/ கலி காலம்: ர‌யிலில் ப‌ய‌ண‌ம் செய்வ‌து எப்ப‌டி ப‌குதி 6

Sunday, June 3, 2012

ர‌யிலில் ப‌ய‌ண‌ம் செய்வ‌து எப்ப‌டி ப‌குதி 6

நம் நாட்டில் பெரும்பாலான "குடும்ப ரயில்கள்" வாழ்க்கை தண்டவாளத்தில் அதிக விபத்தின்றி ஓடுவது பெண்களின் பக்குவத்தினால்தான் என்று குறிப்பிட்டே ஆக வேண்டும். ஆனால் பெண்களில் சில சதவீதம் பேர் தண்டவாளத்திற்கே வேட்டு வைக்கும் "திறமை" படைத்தவர்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. அத்தகைய திறமை படைத்த ஒரு "தீந்தமிழ் திருமதி" ஒருவரை காணும் பேறு எனக்கு வாய்த்தது.
சில மாதங்களுக்கு முன் எனது ஒரு பயணத்தில், எதிர் இருக்கையில் ஒரு "தீந்தமிழ் திருமதி" [இனிமேல் "தீ.தி" என்று அழைப்போம்], தன் ஆறு வயது இருக்கக்கூடிய மகனுடன் பயணம் செய்தார். பையன் "wafer biscut" ஒன்றை கீழே தவற விட்டான். குழந்தைகளை, குழந்தைகளாய் இருக்க விடாமல் வளர்ப்பது தானே கலியுக பெற்றோர்களின் பால பாடம். நம்மவரும் அப்படித்தான். மிகுந்த கண்டிப்பானவராம்! மகனை திட்டியபடி "Sh_t" என்றார். ஒரு முறை இரு முறையல்ல...லக்கேஜ் இழுத்து காலில் இடிபட்ட பொழுது...ஜன்னல் கண்ணாடி எளிதாக மூட வராத போது...ரயில் தாமதமான போது...என்று வரிக்கு வரி "Sh_t". இப்படிப்பட்டவர்களில் கொம்பு முளைத்தவர்கள் "bull sh_t" என்பார்கள்."மலம்" தான். ஆனால் ஆங்கிலத்தில் சொல்வதால், நமக்கு முடி முதல் அடி வரை மணக்கிறதே!

என்ன சார் "Sh_t" என்ற வார்த்தை இப்போதெல்லாம் சர்வ சாதாரணம்...இதற்கு போய் குதிக்கிறீர்கள் என்கிறீர்களா? மிகச்சரி. அடித்தட்டில் இருக்கும் ஒருவர் குடித்து விட்டு தெருவில் பேசும் வார்த்தைகள் நம்மை அருவருப்படைய வைக்கும். ஆனால் அதே பொருள் தரும் சொற்களை நம் இளைய சமூகம் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு திரிகிறது. அசிங்கங்கள் கூட ஆங்கிலம் மூலம் அந்தஸ்து பெறும் நாடல்லவோ!

சற்று நேரம் போனது. ரயில் கொள்ளிடம் மேல் போகத்துவங்கியது. பையனுக்கு மிகப்பெரிய மண‌ல் படுகை பார்த்து உற்சாகம். "என்ன இது" என்ற பையன் நச்சரிப்பு பொறுக்காமல் "தீ.தி" "This is a river" என்றார். இத்துடன் அவர் நிறுத்தியிருக்கலாம். எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க இயலாது. எனவே கொள்ளிடம், காவிரி பற்றி தெரிய வேண்டும் என்றும் அவசியமில்லை.ஆனால் "தீ.தி" போன்றவர்கள் அதிமேதாவிகள் இல்லயா? எனவே "Its not attractive like Niagara" என்ற கூடுதல் "தகவல்" சொன்னார். தீ.தி அமெரிக்கா போய் வந்தவர் என்பதை நாம் இப்போது அறிவோமாக. நயகாரா அழகுதான். மறுப்பதற்கு இல்லை. ஒரு முக்கியமான விஷயம் சார் - கிடைக்கும் வாய்ப்பில் சுயபுராணம் பாடுவது இந்தியர்களின் இயல்பு இல்லையா? நானும் இந்தியன். எனவே சந்தடி சாக்கில், நானும் Niagara Falls சென்றிருக்கிறேன் என்பதை நைசாக இங்கு நுழைத்து விடுகிறேன்.மீண்டும் விஷயத்திற்கு வருவோம்.

கொள்ளிடம் என்பது காவிரியின் கிளை ஆறு என்பதும் காவிரியின் பழமையும் வளமும் தெரியாமல் அதை நயகாராவுடன் ஒப்பிட்டு, அதுவும் அடுத்த தலைமுறைக்கு தவறான தகவல் தரும் முட்டாள்தனம் வெளிநாடு போய் வந்தோம் என்ற மமதை தருகிறதோ?அமெரிக்காவில் குடியேற்றம் நிகழ்வதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பூம்புகாரில் வணிகம் கண்டவர்கள் நாம். காவிரிக் கரையில் நாம் கால் பதித்து கணக்கற்ற ஆண்டுகள் ஆயிற்று.பார்வைக்கு அழகாய் இருப்பதை மட்டுமே "தீ.தி" போன்றவர்கள் போற்றுவதில் ஆச்சரியமில்லை. நதி என்பது மண்ணின் ரத்த ஒட்டம் என்று இவர்களுக்கு புரியவா போகிறது...

நேரம் ஒடியது... "குடிசை மாற்று வாரியம்" பத்து மாடி கட்டடமாய் ஜொலிக்கும் நம் நாட்டில் இன்னும் ரயில் நிலையங்கள் அருகில் இருக்கும் குடிசைகள் அப்படியேதான் இருக்கின்றன "தீ.தி" வ‌கையின‌ருக்கு தீனி போட்ட‌ப‌டி...அப்ப‌டித்தான் ஒரு குடிசை ப‌குதியை ர‌யில் சிக்ன‌லுக்காக‌ மெதுவாக‌ க‌டந்த‌து. ஆடைக‌ளில் அவ‌த‌ரித்த‌ ஏழ்மையுட‌ன் அங்கிருந்த‌ சிறுவ‌ர்க‌ள் ர‌யிலை நோக்கி கைய‌சைத்த‌ன‌ர். ந‌ம் ர‌யில் பைய‌னும் கைய‌சைத்தான்...தீந்த‌மிழ் திரும‌தியின் நாக்கில் தீப்பொறி ப‌ற‌ந்த‌து. "They are poor. Don't show hands" ஒரு போடு போட்டாரே பார்க்க‌லாம். பைய‌னுக்கும் ந‌ம் ச‌மூக‌த்திற்கும் ஒன்றாக‌வே வ‌லித்திருக்கும். ச‌மூக‌ம் என்றால் என்ன‌வென்றே தெரியாம‌ல் "பெரிய‌ ஆளாக‌" வ‌ரும் வாய்ப்பு அந்த‌ பைய‌னுக்கு, அந்த அம்மாவின் புண்ணிய‌த்தில் கிடைக்க‌க்கூடும்.

அப்புற‌ம் என்ன‌...ம‌ண் ப‌ற்றிய‌ அடிப்ப‌டை அன்பு, அறிவு ச‌மூக‌ம் ப‌ற்றிய‌ சிந்த‌னை ஆகிய‌வ‌ற்றை "விழுங்கிய‌" "சுறா"வின் கண்கள் "women's era" ப‌டிக்க‌த் துவ‌ங்கிய‌து. என‌க்கொரு சந்தேகமும் வருத்தமும் ர‌யிலில் செல்லும் பொழுதெல்லாம் வ‌ரும். ஏன் சார் த‌மிழ் நாட்டுக்குள் ஓடும் ர‌யில்க‌ளில் கூட‌ ஜெய‌மோக‌னின் "விஷ்ணுபுர‌ம்" அல்ல‌து ராம‌ கிருஷ்ண‌னின் "யாமம்" போன்ற‌ நாவ‌ல்க‌ளோ அல்ல‌து ல‌.ச‌.ரா வின் "தாக்ஷாயிணி" போன்ற‌ சிறுக‌தைக‌ளோ அல்லது "புதுமைப் பித்தன் சிறுகதைகள்" தொகுப்போ அல்லது ஜெயகாந்தனோ அல்லது தி.ஜாவோ ப‌டித்துக் கொண்டிருக்கும் ஒருவ‌ர் கூட‌ பார்வையில் ப‌ட‌ மாட்டேன் என்கிறார்க‌ள்?
சொர்க்கத்தில் மிதப்பதாக நினைத்து சாக்கடையில் குளிக்க பழகி விட்டோமோ?


6 comments:

  1. ஆஹா.... அருமையாகச் சொல்லி விட்டீர்கள் குமரன். நிறைய பேருக்கு இந்த ஆங்கில மோகம் இருக்கத்தான் செய்கிறது... தொடரின் முந்தைய பகுதிகளையும் படிக்கிறேன்....

    ReplyDelete
  2. சொர்க்கத்தில் மிதப்பதாக நினைத்து சாக்கடையில் குளிக்க பழகி விட்டோமோ?

    -yep! you are right!!

    ReplyDelete
  3. Hi Kumaran,

    Please add labels to your posts.. so that, it will be easy for readers to collate together, just by clicking them..

    ReplyDelete
  4. உங்களின் தளம் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/07/blog-post_25.html) சென்று பார்க்கவும். நன்றி !

    ReplyDelete
  5. எதார்த்தம் தொலைத்த சூனியத்தில் சுழலும் அவர்களிடம் தமிழின் தொன்மை அறிய முற்படுவது அபத்தம் தான் ஆனாலும் நாளைய தலைமுறையின் சோகம் பற்றி கவலை படும் உங்கள் எழுத்தின் ஆதங்கம் சிந்திக்க வைக்கிறது .........அருமை

    ReplyDelete
  6. தாய்மண்ணில் தாய்மொழி தவிர்த்து அந்நிய மொழி பேசுவது பெருமை என்று எண்ணி வாழும் ஒரே இனம் தமிழ் இனமே.

    ReplyDelete