/ கலி காலம்: இந்தப் பெண்ணை என்ன செய்யலாம்?

Sunday, July 13, 2014

இந்தப் பெண்ணை என்ன செய்யலாம்?



சென்ற வாரம் நம் "தேச பக்தர்கள்" நம்மை புல்லரிக்க வைத்த விதம் அலாதியானது. இதென்ன "தேச பக்தி" போன்ற வார்த்தையெல்லாம் இன்னும் உபயோகத்தில் இருக்கிறதா என்று ஆச்சரியப்படாதீர்கள். அதான் சார் நம் கிரிகெட் ரசிகர்கள் இருக்கிறார்களே... அவர்கள் தானே பாரதத் தாயின் தவப்புதல்வர்களாக வலம் வருகிறார்கள். அவர்களை தேசபக்தர்கள் என்று அழைக்கா விடில் வேறு யார் தேசப்பக்திக்கு எடுத்துக் காட்டாக இருக்கிறார்கள் சொல்லுங்கள்?

சரி, விஷயத்திற்கு வருவோம்...மரியா ஷரபோவா என்னும் டென்னிஸ் வீராங்கனை, டெண்டுல்கர் யார் என்று தெரியாது என்று சொல்லி விட்டாராம். அவ்வளவு தான். ஏதோ பாரதத்தாயை இழிவு படுத்தியது போல பொங்கிப் புறப்பட்டு விட்டது நம் தேசப்பக்தர்கள் படை! வேறெங்கு போகும் இந்தப் படை? இருக்கவோ இருக்கிறது சமூக ஊடகங்கள்! எனவே தரக்குறைவு என்பதற்கு இலக்கணம் வகுப்பது போல திட்டித் தீர்த்து விட்டார்கள் நம் தேசபக்தர்கள்.

எப்போதுமே நம்மை நாமே அதிமேதாவிகளாக பாவிக்கும் நினைப்பு நமக்கு உண்டு. குண்டுச் சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிப் பழகியதால் வந்த அதிமேதாவித்தன நினைப்பு இது. அப்படித்தான் நமக்குத் தெரிந்த கிரிகெட் உலகம் முழுவதும் தெரிந்திருக்க வேண்டும் என்ற முட்டாள்தனமான நினைப்பும் நமக்குள் ஊறியிருக்கிறது.

மரியா ஷரபோவா டெண்டுல்கரை தெரியாது என்று சொன்னது இருக்கட்டும். நம் தேசபக்தர்கள் மூளையை ஒரு கையால் தட்டி, மறுகையை இதயத்தில் வைத்து தனியாக அமர்ந்து ஒரு நிமிடம் யோசிப்பார்கள் எனில், அவர்களின் முட்டாள்தனம் மூளைக்கு எட்டாது போகுமா? நம்மில் எத்தனை பேருக்கு இந்தியாவின் ஹாக்கி அணியின் கேப்டன் சர்தார் சிங் பெயர் தெரியும்? சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதி கூட போகாவிடிலும் ஏகப்பட்ட கோல்களை தடுத்த கோலி ஸ்ரீஜிஷ் என்பவரை நமக்குத் தெரியுமா? அட, நம் நாட்டின் சார்பாக எத்தனை விளையாட்டுகளுக்கு
அணிகள் இருக்கின்றன என்ற விபரமாவது நமக்குத் தெரியுமா?

கிரிகெட் என்றால் என்னெவென்றே அறிய வாய்ப்பில்லாத நாட்டைச் சேர்ந்த ஒருவர் டெண்டுல்கரைத் தெரியாது என்றாராம் இவர்கள் வெகுண்டெழுந்து தங்களின் "பக்தியை" காட்டுவார்களாம்! உலக மக்கள் தொகையில் சொற்பமான மக்கள் ரசிக்கும் விளையாட்டு கிரிகெட். அந்த விளையாட்டை திறமையாக விளையாடுபவர்களில் ஒருவர் டெண்டுல்கர். அவ்வளவே. அதற்கு மேல் எதுவுமே இல்லை. டெண்டுல்கர் என்பவர் உலகம் உய்ய வழி காட்டிய புத்தரும் அல்ல சத்தியத்தின் பாதையை பார் முழுதும் பரப்பிய காந்தியும் அல்ல.

ஆமாம்..."இந்தப் பெண்ணை என்ன செய்யலாம்" என்று தலைப்பு வைத்து விட்டு இப்படி எழுதுகிறீர்களே என்கிறீர்களா? இந்தப் பெண்ணை ஒன்று செய்யலாம். நன்றாக பாராட்டலாம்! தெரியாததை தெரியாது என்று சொன்னதற்கு...அத்தகைய பாராட்டுக்களை யார் தெரிவித்தால் பொருத்தமாக இருக்கும்? நாமேதான்! நம்மவர்களே தான்! ஏனென்றால், தெரியாததை தெரிந்தது போலக் காட்டிக் கொள்வதில் நம்மவர்களுக்கு நிகர் நாம் தானே? வாருங்கள், யார் என்று தெரியாதவரை, தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லாதவரை, தெரியாது என்று சொன்ன மரியா ஷரபாவோவை பாராட்டுவோம்!

5 comments:

  1. நம்மளைப் போல ஆஹோ, ஓஹோன்னு புகழாமல் தெரியாதுன்னு உண்மையைச் சொன்னதுக்காக் பாராட்டத்தான் வேண்டும்.

    ReplyDelete
  2. இந்தியர்கள் போல் மடையர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் . தெரியாதுனா தெரியாதுதான் . டெண்டுல்கர் யாரு?

    ReplyDelete
  3. ராஜியை நான் வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  4. If opportunity is given (as given to Tendulkar) anyone can shine.Tendulkar, most of
    the times played for creating his own records, even at crucial times, than for the
    country! Eventhen he has been made a Rajyasabha MP.That is his luck.What else?

    ReplyDelete
  5. தெரியாதுன்னு உண்மையைச் சொன்னதுக்காக் பாராட்டத்தான் வேண்டும். தெரியாதுனா தெரியாதுதான் . டெண்டுல்கர் யாரு?
    A player earned good money for himself not to the society,what use.

    ReplyDelete