/ கலி காலம்: July 2013

Sunday, July 21, 2013

மெதுவா தந்தி அடிச்சானே...

என்ன சார்...தலைப்பு பார்த்து விதவிதமான எதிர்பார்ப்புக்களுடன் படிக்க ஆரம்பித்து விட்டீர்களா? எதிர்பார்ப்பு நிறைவாகிறதா இல்லை ஏமாற்றமா என்று இறுதியில் தெரிந்து விடும். இப்பொழுது விஷயம் என்னவென்று பார்ப்போம்.

தாத்தாவிற்கு தாத்தா காலம் தொட்டு அவசர நேரங்களில் தகவல் பரிமாற உதவிய தந்திக்கு அந்திம காலம் சென்ற வாரம் முடிந்தது நாம் அனைவரும் அறிந்ததே...இந்த நேரத்தில் தந்தியுடன் நாம் கொண்ட தொடர்பு குறித்து நமது நினைவலைகள் புரண்டு கொண்டிருக்கும். எனக்கு, நான் முதன் முதலாய் தந்தி கொடுக்கச் சென்ற அனுபவம் ஞாபகம் வந்தது. ஞாபகம் என்றால் நம் சொல் கேட்குமா சார்? ஒன்றிலிருந்து இன்னொன்று என்று அது போன போக்கில் போய் கொண்டேதானே இருக்கும்? நாமும் அதன் போக்கில் போக வேண்டியதுதானே...

அப்போது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஒரு உறவினரின் மறைவுச் செய்தியை பல பேருக்கு தந்தி மூலம் தெரிவிக்கும் பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டது. சூழல் காரணமாக எப்படி தந்தி அனுப்புவது என்று எவரிடமும் கேட்க இயலாமல் நேரே "தந்தி ஆபிஸ்" சென்றேன். கையில் பேப்பரில் நிறைய முகவரிகள். தந்தி கவுண்டரில் நல்ல கூட்டம். மகிழ்ச்சி, துக்கம் என வெவ்வேறு ஸ்வரங்களை மாறி மாறி அடிக்கும் "டக் டக்" சத்தம் தொடர்ந்து கேட்க, வரிசையில் நிற்போர் "கதை" பேசாமல் மெளனம் காக்கும் விசித்திரமான இடமாக தெரிந்தது தந்தி ஆபீஸ்.

அனைவரும் வயதில் என்னை விட மிகப் பெரியவர்களாக இருந்தார்கள். ஒரு வேளை பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் தந்தி அனுப்ப முடியுமோ என்று ஒரு திடுக் சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. அப்படியென்றால் வீட்டில் என்னை அனுப்பியிருக்க மாட்டார்கள் என்று மனம் சமாதானம் சொன்னாலும், அத்தனை நீள வரிசையில் நின்று இறுதியில் வயதாகவில்லை என்று சொல்லி விட்டால் என்ன செய்வது என்ற கவலை வேறு! ஒருவரிடம், நேரடியாக வயது வரம்பு பற்றி கேட்கத் தயங்கி, "தந்தி அனுப்ப address proof வேணுமா?" என்றேன். அட்ரஸ் இருந்தா போதும் புரூப் வேண்டாம் என்றார். மதுரைக்காரர் என்றாலே பதிலை ருசியாகத்தானே சொல்வார்? அடுத்து, "ஸ்கூல் படிக்கறவங்க அனுப்பலாமா?" என்றேன். என்னை ஒரு மாதிரியாக பார்த்தவர், கவுண்டரை கைகாட்டி "அங்க போய் கேளு" என்றார்.

பெரிய குங்குமப் பொட்டுடன் ஒரு பெண்மணி கவுண்டரில் இருந்தார். "மேடம் நான் பத்தாவது படிக்கறேன். தந்தி அனுப்பலாமா" என்று பொட்டென்று போட்டு உடைத்தேன். ஒரு பெரும் பாரம் இறங்கியது போல் இருந்தது. "யார் வேணாலும் அனுப்பலாம்பா" என்று form ஒன்றை கொடுத்தார். ஏற்கெனவே முகவரிகளை எண்ணி வைத்திருந்த நான், கொஞ்சம் "extra" இருக்கட்டுமே என்று சற்று கூட்டி, ஒரு ஐம்பது form கொடுங்க" என்றேன். அங்கிருந்தவர்கள் அனைவருமே என்னை பார்வையால் துளைப்பது போல இருந்தது. பெண்மணி ஒருவரை பெயர் சொல்லி அழைக்க, எங்கிருந்தோ வந்தவரிடம், "5 நிமிஷம் பார்த்துக்கங்க" என்று சொல்லி விட்டு என்னை பார்த்தபடி எழுந்தார். "ஆஹா... ஐம்பது எல்லாம் கேட்கக்கூடாது போலிருக்கே" என்று எனக்கு படபடப்பானது. சுற்றி நடந்து வெளியே வந்தவர், "இப்படி வாப்பா தம்பி" என்று அருகிலிருந்த பெஞ்சுக்கு கூட்டிப் போனார்...

சரி...தனியாக அழைத்துச் சென்று திட்டும் அளவுக்கேனும் பக்குவப்பட்டவராக‌ இருக்கிறாரே என்ற எண்ணத்துடன் அவரின் பின்னே சென்றேன். யார் இறந்தது என்று விசாரித்து, சுவற்றின் மேலே தொங்க விடப்பட்டிருந்த "தந்தி விதிமுறைகள்" போர்டை காட்டி, ஒவ்வொரு சொல்லுக்கும் காசு உண்டு என்று விளக்கி, நான் ஒரு form முடிக்கும் வரை சரி பார்த்து, "மற்றவற்றை எழுதிக் கொண்டு வா" என்று சொல்லி விட்டு போய் விட்டார்.

ஐந்து நிமிடம் கழித்து அனைத்தையும் "ரெடி" செய்து நிமிர்ந்த நான் மீண்டும் வரிசையில் நிற்க வேண்டுமா என்ற பிரமிப்புடன் மெதுவாக வரிசை நோக்கி நகர்ந்தேன்...கவுண்டரில் இருந்த அவர், சத்தமாக "வரிசை வேண்டாம் இங்க வா" என்றார். அனைத்தையும் சரி பார்த்து அனுப்பி, "acknowledgement" கொடுத்து, கரெக்டா போயிரும் போயிட்டு வா" என்றார். எத்தனை உணர்வு பூர்வமான வேலையை இவர்கள் செய்கிறார்கள் என்று அனுபவத்தில் அறியும் அற்புதமான வாய்ப்பு அன்று எனக்கு கிடைத்தது.

சில‌ வருடங்கள் கழித்து, ஒரு மாலை நேரத்தில், மதுரை சக்தி சிவம் தியேட்டரில்,  புதிய‌ வகையில் தந்தியடிக்கும் முறைகள் குறித்து அரவிந்த் சாமியும் சிவரஞ்சனியும் "மெதுவா தந்தி அடிச்சானே..." என்ற பாடல் மூலம்   செயல்முறை விளக்கங்களுடன்  மக்களுக்கு மாபெரும் ஞானம் அளிக்க‌ தங்கள் கலைத்தொண்டு மூலம் முயன்று கொண்டிருந்தனர். "தாலாட்டு" படத்தில் வரும் இப்பாடலை நண்பர்களுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

சரிதான்...இரண்டிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? அதான் சொன்னேனே சார்...ஞாபகம் என்றாலே எங்கெங்கெல்லாமோ சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் நம் மனதை திரிய வைத்து எப்படியோ ஒரு சம்பந்தத்தை எதன் இரண்டிற்கோ இடையில் கொண்டு சேர்த்து விடும் என்று... எனவே இதிலும் சம்பந்தம் இருக்கு சார் இருக்கு. எனது முதல் தந்தி அனுபவ ஞாபகமும் "மெதுவா தந்தி அடிச்சானே" பாட்டு ஞாபகமும் எப்படியோ சேர்ந்து இப்பொழுது எனக்கு ஒரு கவலையைத் தந்திருக்கிறது...அதாவது, இன்னும் ஒரு நானூறு ஐநூறு ஆண்டுகள் கழித்து எஞ்சியிருக்கும் தமிழ் தெரிந்த எவரோ ஒருவர், "முற்கால தமிழ் அகராதி" என்று எதையேனும் தயாரிக்க முயன்று கொண்டிருக்கையில் அவர் காதில், "மெதுவா தந்தி அடிச்சானே" பாடல் விழுந்து, ஆர்வம் உந்தித் தள்ள அந்த பாடல் காட்சியை பார்க்கும் அவலமும் நேர்ந்து, அதன் மூலம் அவர் அறிவுக்கு எட்டியதை, "தந்தி என்ற சொல், பண்டைய தமிழ் நாட்டில் காதலர்கள் ஒருவரை ஒருவர் கையாளும் முறையை குறிக்கும்" என்ற ரீதியில் எதையேனும் எழுதி வைத்தால் என்ன செய்வது சார்?