/ கலி காலம்: ஒரு பரபரப்பான செய்தி...

Sunday, May 31, 2015

ஒரு பரபரப்பான செய்தி...

நடிகை வீட்டு நாய் குட்டிக்கு நகம் வெட்டப்பட்டது துவங்கி பள்ளத்தில் விழுந்த பேருந்தில் சிக்கிய கள்ளக் காதல் ஜோடி தப்பிய தகவல் வரை (அதென்ன சார் "கள்ளக் காதல்"? கலிகாலத்தில் இது ஒரு பொருட் பன்மொழி அல்லவா? சரி விடுங்கள் இந்தப் பதிவு அதை விட பயனுள்ள பொருள் பற்றியது என்று நம்புவோம்...) நம் பத்திரிகைகளும் தொலைகாட்சிகளும் கிளப்பும் பரபரப்புக்கு பஞ்சமேயில்லை. பரபரப்பு இருந்தால் தான் அது செய்தி என்ற நிலைக்கு நாம் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. எனவே நம் பங்குக்கு நாமும் பரபரப்பு செய்தி கொடுக்க வேண்டாமா? என்ன,  மேற்சொன்ன உதாரணங்கள் போன்றவற்றை செய்தியாய் கருத மனசாட்சி உறுத்துவதால் சற்றே "பரபரப்பு குறைந்த" செய்தி ஒன்றைத் தருகிறேன். வாசித்து மகிழுங்கள்....


இரண்டு வருடங்களாய் பொழுது விடிந்தால் ஒரு பரபரப்பு தொற்றிக் கொள்கிறது சார்...எப்படி என்று கேளுங்கள்...உதாரணமாக ஒரு உற்சாக நிகழ்வு ஒன்றை பகிர்கிறேன்..சில மாதங்களுக்கு முன்னால் ஒரு தொட்டியில் வெண்டைக்காய் விதை போட்டு மொட்டை மாடியில் வைத்தோம். "தொட்டியில வெண்டைக்காய் வரும்னு நினைக்கிற மண்டைக்குள்ள மண் தான் இருக்கும்" என்று கூட சிலர் சொன்னார்கள். நாங்களும் ஒரு வேளை அப்படித்தானோ என்று சந்தேகப்பட்டோம். ஆனால் சில வாரங்களில் பச்சை நிற சீரியல் பல்புகள் போல சில மொட்டுக்கள் தோன்றின.



தினமும் அந்த மொட்டுக்கள் என்னவாயிற்று என்ற எதிர்பார்ப்பு காலை பல் துலக்கும் போதே முளைத்து விட, ஆளாளுக்கு மொட்டை மாடிக்கு போய் ஒரு பார்வை பார்த்து "பரபரப்பை" தனித்துக் கொள்வோம். ஒரு வாரம் கழித்து அந்த மொட்டுக்களில் இருந்து மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூக்கத் துவங்கின.





அக்கம் பக்கத்தார் மகரந்த சேர்க்கை இல்லாமல் பூ அடுத்த கட்டத்தை எட்டாது என்று அச்சம் ஏற்றினர். எங்களின் அதிகாலை பரபரப்பு இன்னும் அதிகமானது...மேனிக்கே தண்ணீர் கிட்டாத கான்கிரீட் கூடுகள் நிறைந்த நகரத்தின் இடுக்குகளில் தேனியை தேடித் திரிவது பைத்தியக்காரத்தனம் தான்... ஆனால் நம் கண்ணுக்குத் தெரியா அதிசயங்களை இயற்கை நொடி தோறும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. ஆம். ஒரு காலைப் பொழுதில் தண்ணீர் விடச் சென்ற நானும் மனைவியும் கண்களை அகல விரித்து பார்க்கும் வகையில் ஆச்சரியம் நிகழ்ந்திருந்தது. மலர் வாடுமோ என்ற எங்கள் அலர் நீக்கும் வகையில் பூத்திருந்த மலர்கள் அனைத்தும் பூசியடைத்தது போல் மூடி புடைத்தபடி இருந்தன நக அளவு வெண்டைகளாய் மாறி,,,!





ஒரு வாரம் உச்சகட்ட பரபரப்பு. ஆனால் பரபரப்பு எப்படி அமைதி தரும்? கட்டாயம் தரும். செடி நன்றாக வளர வேண்டும் என்ற பரபரப்பு மனதுக்கு அமைதியைதான் தருகிறது. இயற்கையின் எத்தகைய பரபரப்பும் அமைதியை நோக்கி தான் நம்மை இட்டுச் செல்லுமோ? ஒரு வாரத்தில் விரல் நீளத்தை தாண்டிய வெண்டைக்காய்கள் எங்களை பார்த்து கைகொடுப்பது போல தொட்டி முழுதும் நீண்டு நின்றபோது மனதுக்குள் ஒரு அற்புதமான வாசனை பரவுவது போன்ற "பரபரப்பு" தோன்றியது. மண் வாசனையாக இருக்குமோ?

சொல்லுங்கள் சார்...அர்த்தமற்ற, அறிவை மழுங்கடிக்க வைத்து, மனதை அழுகிப் போக வைக்கும் செய்திகளை விட இதில் சற்று பரபரப்பு குறைவு எனினும் இந்த "செய்தி" எப்படி? இச்செய்தி உங்களுக்கு புதிதென்றால், பிடித்தமென்றால், நீங்களும் முயன்று பாருங்கள். ஒரு தொட்டி மண்ணும் சில விதைகளும் உங்கள் நாட்களை எத்தகைய "பரபரப்பு" மிகுந்தவை ஆக்குகின்றன என்று...அதிலும், அனுதினமும் அந்த பரபரப்பு உங்களுக்கு தரும் அமைதியை...ஆனந்தத்தை...பரபரப்பின் அடியிலும் அமைதி உண்டு என்னும் ஆச்சரியத்தை...!


No comments:

Post a Comment