/ கலி காலம்: யாருக்கும் வெட்கமில்லை!

Sunday, July 6, 2014

யாருக்கும் வெட்கமில்லை!

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது...தென்னகத்தின் செல்லக் குரலுக்கான பிரம்மாண்டமான தேடல் என்று சொல்லிக் கொள்ளப்படும் நிகழ்ச்சி...பல வருடங்களுக்கு முன், இசையின் மூலம் பெறும் உணர்வுகளின் நெகிழ்ச்சியை உள்ளத்துக்குள் ஊடாட வைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி, கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக இன்று கோமாளிகளின் கூத்து பார்க்கிறோமா அல்லது உண்மையிலேயே இசை நிகழ்ச்சியா என்று நம்மை கிள்ளிப்பார்த்துக் கொள்ளத் தூண்டும் அவலமாக மாறிப்போன ஒரு நிகழ்ச்சி...சரி, என்ன விஷயம் என்கிறீர்களா? நீண்ட நாட்களுக்குப் பின் இந்நிகழ்ச்சியைக் காணும் "பாக்கியம்" மீண்டும் வாய்த்தது. பாக்கியம் மட்டுமா? நம் சமூக முன்னேற்றங்களைக் கண்டு புல்லரிக்கும் வாய்ப்பையும் அல்லவா சேர்த்து வழங்கியது அந்நிகழ்ச்சி...
ஒரு பத்து வயது சிறுவன் பாடுகிறான்...வழக்கம் போல தொகுப்பாளர்கள் தங்கள் சிந்தனை முத்துக்களை, கருத்தாழம் மிக்க காவிய வார்த்தைகளை அவ்வப்பொழுது அள்ளித் தெளிக்கிறார்கள். நாம் மதிப்பு வைத்திருக்கும் பழைய‌ பாடகர்கள் நடுவர்களாக அமர்ந்திருக்கிறார்கள்...பிறகு அந்த புல்லரிக்கும் புதுமை நிகழ்வு நடக்கிறது...எந்த சமூகத்தில் பெண்கள் வன்கொடுமை அதிகரித்துக் கொண்டே போகிறது என்று கூப்பாடு போடப்படுகிறதோ, எந்த சமூகத்தில் ஆண்கள் அனைவருமே பெண்களை போகப் பொருளாக மட்டுமே பார்க்கக் கூடியவர்கள் என்ற சித்தரிப்பு இருக்கிறதோ, எந்த சமூகத்தில் குழந்தைகள் நல்வளர்ப்பு பற்றி வெற்றுப்பேச்சு மட்டுமே நிறைந்திருக்கிறதோ அத்தகைய சிறப்பு வாய்ந்த நம் தமிழ் சமூகம் கண்டு மகிழ்ந்து போற்றும் அந்த நிகழ்ச்சியில், அந்த புல்லரிக்கும் புதுமை நிகழ்வு நடக்கிறது...
அமெரிக்காவிலிருந்து வந்து பாடும் ஒரு இளம்பெண் "கெஸ்டாக" அமர்ந்திருக்கிறார். பத்து வயது கூட நிரம்பாத சிறுவன் ஒருவன் பாடி முடித்தபின் பெண் தொகுப்பாளினி, "என்னை ஆறாவது கேர்ள் பிரண்டாக நீ ஏற்றுக் கொள்வாயா" என்று அந்த அமெரிக்கப் பெண்ணிடம் கேள் என்று அந்தச் சிறுவனைத் தூண்டுகிறார். அரங்கமே கைதட்டி ஊக்குவிக்கிறது! அந்தச் சிறுவனும் கால் மடித்து அமர்ந்து கைநீட்டி அமெரிக்கப் பெண்ணிடம் அவ்வாறே வேண்டுகிறான்...அதைப் பார்க்கும் மற்றொரு பெண் தொகுப்பாளினி, டேய் உனக்கு நானா அமெரிக்கப் பெண்ணா அல்லது அந்த மற்றொரு தொகுப்பாளினியா என்று சொல்லச் சொல்கிறார். அரங்கம் முழுவதும் நிறைந்திருக்கும் சிறு மனங்களில் நச்சின் நாற்றம் வீசப்படுகிறது...

அந்த நாற்றத்தின் சுவாசம் பெற்ற சிறுவனும், "நீங்க ஓல்டு மாடல். அவங்க அமெரிக்கா" என்று தனது தேர்வு முறையை விளக்குகிறான். அரும்பெரும் சொற்பொழிவு கேட்டது போல அரங்கம் புளுகாகிதம் அடைந்து கூச்சலில் குதிக்கிறது. தரமானவர்கள் என்று நாம் நம்பும் நடுவர்களும் கைதட்டிச் சிரிக்கிறார்கள். "தோழி" என்றால் என்ன அர்த்தம் என்று இந்நிகழ்ச்சி பார்க்கும் அத்தனை சிறுவர் சிறுமிகளும் "விபரமாக" புரிந்து கொள்ளும் பெரும்பணியினை செய்த அத்தனை பேரும் பெண்களே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒரு பாடல் வரியின் ஸ்வரஸ்தானங்களில் பாடுபவர்கள் செய்யும் தவறுகளுக்கே ஏகப்பட்ட "டிப்ஸ்" கொடுக்கும் இந்த நடுவர்கள், நாளை ஒரு தலைமுறையாக மாறப்போகும் பிஞ்சுகளின் நஞ்சை விதைத்து சிதைக்கும் அவலம் நேர்கையில் சிரித்து மகிழ்ந்தது ஏன்? நடுவராக வந்த மூவரில் இருவர் பெண்கள். "என்ன நடக்குது இங்க... இப்படியா பொது நிகழ்ச்சியில் அதுவும் சிறுவர்களிடம் உரையாடுவது" என்று கேட்கவா முடியும்? நடுவர் சான்சு போய்விடுமே! சிறுமிகள் கூட கொடுமைக்குள்ளாகும் நிகழ்வுகள் பெருகுவது குறித்து கொதித்தெழும் பெண்ணுரிமை அமைப்புகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? பெண்ணியம் பேசுபவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ஒரு வேளை ஆண்களுக்கு எதிராக மட்டும் தான் இவர்கள் கண்ணைக் கட்டிக் கொண்டு களத்தில் குதிப்பார்களோ?? இந்நிகழ்ச்சியை பார்க்கும் ஒரு சிறுவன் நாளை பள்ளியிலோ சாலையிலோ, இதே போலோ இதையும் மீறியோ ஒரு பெண்ணிடம் நடந்து கொண்டால் குற்றவாளி யார்?

ப‌ல‌ ல‌ட்ச‌ம் பேர் பார்க்க‌க்கூடிய‌ ஒரு நிக‌ழ்ச்சியில், ச‌ற்றும் பொறுப்பின்றி தனக்குத் தோன்றிய‌தை எல்லாம் பேசும் தொகுப்பாள‌ர்க‌ளை என்ன‌ செய்ய‌? தான் பேசுவ‌து போதாதென்று விப‌ர‌ம் அறியா சிறுவ‌ர் சிறுமிக‌ளை த‌ர‌க்குறைவாக‌ ந‌ட‌க்க‌த் தூண்டும் அவ‌ர்க‌ளின் அசிங்க‌ங்க‌ளை என்ன‌ செய்ய‌? இவ‌ற்றையெல்லாம் பார்த்தும் ஆட்சேப‌ம் ஏதும் தெரிவிக்காம‌ல் அல‌ங்கார‌மாய் வீற்றிருக்கும் ந‌டுவ‌ர்க‌ளை என்ன‌ செய்ய‌? த‌ங்க‌ள் க‌ண்ணெதெரிலேயே த‌ங்க‌ள் ம‌ற்றும் பிற‌ குழ‌ந்தைக‌ள் ம‌ன‌தில் விஷ‌ம் விதைக்கும் ப‌ணி ந‌டைபெறுவ‌தை பார்த்தும் பைத்திய‌ங்க‌ள் போல‌ அதில் ப‌ங்கேற்றுச் சிரிக்கும் பெற்றோர்க‌ளை என்ன‌ செய்ய‌? ஒரு ப‌க்க‌ம் அக்கிர‌ம‌ங்க‌ளை க‌ண்டு பொங்குவ‌து போல‌வும் ம‌றுப‌க்க‌ம் அதை மெளனமாய் அனுமதிப்பதும் முடிந்தால் அதையே கூட உள்ளுக்குள் ரசிப்பதுமாய் இர‌ட்டை வேட‌ம் போடும் ந‌ம் அனைவ‌ரையுமே என்ன‌ தான் செய்ய‌? வெட்கம் கெட்ட சமூகத்தில் வாழும் நாம் விவஸ்தை அற்ற மனிதர்களாய் திரிவதில் வினோதம் ஏதும் இல்லையே!

No comments:

Post a Comment