/ கலி காலம்: 2013

Saturday, December 7, 2013

பாரத ரத்னா யாருக்கு?

சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா அறிவித்ததில் பெரும்பாலானவர்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தாலும் அது சரியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நமக்கு எப்பொழுதுமே எந்த விஷயத்திலுமே இரண்டு எல்லைகள் மட்டுமே தெரியும். ஒன்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவது இல்லையேல் காலில் போட்டு மிதிப்பது. ஒன்றை ஆராய்ந்து அதற்குரிய இடத்தில் வைப்பது என்பதை பற்றியெல்லாம் நாம் அதிகம் கவலைப்படுவதில்லை.

முதலில் கிரிகெட் என்பது ஒரு விளையாட்டு என்பதை தாண்டி, அதை ரசிப்பது என்பதை தாண்டி, கிரிகெட்டை தேசப்பற்றுடன் தொடர்புபடுத்தும் முட்டாள்தனத்தை நாம் நன்றாகவே வளர்த்துள்ளோம். இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றால் அது இரு நாடுகளின் போர் போல, வடிவேலு பாணியில் சொல்வதானால் "உசுப்பேத்தி உசுப்பேத்தி ரணகளப் படுத்த...", நாமே அதற்கு ஒரு சாயம் அடித்து களேபரப்படுத்துகிறோம். இதனால், கிரிகெட் வீரர்கள் தேசத்தை காப்பாற்றும் மாபெரும் தொண்டாற்றும் கள வீரர்கள் போல சித்தரிக்கப்பட்டு நம் அடிப்படை சிந்தனைகளே சிதிலமடைந்து கிடக்கிறது. இதன் மேல் எழுப்பப்படும் எத்தகைய எண்ணத்திலும் "லாஜிக்" இருக்குமா?

சச்சின் ஒரு மிகச் சிறந்த கிரிகெட் வீரர் என்பதில் சந்தேகமில்லை. கிரிகெட் விளையாட்டுக்காகவும், இந்தியா கிரிகெட்டில் பெரும் வெற்றிகள் பெறவும் அவரின் அர்ப்பணிப்பும் பங்களிப்பும் மகத்தானவை. அவரின் திறமைக்காக இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள விளையாட்டுத் துறைகளின் எத்தனை விருது வழங்கினாலும் தகும். ஆனால், அத்துடன் அந்த வட்டத்தின் எல்லை நின்று விடுகிறது. சமூகத்திற்கும் அவரின் திறமைக்கும் பொழுது போக்கைத் தவிர வேறெந்த நலன் சார்ந்த தொடர்பும் இல்லை. பலர் அவரை "நாட்டின் தூதுவர்" போலச் சித்தரிக்கின்றனர். அதுவும் முழுமையல்ல. முன்னர் ஒரு முறை வெளிநாட்டு கார் ஒன்று அவருக்கு வழங்கப்பட்ட போது அதற்கான வரி செலுத்துதலில் அவர் நழுவிய பொழுது முதன் முதலாக அவரின் "சமூக இருப்பு" பற்றிய நம்பிக்கை சறுக்கியது. அந்த விவகாரத்தை முடிக்க, காரை வேறொருவருக்கு விற்றதில் மேலும் வழுக்கியது...

ராஜ்ய சபா எம்.பி ஆனார். இதுவரை ஏதேனும் பேசியிருக்கிறாரா?
முதலில், ஆண்டு முழுவதும் போட்டிகளில் விளையாடிக் கொண்டே இருக்க வேண்டியிருக்குமே இந்தப் பதவியை ஏற்றுக் கொண்டால் அவையில் என்ன பங்களிப்பு நாம் செய்ய முடியும் என்று சிந்தித்திருந்தால், "ஓய்வு பெறுவதற்கு முன் இந்தப் பதவி எனக்குப் பொருந்தாது" என்று சொல்லியிருப்பார். நாம் அவரிடம் உள்ள பொது நேர்மை குறித்து கொண்டாடியிருப்போம்.

இவர் சில வருடங்களாக ரன்கள் எடுக்கத் திணறிய போது விமர்சனங்கள் எழுந்தன. அப்பொழுது அவர் "எப்போது ஓய்வு பெற வேண்டும் என்று நான் தான் முடிவு செய்வேன்" என்றார். சற்றே நிதானம் இழந்தது போலத்தான் இருந்தது. நல்ல வேளை, மேலும் ஏதேனும் அவர் பேசி தன் மதிப்பை மேலும் இழப்பதற்கு முன், பல ஆண்டுகள் அவரின் பங்களிப்பை கருத்தில் கொண்டு காலம் அவருக்கு நூறாவது சதத்தை வழங்கியது. இல்லையேல் நம் கிரிகெட் வாரியம் ஏதேனும் செய்து ஆப்கானிஸ்தானுக்கு கூட "டெஸ்ட் ஸ்டேட்டஸ்" வாங்கிக் கொடுத்து அங்கு சச்சினுக்கு போட்டி ஏற்பாடு செய்து சதம் அடிக்கும் வாய்ப்பு வழங்கியிருக்கும் என்பது வேறு விஷயம்!

இன்றைய கால கட்டத்தில் "மனிதர்களை" பார்ப்பதே அரிதாக இருக்கிறது. இதில் "மாமனிதர்" ஒருவரை எளிதில் பார்க்க முடியுமா என்ன? "பாரத ரத்னா என்பது மிகப்பெரிய விருது. நான் சமூகத்திற்கு அத்தகைய பங்களிப்பு செய்யவில்லை என்று நினைக்கிறேன்" என்று அவர் விருதை நிராகரித்திருந்தால் அவர் மாமனிதர் ஆகியிருப்பார்.

நம்மால் நிதானமாக, கூறு கூறாக எதையும் ஆய்ந்து அதன் பல்வேறு பக்கங்களைப் பிரித்து பார்க்க முடியவில்லை. கிரிகெட்டை தேசபக்தியாக நினைக்கும் முட்டாள்தனம் நம்மிடம் இருக்கும் வரை, இது போன்ற பொருத்தமற்ற செயல்கள் நாட்டில் நடந்து கொண்டேதான் இருக்கும். நல்ல வேளை சச்சின், மைதானத்திலும் வெளியிலும் தனது துறை சார்ந்த ஒழுக்கத்தில் சிற‌ப்பாக நடந்து கொண்டிருக்கிறார் என்று நாம் நிம்மதி அடைய வேண்டியதுதான்.
ஏனென்றால், இப்பொழுது புதிதாக் கிளம்பியிருக்கும் விராட் கோலி என்னும் வீரர் ரன்களாக வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறார். ரசிக வர்க்கம் அவரை தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடிக் கொண்டிருக்கிறது. அவர் சென்ற ஆண்டு, புகழ் பெறத் துவங்கும் பொழுதே அதன் போதை தலையில் ஏறி, பல கோடி மக்கள் பார்த்துக் கொண்டிருக்கையில், ஒரு போட்டியின் போதே அச்சில் ஏற்ற முடியாத அநாகரீக செய்கை செய்து நம்மை தலை குனிய வைத்தார். அதெல்லாம் நமக்கு எங்கே ஞாபகம் இருக்கப் போகிறது. ஒரு சிக்ஸ்ர் அடித்தாலே அனைத்தும் மறைந்தோடி விடுமே...எனவே எதுவும் நம் நாட்டில் நடக்கும். அவருக்கும் பல ஆண்டுகள் கழித்து பாரத ரத்னா விருது வழங்கினாலும் வழங்குவோம். ஏனென்றால் நமக்கு கிரிகெட் என்றால் தேசபக்தி. வேறெதுவும் யோசிக்கவும் தேவையில்லை யோசனைக்கும் வாராது!தகுதியற்றவர்கள் விருது பெறுவதும் தகுதியுள்ளவர்கள் அங்கீகாரம் இன்றி இருப்பதும் நம் நாட்டில் புதிய விஷயமா என்ன?




Friday, November 15, 2013

இலங்கை மேடையில் இன்னொரு நாடகம்...

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. நம்மூர் சிங்கங்கள் இதில் தங்களுக்கு உள்ள அக்கறையை பறை சாற்ற சிலிர்த்தெழுந்து வாதம், விவாதம், விதண்டாவாதம் என அனைத்தையும் செய்து விட்டு ஓயத்துவங்கி விட்டன. இனி அவை வேறு "வாய்ப்புகள்" தேடிப் போய் விட்டு இலங்கை (தமிழர்) குறித்த மற்றொரு நிகழ்வு வரும் பொழுது மீண்டும் சிலிர்த்தெழும்...

தலைவர்களுக்கென்று சில பண்புகள் தேவை என்று பழங்காலம் தொட்டு அறிந்திருக்கிறோம். அதில் குறிப்பிடத்தகுந்தது முடிவெடுக்கும் ஆற்றல். சரியோ தவறோ, முடிவுகளை தகுந்த காலத்தில் எடுத்து, அந்த முடிவுக்கான சிந்தாந்ததையும், காரணிகளையும் தெளிவாக விளக்குவது எந்தவொரு தலைவருக்கும் அவசியமான குணம்.

நம் பிரதமர் இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் க‌லந்து கொள்ளப்போவதில்லை என்று சில நாட்கள் முன் முடிவெடுத்தார்.. தெரிவித்த கையோடு, அதை ராஜபக்ஷேவுக்கு தெரிவித்து கடிதமும் அனுப்பியிருக்கிறார். அத்தோடு நில்லாமல் விவகாரத்துறை அமைச்சர் அவருக்கு பதில் கலந்து கொள்வார் என்றொரு நிலைப்பாடு வேறு. சுருங்கச் சொன்னால் "பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்" பழமொழி நமக்கு மறந்து விடாமல் இருக்க அதற்கு செயல்முறை விளக்கம் அளித்திருக்கிறார்.

இதென்ன இரட்டை நிலைப்பாடு? ஒன்று பிரதமர் கலந்து கொண்டு, காமன்வெல்த் அவையில், போர்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை தேவை என்று பேசியிருந்தால், அந்த தைரியமான போக்கை பாராட்டியிருக்கலாம். அல்லது மொத்தமாக புறக்கணித்து இந்தியாவிலிருந்து எவருமே கலந்து கொள்ள மாட்டோம் என்று தெரிவித்து, அதற்கான காரணத்தையும் விளக்கியிருந்தால் முதிர்ச்சியான ராஜாங்க முடிவென்று பாராட்டியிருக்கலாம்.

தான் போகாமல் மற்றொருவரை அனுப்புவதாக சொல்வது மட்டுமின்றி, வராததற்கு வருத்தம் தெரிவிக்கும் செயலால் எவருக்கேனும் எப்பயனேனும் உண்டோ? அட, அவருக்கேனும் கூட்டணி கட்சிகளின் நிர்பந்தத்தை வேறு வழியின்றி ஏற்றுக்கொண்ட குறைந்த பட்ச திருப்தி கூட இதில் கிடைக்காதே...நல்ல வேளை, கடிதத்தில் என்ன எழுதியிருப்பார் என்று நமக்குத் தெரியவில்லை. ஒரு வேளை, "கடல் கடந்து வர முடியாத நிலையில் உடல்நிலை இருப்பதால் இந்த மடல்" என்று எழுதியிருந்தாலும் அதிசயமில்லை. கடிதம் எழுதும் கலையை சென்னையில் இருந்து டெல்லி செல்லும் கடிதங்கள் மூலம் கற்காமலா இருந்திருப்பார் நம் பிரதமர்? எதுகை மோனையில் பேசியே ஏமாற்றும் தமிழகத்தின் இருபெரும் கட்சிகளின் முதுகில் சவாரி செய்து "கூடா நட்பு" பாராட்டியே பழக்கப்பட்ட தேசிய பாரம்பரிய கட்சியின் அங்கத்தினர் தானே அவர்?

போர் அத்துமீறல்கள் குறித்து வரும் வீடியோக்களை பார்க்கும் எவருக்கும் மனது என்னவோ செய்யும்.. அதுவும், நம் இனம் என்கிற போது கூடுதல் வலி ஏற்படுவது இயல்பு. ஆனால் அந்த உணர்ச்சி குவியல்களில் அரசியல் நெருப்பு பற்ற வைத்து ஆதாயம் காண‌ முயல்வதே இங்கிருக்கும் அனைத்து கட்சிகளின் அடிப்படை கொள்கை. எனவேதான், ராஜாங்க ரீதியான முயற்சிகளோ தீர்வுக்கான தொலைநோக்கு பார்வையோ இன்றி உணர்வு ரீதியான திரிகளை கொளுத்திப் போடுவதே அனைத்துக் கட்சிகளின் வேலையாக இருக்கின்றன.

இலங்கை தமிழர் விவகாரத்தின் இன்னொரு முனையில் சிக்கியிருப்பது நம் மீனவர்கள். "கச்சத்தீவை மீட்டெடுப்போம்" போன்ற வெட்டிப் பேச்சுக்களை விட்டு இவர்களின் அன்றாட மீன்பிடித் தொழிலுக்குரிய‌ பாதுகாப்பை பலப்படுத்தும் வழிமுறைகளுக்கான வரைவுகளை எந்தக் கட்சியாவது எந்த விதத்திலாவது முன்னெடுத்துச் சென்றிருக்கிறதா? தீப்பெட்டியும் தீக்குச்சியும் போல எந்த ஒன்று இன்னொன்றின் மேல் உரசினாலும் விளைவு நெருப்பே என்ற ஆபத்தான நிலைக்கு இந்த இரண்டு சிக்கல்களையும் ஆக்கி வைத்திருக்கிறோம்... என்னதான் இங்கு நாம் பேசினாலும், இலங்கை என்பது தனி நாடு. அதன் உள்விவகாரங்களில் தலையிட, அங்கு நடக்கும் அத்துமீறல்களை கண்டிக்க, உரியவர்களை தண்டிக்க, நடைமுறைக்கு சாத்தியமான வழிமுறைகள் எதையேனும் நாம் பொருத்தமிகு கூட்டமைப்புகளில் விவாதத்திற்கோ, சர்வதேச அரங்குகளின் புரிதலுக்கோ விளக்கமாக வைத்திருக்கிறோமா நாம்? அத்தகைய ராஜ தந்திரமும் பக்குவமும் ஒருசேர பெற்ற தலைவர் எவரேனும் இங்கு இருக்கின்றாரா?

இங்கிருக்கும் பெரிய கட்சிகள் கடிதம் எழுதுவதையும் தீர்மானம் போடுவதையும் தவிர இவற்றுக்கு விடை காணும் வகையில் ஏதேனும் உருப்படியாக யோசித்திருக்கின்றனவா? ஓட்டில் மட்டுமே கண் வைத்திருக்கும் தலைவர்கள் மட்டுமே இன்று மிச்சம். நாட்டை வழிநடத்தும் தகுதி உடையவர் எப்பொழுதேனும் கிடைத்தால் நமக்கு மச்சம்.

நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் என்ன செய்ய முடியும்? ஒன்று செய்யலாம் - நல்லதோ கெட்டதோ...எந்தவொரு விஷயமும் முடிவுக்கு வந்தாக வேண்டும். அந்த வகையில், இன்றிருக்கும் பொறுப்பற்ற, சிந்தனையற்ற, செயலற்ற அரசியலும் முடிவுக்கு வரும். சரித்திரத்தில் பதியப் பெற்ற அப்பழுக்கற்ற அரசியல் தலைவர்கள் போல மீண்டும் எவரேனும் தோன்றக்கூடும் என்ற நம்பிக்கையில், அவரை அடையாளம் தேடியபடியே நாம் இருக்கலாம்...ஆண்டுகள் பல ஆகலாம் தலைமுறைகள் பல கூட தாண்டலாம்...ஆனால் என்றேனும் காலச்சக்கரம் மீண்டும் சுற்றி காமராஜர் போலவோ கக்கன் போலவோ எவரேனும் தோன்றலாம் என்ற நம்பிக்கையில் நாம் வாழலாம் அந்த நம்பிக்கையை அடுத்த‌ தலைமுறைக்கும் ஊட்டலாம்.

அதுவரை இவர்கள் அத்தனை பேரின் நாடகங்களையும் புறக்கணித்து, இலங்கையில் சிங்களர்களுடன் தமிழர்கள் அமைதியாக வாழவும், எது நமது கடல் எல்லை என்று அறியும் வசதியின்றி எல்லைத் தாண்டி மீன்பிடிக்கப் போனவர்கள் சேதாரமின்றி அவரவர் வீடு திரும்பவும், நமக்கு எதன் மீது நம்பிக்கையோ அதனிடம் வேண்டுவதை தவிர வேறு வழியில்லை. இந்த விவகாரங்களுக்கு விடிவுமில்லை.

Saturday, August 17, 2013

வாங்க...லெட்டர் போடுவோம்

என்னங்க? ஊர் உலகம் தேள் கொட்டிய‌ குரங்கு மாதிரி என்னவெல்லாமோ செஞ்சுக்கிட்டுருக்கு...இந்த காலத்துல கடிதம் எழுதவா? என்று என்னை ஏற இறங்க பார்க்காதீங்க...எல்லாம் நம்ம அரும்பெரும் தலைவர்கள் பேணிக் காக்கும் பாரம்பரியத்தை பரப்பும் பணியில் ஏதோ நம்மால் முடிந்த சிறு துளி சார் இது.

சமீபத்தில் உத்திரபிரதேசத்தில் ஒரு IAS அதிகாரியை சஸ்பெண்ட் செய்தது குறித்து நாடு முழுவதும் விவாதம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதன் போக்கில் அது நடக்கட்டும். ஆனால், மத்தியில் அரசாளும் கட்சியின் தலைவர் செயல்பாட்டை நாம் வியந்து பார்க்க வேண்டும். என்னே ஒரு வேகம் என்னே ஒரு விவேகம்...தன் கட்சியைச் சேர்ந்த, தனக்கு கீழே பணி செய்யும் பிரதமருக்கு, தான் நினைத்தால் அடுத்த நிமிடம் பார்க்கக் கூடிய ஒருவருக்கு, இந்த விஷயத்தில் நியாயத்தின் பக்கம் நின்று நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். அதுவும் எப்படி? கடிதம் எழுதி! தகவல் தொழில்நுட்பத்தில் கொடி கட்டிப் பறக்கும் நாட்டில் எப்பேர்ப்பட்ட புரட்சி சார் இது! இவர்களிடம் "ஏன் இப்படி செய்கிறீர்கள்?" என்று கேட்க முடியுமா? ஏற்கெனவே பிரதமர் ஒரு முறை, "தமிழ் நாட்டின் மூத்த தலைவர் மூலமே நாங்கள் ஆலோசனை பெறுகிறோம்" என்று சொல்லியிருக்கிறார். கடிதம் எழுதுவதில் கை தேர்ந்தவரான அவர் தான் இந்த "அட்வைஸ்" தந்திருப்பாரோ? அதற்காக மற்றவர்களை குறைவாக நாம் எண்ணி விடக் கூடாது. இப்பொழுதுள்ள முதல்வரும் முடிந்த வரை மூத்த தலைவரை கடிதம் எழுதும் கலையில் முந்த முடியுமா என்று தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்து வருகிறார். இப்படியாக தமிழகம் நாட்டிற்கு தந்த ஒப்பற்ற கலைவடிவமாக விளங்குகிறது கடிதங்கள்!

நம் பங்குக்கு நாம் என்ன சார் செய்யலாம்? ஒரு உதாரணம் மட்டும் பார்க்கலாம். ஏதாவது பெரிய தீ விபத்து ஏற்பட்டு விட்டது என்று வைத்துக் கொள்வோம்...தீயணைப்புத் துறைக்கு போன் செய்தால் விஷயம் சீக்கிரம் முடிந்து விடுமே? முடிய விடலாமா? கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாமா நமக்கு? தலைவர்களின் தாள் தொட்டு அவர்கள் வழி நாம் நடக்க வேண்டாமா சார்? பற்றி எரியும் தீயை உற்றுப் பார்த்து வருந்தியபடி தபால் நிலையம் நோக்கி ஓட வேண்டும். நடந்தால் இன்னும் நல்லது. கூரியர் எல்லாம் வேகமாக பட்டுவாடா செய்யப்படும் என்பதனால் சாதா அஞ்சல் அட்டையை பயன்படுத்தலாம். தீயணைப்பு நிலையத்திற்கு தீயை அணைக்கும் படி அகம் உருகி ஒரு கடிதம் போட வேண்டும் சார் கடிதம்!

"மதிப்புக்குரிய தீயணைப்பு நிலைய தலைவருக்கு, சமூகத்தில் தீ விபத்துக்கள் அவ்வப்பொழுது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. உங்களின் கடமைமிகு படை வீரர்கள் மூலம் மக்களை தொடர்ந்து காத்து வரும் தொண்டு எங்களை மெய் சிலிர்க்க வைக்கிறது. அந்த சிலிர்ப்புக்கு சிகரம் வைக்கும் தருணம் வந்து விட்டது. நியாய உணர்வுடன் விரைந்து வந்து கொழுந்து விட்டெரியும் கொடிய தீயை
தண்ணீர் கொண்டு தவிடுபொடியாக்கி கண்ணீரில் மிதக்கும் எங்களை பன்னீரில் நனைய வைக்கும்படி மூவுலகிலும் மூத்த குடியாம் தமிழ் குடியின் அடுப்பொடிகளில் ஒருவனாக கேட்டுக் கொள்கிறேன்..." - ஒரு பொறுப்புமிக்க குடிமகனாக இப்படியொரு கடிதம் எழுதினால் முடிந்தது காரியம் சார்.

ஆனால் கடிதங்கள் எழுதியே காலத்தை ஓட்ட முடியுமா? ஒரு கட்டத்தில் போரடிக்குமே? எனவே பாரம்பரியமிக்க பாரதத்தில் பழங்காலத்தில் இருந்த சீர்மிகு தகவல் சாதனமான புறாவுக்கு மீண்டும் உயிர் கொடுப்போம் என்றொரு புரட்சி ஊற்று நம் தலைவர்களின் சிந்தனையில் உதித்தால் நாட்டின் கதி என்ன ஆகும் சார்? கலக்கமாக இருக்கிறதா? அத்தனை கலக்கத்தையும் அறிக்கை விட்டே அழிய வைக்கும் ஆற்றல் மிக்க அரசியல்வாதிகள் வாழும் நாடல்லவா இது! "சுறாவை சுண்டு விரலால் பிடித்த வீரமிகு வரலாறு கொண்ட தேசத்தில் புறாவை கொண்டு கடிதம் அனுப்பும் கலையை போற்றும் பணி செய்வோம் பாரம்பரியம் காப்போம்" என்று ஆரவாரமாக‌ அறிக்கை விடத்தெரியாதவர்களா நாம்?

"புறா பராமரிப்புத் துறை" ஒன்று துவங்கி அரசாங்க தகவல் பரிமாற்றங்கள் மற்றும் மக்கள் தொடர்பு அனைத்தும் புறா அன்றி இரா என்று எதுகை மோனையில் ஒரு சட்டம் இயற்றினால் போதாதா? அப்புறம் நம் அனைவருக்கும் வீட்டுக்கொரு விலையில்லா புறா கிடைக்கும். "புறா தந்த புரவலர்" பட்டம் பெறும் பாக்கியம் நம் நாட்டில் எந்த தலைவருக்கு வாய்த்திருக்கிறதோ! பொறுத்திருந்து பார்ப்போம்!

குறிப்பு: உதாரணத்தை வைத்து நீங்களாக ஏதேனும் உள்ளர்த்தம் செய்து கொண்டால் அதற்கு நீங்களே பொறுப்பு!

Sunday, July 21, 2013

மெதுவா தந்தி அடிச்சானே...

என்ன சார்...தலைப்பு பார்த்து விதவிதமான எதிர்பார்ப்புக்களுடன் படிக்க ஆரம்பித்து விட்டீர்களா? எதிர்பார்ப்பு நிறைவாகிறதா இல்லை ஏமாற்றமா என்று இறுதியில் தெரிந்து விடும். இப்பொழுது விஷயம் என்னவென்று பார்ப்போம்.

தாத்தாவிற்கு தாத்தா காலம் தொட்டு அவசர நேரங்களில் தகவல் பரிமாற உதவிய தந்திக்கு அந்திம காலம் சென்ற வாரம் முடிந்தது நாம் அனைவரும் அறிந்ததே...இந்த நேரத்தில் தந்தியுடன் நாம் கொண்ட தொடர்பு குறித்து நமது நினைவலைகள் புரண்டு கொண்டிருக்கும். எனக்கு, நான் முதன் முதலாய் தந்தி கொடுக்கச் சென்ற அனுபவம் ஞாபகம் வந்தது. ஞாபகம் என்றால் நம் சொல் கேட்குமா சார்? ஒன்றிலிருந்து இன்னொன்று என்று அது போன போக்கில் போய் கொண்டேதானே இருக்கும்? நாமும் அதன் போக்கில் போக வேண்டியதுதானே...

அப்போது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஒரு உறவினரின் மறைவுச் செய்தியை பல பேருக்கு தந்தி மூலம் தெரிவிக்கும் பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டது. சூழல் காரணமாக எப்படி தந்தி அனுப்புவது என்று எவரிடமும் கேட்க இயலாமல் நேரே "தந்தி ஆபிஸ்" சென்றேன். கையில் பேப்பரில் நிறைய முகவரிகள். தந்தி கவுண்டரில் நல்ல கூட்டம். மகிழ்ச்சி, துக்கம் என வெவ்வேறு ஸ்வரங்களை மாறி மாறி அடிக்கும் "டக் டக்" சத்தம் தொடர்ந்து கேட்க, வரிசையில் நிற்போர் "கதை" பேசாமல் மெளனம் காக்கும் விசித்திரமான இடமாக தெரிந்தது தந்தி ஆபீஸ்.

அனைவரும் வயதில் என்னை விட மிகப் பெரியவர்களாக இருந்தார்கள். ஒரு வேளை பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் தந்தி அனுப்ப முடியுமோ என்று ஒரு திடுக் சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. அப்படியென்றால் வீட்டில் என்னை அனுப்பியிருக்க மாட்டார்கள் என்று மனம் சமாதானம் சொன்னாலும், அத்தனை நீள வரிசையில் நின்று இறுதியில் வயதாகவில்லை என்று சொல்லி விட்டால் என்ன செய்வது என்ற கவலை வேறு! ஒருவரிடம், நேரடியாக வயது வரம்பு பற்றி கேட்கத் தயங்கி, "தந்தி அனுப்ப address proof வேணுமா?" என்றேன். அட்ரஸ் இருந்தா போதும் புரூப் வேண்டாம் என்றார். மதுரைக்காரர் என்றாலே பதிலை ருசியாகத்தானே சொல்வார்? அடுத்து, "ஸ்கூல் படிக்கறவங்க அனுப்பலாமா?" என்றேன். என்னை ஒரு மாதிரியாக பார்த்தவர், கவுண்டரை கைகாட்டி "அங்க போய் கேளு" என்றார்.

பெரிய குங்குமப் பொட்டுடன் ஒரு பெண்மணி கவுண்டரில் இருந்தார். "மேடம் நான் பத்தாவது படிக்கறேன். தந்தி அனுப்பலாமா" என்று பொட்டென்று போட்டு உடைத்தேன். ஒரு பெரும் பாரம் இறங்கியது போல் இருந்தது. "யார் வேணாலும் அனுப்பலாம்பா" என்று form ஒன்றை கொடுத்தார். ஏற்கெனவே முகவரிகளை எண்ணி வைத்திருந்த நான், கொஞ்சம் "extra" இருக்கட்டுமே என்று சற்று கூட்டி, ஒரு ஐம்பது form கொடுங்க" என்றேன். அங்கிருந்தவர்கள் அனைவருமே என்னை பார்வையால் துளைப்பது போல இருந்தது. பெண்மணி ஒருவரை பெயர் சொல்லி அழைக்க, எங்கிருந்தோ வந்தவரிடம், "5 நிமிஷம் பார்த்துக்கங்க" என்று சொல்லி விட்டு என்னை பார்த்தபடி எழுந்தார். "ஆஹா... ஐம்பது எல்லாம் கேட்கக்கூடாது போலிருக்கே" என்று எனக்கு படபடப்பானது. சுற்றி நடந்து வெளியே வந்தவர், "இப்படி வாப்பா தம்பி" என்று அருகிலிருந்த பெஞ்சுக்கு கூட்டிப் போனார்...

சரி...தனியாக அழைத்துச் சென்று திட்டும் அளவுக்கேனும் பக்குவப்பட்டவராக‌ இருக்கிறாரே என்ற எண்ணத்துடன் அவரின் பின்னே சென்றேன். யார் இறந்தது என்று விசாரித்து, சுவற்றின் மேலே தொங்க விடப்பட்டிருந்த "தந்தி விதிமுறைகள்" போர்டை காட்டி, ஒவ்வொரு சொல்லுக்கும் காசு உண்டு என்று விளக்கி, நான் ஒரு form முடிக்கும் வரை சரி பார்த்து, "மற்றவற்றை எழுதிக் கொண்டு வா" என்று சொல்லி விட்டு போய் விட்டார்.

ஐந்து நிமிடம் கழித்து அனைத்தையும் "ரெடி" செய்து நிமிர்ந்த நான் மீண்டும் வரிசையில் நிற்க வேண்டுமா என்ற பிரமிப்புடன் மெதுவாக வரிசை நோக்கி நகர்ந்தேன்...கவுண்டரில் இருந்த அவர், சத்தமாக "வரிசை வேண்டாம் இங்க வா" என்றார். அனைத்தையும் சரி பார்த்து அனுப்பி, "acknowledgement" கொடுத்து, கரெக்டா போயிரும் போயிட்டு வா" என்றார். எத்தனை உணர்வு பூர்வமான வேலையை இவர்கள் செய்கிறார்கள் என்று அனுபவத்தில் அறியும் அற்புதமான வாய்ப்பு அன்று எனக்கு கிடைத்தது.

சில‌ வருடங்கள் கழித்து, ஒரு மாலை நேரத்தில், மதுரை சக்தி சிவம் தியேட்டரில்,  புதிய‌ வகையில் தந்தியடிக்கும் முறைகள் குறித்து அரவிந்த் சாமியும் சிவரஞ்சனியும் "மெதுவா தந்தி அடிச்சானே..." என்ற பாடல் மூலம்   செயல்முறை விளக்கங்களுடன்  மக்களுக்கு மாபெரும் ஞானம் அளிக்க‌ தங்கள் கலைத்தொண்டு மூலம் முயன்று கொண்டிருந்தனர். "தாலாட்டு" படத்தில் வரும் இப்பாடலை நண்பர்களுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

சரிதான்...இரண்டிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? அதான் சொன்னேனே சார்...ஞாபகம் என்றாலே எங்கெங்கெல்லாமோ சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் நம் மனதை திரிய வைத்து எப்படியோ ஒரு சம்பந்தத்தை எதன் இரண்டிற்கோ இடையில் கொண்டு சேர்த்து விடும் என்று... எனவே இதிலும் சம்பந்தம் இருக்கு சார் இருக்கு. எனது முதல் தந்தி அனுபவ ஞாபகமும் "மெதுவா தந்தி அடிச்சானே" பாட்டு ஞாபகமும் எப்படியோ சேர்ந்து இப்பொழுது எனக்கு ஒரு கவலையைத் தந்திருக்கிறது...அதாவது, இன்னும் ஒரு நானூறு ஐநூறு ஆண்டுகள் கழித்து எஞ்சியிருக்கும் தமிழ் தெரிந்த எவரோ ஒருவர், "முற்கால தமிழ் அகராதி" என்று எதையேனும் தயாரிக்க முயன்று கொண்டிருக்கையில் அவர் காதில், "மெதுவா தந்தி அடிச்சானே" பாடல் விழுந்து, ஆர்வம் உந்தித் தள்ள அந்த பாடல் காட்சியை பார்க்கும் அவலமும் நேர்ந்து, அதன் மூலம் அவர் அறிவுக்கு எட்டியதை, "தந்தி என்ற சொல், பண்டைய தமிழ் நாட்டில் காதலர்கள் ஒருவரை ஒருவர் கையாளும் முறையை குறிக்கும்" என்ற ரீதியில் எதையேனும் எழுதி வைத்தால் என்ன செய்வது சார்?

Sunday, June 9, 2013

எப்படியிருந்த கிரிகெட்...

அது ஒரு பிற்பகல் வேளை. நான் சென்று கொண்டிருந்த பேருந்தை திடீரென்று சாலையோரம் நிறுத்தி விட்டு ஒரு கடை நோக்கி இறங்கிப் போன டிரைவர், திரும்பி வந்து பயணிகளிடம் "Chetan Sharma செஞ்சுரி அடிச்சுட்டான்" என்று உற்சாக அதிர்ச்சியை உரக்கச் சொல்லி விட்டு வண்டியை எடுத்த தினம் நடந்து இருபத்தைந்து ஆண்டுகள் இருக்கும். பேருந்து முழுவதும் "Chetan Sharma" மந்திரமாக ஒலித்தார். அதற்கு சற்று காலம் முன்பு கடைசி பந்தில் சிக்ஸ்ர் கொடுத்த போது திட்டித் தீர்த்த பல வாய்களே அந்த பேருந்தில் அன்று இருந்திருக்கக் கூடும். எனினும் அனைவருக்கும் அன்று அது நினைவில் இல்லை. எவரும் "எதுக்குய்யா வண்டியை நிப்பாட்டின?" என்று கேள்வி கேட்கவில்லை. இப்படித்தான் நம் தேசம் கிரிகெட் கிறுக்கு பிடித்து வருடக்கணக்கில் அலைந்தது.

பரந்த மைதானத்தில் விளையாடும் ஆட்டம் என்றாலும் பத்துக்குப் பத்து ரூமுக்குள் கூட, வீட்டு பீரோ நெளிந்து போக, கண்ணாடி உடைபட விளையாட வைத்தது...ரப்பர் பந்து பிய்ந்து போனால், அதன் ஒரு பகுதியை வைத்தே விளையாடினாலும் உற்சாகம் தந்தது...தரிசு நிலங்களில் உடைந்த மரப்பட்டையை பேட்டாகவும் உலர்ந்த சோளத்தட்டையை பந்தாகவும் உருமாற வைத்தது...காற்றில் கைகளை சுற்றி பெளராகவும், விதவிதமான ஷாட்களுக்கு வாயினாலேயே "டொக்" என்று சத்தம் கொடுத்து பந்துமில்லாமல் பேட்டுமில்லாமல் கற்பனையிலேயே விளையாடியபடி தெருவில் நடந்து போகும் சிறுவர்களைக் கொடுத்தது...சின்னஞ்சிறு மைதானத்தில் எந்தப் பந்து எந்த "மேட்சில்" இருந்து வருகிறது என்று கண்டுபிடிப்பது கூட கடினமாக குறுக்கும் நெடுக்குமாக பல குழுக்கள் விளையாடினாலும் பொறுத்துக் கொள்ள வைத்தது...

கிரிகெட் நம் நாட்டில் பரவுவதற்கு பெருமளவு பங்காற்றியது தூர்தர்ஷன் என்பதை நாம் மறந்து விட முடியாது. "ஆடி அசைந்து" விளையாடுவதற்கு பெயர் பெற்ற ரவி சாஸ்திரி "ஆடி" கார் பரிசு பெற்ற 1985 ஆண்டின் "" போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பி பட்டி தொட்டியெங்கும் கிரிகெட் மோகத்தை கிளறியது தூர்தர்ஷன். ஆஸ்திரேலியாவில் நடந்த இந்தப் போட்டிகளை, வெறும் கோடுகள் மட்டுமே திரையில் தெரியும் போதே டிவியை ஆன் செய்து, இரண்டு முந்திரி வடிவங்கள் இசையுடன் திரையில் சுற்றி வருகையில் சற்று உற்சாகம் தொற்றி, பல் துலக்கிய கையோடு டிவியின் முன் தவம் கிடந்த வீடுகள் பல உண்டு.

டி.வி என்பது வசதி படைத்தவர்கள் வாங்க யோசிக்கும் இருந்த அந்நேரத்தில், ஏதேனும் ஒரு டிவி ஷோ ரூமின் வாசலில் நின்று "Dyanora" மற்றும் "Solidaire" வகையறாக்கள் வழியாக ஓடிக்கொண்டிருக்கும் கிரிகெட் மாட்சை சாலையில் போகும் பிச்சைகாரரும் பிசினஸ்மேனும் அருகருகே நின்று ஆனந்தமாக பார்த்துச் சென்ற "கலாச்சாரம்" தோன்றியது.ரிக்க்ஷா ஓட்டுபவர் "ஒரு நிமிஷம்" என்று சவாரியை நிறுத்தி கடைசி ஓவர் பார்ப்பதும், தெருவை அடைத்தபடி கூட்டம் நிற்பதுமாய், கிரிகெட் என்ற "மதம்" பரவியது.


ஒரு முறை உறவினர் ஒருவரை பார்க்க மருத்துவமனை சென்ற பொழுது, ஆபரேஷன் தியேட்டரிலிருந்து கொண்டு வரப்பட்டு அப்போதுதான் நினைவு திரும்பிய‌ ஒருவர் "இந்தியா தப்பிச்சாச்சா" என்று ["டை" ஆன சென்னை டெஸ்ட் போட்டியின் போது] கேட்டது ஞாபகம் இருக்கிறது.

எனது பெரியப்பா ஒருவர், வீட்டில் டிவி வராத காலங்களிலேயே, உலகில் எந்த மூலையில் டெஸ்ட் போட்டி நடந்தாலும் தனது டிரான்ஸிஸ்டரை எப்படியோ தட்டித் திருகி , ABC... BBC என்று எதிலாவது மாட்சை பிடித்து விடுவார். எங்கேனும் காதை கழற்றி ரேடியோவிற்குள் போட்டு விடுவாரோ என்று பயப்படும் அளவு ரேடியோவை காதோடு வைத்து, பெரும் இரைச்சலுக்கு நடுவே ஸ்கோரை "கண்டு பிடித்து" விடுவார்.

ஞாயிற்று கிழமைகளில் போட்டி நடந்தால் மகிழ்ச்சிக்கு பதில் பதட்டம் தோன்றும். ஏன் என்றால், தூர்தர்ஷனில் பாதி நேரம் போட்டியை ஒலிபரப்புவதற்கு பதில் அதன் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பிக் கொண்டிருப்பார்கள். "ரோம் எரியும் பொழுது பிடில் வாசிப்பது" என்பதை போல நாம் " ஸ்ரீகாந்த் என்னவானோரோ" என்று பரபரக்கும் மதியம், காது கேளாதோருக்கான செய்தி ஓடிக்கொண்டிருக்கும். நாட்டில் அனைவருக்கும் நன்றாக காது கேட்கும் நிலை வந்து விடாதா என்று ஏங்குவோம். சில சமயம் அசாரூதின் பவுண்டரிகளாக அடித்து கொண்டிருக்கையில் இவர்கள் அசாம் தேயிலை தோட்டத்தில் இலைகளில் பூச்சி மருந்து எப்படி அடிப்பது என்று விளக்கிக் கொண்டிருப்பார்கள். போட்டியின் இறுதிக் கட்டம் நெருங்கும் போது "ந் ந்ர்" என்று நரோத்தம் பூரி வந்து விடுவார். இவர், பஞ்சாபில் நடந்த கிராமிய விளையாட்டுகளில் வழுக்கு மரம் ஏறுவது, தேசிய பில்லியட்ஸ் போட்டிகள் (இப்படியொரு விளையாட்டி இருக்கிறது என்பதே பாதி இந்தியர்களுக்கு இந்த நிகழ்ச்சி மூலமே அன்று தெரிய வந்திருக்கும்) என்றெல்லாம் சுற்றி முடித்து, நடந்து கொண்டிருக்கும் கிரிகெட் போட்டிக்கு கனெக்க்ஷன் கொடுப்பார். இருப்பினும், மதியம் துவங்கி, எந்த நேரத்தில் போட்டியை காட்டுவார்களோ என்ற தவிப்பில், மேற்கூறிய அனைத்தையும் பார்த்துத் தவித்தோம். ஒரு வேளை, இந்தியர்களிடம் சகிப்புத்தன்மை என்பதே இதிலிருந்துதான் ஏகத்துக்கும் வளர்ந்து விட்டதோ என்று கூட சந்தேகம் வரலாம்.

1980களின் நடுவே ஒரு முறை மதுரைக்கு இந்திய அணி வந்திருந்தது. அவர்கள் இரண்டு பிரிவாக பிரிந்து ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் "சும்மா" போட்டி ஒன்றில் விளையாடினார்கள். சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஊரே திருவிழா கோலம் பூண்டது போல கூட்டம் கூட்டமாக மைதானம் நோக்கி படையெடுத்தது. கம்பு கட்டைகளால் அமைக்கப்பட்ட இருக்கைகள், வேலிகளை கடந்து, கபில் தேவின் கைகளை தொட்டுப் பார்த்த‌ அந்த நொடியின் மகிழ்ச்சி இன்றும் மனதில் பதிந்திருக்கிறது.

இன்று காரிலிருந்து இறங்கி, தொலைக்காட்சி கேமிராக்கள் தொடர‌ திமிருடன் நடந்து போகும் கோட்டு போட்ட கோமாளிகள் எவராலும் கிரிகெட் வளரவில்லை. அந்த விளையாட்டின் எளிமையில் இருக்கிறது அதன் உயிர். நமக்கு உற்சாகம் அளித்த இந்த விளையாட்டிற்கு நாம் ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்தால் ஒன்றே ஒன்று போதும் IPL போன்ற கூத்துக்களை புறக்கணித்து, மைதானங்கள் இரண்டு வருடங்கள் காற்றாடினால் போதும். "ஆட்டம்" மட்டும் நிலைத்து நிற்கும். மற்ற "ஆட்டங்கள்" சிறிது சிறிதாய் அடங்கி விடும்.

Sunday, May 5, 2013

நாம் எப்பவுமே இப்படித்தானா?


"ஜம்பக்கு ஜம்பக்கு" என்று நாம் கூத்தடித்துக் கொண்டிருக்கையில், ஒரு பக்கம் பார்த்தால் பாகிஸ்தான் நம் ஆட்களை அவ்வப்பொழுது பார்சல் கட்டி அனுப்பிக் கொண்டே இருக்கிறது. மற்றொரு பக்கம் சீனா பனிமலையில் என்ன, பக்கத்து தெருவில் கூடாரம் போட்டாலும் கூட, அடை மழையில் அசையாது நிற்கும் எருமை மாடு போல செயலற்று இருக்க உறுதி பூண்டிருக்கிறோம் நாம். நாளொரு ஊழல் நாற்றமெடுக்கும் நாட்டில், ஒரு புதுவித மோசடியும் அதைவிட புதுவிதமான சமாளிப்பும் நடந்திருப்பதை நாம் அறிந்தால் நமக்கு கூடுதல் பொழுதுபோக்கு தானே?

சமீப காலமாக நாளிதழ்களில் அரைப் பக்க விளம்பரம் ஒன்றை நாம் அடிக்கடி பார்த்திருக்கலாம். பல்வேறு தொழில்களில் இறங்கியிருக்கும் ஒரு பெரிய "பரிவாரம்" தரும் விளம்பரம் அது. பாரத மாதாவை தொழுவது மட்டுமே தங்கள் நிறுவனத்தின் கொள்கை என்ற ரேஞ்சில் இருக்கும் இந்த விளம்பரங்கள். அதுவும் கடந்த சில தினங்களாக அந்த குழும நிறுவனம் கொடுக்கும் விளம்பரம் நகைச்சுவையின் எல்லை! வேறொன்றுமில்லை சார்...மே ஆறாம் தேதி ஒரு நாள் நாம் அனைவரும் "ஜனகனமன" பாட வேண்டுமாம். பண்பாட்டுக்கும் தனி மனித மற்றும் சமூக ஒழுக்கத்திற்கும் நாம் தான் எப்போதோ ஜனகனமன "பாடி" விட்டோமே என்கிறீர்களா? சரிதான் சார். ஆனால் இந்த விளம்பரம் மூலம் இவர்கள் கேட்பது, நாம் வீட்டிலோ, தெருமுனையிலோ கூட்டம் கூட்டமாக கூடி தேசிய கீதம் பாட வேண்டுமாம். என்னே ஒரு தேசப்பற்று என்று நமக்கு உடம்பெல்லாம் புல்லரிக்குமே? நாம் கூட்டமாக தேசிய கீதம் பாடி அதை வீடியோ எடுத்து சமூக வலைதள ஊடகங்களில் upload செய்ய வேண்டுமாம். கின்னஸ் சாதனையாம். இதில், மோசடி பரிவாரத்தின் ஒரு லட்சம் ஊழியர்கள் வேறு லக்னோ நகரில் தேசிய கீதம் பாடுவார்களாம்! இதைப் படித்தவுடன் "கூட்டத்தில் கூடி நின்று கூவி பிதற்றலன்றி நாட்டத்தில் கொள்ளாரடி" வரி வேறு ஞாபகம் வந்து தொலைக்கிறது சார்.  சரி விடுங்கள். இப்பொழுது, எதற்கு இவர்கள் திடீரென்று இப்படி பாரதத் தாயின் பாதத்தை பற்றியிருப்பதாக கூவிக் கூவி விளம்பரம் கொடுக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? வாருங்கள்...

இந்த நிறுவனம் தங்கள் "சேவை"யை விரிவுபடுத்த மக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் நிதி திரட்டியது. அதாவது, கடனாகக் கொடுத்ததை மக்கள் பங்காக பெற்றுக் கொள்ளலாம் என்பது போலத் திட்டம். "செபி" அமைப்பிடம் அனுமதி பெறாமல், இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி இந்த வழியில் பணம் திரட்டியது நம் தேசபக்தி நிறுவனம். இவர்களை தட்டிக் கேட்க முடியாமல் தவித்த‌ செபி அமைப்பு வேறுவழியின்றி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குப் போட்டது. திரட்டிய முதலீட்டை மக்களிடம் திருப்பித் தர வேண்டும் என்று உத்தரவிட்ட உச்ச நீதி மன்றத்திற்கும் செபிக்கும் ஒரே கல்லில் இரண்டு அடி போட திட்டம் போட்டது பாலைவனத்தை தன் பெயரில் வைத்திருக்கும் நிறுவனம்.

தாங்கள் அந்த பணம் முழுவதையும் செபியிடம் கொடுத்து விடுவதாகவும், அவர்களே அதை மக்களிடம் திருப்பித் தரட்டும் என்றும் நீதிமன்றத்தில் சொல்லி, அதற்கான முதல் தவணையை செபியிடம் கொடுத்தது. தனது முதலீட்டார்கள் பலருக்கு வங்கிக் கணக்கு கூட இல்லையென்றும், அவர்களுக்கு தபால் மூலம்தான் பணம் வழங்க முடியுமென்றும் புருடா விட்டது. முதல் கட்டமாக ரிஜிஸ்டர் தபாலில் செபி அனுப்பிய அனைத்து முகவரிகளும் தவறு என்று திரும்பி வந்து விட்டன. பொறுப்பை ஏற்றுக் கொண்ட செபி தலையை பிய்த்துக் கொண்டு நிற்கிறது.

ஊழல் செய்ததோடு நில்லாமல், முக்கிய‌ அமைப்பான செபியையே மாட்டி விட்டு மகிழ்ச்சியில் திளைக்கிறது இந்த "பாலைவன பரிவாரம்". இப்படிப்பட்டவர்கள்தான் நம்மை தேசிய கீதம் பாடுமாறு அழைக்கிறார்கள். தனது பொய்புரட்டும் வெளியில் வந்து விட்டதால், அதை மக்களின் மனதிலிருந்து மறக்கடிக்கச் செய்யத்தான் இந்த தேசபக்தி புல்லரிப்புகள்!


சரி சார். நேரமாகிறது...பூனே அணி விளையாடும் ஆட்டம் பார்க்க வேண்டும். நம் தேசபக்தி வழியும் மோசடி நிறுவனம் தானே பூனே அணிக்கு சொந்தக் காரர்கள். இதன் குழுமத்தலைவர் எவரேனும் குளிர்கண்ணாடி அணிந்தபடி சிக்ஸர்கள் பறப்பதை பார்த்து குதூகலிப்பதை தொலைக்காட்சியில் zoom செய்து காட்டுவார்கள். அதை நாம் பார்த்து மகிழ வேண்டாமா? ஊழலாவது புடலங்காயாவது? நாடு எக்கேடு கெட்டால் என்ன சார்? நமக்குத் தேவை "ஜம்பக்கு ஜம்பக்கு" கூத்து.

மறுமுறை ஒரு முறை சொல்லிப் பார்ப்போம் சார். நமக்காகவே,  நம் அனைவருக்காகவே எழுதியது போல இருக்கிறதே சார்..."கூட்டத்தில் கூடி நின்று கூவிப் பிதற்றலன்றி நாட்டத்தில் கொள்ளாரடி..." அதாவது, நம்மூர் நகைச்சுவையாளர் தொனியில் சொன்னால், "நாம எப்பவுமே இப்படித்தானா அல்லது இப்படித்தான் எப்பவுமேவா?"

Sunday, April 21, 2013

கவலைகள் போக்க எளிய வழி!


பங்களாவில் வசித்தாலும் சரி பிளாட்பாரத்தில் வசித்தாலும் சரி, வாழ்க்கையில் மேடுபள்ளங்களும், அதனால் ஆளாளுக்கு ஒரு வண்டி கவலைகளும் நம் அனைவருக்குமே இருக்கிறது...ஆனால் நுனி விரல் நோகாமல் நொங்கு தின்பதுதான் நமக்குப் பிடிக்கும். தத்துவ விசாரங்கள், பிறப்பை உய்வதற்கான‌ வழிகள் என்றெல்லாம் பேசினால் கலிகாலத்தில் எடுபடுமா சார்? கருத்தான வாழ்க்கை என்பதையெல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு அனைத்தையும் காமெடியாக்கி திரிந்தால்தானே சார் நாமும் கலிகாலத்தில் வாழ்ந்தோம் என்ற பெருமை கிட்டும்...எனவே அந்த வழியிலேயே சென்று கவலை நீக்க வழி கிடைத்தால் கொண்டாட்டம்தானே நமக்கு?

காலையின் பரபரப்புக்குத் தயாராகும் பொழுதும், களைத்துப் போய் இரவில் வீடு திரும்பிய பிறகும், சிறிது நேரம் டிவிக்கு கண்ணைக் கொடுக்கையில் தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. நம் தொலைக்காட்சி சேனல்கள் எத்தனை போற்றத்தகு மக்கள் சேவை ஆற்றுகிறது என்ற ஞானமும் எனக்குக் கிட்டியது.  காமெடி நிகழ்ச்சிகள் பல சேனல்களின் வந்தாலும், மக்களின் கவலை தீர்க்கும் அருமருந்தாக, "காமெடி நிகழ்ச்சி" என்ற அறிவிப்பில்லாமல், பல சேனல்களில் ஒரு நிகழ்ச்சி வருகிறது சார்..."கண்டிப்பாக இந்த நிகழ்ச்சி நகைச்சுவை நிகழ்ச்சி அல்ல" என்று ஒரு கார்டு போட்டால் நன்றாக இருக்கும்!

நமக்கான "கனவு வீடு" எப்படி வாங்குவது என்று பல்வேறு நில பிரமோட்டர்கள் தங்கள் சரக்கை கடை விரிக்கும் விளம்பரங்கள் தான் அந்த நிகழ்ச்சி.

முதலில் அதிரடி பிண்ணனி இசையுடன் (ஏதாவது பாடலில் இருந்து கடன் வாங்கிய இசைதான்) ஒரு பொட்டல் காடு லாங் ஷாட்டில் காட்டப்படும். அதுவே நம் கனவு வீட்டிற்கான "site". இந்தப் பொட்டலைச் சுற்றி மயிலாடும் மாந்தோப்பும் புறா பறக்கும் பூந்தோப்பும் இருப்பது போன்ற ஒரு பில்டப் அந்தக் காட்சியில் இருக்கும்!

பரபரப்பான அறிமுகக் காட்சி முடிந்தவுடன், பஸ்கள் பறக்கும் நெடுஞ்சாலையில் நின்று கொண்டு தமிழ் கூறும் நல்லுலகிற்கு வணக்கம் தெரிவிப்பார் பல சீரியல்களில் அழுது முடித்து, இந்த நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் நடிக்க சம்மதித்திருக்கும் தொலைக்காட்சி நடிகை ஒருவர். சில வருடங்களுக்கு முன் தாம்பரத்தில் ஆரம்பித்த இவரின் வணக்கம் இப்போது வந்தவாசி தாண்டி வந்திருக்கிறது.

இந்நிலையில், நாம், நமக்கான சிரிப்பு மருந்து தயாராகி விட்டது என்று உணர்ந்து அதை சுவைக்கத் தயாராக இருக்க வேண்டும்.எந்த "கனவு வீடு" நிகழ்ச்சி எந்த வகை காமெடியில் நம் கவலை போக்கும் என்று நமக்குத் தெரியாது. அவை அதிர்ச்சி ரகமாகவும் இருக்கும்.

உதாரணமாக, ஒரு நிகழ்ச்சியில், காக்கை அமர்ந்து போவதற்குக் கூட மரக்கொப்பற்ற வெட்டவெளியில் நின்றிருந்த நடிகர் ஒருவர், தொலைவில் இருந்த ஒரு குளிர்பான ஆலையை காட்டி, "பன்னாட்டு ஆலை பாருங்கள்...உங்கள் மனையின் பக்கத்தில்...!" என்று கூவிக் கொண்டிருந்தார். நமக்கோ, "நாங்க ஏன்டா நடுராத்திரி சுடுகாட்டுக்கு போகப்போறோம்" என்ற வடிவேலுவின் காமெடி நினைவிற்கு வரும். இவர்கள் எதை விளக்க வருகிறார்கள்? ஒரு வேளை தண்ணீர் தாகம் எடுத்தால், "whole sale" விலையில் குளிர்பானம் வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளலாம் என்றா? ஓ...பன்னாட்டு ஆலை இருப்பதானால் அந்த ஏரியா டெவலப் ஆகுதாம் சார் டெவலப்!

ஞாயிற்றுக் கிழமை என்றால் சிறப்புக் (சிரிப்பு?) குலுக்கல்கள் உண்டு. இதில் கலந்து கொள்வோர்களுக்கு பிரியாணி முதற்கொண்டு பலமான "கவனிப்பு"! அதையும் விடாமல் நிகழ்ச்சியில் காட்டுகிறார்கள். சிலசமயம் நன்றாக "கவனிக்கப்பட்டவர்கள்" பேட்டி வேறு கொடுப்பார்கள். மனையின் அருமை பெருமை...இந்த வாய்ப்பை விட்டால் வாழ்க்கையே முடிந்தது என்ற ரேஞ்சில் இவர்களுக்கு சொல்லித் தரப்பட்டிருக்கும் டயலாக்குகளை சிலர் மறந்து போய் உளறிக் கொட்டுவார்கள். இப்படித்தான், சமீபத்தில் ஒருவரிடம் நிகழ்ச்சி நடத்துனர், "எங்களிடம் மனை வாங்கிய‌ உங்க அனுபவத்தை சொல்லுங்க" என்று ஆவலுடன் கேட்க, "வெஜிடபிள் பிரியாணி ரொம்ப நல்லா இருக்கு" என்றார். அப்பொழுது சிரிக்க ஆரம்பிக்கும் நீங்கள் நாள் முழுதும் சிரிப்பீர்களா மாட்டீர்களா?

இவர்கள் இது போன்று நமக்கு அள்ளித் தரும் நகைச்சுவைகள் எத்தனை எத்தனை...வரும் வாரம் தொடர்வோம்...

Sunday, March 31, 2013

அடக்கடவுளே...உனக்குமா இந்த...?

முன்னரெல்லாம் மொட்டை அடித்துள்ள எவரையேனும் பார்த்தால் "திருப்பதியா?" என்று கேட்போம். இனிமேல், நீளமாக "punk style " முடி வைத்திருப்பர்களைப் பார்த்தால் "திருப்பதியா?" என்று கேட்க வேண்டும் என்ற நிலைமை வந்து விட்டது சார்...

அதான்...ஏப்ரல் மாதம் முதல் 31 அங்குலத்திற்கு மேல் முடி காணிக்கை கொடுப்பவர்களுக்கு இலவச லட்டு என்றுஅறிவித்திருக்கிறார்களே...புரட்சிகரமான திட்டங்களை அரசியல்வாதிகள் தான் அறிவிக்க வேண்டும் என்று யார் சொன்னது? வணிகத்தின் வாயில்களாகி விட்ட கோயில்கள் கூட நம் நாட்டில் "புரட்சி" செய்யலாம் சார்...

சரி, பக்தர்களை "பரவசப்படுத்தும்" பணியே தங்கள் கடமை என்று நினைத்திருந்தால், முடி காணிக்கை செய்வோருக்கு கூடுதல் நேர தரிசனம் என்று சொல்லியிருக்கலாம்..அதை விட்டு இதென்ன சார் காமெடி? ஒரு வேளை "மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது" என்பது இது தானோ?

ஏற்கெனவே முடி வணிகம் எப்படிப்பட்ட "பிஸினஸ்" என்பது நமக்குத் தெரியும், இந்தப் புதுப் புரட்சி மூலம், முடிக் காணிக்கை செலுத்தும் இடத்திற்கு அருகிலேயே "தைலம்" விற்கும் கடைகளுக்கு காண்ட்ராக்ட் விட்டு கூடுதல் "பிஸினஸ்" பார்க்க‌த் திட்டம் போட்டிருக்கிறார்களோ என்னவோ...

ஆனால் நாம் பேசாமல் லட்டு வாங்கி வந்து விடுவோமா என்ன? நம்மூர்காரர்களுக்கும் முடிவெட்டுபவர்களுக்கும் என்னவெல்லாம் "உரையாடல்" நிகழுமோ...உதாரணமாக:

(i)"அதென்னங்க 31 அங்குலம்? இருபது, முப்பது அப்படின்னு அளக்க வசதியா வைக்காம 31? ஒரு அங்குலம் கமிஷன் அடிச்சிருவீங்களா?" என்று எவரேனும் கேட்கலாம்...

(ii)"எனக்கு முடி உதிரும் problem இருக்கு. அதனால பூந்தியாவது கொடுங்க" என்று புதுத்திட்டத்தில் பாதிப்படைந்த ஒருவர் வேண்டுகோள் விடுக்கலாம்.

(iii)இப்போது காலம் போகும் வேகத்தில் இருபது வயது காரர்களுக்கே நரைத்து விடுகிறது. கோயில் நிர்வாகம், நரை முடிக்கு இலவச லட்டு உண்டா என்று தெளிவாக சொல்லாததால் குழப்பம் ஏற்படலாம்...முடியின் வண்ணம் குறித்து வாக்குவாதம் நடந்தால், சமாதானம் செய்யும் பொருட்டு "police பந்தோபஸ்து" போடப்படலாம்.

அவ்வளவு ஏன் சார்? இலவசங்களை கொடுத்தே நம்மை இளிச்சவாயர்களாக இருக்க வைக்க முயற்சி செய்யும் நாட்டில், லட்டு சும்மா கொடுப்பதோடு நிறுத்தினால் நன்றாக இருக்குமா? விலையில்லா மடிக்கணிணி, மிக்ஸி, போல வீடுதோறும் விலையில்லா தலைமுடித் தைலம் கொடுத்தால் நாம் வேண்டாம் என்று சொல்லி விடுவோமா? அத்துடன், திருப்பதிக்கு இலவச பேருந்து சர்வீஸ், மாதந்தோறும் "திருப்பதி உதவித் தொகை" என்று அமர்க்களப்படுத்தலாமே சார்...பொறுத்திருப்போம். நம் நாட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். 

நல்ல வேளை. மக்களின் எதிர்ப்பினால் இந்த "பக்திப் புரட்சி" கைவிடப்பட்டிருப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால், எதிர்த்தால் தான் எதுவுமே மூளைக்கு ஏறும் என்றால், "சுய புத்தி" என்ற சொல் இப்போது எந்த நிர்வாகத்திலும் புழக்கத்தில் இல்லையோ?

இது போன்ற கன்றாவிகளை பார்க்கச் சகிக்காமல் கடுப்பாகிப் போன‌ கடவுள்கள், மனிதர்கள் பார்க்க இயலாத மறைவான இடத்திற்கு மாற்றலாகிப் போய் பல மாமாங்கம் ஆகியிருக்குமோ?

Sunday, March 3, 2013

இதுவும் ஒரு வகை அசிங்கமே...


பரபரப்பை மட்டுமே மூலதனமாக வைத்து பிழைப்பை வெற்றிகரமாக ஓட்டுவது எப்படி என்று நம் டிவி சேனல்கள் கற்றுத் தேர்ந்து விட்டன. எதையும் விட்டுவைக்காமல் அதில் செயற்கை பரபரப்பைத் திணித்து அவர்கள் போடும் ஆட்டம் பல சமயங்களில் காமெடியாகவும் கவலை தருவதாகவும் இருப்பதை என்னவென்று சொல்வது...

சில நாட்கள் முன்னர் +2 தேர்வுகள் துவங்கின. ஆண்டாண்டு காலமாக ஆயிரக்கணக்கானோர் எழுதி வரும் தேர்வு தான். ஆனால் அதை வெறும் செய்தியாக சொன்னால் அதில் என்ன சார் சுவாரஸ்யம்? எனவே, அன்று நம் டிவி சேனல்கள், தங்கள் புத்திசாலித்தனத்தில் புகுந்து விளையாட கிடைத்த வாய்ப்பாக +2 தேர்வுகளை பயன்படுத்திக் கொண்டன.

ஒரு பள்ளியின் உள்ளே நம் "சிறப்பு நிருபர்" நின்றிருந்தார். தேர்வு பற்றிய ஆர்வத்துடனும் கவனத்துடனும் போகும் மாணவர்களை மடக்கிப் பிடித்தார் நிருபர். "முதல் நாள் தேர்வு எழுதப்போகும் அனுபவம் எப்படி இருக்கிறது?" என்று கேள்வியை வீச, அதை "செய்தி நிலையத்திற்கு" நேரலை செய்து கொண்டிருந்தார். நமக்கு புத்தி மிகவும் பிசகி விட்டதோ சார்? அது சரி, மாணவர்களை பற்றிய அக்கறை இருந்தால், இவற்றிற்கு பள்ளி உரிமையாளர் (வியாபரம் என்றால், கடை வைத்திருப்பவர்களை உரிமையாளர் என்று தானே அழைக்க முடியும்) சம்மதித்திருப்பாரா? இது போன்று கவனச்சிதறல் செய்வது கோமாளித்தனம் என்று டிவி சேனல் ஆட்களை வெளியில் தள்ளியிருக்க மாட்டார்? சரியா போச்சப்பா...எந்த காலத்தில் இருக்கிறாய் நீ? பள்ளி டிவியில் வந்தால் எத்தனை விளம்பரம்...அது தெரியாமல் மாணவர்களாவது கவனச் சிதறலாவது என்கிறீர்களா? நீங்கள் சொல்வது சரியே!

இந்த நிருபர் கேட்ட கேள்விகள் சிலவற்றை பார்க்கலாம் சார்..."தம்பி எத்தனை நாட்களாக படித்து வருகிறீர்கள்?" இதற்கு சிலர் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நிருபரையே பார்த்தபடி இருந்தார்கள்...
"ஏன்யா பள்ளி செல்வதே தினமும் படிப்பதற்கு தானே இது என்ன கேள்வி" என்று நினைத்திருப்பார்கள் போலும். இவ்வாறு சிலரிடம் கேட்டது, தேவையான பரபரப்பு கிட்டாததால், தன் புத்தியை கூராக்கிய நிருபர், "தீவிரமாக" என்ற வார்த்தையை அந்த கேள்வியில் சேர்த்தார். இருந்தாலும் அவர் எதிர்பார்த்த அளவு "emotion" அல்லது "sentiment" கிடைக்கவில்லை. தற்காலத் தலைமுறை நிதானமும் யதார்த்தமுமாக பதிலளித்தது. ஒருவர் வைத்திருந்த திருநீறு பார்த்து "தேர்வு அன்று கோயிலுக்கு போய் விட்டு வருவது பழக்கமா?"  என்றார். ஒரு மாணவியிடம் "டென்ஷனாக" இருக்கிறதா என்று கேட்டார். அவர் நார்மலாக இருக்க, நிருபருக்கு ஏமாற்றமாக போயிற்று. டென்ஷன் ஏற்றுவது தானே தனது வேலை என்று முடிந்த அளவுக்கு கேள்விகளை மாற்றி மாற்றி கேட்டும் அந்தப் பெண் அசராமல் இருக்க, அடுத்த பலிகடாவை தேடியது நிருபரின் பார்வை.

அடுத்த வருடம் இன்னும் பயிற்சியுடன் இத்தகைய நிருபர்கள் களமிறங்கி வெளுத்துக் கட்டுவார்கள் என்று எதிர்பார்ப்பதோடு நாம் நின்று விடமுடியுமா சார்? அவர்களுக்கு உபயோகமான சில டிப்ஸ் கொடுக்கலாம்...

பள்ளிக்குள் நின்றால் போதுமா? தேர்வு அறையிலேயே போய் உட்கார்ந்து விட வேண்டும். "இதுதான் கேள்வித்தாள். இதில் கேள்விகள் எல்லாம் அச்சடிக்கப்பட்டிருக்கும்" என்று நிருபர் ஒரு கேள்வித்தாளை காட்ட, காமெரா அதை zoom செய்யலாம்.அறையில் இருக்கும் பெஞ்சுகளை நிருபர் சுட்டிக் காட்டியபடி "இதில் அமர்ந்து தான் மாணவர்கள் தேர்வு எழுதுவது வழக்கம்" என்று அரிய கருத்து சொல்லி நமக்கு புரிய வைக்கலாம். சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி என்று முக்கிய நகரங்களில் நிருபர்களை நிற்க வைத்து, "அங்கு தேர்வு நிலவரம் எப்படி இருக்கிறது" என்று செய்தியாளர் கேட்க, "மதுரையில பார்த்தீங்கனா காலையிலிருந்தே மாணவ மாணவிகள் கூட்டமாக கூட்டமாக பள்ளிகள் நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்..." என்று போர் நிலவரம் போல buildup கொடுக்கலாம்...+2 என்பதை பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு என்றும் அழைப்பார்கள் என்று கூடுதல் தகவல் சொல்லி நம்மை புல்லரிக்க வைக்கலாம்...

பறக்கும் படையினர் எவரையேனும் காப்பியடிக்கும் போது பிடித்தால், முக்கிய செய்தியாக "flash news" போட்டுக் கலக்கலாம். அதைவிட, எவ்வாறு பிடிபட்டார் என்பதை "live relay" செய்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை...என்ன...ஒரே ஒரு கவலை..."தேர்வு வரலாற்றில் முதன் முறையாக‌ உங்கள் abcd தொலைக்காட்சியில்..." என்ற அறிவிப்போடு, தேர்வு தினத்திற்கு முன்னரே வினாத்தாளை சேனல்கள் leak செய்து விட்டால்...இன்னும் அது மட்டும்தானே சார் பாக்கி?

Sunday, February 17, 2013

அட கிறுக்குப் பய புள்ளைகளா...


பதிவின் தலைப்பு வடிவேலுவிடமிருந்து வாங்கியது. ஆனால் உள்ளே இருக்கும் விஷயம் என்னவென்று பார்க்கலாம் வாருங்கள். சில வாரங்களுக்கு முன்னர் ஒரு நாள், மனித மந்தையின் நெரிசல் மிகுந்த காலை நேர வாழ்க்கை சந்தையில் நானும் ஒரு ஆடாய் பேருந்தில் சிக்கியிருந்தேன். பேருந்தும் போக்குவரத்து நெரிசலில் ஒரு கல்லூரி வாசலருகே சிக்கியிருந்தது.

ஒரு நாட்டின், சமூகத்தின், சீரழிவை அதன் கல்விக் கூடங்கள் எந்தளவு வியாபர நோக்கில் செயல்படுகின்றன என்பதை வைத்தே நாம் சொல்லி விடலாம் இல்லையா சார்? எப்பொழுது கல்வி நிலையங்களும் மருத்துவமனைகளும் விளம்பரம் செய்யத் துவங்கி விட்டனவோ அப்பொழுதே சீரழிவு துவங்கி விட்டனவே...

அங்கே ஒரு "advertisement banner" கண்ணில் பட்டது. "fall admission" என்ற தலைப்பில் கல்லூரியின் "ஆள் சேர்க்கை" விளம்பரம். ஏன் சார், நம்மூரில் மரங்களையே காணோம்...அப்புறம் ஏது சார் "இலையுதிர்காலம்"? நாம் பார்ப்பதெல்லாம் கடுங்கோடை, கோடை, சற்று வாடை. இந்த மூன்றிலேயே ஆண்டின் அனைத்து பருவங்களும் போய் விடுகின்றன...இந்த லட்சணத்தில் இவர்களுக்கு "fall admission" என்று தலைப்பு வேண்டியிருக்கிறது.

வேறொன்றுமில்லை சார், மேற்கத்திய மோகம் தலைக்கு ஏறினால் இப்படித்தான் நடக்கும். மேலை நாடுகளில் எத்தனையோ நல்ல விஷயங்கள் நடக்கின்றன. அதையெல்லாம் நாம் பின்பற்றுகிறோமா? "fall colors" என்று அங்குள்ள தாவரங்களில் அபாரமாக வெளிப்படும் நிறமாற்றத்தை அவர்கள் கொண்டாடினால் அது பொருந்தும். நமக்கேது சார் "fall"? அதுவும் கல்லூரி அட்மிஷனுக்கு!

இப்படித்தான் நாம் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த பேருந்து பயணத்திலேயே அதற்கு மற்றொரு உதாரணமும் சொல்லி விடலாம். முன்னரெல்லாம், அழுக்கு படிந்த உடையுடன், குடித்து விட்டு பேருந்தில் எவரேனும் ஏறுவார். அவரின் வாயில் அச்சிலேற்ற முடியாத தரமற்ற வார்த்தைகள் சத்தமாக வரும். அனைவரும் அருவருப்புடன் அவரை பார்த்து ஒதுக்குவர். இப்போது என்ன சார் நடக்கிறது? பள்ளி கல்லூரிகளில் இருக்கும் இளம் மாணவர்கள் வாயிலிருந்து ஆங்கிலத்தில் சரமாரியாக அதே அர்த்தம் தொனிக்கும் வார்த்தைகள், அவர்கள் பேசும் வரிகளுக்கிடையில் வந்து போகிறது. ஆனால் முன்னர் சொன்னவரை பார்க்கையில் வரும் அருவருப்பு இப்போது வரவேண்டுமே? ஹூஹூம்...ஏனென்றால் இவர்கள் ஆங்கிலத்தில் அல்லவா சொல்கிறார்கள்...நமக்குத்தான் ஆங்கிலத்தில் மலம் என்று சொன்னாலும் மல்கோவா போல இருக்குமே...அருவருப்பின் அளவுகோல்களைக் கூட‌ நம் விருப்பப்படி அசிங்கப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் மிக்கவர்கள் தானே நாம்?...

ஒரு முறை என்னுடன் ஒரு "டிப்டாப்" ஆசாமி பயணம் செய்தார். மனிதர் பயங்கர பிஸி போலும். போன் மேல் போன் போட்டு, பொது இடத்தில் சத்தமாக பேசி அனைவரையும் எரிச்சலடைய வைத்துக் கொண்டிருந்தார். நாகரீகம் மிகவும் உச்சத்தில் போனால் அப்புறம் இடம் பொருள் ஏவல் எல்லாம் இருக்குமிடம் தெரியாதோ சார்? இருப்பினும் அவரின் நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேருந்தே மயங்கிக் கிடப்பது போலத் தெரிந்தது. ஒவ்வொரு வரி இடையிலும் ஒரு வார்த்தை வந்து கொண்டே இருந்தது. பாவம், இயற்கை உபாதை இறக்க வழியின்றி தவிக்கிறார் போலும் அடக்க முடியாமல் வாய்விட்டு சொல்கிறார் என்று முதலில் நினைத்தேன். பிறகு, அது மாட்டிற்கு இயற்கை உபாதை என்று மாறியது. வேறொன்றுமில்லை, "மாட்டுச்சாணம்" "மாட்டுச்சாணம்" என்று அவர் வரிக்கு வரி சொல்லிக் கொண்டிருந்தார். நம் பேருந்துகள் சரியாக பராமரிக்கப்படாதவை தான். ஆனால் மாடு பேருந்துக்குள் புகுந்து சாணம் போட்டுச் செல்லும் அளவு இன்னும் மோசமாகவில்லையே என்று யோசித்தேன். அப்புறம் தான் சார் தெளிவானேன் இது மாட்டின் கழிவு இல்லை வார்த்தையின் கழிவு என்று...

வார்த்தைகள் மட்டுமல்ல சார், வழக்கமே போலித்தனமாக மாறி விட்டதே...மனைவி சமீபத்தில் ஒரு நாள் மாலை தோசை வாங்கி வரச்சொல்லியிருந்தார். மனைவி சொல்லே மந்திரம் என்ற தந்திரம் தானே வாழ்க்கை எந்திரம் ஓடுவதற்கு வசதியான எண்ணெய்? எனவே மசால் தோசை வேண்டி மாலை பொழுதில் ஒரு ஓட்டலில் நின்றிருந்தேன். கவுண்டரில் "பார்சல்" என்ற வார்த்தைக்கு பதில் "take away" என்று போட்டிருந்தார்கள். இப்போதெல்லாம் இப்படித்தான் சார். எதில் போட்டி போடுகிறோமோ இல்லையோ, மேம்போக்காய் மேலைநாடுகளை காப்பி அடிப்பது தான் நம் வேலை. "பார்சல்" அழித்து "take away" என்று போட்டால் அமெரிக்காவில் அமர்ந்தபடி அரிசி மாவு தின்பது போலத் தோன்றுமோ?

சரி சார். ஊருக்கு உபதேசம் முடிந்தது. இனி நம் விஷயத்திற்கு வருவோம். "take away" என்று சொல்லிப்பார்த்தேன். பார்சல் என்ன சார் பார்சல்? "டேக் அவே" என்று சொன்னால் தித்திக்கிறதே சார்... அது மட்டுமல்ல, ஒரு "கெத்து" இருக்கிறது இல்லையா? கூட்டத்திலிருந்த மற்றொருவர், "2 ஊத்தப்பம் to go" என்று பில்லை நீட்டினார். நானும், கவுண்டரில் இருந்தவரிடம் போட்டேன் சார் ஒரு போடு..."மசால் தோசா டேக் அவே" என்று.

தலைப்பு யாருக்கு என்று இப்போது தெளிவாகி இருக்குமே...நமக்குத்தான்... நமக்கே தான்...!

Sunday, February 3, 2013

இட்லி புராணம்...

இந்த இட்லி இருக்கிறதே சார் இட்லி, அதை இத்தனை விதமாக சாப்பிட முடியுமா என்று ஆச்சரியமும் அதிர்ச்சியும் நமக்கு ஏற்படும் வண்ணம் நம்மவர்கள் "உள்ளே இறக்கும்" நளினம் இருக்கிறதே...அதில் துவங்குகிறது ந‌ம் இட்லி புராணம்.

சிலர், இட்லிக்குள் தங்களுக்கு ஏதேனும் ரகசிய செய்தி இருக்கிறதா என்பது போல் சுரண்டிப் பார்ப்பார்கள். சிலர், இட்லியின் இரண்டு பக்கங்களையும் கண்ணாடியில் முகம் பார்ப்பது போல திருப்பிப் பார்ப்பார்கள். சிந்தனை சிகரங்கள் சில பேர் ஒரு துண்டு இட்லியை பிய்த்து கைகளில் வைத்துக் கொண்டே பல நிமிடம் உரையாடுவார்கள். உரையாடல் உச்சத்தில் இருக்கும் பொழுது வாய் வரைக்கும் இட்லி வந்து வந்து போகும்.

எப்படி இன்று தனிக் கட்சி ஆட்சி என்பது ந‌ம் நாட்டில் சாத்தியமில்லையோ அது போல், சட்னி அல்லது சாம்பார் கூட்டணி இன்றி எந்த ஒரு தட்டிலும் இட்லி ஆட்சி செய்ய முடியாது. சிலர் இட்லியின் துண்டை சாம்பாரில் போட்டு அது மூழ்கும் வரை காத்திருப்பார்கள். அந்த இடைவெளியில் வாழ்க்கையை ஒரு ரவுண்ட் சுற்றி வந்து விடுவார்கள். சாம்பாரில் முக்கிய பின் சட்னியை லேசாக தொட்டு சாப்பிடுவதும், முதலில் சட்னியில் இட்டபின் சாம்பாரில் முக்குவதுமாய் இரு வேறு மனித பிரிவுகள் இட்லி சாப்பிடும் முறையை உலகில் நிர்வகிக்கின்றன.

முன்னரெல்லாம் "பார்சல்" இட்லியை இலையில் வைத்து பேப்பரில்தான் கட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மேல் இலையை நீக்கினால் அடி இலையில் நசுக்கப்பட்ட சட்னியின் தரிசனம் கிடைக்கும். அந்த இலை நீக்கும் நொடி அற்புதமானது. சட்னி மெல்ல மெல்ல காட்சி கொடுக்கும் பொழுது, அளவு சரியாக இருக்கிறதா, குறைவாக வைத்து விட்டாரா என்று சராசரி உலகில் விடப்பட்ட நம் மேன்மைமிகு ஆன்மா பரிதவிக்கும் நொடி அது.

இவ்வாறு பேப்பரில் இட்லி பார்சல் வாங்கும் பொழுது, சாம்பாருக்கு தூக்கு வைத்திருக்கிறீர்களா என்று பார்சல் போடுபவர் கேட்பார். இரண்டு இட்லி பார்சல் சொல்லி விட்டு குடம் சைஸில் இருக்கும் தூக்கை நீட்டும் புத்திசாலிகள் நம்மில் பலர் இருந்தார்கள். ஒட்டல்காரரோ, "நான் எத்தனுக்கு எத்தன்டா" என்பது போல் ஒரு நக்கல் சிரிப்புடன், தற்போது அணைகளில் இருக்கும் காவிரி நீர் அளவு போல் பெரிய தூக்கின் அடியில் எட்டிப் பார்த்தால் மட்டுமே தெரிவது போல் சாம்பார் ஊற்றித் தருவார். "இன்னும் கொஞ்சம் சாம்பார் ஊத்துங்க" என்று சொல்லாத வாய் தமிழ் நாட்டில் இருந்ததா என்று தெரியவில்லை. இப்பொழுதோ, எந்த பேச்சுவார்த்தைக்கும் வழியின்றி plastic கவரில் மெளனமாகி கிடக்கிறது சாம்பார்.

இப்படி ஊரெங்கும் உலா வரும் இட்லி, சில வருடங்களாக மினி இட்லி அவதாரமும் பல ஓட்டல்களில் எடுத்திருக்கிறது. சமீபத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள ஓட்டலில் உணவுக்குச் சொல்லி விட்டு காத்திருந்த போது விலைப் பட்டியல் கண்ணில் விழுந்தது. அதில் மினி இட்லி (3cm) என்று bracket போட்டிருந்தார்கள். நான் கணிதம் பயின்றவன் என்ற கர்வம் ஏற்படும் வண்ணம் மூளை ஒரு கேள்வி எழுப்பியது ‍ இட்லியோ வட்ட வடிவம். 3cm என்பது அதன் diameter or radius? அதை விட, இவ்வாறு இட்லியின் அளவை எழுத வைக்கும் அளவுக்கு என்ன நடந்திருக்கும்? ஒரு நிமிடம் ஓட்டலில் அனைவரும் scale உதவியுடன் இட்லியை அளந்து அளந்து சாப்பிடுவது போல் காட்சி மனதில் தோன்ற, பதறியபடி கனவையும் கணிதத்தையும் விரட்டினேன்.


இதை விட அதிர்ச்சி மற்றொரு ஓட்டலில் காத்திருந்தது. அங்கு "அனிமல் இட்லி" ["animal idli"] என்று போட்டிருந்தார்கள். ஆர்வம் தாங்காமல் சர்வரிடம் அதென்ன அனிமல் இட்லி என்று கேட்டேன். காட்டை காலி செய்து விட்டோம். எனவே மீதமிருக்கும் கொஞ்ச நஞச புலி சிங்கங்களையும் "animal idli" என்று தீர்த்துக் கட்டுகிறோமோ என்று கலக்கம் பரவியது. நல்ல வேளை. "பல வித மிருகங்கள் வடிவில் இட்லி செய்து தருகிறோம். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்" என்றார்...!

"என்னப்பா நீ? பதிவில் எப்போதும் "கருத்து" சொல்வாய். இட்லி புராணத்தில் punch message இல்லையா?" என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நாம் இட்லி வைத்தே ஒரு பஞ்ச் மெசேஜ் ரெடி பண்ணி விடலாம்...

இந்த இட்லியை பாருங்கள்...சாதி, மதம் என்று வேறுபட்டு அடித்துக் கொள்ளும் சமூகத்தில் இட்லியை தீண்டாதவர்கள் உண்டா? அமைதியின் வண்ணமான வெள்ளை நிறத்துடன் சமூக நல்லிணக்கத்தின் சான்றாக இருக்கிறதே சார் இட்லி. வர்க்க பேதத்தை கூட எடுத்துக் கொள்ளுங்கள். அன்றாடங்காய்ச்சிகள் "அக்கா கடை இட்லி" சாப்பிடுகிறார்கள். "rich" மக்கள் நட்சத்திர ஓட்டலில் "rice cake" சாப்பிடுகிறார்கள். உள்ளே போவது என்னமோ அரிசியும் உளுந்தும் தான். நடுத்தர வர்க்கமோ, தாங்கள் பிசாக்களுடன் பிறந்து பர்கர்களிலேயே வளர்ந்தது போல பாவனை காட்டினாலும், அவர்கள் போகும் இடங்களில் எல்லாம் துரத்தி, இப்போது pizza கடைகளிலும்  coffee day உள்ளேயும் புகுந்து, நீக்கமற நிறைந்து தன் ஆளுமையை பறைசாற்றி கொண்டிருக்கிறதே சார் நம் இட்லி! நம்மூரில் யார் யாரோ "சமூக நீதி காவலர்" பட்டத்துடன் உலா வருகிறார்கள். இட்லிக்கு அந்தத் தகுதி இல்லையா சார்? நீங்களே சொல்லுங்கள்...

Sunday, January 20, 2013

புத்தகக் கண்காட்சியும் மிளகாய் பஜ்ஜியும்...

வாகன வரிசை புழுதியைக் கிளப்ப சாரை சாரையாக மக்கள் கூட்டம் திருவிழா நெரிசல் போல இருக்க‌ நந்தனம் மைதானத்தில் உண்மையிலேயே புத்தகத் திருவிழா உச்சக் கட்டத்தை எட்டியிருக்கிறது.

இடமும் வலமுமாக மொத்தம் இருபத்தாறு வரிசைகளில் நமக்குத் தேவையான பதிப்பகத்தையும் நினைவில் வைத்திருக்கும் நூல்களையும் கண்டுபிடிக்க‌, சற்று "உழைப்பு" தேவைப்பட்டாலும் அது மனதுக்கு உற்சாகம் தரும் உழைப்பு. பதிப்பக வரிசையை பெரிய வெள்ளைத் தட்டியில் ஒவ்வொரு வரிசை முன்பாக பெரிதாக வைத்திருந்தாலும் அதன் பயன் முழுவதுமாக கிடைக்க நாம் விட்டு விடுவோமா? எனவே பலர் அதன் அருகே  chair போட்டு தங்களால் இயன்ற அளவு மறைத்தபடி அமர்ந்திருந்தனர்.

"who is வை.மு. கோதைநாயகி" என்று கேட்ட சிறுவனுக்கு பொறுமையாக பதிலளித்து, அவரின் புகைப்படத்தை காட்டுகிறேன் என்று ஒரு stall நோக்கி அழைத்துப் போன ஒரு அம்மா ஆச்சரியமும் மகிழ்ச்சியும் பட வைத்தார்.

வழக்கம் போல "முன்னேற்றம் காண முத்துக்கள் நூறு" போன்ற "வளர்ச்சி" பற்றிய புத்தகங்கள் நிரம்பிய ஸ்டால்களில் மக்கள் அலைகடலென திரண்டு இடித்துப் பிடித்தபடி "முன்னேற" முயன்று கொண்டிருந்தனர்.

"இங்கு RSS புத்தகங்கள் கிடைக்கும்" என்ற board தொங்கும் stall எதிரே பெரியார் புத்தகங்கள் பெருமளவு கிடைக்கும் ஸ்டால். ஜனநாயகம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தென்படுவதில் நாம் பெருமிதம் கொள்ளலாம் சார்...

சிறுகதைத் தொகுப்புகளை தேர்ந்தெடுப்பதில் நமக்கு மிகுந்த கவனம் வேண்டும். வெவ்வேறு தொகுப்புக்களில் ஒரே கதை மீண்டும் மீண்டும் இடம் பெறுவதை பல பதிப்பகங்களில் பார்க்க முடிந்தது. ஜெயகாந்தன் போன்றவர்களின் கதைகளுக்கு இந்த நிலை நிறைய நேர்ந்திருக்கிறது.

உயிர்மை உள்ளே லா.ச.ரா சிறுகதை தொகுப்பின் அட்டையில் வரையப்பட்டிருக்கும் அவர் முகத்தை சற்று நேரம் பார்த்தபடி இருந்தேன். அவர் எழுத்தின் மூலம் நாம் காலத்தையே வார்த்தைகளில் நிரப்பி நிரப்பி சாப்பிடலாம் இல்லையா சார்?

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தில் வழக்கமாக சில அரிதான பழைய புத்தகங்கள் கிடைக்கும். இந்த முறை எதுவும் சிக்கவில்லை. வருடங்கள் போகப்போக, chennai book exhibition என்பது தேடுதல் அதிகமாகவும் தேர்ந்தெடுக்கும் புத்தகங்கள் குறைவாகவும் தருவது போலத் தோன்றுகிறது. உங்களுக்கு?

முன்னரே திட்டமிட்டபடி, பத்து பதினைந்து பதிப்பகங்களில் சுமார் நான்கு மணி நேரம் நன்கே கழிந்த பின், வயிறு "நானும் இருக்கிறேன்" என்று கூவத் துவங்க, "சாப்பிட வாங்க" அழைப்பை ஏற்க நேர்ந்தது...அங்கு எனக்கு முன் "cash counter" வரிசையில் நின்றிருந்த ஒருவர், தினமும் ஒரே menuவா இல்லை வேறு வேறா என்று விசாரித்து தெரிந்து கொண்டார். பக்கத்திலிருந்த அவரின் நண்பரிடம் "நாளைக்கு மிளகாய் பஜ்ஜி try பண்ணலாம்டா" என்றார். நான் அவரைப் பார்க்கவும் அவர் என்னைப் பார்க்கவும், இருவரும் லேசாய் சிரித்துக் கொண்டோம். அப்பொழுதே நான்  மிளகாய் பஜ்ஜி "try"  பண்ணுவதற்காகத்தான் வரிசையில் நிற்கிறேன் என்று அவருக்குத் தெரியாது!

பிறகு பஜ்ஜி வாங்குவதற்கு நிற்கும் பொழுது, கல்லூரி மாணவி ஒருவர் "அஞ்ஞாடி" என்றால் என்னடி? என்று தோழியிடம் கேட்டுக் கொண்டிருந்தார். இன்னொருவர், "வாழைக்காய் பஜ்ஜி ரொம்ப சிவப்பா இருக்கே...பவுடர் அதிகம் போட்டிருப்பானோ" என்று தன் உறவினரிடம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். எத்தனை விதமான மனிதர்கள் சார்!

Thursday, January 17, 2013

பவர் ஸ்டார் புதுக்கட்சி துவக்கம்?

என்னய்யா இது புதுசாய் ஒரு குண்டு வீசுகிறாய் என்று ஆச்சரியமா? பதிவை படித்து முடித்த பின் ஆச்சரியம் போய் எதிர்பார்ப்பும் ஒரு வித "பாசப் பிணைப்பும்" நம் பவர் ஸ்டார் மீது வருவதற்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது...வாருங்கள், என்ன சேதி என்று பார்ப்போம்...

சில மாதங்கள் முன்பு வரை சிலர் மட்டுமே அறிந்திருந்த பவர் ஸ்டார், நீயா நானா கோபிநாத் "உபயத்தில்" பலரின் நெஞ்சுக்குள் இடம் பிடித்தார். பிறகு நடந்ததெல்லாம் சரித்திரம்! தற்போது கிட்டத்தட்ட தமிழ்நாடே லட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது...

பவர் ஸ்டாரின் பண்புகள் இன்றைய அரசியலுக்கு எப்படி பொருந்தி வருகிறது என்று பட்டியலிட்டு ஒப்பிட்டு பார்ப்போம்:

பண்பு 1: பத்திரிகைகள் இவரை கோமாளி போலவே நடத்தின. இவரின் பேட்டிகளை காமெடி போல பிரசுரித்தன. பின்னர் சேனல்களில் அழைத்து, நையாண்டி என்ற பெயரில் முடிந்த அளவு அவமானப் படுத்தினர். இவை அனைத்திற்கும் இவரின் முகத்திலிருந்து சிரிப்பு மட்டுமே பதிலாக இருந்தது.

நியாயமாக கேட்கப்படும் நிருபரின் கேள்விகளுக்குக் கூட "வரியா சேர்ந்து தீக்குளிக்கலாம்" என்று தப்பிக்கும் அரசியல்வாதிகளும், நாக்கைத் துருத்தும் நாகரீகம் அற்ற அரசியல்வாதிகளும், தன்னை எதிர்த்து ஒரு வார்த்தை பேசினால் முடிந்தது கதை என்ற நிலையில் அனைவரும் தன் காலில் விழுந்து கிடக்க வேண்டும் என்று நினைக்கும் அரசியல்வாதிகளும் நிறைந்திருக்கும் தமிழ்நாட்டில், அனைவரின் நக்கல்களுக்கும் சிரித்துக் கொண்டிருக்கும் நம்மவருக்கு "புன்னகை தலைவர்" என்று பட்டம் கொடுக்கலாம் தானே சார்?

பண்பு 2: இவர் தனக்கு 5 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்வது காமெடிதான். ஆனால் இன்று பல letter pad கட்சிகள் தங்களுக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கின்றனர் என்று அடித்து விடுகிறார்களே அதை விடவா சார் இவர் காமெடி செய்கிறார்? அரசியல் அரிச்சுவடியை சரியாகத்தானே செய்கிறார்?

பண்பு 3: தானே தயாரித்து நடித்து வெளியிட்ட படத்தை பார்க்க எவரும் வராமல் தியேட்டர் காற்றாடியதால், தானே காசு கொடுத்து படத்தை ஓட்டுவதாக இவர் மீது விமர்சனம் இருக்கிறது. என்ன சார் இது அநியாயம்? நம் அரசியல்வாதிகள் நாட்டை சுரண்டி தங்களை வளப்படுத்திக் கொள்வதை விட இது எவ்வளவோ மேல் இல்லையா? அவர் பணத்தை வைத்துக் கொண்டு அவர் publicity செய்தால் நமக்கென்ன வந்தது...

பண்பு 4: இவர் விளம்பர பிரியராம். எனவே எப்படியாவது தன் பெயர் வெளியில் தெரியுமாறே எல்லா வேலைகளையும் செய்வாராம்...ஏதாவது சாக்கில் போஸ்டர்களில் பல்லைக் காட்டிக் கொண்டு திரியும் விளம்பர மோகம் பிடித்த‌ தமிழ் நாட்டில் இதெல்லாம் ஒரு விஷயமா சார்?

குறிப்பு: சமீபகாலம் வரை அனைத்து பேட்டிகளிலும் cooling glass அணிந்து வந்தவர், இப்போது மாறி விட்டார். அற்புதமான வாய்ப்பையும் நழுவ விட்டு விட்டார். அவரின் கண்ணாடி பழக்கம் பற்றி நக்கலாக கேள்விகள் கேட்கும் பொழுது, தனது cooling glassஐ தடவியபடி, "இருட்டறையில் உள்ளதடா உலகம்" என்னும் பாரதிதாசன் வரி என்னை மிகவும் பாதித்து விட்டது. சமூகத்திற்கு வெளிச்சம் ஊட்டுவதே என் பணி என்று எப்போதும் நினைவில் நிறுத்தவே cooling glass மூலம் என்னை நானே இருட்டாக்கிக் கொள்கிறேன்" என்று ஒரு போடு போட்டிருந்தார் என்றால், நாமும் "ஆஹா, என்னே ஒரு தமிழ் ரசனை, என்னே ஒரு சமூக அக்கறை" என்று மெய்சிலிர்த்துப் போய் "பக்குவத் தமிழன் பவர் ஸ்டார்" என்று பட்டம் கொடுத்து பாராட்டியிருப்போம்...பட்டம் கொடுத்தே கெட்ட கூட்டம்தானே சார் நாம்...

இப்போது சொல்லுங்கள்...இந்த பதிவின் தலைப்பு விரைவில் உண்மையாகும் வாய்ப்பு நிச்சயமாக இல்லை என்று நம்மால் சொல்ல முடியுமா? 

Saturday, January 5, 2013

தமிழ்நாடு பார்த்த‌ 2012


வேறொன்றுமில்லை சார்...புது வருடம் நெருங்கினால் போன வருடத்தில் சமூகத்தில் நிகழ்ந்தவை, சிறந்தவை, மறந்தவை, கடந்தவை என்று அனைத்து ஊடகங்களும் ஆளாளுக்கு கட்டி வெளுக்கிறார்கள். நாம் மட்டும் சும்மா இருந்தால் எப்படி? அதான் தமிழ் கூறும் நல்லுலகை தத்தளிக்க வைத்த முக்கிய நிகழ்வுகளை அலசுவோம் என்று புறப்பட்டால்...அப்பப்பா...எத்தனை விஷயங்கள்...மேலே படியுங்கள்...

(i)திருப்பதியில் தரப்படும் லட்டு முன்னர் போல இல்லை என்று பலர் வருத்தப்பட்டனர். நிர்வாகம், சமூகம் என அனைத்து பக்கங்களிலும் தினமும் நம்மிடம் நீட்டப்படும் "சார்...லட்டு" கசப்பது பற்றி நாம் கவலைப்படுவதாக தெரியவில்லை.

(ii)"ஈமு" என்றால் ஈசியான முன்னேற்றம் என்று தமிழர்களுக்கு விளக்கப்பட்டது.

(iii)கடல் திரைப்படத்திலிருந்து சமந்தா விலகக் காரணம் என்ன என்று பத்திரிகைகள் பெரும் கலக்கம் அடைந்தன. அதை படித்த நாமும் கவலை கொண்டோம்.

(iv)180 நாட்கள் கெடாமல் இருக்கும் பால் சுவைக்கும் பாக்கியம் பெற்றனர் தமிழ் மக்கள். ஆனால், அது 180 நாட்கள் வருமா என்பதை எப்படி சோதிப்பது என்று தெரியாமலும், 6 மாதம் வரை பால் வாங்காமல் நாம் பாலைவனத்திலா இருக்கப் போகிறோம் என்று புரியாமலும் விழித்தனர்.

(v)ஐந்து நூறு ரூபாய் நோட்டுகள் சேர்ந்தாலே அதை இரண்டு முறை எண்ணிப் பார்க்கும் நம்மைப் போன்ற சாமானிய பொதுஜனம், அசால்டாக அடிக்கப்பட்ட இருநூறு கோடி முன்னூறு கோடியையெல்லாம் "இவர்கள்" எப்படி "கணக்கு" செய்வார்கள் என்று அவ்வப்பொழுது தலையை சொறிந்த படி 2012ஐ ஓட்டியது...

(vi)ஒரு கிணறு, அதுவும் வற்றாத கிணறு காணாமல் போய்விட்டது என்று சில வருடங்களுக்கு முன் வடிவேலு புகார் கொடுத்தார் ‍ - சினிமாவில். சென்ற வருடம், சில ஆறுகள், பல குளங்கள் உண்மையிலேயே காணாமல் போயின. வடிவேலுவின் காமெடி உண்மையாகிப் போனதை எண்ணி, உச்சி குளிர்ந்தபடி பொழுது போனது நமக்கு.

(vii)புகாரில் சிக்கிய பெருந்தலைகள் புன்னகைக்கும் புகைப்படத்தை, அவர்கள் அடித்த‌ கொள்ளையின் அளவுக்குத் தகுந்தாற்போல‌ பெரிதாக அச்சிட்டு அகமகிழ்ந்தன பத்திரிகைகள். வரும் ஆண்டில், "ஊழல் சிறப்பிதழ்" போன்றவற்றை படிக்கும் பேறும் நமக்குக் கிட்டலாம்.

(viii)"தர்பூசணியை டம்ளர் மறைக்குமா" என்ற புதுமொழி பொய்க்கும் வண்ணம் 120 நாட்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியாத ஒருவர், முன் ஜாமீன் கிடைத்த மூன்றே நாளில் சிரித்தபடி வந்து நின்று போஸ் கொடுத்ததைக் கண்டு எவரும் அதிர்ச்சியடையவில்லை. "இதெல்லாம் சகஜமப்பா" என்று அவரவர் வேலையை அவரவர் பார்த்தபடி வருடத்தைக் கடத்தினர்.

(ix)அன்னிய முதலீட்டில் அடிக்கப்பட்ட அந்தர் பல்டிகள், இந்த வருடம் நிறைய ஊர்களில் சர்க்கஸ் நடக்காத ஏமாற்றத்தை போக்கியது.

(x)வருடா வருடம் தொடர்வது போல, "மர்ம அழகிகள்" தமிழ் பத்திரிகைகளில் கைது செய்யப்பட்டனர். தாமதமாகும் நீதி பற்றிய சந்தேகங்கள் எழும்போது "சட்டம் தன் கடமையை செய்வதாக" அறம் காப்பவர்கள் பேட்டி கொடுத்தார்கள். பள்ளிக்குள்ளேயே மாணவன் ஆசிரியையை கொன்றும், பட்டப்பகலில் பல கொலைகளைக் கண்டும், இந்தியா வல்லரசாகும் கனவுக்குத் தோள் கொடுத்து தமிழகம் பீடு நடை போட்டது.

சென்ற வருட top 10 நிகழ்வுகள் எப்படி? 2012 அற்புத ஆண்டு தானே சார்? என்னப்பா நீ முக்கியமான நிகழ்வுகளை சொல்கிறேன் என்ற பெயரில் அர்த்தமில்லாமல் எழுதியிருக்கிறாய் என்பீர்கள்தானே?காதை பக்கத்தில் கொண்டு வாருங்கள். ஒரு விஷயம் சொல்கிறேன்.

"குறுவை ஒன்றுமில்லாமல் போனது. சம்பா செத்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவை, அரசாணை ஆக்க அவகாசம் கேட்டு ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களை பற்றி கவலையின்றி புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தியும் பார்த்தும் கொண்டிருக்கிறோம்..." இப்படியெல்லாம் கொஞ்சம் சீரியஸாக எழுதத்தான் சார் விருப்பம். ஆனால் "பொறுப்பு" என்பதற்கு இக்காலத்தில் "கிறுக்கு" என்று அர்த்தம் என்று என் நண்பர் ஒருவர் சொல்லியிருக்கிறார். நாம் "கிறுக்கு" இல்லைதானே? அதான் சார் பேசாமல் மேற்படி list மட்டும் எழுதி முடித்து விட்டேன்.