/ கலி காலம்: May 2012

Saturday, May 26, 2012

ரயிலில் பயணம் செய்வது எப்படி - பகுதி 5

ஸ்ஸ்ஸ்...அப்பாடா...காலை நீட்டி அமர்ந்தாயிற்று. concrete காடுகளுக்குள் கண்ணை மூடிக்கொண்டு நீ ஓட்டும் நகரத்து வாழ்க்கையில் மறந்த  இயற்கையின் ஸ்பரிசம் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லியபடி இருபுறமும் இருந்த வயல்களும் மரங்களும் ரயிலை துரத்தியபடி வந்து என் கண்களை வருடியது  காற்றின் கரங்களால்...

நம்மில் எத்தனை பேருக்கு சார் கண்ணை மூடியவுடன் தூக்கம் வருகிறது? வீட்டுப்  பெண்ணின் திருமணம் முதல் விவேகமற்ற petrol விலையேற்றம் வரை அவரவருக்கு ஆயிரம் கவலைகள்...குடும்பஸ்தர் என்றால் "luggage" மேல் ஒரு கண் வைத்திருக்கும் பழக்கம் தானாகவே வந்து விடும். திருடர்கள் மட்டுமின்றி, நம் ஆதி உலகின் மூத்த குடியினமான "கரப்பான்" மீதும் ஒரு கண் இருக்க வேண்டும். டினோசர் போன்றவை அழிந்து விட, கரப்பான் மட்டும் பல்கி பெருக என்ன காரணம்? இவை சிறு வயதில் Delhi, Mumbai, Chennai போன்ற பெருநகரங்களுக்கு போகும் ரயில்களில் குடும்ப நோக்கில் பயணித்து, பிறகு Kasi, Rameswaram, Sri rangam போகும் ரயில்களில் ஏறி வயதான காலத்தை கழித்து புண்ணியம் தேடிக் கொள்வது போல் தெரிகிறது ...எனவே கடவுள் இதை அழியாத இனமாக ஆக்கி விட்டாரோ என்னவோ? இவற்றை பற்றி இப்படி பேசுவதால் நம் மேல் கரப்பான்களுக்கு கோபம் வருவது இயற்கைதானே? எனவேதான் நாம் அசரும் நொடியில், கழுத்துக்கு பின்புறம் வந்து குறுகுறுப்பு காட்டுவதும், ஊரிலிருந்து எடுத்து வரும் தின்பண்டங்கள்   மேல் ஏறிக்கொண்டு நம் வீடு வரை வருவதுமாக பழி தீர்த்து கொள்ளும்.

வடிவேலுவின் "வாம்மா மின்னல்" போல நம் கால்களின் குறுக்கே சரட்டென்று ஓடி மறையும் எலிகளில் நோஞ்சான் எலியை நீங்கள் பார்த்ததுண்டா? வாய்ப்பு இல்லை. ஏனென்றால் நம்மை பற்றி நன்கு அறிந்தே எலிகள் ரயிலில் குடியிருக்கின்றன. வெறும் வாயிலேயே அவல் மெல்லும் நாம் ரயிலில் சதா கொறித்து கொண்டே இருப்போம் என்று எலிகளுக்கு தெரியாதா?. நல்ல வேளை, இதுவரை என்னுடன் எந்த எலியும் வீட்டுக்கு வரவில்லை. நம்முடன் ரயில்வேயும் வளர்ந்து கொண்டே இருக்கிறது சார்! - அதான் சமீபத்தில் பீகாரில் ஒரு ரயிலில் மலைப்பாம்பு வந்திருக்கிறதே! ஒரே ஒரு முறை இதை போய்  பெரிது படுத்துகிறாயே என்று சிலர் கோபிக்கலாம்...எலி கூட பல ஆண்டுகளுக்கு முன் முதல் முறையாக ரயிலில் நுழைந்திருக்கக்கூடும் என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும்...

நடைபாதை அருகில் இருக்கும் இருக்கையில் உள்ளவர்கள் கூடுதல் "இடி" தாங்க வேண்டும். நாட்டியப் பயிற்சியை நடுவிலே கைவிட்டது போல் இடையையும் நடையையும் வைத்திருக்கும் சிலர், அவற்றின் சில "முத்திரை" களை நம் மேல் "இடித்து" அபிநயம் பிடிப்பர். பல மணி நேர ரயில் பயணத்தில் பத்து நிமிடம் தூங்குவதற்குள் எத்தனை சிக்கல்கள் ஏகாம்பரனே !

குறட்டை நம் பேச்சை கேட்டா வருகிறது? அதிலும் ஓங்காரத்தை ஓராயிரம் வகையில் வெளிப்படுத்தும் எத்தனை விதமான குறட்டைகள்! குயிலுக்கு தொண்டை கட்டியது போல் சில மென்மையும்  கரகரப்பும் சேர்ந்து இருக்கும்...பேருந்தை, bus stand சேர்ந்ததும் டிரைவர் "off" செய்யும் பொழுது "air" release ஆவது போல் சிலர் "ஸ்ஸ்" என்று அதிக சத்தத்துடன் துவங்கி மெதுவாய் குறைந்து நிறைப்பது போல் என்று குறட்டை விடுவார்கள்.... இரண்டு ஆண் சிங்கங்கள் நேரெதிர் பார்த்து கொண்டால் ஒரு கர்ஜனை வருமே...அது போல் சில...அடி பம்பில் 
தண்ணீர் "tight" ஆக இருந்து, மெதுவாக அடித்தால் "ஷ்ஷ்" என்று சத்தம் வருமே...அது போல சில...எத்தனை வகை குறட்டைகள்! சமீபத்தில் ஒருவர், ஆற்று பாலத்தின் மேல் ரயில் போகையில் வரும் வித்தியாசமான சத்தத்திற்கு ஏற்ற தாளக்கட்டில் ஒருவர் "ஏறி இறங்கி" குறட்டை ஒலி எழுப்பிக்கொண்டிருந்தார்...கைகுலுக்கி பாராட்ட வேண்டும் போல இருந்தது...

பொருட்களுக்கு ISO தர நிர்ணயம் போல சில மனிதர்களுக்கும் நாம் கொடுக்க வேண்டும் சார்...இவர்களில் சிலருடன் நாம் பயணம் செய்யும் பாக்கியம் கிட்டியிருக்கும்...இவர்கள், டக்கென்று "berth" ஏறி படுத்து விட மாட்டார்கள். முதலில் "சுத்தம்" குறித்து "test" செய்வார்கள். இதற்கெனவே வீட்டிலிருந்து ஒரு பழைய பேப்பர் எடுத்து வந்திருப்பார்கள் .அதை அப்படியே பயன்படுத்தினால் பேப்பர் வேஸ்ட் ஆகிவிடும் என்பதால் அதை கிழித்து, ஒரு சிறு பகுதியை கொண்டு "berth" மேல் தேய் தேய் என்று தேய்ப்பார்கள். நமக்கோ "berth" cushion கரைந்து விடுமோ என்று கவலையாக இருக்கும். வெள்ளை கலர் பேப்பர் பழுப்பு நிறமாக மாறினால்தான் அவர்களுக்கு திருப்தி. ரயில்வேயை நாலு வார்த்தை நாசூக்காக திட்டியபின் அழுக்கு பேப்பரை வெளியே போட்டு விட்டு berth ஏறி படுத்தால்தான் இவர்களுக்கு தூக்கம் வரும். இதை பார்த்து பாடம் படித்த நம்மில் பலருக்கு அடுத்த முறை பேப்பர் எடுத்து வர வேண்டும் என்று தோன்றும். ஆனால், ஒவ்வொரு முறையும் தோன்றுவதோடு சரி.
இதையெல்லாம் ரசிக்கும் பொழுது, முதல் பத்தியில் சொன்ன காற்று நம் கண்களின் மேல் பிளாஸ்திரி ஒட்டுவது போல தூக்கம் கொடுக்கும்...அப்புறமென்ன...ஓராயிரம் குறட்டை வகைகளில் நமக்கென்று இருக்கும் ஒன்றை தேர்ந்தெடுத்து, தூங்க வேண்டியதுதான்...

பி.கு :

போன வாரம் சித்தர் பற்றி சொல்லிவிட்டு அப்படியே விட்டால் எப்படி? என்று தோன்றலாம்...எதையாவது அப்படியே விடும் பழக்கும் நமக்கு உண்டா? சித்தர் புத்தகங்கள் எல்லாம் "டிரங்கு பெட்டி"யில் போட்டு பரணில் போடுவதுதான் சார் ஊர் வழக்கம். ஆமாம், பரண் இருக்கும் வீடுகள் இப்போது எங்கு இருக்கிறது? வீடே பரண் மாதிரியல்லவா இருக்கிறது என்று கேட்கிறீர்களா? அதுவும் சரிதான்.
சொல்ல முடியாது...காலம் போகும் போக்கில் "millennium சித்தர்" [இப்போதெல்லாம் எந்த பெயரும் modern ஆக இருந்தால்தான் நமக்கு ருசிக்கிறது...] என்று தனக்குத்  தானே  பெயர் வைத்து கொண்ட எவரேனும் "கைகொள்ளா பணம் சேர்த்து கணக்கில்லா இன்பம் பார்த்து 
நோகாமல் நொங்கு தின்று வாழ்ந்திருப்பது எக்காலம்?"
என்று பாடினாலும் பாடலாம். ஆஹா! நமக்கும் காலத்துக்கும்  பொருத்தமாக இருக்கிறதே என்று இவர் பின் நாம் சுற்றினாலும் சுற்றலாம்...!

Saturday, May 19, 2012

ரயிலில் பயணம் செய்வது எப்படி - பகுதி 4

ரயிலும் பேருந்திலும் உட்கார்ந்தபடி தூங்கும் நம்மில் பலர், சித்தர்களின் சீடர்கள் என்பதை நாம் அறிவோமா? "அதிர்ச்சி தரும் தகவலை அள்ளி வீசுகிறானே இவன்" என்று ஆர்வமாக  இருக்கிறதா? மேலும் படியுங்கள்...நம்மில் பலருக்கு பல விஷயங்களிலும் பாதி கிணறு தாண்டுவதுதான் பழக்கம். மீதி கிணறை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் அல்லது வேறு எவரேனும் தாண்டட்டும் என்ற "விவேகம்" நமக்குண்டு.அதுமட்டுமல்ல - கிணற்றின் எந்த பாதியை நாம் தாண்டலாம் என்று சமயோசிதமாக யோசிக்க தெரிந்த கில்லாடிகள் நாம்."என்னய்யா நீ? ரயில் பயணம், கிணறு, சித்தர் என்று சம்பந்த சம்பந்தமில்லாமல் எதையோ எழுதுகிறாய்" என்று கேட்கத் தோன்றுகிறது இல்லையா? சம்பந்தப் படுத்துவோம் வாருங்கள்....

முன் குறிப்பு: தயவு செய்து பின் குறிப்பை இப்போதே படித்து விட்டு மீண்டும் இங்கு வரவும்.

பட்டினத்தார் பற்றி நாம் அறிந்திருப்போம். இவரின் சிஷ்யர் "பத்திரகிரியார்" (பெயர்களை தங்கள் விருப்பத்திற்கேற்ப சுருக்கி அழைக்கும் IT / SOFTWARE தலைமுறை, இவரை "Pat" என்று அழைக்காமல் இருக்க  பிராத்திப்போம்.). "மெய்ஞான புலம்பல்" என்ற தலைப்பில் "எக்காலம்?" என்று முடிவது போல் ஏராளமான பாடல்களில் ஞானம் வேண்டி புலம்பியிருக்கிறார்! இவரின் முதல் பாட்டே நம் மூச்சை திணறடிக்கும். "ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனை சுட்டெரித்து தூங்காமல் தூங்கிச்  சுகம் பெறுவது எக்காலம்?" என்று ஆரம்பிக்கிறார் இவர்.

என்ன சார் இது? ஆங்காரம் என்பதே வெளிக்காட்டத்தானே இருக்கிறது? வெளியே காட்டினால்தானே அது ஆங்காரம்...அப்புறம் எதற்கு உள்ளடக்க வேண்டும் என்று நாம் கேட்போம். ஐம்புலனை சுட்டெரிப்பதா? அட போங்க சார்...ஐம்புலனும் ஜம்மென்று இருக்க கலியுகத்தில் எத்தனை கண்டுபிடிப்புகள்? ஒவ்வொரு புலனுக்கும் தீனி போட எத்தனை கூத்துக்கள் ஊரெங்கும் பொங்கி வழிகிறது....புலன்களுக்கு மகிழ்ச்சி ஊட்டி பூரித்து பொழுதை போக்கத்தானே நாம் பிறந்தே இருக்கிறோம்?
ஐம்புலனை சுட்டெரித்து விட்டு நாம் என்ன செய்வது? என்றெல்லாம் நமக்கு கேள்வி கேட்கத் தெரியாதா என்ன? பணத்தினால் பண்பையும் பண்பினால் பணத்தையும் இந்த இரண்டினால் நம் வாழ்வின் பொருளையும் ஒரே நேரத்தில் அசிங்கப்படுத்தும் கோமாளித்தனத்தில் நாம் ஈடுபட்டிருப்பதே புலன்களை மகிழ்விக்கத்தானே? பாதிக்கிணறு, எந்த பாதி என்பதெல்லாம் இப்போது தெளிவாகியிருக்கும்... இனி மிச்சப்பிருப்பது என்ன? - "தூங்காமல் தூங்கி சுகம் பெறுதல்". ஒன்றை நமக்குத் தகுந்தபடி வாசிப்பதிலும் யோசிப்பதிலும் நாம் சளைத்தவர்களா என்ன? "தூங்காமல் தூங்கி சுகம் பெறுதல்" ஆஹா... சொல்லும் பொழுதே என்னே ஒரு இன்பம்...

முன்னர் சொன்ன சீடர்களான நம் அனைவருக்கும் ஒரே கொண்டாட்டம்...பத்திரகிரியார் நம் ஆள் சார்...எப்படி நம் கஷ்டத்தை அந்நாளிலேயே தீர்க்க தரிசனத்துடன் பாடியிருக்கிறார் என்று சிலிர்த்து போய் சீடர்களாகி, இந்த "தூங்காமல் தூங்கி..." வரியை நமக்கேற்றவாறு புரிந்து கொண்டால் போயிற்று...! பயணத்தில் தூங்குபவர்களை கிண்டல் செய்கிறாயா என்று கோபம் கொள்ளாதீர்கள். ரயிலில் அமர்ந்தபடி தூங்குவதற்கு தனி திறமை வேண்டும் என்பதை புரிந்து கொள்வோம்!

முதலில் கால் நீட்ட இடம் வேண்டும். நினைத்தவுடன் நீட்டுவதற்கு எதிர் இருக்கையில் ஒரு ஏமாளி வேண்டும். இல்லையென்றால் அவர் எல்லைக்குள் நாம் அத்து மீறியதற்கு முறைப்பார். இருக்கவே இருக்கிறது "ஆழம் பார்க்காமல் காலை விடாதே" முன்னோர் மொழி. அதன்படி, முதலில் காலை மெதுவாக நகர்த்தி எதிர் இருக்கையின் கீழே வைக்கப்பட்டிருக்கும் பெட்டி பைகளை சாமர்த்தியமாக ஒரு நிமிடத்திற்கு ஒரு inch வீதம் வேறு பக்கம் இடம்பெயர வைக்க வேண்டும். "Pothys", "Saravana Stores" பை வகைகள் கவிழாதவாறு நகர்த்திடல் நலம். இப்போது கால் நன்றாகவே நீட்டிக் கொள்ளலாம்.

இடத்தை கொடுத்தால் மடத்தை பிடிப்பதுதானே நம் அடுத்த வேலை?அண்டவெளியில் கண்டபடி திரியும் கட்டுக்கடங்காத காலப்ரவாகத்தில்  நமக்கு பிடித்தமான நொடி ஒன்றில் சட்டென்று காலைத் தூக்கி எதிர் இருக்கை மேல் வைத்து விட வேண்டும். மெத்தபடித்த மேதாவி நீங்கள் என்றால் போட்டுக்கொண்டிருக்கும் shoe / செருப்பு கழற்றாமல் இவ்வாறு செய்தால் நீங்கள் நாகரீக படிக்கட்டில் எத்தனையாவது தட்டில் குடி கொண்டிருக்கிறீர்கள் என்பதை சகபயணிகள் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். இன்னும் சிலர், இது போதாதென்று காலை வேறு ஆட்டி கடுப்பேற்றுவார்கள். 

அரைகுறை படுக்கை "pose" உதவியுடன் அற்புதமாக அமர்ந்தாயிற்று. அடுத்து என்ன? தூங்க வேண்டியதுதான்..."ஏங்க? நாம என்னிக்கு ரயிலில் சும்மா தூங்கியிருக்கோம்" என்ற கேள்வி நம் மனதில் எழும். தூங்கும் போதும் நாம் செய்யும் தொந்தரவுகள் என்ன என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.

பின் குறிப்பு:

(i)இது போன்ற சாதாரண பதிவுக்கு சித்தர் பாடலை பயன்படுத்த மனசாட்சி உறுத்துகிறது. ஆறேழு வரியேனும் அடிமனதிலிருந்து எழுதினால்தான் சற்றேனும் நிம்மதி கிட்டும். சில புத்தகங்கள் மேலோட்டமாக ருசிக்கும். சில , படித்தால் அறிவுக்கு பசிக்கும். சில, படித்து முடித்து பலகாலம் ஆனாலும் நம்மோடு வசிக்கும். சில , நம்மையே புசிக்கும்...இவற்றையெல்லாம் கடந்து, வருடக்கணக்கில் படித்தாலும் விளங்காமல், ஒவ்வொரு முறை படிக்கையிலும் நம்மை இன்னும் சற்று ஆழத்தில் இறக்கி விடுவது போல்...வாழ்க்கை முழுதும், ஏதோ ஒரு அனுபவத்தில், எதிர்பாராமல் பொருள் விளங்கும் சித்தர் பாடல்கள்தான் எத்தனை எத்தனை....இதற்குள் அடங்காமல் இருக்கும்  பல வரிகள் புரியவே நாம் பல முறை பிறக்க வேண்டியிருக்குமோ? இவர்கள் யார்? எப்படி இத்தகைய சிந்தனைகள் இவர்களுக்குள் தோன்றின? எதை கடைந்து கடைந்து இவர்கள் இப்படிப்பட்ட அமுதம் எடுத்தார்கள்? இவர்கள் இருந்தது தமிழ் நாடு என்று வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.

(ii)"பழனி"க்கு பல நூற்றாண்டுகளுக்கு முன் "சித்தன் வாழ்வு" என்று பெயர் இருந்தது. ஊரின் பெயரில் கூட தொன்மங்களை தோய்த்து எடுக்கும் பக்குவம் எத்தனை நாடுகளில் பார்க்க முடியும்? அர்த்தமில்லாமல் ஊரின் பெயர்களை மாற்றிக் கொண்டிருக்கிறோமே...ஒரு மாறுதலுக்கு ஏன்  நாம் பழனியை மீண்டும் "சித்தன் வாழ்வு" என்று அழைக்கக்கூடாது? யோசித்து பாருங்கள் எப்படி இருக்குமென்று..."நான் சித்தன் வாழ்வுக்கு சென்று வருகிறேன்" என்போம்....ரயிலும் பேருந்திலும் "டிக்கெட்" எடுப்பவர்கள் "எனக்கு சித்தன் வாழ்வு ஒன்று கொடுங்கள்" என்பார்கள்...நம் பேச்சே ஞானத்துக்கு ஏங்கும் வேண்டுதல் போல இருக்குமே!




Sunday, May 13, 2012

ரயிலில் பயணம் செய்வது எப்படி - பகுதி 3

பகல் நேர ரயில் பயணம் என்பது, வீட்டின் விட்டத்தில் இருக்கும் பல்லி நம் மேல் விழுந்து விடுமோ என்று நிலைகொள்ளாமல் அமர்ந்து இருப்பதை போன்றது. அதிலும் மூன்று பேர் அமரும் இருக்கையில் இரண்டு பேருக்கு நடுவில் அமர, ஏவிஎம் சரவணன் எப்போதும் காட்டும் "மரியாதை" pose மட்டுமே கைக்கொடுக்கும். நம்மை பார்ப்பதற்கு கைகட்டி மரியாதையாக உட்கார்ந்திருப்பது போல இருந்தாலும் நடு இருக்கையில் அமர்ந்திருக்கையில் நம் முழங்கைகொண்டு அடுத்தவரை இடிப்பதன் மூலம் நம் இருக்கை பிரதேச எல்லைகளை மெளனமாக கைப்பற்றலாம். மூன்று பேருக்கு இடையில் இந்த  எல்லைச் சிக்கல், பிரயாணம் முழுதும் அடுத்தவர் அறியாதபடி தொடர்ந்து கொண்டிருக்கும். நடுவில் நாம் தெரியாமல் இடித்தது போல் அவ்வபொழுது "sorry" சொல்லிவிட வேண்டும். நாகரீகம் தெரியாதவர்களா சார் நாம்? 

அந்த காலத்தில் "தர்க்க சாஸ்திரம்" என்று ஒன்று உண்டு. அரசனுக்கு பொழுது போக வில்லை என்றால் இந்த தர்க்க சாஸ்திர "நிபுணர்களை" வரவழைத்து வாக்குவாதம் செய்யச் சொல்வார் (அதாவது இருவரை வம்புக்கு இழுத்து வேடிக்கை பார்ப்பார்). இந்த தர்க்க சாஸ்திரம் நம் உதிரத்தில் அப்படியே ஊறி விட்டது போலும். அதனால் தான் நமக்கு வம்பு பேசுவதும், வாய்ச்சண்டை போடுவதும், தேனில் ஊறிய பலா தின்பது போல இனிக்கிறது. ரயில் பெட்டிகளில், இந்தக்கால தர்க சாஸ்திர நிபுணர்கள் எப்போதுடா நமக்கு வேலை வரும் என்று ஆவலுடன் அமர்ந்திருப்பர். சமீபத்தில் சென்னையிலிருந்து பெங்களுருக்கு மதியம் வந்து கொண்டிருந்தேன். சுத்த போர் என்று நினைத்திருந்த வெய்யில் வாட்டிய பயணம், ஆம்பூர் தாண்டியதும் அக்கப்போர் ஆரம்பித்து சுவை கூட்டியது. மூன்று இருக்கை முன்னே இருந்த நபர் ஒருவர் போண்டா உட்கொள்ளத் துவங்கினார். "ஏண்டா நாம் போண்டா வாங்கினோம்..." என்று அவர் அரைமணி நேரத்தில் நொந்து போக போகிறார் என்று அப்போது அவருக்கும் தெரியாது நமக்கும் தெரியாது.

காற்றடித்தால் கவிழ்ந்து விடும் அபாயமுள்ள கனமற்ற பேப்பர் ப்ளேட்டில் ஆண்டாண்டு காலமாக போண்டா தருகிறது railway catering. ரயிலின் ஆட்டத்திற்கேற்ப ஆறாக ஓடும் சட்னியும் உண்டு. நம் போண்டா நண்பரும் அருகில் அமர்ந்திருந்த நபரும் திடீரென்று எழுந்து நின்றனர். படித்து கொண்டிருந்த, வேடிக்கை பார்த்து கொண்டிருந்த  அனைவரும் (ஊரோடு ஒத்து வாழ வேண்டும் இல்லையா? எனவே நானும் சேர்த்தி) ஓசியில் ஒரு சண்டை படம் நமக்காக தயாராகிறது என்ற மகிழ்ச்சியுடன் கண்ணையும் காதையும் தீட்டி கொண்டோம். விஷயம் இதுதான்: போண்டாவுடன் மட்டுமே உறவாட வேண்டிய சட்னி, பக்கத்தில் இருந்தவரின் சட்டை மேல் பற்று கொண்டு விட்டது! விடுவாரா சட்டையின் உரிமையாளர்?

ஓடும் ரயிலின் இரைச்சலில் இது போன்ற சண்டைகளை தெளிவாக காதுக்குள் வாங்குவது லேசுப்பட்ட காரியம் இல்லை. அதற்கென்ன தனி பயிற்சி வேண்டும். எழுந்து நின்று வேடிக்கை பார்ப்பதை decency தடுக்கும். என்ன சண்டை என்ற ஆர்வம் மண்டையை பிளக்கும். பாவம்தானே நாம்? இது போன்ற இரண்டும்கெட்டான் நிலைமை சிலருக்கு இல்லை. அப்படித்தான், கதவருகில் காற்று வாங்க நின்றிருந்த  இருவர், "அங்க ஏதோ சண்டை போல வா போய் பார்க்கலாம்" என்று என்னை கடந்து சென்றனர். நமக்குத்தான் என்னே ஒரு சமூக அக்கறை!  நமக்கெல்லாம், இது போன்று, நேரிடையாக சண்டையை ரசிப்பது கௌரவ குறைச்சல் இல்லையா? எனவே கண்டும் காணாதது போல் சுற்றி நடப்பதை உற்று நோக்க  வேண்டும். நடித்து நடித்து தானே நாம் நாகரீக கனவான்களாக வலம் வருகிறோம் வளமும் பெறுகிறோம் ...என்ன சொல்கிறீர்கள்?

சண்டைக்கான முஸ்தீபுகள் மும்முரமாக இருக்க, பெட்டியின் கடைசியிலிருந்து ஒருவர் "விடுங்கப்பா இன்னும் கொஞ்ச நேரம்... எல்லாரும் அவங்க அவங்க  வேலைய பார்க்கப்போறோம்...இதுக்கெல்லாம் போய் சண்டை போட்டுட்டு..." என்று சொல்லியபடி எழுந்து வந்தார். எப்படி சார் நம் நாட்டில் ஊருக்கு உழைப்பவர்கள் அனைவருமே பேருந்திலோ ரயிலிலோ கடைசி இருக்கையிலிருந்து குரல் கொடுக்கிறார்கள்? இதன் பின்னணி என்ன என்று சரித்திர ஆர்வலர்கள் உற்று நோக்க வேண்டும் அல்லது நமக்குத்தான் கண்டதுக்கு எல்லாம் கமிஷன் வைத்து விசாரிப்பது வழக்கமே...இதற்கும் ஒன்று போட்டால் போயிற்று..."தமிழனை பார்த்தால் worldடே ஏன் நடுங்குது தெரியுமா?" என்று விவேக் ஒரு படத்தில் கேட்பார். அதன் அர்த்தம் அன்று பெட்டியில் இருந்தவர்களுக்கும் முக்கியமாக, அந்த ஊருக்கு நல்லது சொல்லும் உத்தமருக்கும் புரிந்திருக்கும்.உங்களுக்கும் தொடர்ந்து படித்தால் தெரிந்து விடும்...

போண்டாவும் சட்டையும் கோதாவில் இறங்க, அருகில் இருந்தவர்கள் மூல காரணத்தை கண்டறியும் ஆராய்ச்சியில் இறங்கினர். ஒருவர் "பேப்பர் plate கொஞ்சம் பெரிதாய் தரலாம்" என்றார். "பெரிதாய் தந்தால்  அதற்கும் அதிகம் காசு கேட்பர்" என்றார் மற்றொருவர். "வெறும் போண்டா போதுமே சார் எதுக்கு சட்னி" என்றார் சட்னி எதிரி ஒருவர். "போண்டாவை விட சட்னி நன்றாக இருக்கிறது" என்றார் இன்னொருவர். குறுநில மன்னர்களின் சண்டைகள் போல சிறு சிறு குழுக்களாய் வாக்குவாதம் வகை வகையாய் தொடர்ந்தது. நாம் "main show" status பார்க்கலாம்...ஊருக்கு உழைப்பவரின் கெட்ட  நேரம், அவர் பேச்சில் சனி bench போட்டு உட்கார்ந்திருந்தது போலும்."சட்டைதானே...தோய்த்தால் போய்  விடும்" என்று சனி தன் பணி செய்தது. சட்டைக்கரருக்கு வந்ததே கோவம்..."உங்க  சட்டையிலே விழுந்தா விட்ருவீங்களா" என்று ஆரம்பித்தது அடுத்த ரவுண்டு. காரணகர்த்தாவான  போண்டாகாரரோ இப்போது தனகென்ன  வந்தது என்று "நாணயம் விகடன்" படித்து கொண்டிருந்தார்...(எனக்கெப்படி தெரியும் என்கிறீர்களா? இது போன்ற சண்டைகளின் பொது அவ்வபொழுது வேறு வேலையாக போவது போல் சண்டை நடக்கும் இடத்தைத் தாண்டி சென்று வர வேண்டும் என்பது "பொது"அறிவு இல்லையா?.). பாவம் நம் பரோபகாரி நண்பர். போண்டா சண்டை தீர்க்கப் போய் அல்வா சாப்பிடும் அவல நிலை தோன்றிய  அதிர்ச்சி. நமக்கும்தான். சும்மா விடுமா தமிழ் வீரம்?
இன்னும் சிலர் அல்வாவில் தங்களுக்கும் பங்கு கேட்கும் ஆவலுடன் "என்ன சார்? கொட்டினது அவர். இவரோட  சண்டை போடுறீங்க" என்று நியாயம் உரைக்க, நம் சட்டசபைகளில் நிலவும் "கூச்சலும் குழப்பமும்" இங்கும் உலவியது. இதன் உச்சக்கட்ட காமெடி ஒரு மணி நேரம் கழித்து நடந்தது...குப்பம் station தாண்டியபோது போண்டாவும் சட்டையும் "tomato soup" குடித்தபடி இடைதேர்தலில் captain களமிறங்குவது பற்றி உரையாடல் செய்து கொண்டிருந்தனர். உள்ளம் கொதிக்க,  கடைசி இருக்கைக்காரர் என்ன செய்கிறார் என்று பார்க்கும்  உணர்வு துடிக்க அங்கு சென்றால், "எவனுக்கும் உதவி செய்ய போகக்கூடாது அவனுங்க சேர்ந்து நம்பள நடுவுல மாட்டி விட்ருவாங்க " என்று பக்கத்து மனிதரிடம் பொங்கிக் கொண்டிருந்தார் நம் பொதுநல விரும்பி ....

நான் ரயில் விட்டு இறங்கும் போது, தமிழ் கூறும் நல்லுலகில் நிம்மதியாய் பயணம் செய்ய இரண்டு முடிவுகள் எடுத்தேன்:

(i) நீர்த்தன்மை உள்ளவற்றை ஊர் சேரும் வரை வாங்கக் கூடாது. வாங்கினால், ரயில் ஓடும் லயத்திற்கேற்ப நாம் ஆடும் கலை பயில வேண்டும். 

(ii) கலிகாலத்தில், நீதிக்குரல் எழுப்பினால் பாதிப்புகள் நமக்குத்தான் என்று உணர்ந்து நம் வாயை மூடிக்கொண்டு பயணம் செய்ய வேண்டும். இல்லையேல் இருக்கவோ இருக்கிறது பாரதத்தின் பரம்பரை பொழுதுபோக்கு - நாடு இருக்கும் அவலம், நீதி நேர்மை போன்றவை காணாமல் போனது என்று பக்கத்தில் இருப்பவருடன் உரையாடி மகிழ்வது - நாம் காந்தி போல நடித்தால் பக்கத்தில் இருப்பவர் காமராஜர் போல் நடிப்பார்; நாம் நேதாஜி போல நடித்தால் அவர் படேல் போல வெடிப்பார்; நன்றாய் பொழுது போகும். இறங்கும் இடம் வந்தவுடன், நீதி, நேர்மை ஆகியவை இன்று குடியிருக்கும்  குப்பைத்தொட்டியில் நம் "யோக்கியன்" நடிப்பையும் வீசிவிட்டு வீட்டுக்கு போய் நம் வேலையை கவனிப்பது நமக்கு கைவந்த கலைதானே...

கக்கன் போன்ற நேர்மையாளரை  கவர்மென்ட் ஆஸ்பத்திரி கட்டாந்தரையில் படுக்க வைத்து வேடிக்கை பார்த்த  பெருமைமிகு நாட்டில் வாழும் நாம்  வேறு எப்படி திரிவோம்?






Sunday, May 6, 2012

மதுரை தேரோட்டம்...மக்கள் பெருங்கூட்டம்...

"ஊரே விழாக்கோலம் பூண்டது" என்னும் வரியின் அர்த்தத்தை நம் கண்களுக்கு  காட்ட நம்மிடம் மீதமிருக்கும்  மிகச்சில விழாக்களில் மதுரை சித்திரை திருவிழா தேரோட்டமும் ஒன்று. "சாப்பிடாச்சா?" என்று கேட்டே வருடம் முழுவதும் மற்றவருடன் உரையாடலை துவங்கும் நம் மக்கள், சித்திரை திருவிழா போது மட்டும் "சாமி பார்த்தாச்சா?" என்ற கேள்வியுடனே பேசத்துவங்குவர். சுடும் அடுப்புக்குள் கைவைத்தது போல் கொதிக்கும் சித்திரை வெய்யிலில் அம்மாவின் இடுப்பில் அமர்ந்து பார்த்த முதல் தேர், ஒவ்வொரு தேர் பொழுதிலும் வந்து போகும் நினைவின் தடிப்பு.

மதுரையில் மீனாட்சிக்குத்தான் மவுசு. சுந்தரேஸ்வரர், நம் ஜனாதிபதி பதவி போல...பேசாமல் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருப்பதுதான் வேலை. அதிகாலை 4 மணிக்கெல்லாம் தேர இழுக்க கூட்டம் சேரத்துவங்கி விடும். மதுரையில் மொட்டுவிட்டவர்களில் எவரேனும் ஒருமுறையேனும் தேர் இழுக்காமல் மலர்ந்திருப்பார்களா என்பது சந்தேகமே...முட்டிமோதும் கூட்டத்திற்கு நடுவே வடத்தில் நம் கைப்படவே பெருமுயற்சி தேவைப்படும். கடவுள் விருப்பு - மறுப்பு போன்றவற்றிற்கு அப்பாற்பட்டு, தேர் இழுக்கும் அனுபவம் நமக்கு உற்சாகத் தேன் ஊட்டும் பரவசம். "தேர் கிளம்பியாச்சா?" என்று நோட்டம் பார்க்க கதிரவன் தெருக்களின் உள்ளே லேசாக தலை நீட்டுகையில் தேர் நகரத்துவங்கியிருக்கும்.

தேர் வரும் தெருக்கள் எங்கும் இருமருங்கிலும் கூடியிருக்கும் மக்களின் தன்மைகளில், "தேருக்கு reverse gear உண்டாப்பா?" என்று கேட்கும் "international school"  சிறுவன், "எத்தன தேர் பார்த்து என்ன? என் பொழப்பு "நிலை"க்கு வந்த  பாடில்ல" என்று வருந்தும் கிராமத்து முதியவர், பக்கத்து வீட்டு சிக்கல்களை அத்தனை நெரிசலிலும் பாங்குடன் பகிர்ந்து கொள்ளும் பெண்கள் என சமூக சல்லடையில் சலிக்க வேண்டிய சொற்கள் கேட்கும்... பக்கத்து flat நபர்களின் பெயர் தெரியாமலோ பெயரளவில் பழகியோ நகரும் நகரத்து இயந்திரமான நமக்கு, தெருக்களில் பார்ப்போர் அனைவருக்கும் நீர்மோர் தரும் மக்களை பார்த்து தலையில் ஏதோ ஒன்று குட்டியது போல இருக்கும் (இருந்தாக வேண்டும்?). கால மாற்றத்திற்கு ஏற்ப நீர் மோருடன் இந்த வருடம் "rose milk" "cup ice" என்று  விருந்தோம்பல் ரகளை செய்த  நம்மூர்க்காரர்கள். "மதுரைக்காரைங்க பாசக்கார பயபுள்ளைங்க" என்பது திரைப்படத்திற்காக மட்டும் பேசப்பட்ட  வசனம் அல்ல என்பதை நடைமுறையில் காட்டிக் கொண்டிருந்தனர்.

அக்கால உப்பரிகையின் இக்கால வடிவமான "balcony" இலிருந்து அந்தந்த வீடு ராஜா ராணிகள் இளவரச இளவரசிகள் தேர் வருகை எதிர்பார்த்து தெருக்களை பார்த்திருப்பர். அம்மனை பார்க்க வந்தாலும் அகவையின் உந்துதல் காரணமாக சில இளைஞர்களின் அரைகுறை பார்வை இந்த இளவரசிகளின் மேல் பதிந்து திரும்பும். சிலர்"தர்ம அடியும்" சிலர் "கர்ம அடியும்" (அதான் காதல்...கல்யாணம்...வகையாறா சார்) இதன் மூலம் வாங்கும் வாய்ப்புண்டு. இந்த களேபரங்களுக்கு இடையில் "டும் டும் மாடு" கடந்து போனால் தேர் அருகில் வந்து விட்டது என்று பொருள். "எப்படியடா நாம் நமக்கு சம்பந்தமே இல்லாத இப்படி ஒரு இடத்தில் நடந்து கொண்டிருக்கிறோம்" என்ற யோசனையுடனும், அதற்கே உரிய "வாசனை"யுடனும் இரண்டு ஒட்டகங்கள் தமது உலகத்தில் மெதுவாக நடந்து போகும். தங்கமும் வெள்ளியும் நமக்குத்தான் சொந்தமா என்ன? எங்கள் ஊர் யானை கொலுசொலி தரும் நயத்துடன் நடந்து போகும் அழகை இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள வீடியோ இணைப்பில் கண்டு களியுங்கள். "இன்னிக்கு ஒரு நாளாவது யோக்கியமா இருக்க பாருங்கப்பா மனுச மிருகங்களா" என்று அங்கிட்டும் இங்கிட்டுமாய் நம்மை பார்த்தபடி கம்பீரமாய் நம்மை கடக்கும் யானை.

அந்தக்காலத்தில், தலைவி தன் தலைவனை முதல் முறை பார்க்கையில் மறைந்திருந்து முகம் மட்டும் நீட்டி எட்டிப்பார்க்கும் தோரனையை வர்ணிக்கும் சங்கப்பாடல்களில் வருவது போல நம் தேர் நான்கு மாசி வீதி முனைகளிலும் தன் தலையை லேசாக காட்டியபடி மெதுவாக திரும்பும். "மீனாட்சி சுந்தரர்..." பேரொலி தெரு முழுதும் ஒலிக்க நகர்ந்து வரும் அந்த  பிரமாண்டமான முப்பரிமாண சித்திரம், வடம் பிடிக்கும் நூற்றுக்கணக்கானோர் கரங்கள் வரைந்து மிளிரும் எழில்மிகு ஓவியம்!

எங்கள் அனைவரையும் வெவ்வெறு வெளியூர்களில் மறுபதியன் செய்து விட்டு, ஞாபக அஸ்திவாரங்களின் அசுர பலத்துடன் அரைநூற்றாண்டு கடந்து அமர்ந்திருக்கும் எங்கள் வீடு இருப்பது "வடம் போக்கித் தெரு". தெருவின்  பெயர் காரணம், விளக்கம் தேவையின்றி அனைவருக்கும் விளங்கி விடும்.இறையுண்ட மலைப்பாம்பு போல அசையாது கிடக்கும் வடங்களை எங்கள் தெருவுக்குள் பாம்பின் வால் பிடித்து இழுப்பது போல் இழுத்து தேரைத் திருப்பும் engineering பல நூற்றாண்டுகள் கடந்தது! எங்கள் வீடிருக்கும் இடத்தின் கீழிருக்கும் மண் மேல் ஏதோ ஒரு அரசனின் பரிவாரங்கள் தேர் இழுத்த  சோர்வு போக  உட்கார்ந்து இளைப்பாறி இருக்கக்கூடும்...ஏன்? அரசனே கூட நின்று தேர் பார்க்க வந்தவர்களை வரவேற்றிருக்கக் கூடும்! சரித்திரத்தின் சாறு, தேர் போகும் தினத்தில் எங்கள் தெருவில் ஊற்றெடுத்து ஓடுவது போல் ஆண்டு தோறும் தோன்றும் எனக்கு.

இந்த மாபெரும் மக்கள் திருவிழாவில் நாம் பெரும்பாலும் மறந்து போவது, எவர் கண்ணுக்கும் தெரியாமல், இரண்டு ஆள் உயர சக்கரங்களின் அடியில், "கட்டை" போடும் மனிதர்களை... ஒரு நொடி தாமதமோ ஒரு நொடி அவசரமோ இரண்டுமே தேரின் போக்கையே குலைத்து விடும் என்ற ஆபத்தில், coordination என்பதன் செயல் விளக்கமாய் திகழும் இவர்களுக்கு  இப்பதிவை சமர்ப்பிப்போம்.

சில ஆண்டுகளுக்கு முன் தேரோட்டம் பார்க்க காத்திருந்த போது தோன்றிய "தேரோட்டம்" கவிதை படிக்க இங்கே செல்லவும்:

http://kumarankrishnan.blogspot.in/2012/05/blog-post.html

மக்களின் பார்வையில் தேர் பார்க்க :

www.youtube.com/watch?v=9hW7DBiJMso

பின் குறிப்பு: ரயிலில்இரண்டு வாரங்களாய் சென்று கொண்டிருந்த நாம், தேர் பார்க்க இந்த வாரம் மதுரையில் இறங்கிய காரணத்தால் மீண்டும் அடுத்த வாரம் ரயிலேருவோம்.