மூன்று தலைமுறைகளின் உணர்வுகளுக்கு ஊட்டம் கொடுத்து, இசையின் வழியே மனதின் ஆழ் அகலங்களை காண்பதற்க்கான நாட்டம் கொடுத்து, வாழ்க்கையின் எதிர்பாரா கணங்களின் தோன்றும் வாட்டம் தடுக்கும் அருமருந்தாய், மென்மையும் மேன்மையும் சிந்தனையிலும் செயலிலும் ஊட்டும் நல்விருந்தாய், எண்ணற்ற இதயங்களின் வயதின் தடங்களில் நினைவின் நொடிகளை இசையின் இழைகளின் வழியே பதியச் செய்த உங்களுக்கு, இசையுண்டு வாழும், அதன் வழியே வாழ்க்கையை காணும் கோடிக்கணக்கான மனங்களில் ஒருவனாக எழுதுவது...
இன்றைய சமூகம் தாந்தோன்றித்தனமான போக்கில் திரிவதன் முழுமுதற் காரணம் போதிய வழிகாட்டுதல்கள் இன்மையே என்பதை தங்களைப் போன்ற முதியவர்கள் நன்கு அறிவீர்கள். மூத்தோர் வாக்கை கேட்கும் நிலை இன்றைய சூழலில் இல்லை எனினும், அத்தகையோர் பேசும் தவறான தருணங்களை நன்கு உள்வாங்கிக் கொள்ளும் பொறுப்பற்ற புத்திசாலித்தனம் இங்கு நிறையவே உண்டு. எனவே பெரியவர்கள், அதுவும் பொதுவெளியில் பிரபலமான முதியவர்கள் உதிர்க்கும் வார்த்தைகளுக்கு பல்மடங்கு வீரியமானதாக பலம் பெறுகிறது.
சமூகத்தை நல்வழிப்படுத்துவதை "லோகோ"விற்கு ஏற்ற பன்ச் லைனில் மட்டுமே வைத்துக்கொள்ள விரும்பும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு எதிர்மறை எண்ணங்களை வளர்க்கும் செய்திகளே தங்களை வளர்த்துக் கொள்ளும் தீனியாக தெரிகின்றன. எனவே தான் அவற்றை மீண்டும் மீண்டும் படம் பிடித்துக் காட்டுகின்றன. அப்படியொரு நிகழ்வுதான் சமீபத்தில் நீங்கள் உதிர்த்த "அறிவு இருக்கிறதா" என்னும் காட்சிகள் மீண்டும் மீண்டும் ஊடகங்களில் வலம் வந்தது.
தனிமனித உணர்வு தத்தளிக்கும் தருணத்தில் சற்றும் பொறுப்பின்றி ஒரு நிருபரால் கேட்கப்பட்ட கேள்விதான் அதை தூண்டியது எனினும், தூண்டிலில் விழாமல் இருப்பது எப்படி என்று சொல்லித்தருவது அல்லவா பெரியோரின் கடமையும் சிறியோரின் எதிர்பார்ப்பும்...பொறுப்பற்ற தன்மையே சுதந்திரம் என்பது இன்றைய சமூகத்தில் எழுதப்படாத விதியாகி விட்டது. ஊடகங்களும் அதற்கு விதிவிலக்கல்ல. சொல்லப்போனால் அந்த விதியை முன்னின்று எழுதியவையே ஊடகங்கள் தான். எனவே அத்தகையோரிடம் பண்பு எதிர்பார்க்க இயலாது தான். ஆனால் உங்களிடம்....? எதிர்பார்ப்பு இருக்கிறது. எனவே ஏமாற்றமும் இருக்கிறது. "எந்த சூழ்நிலையில் எதைப் பற்றி கேள்வி கேட்கிறாய்" என்பதோடு நின்றிருந்தால் நீங்கள் முன்மாதிரியாக எங்கள் முன் நின்றிருப்பீர்கள். அதை தாண்டியதால், எங்களுக்கு ஒருமாதிரியாக இருக்கிறது.
இசை மென்மையையும் பொறுமையையும் வளர்க்கும் என்பார்கள். தாலாட்டப்படும் வயதிலிருந்து நாயாட்டம் வாழ்க்கை நம்மை அலைக்கழிக்கும் பொழுது வரை உங்கள் இசை அத்தகைய மென்மையையும் பொறுமையுமே எங்களுக்கு தந்திருக்கிறது. இசையின் கடலிலேயே மூழ்கியிருக்கும் நீங்கள், இதனை பொய் என்று நாங்கள் நினைக்கும் வண்ணம் எந்தவொரு செயலையும் எங்கள் முன் நிகழ்த்த மாட்டீர்கள் என்று நம்புகிறோம்....
இளையராஜாவின் இயற்பியல் படிக்க...
"லோகோ"விற்கு ஏற்ற பன்ச் லைன்- "அறிவு இருக்கிறதா" என்பதை விட "ஒனக்கு அறிவு இருக்கென எந்த அறிவ வைச்சு கண்டு பிடிச்ச" தான் நிச இளையராஜாவின் "ஞானி" ரச்சுடன் இருக்கு!
ReplyDeleteபலர் இளையராஜா வருமுன் இசை இல்லை என்பது போலும், அமைதியில்லை என்பது போலும் உங்கள் போல் எழுதும் போது, அதற்கு முற்பட்ட பலரின் இசையுடன் பயணித்த என்போன்ற "பெரிசுகள்" நெளிய வேண்டியுள்ளது.
// "எந்த சூழ்நிலையில் எதைப் பற்றி கேள்வி கேட்கிறாய்" (தம்பி, ராசா, செல்லம் என நளினம், நக்கல் சேர்த்து) என்பதோடு நின்றிருந்தால் நீங்கள் முன்மாதிரியாக எங்கள் முன் நின்றிருப்பீர்கள்.// இதைத் தான் நாம் "ஓய்ந்தவர்கள்" சொல்கிறோம்.
ஆனால் அவர் அடிப்பொடிகள் " அவர் நீளமென்ன, உயரமென்ன, அகலமென்ன இந்த சுண்டங்காய் பயலுக்கு, என்ன? பொறுமையான, பொறுப்பான பதில் எனக் கொம்பு சீவி விடுகிறார்கள்.
இவர்கள் யானை தும்பிக்கையுள் நுளைந்த எறும்புபோல் , இந்தச் சுண்ண்டங்காய், இவரை தும்ம வைத்து விட்டானே! என்பதைப் புரிவதாக இல்லை.
ஆனாலும் ஞானிகளுக்கு இவ்வளவு கர்வம் இருக்கக் கூடாது.
எல்லாம் சரி இதுவரை எனக்குப் பதில் கிட்டவேயில்லை. இந்தப் பாடலை இசைஞானி ஏற்றுக்கொண்டாரா? இல்லையா? இசைஞானியின் துறையானபடியால் அறிய ஆவல். யாராவது கேட்டுச் சொல்லவும். இப்போதே சொல்லிவிட்டேன்." எனக்கு அறிவு இல்லைங்க"