/ கலி காலம்: அம்மா நூடுல்ஸ்...!

Sunday, June 14, 2015

அம்மா நூடுல்ஸ்...!

அடடா... புதுப்புனலின் வேகத்துடன் ஒரு புரட்சிக்குரிய எழுச்சியுடன் சில நாட்களாக தூள் கிளப்புகிறது மேகி விவகாரமும் விவாதங்களும்...உணவு மற்றும் நுகரும் பொருட்களில் கலப்படமா என்று வெகுண்டு எழுந்து கொதிக்கிறது தேசம்! சாதாரண தேசமா இது? அறிவு ஜீவிகள் நிறைந்த நாடல்லவா? அதான் "இரண்டு நிமிடங்களில்" கொதித்து எழுகிறது. ஆனால் சற்றே அக்கடா என்று அமர்ந்து ஆலோசித்மென்றால், புத்தி கெட்ட தேசத்தில் இது போன்று நிகழ்வதில் வியப்பேதும் இல்லையே என்ற "தெளிவு" கிட்டும்.

நம் குழந்தை வளர்ப்பு முறை மீதும் குடும்ப வாழ்வியல் கட்டுமானம் மீதும் தோண்டிச் சிதைக்க என்பதுகளில் முன்னெடுக்கப்பட்ட முதல் கடப்பாறை மேகி என்றால் மிகையாகாது. விடுமுறை தினங்களில் ஓடியாடி அயர்ந்து வரும் சிறார்களுக்கு ஊட்டமிகு தின்பண்டங்களுக்கு மாற்றாக இரண்டு நிமிடங்களில் போஷாக்கு காட்டுவதாய் வந்த விளம்பரங்களில் வீழ்ந்த குடும்பத் தலைவிகளின் பகுத்தறியும் பக்குவத்தின் நீட்சி தான் இன்று நாம் காணும் அர்த்தமற்ற கூப்பாடு...சற்று யோசித்தால்...

கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் சென்றால் தான் வாழ்க்கை வண்டி ஓடும் என்பது காலத்தின் கட்டாயம் என்றால், சமையலறையின் பளுவையும் பாங்கையும் இருவரும் பங்கிட்டு செய்வது தானே அதற்கேற்ற நியதியாக மாற்றம் பெற்றிருக்க வேண்டும்? ஆனால் "உலகமயமாக்கல்" மூலம் நாம் அடைந்த ஏராளமான சிதைவுகளில் கண்டுகொள்ளாமல் விடப்பட்டவற்றின் முக்கியமானது சமையலறைகளின் சிதைவு இல்லையா?
இன்று கட்டப்படும் வீடுகளில் சமையலறையும் அலங்காரம் மிக்கதாக இருக்கிறதே தவிர அதன் பணி செய்கிறதா? எத்தனை வீடுகளில் தினமும் "புதுச் சமையல்" நடை பெறுகிறது? வார இறுதியில் துணி துவைப்பது அடுத்த வாரத்திற்கான ஏற்பாடு எனலாம். ஆனால் அந்த வாரத்திற்கான சமையலை செய்து ஃபிரிட்ஜில் வைத்து வாரம் முழுதும் பயன்படுத்துவதை?

மக்களின் நாடியை நன்றாக படிக்கத் தெரிந்தவர்கள் வியாபாரம் செய்கிறார்கள். ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை. சமையல் செய்ய நேரமும் விருப்பமும் இல்லாமல் பணத்தின் பின் மட்டுமே ஓடும் சமூகத்தை ஏமாற்ற, நேரத்தை சேமிப்பதாகச் சொல்லும் கவர்ச்சி விளம்பரங்கள் போதுமே? ஒரு சாதாரண நகர ஓட்டலில் கூட "தோசை" என்று சொல்பவர்கள் பாமரர்கள் எனவும் "தோசா" என்று சொல்பவர்கள் படித்த அறிவுஜீவிகள் என்றும் புரிந்து கொள்ளப்படும் புத்தி கெட்ட தேசத்தில் எதையும் எப்படி வேண்டுமானாலும் விற்கலாம்...கொழுக்கட்டையை ஓட்டலில் சாப்பிட முடியுமா நம்மால்? "மோமோஸ்" என்று பெயரிட்டால் உயர ரகக் காரில் வந்திறங்கி சாலையோரத்தில் கூட நாம் "கொழுக்கட்டை" சாப்பிடுவோம். என்ன, அதன் விலை ஐம்பது ரூபாய் இருந்தால் தான் "சாப்பிடத் தகுந்தது" என்று நாம் நம்புவோம். ஐந்து ரூபாயில் விற்கும் கம்பங்கூழ் குடித்தால் நம் இமேஜ் என்னாவது? தாவர ஜங்கமத்தில் ஒரு பிறப்பாக நம்மை சமூகம் ஒதுக்கி விடுமோ என்ற அச்சம் தோன்றுமே?

நம்மாழ்வார் எடுத்துரைத்த இயற்கை உணவு வகைகளை விட நடிகைகள் விளம்பரப்படுத்தும் பகட்டு வகைகள் தானே நம் அறிவுக்கு பொருத்தமாக இருக்கிறது? சமூகமே இப்படி இருக்கும் பொழுது வியாபாரம் செய்பவர்களை சாடுவது நகைச்சுவையாக இல்லை?

சமீபத்தில் ஒரு ரயில் பயணத்தின் போது பக்கத்து இருக்கையில், இந்தியாவின் வல்லரசு கனவின் ஒரு துகளான ஐ.டி இளைஞர் ஒருவர் அமர்ந்திருந்தார். முந்தைய தலைமுறை பயணங்களில் வயல்வெளிகளையும் வானத்தையும் பார்த்து மகிழ்ந்தபடி பயணம் செய்தது. இப்போதெல்லாம் அப்படி பயணம் செய்தால் "பொன்மாலைப் பொழுது" பாட்டில் ராஜசேகரின் பார்வை போல நம்மை நோக்கி பல பார்வைகள் வரக்கூடும்! அவர் மடிக்கணிணியில் மூழ்கியிருந்தார். பயணத்தின் போது கூட சயனிக்க முடியாத அளவு வேலைப்பளுவை அவருடைய பன்னாட்டு நிறுவனம் அளித்திருக்கக் கூடும்...நடுவே "ஸ்மால் சைஸ்" பிசாவையும் ஒரு கையில் வைத்துக் கொண்டு பசியாறினார். அந்த இடைவெளியில் நிகழ்ந்த பேச்சில் அவர் பிசா பிரியர் என்று உணர முடிந்தது. அப்படி இப்படியாக பேச்சு இயற்கை உணவு பக்கம் போய், "அதுக்கெல்லாம் ஏது சார் நேரம்..." என்று வளைந்து "ஹூ இஸ் நம்மாழ்வார்" என்பதோடு முடிவுக்கு வந்தது. அவர் அமெரிக்க பிறப்போ ஆஸ்திரிலேய குடியோ அல்ல. தென் தமிழ் நாட்டின் குறுநகரம் ஒன்றிலிருந்து "உழைத்து முன்னேறியவர்". நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம் என்பதை தெள்ளந்தெளிவாய் உணர்த்தும் உதாரணம் இது.


இரண்டாயிரம் நெல்வகைகள் இருந்த மண்ணின் மரபு பற்றிய அறிவேதும் அற்றுத் திரியும் நாம், இரண்டு நிமிட ஆச்சரியங்களில் வீழ்வதில் வியப்பேதும் இல்லையே! இப்போது உலகம் இருக்கிற இருப்பில், கிறுக்குப் பிடித்து பறக்கும் வாழ்க்கை முறையில், மெதுவாக கொல்லும் விஷம் என்று சொன்னாலும், "மெதுவாகத் தானே..." அதற்குள் "முன்னேறுவோம்" என்ற பித்தம் பிடித்துத் திரிகிறோம் நாம். அப்புறம் எந்த நச்சுப் பொருள் எந்த அளவில் எதில் இருந்தால் என்ன? மேகிக்கு இத்தனை கூச்சல் எதற்கு? ஷாம்பூக்களில் கலந்திருக்கும் நச்சு குறித்து அதன் மேலேயே அச்சடித்திருக்கிறார்களே? கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா என்று விவாதித்த பெரும்பரம்பரை அல்லவா நமது? ஷாம்பூவே பயண்படுத்தாமல் சீயக்காய் தேய்த்து குளிப்பவர்கள் சிரிப்புக்குரியவர்களாகி விட்டனரே இன்று! ஊறுகாய் முதற்கொண்டு உண்ணும் அனைத்தும் பாட்டிலில் வந்து விட்டதே...அதன் மீதே பிரிசர்வேட்டிவ் லிஸ்ட் இருக்கிறதே...வாங்காமல் விட்டோமா நாம்? வீட்டில் ஊறுகாய் போடுவது வீண் வேலை என்ற எகத்தாளம் அல்லவா இன்றைய நிலை?

இதில் இன்னொரு காமெடியும் உண்டு. விளம்பரத்தில் நடித்தவர்கள் மீது நடவடிக்கை என்றால், அதை காட்டிய ஊடகங்களும் அதற்கு உடந்தை தானே? அவர்களே விவாதம் நடத்துவது விந்தையிலும் விந்தை. அதை நாம் பார்த்து மகிழ்வது உணர்த்துவது நாமெல்லாம் ஒரு மந்தை என்பதை. எல்லாவற்றிற்கும் மேலாக, மேகி விளம்பரத்திற்கு சேனல்கள் கோடியாய் கோடியாய் வாங்கியிருக்கும் இல்லையா? ஆனால், இந்த விவகாரம் பற்றிய செய்தி முழுவதும் திரையின் ஒரு பக்கத்தில் அதே விளம்பரத்தை காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். ஒண்ணுமே புரியலையே...ஒரு வேளை எல்லோருமே எல்லோரையும் ஏமாற்ற பழகி விட்டதனால் தான் இப்படியோ?

சரி, "அம்மா நூடுல்ஸ்" என்று போட்டு விட்டு அதைப் பற்றி எதுவுமே சொல்லவில்லையே என்கிறீர்களா? எண்பதுகளில் மேகி எங்கள் தெருமுனை கடைகளில் தலைகாட்டிய பொழுது அழுது அடம்பிடித்து நான் வாங்கிய மேகி பாக்கெட்டை முன்னும் பின்னும் பார்த்த அம்மா, "இதெல்லாம் நமக்கெதுக்குடா...என்னத்தையெல்லாம் கலந்துருக்கானோ" என்றது நினைவிருக்கிறது. அம்மாக்கள் சொல்வது பெரும்பாலும் பொய்ப்பதில்லை இல்லையா?

No comments:

Post a Comment