/ கலி காலம்: கலாமின் கடைசி உதவி...!

Sunday, August 2, 2015

கலாமின் கடைசி உதவி...!

திரு.அப்துல் கலாம் மறைவினால் மனதளவில் உண்மையாய் மருகி நிற்கும், அவர் போன்று அறம் சார்ந்த வாழ்க்கையை ஒழுகி நிற்கும், எளிதில் கண்ணில் சிக்காத அரிய இனமாகிப் போன சான்றோர் எவரேனும் இக்கட்டுரையை படிக்க நேர்ந்தால் தயவு கூர்ந்து மன்னிக்கவும். இக்கட்டுரை உங்களை நோக்கி எழுதப்பட்டது அல்ல.

கலாமின் இறப்புச் செய்தி வந்த பொழுதிலிருந்து இந்த நிமிடம் வரை ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் சமூக வலைதளங்கள் எங்கும் "டிரெண்டிங்"கில் இருக்கிறார் அப்புனிதர்.
அயல்நாட்டவர் எவரேனும் இத்தளங்களுக்குள் நுழைய நேர்ந்தால்...ஆளாளுக்கு அப்துல் கலாம் குறித்த கருத்துக்களை அள்ளி வீசும் ஆச்சரியத்தின் அடியிலுள்ள அவலத்தை அறியாமல், "ஆஹா எப்பேர்ப்பட்ட தேசம் இந்த இந்தியா...அத்தேசத்தின் தெருக்களில் இறங்கினால் எதிர்படும் மனிதர்கள் யாவருமே மாசற்ற மாணிக்கங்களாய் இருப்பரோ! அவனி முழுதும் பவனி வந்தாலும் கோடிக்கணக்கான மகான்கள் குடியிருக்கும் பாரதம் போன்றதொரு தேசத்தை பார்க்க இயலாதோ!..." என்றெல்லாம் எண்ணிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

சாலையில் காண நேரும் விபத்தில் அடிப்பட்டுக் கிடக்கும் ஒருவருக்கு தண்ணீர் கொடுத்தால் கூட நாளை கோர்ட்டில் சாட்சிக்கு அலைய வேண்டியிருக்குமோ என்று நழுவும் மனிதத்தின் நரம்பற்ற மானுட கும்பலான நாம், கலாமின் மனிதத்தை படங்களாகவும் சம்பவங்களாகவும் பகிர்கிறோம். அதற்கும் நமக்கும் சற்றேனும் சம்பந்தம் இருக்கிறதா? பயணத்தின் போது பக்கத்து இருக்கைக் காரருக்கு ஒரு கோப்பை தண்ணீர் தர யோசிக்கும் நாம், கலாமின் நதிநீர் இணைப்புக் கனவை பகிர்கிறோம்...மேல்நிலை வகுப்புகளில் தமிழை ஒரு பாடமாகக் கூட எடுப்பதை லாயக்கற்றது என்று நினைக்கும் வர்க்கமான நாம், கலாம் தமிழ்வழி கல்வி பயின்றதை ஏதோ நாமே செய்ததை போல சொல்லிச் சொல்லி மாய்கிறோம்...மாணவர்களின் குரு என்று வெவ்வேறு பள்ளிச் சிறார்களுடன் கலாம் உரையாடுவது போன்ற படங்களைப் பகிரும் நாம், ஒரு குற்றவாளியை சோதனை செய்வது போல் மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதச்செல்லும் மாணவர்களை சோதனை செய்யும் அளவு புரையோடியிருக்கும் அவலத்தை, கல்வி நிலையங்கள் அடிக்கும் பகல் கொள்ளைகளை, நம் பிள்ளைகளின் நாளைய அமெரிக்க கனவின் பொருட்டு நைஸாக மறைக்கிறோம்...மறக்கிறோம்....வீட்டிலிருப்பவர்களிடம் கூட விட்டுக்கொடுக்கும் தன்மையற்று சுயநலப் பேய்களாய் அலையும் நாம், தோல்வியின் போது முன்நின்று வெற்றிகளில் அடுத்தவர்களை முன்னிறுத்தும் அற்புதப் பண்பை அப்துல் கலாம்,அவரின் உயரதிகாரியான சதீஷ் தவானிடமிருந்து கற்றதாக சொன்னதை ஆரவாரமாக அனைத்து பதிவுகளிலும் அள்ளி விடுகிறோம்...
டாஸ்மாக்கில் கொழித்த வருமானத்திலிருந்தே மதுவிலக்குப் பிரச்சாரத்திற்கு ஒதுக்கீடு செய்யும் பைத்தியக்காரத்தனத்தை பத்திரிகையில் படிப்பதோடு நம் வேலை முடிந்தது என்னும் கொள்கையுள்ள வெகுஜனமான நாம், அப்துல் கலாம் அறிவுறுத்திய தனி மனிதன் முன்னெடுக்க வேண்டிய சமூக இயக்கங்களுக்கான காரணிகளை "ஃபார்வார்டு" செய்வது அபத்தமாக இல்லை?
எப்பேர்பட்ட சமூகப் பொறுப்புணர்வு மிக்கவராக கலாம் விளங்கினார் என்பதை விளக்கும் எண்ணற்ற உதாரணங்களை உலா வரச்செய்வது இன்னொரு ரகம்...நம் பொறுப்புணர்வு தான் உலகப்பிரசித்தி பெற்றதாயிற்றே...புராதன சின்னங்களின் மீது சிறுநீர் கழிப்பது துவங்கி, பஸ்ஸில் பொழுது போகவில்லை என்றால் நகத்தால் சீட்டை நோண்டும் சீரிய பண்பு வரை ஒன்றா இரண்டா நம் சமூகப் பொறுப்பின் சான்றுகள்!
பள்ளி கல்லூரிகளுக்கு அவரின் மறைவுக்காய் விடுமுறை விட்டு காணப்போகும் பயன் என்ன? அதற்கு பதில் நாள் முழுதும் அவரின் பேச்சுகளை பள்ளியில் அமர்ந்து கேட்குமாறு செய்திருக்கலாமே? அது சரி, மேம்போக்காக கடைபிடிக்கப்படும் எதிலும் ஆழம் தேடுவது அறிவீனம்தானே...

"கனவு காணுங்கள்" என்ற வாக்கியத்தை வைத்து கணக்கற்ற பதிவுகள்...! குண்டு குழியற்ற சாலையில் பயணம் செய்ய, தனியே வெளியில் சென்ற வீட்டுப்பெண் தாமதமானால் ஆபத்தின்றி வீடு திரும்ப, அரசு அலுவலகங்களில் கையூட்டின்றி காரியம் முடிக்க, சிறுவர்களின் பால்யம் சிதையாமல் இருக்க, மனசாட்சிக்கு விரோதமான எதையும் முடியாதென மறுக்க...என எத்தனை எத்தனை கனவுகள்...ஆனால் இக்கனவு ஒவ்வொன்றையும் இந்நாட்டில், ஏதோ ஒரு மூலையில், ஒவ்வொரு நொடியும் சிதைத்து சின்னாபின்னம் ஆக்குபவர்கள் யார்? நம்மில் ஒருவர் தானே? நம் நேரடி மற்றும் மறைமுக ஆதரவு மற்றும் ஊக்குவிப்புக்களில் தானே இவை நிகழ்கின்றன? கலாமின் "கனவு காணுங்கள்" பகிரும் நமக்கு மனசாட்சி உறுத்தாதா? மனசாட்சியா? அதெல்லாம் இப்போது மருத்துவமனையில் பிறப்பு நிகழ்ந்தவுடன் குப்பைக்குப் போகும் பிரசவ கழிவுகளுடனேயே அதுவும் அப்புறப்படுத்தப்பட்டு விடுகிறதே என்கிறீர்களா? சரிதான். அதனால் தான், கலாம் புகழ் பாடும் கணத்திலும், வலைதளத்திலும் நம் இரட்டைத்தன்மை குட்டு சட்டென்று வெளிப்படுகிறது. ஒரு அறிமுகமற்ற நபர் "கலாம் மறைவுச் செய்தி கேட்டதிலிருந்து தூக்கமில்லை" என்று ஒரு "போஸ்ட்" போடுகிறார். சில நிமிடங்களில் ஹன்சிகாவின் அடுத்த பட ஸ்டில் ஒன்றும் போடுகிறார். இதைவிட எளிய சான்று தேவையா நாம் யாரென்று தெரிந்து கொள்ள? அந்த அறிமுகமற்ற நபர் நம்மில் பெரும்பாலானவர்களின் பிம்பம் காட்டும் கண்ணாடி தானே!

நாளைய பாரதம் பற்றி நாளும் பொழுதும் யோசித்த நற்குணங்களின் தொகுப்பான அவருக்கு, சாமானியன் என்னும் சாக்கு போர்த்தி  நாடெங்கும் நிறைந்திருக்கும் நம்மை போன்று களைகளைப் பற்றி தெரியாமலா இருந்திருக்கும்? அதனால் தான் போகும் பொழுதிலும், போன பின்னும் நமக்கு நச்சென்று ஒன்றை புரிய வைத்துப் போயிருக்கிறார். நாமறியாது, நாமே கருவியாகி, நமக்கு நாமே பொருளாய் புரிபடும் வண்ணம் கலாம் பற்றிய எண்ணற்ற பகிர்வுகளின் வழி புகுந்து அவருக்கு மிகவும் பிடித்த வடிவமான ஆசிரியரின் உருக்கொண்டு உதவியிருக்கிறார். பாரதி பாடிய சின்னஞ்சிறு கதைகள் பேசி பிறர் வாடப் பல செயல்கள் செய்யும் வேடிக்கை மனிதர்கள் நாம் என்று பொட்டிலடித்தாற் போல் புரிய வைத்திருக்கிறார்.
கலாம் வாழ்ந்து காட்டியனவற்றை கதைகள் போல் பகிர்கிறோம் அதற்கு சற்றும் சம்பந்தம் இல்லா வண்ணம் நம் அன்றாட வாழ்வில் நடக்கிறோம். நாம் வேடிக்கை மனிதர்களேயன்றி வேறென்னவாக இருக்க முடியும்?

அப்துல் கலாம் நடமாடிய மண்ணில் இருக்கும் நமக்குள், அவரின் அளப்பரிய பண்புகளின் வாசனையின் ஒரு அணுவேனும் நமக்குள் இறங்கியிருக்காதா என்று நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொள்வோம். அவரைப் பற்றிப் பேசுவதை விட அவர் வாழ்வின் அடிப்படைத் தத்துவமான சுயநலமற்ற மனிதத்தை நாமும் பயின்று, நமக்கென்று இல்லாது பிறர் பொருட்டு ஒரு துரும்பையேனும் நகர்த்த முயற்சிப்போம். முகநூலில் கலாம் படங்களை பொழுது போக்கு போல போஸ்ட் செய்வதை விட்டுவிட்டு நம் அகநூலில் அடைந்திருக்கும் அழுக்குகளை நீக்கும் வேலையில் இறங்குவோம்...!

1 comment:

  1. //நமக்கென்று இல்லாது பிறர் பொருட்டு ஒரு துரும்பையேனும் நகர்த்த முயற்சிப்போம். முகநூலில் கலாம் படங்களை பொழுது போக்கு போல போஸ்ட் செய்வதை விட்டுவிட்டு நம் அகநூலில் அடைந்திருக்கும் அழுக்குகளை நீக்கும் வேலையில் இறங்குவோம்...!//
    சிந்தனைக்குரியவை! மாறுபட்ட பார்வை!

    ReplyDelete