/ கலி காலம்: இது தேவையா?

Sunday, May 3, 2015

இது தேவையா?

தமிழர்களாகிய நாம் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஆனால் சும்மா உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் என்பதோடு நிறுத்தினால் நம் பெருமை என்னாவது? எனவே அவ்வப்பொழுது நாம் கண்மூடித்தனமாக உணர்ச்சிவசப்படுவோம் என்பதையும் காட்டிக் கொண்டால் தானே "உணர்ச்சிவசப்படுதல்" பெருமையை புதியதொரு தளத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்!.

அதன் மற்றொரு பரிமாணமாக நாம் சமீபத்தில் கண்டது தான் பெருமாள் முருகனின் "மாதொரு பாகன்" குறித்த பரபரப்பு. ஒரு குழுவோ கூட்டமோ நினைத்தால் ஐந்து வருடத்திற்கு முன்பு வந்த ஒரு நாவலை எடுத்து, அதிலிருந்து சில பக்கங்களை பிரதியெடுத்து பிரம்மாண்டமாக்கி போராட்டம் செய்து பரபரப்பை ஏற்படுத்தி, அதை எழுதியவரை "இனி எழுதப்போவது இல்லை" என்று சொல்ல வைக்க முடியும். அந்த எழுத்தாளரும் நம் போல தமிழர் தானே? அவரும் போராட்டக்காரர்களுக்கு இணையாக உணர்ச்சிவசப்படுவார் இல்லையா? பட்டார்..."உள்ளே இருக்கும் எழுத்தாளன் இறந்து விட்டான். நாவலின் அத்தனை பிரதிகளையும் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்" என்று உணர்ச்சி வசப்பட்டார். மக்கள் தான் இப்படி... சமூகத்தை காக்கும் அதிகார வர்க்கம்? அவர்கள் என்ன சளைத்தவர்களா? காவல்துறையும் தன் பங்குக்கு, "எதற்கு வீண் சிக்கல்கள்" என்ற ரீதியில் எழுத்தாளருக்கு அறிவுரை (எச்சரிக்கை?) கொடுக்க, வெறும் வாய்க்கு கிடைத்த அவலாக "கருத்து சுதந்திரம்" என்று ஒரு கூட்டம் வழக்கமான குரலெழுப்ப, பத்திரிகைகளுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் ஒரு வாரம் நல்ல தீனி.

முதலில் பெருமாள் முருகனை பார்ப்போம். அவர் ஒரு ஆசிரியர். ஒரு உண்மையான நிகழ்வாகவே இருந்தாலுமே, அதைப் பற்றி பேசுவதாலோ எழுதுவதாலோ யோசிப்பதாலோ எப்பயனும் இல்லையெனிலோ அல்லது பலர் மனதை புண்படுத்தக் கூடும் எனிலோ அதை தவிர்க்க வேண்டும் என்று மற்றவர்களுக்கு கற்பிக்க வேண்டிய ஆசிரியர் பணி செய்பவர். அத்தகைய தவிர்த்தல் என்பது கருத்துப் பக்குவம் ஆகும். கருத்துச் சுதந்திரத்தை விட கருத்துப் பக்குவம் சாலச் சிறந்தது என்று அவர் அறிந்திருக்க மாட்டார் என்று சொல்ல இயலாது. ஆனாலும், மேற்சொன்ன விளக்கத்தின் படி, கருத்துப் பக்குவம் அற்றது என்று கருத்தில் கொள்ள வேண்டிய‌ ஒரு நிகழ்வை தன் படைப்பினூடே வெளியிடுகிறார். "கருத்துப் பக்குவம்" அவரிடமிருந்து அக்கணமே நீங்கி விடுகிறது. மீதமுள்ள பரிமாணமான கருத்துச் சுதந்திரத்தையாவது அவர் உறுதியாக பற்றினாரா? அப்படியென்றால், எக்காரணத்தைக் கொண்டும் அவர் "இனி எழுதுவதில்லை" என்பது போன்ற நிலைக்குச் சென்றிருக்க முடியாது.

எழுத்து என்பது தெய்வத்தை தொழுதல் போன்றது. நம்பிக்கை அற்று அதை செய்ய இயலாது. பெருமாள் முருகன், அவர் தன் எழுத்தின் மீது, மேற்சொன்ன கருத்துப் பக்குவம், கருத்துச் சுதந்திரம் என்ற இருவகை நம்பிக்கைகளையும் இழந்து விட்டவராகவே நமக்குத் தெரிகிறார். எதிர்ப்பை தீவிரமாக முன் நின்று எதிர்கொண்டு ஏன் தன் எழுத்தை தொழவில்லை பெருமாள் முருகன்?

இப்போது "பற்ற" வைத்த‌ பண்பாளர்களைப் பார்ப்போம்...இவர்கள் உண்மையிலேயே மேற்சொன்ன "கருத்துப் பக்குவத்தின்" கூறுகள் குறித்த அக்கறை கொண்டவர்களாக இருந்திருந்தால், நாவல் எழுதியவரை ஒரு குழுவாக தனியே சந்தித்து சில பகுதிகளின் தேவையற்ற தன்மை குறித்து விவாதித்து, அதை நீக்குவதற்கு ஏற்பாடு செய்திருக்கலாம். ஆனால் அப்படி செய்தால் அவர்கள் எப்படி "வெளியே" தெரிவார்கள்? விஷயம் முடிவுக்கு வருவதா முக்கியம்? அது எத்தனை பெரிதாக வெளியில் தெரிகிறதோ அதில் தானே "வெற்றி" இருக்கிறது? எனவே இவர்களிடமிருந்து அப்படிப்பட்ட அணுகுமுறையை நாம் எதிர்பார்க்க முடியாது. சரி, ஒரு நாவலில் எழுதப்பட்ட பழைய நடைமுறையை சினங்கொண்டு எதிர்க்கும் சிங்கங்களாகிய இவர்கள், ஒரு குறிப்பிட்ட பிரிவைத் தாண்டி, ஒட்டு மொத்த மனிதப் பண்பாடு, உறவு மற்றும் உணர்வு முறைகளையெல்லாம் குழி தோண்டி புதைத்து, காணச் சகிக்காத  வக்கிரங்களை காட்சிகளிலும் கேட்கச் சகிக்காதவற்றை பாடல்களாகவும் தமிழ்நாடு முழுக்க புகட்டிக் கொண்டே இருக்கும் படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் ஒன்றும் பேசாமல் இருப்பதெப்படி? ."பற்ற" வைக்கும் சிங்கங்கள் இந்த அசிங்கங்கள் பற்றி வாய் திறவாமல் இருப்பது ஏனோ? ஒரு வேளை இலக்கியத்தை மட்டும் தான் இவர்கள் எதிர்ப்பார்களோ?

மீடியாவுக்கு வருவோம். அவை என்ன செய்தன? பரபரப்பாக பேசக் கூடிய பத்து பேரை நாளுக்கு ஒன்றாய் அழைத்து வந்து பிழைப்பை பார்த்தன. "மாதொரு பாகன்" முழுதாக நீங்கள் படித்து விட்டுத்தான் பேசுகிறீர்களா என்று கேட்கவா முடியும்?

ஆக மொத்தம் அத்தனை கோணங்களிலும் அனைத்து வகை கோணல்களையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் பேணி வளர்த்து வரும் தமிழ் சமூகத்திற்கு இது போன்றதொரு பரபரப்பு தேவைப்படுகிறது. தேவைப்படுவதை எப்படியேனும் உருவாக்கி பெரிதாக்கி உற்சாகம் அடைபவர்களில் நம்மிலும் சிறந்தோர் உலகினில் உண்டோ?

சரி சார்...என்னய்யா நீ? ஜனவரி மாதம் நடந்ததைப் பற்றி இப்போது எழுதுகிறாய் என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. ஆனால் காரணம் இருக்கிறது சார். நம்முடைய தேசத்தின் சிறப்பு குணமே எதிலும் "இன்ஸ்டண்ட்" முறையில் வெட்கம் மானம் ரோஷம் காட்டி விட்டு, பின் அதை மறந்து விடுவதுதான். மறக்கக் கூடாதவற்றை மறந்து போன நேரத்தில் ஞாபகப்படுத்துவது தானே சரி?


2 comments:

  1. புதிய கோணம். தெளிவாக அடித்து விட்டீர்கள் கடைசிப் பத்தியில்.

    //ஆனால் அப்படி செய்தால் அவர்கள் எப்படி "வெளியே" தெரிவார்கள்? விஷயம் முடிவுக்கு வருவதா முக்கியம்? அது எத்தனை பெரிதாக வெளியில் தெரிகிறதோ அதில் தானே "வெற்றி" இருக்கிறது? //

    செம்ம. காரணம் "பற்ற" வைப்பவர்களைப் "பற்ற" வைப்பவர்கள் அப்படியாப்பட்ட ஆட்கள்.

    ஆனாலும் ஒரு வழமையான கேள்வி கேட்டு நீங்களும் தமிழ்ச் சமூகத்திலொருவர் என்று சறுக்கி விட்டீர்கள். :))

    //ஒட்டு மொத்த மனிதப் பண்பாடு, உறவு மற்றும் உணர்வு முறைகளையெல்லாம் குழி தோண்டி புதைத்து, காணச் சகிக்காத வக்கிரங்களை காட்சிகளிலும் கேட்கச் சகிக்காதவற்றை பாடல்களாகவும் தமிழ்நாடு முழுக்க புகட்டிக் கொண்டே இருக்கும் படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும்//

    இது எல்லா விமர்சகர்களும் கேட்கும் வழக்கமான கேள்விதான். எல்லாப்பிரச்சனைகளின் போதும் கேட்கப்படுவதை நான் கவனித்து வருகிறேன். ஆனால் பதில் அவர்கள் அவற்றையும் எதிர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நாமும் எதிர்க்கிறோம். ஆனால் வேறு வேறு வகையில். அவர்கள் அதை எதிர்ப்பதையோ அல்லது எதிர்க்காமல் விடுவதையோ நான் பிரச்சனையாகப் பார்க்கவில்லை.

    இவர்கள் ஏன் மகாபாரதம் ராமாயணம் போன்றவற்றை எதிர்ப்பதில்லை என்று தெரியவில்லையே. ஒரு சிலவற்றை ஏற்றுக் கொண்டு சிலவற்றை எதிர்ப்பது ஏனென்று புரியவில்லை.

    ReplyDelete
  2. போராட்டங்கள் வேண்டும். அவை வெளியில் தெரியவேண்டும். கராணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதைத் தான் இன்று பெரும்பாலான அரசியல்வாதிகள் (வியாதிகள்) செய்து கொண்டிருக்கிறார்கள்.

    ReplyDelete