"ஊரே விழாக்கோலம் பூண்டது" என்னும் வரியின் அர்த்தத்தை நம் கண்களுக்கு காட்ட நம்மிடம் மீதமிருக்கும் மிகச்சில விழாக்களில் மதுரை சித்திரை திருவிழா தேரோட்டமும் ஒன்று. "சாப்பிடாச்சா?" என்று கேட்டே வருடம் முழுவதும் மற்றவருடன் உரையாடலை துவங்கும் நம் மக்கள், சித்திரை திருவிழா போது மட்டும் "சாமி பார்த்தாச்சா?" என்ற கேள்வியுடனே பேசத்துவங்குவர். சுடும் அடுப்புக்குள் கைவைத்தது போல் கொதிக்கும் சித்திரை வெய்யிலில் அம்மாவின் இடுப்பில் அமர்ந்து பார்த்த முதல் தேர், ஒவ்வொரு தேர் பொழுதிலும் வந்து போகும் நினைவின் தடிப்பு.
மதுரையில் மீனாட்சிக்குத்தான் மவுசு. சுந்தரேஸ்வரர், நம் ஜனாதிபதி பதவி போல...பேசாமல் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருப்பதுதான் வேலை. அதிகாலை 4 மணிக்கெல்லாம் தேர இழுக்க கூட்டம் சேரத்துவங்கி விடும். மதுரையில் மொட்டுவிட்டவர்களில் எவரேனும் ஒருமுறையேனும் தேர் இழுக்காமல் மலர்ந்திருப்பார்களா என்பது சந்தேகமே...முட்டிமோதும் கூட்டத்திற்கு நடுவே வடத்தில் நம் கைப்படவே பெருமுயற்சி தேவைப்படும். கடவுள் விருப்பு - மறுப்பு போன்றவற்றிற்கு அப்பாற்பட்டு, தேர் இழுக்கும் அனுபவம் நமக்கு உற்சாகத் தேன் ஊட்டும் பரவசம். "தேர் கிளம்பியாச்சா?" என்று நோட்டம் பார்க்க கதிரவன் தெருக்களின் உள்ளே லேசாக தலை நீட்டுகையில் தேர் நகரத்துவங்கியிருக்கும்.
தேர் வரும் தெருக்கள் எங்கும் இருமருங்கிலும் கூடியிருக்கும் மக்களின் தன்மைகளில், "தேருக்கு reverse gear உண்டாப்பா?" என்று கேட்கும் "international school" சிறுவன், "எத்தன தேர் பார்த்து என்ன? என் பொழப்பு "நிலை"க்கு வந்த பாடில்ல" என்று வருந்தும் கிராமத்து முதியவர், பக்கத்து வீட்டு சிக்கல்களை அத்தனை நெரிசலிலும் பாங்குடன் பகிர்ந்து கொள்ளும் பெண்கள் என சமூக சல்லடையில் சலிக்க வேண்டிய சொற்கள் கேட்கும்... பக்கத்து flat நபர்களின் பெயர் தெரியாமலோ பெயரளவில் பழகியோ நகரும் நகரத்து இயந்திரமான நமக்கு, தெருக்களில் பார்ப்போர் அனைவருக்கும் நீர்மோர் தரும் மக்களை பார்த்து தலையில் ஏதோ ஒன்று குட்டியது போல இருக்கும் (இருந்தாக வேண்டும்?). கால மாற்றத்திற்கு ஏற்ப நீர் மோருடன் இந்த வருடம் "rose milk" "cup ice" என்று விருந்தோம்பல் ரகளை செய்த நம்மூர்க்காரர்கள். "மதுரைக்காரைங்க பாசக்கார பயபுள்ளைங்க" என்பது திரைப்படத்திற்காக மட்டும் பேசப்பட்ட வசனம் அல்ல என்பதை நடைமுறையில் காட்டிக் கொண்டிருந்தனர்.
அக்கால உப்பரிகையின் இக்கால வடிவமான "balcony" இலிருந்து அந்தந்த வீடு ராஜா ராணிகள் இளவரச இளவரசிகள் தேர் வருகை எதிர்பார்த்து தெருக்களை பார்த்திருப்பர். அம்மனை பார்க்க வந்தாலும் அகவையின் உந்துதல் காரணமாக சில இளைஞர்களின் அரைகுறை பார்வை இந்த இளவரசிகளின் மேல் பதிந்து திரும்பும். சிலர்"தர்ம அடியும்" சிலர் "கர்ம அடியும்" (அதான் காதல்...கல்யாணம்...வகையாறா சார்) இதன் மூலம் வாங்கும் வாய்ப்புண்டு. இந்த களேபரங்களுக்கு இடையில் "டும் டும் மாடு" கடந்து போனால் தேர் அருகில் வந்து விட்டது என்று பொருள். "எப்படியடா நாம் நமக்கு சம்பந்தமே இல்லாத இப்படி ஒரு இடத்தில் நடந்து கொண்டிருக்கிறோம்" என்ற யோசனையுடனும், அதற்கே உரிய "வாசனை"யுடனும் இரண்டு ஒட்டகங்கள் தமது உலகத்தில் மெதுவாக நடந்து போகும். தங்கமும் வெள்ளியும் நமக்குத்தான் சொந்தமா என்ன? எங்கள் ஊர் யானை கொலுசொலி தரும் நயத்துடன் நடந்து போகும் அழகை இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள வீடியோ இணைப்பில் கண்டு களியுங்கள். "இன்னிக்கு ஒரு நாளாவது யோக்கியமா இருக்க பாருங்கப்பா மனுச மிருகங்களா" என்று அங்கிட்டும் இங்கிட்டுமாய் நம்மை பார்த்தபடி கம்பீரமாய் நம்மை கடக்கும் யானை.
அந்தக்காலத்தில், தலைவி தன் தலைவனை முதல் முறை பார்க்கையில் மறைந்திருந்து முகம் மட்டும் நீட்டி எட்டிப்பார்க்கும் தோரனையை வர்ணிக்கும் சங்கப்பாடல்களில் வருவது போல நம் தேர் நான்கு மாசி வீதி முனைகளிலும் தன் தலையை லேசாக காட்டியபடி மெதுவாக திரும்பும். "மீனாட்சி சுந்தரர்..." பேரொலி தெரு முழுதும் ஒலிக்க நகர்ந்து வரும் அந்த பிரமாண்டமான முப்பரிமாண சித்திரம், வடம் பிடிக்கும் நூற்றுக்கணக்கானோர் கரங்கள் வரைந்து மிளிரும் எழில்மிகு ஓவியம்!
எங்கள் அனைவரையும் வெவ்வெறு வெளியூர்களில் மறுபதியன் செய்து விட்டு, ஞாபக அஸ்திவாரங்களின் அசுர பலத்துடன் அரைநூற்றாண்டு கடந்து அமர்ந்திருக்கும் எங்கள் வீடு இருப்பது "வடம் போக்கித் தெரு". தெருவின் பெயர் காரணம், விளக்கம் தேவையின்றி அனைவருக்கும் விளங்கி விடும்.இறையுண்ட மலைப்பாம்பு போல அசையாது கிடக்கும் வடங்களை எங்கள் தெருவுக்குள் பாம்பின் வால் பிடித்து இழுப்பது போல் இழுத்து தேரைத் திருப்பும் engineering பல நூற்றாண்டுகள் கடந்தது! எங்கள் வீடிருக்கும் இடத்தின் கீழிருக்கும் மண் மேல் ஏதோ ஒரு அரசனின் பரிவாரங்கள் தேர் இழுத்த சோர்வு போக உட்கார்ந்து இளைப்பாறி இருக்கக்கூடும்...ஏன்? அரசனே கூட நின்று தேர் பார்க்க வந்தவர்களை வரவேற்றிருக்கக் கூடும்! சரித்திரத்தின் சாறு, தேர் போகும் தினத்தில் எங்கள் தெருவில் ஊற்றெடுத்து ஓடுவது போல் ஆண்டு தோறும் தோன்றும் எனக்கு.
இந்த மாபெரும் மக்கள் திருவிழாவில் நாம் பெரும்பாலும் மறந்து போவது, எவர் கண்ணுக்கும் தெரியாமல், இரண்டு ஆள் உயர சக்கரங்களின் அடியில், "கட்டை" போடும் மனிதர்களை... ஒரு நொடி தாமதமோ ஒரு நொடி அவசரமோ இரண்டுமே தேரின் போக்கையே குலைத்து விடும் என்ற ஆபத்தில், coordination என்பதன் செயல் விளக்கமாய் திகழும் இவர்களுக்கு இப்பதிவை சமர்ப்பிப்போம்.
சில ஆண்டுகளுக்கு முன் தேரோட்டம் பார்க்க காத்திருந்த போது தோன்றிய "தேரோட்டம்" கவிதை படிக்க இங்கே செல்லவும்:
http://kumarankrishnan.blogspot.in/2012/05/blog-post.html
http://kumarankrishnan.blogspot.in/2012/05/blog-post.html
மக்களின் பார்வையில் தேர் பார்க்க :
www.youtube.com/watch?v=9hW7DBiJMso
www.youtube.com/watch?v=9hW7DBiJMso
பின் குறிப்பு: ரயிலில்இரண்டு வாரங்களாய் சென்று கொண்டிருந்த நாம், தேர் பார்க்க இந்த வாரம் மதுரையில் இறங்கிய காரணத்தால் மீண்டும் அடுத்த வாரம் ரயிலேருவோம்.
Good commentary.
ReplyDeleteபழைய நினைவுகளை மீண்டும் கொண்டு வந்ததற்கு....நன்றி
ReplyDeleteVery Nice.... Mr Kumaran, you proved that your from madurai... You produced nice article
ReplyDeleteThanks
Pandiya
ஓஓஓ மதுரைக்காரரா நீங்க! அதான் நடைல தமிழ் விளையாடுது! ரசித்தேன்!:)
ReplyDelete