/ கலி காலம்: December 2014

Sunday, December 28, 2014

அம்மாடி...! ஐயோடி...!

"அம்மாடி...அந்த நாளை மறக்க முடியுமா...!"  இப்படியெல்லாம் இந்தக் காலத்தில் வார்த்தைகளை பயன்படுத்தி கேட்டிருக்கிறோமா?
சிறு வயதில் நம்மூர்களில் ஆச்சரியத்தையும் ஆயாசத்தையும் தெரிவிக்க "அம்மாடி" என்ற சொல் புழக்கத்தில் இருந்தது நம் ஞாபகத்தில் இருக்கக்கூடும். இன்று உலகமயமாக்கலின் சூறாவளியில் இது போன்ற வார்த்தைகள் காணாமல் போனதோடு மட்டுமின்றி பயன்படுத்தினால் நம் இமேஜுக்கு இழுக்கு வந்து விடுமோ என்று தமிழ் சமூகம் அஞ்சும் அளவுக்கு நாம் முன்னேறி விட்டோம்! "சிவப்பாய் இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்டா" என்ற வடிவேலு காமெடி போல், ஆங்கிலம் பேசினால் அவர்கள் அறிவுடையவர்கள் என்ற ஆணித்தரமான நம்பிக்கை நமக்கு உண்டு. அதிலும், நாக்கில் நகாசு வேலை செய்து "wow..." "" என்று உச்சரித்தால் உள்ளூரக் கிடைக்கும் கிளுகிளுப்பு "அம்மாடி"யில் இல்லையோ?

நாகரிக கோமான்கள் என்ற நினைப்பு நம் அனைவருக்குமே உண்டு. உலகமயமாக்கல் அந்த எண்ணத்திற்கு நன்றாகவே தூபம் போட்டு வைத்திருக்கிறது...உதாரணமாக நானும் நீங்களும் தஞ்சாவூர் பெரியகோயிலில் அண்ணாந்து அதன் கோபுரத்தை பார்த்தால் வாயில் "wow..."தான் வருகிறது. "அம்மாடி"யெல்லாம் பிரயோகத்தை விட்டு வெகுதூரம் பிரயாணம் போய் விட்டது.

சரி சரி, விஷயத்துக்கு வாருங்கள் என்கிறீர்களா? சென்ற வாரம் "அஞ்ஞாடி" நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பதாக செய்தி வெளியானது. தலைப்பும் புத்தகத்தின் சைசும் புது வாசிப்பாளர்களை பயப்பட வைக்கும். ஆனால் தமிழ் நாட்டில் 1800களின் இறுதியில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களையும் அதனிடையே மனிதர்களின் உணர்வுகளையும் ஊடாட விட்டு அற்புதமான ஒரு படைப்பை தந்திருக்கும் பூமணி,  பல ஆண்டுகள் உழைத்திருக்கக்கூடும் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.

நாவல் முழுவதும் மண் வாசனை  வீசிக் கொண்டே இருக்கிறது. அவர் பயண்படுத்தும் சொல் வழக்குகள் புழங்கிய பகுதியில் நாமோ நம் மூத்த குடியோ இல்லாதிருந்திருப்பினும் அச்சமூகத்தினுள் கொண்டு போய் நம்மை அமர்த்துகிறது இந்நாவலின் நடை அழகு!

ஆனால், வாசிப்பு ஆர்வம் உள்ள ஒரு சராசரி தமிழன், ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு புத்தகத்தை வாங்குவானா? வாங்க முடியுமா? இது போன்ற ஒரு படைப்பு, எச்சமூகத்தின் பின் புலத்தை முன் வைக்கிறதோ, அதை சார்ந்த மக்களை சென்றடைய வேண்டாமா? 2013 சென்னை புத்தகச் சந்தையில் [அந்த கண்காட்சி பற்றிய பதிவு இங்கே ] "அஞ்ஞாடி" நிறைய இடங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. புத்தகத்தை வாங்க விலையைப் பார்த்து "அம்மாடி!" என்றேன் நான்...ஆமாம் சார், "அஞ்ஞாடி" என்பதன் அர்த்தம் விலையிலும் பிரபலித்தது வருந்தத்தக்க ஒன்று. அற்புதமான புத்தகங்களுக்கு விலையில்லை எனினும், அது, படைப்பின் அஞ்ஞாடியை பரவலாக தடையாகப் போய் விடும்!

அந்த வருடம், கண்காட்சி அரங்கை விட கூட்டம் நிறைந்து வழிந்த கேண்டீனில், பஜ்ஜி வாங்குவதற்கு நின்று கொண்டிருந்த‌ பொழுது, கல்லூரி மாணவி ஒருவர் "அஞ்ஞாடி" என்றால் என்னடி? என்று தோழியிடம் கேட்டுக் கொண்டிருந்தார். வரிசையில் இருந்த இன்னொருவர், "வாழைக்காய் பஜ்ஜி ரொம்ப சிவப்பா இருக்கே...பவுடர் அதிகம் போட்டிருப்பானோ" என்று தன் உறவினரிடம் சத்தமாக‌ கவலைப்பட்டுக் கொண்டிருந்ததால் மற்றொரு மாணவி "அஞ்ஞாடி"க்கு என்ன பதில் சொல்லியிருப்பார் என்ற என் ஆர்வம் பஜ்ஜி வாசனையில் கரைந்து போனது...

இரண்டு வருடம் கழித்து சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கிறது இந்நாவல். தரமான எதுவும் எளிதில் வெளியில் தெரிவதில்லை. தரமான கதைகள் தரும் பூமணியையும் அவரின் கதைகளையும் எத்தனை பேர் அறிந்திருப்பார்கள் என்றும் தெரியவில்லை. இந்த விருது அக்குறையினை ஓரளவேனும் நீக்கும் என்று நம்புவோம். இன்றைய உலக இருப்புக்கு பொருத்தமான பாணியில் அஞ்ஞாடியை சொல்ல வேண்டுமென்றால், "voila! this novel has a wow factor" என்று தூய தமிழில்  சொன்னால்தான் தமிழ் சமூகத்திற்கு இந்நாவல் பற்றிய ஈர்ப்பு பிறக்கும்!

அம்மாடி! ஐயோடி! அஞ்ஞாடி!

Sunday, December 7, 2014

காலம் கெட்டு கெடக்கு...

வழக்கமான மாத மளிகை சாமான் வாங்கிட கடைக்கு போயிருந்தேன். அண்ணாச்சி கடையல்ல. அவை அழியத்துவங்கிதான் ஆண்டுகள் பல ஆகி விட்டதே...வர்ணஜாலங்களுடன் வசீகரிக்கும் வணிகவளாகங்கள் தானே திசையெங்கும் கடை பரப்பி நிற்கின்றன...வாழ்க்கையே வணிகமாகி விட்ட பிறகு இத்தகைய வணிக வசீகரங்கள் சமூகத்தை ஈர்ப்பதில் விசித்திரமுமில்லை வியப்புமில்லை. ஊரோடு ஒத்து வாழ் என்று சும்மாவா சொன்னார்கள்? எனவே அதை சாக்கிட்டு நானும் அந்த பல்பொருள் விற்பனை அங்காடியில் மக்கள் திரள் நடுவே "டிராலி" தள்ளியபடி நகர்ந்து கொண்டிருந்தேன்...

கீரை கிழவிகளை ஊரை விட்டு அனுப்பிய பின், அவர்களிடம் பேரம் பேசி வீரம் காட்டிய நடுத்தர வர்க்கத்து சிங்கங்கள் ஒரு கட்டு பத்து ரூபாயெனினும் பாக்கெட்டிலிருப்பதால் பதவிசானது என்றெண்ணி மெளனமாய் அள்ளிப்போடும் கீரைகள் பகுதி தாண்டி தானியங்கள் பிரிவு அருகில் வருகையில் சத்தமும் குழப்பமுமாய் இருந்தது. தெருவாக இருந்தாலும், பளபளப்பு காட்டும் பலமாடி அங்காடியாக இருந்தாலும், ஏதேனும் சத்தம் வந்தாலே சண்டையாக இருக்குமோ என்ற‌ அவல் கிடைக்கக்கூடும் ஆர்வத்துடன் எட்டிப் பார்க்கும் இயல்பு நமக்குள் ஊறிப் போன ஒன்றாயிற்றே...என்ன நடக்கிறது என்று கூட்டத்திற்குள் நுழைந்து பார்த்தேன்.

கடை சீருடை அணிந்த‌ ஒரு பெண் சிப்பந்தி சற்றே தலை குனிந்தவாறு நின்றிருந்தார். அவரின் மானேஜர் "சாரி மேடம்" என்று தற்கால "முன்னேற்றம் மற்றும் உரிமை" அடையாளங்களின் நாகரீக நகல் போன்று இருந்த ஒரு பெண்ணிடம் சொல்லிக் கொண்டிருந்தார். "you people are cheating. I should complain " என்று மேனேஜரை விளாசிய அவர் அங்கிருந்து விருட்டென்று விலகிப் போன பின் ஆங்காங்கே பேச்சும் சிரிப்பும் கேட்டது. மேனேஜர் சிப்பந்தியிடம் வந்து, "சரி விடும்மா...கஸ்டமராக இருக்கப்போய் இதெல்லாம் பொறுத்துக்க வேண்டியிருக்கு" என்று சொல்லிச் சென்றார்.

நமக்கு இருப்பு கொள்ளுமா? விஷயம் என்னவென்று தெரியா விட்டால் தலை வெடித்து விடுமே...இன்னும் சிலர் அந்த விஷயத்தை பேசிக்கொண்டு இருந்ததால் தலை தப்பியது. இதான் சார் விஷயம். அந்தப் பெண் அரிசி வாங்க வந்திருக்கிறார். பெரிய பெரிய டின்களில் அரிசியும், அதன் மேல் ஒரு அட்டையில் அதன் வகையின் பெயரையும் எத்தனை வருடம் பழையது என்பதையும் எழுதிச் சொருகியிருப்பார்கள் இல்லையா? அதைப் பார்த்து அந்தப் பெண் "ஒரு வருடம்" என்று எழுதிய "பொண்ணி"யில் தருமாறு சிப்பந்தியிடம் கேட்டிருக்கிறார். அடுத்தவருக்கு உதவலாம் என்று நீங்கள் நினைத்தால் பெரும்பாலும் இன்றைய உலகில் ஆபத்து உங்களுக்குத்தானே? பாவம் சிப்பந்தி. "மூணு வருஷம்" போட்டுருக்கறத எடுத்துக்குங்க பழைய அரிசி" என்றிருக்கிறார். நாகரிக நகலுக்கு பெரும் கோபம் வந்திருக்கிறது. புதுசு இருக்க பழையதை தன்னிடம் தள்ளி விடப் பார்க்கிறார் என்ற கோபம்!
பழைய அரிசிதான் நல்லாயிருக்கும் என்று சிப்பந்தி சொன்னதை ஏமாற்று வேலையாக பார்த்திருக்கிறார் அப்பெண்.

இதில் உச்சக்கட்ட தமாஷ் அருகில் இருந்தவர் அடித்த கமெண்ட்தான். "இப்படித்தான் நம்மூர்ல இப்பெல்லாம் குடும்பம் ஓடுது போல" என்ற முதியவரிடம் பக்கத்தில் இருந்தவர், "ஐயா, வீடுகளிலெல்லாம் சமையல் இன்னும் நடக்குதுன்னு நினைச்சு சந்தோஷப்படுங்க..." என்று சொன்ன போது தலை தாழ்த்தி நின்ற சிப்பந்தி அம்மாவும் சேர்ந்து சிரித்தார். அரிசியை கண்ணால் பார்த்தே அதன் வரலாறு பூகோளத்தை புட்டுப் புட்டு வைக்கும் நம் பாட்டிமார்கள் ஞாபகத்துக்கு வந்தனர். ஒரு வேளை "உரிமை", "முன்னேற்றம்", "சுதந்திரம்" என்பதையெல்லாம் விருப்பம் போல அர்த்தம் பண்ணிக் கொண்டால் கால்கள் தரையில் பாவாமல் இப்படித்தான் அரிசி கதை போல் ஆகுமோ சார்? சிகரம் தொடும் பொருட்டு முன்னேறி மேலேறுவது எல்லாம் சரிதான்...ஆனால் தரையில் நடக்கத் தெரியாது, நடக்க‌ விருப்பமுமில்லை என்றால் சிகரத்தில் ஏறி என்ன பயன்? காலம் கெட்டுத்தான் கெடக்கு சார்...!