/ கலி காலம்: July 2014

Sunday, July 27, 2014

அது மட்டுமா அசிங்கம்?

அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று சென்ற வாரம் நம் அனைவருக்குள்ளும் ஊடுருவியது... அதிர்ச்சிகள் எப்படியிருப்பினும் சகித்துக்கொள்ளும் அளவுக்கு புரையோடிப்போன சமூகத்தின் அறிகுறியாய் இருக்கக்கூடிய மற்றுமொரு அதிர்ச்சி அது. பெங்களூரில் பெயர் பெற்ற பள்ளி ஒன்றின் வளாகத்துக்குள்ளேயே ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதும் அதை பள்ளியில் பணிபுரிபவர்களே செய்திருக்கிறார்கள் என்பதுமான செய்திகளை பார்க்கும் பொழுது ஏற்படும் அதிர்வலைகளைத் தாண்டி பள்ளிகள் குறித்த நம் பார்வையும் நம் சிந்தனைக்கு எட்டுகிறதா? எட்டினாற்போல் தெரியவில்லை...!
வழக்கம்போல் சீறியெழுதல்கள், போராட்டங்கள், விவாதங்கள் என பயன் அற்ற பழகிப் போன போலித்தனங்கள் ஒருபுறம் இருக்கட்டும்... இச்சம்பவம் நம் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். எத்தனை நடந்திருக்கிறதோ எத்தனை வெளிவரவில்லையோ! ஆனால் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற லட்சணத்தில் தான் நம் கல்வி வியாபாரம் கடை விரிக்கப்பட்டிருக்கிறது. சம்பவத்தினால் கொதித்தெழும் பெற்றோர் மற்றும் சமூக நோக்குடையோரிடம் சில கேள்விகள்:
1. "இந்த பள்ளியில் என் பிள்ளை / பெண் படிக்கிறார்" என்று சொல்லிக் கொள்ள விரும்பி, அதன்மூலம் சமூக அடையாளங்களையும் ஆதாயங்களையும் அடைய விரும்பி, பகட்டான பள்ளிகள் கேட்கும் பணத்தை அள்ளிக் கொட்டி, முழுத்தொகைக்கும் ரசீது தரப்படாது என்று அடாவடி காட்டும் நிர்வாகத்திற்கு தலையாட்டி நம் பகட்டை வெளிக்காட்ட முயற்சிக்கிறோமே இந்த அவலத்தை எதிர்த்து நிற்கும் தைரியமும் இப்படிப்பட்ட பள்ளிகளில் எதற்கு நம் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற நேர்மை மிக்க யோசைனைத் திறனும் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது? இனியாவது இருக்குமா?
2. பள்ளிகள் பெற்றோரிடம் பல்வேறு கண்டிஷன்கள் அடங்கிய விண்ணப்பத்தில் கையொப்பம் வாங்குகின்றன...அதில் "மாணவ மாணவியருக்கு என்ன நடந்தாலும் பள்ளி பொறுப்பிலை" என்று கூட பல பள்ளிகளில் இருக்கிறது. இந்த‌ விவகாரத்தில் கூட பல பெற்றோர்கள் இந்தப் பள்ளியின் மீது இதே புகாரை வாசித்தனர். இவர்கள் அனைவருமே படித்த அதிமேதாவிகள்! கையெழுத்துப் போட்டு பள்ளியில் சேர்க்கும் பொழுது வாயை மூடிக்கொண்டு ஏன் இருந்தார்கள்? கேள்வி கேட்டால் பேர் பெற்ற பள்ளியில் சீட்டு கிடைக்காது என்பதாலா? இப்போது கூப்பாடு போட்டு என்ன பயன்?
3. கூட்டுக் குடும்பம் என்பது கிட்டத்தட்ட இல்லாமல் ஆகி விட்டது. குழந்தைகள் மீது முழுக்கவனமும் செலுத்த பெற்றோருக்கு நேரமும் இல்லை, தங்கள் "கேரியரை" விட்டுக் கொடுத்து குழந்தையை நன்றாக வளர்க்க எவருக்கும் மனமுமில்லை. இந்த சமூக சீர்கேட்டை பயண்படுத்தி பள்ளிகள் ஏதேதோ "ஆக்டிவிடீஸ்" என்ற பெயரில் பணத்தை பிடுங்குகின்றன. பிள்ளைகள் பள்ளிகளில் நீண்ட நேரம் இருக்கிறார்கள். இத்தகைய பெற்றோருக்கும் எவ்வளவு நேரம் குழந்தை வெளியில் (பள்ளியில்)இருக்கிறதோ அவ்வளவு "பளு" நமக்கு குறைவு என்று நினைக்கின்றனர். எவ்வளவு பணம் குழந்தை மீது செலவழிக்கிறோமோ அவ்வளவு நன்றாக குழந்தையை வளர்க்கிறோம் என்பது அதிமேதாவிகளின் முட்டாள்தனம். அவ்வளவு நன்றாக குழந்தை வளரும் என்பது அதைவிட அதிமுட்டாள்தனம். லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி அதை பள்ளிகளில் கொட்டும் படித்த முட்டாள்களான நமக்கு இது புரியாதா? அல்லது புரிந்தும் ஏதும் செய்ய இயலாத "சமூக விசை" இதில் இருக்கிறதா? அதிக‌ம் ப‌ண‌ம் த‌ந்து பெறும் எதுவும் அதிக‌ த‌ர‌மான‌தாக‌ இருக்கும் என்ற‌ முட்டாள்த‌ன‌ ந‌ம்பிக்கை ந‌ம் மூளைக‌ளில் ஏறி மாமாங்க‌ம் ஆகி விட்ட‌தே!
4. இந்த சம்பவத்தில் பள்ளி நிறுவனர் தனக்கு எதுவும் தெரியாது என்று பச்சைப் பொய் சொல்லியிருக்கிறார் என்பது காவல்துறை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இப்படி ஒரு புளுகு புளுகி தப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையை அவருக்கு அளித்தது யார்? இச்சமூகமே அந்த நம்பிக்கையை அவருக்குக் கொடுத்திருக்கிறது.இன்று கல்வி என்பது மிகப்பெரிய வியாபாரம். பள்ளிகளும் கல்வி நிறுவனங்களும் அதைத்தான் செய்யும். குளுகுளு வகுப்பறைகள் என்றவுடன் மகிழ்கிறோம்...இயற்கையுடனான தொடர்பை சிறு வயதிலேயே துண்டிக்கும் அறிவற்ற தன்மை இதில் இருக்கிறது என்று யோசித்தோமா? ஒரு உல்லாச விடுதிக்கு உரிய அனைத்து வசதிகளும் இருப்பதாக நீண்ட லிஸ்டை பள்ளிகள் நீட்டும் பொழுது நாம் புளுகாங்கிதம் அடைகிறோம். அறிவு மற்றும் பண்பின் பரிமாணங்கள் பயிற்றுவிக்கப்படும் அறிகுறிகள் கொண்ட அம்சங்கள் அந்த லிஸ்டில் இருக்கிறதா என்று யோசிக்கின்றோமா?
5. இப்பொழுது நம் நாட்டில் புதிய புரட்சி ஒன்று புறப்பட்டிருக்கிறது. கேண்டில் லைட் போராட்டம்! ஒரு நாள் மெழுகுவர்த்தி ஏத்தி அதில் அகலக் கூடியதா நம் சமூக அழுக்கு? அதைப் பற்றி என்ன அக்கறை? ஒரு நாள் போராட்டம் நடத்தி விட்டு நாம் அடுத்த வேலையை பார்க்கப் போய் விடுவோம்... சில வாரங்களில் "பழைய குருடி கதவை திறடி" கதை தான் நம் நாட்டில் சாசுவதமானது என்பது அக்கிரமக்காரர்களுக்கும் தெரியும் அவர்களை தண்டிக்க வேண்டிய இடத்தில் இருப்பவர்களுக்கும் தெரியும்.
"உயர் தரம்" என்பதற்குள்ளே உளுத்துப் போனவைகள் இருப்பது இதனால்தான்.  எனவேதான் ஒரு பள்ளியின் உள்ளேயே இத்தகைய வக்கிரம் நடந்த பின்னும் வெளிவர பத்து நாட்கள் ஆனது. வெளிவந்த பின்னும் லட்ச லட்சமாய் கொட்டிக் கொடுத்த பெற்றோர்களின் கூக்குரல்களைப் பொருட்படுத்தாமல் சாவகாசமாக பள்ளி நிறுவனர் முகம் காட்ட இரண்டு நாட்கள் ஆனது...பள்ளிக்குள் நடக்கவில்லை என்று முதலில் பொய் சொல்லி பிறகு மாற்றிப் பேச முடிந்தது...பள்ளிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று காவல்துறையை வைத்துக் கொண்டே பொறுப்பிலிருந்து நழுவ முடிந்தது...இது போன்ற‌ ப‌ள்ளிக‌ளின் மீது கூப்பாடு போட்டு என்னாக‌ப்போகிற‌து? அத்த‌னை பெற்றோர்க‌ளும் சேர்ந்து, அத்த‌னை மாண‌வ‌ர்க‌ளையும், இந்த‌ப் ப‌ள்ளி நமக்குத் தேவையில்லை என்று வில‌க்கிக் கொள்ளும் தைரிய‌ம் ந‌ம‌க்கு இருக்கிற‌தா? அப்ப‌டி ந‌ட‌ந்தால் அடுத்த‌ வ‌ருட‌மே ப‌ள்ளி தானாக‌வே இழுத்து மூட‌ப்ப‌டும். பள்ளிகளுக்கு பயம் வரும். எப்படியெல்லாம் காசு பண்ணலாம் என்று யோசிப்பவர்கள் தரம் பற்றியும் சற்று யோசிப்பார்கள். நம்பகமான ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமாவது பள்ளிகளுக்கு வரும். இதெல்லாம் ந‌ம்மால் முடியாது. ஏனென்றால் பிள்ளைக‌ளின் ஒரு வ‌ருட‌ம் வீணாகி விடுமே! அவ‌ர்க‌ளின் ஐஐடி ஐஐஎம் அமெரிக்கக் க‌ன‌வுக‌ள் என்னாவ‌து? இதே சாக்கடையில்தானே நாமும் காசு கொட்டி பட்டம் பெற்று "செட்டில்" ஆன பின் வீட்டில் சோபாவில் அமர்ந்தபடி "இந்த எஜுகேஷன் சிஸ்டமே மோசமா போச்சப்பா..." என்று நீலிக்கண்ணீர் வடித்து போலித்தனமாய் கதை பேசிக் கொண்டிருக்கிறோம்? இது தான் ந‌ம் ச‌மூக‌ப் பொறுப்பின் ல‌ட்ச‌ண‌ம்.
முத‌லில் பெற்றோர் மற்றும் சமூக பங்களிப்பாளர் என்ற‌ பொறுப்பை நாம் எத்த‌னை ச‌த‌வீத‌ம் நிறைவேற்றுகிறோம் என்று பாசாங்கின்றி யோசிப்போம். ஏகப்பட்ட அழுக்குகள் வெளிவரும்! பிறகு இது போன்ற வக்கிரங்களுக்கு எதிராக குரல் கொடுத்தால் அதில் ஒரு நேர்மை இருக்கும். நேர்மை தோற்றதாக விதி இருக்கிறதா என்ன‌?

Sunday, July 13, 2014

இந்தப் பெண்ணை என்ன செய்யலாம்?



சென்ற வாரம் நம் "தேச பக்தர்கள்" நம்மை புல்லரிக்க வைத்த விதம் அலாதியானது. இதென்ன "தேச பக்தி" போன்ற வார்த்தையெல்லாம் இன்னும் உபயோகத்தில் இருக்கிறதா என்று ஆச்சரியப்படாதீர்கள். அதான் சார் நம் கிரிகெட் ரசிகர்கள் இருக்கிறார்களே... அவர்கள் தானே பாரதத் தாயின் தவப்புதல்வர்களாக வலம் வருகிறார்கள். அவர்களை தேசபக்தர்கள் என்று அழைக்கா விடில் வேறு யார் தேசப்பக்திக்கு எடுத்துக் காட்டாக இருக்கிறார்கள் சொல்லுங்கள்?

சரி, விஷயத்திற்கு வருவோம்...மரியா ஷரபோவா என்னும் டென்னிஸ் வீராங்கனை, டெண்டுல்கர் யார் என்று தெரியாது என்று சொல்லி விட்டாராம். அவ்வளவு தான். ஏதோ பாரதத்தாயை இழிவு படுத்தியது போல பொங்கிப் புறப்பட்டு விட்டது நம் தேசப்பக்தர்கள் படை! வேறெங்கு போகும் இந்தப் படை? இருக்கவோ இருக்கிறது சமூக ஊடகங்கள்! எனவே தரக்குறைவு என்பதற்கு இலக்கணம் வகுப்பது போல திட்டித் தீர்த்து விட்டார்கள் நம் தேசபக்தர்கள்.

எப்போதுமே நம்மை நாமே அதிமேதாவிகளாக பாவிக்கும் நினைப்பு நமக்கு உண்டு. குண்டுச் சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிப் பழகியதால் வந்த அதிமேதாவித்தன நினைப்பு இது. அப்படித்தான் நமக்குத் தெரிந்த கிரிகெட் உலகம் முழுவதும் தெரிந்திருக்க வேண்டும் என்ற முட்டாள்தனமான நினைப்பும் நமக்குள் ஊறியிருக்கிறது.

மரியா ஷரபோவா டெண்டுல்கரை தெரியாது என்று சொன்னது இருக்கட்டும். நம் தேசபக்தர்கள் மூளையை ஒரு கையால் தட்டி, மறுகையை இதயத்தில் வைத்து தனியாக அமர்ந்து ஒரு நிமிடம் யோசிப்பார்கள் எனில், அவர்களின் முட்டாள்தனம் மூளைக்கு எட்டாது போகுமா? நம்மில் எத்தனை பேருக்கு இந்தியாவின் ஹாக்கி அணியின் கேப்டன் சர்தார் சிங் பெயர் தெரியும்? சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதி கூட போகாவிடிலும் ஏகப்பட்ட கோல்களை தடுத்த கோலி ஸ்ரீஜிஷ் என்பவரை நமக்குத் தெரியுமா? அட, நம் நாட்டின் சார்பாக எத்தனை விளையாட்டுகளுக்கு
அணிகள் இருக்கின்றன என்ற விபரமாவது நமக்குத் தெரியுமா?

கிரிகெட் என்றால் என்னெவென்றே அறிய வாய்ப்பில்லாத நாட்டைச் சேர்ந்த ஒருவர் டெண்டுல்கரைத் தெரியாது என்றாராம் இவர்கள் வெகுண்டெழுந்து தங்களின் "பக்தியை" காட்டுவார்களாம்! உலக மக்கள் தொகையில் சொற்பமான மக்கள் ரசிக்கும் விளையாட்டு கிரிகெட். அந்த விளையாட்டை திறமையாக விளையாடுபவர்களில் ஒருவர் டெண்டுல்கர். அவ்வளவே. அதற்கு மேல் எதுவுமே இல்லை. டெண்டுல்கர் என்பவர் உலகம் உய்ய வழி காட்டிய புத்தரும் அல்ல சத்தியத்தின் பாதையை பார் முழுதும் பரப்பிய காந்தியும் அல்ல.

ஆமாம்..."இந்தப் பெண்ணை என்ன செய்யலாம்" என்று தலைப்பு வைத்து விட்டு இப்படி எழுதுகிறீர்களே என்கிறீர்களா? இந்தப் பெண்ணை ஒன்று செய்யலாம். நன்றாக பாராட்டலாம்! தெரியாததை தெரியாது என்று சொன்னதற்கு...அத்தகைய பாராட்டுக்களை யார் தெரிவித்தால் பொருத்தமாக இருக்கும்? நாமேதான்! நம்மவர்களே தான்! ஏனென்றால், தெரியாததை தெரிந்தது போலக் காட்டிக் கொள்வதில் நம்மவர்களுக்கு நிகர் நாம் தானே? வாருங்கள், யார் என்று தெரியாதவரை, தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லாதவரை, தெரியாது என்று சொன்ன மரியா ஷரபாவோவை பாராட்டுவோம்!

Sunday, July 6, 2014

யாருக்கும் வெட்கமில்லை!

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது...தென்னகத்தின் செல்லக் குரலுக்கான பிரம்மாண்டமான தேடல் என்று சொல்லிக் கொள்ளப்படும் நிகழ்ச்சி...பல வருடங்களுக்கு முன், இசையின் மூலம் பெறும் உணர்வுகளின் நெகிழ்ச்சியை உள்ளத்துக்குள் ஊடாட வைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி, கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக இன்று கோமாளிகளின் கூத்து பார்க்கிறோமா அல்லது உண்மையிலேயே இசை நிகழ்ச்சியா என்று நம்மை கிள்ளிப்பார்த்துக் கொள்ளத் தூண்டும் அவலமாக மாறிப்போன ஒரு நிகழ்ச்சி...சரி, என்ன விஷயம் என்கிறீர்களா? நீண்ட நாட்களுக்குப் பின் இந்நிகழ்ச்சியைக் காணும் "பாக்கியம்" மீண்டும் வாய்த்தது. பாக்கியம் மட்டுமா? நம் சமூக முன்னேற்றங்களைக் கண்டு புல்லரிக்கும் வாய்ப்பையும் அல்லவா சேர்த்து வழங்கியது அந்நிகழ்ச்சி...
ஒரு பத்து வயது சிறுவன் பாடுகிறான்...வழக்கம் போல தொகுப்பாளர்கள் தங்கள் சிந்தனை முத்துக்களை, கருத்தாழம் மிக்க காவிய வார்த்தைகளை அவ்வப்பொழுது அள்ளித் தெளிக்கிறார்கள். நாம் மதிப்பு வைத்திருக்கும் பழைய‌ பாடகர்கள் நடுவர்களாக அமர்ந்திருக்கிறார்கள்...பிறகு அந்த புல்லரிக்கும் புதுமை நிகழ்வு நடக்கிறது...எந்த சமூகத்தில் பெண்கள் வன்கொடுமை அதிகரித்துக் கொண்டே போகிறது என்று கூப்பாடு போடப்படுகிறதோ, எந்த சமூகத்தில் ஆண்கள் அனைவருமே பெண்களை போகப் பொருளாக மட்டுமே பார்க்கக் கூடியவர்கள் என்ற சித்தரிப்பு இருக்கிறதோ, எந்த சமூகத்தில் குழந்தைகள் நல்வளர்ப்பு பற்றி வெற்றுப்பேச்சு மட்டுமே நிறைந்திருக்கிறதோ அத்தகைய சிறப்பு வாய்ந்த நம் தமிழ் சமூகம் கண்டு மகிழ்ந்து போற்றும் அந்த நிகழ்ச்சியில், அந்த புல்லரிக்கும் புதுமை நிகழ்வு நடக்கிறது...
அமெரிக்காவிலிருந்து வந்து பாடும் ஒரு இளம்பெண் "கெஸ்டாக" அமர்ந்திருக்கிறார். பத்து வயது கூட நிரம்பாத சிறுவன் ஒருவன் பாடி முடித்தபின் பெண் தொகுப்பாளினி, "என்னை ஆறாவது கேர்ள் பிரண்டாக நீ ஏற்றுக் கொள்வாயா" என்று அந்த அமெரிக்கப் பெண்ணிடம் கேள் என்று அந்தச் சிறுவனைத் தூண்டுகிறார். அரங்கமே கைதட்டி ஊக்குவிக்கிறது! அந்தச் சிறுவனும் கால் மடித்து அமர்ந்து கைநீட்டி அமெரிக்கப் பெண்ணிடம் அவ்வாறே வேண்டுகிறான்...அதைப் பார்க்கும் மற்றொரு பெண் தொகுப்பாளினி, டேய் உனக்கு நானா அமெரிக்கப் பெண்ணா அல்லது அந்த மற்றொரு தொகுப்பாளினியா என்று சொல்லச் சொல்கிறார். அரங்கம் முழுவதும் நிறைந்திருக்கும் சிறு மனங்களில் நச்சின் நாற்றம் வீசப்படுகிறது...

அந்த நாற்றத்தின் சுவாசம் பெற்ற சிறுவனும், "நீங்க ஓல்டு மாடல். அவங்க அமெரிக்கா" என்று தனது தேர்வு முறையை விளக்குகிறான். அரும்பெரும் சொற்பொழிவு கேட்டது போல அரங்கம் புளுகாகிதம் அடைந்து கூச்சலில் குதிக்கிறது. தரமானவர்கள் என்று நாம் நம்பும் நடுவர்களும் கைதட்டிச் சிரிக்கிறார்கள். "தோழி" என்றால் என்ன அர்த்தம் என்று இந்நிகழ்ச்சி பார்க்கும் அத்தனை சிறுவர் சிறுமிகளும் "விபரமாக" புரிந்து கொள்ளும் பெரும்பணியினை செய்த அத்தனை பேரும் பெண்களே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒரு பாடல் வரியின் ஸ்வரஸ்தானங்களில் பாடுபவர்கள் செய்யும் தவறுகளுக்கே ஏகப்பட்ட "டிப்ஸ்" கொடுக்கும் இந்த நடுவர்கள், நாளை ஒரு தலைமுறையாக மாறப்போகும் பிஞ்சுகளின் நஞ்சை விதைத்து சிதைக்கும் அவலம் நேர்கையில் சிரித்து மகிழ்ந்தது ஏன்? நடுவராக வந்த மூவரில் இருவர் பெண்கள். "என்ன நடக்குது இங்க... இப்படியா பொது நிகழ்ச்சியில் அதுவும் சிறுவர்களிடம் உரையாடுவது" என்று கேட்கவா முடியும்? நடுவர் சான்சு போய்விடுமே! சிறுமிகள் கூட கொடுமைக்குள்ளாகும் நிகழ்வுகள் பெருகுவது குறித்து கொதித்தெழும் பெண்ணுரிமை அமைப்புகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? பெண்ணியம் பேசுபவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ஒரு வேளை ஆண்களுக்கு எதிராக மட்டும் தான் இவர்கள் கண்ணைக் கட்டிக் கொண்டு களத்தில் குதிப்பார்களோ?? இந்நிகழ்ச்சியை பார்க்கும் ஒரு சிறுவன் நாளை பள்ளியிலோ சாலையிலோ, இதே போலோ இதையும் மீறியோ ஒரு பெண்ணிடம் நடந்து கொண்டால் குற்றவாளி யார்?

ப‌ல‌ ல‌ட்ச‌ம் பேர் பார்க்க‌க்கூடிய‌ ஒரு நிக‌ழ்ச்சியில், ச‌ற்றும் பொறுப்பின்றி தனக்குத் தோன்றிய‌தை எல்லாம் பேசும் தொகுப்பாள‌ர்க‌ளை என்ன‌ செய்ய‌? தான் பேசுவ‌து போதாதென்று விப‌ர‌ம் அறியா சிறுவ‌ர் சிறுமிக‌ளை த‌ர‌க்குறைவாக‌ ந‌ட‌க்க‌த் தூண்டும் அவ‌ர்க‌ளின் அசிங்க‌ங்க‌ளை என்ன‌ செய்ய‌? இவ‌ற்றையெல்லாம் பார்த்தும் ஆட்சேப‌ம் ஏதும் தெரிவிக்காம‌ல் அல‌ங்கார‌மாய் வீற்றிருக்கும் ந‌டுவ‌ர்க‌ளை என்ன‌ செய்ய‌? த‌ங்க‌ள் க‌ண்ணெதெரிலேயே த‌ங்க‌ள் ம‌ற்றும் பிற‌ குழ‌ந்தைக‌ள் ம‌ன‌தில் விஷ‌ம் விதைக்கும் ப‌ணி ந‌டைபெறுவ‌தை பார்த்தும் பைத்திய‌ங்க‌ள் போல‌ அதில் ப‌ங்கேற்றுச் சிரிக்கும் பெற்றோர்க‌ளை என்ன‌ செய்ய‌? ஒரு ப‌க்க‌ம் அக்கிர‌ம‌ங்க‌ளை க‌ண்டு பொங்குவ‌து போல‌வும் ம‌றுப‌க்க‌ம் அதை மெளனமாய் அனுமதிப்பதும் முடிந்தால் அதையே கூட உள்ளுக்குள் ரசிப்பதுமாய் இர‌ட்டை வேட‌ம் போடும் ந‌ம் அனைவ‌ரையுமே என்ன‌ தான் செய்ய‌? வெட்கம் கெட்ட சமூகத்தில் வாழும் நாம் விவஸ்தை அற்ற மனிதர்களாய் திரிவதில் வினோதம் ஏதும் இல்லையே!