வேறொன்றுமில்லை சார்...புது வருடம் நெருங்கினால் போன வருடத்தில் சமூகத்தில் நிகழ்ந்தவை, சிறந்தவை, மறந்தவை, கடந்தவை என்று அனைத்து ஊடகங்களும் ஆளாளுக்கு கட்டி வெளுக்கிறார்கள். நாம் மட்டும் சும்மா இருந்தால் எப்படி? அதான் தமிழ் கூறும் நல்லுலகை தத்தளிக்க வைத்த முக்கிய நிகழ்வுகளை அலசுவோம் என்று புறப்பட்டால்...அப்பப்பா...எத்தனை விஷயங்கள்...மேலே படியுங்கள்...
(i)திருப்பதியில் தரப்படும் லட்டு முன்னர் போல இல்லை என்று பலர் வருத்தப்பட்டனர். நிர்வாகம், சமூகம் என அனைத்து பக்கங்களிலும் தினமும் நம்மிடம் நீட்டப்படும் "சார்...லட்டு" கசப்பது பற்றி நாம் கவலைப்படுவதாக தெரியவில்லை.
(ii)"ஈமு" என்றால் ஈசியான முன்னேற்றம் என்று தமிழர்களுக்கு விளக்கப்பட்டது.
(iii)கடல் திரைப்படத்திலிருந்து சமந்தா விலகக் காரணம் என்ன என்று பத்திரிகைகள் பெரும் கலக்கம் அடைந்தன. அதை படித்த நாமும் கவலை கொண்டோம்.
(iv)180 நாட்கள் கெடாமல் இருக்கும் பால் சுவைக்கும் பாக்கியம் பெற்றனர் தமிழ் மக்கள். ஆனால், அது 180 நாட்கள் வருமா என்பதை எப்படி சோதிப்பது என்று தெரியாமலும், 6 மாதம் வரை பால் வாங்காமல் நாம் பாலைவனத்திலா இருக்கப் போகிறோம் என்று புரியாமலும் விழித்தனர்.
(v)ஐந்து நூறு ரூபாய் நோட்டுகள் சேர்ந்தாலே அதை இரண்டு முறை எண்ணிப் பார்க்கும் நம்மைப் போன்ற சாமானிய பொதுஜனம், அசால்டாக அடிக்கப்பட்ட இருநூறு கோடி முன்னூறு கோடியையெல்லாம் "இவர்கள்" எப்படி "கணக்கு" செய்வார்கள் என்று அவ்வப்பொழுது தலையை சொறிந்த படி 2012ஐ ஓட்டியது...
(vi)ஒரு கிணறு, அதுவும் வற்றாத கிணறு காணாமல் போய்விட்டது என்று சில வருடங்களுக்கு முன் வடிவேலு புகார் கொடுத்தார் - சினிமாவில். சென்ற வருடம், சில ஆறுகள், பல குளங்கள் உண்மையிலேயே காணாமல் போயின. வடிவேலுவின் காமெடி உண்மையாகிப் போனதை எண்ணி, உச்சி குளிர்ந்தபடி பொழுது போனது நமக்கு.
(vii)புகாரில் சிக்கிய பெருந்தலைகள் புன்னகைக்கும் புகைப்படத்தை, அவர்கள் அடித்த கொள்ளையின் அளவுக்குத் தகுந்தாற்போல பெரிதாக அச்சிட்டு அகமகிழ்ந்தன பத்திரிகைகள். வரும் ஆண்டில், "ஊழல் சிறப்பிதழ்" போன்றவற்றை படிக்கும் பேறும் நமக்குக் கிட்டலாம்.
(viii)"தர்பூசணியை டம்ளர் மறைக்குமா" என்ற புதுமொழி பொய்க்கும் வண்ணம் 120 நாட்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியாத ஒருவர், முன் ஜாமீன் கிடைத்த மூன்றே நாளில் சிரித்தபடி வந்து நின்று போஸ் கொடுத்ததைக் கண்டு எவரும் அதிர்ச்சியடையவில்லை. "இதெல்லாம் சகஜமப்பா" என்று அவரவர் வேலையை அவரவர் பார்த்தபடி வருடத்தைக் கடத்தினர்.
(ix)அன்னிய முதலீட்டில் அடிக்கப்பட்ட அந்தர் பல்டிகள், இந்த வருடம் நிறைய ஊர்களில் சர்க்கஸ் நடக்காத ஏமாற்றத்தை போக்கியது.
(x)வருடா வருடம் தொடர்வது போல, "மர்ம அழகிகள்" தமிழ் பத்திரிகைகளில் கைது செய்யப்பட்டனர். தாமதமாகும் நீதி பற்றிய சந்தேகங்கள் எழும்போது "சட்டம் தன் கடமையை செய்வதாக" அறம் காப்பவர்கள் பேட்டி கொடுத்தார்கள். பள்ளிக்குள்ளேயே மாணவன் ஆசிரியையை கொன்றும், பட்டப்பகலில் பல கொலைகளைக் கண்டும், இந்தியா வல்லரசாகும் கனவுக்குத் தோள் கொடுத்து தமிழகம் பீடு நடை போட்டது.
சென்ற வருட top 10 நிகழ்வுகள் எப்படி? 2012 அற்புத ஆண்டு தானே சார்? என்னப்பா நீ முக்கியமான நிகழ்வுகளை சொல்கிறேன் என்ற பெயரில் அர்த்தமில்லாமல் எழுதியிருக்கிறாய் என்பீர்கள்தானே?காதை பக்கத்தில் கொண்டு வாருங்கள். ஒரு விஷயம் சொல்கிறேன்.
"குறுவை ஒன்றுமில்லாமல் போனது. சம்பா செத்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவை, அரசாணை ஆக்க அவகாசம் கேட்டு ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களை பற்றி கவலையின்றி புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தியும் பார்த்தும் கொண்டிருக்கிறோம்..." இப்படியெல்லாம் கொஞ்சம் சீரியஸாக எழுதத்தான் சார் விருப்பம். ஆனால் "பொறுப்பு" என்பதற்கு இக்காலத்தில் "கிறுக்கு" என்று அர்த்தம் என்று என் நண்பர் ஒருவர் சொல்லியிருக்கிறார். நாம் "கிறுக்கு" இல்லைதானே? அதான் சார் பேசாமல் மேற்படி list மட்டும் எழுதி முடித்து விட்டேன்.
No comments:
Post a Comment