அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று சென்ற வாரம் நம் அனைவருக்குள்ளும் ஊடுருவியது... அதிர்ச்சிகள் எப்படியிருப்பினும் சகித்துக்கொள்ளும் அளவுக்கு புரையோடிப்போன சமூகத்தின் அறிகுறியாய் இருக்கக்கூடிய மற்றுமொரு அதிர்ச்சி அது. பெங்களூரில் பெயர் பெற்ற பள்ளி ஒன்றின் வளாகத்துக்குள்ளேயே ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதும் அதை பள்ளியில் பணிபுரிபவர்களே செய்திருக்கிறார்கள் என்பதுமான செய்திகளை பார்க்கும் பொழுது ஏற்படும் அதிர்வலைகளைத் தாண்டி பள்ளிகள் குறித்த நம் பார்வையும் நம் சிந்தனைக்கு எட்டுகிறதா? எட்டினாற்போல் தெரியவில்லை...!
வழக்கம்போல் சீறியெழுதல்கள், போராட்டங்கள், விவாதங்கள் என பயன் அற்ற பழகிப் போன போலித்தனங்கள் ஒருபுறம் இருக்கட்டும்... இச்சம்பவம் நம் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். எத்தனை நடந்திருக்கிறதோ எத்தனை வெளிவரவில்லையோ! ஆனால் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற லட்சணத்தில் தான் நம் கல்வி வியாபாரம் கடை விரிக்கப்பட்டிருக்கிறது. சம்பவத்தினால் கொதித்தெழும் பெற்றோர் மற்றும் சமூக நோக்குடையோரிடம் சில கேள்விகள்:
1. "இந்த பள்ளியில் என் பிள்ளை / பெண் படிக்கிறார்" என்று சொல்லிக் கொள்ள விரும்பி, அதன்மூலம் சமூக அடையாளங்களையும் ஆதாயங்களையும் அடைய விரும்பி, பகட்டான பள்ளிகள் கேட்கும் பணத்தை அள்ளிக் கொட்டி, முழுத்தொகைக்கும் ரசீது தரப்படாது என்று அடாவடி காட்டும் நிர்வாகத்திற்கு தலையாட்டி நம் பகட்டை வெளிக்காட்ட முயற்சிக்கிறோமே இந்த அவலத்தை எதிர்த்து நிற்கும் தைரியமும் இப்படிப்பட்ட பள்ளிகளில் எதற்கு நம் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற நேர்மை மிக்க யோசைனைத் திறனும் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது? இனியாவது இருக்குமா?
2. பள்ளிகள் பெற்றோரிடம் பல்வேறு கண்டிஷன்கள் அடங்கிய விண்ணப்பத்தில் கையொப்பம் வாங்குகின்றன...அதில் "மாணவ மாணவியருக்கு என்ன நடந்தாலும் பள்ளி பொறுப்பிலை" என்று கூட பல பள்ளிகளில் இருக்கிறது. இந்த விவகாரத்தில் கூட பல பெற்றோர்கள் இந்தப் பள்ளியின் மீது இதே புகாரை வாசித்தனர். இவர்கள் அனைவருமே படித்த அதிமேதாவிகள்! கையெழுத்துப் போட்டு பள்ளியில் சேர்க்கும் பொழுது வாயை மூடிக்கொண்டு ஏன் இருந்தார்கள்? கேள்வி கேட்டால் பேர் பெற்ற பள்ளியில் சீட்டு கிடைக்காது என்பதாலா? இப்போது கூப்பாடு போட்டு என்ன பயன்?
3. கூட்டுக் குடும்பம் என்பது கிட்டத்தட்ட இல்லாமல் ஆகி விட்டது. குழந்தைகள் மீது முழுக்கவனமும் செலுத்த பெற்றோருக்கு நேரமும் இல்லை, தங்கள் "கேரியரை" விட்டுக் கொடுத்து குழந்தையை நன்றாக வளர்க்க எவருக்கும் மனமுமில்லை. இந்த சமூக சீர்கேட்டை பயண்படுத்தி பள்ளிகள் ஏதேதோ "ஆக்டிவிடீஸ்" என்ற பெயரில் பணத்தை பிடுங்குகின்றன. பிள்ளைகள் பள்ளிகளில் நீண்ட நேரம் இருக்கிறார்கள். இத்தகைய பெற்றோருக்கும் எவ்வளவு நேரம் குழந்தை வெளியில் (பள்ளியில்)இருக்கிறதோ அவ்வளவு "பளு" நமக்கு குறைவு என்று நினைக்கின்றனர். எவ்வளவு பணம் குழந்தை மீது செலவழிக்கிறோமோ அவ்வளவு நன்றாக குழந்தையை வளர்க்கிறோம் என்பது அதிமேதாவிகளின் முட்டாள்தனம். அவ்வளவு நன்றாக குழந்தை வளரும் என்பது அதைவிட அதிமுட்டாள்தனம். லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி அதை பள்ளிகளில் கொட்டும் படித்த முட்டாள்களான நமக்கு இது புரியாதா? அல்லது புரிந்தும் ஏதும் செய்ய இயலாத "சமூக விசை" இதில் இருக்கிறதா? அதிகம் பணம் தந்து பெறும் எதுவும் அதிக தரமானதாக இருக்கும் என்ற முட்டாள்தன நம்பிக்கை நம் மூளைகளில் ஏறி மாமாங்கம் ஆகி விட்டதே!
4. இந்த சம்பவத்தில் பள்ளி நிறுவனர் தனக்கு எதுவும் தெரியாது என்று பச்சைப் பொய் சொல்லியிருக்கிறார் என்பது காவல்துறை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இப்படி ஒரு புளுகு புளுகி தப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையை அவருக்கு அளித்தது யார்? இச்சமூகமே அந்த நம்பிக்கையை அவருக்குக் கொடுத்திருக்கிறது.இன்று கல்வி என்பது மிகப்பெரிய வியாபாரம். பள்ளிகளும் கல்வி நிறுவனங்களும் அதைத்தான் செய்யும். குளுகுளு வகுப்பறைகள் என்றவுடன் மகிழ்கிறோம்...இயற்கையுடனான தொடர்பை சிறு வயதிலேயே துண்டிக்கும் அறிவற்ற தன்மை இதில் இருக்கிறது என்று யோசித்தோமா? ஒரு உல்லாச விடுதிக்கு உரிய அனைத்து வசதிகளும் இருப்பதாக நீண்ட லிஸ்டை பள்ளிகள் நீட்டும் பொழுது நாம் புளுகாங்கிதம் அடைகிறோம். அறிவு மற்றும் பண்பின் பரிமாணங்கள் பயிற்றுவிக்கப்படும் அறிகுறிகள் கொண்ட அம்சங்கள் அந்த லிஸ்டில் இருக்கிறதா என்று யோசிக்கின்றோமா?
5. இப்பொழுது நம் நாட்டில் புதிய புரட்சி ஒன்று புறப்பட்டிருக்கிறது. கேண்டில் லைட் போராட்டம்! ஒரு நாள் மெழுகுவர்த்தி ஏத்தி அதில் அகலக் கூடியதா நம் சமூக அழுக்கு? அதைப் பற்றி என்ன அக்கறை? ஒரு நாள் போராட்டம் நடத்தி விட்டு நாம் அடுத்த வேலையை பார்க்கப் போய் விடுவோம்... சில வாரங்களில் "பழைய குருடி கதவை திறடி" கதை தான் நம் நாட்டில் சாசுவதமானது என்பது அக்கிரமக்காரர்களுக்கும் தெரியும் அவர்களை தண்டிக்க வேண்டிய இடத்தில் இருப்பவர்களுக்கும் தெரியும்.
"உயர் தரம்" என்பதற்குள்ளே உளுத்துப் போனவைகள் இருப்பது இதனால்தான். எனவேதான் ஒரு பள்ளியின் உள்ளேயே இத்தகைய வக்கிரம் நடந்த பின்னும் வெளிவர பத்து நாட்கள் ஆனது. வெளிவந்த பின்னும் லட்ச லட்சமாய் கொட்டிக் கொடுத்த பெற்றோர்களின் கூக்குரல்களைப் பொருட்படுத்தாமல் சாவகாசமாக பள்ளி நிறுவனர் முகம் காட்ட இரண்டு நாட்கள் ஆனது...பள்ளிக்குள் நடக்கவில்லை என்று முதலில் பொய் சொல்லி பிறகு மாற்றிப் பேச முடிந்தது...பள்ளிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று காவல்துறையை வைத்துக் கொண்டே பொறுப்பிலிருந்து நழுவ முடிந்தது...இது போன்ற பள்ளிகளின் மீது கூப்பாடு போட்டு என்னாகப்போகிறது? அத்தனை பெற்றோர்களும் சேர்ந்து, அத்தனை மாணவர்களையும், இந்தப் பள்ளி நமக்குத் தேவையில்லை என்று விலக்கிக் கொள்ளும் தைரியம் நமக்கு இருக்கிறதா? அப்படி நடந்தால் அடுத்த வருடமே பள்ளி தானாகவே இழுத்து மூடப்படும். பள்ளிகளுக்கு பயம் வரும். எப்படியெல்லாம் காசு பண்ணலாம் என்று யோசிப்பவர்கள் தரம் பற்றியும் சற்று யோசிப்பார்கள். நம்பகமான ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமாவது பள்ளிகளுக்கு வரும். இதெல்லாம் நம்மால் முடியாது. ஏனென்றால் பிள்ளைகளின் ஒரு வருடம் வீணாகி விடுமே! அவர்களின் ஐஐடி ஐஐஎம் அமெரிக்கக் கனவுகள் என்னாவது? இதே சாக்கடையில்தானே நாமும் காசு கொட்டி பட்டம் பெற்று "செட்டில்" ஆன பின் வீட்டில் சோபாவில் அமர்ந்தபடி "இந்த எஜுகேஷன் சிஸ்டமே மோசமா போச்சப்பா..." என்று நீலிக்கண்ணீர் வடித்து போலித்தனமாய் கதை பேசிக் கொண்டிருக்கிறோம்? இது தான் நம் சமூகப் பொறுப்பின் லட்சணம்.

முதலில் பெற்றோர் மற்றும் சமூக பங்களிப்பாளர் என்ற பொறுப்பை நாம் எத்தனை சதவீதம் நிறைவேற்றுகிறோம் என்று பாசாங்கின்றி யோசிப்போம். ஏகப்பட்ட அழுக்குகள் வெளிவரும்! பிறகு இது போன்ற வக்கிரங்களுக்கு எதிராக குரல் கொடுத்தால் அதில் ஒரு நேர்மை இருக்கும். நேர்மை தோற்றதாக விதி இருக்கிறதா என்ன?
No comments:
Post a Comment