/ கலி காலம்: November 2013

Friday, November 15, 2013

இலங்கை மேடையில் இன்னொரு நாடகம்...

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. நம்மூர் சிங்கங்கள் இதில் தங்களுக்கு உள்ள அக்கறையை பறை சாற்ற சிலிர்த்தெழுந்து வாதம், விவாதம், விதண்டாவாதம் என அனைத்தையும் செய்து விட்டு ஓயத்துவங்கி விட்டன. இனி அவை வேறு "வாய்ப்புகள்" தேடிப் போய் விட்டு இலங்கை (தமிழர்) குறித்த மற்றொரு நிகழ்வு வரும் பொழுது மீண்டும் சிலிர்த்தெழும்...

தலைவர்களுக்கென்று சில பண்புகள் தேவை என்று பழங்காலம் தொட்டு அறிந்திருக்கிறோம். அதில் குறிப்பிடத்தகுந்தது முடிவெடுக்கும் ஆற்றல். சரியோ தவறோ, முடிவுகளை தகுந்த காலத்தில் எடுத்து, அந்த முடிவுக்கான சிந்தாந்ததையும், காரணிகளையும் தெளிவாக விளக்குவது எந்தவொரு தலைவருக்கும் அவசியமான குணம்.

நம் பிரதமர் இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் க‌லந்து கொள்ளப்போவதில்லை என்று சில நாட்கள் முன் முடிவெடுத்தார்.. தெரிவித்த கையோடு, அதை ராஜபக்ஷேவுக்கு தெரிவித்து கடிதமும் அனுப்பியிருக்கிறார். அத்தோடு நில்லாமல் விவகாரத்துறை அமைச்சர் அவருக்கு பதில் கலந்து கொள்வார் என்றொரு நிலைப்பாடு வேறு. சுருங்கச் சொன்னால் "பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்" பழமொழி நமக்கு மறந்து விடாமல் இருக்க அதற்கு செயல்முறை விளக்கம் அளித்திருக்கிறார்.

இதென்ன இரட்டை நிலைப்பாடு? ஒன்று பிரதமர் கலந்து கொண்டு, காமன்வெல்த் அவையில், போர்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை தேவை என்று பேசியிருந்தால், அந்த தைரியமான போக்கை பாராட்டியிருக்கலாம். அல்லது மொத்தமாக புறக்கணித்து இந்தியாவிலிருந்து எவருமே கலந்து கொள்ள மாட்டோம் என்று தெரிவித்து, அதற்கான காரணத்தையும் விளக்கியிருந்தால் முதிர்ச்சியான ராஜாங்க முடிவென்று பாராட்டியிருக்கலாம்.

தான் போகாமல் மற்றொருவரை அனுப்புவதாக சொல்வது மட்டுமின்றி, வராததற்கு வருத்தம் தெரிவிக்கும் செயலால் எவருக்கேனும் எப்பயனேனும் உண்டோ? அட, அவருக்கேனும் கூட்டணி கட்சிகளின் நிர்பந்தத்தை வேறு வழியின்றி ஏற்றுக்கொண்ட குறைந்த பட்ச திருப்தி கூட இதில் கிடைக்காதே...நல்ல வேளை, கடிதத்தில் என்ன எழுதியிருப்பார் என்று நமக்குத் தெரியவில்லை. ஒரு வேளை, "கடல் கடந்து வர முடியாத நிலையில் உடல்நிலை இருப்பதால் இந்த மடல்" என்று எழுதியிருந்தாலும் அதிசயமில்லை. கடிதம் எழுதும் கலையை சென்னையில் இருந்து டெல்லி செல்லும் கடிதங்கள் மூலம் கற்காமலா இருந்திருப்பார் நம் பிரதமர்? எதுகை மோனையில் பேசியே ஏமாற்றும் தமிழகத்தின் இருபெரும் கட்சிகளின் முதுகில் சவாரி செய்து "கூடா நட்பு" பாராட்டியே பழக்கப்பட்ட தேசிய பாரம்பரிய கட்சியின் அங்கத்தினர் தானே அவர்?

போர் அத்துமீறல்கள் குறித்து வரும் வீடியோக்களை பார்க்கும் எவருக்கும் மனது என்னவோ செய்யும்.. அதுவும், நம் இனம் என்கிற போது கூடுதல் வலி ஏற்படுவது இயல்பு. ஆனால் அந்த உணர்ச்சி குவியல்களில் அரசியல் நெருப்பு பற்ற வைத்து ஆதாயம் காண‌ முயல்வதே இங்கிருக்கும் அனைத்து கட்சிகளின் அடிப்படை கொள்கை. எனவேதான், ராஜாங்க ரீதியான முயற்சிகளோ தீர்வுக்கான தொலைநோக்கு பார்வையோ இன்றி உணர்வு ரீதியான திரிகளை கொளுத்திப் போடுவதே அனைத்துக் கட்சிகளின் வேலையாக இருக்கின்றன.

இலங்கை தமிழர் விவகாரத்தின் இன்னொரு முனையில் சிக்கியிருப்பது நம் மீனவர்கள். "கச்சத்தீவை மீட்டெடுப்போம்" போன்ற வெட்டிப் பேச்சுக்களை விட்டு இவர்களின் அன்றாட மீன்பிடித் தொழிலுக்குரிய‌ பாதுகாப்பை பலப்படுத்தும் வழிமுறைகளுக்கான வரைவுகளை எந்தக் கட்சியாவது எந்த விதத்திலாவது முன்னெடுத்துச் சென்றிருக்கிறதா? தீப்பெட்டியும் தீக்குச்சியும் போல எந்த ஒன்று இன்னொன்றின் மேல் உரசினாலும் விளைவு நெருப்பே என்ற ஆபத்தான நிலைக்கு இந்த இரண்டு சிக்கல்களையும் ஆக்கி வைத்திருக்கிறோம்... என்னதான் இங்கு நாம் பேசினாலும், இலங்கை என்பது தனி நாடு. அதன் உள்விவகாரங்களில் தலையிட, அங்கு நடக்கும் அத்துமீறல்களை கண்டிக்க, உரியவர்களை தண்டிக்க, நடைமுறைக்கு சாத்தியமான வழிமுறைகள் எதையேனும் நாம் பொருத்தமிகு கூட்டமைப்புகளில் விவாதத்திற்கோ, சர்வதேச அரங்குகளின் புரிதலுக்கோ விளக்கமாக வைத்திருக்கிறோமா நாம்? அத்தகைய ராஜ தந்திரமும் பக்குவமும் ஒருசேர பெற்ற தலைவர் எவரேனும் இங்கு இருக்கின்றாரா?

இங்கிருக்கும் பெரிய கட்சிகள் கடிதம் எழுதுவதையும் தீர்மானம் போடுவதையும் தவிர இவற்றுக்கு விடை காணும் வகையில் ஏதேனும் உருப்படியாக யோசித்திருக்கின்றனவா? ஓட்டில் மட்டுமே கண் வைத்திருக்கும் தலைவர்கள் மட்டுமே இன்று மிச்சம். நாட்டை வழிநடத்தும் தகுதி உடையவர் எப்பொழுதேனும் கிடைத்தால் நமக்கு மச்சம்.

நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் என்ன செய்ய முடியும்? ஒன்று செய்யலாம் - நல்லதோ கெட்டதோ...எந்தவொரு விஷயமும் முடிவுக்கு வந்தாக வேண்டும். அந்த வகையில், இன்றிருக்கும் பொறுப்பற்ற, சிந்தனையற்ற, செயலற்ற அரசியலும் முடிவுக்கு வரும். சரித்திரத்தில் பதியப் பெற்ற அப்பழுக்கற்ற அரசியல் தலைவர்கள் போல மீண்டும் எவரேனும் தோன்றக்கூடும் என்ற நம்பிக்கையில், அவரை அடையாளம் தேடியபடியே நாம் இருக்கலாம்...ஆண்டுகள் பல ஆகலாம் தலைமுறைகள் பல கூட தாண்டலாம்...ஆனால் என்றேனும் காலச்சக்கரம் மீண்டும் சுற்றி காமராஜர் போலவோ கக்கன் போலவோ எவரேனும் தோன்றலாம் என்ற நம்பிக்கையில் நாம் வாழலாம் அந்த நம்பிக்கையை அடுத்த‌ தலைமுறைக்கும் ஊட்டலாம்.

அதுவரை இவர்கள் அத்தனை பேரின் நாடகங்களையும் புறக்கணித்து, இலங்கையில் சிங்களர்களுடன் தமிழர்கள் அமைதியாக வாழவும், எது நமது கடல் எல்லை என்று அறியும் வசதியின்றி எல்லைத் தாண்டி மீன்பிடிக்கப் போனவர்கள் சேதாரமின்றி அவரவர் வீடு திரும்பவும், நமக்கு எதன் மீது நம்பிக்கையோ அதனிடம் வேண்டுவதை தவிர வேறு வழியில்லை. இந்த விவகாரங்களுக்கு விடிவுமில்லை.