அந்த western bit, புன்னகை மன்னனில் வரும் அந்த track என்று நூற்றுக்கணக்கான பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாமே? அப்புறம் ஏன் இந்த பாட்டு?

லாஜிக் ஏதாவது தெரிகிறதா? எனக்கு, இப்படி ஒரு லாஜிக் இருக்குமோ என்று தோன்றுகிறது:
யாரோ ஒருவர், இளையாராஜா படங்கள் பெயரை கணிப்பொறியில் ஓட விட்டு கண்ணை மூடிக் கொண்டு, தனது கை, கணிப்பொறி திரையில் எங்கு தொடுகிறதோ அந்த இடத்தில் இருக்கும் படப்பெயரை தேர்வு செய்து இருக்கக் கூடும். இந்த வகையில் "ராம் லக்ஷ்மணன்" மாட்டிக் கொண்டிருக்கக்கூடுமோ என்ற எண்ணம் நமக்கு தோன்றுவதில் வியப்பில்லை.பிறகு இதே "முறையை" பின்பற்றி அப்படத்திலிருந்து ஒரு பாடலையும் தேர்ந்தெடுத்து விட்டார்களோ என்னவோ?

ஒரு மாபெரும் தேசத்தின் பாரம்பரியம் மிக்க தென்னிந்திய மாநிலங்களில், இரண்டு தலைமுறைகள் வளர்ந்த விதத்தையே மாற்றியமைத்த ஒருவரின் அற்புதமான ஆயிரம் compositions இருக்க, இந்த பாடலின் இசையின் மூலம் இவர்தான் இந்தியாவின் சொத்தான இளையராஜா என்று உலகம் அறிவதன் பெயரா அங்கீகாரம்?

"Another world famous composition from India" என்று "why this kolaveri" பாடலை சேர்த்து "இந்தியாவுக்கே அங்கீகாரம்" என்று நம் பத்திரிகைகள் நாட்டியம் ஆடும்படி செய்யாமல் விட்டார்களே. அந்த அளவில் ஒலிம்பிக் துவக்க விழா இசை குழுவுக்கு கோடானு கோடி வந்தனங்கள்!முக்கியமான கருத்து:


1."இளையராஜாவின் மிகச் சாதாரணமான சராசரி பாடல்கள் கூட ஒலிம்பிக் துவக்க விழாவுக்கு போவதில், இளையராஜாவினால், அந்தத் துவக்க விழா அங்கீகாரம் பெறுகிறது" என்று மாற்றிச் சொல்லுவோம். உரக்கச் சொல்லுவோம். 

2. இன்று வரும் பெரும்பாலான அர்த்தமற்ற கூச்சல் சத்தமிக்க பாடல்களை விட இந்த பாடல் எவ்வளவோ நன்றாக இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். அதுவும், 1981ல் முப்பது படங்கள் இசையமைத்த இளையராஜா, "பொழுது போக்கு" நிமித்தமாக போடும் பாடல்களில் கூட எப்படிப்பட்ட‌ உழைப்பும் அர்ப்பணிப்பும் காட்டுவார் என்பதற்கு இந்த பாடல் ஒரு உதாரணம்.

3. பள்ளி நாட்களில் கபடி விளையாட்டில் "கபடி கபடி" என்று சொல்வதற்கு பதிலாக இந்த பாடலை வேகமாக சொல்லும் சிறுவர்களுடன் விளையாடிய பொழுதுகளையும், வகுப்பறையில் விளையாட்டாக சண்டையிடும் பொழுது இப்பாடலை சொல்லியபடி ஓடி வரும் மாணவர்களையும் நினைவில் மீண்டும் கொண்டு வந்த London Olympics துவக்க விழா குழுவுக்கு நன்றி.

Saturday, June 16, 2012

மாண்புமிகு தமிழரின் மேன்மைமிகு ரிங் டோன்கள்...

எத்தனை விதமான போன்களடா அதில் எத்தனைவித ரிங் டோன்களடா... என்று ஆனந்தக் கூத்தாடும் அளவுக்கு "ரிங் டோன்" வசதியை உபயோகப்படுத்துவதில் நாம் வெளுத்துக் க‌ட்டுகிறோம் . நம்முடைய "ரசனைகள்" பீடு நடை போட பாதை இட்டு பாடாய் படுத்துகிறது இந்த ரிங் டோன்களின் ரீங்காரம்.ஒரு வசதியை எந்த அளவு பயன்படுத்தி "போட்டுத் தாக்கு"வோம் என்பதற்கு இந்த ரிங் டோனை நாம் பயன்படுத்தும் முறைகளிலேயே அறிந்து கொள்ளலாம்.

சென்ற மாதம் ஈரோட்டில் ஒரு திருமணம். கல்யாண மண்டப கழிப்பறையில் என் பக்கத்து கழிவறையிலிருந்து ஒரு ring tone...சீர்காழி கோவிந்தராஜனின் "முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே...". அடக் கடவுளே! கலிகாலத்தில் உன் நிலைமை பார்த்தாயா? எங்கிருந்தெல்லாம் உன்னை அழைக்கிறார்கள்! இயற்கை உபாதை கழிக்கையில் கூடவா இறைவன் பாட்டு? அல்லது நம் நண்பர் மலச் சிக்கல் நீங்கி மறுமலர்ச்சி பெற‌ மொமைல் போன் மூலம் முருகனை வேண்டுகிறாரோ?

இதற்கு நேரெதிர் கோஷ்டிகளுக்கும் பஞ்சமில்லை. மீனாட்சி கோயில் பொற்றாமரை குளத்தில் அமர்ந்த படி வாழ்க்கை போகும் பாதையை வாசிக்கும் பொழுது, அருகில் அமர்ந்திருப்பவர் "அரைச்ச மாவை அரைப்போமா" என்கிறார். இவரிடம், "ஏன் சார் இப்படி ஒரு ரிங் டோன் கொலை வெறி" என்று கேட்க முடியுமா? எந்த கேள்விக்கும் ஏடாகூடமாக பதில் சொல்லத் தெரிந்தவர்கள் தானே நாம்? ஒரு வேளை நம் மாவு நண்பர்,  "முன்னோர்க்கு முன்னோர் துவங்கி அரைத்த மாவையே அரைப்பதால்தான் இவ்வுலக வாழ்க்கை இப்படி இருக்கிறது. இதைத்தான் "அரைச்ச மாவை அரைபோமா" என்று தத்துவ விசாரணை செய்கிறது இந்த பாடல்" என்று நம் மேல் வேதாந்த மாவை அவர் பூசி விட்டால் என்ன செய்வது? நம்மால் முடிந்தது இன்னும் இரண்டு படிக்கட்டுக்கள் தள்ளி அமர்ந்து தண்ணீர் இல்லாத பொற்றாமரையை பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்...

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் தள்ளு வண்டியில் பழம் விற்பவர், "நான் அடிச்சா தாங்க மாட்ட..." என்னும் ரிங் டோன் வைத்திருக்கிறார். பேரம் பேசுகையில் இவருக்கு போன் வந்தால் நாமெல்லாம் தெறித்து ஓடி விட வேண்டியதுதான்...

ஒரு முறை நுங்கம்பாக்கத்திலிருந்து அடையார் சென்று கொண்டிருந்தேன். பேருந்தில் நல்ல கூட்டம். கல்லூரியில் படிப்பவர் போலிருந்த பெண் ஒருவரிடமிருந்து "சும்மா நிக்காதீங்க...சொல்லும்படி வைக்காதீங்க" என்று வருகிறது ரிங் டோன். வம்பிழுக்கக் காத்திருக்கும் ஆண்களை வரவேற்கும் வகை பெண் போலும்!. இவர் போன்ற "புதுமை" பெண்களைப் பார்த்தால் பயமாக இருக்கிறது சார். நல்ல வேளை. அதற்கு பிறகு உள்ள வரிகள் இல்லாமல் இரண்டு வரியுடன் ரிங் டோன் செட் செய்த இந்த மகளிர் குல மாணிக்கத்திற்கு மனதால் நன்றி சொல்வோம்.

இன்னும் சில பேருக்கு வீட்டில் இருக்கும் பொழுது ரிங் டோன் மாற்றி set  பண்ண மனது வராது. அடுத்தவர் நிம்மதியை கெடுத்தால்தானே நமக்கு மகிழ்ச்சி கிடைத்தாற் போல இருக்கிறது. எனவே, இவர்கள் பேருந்தில் பயணம் போகையில் ஒவ்வொரு பாட்டாக வரிக்கு வரி மாற்றிக் கொண்டே இருப்பார்கள். எது நல்ல ரிங் டோனாக இருக்கும் என்று test செய்கிறார்களாம்!. பக்கத்தில் இருப்பவர்களுக்கோ, விருந்து சாப்பிட்டவன் எடுத்த வாந்தி போல விதவிதமாய் அரைகுறையாய் இப்படி மாறிக் கொண்டே இருக்கும் வரிகள் தலைவலியைக் கொடுக்கும். சிலர் இவ்வாறு "பணி" செய்யும் பொழுது, தானும் அந்த பாடலை வரியை உடன் பாடி இன்னும் கடுப்பேற்றுவார்கள்.

தற்போது "சத்யமேவ ஜெயதே" என்றொரு டிவி நிகழ்ச்சி பிரபலமாகி இருக்கிறது. எனவே நிறைய பேர் "satyameva jayate" ரிங் டோன் வைத்திருக்கிறார்கள் (பாட்டு நன்றாகத் தான் இருக்கிறது). ஏன் சார், வாய்மையே வெல்லும் என்பதை வாழ்க்கையில் கடைபிடிக்க நாம் என்ன வடிகட்டிய முட்டாள்களா என்ன? எந்த இடத்தில் எந்த பொய் சொன்னால் நமக்கு என்ன லாபம் என்பதில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் இல்லையா நாம்? அதனால்தான், காலத்துக்கு உதவாத உண்மை நேர்மை போன்றவை காலர் டோனிலாவது காற்று வாங்கட்டுமே என்ற நல்லெண்ணத்தில் நாலு பேர் "satyameva jayate " என்று போனில் டோன் வைத்திருக்கிறார்கள். விடுங்கள்...பாவம்.

ச‌ரி. மேலே சொன்னவற்றை தள்ளி வையுங்கள். அற்புதமான ரிங் டோன் வைத்திருக்கும் பலரையும் நாம் சட்டென்று பொது இடத்தில் கடக்கும் பொழுது, யாரென்று தெரியாமலேயே அவர்களை பிடித்துப் போய்விடுகிறது...சென்னை ரங்கநாதன் தெருவில் எனக்கு முன்னே சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரின் "இது ஒரு பொன் மாலைப் பொழுது", KPN பேருந்தில் எனக்கு முன் வரிசை இருக்கை பெண்ணிடமிருந்து வந்த "செவ்வந்தி பூக்களில் செய்த வீடு", மாம்பலம் ரயில் நிலையத்தில் ஒரு முதியவரின் "வெள்ளிப் பனி மலையின்..." என்று நிறைய மனிதர்கள் மனதிற்கு நிறைவு தரும் ரிங் டோன் வைத்திருக்கிறார்கள் என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும்.


Sunday, June 10, 2012

புலி பார்த்த கதை...

காக்கை குருவி கூட கண்ணில் தென்படுவது குறைந்து விட்டது. இந்த லட்சணத்தில், புலி பார்த்ததாக புருடா வேறு விடுகிறாயா...என்று நீங்கள் கேட்கலாம். (வீடியோ காட்சிகள் பதிவின் இறுதியில்...). நம் வளர்ச்சியின் பொருட்டு நகரங்களை எல்லாம் நாம் பொட்டலாய் மாற்றியிருக்கிறோம். காடுகளிலும் நாம் கை வைத்து இயற்கையின் இடுப்பை ஒடிக்க நம்மாலான முயற்சி செய்கிறோம். zoo தவிர வேறெங்கும் புலி என்றொரு விலங்கு உலாவும் என்று எவரேனும் சொன்னால் நக்கலாக சிரிக்கும் அளவுக்கு அல்லவா நாம் நம் இயற்கை வளங்களை பாதுகாக்கிறோம்.

பல வருடம் பற்றுடன் காடுகளில் திரிந்தால், புலியின் புத்தியும் மனதும் இளகி நமக்கு காட்சி தரும் சாத்தியக்கூறுகள் உண்டு என்று நம்ப வைக்கிறது நான் புலி பார்த்த கதை.

குளிருக்கு போர்வை போர்த்த கோடை தயாராகும் பிப்ரவரி மாதம். வாழ்க்கையின் மறக்க முடியாத நிமிடங்களில் ஒன்றை எங்களுக்காக ஏற்பாடு செய்து வைத்திருந்த காலத்தின் ஒரு துளி அதிகாலை பொழுது. guide இரண்டு பேர் நாங்கள் மூன்று பேர், பல வருடம் மனதில் படிந்த‌ ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் மற்றுமொறு trekking துவங்கினோம்.புலி பற்றிய பதிவு என்பதால் காட்டின் அழகு பற்றி கதை சொல்லாமல் சட்டென்று விஷயத்திற்கு வருவோம்.

அந்த உச்சக்கட்ட நிமிடங்களுக்குள் எங்களை இழுத்துச் செல்வது போல‌ langur குரங்குகள் ஒலி எழுப்பியபடி, வழி நடத்தியபடி இருந்தன. ஒரு புலியோ சிறுத்தையோ எங்கள் பக்கத்தில் எங்கோ இருக்கிறது என்பது உறுதியாகி விட்டது.
புலியின் சென்ட் மணம் மூக்கு உணர்கிறது. அதன் கால் தடங்கள் கடவுள் போன பாதை போல பரவசம் ஏற்படுத்துகிறது.  காய்ந்த சருகுகளின் மீது நடக்கும் போது கூட, பூ மீது நடப்பது போல் சத்தமின்றி நடக்கும் சாதுரியம் மிக்க புலியை எப்படி கண்டுபிடிப்பது?..புலியே முன்வந்து "இது தான் நான். பார்த்துக் கொள் உன் ஏக்கத்தை தீர்த்துக் கொள்" என்று தானே தரிசனம் காட்டினால்தான் உண்டு.

அந்த நொடியை எதிர்பார்த்து ஏங்கி ஏங்கியே நாக்கு வறண்டு போனது. அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. "அபூர்வ சகோதரர்கள்" படத்தில் golf  மைதான புல்வெளியை ஒட்டியுள்ள புதர்களில் புலி வால் தெரியுமே...அது போல ஒரு வால். கனவா? நினைவா? கண்டுபிடிக்க கிள்ளிப் பார்க்க வேண்டுமே...அது கூட செய்யத் தோன்றாமல் சிலை போல நின்ற எங்களிடம் சிலிர்ப்பு என்ற உணர்வு மட்டும் உயிர் பெற்றிருந்தது.

வானவில் தரையில் நடப்பது போல் புதர்களுக்கு இடையில் இலைகளின் நிறங்களும் புலிவால் நிறமும் நகர, கண்கள் நிலைக்குத்தி காட்சியில் பதிந்தது. நாங்கள் ஒரு வெட்டவெளியை கடக்க இருக்கும் நிலையில் புலியும் காட்டின் ஒரு சோலையிலிருந்து மறு சோலைக்குள் புக‌ அதே வெட்ட வெளியை நோக்கி வந்து கொண்டிருந்தது.

புலியின் புத்திசாலித்த‌ன‌த்தை பாருங்க‌ள்...திற‌ந்த‌வெளிக்கு வ‌ருவ‌த‌ற்கு முன், நின்று நிதானித்து தன் முன்னே உள்ள‌ ப‌குதி முழுவ‌தையும் scan செய்த‌து. நெஞ்சின் ப‌ட‌ப‌ட‌ப்பு காத‌ருகே வைக்க‌ப்ப‌ட்ட‌ க‌ல்யாண‌ ம‌ண்ட‌ப‌ ஒலிப்பெருக்கி போல‌ இடி இடிக்க‌ ச‌ர‌ணாக‌தி நிலையில் ச‌ட்டென்று அனைவ‌ரும் நேர்கோட்டில் ப‌டுத்து விட்டோம்.

புலியின் க‌ண்க‌ள் எங்க‌ளை ஒரே ஒரு நொடி நேரே துளைத்த‌து. உயிரை உறிஞ்சுவது போன்ற கூரிய பார்வை! அந்த‌ பார்வையின் வீரிய‌ம் உட‌லெங்கும் ப‌ர‌வி, காலைக் குளிரிலும் முதுகுத் த‌ண்டில் வ‌ழிய‌த் துவ‌ங்கிய‌ விய‌ர்வையில் இய‌ற்கையின் வ‌ன‌ப்பும் சிற‌ப்பும் அத‌ன் வீச்சு குறித்த‌ பிர‌மிப்பும் ஜொலித்த‌து. "ஏன்டா, க‌ணிப்பொறி முன் அமர்ந்தே காலத்தை களிப்பதாக நினைத்துக் கொண்டு கருத்தின்றி கழித்து, காய்ந்து கிடக்கும் வாழ்க்கையின் வாட்டத்தை போக்க, வார இறுதிகளில் காட்டுக்கு ஓடி வரும் கோமாளிக் கூட்டத்தில் ஒருவன் தானே நீ?" என்றொரு எக‌த்தாள‌ப் பார்வை...அந்த‌ப் பார்வையை ச‌ந்திக்க‌ முடியாம‌ல் நான் த‌லை குனிந்த‌து ப‌ய‌த்தினால் ம‌ட்டும் இருக்காது. குற்ற‌ உண‌ர்ச்சி. ந‌ம் அனைவ‌ருக்கும் இருக்க‌ வேண்டிய‌ குற்ற‌ உண‌ர்ச்சி...எப்பேர்ப‌ட்ட புவி உயிர் சுழ‌ற்சியின் அங்க‌மாக இருக்கிற‌து புலி.அது அழிந்து கொண்டிருப்ப‌தில் ந‌ம் அனைவ‌ருக்குமே ப‌ங்கிருக்கிற‌து என்ப‌தை நாம் அனைவ‌ருமே அறிவோம்.

ந‌ல்ல‌ வேளை...ம‌னுச‌ பயலுகளின் முக‌த்திலேயே முழிக்க‌க் கூடாது என்று நினைத்திருக்குமோ என்ன‌வோ, பார்வையை வேறுப‌க்க‌ம் திருப்பி குறுக்கு வாட்டில் ந‌ட‌க்க‌த் துவ‌ங்கியது. "உயிர் ஊசலாடியது" என்பதை இங்கே "உயிர் ஊஞ்சலாடியது" என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். வ‌யிற்றுக்கும் வாய்க்கும் இடையே காற்று உருளை ஓடுவது போல ஒரு ஆட்டம்...அந்த உருளை தான் உயிரோ?...இமைக‌ள் இய‌ங்க‌ ம‌றுக்க‌, மூச்சு சத்தம் மூங்கில் காற்றாக‌, விய‌ர்வை ஆறாக‌ வ‌ழிந்தோட‌, வார்த்தைக‌ள் "வ‌ன‌வாச‌ம்" போய்விட‌,மூளையின் வேலை நிறுத்த‌ம் கால் வ‌ரை தெரிந்திட‌, எண்ண‌ங்க‌ள் ஏதுமின்றி "வெற்றிட நிமிடத்தில்" துவைத்தெடுத்த‌ ம‌னதை, காய‌ப்போட்டு மாய‌ம் செய்து, க‌ண் முன்னே ம‌றைந்த புலி காலத்துக்கும் மறக்காது.

நம் corporate யோகிகள் தியான வகுப்புக்களுக்கு ஆயிரக்கணக்கில் பணம் வாங்குகிறார்கள். இந்த புலி ஆசானை பாருங்கள்...இரு நிமிட நடையில் நமக்கு "meditation" பயிற்சி கொடுத்து விட்டு க‌ம்பீர‌மாக‌ க‌ட‌ந்து போகிற‌து...ந‌க‌ர‌த்து "ம‌ன‌ப் ப‌யிற்சி" வ‌குப்புக‌ளில் CD த‌ருவார்க‌ளே என்கிறீர்க‌ளா? எத்த‌னையோ சேன‌ல்க‌ளில் எத்த‌னையோ நேர‌ங்க‌ளில் எங்கோ ஒரு காட்டில் ஏதோ ஒரு புலி ந‌ட‌ந்து போகும் காட்சி வ‌ரும். அதை பார்த்தால் போதும் சார். அன்றைக்கு அதைவிட வேறு "meditation" தேவையில்லை.

video link: (ஆங்காங்கே வீடியோ உதறுவதில் என் பதறலும் புரியுமே!). இறுதியில் Sambar மான் செய்யும் எச்சரிக்கை ஒலியையும் ரசிக்கத் தவறாதீர்கள்!

http://www.youtube.com/watch?v=iULDmLN9xME

Sunday, June 3, 2012

ர‌யிலில் ப‌ய‌ண‌ம் செய்வ‌து எப்ப‌டி ப‌குதி 6

நம் நாட்டில் பெரும்பாலான "குடும்ப ரயில்கள்" வாழ்க்கை தண்டவாளத்தில் அதிக விபத்தின்றி ஓடுவது பெண்களின் பக்குவத்தினால்தான் என்று குறிப்பிட்டே ஆக வேண்டும். ஆனால் பெண்களில் சில சதவீதம் பேர் தண்டவாளத்திற்கே வேட்டு வைக்கும் "திறமை" படைத்தவர்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. அத்தகைய திறமை படைத்த ஒரு "தீந்தமிழ் திருமதி" ஒருவரை காணும் பேறு எனக்கு வாய்த்தது.
சில மாதங்களுக்கு முன் எனது ஒரு பயணத்தில், எதிர் இருக்கையில் ஒரு "தீந்தமிழ் திருமதி" [இனிமேல் "தீ.தி" என்று அழைப்போம்], தன் ஆறு வயது இருக்கக்கூடிய மகனுடன் பயணம் செய்தார். பையன் "wafer biscut" ஒன்றை கீழே தவற விட்டான். குழந்தைகளை, குழந்தைகளாய் இருக்க விடாமல் வளர்ப்பது தானே கலியுக பெற்றோர்களின் பால பாடம். நம்மவரும் அப்படித்தான். மிகுந்த கண்டிப்பானவராம்! மகனை திட்டியபடி "Sh_t" என்றார். ஒரு முறை இரு முறையல்ல...லக்கேஜ் இழுத்து காலில் இடிபட்ட பொழுது...ஜன்னல் கண்ணாடி எளிதாக மூட வராத போது...ரயில் தாமதமான போது...என்று வரிக்கு வரி "Sh_t". இப்படிப்பட்டவர்களில் கொம்பு முளைத்தவர்கள் "bull sh_t" என்பார்கள்."மலம்" தான். ஆனால் ஆங்கிலத்தில் சொல்வதால், நமக்கு முடி முதல் அடி வரை மணக்கிறதே!

என்ன சார் "Sh_t" என்ற வார்த்தை இப்போதெல்லாம் சர்வ சாதாரணம்...இதற்கு போய் குதிக்கிறீர்கள் என்கிறீர்களா? மிகச்சரி. அடித்தட்டில் இருக்கும் ஒருவர் குடித்து விட்டு தெருவில் பேசும் வார்த்தைகள் நம்மை அருவருப்படைய வைக்கும். ஆனால் அதே பொருள் தரும் சொற்களை நம் இளைய சமூகம் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு திரிகிறது. அசிங்கங்கள் கூட ஆங்கிலம் மூலம் அந்தஸ்து பெறும் நாடல்லவோ!

சற்று நேரம் போனது. ரயில் கொள்ளிடம் மேல் போகத்துவங்கியது. பையனுக்கு மிகப்பெரிய மண‌ல் படுகை பார்த்து உற்சாகம். "என்ன இது" என்ற பையன் நச்சரிப்பு பொறுக்காமல் "தீ.தி" "This is a river" என்றார். இத்துடன் அவர் நிறுத்தியிருக்கலாம். எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க இயலாது. எனவே கொள்ளிடம், காவிரி பற்றி தெரிய வேண்டும் என்றும் அவசியமில்லை.ஆனால் "தீ.தி" போன்றவர்கள் அதிமேதாவிகள் இல்லயா? எனவே "Its not attractive like Niagara" என்ற கூடுதல் "தகவல்" சொன்னார். தீ.தி அமெரிக்கா போய் வந்தவர் என்பதை நாம் இப்போது அறிவோமாக. நயகாரா அழகுதான். மறுப்பதற்கு இல்லை. ஒரு முக்கியமான விஷயம் சார் - கிடைக்கும் வாய்ப்பில் சுயபுராணம் பாடுவது இந்தியர்களின் இயல்பு இல்லையா? நானும் இந்தியன். எனவே சந்தடி சாக்கில், நானும் Niagara Falls சென்றிருக்கிறேன் என்பதை நைசாக இங்கு நுழைத்து விடுகிறேன்.மீண்டும் விஷயத்திற்கு வருவோம்.

கொள்ளிடம் என்பது காவிரியின் கிளை ஆறு என்பதும் காவிரியின் பழமையும் வளமும் தெரியாமல் அதை நயகாராவுடன் ஒப்பிட்டு, அதுவும் அடுத்த தலைமுறைக்கு தவறான தகவல் தரும் முட்டாள்தனம் வெளிநாடு போய் வந்தோம் என்ற மமதை தருகிறதோ?அமெரிக்காவில் குடியேற்றம் நிகழ்வதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பூம்புகாரில் வணிகம் கண்டவர்கள் நாம். காவிரிக் கரையில் நாம் கால் பதித்து கணக்கற்ற ஆண்டுகள் ஆயிற்று.பார்வைக்கு அழகாய் இருப்பதை மட்டுமே "தீ.தி" போன்றவர்கள் போற்றுவதில் ஆச்சரியமில்லை. நதி என்பது மண்ணின் ரத்த ஒட்டம் என்று இவர்களுக்கு புரியவா போகிறது...

நேரம் ஒடியது... "குடிசை மாற்று வாரியம்" பத்து மாடி கட்டடமாய் ஜொலிக்கும் நம் நாட்டில் இன்னும் ரயில் நிலையங்கள் அருகில் இருக்கும் குடிசைகள் அப்படியேதான் இருக்கின்றன "தீ.தி" வ‌கையின‌ருக்கு தீனி போட்ட‌ப‌டி...அப்ப‌டித்தான் ஒரு குடிசை ப‌குதியை ர‌யில் சிக்ன‌லுக்காக‌ மெதுவாக‌ க‌டந்த‌து. ஆடைக‌ளில் அவ‌த‌ரித்த‌ ஏழ்மையுட‌ன் அங்கிருந்த‌ சிறுவ‌ர்க‌ள் ர‌யிலை நோக்கி கைய‌சைத்த‌ன‌ர். ந‌ம் ர‌யில் பைய‌னும் கைய‌சைத்தான்...தீந்த‌மிழ் திரும‌தியின் நாக்கில் தீப்பொறி ப‌ற‌ந்த‌து. "They are poor. Don't show hands" ஒரு போடு போட்டாரே பார்க்க‌லாம். பைய‌னுக்கும் ந‌ம் ச‌மூக‌த்திற்கும் ஒன்றாக‌வே வ‌லித்திருக்கும். ச‌மூக‌ம் என்றால் என்ன‌வென்றே தெரியாம‌ல் "பெரிய‌ ஆளாக‌" வ‌ரும் வாய்ப்பு அந்த‌ பைய‌னுக்கு, அந்த அம்மாவின் புண்ணிய‌த்தில் கிடைக்க‌க்கூடும்.

அப்புற‌ம் என்ன‌...ம‌ண் ப‌ற்றிய‌ அடிப்ப‌டை அன்பு, அறிவு ச‌மூக‌ம் ப‌ற்றிய‌ சிந்த‌னை ஆகிய‌வ‌ற்றை "விழுங்கிய‌" "சுறா"வின் கண்கள் "women's era" ப‌டிக்க‌த் துவ‌ங்கிய‌து. என‌க்கொரு சந்தேகமும் வருத்தமும் ர‌யிலில் செல்லும் பொழுதெல்லாம் வ‌ரும். ஏன் சார் த‌மிழ் நாட்டுக்குள் ஓடும் ர‌யில்க‌ளில் கூட‌ ஜெய‌மோக‌னின் "விஷ்ணுபுர‌ம்" அல்ல‌து ராம‌ கிருஷ்ண‌னின் "யாமம்" போன்ற‌ நாவ‌ல்க‌ளோ அல்ல‌து ல‌.ச‌.ரா வின் "தாக்ஷாயிணி" போன்ற‌ சிறுக‌தைக‌ளோ அல்லது "புதுமைப் பித்தன் சிறுகதைகள்" தொகுப்போ அல்லது ஜெயகாந்தனோ அல்லது தி.ஜாவோ ப‌டித்துக் கொண்டிருக்கும் ஒருவ‌ர் கூட‌ பார்வையில் ப‌ட‌ மாட்டேன் என்கிறார்க‌ள்?
சொர்க்கத்தில் மிதப்பதாக நினைத்து சாக்கடையில் குளிக்க பழகி விட்டோமோ?