/ கலி காலம்: இவர்களின் தீபாவளி ரகசியங்கள்...

Friday, November 16, 2012

இவர்களின் தீபாவளி ரகசியங்கள்...


என்ன சார்...ரகசியம் என்றவுடன் நமக்கு ஆர்வமாய் இருக்குமே...அதுவும் அடுத்தவர் பற்றிய ரகசியம் என்றால் வெறும் வாயில் போட்ட அவல் என்பதை விட வெல்லத்தில் போட்ட‌ அவல் போல நமக்கு இனிக்குமே...சரி, விஷயத்திற்கு வருவோம். பதிவை படித்த பின், நீங்கள் எதிபார்த்தது வேறு இங்கு இருப்பது வேறு என்றால் என்னை குற்றம் சொல்லாதீர்கள் என்று இப்போதே சொல்லி விடுகிறேன் சார்.

நாம் பார்க்கப் போகும் "இவர்கள்" யார்?

தீபாவளி அன்று காலை நம் அரசு பேருந்தை கடமையுடன் ஓட்டிக் கொண்டு போகும் ஓட்டுனர் மற்றும் அவரது குடும்பத்து தீபாவளி எப்படி இருக்கும்? பல வருடங்களுக்கு முன், சில தாமதங்கள் காரணமாக, முன்னரே ஊர் சேர்ந்திருக்க வேண்டிய நான், தீபாவளி காலையில் மதுரை நோக்கிய பேருந்தில் இருந்தேன். கைபேசி தன் கைவரிசையை சமூகத்தில் காட்டத் துவங்காத காலம் அது. சுமார் பதினோறு மணியளவில் வண்டியை ஒரு சிற்றூரின் துவக்கத்தில் இருந்த பெட்டிக்கடையை ஒட்டி நிறுத்தியவர், பயணிகளை நோக்கி சத்தமான குரலில், தான் நேற்றிரவே "trip" முடித்து வீடு செல்ல வேண்டியவர் என்றும், இன்னமும் "duty"யில் இருப்பதாகவும், வீட்டில் காத்துக் கொண்டிருப்பவர்களிடம் பேசிவிட்டு வருவதாகவும் சொல்லி இறங்கினார். பயணிகள் அனைவரும் அவரின் மேல் கரிசனம் கொண்டதோடு மட்டுமல்லாமல், பெரும்பாலோருக்கு தங்கள் வீடு மனதில் ஓட, அந்த "telephone booth" நீளமானது...அந்த ஓட்டுனர் தொலைபேசியில் தனது குழந்தையிடம், "கட்டாயம் இரவு வரும் பொழுது பட்டாசு வாங்கி வருகிறேன்" என்று  மன்றாடியதும், மதுரை வந்து சேர்ந்த பொழுது இரவாகிப் போனாலும், அப்பொழுதும் அக்கறையுடன் சில பயணிகள் பேருந்திலிருந்து இறங்கும் பொழுது ஓட்டுனரிடம், "மறக்காம பட்டாசு வாங்கிட்டு போங்க பிள்ளைங்க காத்துக் கிடக்க போகுதுங்க..." என்று சொல்லிப் போனதும்  ஒரு படி மேலே போய் ஒருவர் தான் கொண்டு போகும் மத்தாப்புகளில் ஒன்றை அவரிடம் கொடுத்ததும் இன்றும் நினைவில் நிற்கிறது.! இனி நம் சமூகத்தில் இக்காட்சி மீண்டும் நிகழ்வது அரிதினும் அரிது.

தீபாவளிக்கு முந்தைய நாட்களில் அனைத்து கடைத்தெருக்களிலும் அலைமோதும் கூட்டத்தின் நடுவே "எலி மருந்து" விற்பவர் ஒரு சிறு அட்டையில் சக்கரத்தை பொருத்தி தள்ளிக் கொண்டே போவதை பார்த்திருப்போம்.... அந்த விற்பனை பொருட்களின் மொத்த மதிப்பே இன்றைய வேகமான உலகின் சில "mobile recharge"களுக்குள் அடங்கி விடும். எலி மருந்து விற்று வரும் வருமானத்தில் ஊசலாடிக் கொண்டிருக்கும் இவரைச் சார்ந்தவர்களின் தீபாவளி எதிர்பார்ப்பு எத்தனை துயரமிக்கது? அதை சுமக்கும் இவரின் முகத்தை நாம் கூர்ந்து நோக்கியிருக்கிறோமா?

தீபாவளியை காரணம் காட்டி, பல வித உணவுகளை அதிகமாக புசித்து, அதன் காரணமாக மதியம் நீண்ட தூக்கம் போட்டு, மாலையில் மறுபடியும் கேளிக்கைகளுக்குத் தயாராகும் நம் கண்ணில், தெரு முழுதும் குவிந்து கிடக்கும் வெடிப் பேப்பர்களுக்கிடையில், வெடிக்காத வெடிகளை தேடிக் கொண்டிருக்கும் சிறுவனின் முகம் கவனத்தில் விழுந்திருக்கிறதா? அந்த சிறுவனிடம் தீபாவளியை பற்றிய எத்தகைய எண்ணம் ஓடிக் கொண்டிருக்கும்?

"இவர்கள்" பார்த்த பின் "இவரை" பார்ப்போம்...

சென்ற வாரம் பிரபல வார இதழின் தீபாவளி சிறப்பிதழில் வந்திருக்கிறது இவரின் பேட்டி. "தீபாவளி கொண்டாடுவதில்லை" என்ற தலைப்பைப் பார்த்து, "ஆஹா, ஒரு வேளை சமூக அவலங்களையும் மேற்கூறியன‌வற்றை போன்ற மனதில் வலி ஏற்படுத்தும் காட்சிகளையும் கண்டு கங்கையென பொங்கியெழுந்த மங்கை எடுத்த முடிவோ..." என்று ஆர்வத்துடன் பக்கத்தை திருப்பினால், அவரோ, "என் நாய்க்கு வெடிச்சத்தம் கண்டு பயம் எனவே நான் தீபாவளி கொண்டாடுவதில்லை" என்று போட்டிருக்கிறார் ஒரு போடு!

அடுத்த வருடம், இந்த பேட்டி வந்த இதழின் பக்கம், ஒரு லட்சுமி வெடியின் சிதறிய‌ பேப்பராக வீதியில் கிடக்கையில், வெடிக்காத வெடி தேடி வீதி வீதியாக  வரும் சிறுவன்  அந்த பேப்பரை வெறுப்புடன் வீசியெறியும் குப்பையிலிருந்து குப்பென்று அடிக்குமே ஒன்று...அதற்கு ஆன்றோரும் சான்றோருமாய் சேர்ந்து வைத்திருக்கும் பெயர் "சமூகம்".

பின் குறிப்பு: தற்காலத் திரையுலகத் தாரகைகள் மற்றும் தமிழகத்தை தாங்கிப் பிடிக்கும் புரட்சி நாயகர்கள் தங்கள் தீபாவளி ரகசியங்களை பகிர்ந்து கொள்ளும் பதிவோ என்றெண்ணி இங்கு வந்தவர்கள் என்னை மன்னித்து அருள்வார்களாக...


1 comment:

  1. உங்களின் பார்வைகளுக்கு, சிந்தனைக்களுக்கு ஒரே சல்யூட்... பாராட்டுக்கள்...

    நன்றி...

    ReplyDelete