/ கலி காலம்: June 2013

Sunday, June 9, 2013

எப்படியிருந்த கிரிகெட்...

அது ஒரு பிற்பகல் வேளை. நான் சென்று கொண்டிருந்த பேருந்தை திடீரென்று சாலையோரம் நிறுத்தி விட்டு ஒரு கடை நோக்கி இறங்கிப் போன டிரைவர், திரும்பி வந்து பயணிகளிடம் "Chetan Sharma செஞ்சுரி அடிச்சுட்டான்" என்று உற்சாக அதிர்ச்சியை உரக்கச் சொல்லி விட்டு வண்டியை எடுத்த தினம் நடந்து இருபத்தைந்து ஆண்டுகள் இருக்கும். பேருந்து முழுவதும் "Chetan Sharma" மந்திரமாக ஒலித்தார். அதற்கு சற்று காலம் முன்பு கடைசி பந்தில் சிக்ஸ்ர் கொடுத்த போது திட்டித் தீர்த்த பல வாய்களே அந்த பேருந்தில் அன்று இருந்திருக்கக் கூடும். எனினும் அனைவருக்கும் அன்று அது நினைவில் இல்லை. எவரும் "எதுக்குய்யா வண்டியை நிப்பாட்டின?" என்று கேள்வி கேட்கவில்லை. இப்படித்தான் நம் தேசம் கிரிகெட் கிறுக்கு பிடித்து வருடக்கணக்கில் அலைந்தது.

பரந்த மைதானத்தில் விளையாடும் ஆட்டம் என்றாலும் பத்துக்குப் பத்து ரூமுக்குள் கூட, வீட்டு பீரோ நெளிந்து போக, கண்ணாடி உடைபட விளையாட வைத்தது...ரப்பர் பந்து பிய்ந்து போனால், அதன் ஒரு பகுதியை வைத்தே விளையாடினாலும் உற்சாகம் தந்தது...தரிசு நிலங்களில் உடைந்த மரப்பட்டையை பேட்டாகவும் உலர்ந்த சோளத்தட்டையை பந்தாகவும் உருமாற வைத்தது...காற்றில் கைகளை சுற்றி பெளராகவும், விதவிதமான ஷாட்களுக்கு வாயினாலேயே "டொக்" என்று சத்தம் கொடுத்து பந்துமில்லாமல் பேட்டுமில்லாமல் கற்பனையிலேயே விளையாடியபடி தெருவில் நடந்து போகும் சிறுவர்களைக் கொடுத்தது...சின்னஞ்சிறு மைதானத்தில் எந்தப் பந்து எந்த "மேட்சில்" இருந்து வருகிறது என்று கண்டுபிடிப்பது கூட கடினமாக குறுக்கும் நெடுக்குமாக பல குழுக்கள் விளையாடினாலும் பொறுத்துக் கொள்ள வைத்தது...

கிரிகெட் நம் நாட்டில் பரவுவதற்கு பெருமளவு பங்காற்றியது தூர்தர்ஷன் என்பதை நாம் மறந்து விட முடியாது. "ஆடி அசைந்து" விளையாடுவதற்கு பெயர் பெற்ற ரவி சாஸ்திரி "ஆடி" கார் பரிசு பெற்ற 1985 ஆண்டின் "" போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பி பட்டி தொட்டியெங்கும் கிரிகெட் மோகத்தை கிளறியது தூர்தர்ஷன். ஆஸ்திரேலியாவில் நடந்த இந்தப் போட்டிகளை, வெறும் கோடுகள் மட்டுமே திரையில் தெரியும் போதே டிவியை ஆன் செய்து, இரண்டு முந்திரி வடிவங்கள் இசையுடன் திரையில் சுற்றி வருகையில் சற்று உற்சாகம் தொற்றி, பல் துலக்கிய கையோடு டிவியின் முன் தவம் கிடந்த வீடுகள் பல உண்டு.

டி.வி என்பது வசதி படைத்தவர்கள் வாங்க யோசிக்கும் இருந்த அந்நேரத்தில், ஏதேனும் ஒரு டிவி ஷோ ரூமின் வாசலில் நின்று "Dyanora" மற்றும் "Solidaire" வகையறாக்கள் வழியாக ஓடிக்கொண்டிருக்கும் கிரிகெட் மாட்சை சாலையில் போகும் பிச்சைகாரரும் பிசினஸ்மேனும் அருகருகே நின்று ஆனந்தமாக பார்த்துச் சென்ற "கலாச்சாரம்" தோன்றியது.ரிக்க்ஷா ஓட்டுபவர் "ஒரு நிமிஷம்" என்று சவாரியை நிறுத்தி கடைசி ஓவர் பார்ப்பதும், தெருவை அடைத்தபடி கூட்டம் நிற்பதுமாய், கிரிகெட் என்ற "மதம்" பரவியது.


ஒரு முறை உறவினர் ஒருவரை பார்க்க மருத்துவமனை சென்ற பொழுது, ஆபரேஷன் தியேட்டரிலிருந்து கொண்டு வரப்பட்டு அப்போதுதான் நினைவு திரும்பிய‌ ஒருவர் "இந்தியா தப்பிச்சாச்சா" என்று ["டை" ஆன சென்னை டெஸ்ட் போட்டியின் போது] கேட்டது ஞாபகம் இருக்கிறது.

எனது பெரியப்பா ஒருவர், வீட்டில் டிவி வராத காலங்களிலேயே, உலகில் எந்த மூலையில் டெஸ்ட் போட்டி நடந்தாலும் தனது டிரான்ஸிஸ்டரை எப்படியோ தட்டித் திருகி , ABC... BBC என்று எதிலாவது மாட்சை பிடித்து விடுவார். எங்கேனும் காதை கழற்றி ரேடியோவிற்குள் போட்டு விடுவாரோ என்று பயப்படும் அளவு ரேடியோவை காதோடு வைத்து, பெரும் இரைச்சலுக்கு நடுவே ஸ்கோரை "கண்டு பிடித்து" விடுவார்.

ஞாயிற்று கிழமைகளில் போட்டி நடந்தால் மகிழ்ச்சிக்கு பதில் பதட்டம் தோன்றும். ஏன் என்றால், தூர்தர்ஷனில் பாதி நேரம் போட்டியை ஒலிபரப்புவதற்கு பதில் அதன் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பிக் கொண்டிருப்பார்கள். "ரோம் எரியும் பொழுது பிடில் வாசிப்பது" என்பதை போல நாம் " ஸ்ரீகாந்த் என்னவானோரோ" என்று பரபரக்கும் மதியம், காது கேளாதோருக்கான செய்தி ஓடிக்கொண்டிருக்கும். நாட்டில் அனைவருக்கும் நன்றாக காது கேட்கும் நிலை வந்து விடாதா என்று ஏங்குவோம். சில சமயம் அசாரூதின் பவுண்டரிகளாக அடித்து கொண்டிருக்கையில் இவர்கள் அசாம் தேயிலை தோட்டத்தில் இலைகளில் பூச்சி மருந்து எப்படி அடிப்பது என்று விளக்கிக் கொண்டிருப்பார்கள். போட்டியின் இறுதிக் கட்டம் நெருங்கும் போது "ந் ந்ர்" என்று நரோத்தம் பூரி வந்து விடுவார். இவர், பஞ்சாபில் நடந்த கிராமிய விளையாட்டுகளில் வழுக்கு மரம் ஏறுவது, தேசிய பில்லியட்ஸ் போட்டிகள் (இப்படியொரு விளையாட்டி இருக்கிறது என்பதே பாதி இந்தியர்களுக்கு இந்த நிகழ்ச்சி மூலமே அன்று தெரிய வந்திருக்கும்) என்றெல்லாம் சுற்றி முடித்து, நடந்து கொண்டிருக்கும் கிரிகெட் போட்டிக்கு கனெக்க்ஷன் கொடுப்பார். இருப்பினும், மதியம் துவங்கி, எந்த நேரத்தில் போட்டியை காட்டுவார்களோ என்ற தவிப்பில், மேற்கூறிய அனைத்தையும் பார்த்துத் தவித்தோம். ஒரு வேளை, இந்தியர்களிடம் சகிப்புத்தன்மை என்பதே இதிலிருந்துதான் ஏகத்துக்கும் வளர்ந்து விட்டதோ என்று கூட சந்தேகம் வரலாம்.

1980களின் நடுவே ஒரு முறை மதுரைக்கு இந்திய அணி வந்திருந்தது. அவர்கள் இரண்டு பிரிவாக பிரிந்து ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் "சும்மா" போட்டி ஒன்றில் விளையாடினார்கள். சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஊரே திருவிழா கோலம் பூண்டது போல கூட்டம் கூட்டமாக மைதானம் நோக்கி படையெடுத்தது. கம்பு கட்டைகளால் அமைக்கப்பட்ட இருக்கைகள், வேலிகளை கடந்து, கபில் தேவின் கைகளை தொட்டுப் பார்த்த‌ அந்த நொடியின் மகிழ்ச்சி இன்றும் மனதில் பதிந்திருக்கிறது.

இன்று காரிலிருந்து இறங்கி, தொலைக்காட்சி கேமிராக்கள் தொடர‌ திமிருடன் நடந்து போகும் கோட்டு போட்ட கோமாளிகள் எவராலும் கிரிகெட் வளரவில்லை. அந்த விளையாட்டின் எளிமையில் இருக்கிறது அதன் உயிர். நமக்கு உற்சாகம் அளித்த இந்த விளையாட்டிற்கு நாம் ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்தால் ஒன்றே ஒன்று போதும் IPL போன்ற கூத்துக்களை புறக்கணித்து, மைதானங்கள் இரண்டு வருடங்கள் காற்றாடினால் போதும். "ஆட்டம்" மட்டும் நிலைத்து நிற்கும். மற்ற "ஆட்டங்கள்" சிறிது சிறிதாய் அடங்கி விடும்.