/ கலி காலம்: 2015

Friday, December 25, 2015

இளையராஜாவுக்கு ஒரு கடிதம்...


மூன்று தலைமுறைகளின் உணர்வுகளுக்கு ஊட்டம் கொடுத்து, இசையின் வழியே மனதின் ஆழ் அகலங்களை காண்பதற்க்கான நாட்டம் கொடுத்து, வாழ்க்கையின் எதிர்பாரா கணங்களின் தோன்றும் வாட்டம் தடுக்கும் அருமருந்தாய், மென்மையும் மேன்மையும் சிந்தனையிலும் செயலிலும் ஊட்டும் நல்விருந்தாய், எண்ணற்ற இதயங்களின் வயதின் தடங்களில் நினைவின் நொடிகளை இசையின் இழைகளின் வழியே பதியச் செய்த உங்களுக்கு, இசையுண்டு வாழும், அதன் வழியே வாழ்க்கையை காணும் கோடிக்கணக்கான மனங்களில் ஒருவனாக எழுதுவது...

இன்றைய சமூகம் தாந்தோன்றித்தனமான போக்கில் திரிவதன் முழுமுதற் காரணம் போதிய வழிகாட்டுதல்கள் இன்மையே என்பதை தங்களைப் போன்ற முதியவர்கள் நன்கு அறிவீர்கள். மூத்தோர் வாக்கை கேட்கும் நிலை இன்றைய சூழலில் இல்லை எனினும், அத்தகையோர் பேசும் தவறான தருணங்களை நன்கு உள்வாங்கிக் கொள்ளும் பொறுப்பற்ற புத்திசாலித்தனம் இங்கு நிறையவே உண்டு. எனவே பெரியவர்கள், அதுவும் பொதுவெளியில் பிரபலமான முதியவர்கள் உதிர்க்கும் வார்த்தைகளுக்கு பல்மடங்கு வீரியமானதாக பலம் பெறுகிறது.

சமூகத்தை நல்வழிப்படுத்துவதை "லோகோ"விற்கு ஏற்ற பன்ச் லைனில் மட்டுமே வைத்துக்கொள்ள விரும்பும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு எதிர்மறை எண்ணங்களை வளர்க்கும் செய்திகளே தங்களை வளர்த்துக் கொள்ளும் தீனியாக தெரிகின்றன. எனவே தான் அவற்றை மீண்டும் மீண்டும் படம் பிடித்துக் காட்டுகின்றன. அப்படியொரு நிகழ்வுதான் சமீபத்தில் நீங்கள் உதிர்த்த "அறிவு இருக்கிறதா" என்னும் காட்சிகள் மீண்டும் மீண்டும் ஊடகங்களில் வலம் வந்தது.

தனிமனித உணர்வு தத்தளிக்கும் தருணத்தில் சற்றும் பொறுப்பின்றி ஒரு நிருபரால் கேட்கப்பட்ட கேள்விதான் அதை தூண்டியது எனினும், தூண்டிலில் விழாமல் இருப்பது எப்படி என்று சொல்லித்தருவது அல்லவா பெரியோரின் கடமையும் சிறியோரின் எதிர்பார்ப்பும்...பொறுப்பற்ற தன்மையே சுதந்திரம் என்பது இன்றைய சமூகத்தில் எழுதப்படாத விதியாகி விட்டது. ஊடகங்களும் அதற்கு விதிவிலக்கல்ல. சொல்லப்போனால் அந்த விதியை முன்னின்று எழுதியவையே ஊடகங்கள் தான். எனவே அத்தகையோரிடம் பண்பு எதிர்பார்க்க இயலாது தான். ஆனால் உங்களிடம்....? எதிர்பார்ப்பு இருக்கிறது. எனவே ஏமாற்றமும் இருக்கிறது. "எந்த சூழ்நிலையில் எதைப் பற்றி கேள்வி கேட்கிறாய்" என்பதோடு நின்றிருந்தால் நீங்கள் முன்மாதிரியாக எங்கள் முன் நின்றிருப்பீர்கள். அதை தாண்டியதால், எங்களுக்கு ஒருமாதிரியாக இருக்கிறது.

இசை மென்மையையும் பொறுமையையும் வளர்க்கும் என்பார்கள். தாலாட்டப்படும் வயதிலிருந்து நாயாட்டம் வாழ்க்கை நம்மை அலைக்கழிக்கும் பொழுது வரை உங்கள் இசை அத்தகைய மென்மையையும் பொறுமையுமே எங்களுக்கு தந்திருக்கிறது. இசையின் கடலிலேயே மூழ்கியிருக்கும் நீங்கள், இதனை பொய் என்று நாங்கள் நினைக்கும் வண்ணம் எந்தவொரு செயலையும் எங்கள் முன் நிகழ்த்த மாட்டீர்கள் என்று நம்புகிறோம்....

இளையராஜாவின் இயற்பியல் படிக்க‌...


Sunday, October 11, 2015

நயன்தாரா - அதிர்ச்சி தரும் ரகசியம்...!

ரகசியம் என்று சொல்லும் பொழுதே ஒரு சுகம் நம்மைத் தழுவுவதைப் போல இருக்கிறது இல்லையா சார்? அதுவும் அடுத்தவரை பற்றிய ரகசியம் என்றால் சுகமோ சுகம். சாதாரணமாகவே இப்படியென்றால் நயன்தாராவைப் பற்றிய ரகசியம் என்றால் கேட்கவா வேண்டும்? வாருங்கள், பலருக்கும்
 தெரிந்திராத‌ அப்படிப்பட்ட ரகசியத்தை படிப்போம்...

இதுவரை பார்த்திராத கேள்விப்பட்டிராத உருவில் நயன்தாராவை சென்ற வாரம் பார்க்க நேர்ந்தது...பேசாமலேயே ஆயிரம் [சமூகத்திற்கு பயனுள்ள] வார்த்தைகள் சொல்லும் கண்கள்...அடுத்தவரை கூர் தீட்டுவதற்கு ஏற்பட்ட முனை போன்ற நாசி...

இருங்க சார் இருங்க...இந்த நயன்தாரா நம் புத்திக்கும் சித்திக்கும் உணவு தரும் எழுத்தாளர். நேருவின் உறவினர். விஜயலக்ஷ்மி பண்டிட்டின் மகள். கிட்டத்தட்ட 90 வயதை நெருங்கும் முதுமையின் பக்குவ களையை முகத்தில் சுமப்பவர். இந்த வாரம் தலைப்புச் செய்திகளில் அடிபட்டார். கருத்துச் சுதந்திரம் நசுக்கப்படுவதை எதிர்த்து தனக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதை துறப்பதாக அறிவித்தது செய்தியாகியது. இப்படித்தான் சார் நயன் தாரா என்றொரு எழுத்தாளர் இருக்கிறார். அதுவும் சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கிறார். அதையும் திருப்பிக் கொடுத்திருக்கிறார் என்று பல ரகசியங்கள் நமக்குத் தெரிய வந்திருக்கின்றன...விருதை திருப்பித் தருவதால் நசுக்கப்பட்ட கருத்துச் சுதந்திரம் பட்டி, டிங்கரிங் எல்லாம் பார்த்து பளபளவென ஆகி விடுமா என்பது இந்தப் பதிவுக்குப் பொருந்தாத விஷயங்கள்...எனவே அதை விட்டு விடுவோம்.

நம் சமூகத்தின் அழகே அழகு சார்...அதாவது நம் சமூக அவலத்தின் அழகே அழகு...! பரவலாக மக்களால் அறியப்படும் "தகுதி" முதலில் அயோக்கியர்களுக்கு கிடைக்கிறது பின்பு அரசியல்வாதிகளுக்கு கிடைக்கிறது (என்னய்யா எதுக்கு இரண்டையும் தனித் தனியே எழுதுகிறாய் ஒரு முறை எழுதினால் போதாதா என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது) அதன் பின், நிஜத்துக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத, சமூகத்திற்கு துரும்பேனும் கிள்ளிப் போடாத நடிக நடிகைகளுக்குக் கிடைக்கிறது. ஆசிரியர்களையும் எழுத்தாளர்களையும் "அம்போ" என்று விட்டுவிட்டு வளர்ச்சிப் பாதையை நோக்கி பீடு நடை போடும் சமூகமல்லவோ நமது...!?

சமீபத்தில் ஒரு பேருந்து பயணத்தின் பொழுது ஒரு தினசரி கையில் சிக்கியது. பசியுடன் இருக்கும் கழுதை, பெயர் பார்த்தா பேப்பர் சாப்பிடும்?
புரட்டிய பொழுது "கேள்வி பதில்" பகுதி கண்ணில் தட்டியது. சாதாரணமாக கை கால்களில் தான் புல்லரிக்கும் ஆனால் அப்பகுதியை படிக்கப் படிக்க கண்களிலேயே புல்லரிப்பு ஏற்பட்ட்டது...தீந்தமிழ் பாகெடுத்து சிந்தையில் வழிய விட்டு புத்தியில் அமிர்தம் சுரக்க வைக்கும் அறிவுசார் கேள்விகளும் அதைவிட அசரடிக்கும் பதில்களுமாய்...அதில் ஒரு கேள்வி. "நயன்தாரா நாய் வளர்க்கிறாரா?" என்னும் அந்த அற்புதமான கேள்வியை அனுப்பியவர் இந்தப் பதிவை படிக்க நேர்ந்தால் மன்னிக்கவும். கேள்வியை கேட்டவர் மீதோ அப்பத்திரிக்கை மீதோ அதை படிக்க வைத்த அந்த பேருந்தின் மீதோ அப்படியொரு "நேரத்தை" எனக்குக் கொடுத்த காலம் மீதோ எள்ளளவும் எனக்கு கோபமில்லை. மாறாக...நன்றிகள்...ஆம்...
நயன்தாரா பற்றிய பயனுள்ள செய்திகள் எதுவுமே இச்சமூகத்திடம் கைவசம் இல்லையா என்று அப்பொழுது தோன்றிய கனப்பொழுது எண்ணம் இன்று ஈடேறுகிறது...

அப்படிப்பட்ட ஒரு செய்தியை பகிர்ந்து கொண்ட திருப்தி எனக்கு. வாசித்த உங்களுக்கும் தானே?

பின் குறிப்பு: மாயா படம் நன்றாக இருக்கிறதாமே சார்...

Sunday, August 2, 2015

கலாமின் கடைசி உதவி...!

திரு.அப்துல் கலாம் மறைவினால் மனதளவில் உண்மையாய் மருகி நிற்கும், அவர் போன்று அறம் சார்ந்த வாழ்க்கையை ஒழுகி நிற்கும், எளிதில் கண்ணில் சிக்காத அரிய இனமாகிப் போன சான்றோர் எவரேனும் இக்கட்டுரையை படிக்க நேர்ந்தால் தயவு கூர்ந்து மன்னிக்கவும். இக்கட்டுரை உங்களை நோக்கி எழுதப்பட்டது அல்ல.

கலாமின் இறப்புச் செய்தி வந்த பொழுதிலிருந்து இந்த நிமிடம் வரை ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் சமூக வலைதளங்கள் எங்கும் "டிரெண்டிங்"கில் இருக்கிறார் அப்புனிதர்.
அயல்நாட்டவர் எவரேனும் இத்தளங்களுக்குள் நுழைய நேர்ந்தால்...ஆளாளுக்கு அப்துல் கலாம் குறித்த கருத்துக்களை அள்ளி வீசும் ஆச்சரியத்தின் அடியிலுள்ள அவலத்தை அறியாமல், "ஆஹா எப்பேர்ப்பட்ட தேசம் இந்த இந்தியா...அத்தேசத்தின் தெருக்களில் இறங்கினால் எதிர்படும் மனிதர்கள் யாவருமே மாசற்ற மாணிக்கங்களாய் இருப்பரோ! அவனி முழுதும் பவனி வந்தாலும் கோடிக்கணக்கான மகான்கள் குடியிருக்கும் பாரதம் போன்றதொரு தேசத்தை பார்க்க இயலாதோ!..." என்றெல்லாம் எண்ணிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

சாலையில் காண நேரும் விபத்தில் அடிப்பட்டுக் கிடக்கும் ஒருவருக்கு தண்ணீர் கொடுத்தால் கூட நாளை கோர்ட்டில் சாட்சிக்கு அலைய வேண்டியிருக்குமோ என்று நழுவும் மனிதத்தின் நரம்பற்ற மானுட கும்பலான நாம், கலாமின் மனிதத்தை படங்களாகவும் சம்பவங்களாகவும் பகிர்கிறோம். அதற்கும் நமக்கும் சற்றேனும் சம்பந்தம் இருக்கிறதா? பயணத்தின் போது பக்கத்து இருக்கைக் காரருக்கு ஒரு கோப்பை தண்ணீர் தர யோசிக்கும் நாம், கலாமின் நதிநீர் இணைப்புக் கனவை பகிர்கிறோம்...மேல்நிலை வகுப்புகளில் தமிழை ஒரு பாடமாகக் கூட எடுப்பதை லாயக்கற்றது என்று நினைக்கும் வர்க்கமான நாம், கலாம் தமிழ்வழி கல்வி பயின்றதை ஏதோ நாமே செய்ததை போல சொல்லிச் சொல்லி மாய்கிறோம்...மாணவர்களின் குரு என்று வெவ்வேறு பள்ளிச் சிறார்களுடன் கலாம் உரையாடுவது போன்ற படங்களைப் பகிரும் நாம், ஒரு குற்றவாளியை சோதனை செய்வது போல் மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதச்செல்லும் மாணவர்களை சோதனை செய்யும் அளவு புரையோடியிருக்கும் அவலத்தை, கல்வி நிலையங்கள் அடிக்கும் பகல் கொள்ளைகளை, நம் பிள்ளைகளின் நாளைய அமெரிக்க கனவின் பொருட்டு நைஸாக மறைக்கிறோம்...மறக்கிறோம்....வீட்டிலிருப்பவர்களிடம் கூட விட்டுக்கொடுக்கும் தன்மையற்று சுயநலப் பேய்களாய் அலையும் நாம், தோல்வியின் போது முன்நின்று வெற்றிகளில் அடுத்தவர்களை முன்னிறுத்தும் அற்புதப் பண்பை அப்துல் கலாம்,அவரின் உயரதிகாரியான சதீஷ் தவானிடமிருந்து கற்றதாக சொன்னதை ஆரவாரமாக அனைத்து பதிவுகளிலும் அள்ளி விடுகிறோம்...
டாஸ்மாக்கில் கொழித்த வருமானத்திலிருந்தே மதுவிலக்குப் பிரச்சாரத்திற்கு ஒதுக்கீடு செய்யும் பைத்தியக்காரத்தனத்தை பத்திரிகையில் படிப்பதோடு நம் வேலை முடிந்தது என்னும் கொள்கையுள்ள வெகுஜனமான நாம், அப்துல் கலாம் அறிவுறுத்திய தனி மனிதன் முன்னெடுக்க வேண்டிய சமூக இயக்கங்களுக்கான காரணிகளை "ஃபார்வார்டு" செய்வது அபத்தமாக இல்லை?
எப்பேர்பட்ட சமூகப் பொறுப்புணர்வு மிக்கவராக கலாம் விளங்கினார் என்பதை விளக்கும் எண்ணற்ற உதாரணங்களை உலா வரச்செய்வது இன்னொரு ரகம்...நம் பொறுப்புணர்வு தான் உலகப்பிரசித்தி பெற்றதாயிற்றே...புராதன சின்னங்களின் மீது சிறுநீர் கழிப்பது துவங்கி, பஸ்ஸில் பொழுது போகவில்லை என்றால் நகத்தால் சீட்டை நோண்டும் சீரிய பண்பு வரை ஒன்றா இரண்டா நம் சமூகப் பொறுப்பின் சான்றுகள்!
பள்ளி கல்லூரிகளுக்கு அவரின் மறைவுக்காய் விடுமுறை விட்டு காணப்போகும் பயன் என்ன? அதற்கு பதில் நாள் முழுதும் அவரின் பேச்சுகளை பள்ளியில் அமர்ந்து கேட்குமாறு செய்திருக்கலாமே? அது சரி, மேம்போக்காக கடைபிடிக்கப்படும் எதிலும் ஆழம் தேடுவது அறிவீனம்தானே...

"கனவு காணுங்கள்" என்ற வாக்கியத்தை வைத்து கணக்கற்ற பதிவுகள்...! குண்டு குழியற்ற சாலையில் பயணம் செய்ய, தனியே வெளியில் சென்ற வீட்டுப்பெண் தாமதமானால் ஆபத்தின்றி வீடு திரும்ப, அரசு அலுவலகங்களில் கையூட்டின்றி காரியம் முடிக்க, சிறுவர்களின் பால்யம் சிதையாமல் இருக்க, மனசாட்சிக்கு விரோதமான எதையும் முடியாதென மறுக்க...என எத்தனை எத்தனை கனவுகள்...ஆனால் இக்கனவு ஒவ்வொன்றையும் இந்நாட்டில், ஏதோ ஒரு மூலையில், ஒவ்வொரு நொடியும் சிதைத்து சின்னாபின்னம் ஆக்குபவர்கள் யார்? நம்மில் ஒருவர் தானே? நம் நேரடி மற்றும் மறைமுக ஆதரவு மற்றும் ஊக்குவிப்புக்களில் தானே இவை நிகழ்கின்றன? கலாமின் "கனவு காணுங்கள்" பகிரும் நமக்கு மனசாட்சி உறுத்தாதா? மனசாட்சியா? அதெல்லாம் இப்போது மருத்துவமனையில் பிறப்பு நிகழ்ந்தவுடன் குப்பைக்குப் போகும் பிரசவ கழிவுகளுடனேயே அதுவும் அப்புறப்படுத்தப்பட்டு விடுகிறதே என்கிறீர்களா? சரிதான். அதனால் தான், கலாம் புகழ் பாடும் கணத்திலும், வலைதளத்திலும் நம் இரட்டைத்தன்மை குட்டு சட்டென்று வெளிப்படுகிறது. ஒரு அறிமுகமற்ற நபர் "கலாம் மறைவுச் செய்தி கேட்டதிலிருந்து தூக்கமில்லை" என்று ஒரு "போஸ்ட்" போடுகிறார். சில நிமிடங்களில் ஹன்சிகாவின் அடுத்த பட ஸ்டில் ஒன்றும் போடுகிறார். இதைவிட எளிய சான்று தேவையா நாம் யாரென்று தெரிந்து கொள்ள? அந்த அறிமுகமற்ற நபர் நம்மில் பெரும்பாலானவர்களின் பிம்பம் காட்டும் கண்ணாடி தானே!

நாளைய பாரதம் பற்றி நாளும் பொழுதும் யோசித்த நற்குணங்களின் தொகுப்பான அவருக்கு, சாமானியன் என்னும் சாக்கு போர்த்தி  நாடெங்கும் நிறைந்திருக்கும் நம்மை போன்று களைகளைப் பற்றி தெரியாமலா இருந்திருக்கும்? அதனால் தான் போகும் பொழுதிலும், போன பின்னும் நமக்கு நச்சென்று ஒன்றை புரிய வைத்துப் போயிருக்கிறார். நாமறியாது, நாமே கருவியாகி, நமக்கு நாமே பொருளாய் புரிபடும் வண்ணம் கலாம் பற்றிய எண்ணற்ற பகிர்வுகளின் வழி புகுந்து அவருக்கு மிகவும் பிடித்த வடிவமான ஆசிரியரின் உருக்கொண்டு உதவியிருக்கிறார். பாரதி பாடிய சின்னஞ்சிறு கதைகள் பேசி பிறர் வாடப் பல செயல்கள் செய்யும் வேடிக்கை மனிதர்கள் நாம் என்று பொட்டிலடித்தாற் போல் புரிய வைத்திருக்கிறார்.
கலாம் வாழ்ந்து காட்டியனவற்றை கதைகள் போல் பகிர்கிறோம் அதற்கு சற்றும் சம்பந்தம் இல்லா வண்ணம் நம் அன்றாட வாழ்வில் நடக்கிறோம். நாம் வேடிக்கை மனிதர்களேயன்றி வேறென்னவாக இருக்க முடியும்?

அப்துல் கலாம் நடமாடிய மண்ணில் இருக்கும் நமக்குள், அவரின் அளப்பரிய பண்புகளின் வாசனையின் ஒரு அணுவேனும் நமக்குள் இறங்கியிருக்காதா என்று நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொள்வோம். அவரைப் பற்றிப் பேசுவதை விட அவர் வாழ்வின் அடிப்படைத் தத்துவமான சுயநலமற்ற மனிதத்தை நாமும் பயின்று, நமக்கென்று இல்லாது பிறர் பொருட்டு ஒரு துரும்பையேனும் நகர்த்த முயற்சிப்போம். முகநூலில் கலாம் படங்களை பொழுது போக்கு போல போஸ்ட் செய்வதை விட்டுவிட்டு நம் அகநூலில் அடைந்திருக்கும் அழுக்குகளை நீக்கும் வேலையில் இறங்குவோம்...!

Sunday, June 14, 2015

அம்மா நூடுல்ஸ்...!

அடடா... புதுப்புனலின் வேகத்துடன் ஒரு புரட்சிக்குரிய எழுச்சியுடன் சில நாட்களாக தூள் கிளப்புகிறது மேகி விவகாரமும் விவாதங்களும்...உணவு மற்றும் நுகரும் பொருட்களில் கலப்படமா என்று வெகுண்டு எழுந்து கொதிக்கிறது தேசம்! சாதாரண தேசமா இது? அறிவு ஜீவிகள் நிறைந்த நாடல்லவா? அதான் "இரண்டு நிமிடங்களில்" கொதித்து எழுகிறது. ஆனால் சற்றே அக்கடா என்று அமர்ந்து ஆலோசித்மென்றால், புத்தி கெட்ட தேசத்தில் இது போன்று நிகழ்வதில் வியப்பேதும் இல்லையே என்ற "தெளிவு" கிட்டும்.

நம் குழந்தை வளர்ப்பு முறை மீதும் குடும்ப வாழ்வியல் கட்டுமானம் மீதும் தோண்டிச் சிதைக்க என்பதுகளில் முன்னெடுக்கப்பட்ட முதல் கடப்பாறை மேகி என்றால் மிகையாகாது. விடுமுறை தினங்களில் ஓடியாடி அயர்ந்து வரும் சிறார்களுக்கு ஊட்டமிகு தின்பண்டங்களுக்கு மாற்றாக இரண்டு நிமிடங்களில் போஷாக்கு காட்டுவதாய் வந்த விளம்பரங்களில் வீழ்ந்த குடும்பத் தலைவிகளின் பகுத்தறியும் பக்குவத்தின் நீட்சி தான் இன்று நாம் காணும் அர்த்தமற்ற கூப்பாடு...சற்று யோசித்தால்...

கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் சென்றால் தான் வாழ்க்கை வண்டி ஓடும் என்பது காலத்தின் கட்டாயம் என்றால், சமையலறையின் பளுவையும் பாங்கையும் இருவரும் பங்கிட்டு செய்வது தானே அதற்கேற்ற நியதியாக மாற்றம் பெற்றிருக்க வேண்டும்? ஆனால் "உலகமயமாக்கல்" மூலம் நாம் அடைந்த ஏராளமான சிதைவுகளில் கண்டுகொள்ளாமல் விடப்பட்டவற்றின் முக்கியமானது சமையலறைகளின் சிதைவு இல்லையா?
இன்று கட்டப்படும் வீடுகளில் சமையலறையும் அலங்காரம் மிக்கதாக இருக்கிறதே தவிர அதன் பணி செய்கிறதா? எத்தனை வீடுகளில் தினமும் "புதுச் சமையல்" நடை பெறுகிறது? வார இறுதியில் துணி துவைப்பது அடுத்த வாரத்திற்கான ஏற்பாடு எனலாம். ஆனால் அந்த வாரத்திற்கான சமையலை செய்து ஃபிரிட்ஜில் வைத்து வாரம் முழுதும் பயன்படுத்துவதை?

மக்களின் நாடியை நன்றாக படிக்கத் தெரிந்தவர்கள் வியாபாரம் செய்கிறார்கள். ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை. சமையல் செய்ய நேரமும் விருப்பமும் இல்லாமல் பணத்தின் பின் மட்டுமே ஓடும் சமூகத்தை ஏமாற்ற, நேரத்தை சேமிப்பதாகச் சொல்லும் கவர்ச்சி விளம்பரங்கள் போதுமே? ஒரு சாதாரண நகர ஓட்டலில் கூட "தோசை" என்று சொல்பவர்கள் பாமரர்கள் எனவும் "தோசா" என்று சொல்பவர்கள் படித்த அறிவுஜீவிகள் என்றும் புரிந்து கொள்ளப்படும் புத்தி கெட்ட தேசத்தில் எதையும் எப்படி வேண்டுமானாலும் விற்கலாம்...கொழுக்கட்டையை ஓட்டலில் சாப்பிட முடியுமா நம்மால்? "மோமோஸ்" என்று பெயரிட்டால் உயர ரகக் காரில் வந்திறங்கி சாலையோரத்தில் கூட நாம் "கொழுக்கட்டை" சாப்பிடுவோம். என்ன, அதன் விலை ஐம்பது ரூபாய் இருந்தால் தான் "சாப்பிடத் தகுந்தது" என்று நாம் நம்புவோம். ஐந்து ரூபாயில் விற்கும் கம்பங்கூழ் குடித்தால் நம் இமேஜ் என்னாவது? தாவர ஜங்கமத்தில் ஒரு பிறப்பாக நம்மை சமூகம் ஒதுக்கி விடுமோ என்ற அச்சம் தோன்றுமே?

நம்மாழ்வார் எடுத்துரைத்த இயற்கை உணவு வகைகளை விட நடிகைகள் விளம்பரப்படுத்தும் பகட்டு வகைகள் தானே நம் அறிவுக்கு பொருத்தமாக இருக்கிறது? சமூகமே இப்படி இருக்கும் பொழுது வியாபாரம் செய்பவர்களை சாடுவது நகைச்சுவையாக இல்லை?

சமீபத்தில் ஒரு ரயில் பயணத்தின் போது பக்கத்து இருக்கையில், இந்தியாவின் வல்லரசு கனவின் ஒரு துகளான ஐ.டி இளைஞர் ஒருவர் அமர்ந்திருந்தார். முந்தைய தலைமுறை பயணங்களில் வயல்வெளிகளையும் வானத்தையும் பார்த்து மகிழ்ந்தபடி பயணம் செய்தது. இப்போதெல்லாம் அப்படி பயணம் செய்தால் "பொன்மாலைப் பொழுது" பாட்டில் ராஜசேகரின் பார்வை போல நம்மை நோக்கி பல பார்வைகள் வரக்கூடும்! அவர் மடிக்கணிணியில் மூழ்கியிருந்தார். பயணத்தின் போது கூட சயனிக்க முடியாத அளவு வேலைப்பளுவை அவருடைய பன்னாட்டு நிறுவனம் அளித்திருக்கக் கூடும்...நடுவே "ஸ்மால் சைஸ்" பிசாவையும் ஒரு கையில் வைத்துக் கொண்டு பசியாறினார். அந்த இடைவெளியில் நிகழ்ந்த பேச்சில் அவர் பிசா பிரியர் என்று உணர முடிந்தது. அப்படி இப்படியாக பேச்சு இயற்கை உணவு பக்கம் போய், "அதுக்கெல்லாம் ஏது சார் நேரம்..." என்று வளைந்து "ஹூ இஸ் நம்மாழ்வார்" என்பதோடு முடிவுக்கு வந்தது. அவர் அமெரிக்க பிறப்போ ஆஸ்திரிலேய குடியோ அல்ல. தென் தமிழ் நாட்டின் குறுநகரம் ஒன்றிலிருந்து "உழைத்து முன்னேறியவர்". நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம் என்பதை தெள்ளந்தெளிவாய் உணர்த்தும் உதாரணம் இது.


இரண்டாயிரம் நெல்வகைகள் இருந்த மண்ணின் மரபு பற்றிய அறிவேதும் அற்றுத் திரியும் நாம், இரண்டு நிமிட ஆச்சரியங்களில் வீழ்வதில் வியப்பேதும் இல்லையே! இப்போது உலகம் இருக்கிற இருப்பில், கிறுக்குப் பிடித்து பறக்கும் வாழ்க்கை முறையில், மெதுவாக கொல்லும் விஷம் என்று சொன்னாலும், "மெதுவாகத் தானே..." அதற்குள் "முன்னேறுவோம்" என்ற பித்தம் பிடித்துத் திரிகிறோம் நாம். அப்புறம் எந்த நச்சுப் பொருள் எந்த அளவில் எதில் இருந்தால் என்ன? மேகிக்கு இத்தனை கூச்சல் எதற்கு? ஷாம்பூக்களில் கலந்திருக்கும் நச்சு குறித்து அதன் மேலேயே அச்சடித்திருக்கிறார்களே? கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா என்று விவாதித்த பெரும்பரம்பரை அல்லவா நமது? ஷாம்பூவே பயண்படுத்தாமல் சீயக்காய் தேய்த்து குளிப்பவர்கள் சிரிப்புக்குரியவர்களாகி விட்டனரே இன்று! ஊறுகாய் முதற்கொண்டு உண்ணும் அனைத்தும் பாட்டிலில் வந்து விட்டதே...அதன் மீதே பிரிசர்வேட்டிவ் லிஸ்ட் இருக்கிறதே...வாங்காமல் விட்டோமா நாம்? வீட்டில் ஊறுகாய் போடுவது வீண் வேலை என்ற எகத்தாளம் அல்லவா இன்றைய நிலை?

இதில் இன்னொரு காமெடியும் உண்டு. விளம்பரத்தில் நடித்தவர்கள் மீது நடவடிக்கை என்றால், அதை காட்டிய ஊடகங்களும் அதற்கு உடந்தை தானே? அவர்களே விவாதம் நடத்துவது விந்தையிலும் விந்தை. அதை நாம் பார்த்து மகிழ்வது உணர்த்துவது நாமெல்லாம் ஒரு மந்தை என்பதை. எல்லாவற்றிற்கும் மேலாக, மேகி விளம்பரத்திற்கு சேனல்கள் கோடியாய் கோடியாய் வாங்கியிருக்கும் இல்லையா? ஆனால், இந்த விவகாரம் பற்றிய செய்தி முழுவதும் திரையின் ஒரு பக்கத்தில் அதே விளம்பரத்தை காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். ஒண்ணுமே புரியலையே...ஒரு வேளை எல்லோருமே எல்லோரையும் ஏமாற்ற பழகி விட்டதனால் தான் இப்படியோ?

சரி, "அம்மா நூடுல்ஸ்" என்று போட்டு விட்டு அதைப் பற்றி எதுவுமே சொல்லவில்லையே என்கிறீர்களா? எண்பதுகளில் மேகி எங்கள் தெருமுனை கடைகளில் தலைகாட்டிய பொழுது அழுது அடம்பிடித்து நான் வாங்கிய மேகி பாக்கெட்டை முன்னும் பின்னும் பார்த்த அம்மா, "இதெல்லாம் நமக்கெதுக்குடா...என்னத்தையெல்லாம் கலந்துருக்கானோ" என்றது நினைவிருக்கிறது. அம்மாக்கள் சொல்வது பெரும்பாலும் பொய்ப்பதில்லை இல்லையா?

Sunday, May 31, 2015

ஒரு பரபரப்பான செய்தி...

நடிகை வீட்டு நாய் குட்டிக்கு நகம் வெட்டப்பட்டது துவங்கி பள்ளத்தில் விழுந்த பேருந்தில் சிக்கிய கள்ளக் காதல் ஜோடி தப்பிய தகவல் வரை (அதென்ன சார் "கள்ளக் காதல்"? கலிகாலத்தில் இது ஒரு பொருட் பன்மொழி அல்லவா? சரி விடுங்கள் இந்தப் பதிவு அதை விட பயனுள்ள பொருள் பற்றியது என்று நம்புவோம்...) நம் பத்திரிகைகளும் தொலைகாட்சிகளும் கிளப்பும் பரபரப்புக்கு பஞ்சமேயில்லை. பரபரப்பு இருந்தால் தான் அது செய்தி என்ற நிலைக்கு நாம் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. எனவே நம் பங்குக்கு நாமும் பரபரப்பு செய்தி கொடுக்க வேண்டாமா? என்ன,  மேற்சொன்ன உதாரணங்கள் போன்றவற்றை செய்தியாய் கருத மனசாட்சி உறுத்துவதால் சற்றே "பரபரப்பு குறைந்த" செய்தி ஒன்றைத் தருகிறேன். வாசித்து மகிழுங்கள்....


இரண்டு வருடங்களாய் பொழுது விடிந்தால் ஒரு பரபரப்பு தொற்றிக் கொள்கிறது சார்...எப்படி என்று கேளுங்கள்...உதாரணமாக ஒரு உற்சாக நிகழ்வு ஒன்றை பகிர்கிறேன்..சில மாதங்களுக்கு முன்னால் ஒரு தொட்டியில் வெண்டைக்காய் விதை போட்டு மொட்டை மாடியில் வைத்தோம். "தொட்டியில வெண்டைக்காய் வரும்னு நினைக்கிற மண்டைக்குள்ள மண் தான் இருக்கும்" என்று கூட சிலர் சொன்னார்கள். நாங்களும் ஒரு வேளை அப்படித்தானோ என்று சந்தேகப்பட்டோம். ஆனால் சில வாரங்களில் பச்சை நிற சீரியல் பல்புகள் போல சில மொட்டுக்கள் தோன்றின.



தினமும் அந்த மொட்டுக்கள் என்னவாயிற்று என்ற எதிர்பார்ப்பு காலை பல் துலக்கும் போதே முளைத்து விட, ஆளாளுக்கு மொட்டை மாடிக்கு போய் ஒரு பார்வை பார்த்து "பரபரப்பை" தனித்துக் கொள்வோம். ஒரு வாரம் கழித்து அந்த மொட்டுக்களில் இருந்து மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூக்கத் துவங்கின.





அக்கம் பக்கத்தார் மகரந்த சேர்க்கை இல்லாமல் பூ அடுத்த கட்டத்தை எட்டாது என்று அச்சம் ஏற்றினர். எங்களின் அதிகாலை பரபரப்பு இன்னும் அதிகமானது...மேனிக்கே தண்ணீர் கிட்டாத கான்கிரீட் கூடுகள் நிறைந்த நகரத்தின் இடுக்குகளில் தேனியை தேடித் திரிவது பைத்தியக்காரத்தனம் தான்... ஆனால் நம் கண்ணுக்குத் தெரியா அதிசயங்களை இயற்கை நொடி தோறும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. ஆம். ஒரு காலைப் பொழுதில் தண்ணீர் விடச் சென்ற நானும் மனைவியும் கண்களை அகல விரித்து பார்க்கும் வகையில் ஆச்சரியம் நிகழ்ந்திருந்தது. மலர் வாடுமோ என்ற எங்கள் அலர் நீக்கும் வகையில் பூத்திருந்த மலர்கள் அனைத்தும் பூசியடைத்தது போல் மூடி புடைத்தபடி இருந்தன நக அளவு வெண்டைகளாய் மாறி,,,!





ஒரு வாரம் உச்சகட்ட பரபரப்பு. ஆனால் பரபரப்பு எப்படி அமைதி தரும்? கட்டாயம் தரும். செடி நன்றாக வளர வேண்டும் என்ற பரபரப்பு மனதுக்கு அமைதியைதான் தருகிறது. இயற்கையின் எத்தகைய பரபரப்பும் அமைதியை நோக்கி தான் நம்மை இட்டுச் செல்லுமோ? ஒரு வாரத்தில் விரல் நீளத்தை தாண்டிய வெண்டைக்காய்கள் எங்களை பார்த்து கைகொடுப்பது போல தொட்டி முழுதும் நீண்டு நின்றபோது மனதுக்குள் ஒரு அற்புதமான வாசனை பரவுவது போன்ற "பரபரப்பு" தோன்றியது. மண் வாசனையாக இருக்குமோ?

சொல்லுங்கள் சார்...அர்த்தமற்ற, அறிவை மழுங்கடிக்க வைத்து, மனதை அழுகிப் போக வைக்கும் செய்திகளை விட இதில் சற்று பரபரப்பு குறைவு எனினும் இந்த "செய்தி" எப்படி? இச்செய்தி உங்களுக்கு புதிதென்றால், பிடித்தமென்றால், நீங்களும் முயன்று பாருங்கள். ஒரு தொட்டி மண்ணும் சில விதைகளும் உங்கள் நாட்களை எத்தகைய "பரபரப்பு" மிகுந்தவை ஆக்குகின்றன என்று...அதிலும், அனுதினமும் அந்த பரபரப்பு உங்களுக்கு தரும் அமைதியை...ஆனந்தத்தை...பரபரப்பின் அடியிலும் அமைதி உண்டு என்னும் ஆச்சரியத்தை...!


Sunday, May 3, 2015

இது தேவையா?

தமிழர்களாகிய நாம் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஆனால் சும்மா உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் என்பதோடு நிறுத்தினால் நம் பெருமை என்னாவது? எனவே அவ்வப்பொழுது நாம் கண்மூடித்தனமாக உணர்ச்சிவசப்படுவோம் என்பதையும் காட்டிக் கொண்டால் தானே "உணர்ச்சிவசப்படுதல்" பெருமையை புதியதொரு தளத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்!.

அதன் மற்றொரு பரிமாணமாக நாம் சமீபத்தில் கண்டது தான் பெருமாள் முருகனின் "மாதொரு பாகன்" குறித்த பரபரப்பு. ஒரு குழுவோ கூட்டமோ நினைத்தால் ஐந்து வருடத்திற்கு முன்பு வந்த ஒரு நாவலை எடுத்து, அதிலிருந்து சில பக்கங்களை பிரதியெடுத்து பிரம்மாண்டமாக்கி போராட்டம் செய்து பரபரப்பை ஏற்படுத்தி, அதை எழுதியவரை "இனி எழுதப்போவது இல்லை" என்று சொல்ல வைக்க முடியும். அந்த எழுத்தாளரும் நம் போல தமிழர் தானே? அவரும் போராட்டக்காரர்களுக்கு இணையாக உணர்ச்சிவசப்படுவார் இல்லையா? பட்டார்..."உள்ளே இருக்கும் எழுத்தாளன் இறந்து விட்டான். நாவலின் அத்தனை பிரதிகளையும் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்" என்று உணர்ச்சி வசப்பட்டார். மக்கள் தான் இப்படி... சமூகத்தை காக்கும் அதிகார வர்க்கம்? அவர்கள் என்ன சளைத்தவர்களா? காவல்துறையும் தன் பங்குக்கு, "எதற்கு வீண் சிக்கல்கள்" என்ற ரீதியில் எழுத்தாளருக்கு அறிவுரை (எச்சரிக்கை?) கொடுக்க, வெறும் வாய்க்கு கிடைத்த அவலாக "கருத்து சுதந்திரம்" என்று ஒரு கூட்டம் வழக்கமான குரலெழுப்ப, பத்திரிகைகளுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் ஒரு வாரம் நல்ல தீனி.

முதலில் பெருமாள் முருகனை பார்ப்போம். அவர் ஒரு ஆசிரியர். ஒரு உண்மையான நிகழ்வாகவே இருந்தாலுமே, அதைப் பற்றி பேசுவதாலோ எழுதுவதாலோ யோசிப்பதாலோ எப்பயனும் இல்லையெனிலோ அல்லது பலர் மனதை புண்படுத்தக் கூடும் எனிலோ அதை தவிர்க்க வேண்டும் என்று மற்றவர்களுக்கு கற்பிக்க வேண்டிய ஆசிரியர் பணி செய்பவர். அத்தகைய தவிர்த்தல் என்பது கருத்துப் பக்குவம் ஆகும். கருத்துச் சுதந்திரத்தை விட கருத்துப் பக்குவம் சாலச் சிறந்தது என்று அவர் அறிந்திருக்க மாட்டார் என்று சொல்ல இயலாது. ஆனாலும், மேற்சொன்ன விளக்கத்தின் படி, கருத்துப் பக்குவம் அற்றது என்று கருத்தில் கொள்ள வேண்டிய‌ ஒரு நிகழ்வை தன் படைப்பினூடே வெளியிடுகிறார். "கருத்துப் பக்குவம்" அவரிடமிருந்து அக்கணமே நீங்கி விடுகிறது. மீதமுள்ள பரிமாணமான கருத்துச் சுதந்திரத்தையாவது அவர் உறுதியாக பற்றினாரா? அப்படியென்றால், எக்காரணத்தைக் கொண்டும் அவர் "இனி எழுதுவதில்லை" என்பது போன்ற நிலைக்குச் சென்றிருக்க முடியாது.

எழுத்து என்பது தெய்வத்தை தொழுதல் போன்றது. நம்பிக்கை அற்று அதை செய்ய இயலாது. பெருமாள் முருகன், அவர் தன் எழுத்தின் மீது, மேற்சொன்ன கருத்துப் பக்குவம், கருத்துச் சுதந்திரம் என்ற இருவகை நம்பிக்கைகளையும் இழந்து விட்டவராகவே நமக்குத் தெரிகிறார். எதிர்ப்பை தீவிரமாக முன் நின்று எதிர்கொண்டு ஏன் தன் எழுத்தை தொழவில்லை பெருமாள் முருகன்?

இப்போது "பற்ற" வைத்த‌ பண்பாளர்களைப் பார்ப்போம்...இவர்கள் உண்மையிலேயே மேற்சொன்ன "கருத்துப் பக்குவத்தின்" கூறுகள் குறித்த அக்கறை கொண்டவர்களாக இருந்திருந்தால், நாவல் எழுதியவரை ஒரு குழுவாக தனியே சந்தித்து சில பகுதிகளின் தேவையற்ற தன்மை குறித்து விவாதித்து, அதை நீக்குவதற்கு ஏற்பாடு செய்திருக்கலாம். ஆனால் அப்படி செய்தால் அவர்கள் எப்படி "வெளியே" தெரிவார்கள்? விஷயம் முடிவுக்கு வருவதா முக்கியம்? அது எத்தனை பெரிதாக வெளியில் தெரிகிறதோ அதில் தானே "வெற்றி" இருக்கிறது? எனவே இவர்களிடமிருந்து அப்படிப்பட்ட அணுகுமுறையை நாம் எதிர்பார்க்க முடியாது. சரி, ஒரு நாவலில் எழுதப்பட்ட பழைய நடைமுறையை சினங்கொண்டு எதிர்க்கும் சிங்கங்களாகிய இவர்கள், ஒரு குறிப்பிட்ட பிரிவைத் தாண்டி, ஒட்டு மொத்த மனிதப் பண்பாடு, உறவு மற்றும் உணர்வு முறைகளையெல்லாம் குழி தோண்டி புதைத்து, காணச் சகிக்காத  வக்கிரங்களை காட்சிகளிலும் கேட்கச் சகிக்காதவற்றை பாடல்களாகவும் தமிழ்நாடு முழுக்க புகட்டிக் கொண்டே இருக்கும் படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் ஒன்றும் பேசாமல் இருப்பதெப்படி? ."பற்ற" வைக்கும் சிங்கங்கள் இந்த அசிங்கங்கள் பற்றி வாய் திறவாமல் இருப்பது ஏனோ? ஒரு வேளை இலக்கியத்தை மட்டும் தான் இவர்கள் எதிர்ப்பார்களோ?

மீடியாவுக்கு வருவோம். அவை என்ன செய்தன? பரபரப்பாக பேசக் கூடிய பத்து பேரை நாளுக்கு ஒன்றாய் அழைத்து வந்து பிழைப்பை பார்த்தன. "மாதொரு பாகன்" முழுதாக நீங்கள் படித்து விட்டுத்தான் பேசுகிறீர்களா என்று கேட்கவா முடியும்?

ஆக மொத்தம் அத்தனை கோணங்களிலும் அனைத்து வகை கோணல்களையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் பேணி வளர்த்து வரும் தமிழ் சமூகத்திற்கு இது போன்றதொரு பரபரப்பு தேவைப்படுகிறது. தேவைப்படுவதை எப்படியேனும் உருவாக்கி பெரிதாக்கி உற்சாகம் அடைபவர்களில் நம்மிலும் சிறந்தோர் உலகினில் உண்டோ?

சரி சார்...என்னய்யா நீ? ஜனவரி மாதம் நடந்ததைப் பற்றி இப்போது எழுதுகிறாய் என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. ஆனால் காரணம் இருக்கிறது சார். நம்முடைய தேசத்தின் சிறப்பு குணமே எதிலும் "இன்ஸ்டண்ட்" முறையில் வெட்கம் மானம் ரோஷம் காட்டி விட்டு, பின் அதை மறந்து விடுவதுதான். மறக்கக் கூடாதவற்றை மறந்து போன நேரத்தில் ஞாபகப்படுத்துவது தானே சரி?


Sunday, January 11, 2015

ரகசியமாய் கேட்டுக்குங்க...

ஆமாம் சார். கொஞ்சம் காதை பக்கத்தில் கொடுங்க. இந்த விஷயத்தை சத்தமில்லாம காதில் சொல்லி விடுகிறேன். ஏற்கெனவே உங்களுக்கு தெரிஞ்சு இருக்குமோ இல்லையோ எப்படி இருந்தாலும் இந்த மாதிரி விஷயங்களை இன்னொரு முறை சொல்வதில் எந்த நஷ்டமும் இல்லை.

சரி, என்ன ரகசியம் என்கிறீர்களா? ரகசியம் என்றால் வெளியில் தெரியாமல் இருப்பது தானே? அப்படியென்றால், நல்ல புத்தகம் என்பதே ஒரு ரகசியமான விஷயம் போல ஆகிவிட்டது இல்லையா? வருடா வருடம் போல் இந்த வருடமும் புத்தகக் கண்காட்சி துவங்கி விட்டது. வீட்டுக்கு ஒரு விவேகான‌ந்தர் இல்லையென்றாலும் வீட்டுக்கு ஒரு எழுத்தாளர் தமிழ் நாட்டில் இருக்கிறார்களோ என்று நினைக்கும் அளவுக்கு,  எந்த புத்தகத்தை வாசிப்பது என்று பெருங்குழப்பம் ஏற்படும் அளவுக்கு, ஏகப்பட்ட புது புத்தகங்கள்...

மேலும், "அந்த காலத்து" அற்புதங்களையே இன்னும் படித்து முடிக்கவில்லையாதலால் புதியன உடனே வாங்குவதில் நிறைய தயக்கங்கள் உண்டு. இருப்பினும், புதிய வருகைகள் பற்றி அறிந்து கொள்வதற்கேனும் புத்தகக் கண்காட்சி நிரம்ப உதவுகிறது. சென்னையில் வசித்தால் தான் புத்தகக் கண்காட்சிக்கு செல்ல வேண்டும் என்பதில்லை. எந்தெந்த ஊர்களில் இருந்தெல்லாமோ ஏதேதோ "புண்ணிய தலங்களுக்கு" செல்வதை விட, கண்காட்சியில் புத்தகங்களை திரட்டுவதும் அதன் மூலம் சிந்தனை வித்துக்களை நமக்குள் விதைப்பதும் அதிக புண்ணியம் சேர்க்கும் வழியாக இருக்கும் என்பது என் எண்ணம்.

இந்த முறை, ஒரு நல்ல (புது) கவிதை புத்தகத்தையேனும் தேடிப் பிடித்து விட வேண்டும் என்று உறுதி பூண்டிருக்கிறேன். இப்போது வரும் கவிதை புத்தகங்களை மனது ஏற்க‌ மாட்டேன் என்கிறது. கவிதை என்ற பெயரில் உரைநடையை, இன்னும் சொல்லப் போனால் பேச்சு நடையை வரிகளுக்கிடையில் மடக்கி நீட்டி எழுதும் வகையே இன்று கவிதை என்று அழைக்கபடுவது மிகவும் வருந்தத்தக்கது. இது போன்ற கவிதைகள் எழுதுவோரையும் வெளியிடுவோரையும் "மொழித் துரோகம்" என்றொரு புதிய சட்டப் பிரிவு ஏற்படுத்தி தண்டித்தால் தேவலையோ? மனதுக்குள் நீண்ட காலம் உழலும் ஒரு வரியேனும் ஒரு கவிதை புத்தகத்தில் இருக்காதா என்ற ஆயாசம் இந்த முறை நீங்கும் என்ற நம்பிக்கை...

தற்போதைய சமூக இருப்பில், பன்னுயிர் பேணுதல் நம் அனைவரும் பங்கெடுக்க வேண்டிய முக்கிய தேவையாக மாறி விட்டது. இயற்கையை சீரழிப்பதன் மூலம் அவ்வாறு ஆக்கி வைத்திருக்கிறோம் நாம். தியோடர் பாஸ்கரன் எளிய தமிழில் எழுதியிருக்கும் கானுயிர் கட்டுரைகள் மாணவர்கள் முதல் முதியோர் வரை படிக்க வேண்டிய ஒன்று.

தமிழ் இலக்கணம் ஒரு எளிய அறிமுகம், வண்னதாசனின் "நொடி நேர அரை வட்டம்",  நாஞ்சில் நாடனின் "வல்விருந்து", மகுடேஸ்வரனின் "களிநயம்", எஸ்.ராவின் "சஞ்சாரம்" ஆகியவை இவ்வருடம் வசீகரிக்கின்றன. "தமிழ் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள்" என்றொரு புத்தகம் தமிழினி மூலம் வந்திருக்கிறது. வெங்கட் சாமிநாதனின் "நினைவுகளின் சுவட்டில்" இரண்டாம் பாகத்தை மெய்ப்பொருள் பதிப்பகம் வெளியிட்டு உள்ளது.

புத்தகங்கள் வாங்குகிறோமோ இல்லையோ...சில வருடங்கள் கண்காட்சிக்கு போய் வந்தால், ஒரு புத்தகம் எத்தனை கவர்ச்சியான அட்டை மற்றும் கட்டுமானம் கொண்டிருந்தாலும் அதில் ஏமாறாமல் சில வரிகளை படித்தவுடன் அந்த புத்தகத்தை எந்த "இடத்தில்" வைக்கலாம் என்று எடை போட பயிற்சி பெறும் சிறந்த வாய்ப்பு கிடைக்கிறது. இதுவே புத்தக கண்காட்சி நமக்குத் தரும் மிகப்பெரிய அனுபவம்.

மற்றபடி, கண்ணதாசனின் "நீ எனக்காக உணவு உண்ண எப்படி முடியும்?" பாடல் வரி போல, அவரவர் வாசிப்பு அவரவர் "வயிறு" சம்பந்தப்பட்டது. அஜீரணம் ஏற்படாமல் உடலுக்கும் மனதுக்கும் "சாப்பாடு" சாப்பிடுவது அவரவர் விருப்பம். சரி தானே?