/ கலி காலம்: காலம் கெட்டுப் போச்சு சார்...! பகுதி 2

Wednesday, December 5, 2012

காலம் கெட்டுப் போச்சு சார்...! பகுதி 2


சென்ற பதிவில், திருப்பரங்குன்றம் கோயிலில் நுழைந்த உடனேயே, "காலம் கெட்டுப் போச்சு" என்பதற்கு கந்தன் காட்டிய "sample" பார்த்தோம். அப்படியே "யானை மகால்" பக்கம் சென்றேன். சுத்தமாக இருந்த அந்த விசாலமான அறையில் யானையின் போட்டோவிற்கு மாலை போட்டு வைத்திருந்தார்கள். அறை முழுதுவதும் யானை வாசம் இன்னும் வீசிக்கொண்டிருந்தது. இப்படித்தானே சார் நம் எல்லோருக்கும், கால யானை கடந்து போன பின்னும் மன அறையில் ஞாபக வாசனை வீசிக் கொண்டிருக்கிறது...

"புது யானை எப்போ வரும்" என்று அங்கிருந்தவரிடம் கேட்டேன். என் "யானை(க்) காதல்" தெரிந்திருக்க வாய்ப்பில்லாத அவர், "லூசா நீ" என்பது போல் என்னைப் பார்த்து விட்டு, நாகரீகம் கருதி "கொஞ்ச நாள் ஆகுங்க" என்றார். முப்பது வருடங்களுக்கு முன், என் அப்பாவின் பாதுகாப்பில், நான் வாரம் தோறும் வருடிக் கொடுத்த திருப்பரங்குன்றம் யானையின் கரும்புள்ளிகள் நிறைந்த ரோஸ் நிற தும்பிக்கை நிழல் படமாய் வீற்றிருக்க, அங்கிருந்து நகர்ந்து, உள்ளத்திற்கு உவகை தரும் பொய்கைக்கு போனேன்.

சரவணப் பொய்கையில் முன்னரெல்லாம் பொரி தூவிய சில நிமிடங்களில் அதற்கான அடையாளமே நீரில் இருக்காது. கால் வைத்த மறு நொடி, மீன்கள் கூட்டம் கூட்டமாக கடிக்கத் துவங்கும். இப்பொழுதோ, ஒரு மீன் கூட கண்ணிலும் காலிலும் படவில்லை. யாரோ எப்பொழுதோ போட்ட பொறி கூட நீரில் மிதக்கிறது...நம் பொய் வாழ்க்கை முறையை எள்ளல் செய்யும் விதமாக பொய்கையிலும் மீன்கள் பொய்த்து போனது போலும்...கோயில் குளத்து மீன்கள் நம்மை விட்டு விலக சில ஆண்டுகள் என்றால், நம் கோயில்களில் இருந்து கடவுள்கள் புறப்பட்டு போய் பல நூற்றாண்டுகள் ஆகியிருக்குமோ? logic சரிதானே சார்?

அங்கிருந்து சன்னதிக்கு வரும் வழியில் நந்த‌வனத்தில் ஒரு பெருங்குரங்கு பூச்செடிகளை சேதம் செய்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது. தமிழ் தெரிந்த குரங்கோ என்று எனக்கொரு சந்தேகம் ‍ அதாவது "உள்ளுறை உவமம்" வைத்து நம்மையும் நம் சமூகத்தையும் நக்கல் செய்கிறதோ அந்த குரங்கு என்று தோன்றியதில் வெட்கம் வந்ததால் வேகமாக நடையைக் கட்டினேன்...

கோயில் நிர்வாகம் பக்தர்களை குஷிப்படுத்த புதிர் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது சார்...அதிர்ச்சியடையாதீர்கள்! பத்திரிகைகளில் ஒரு சிக்கலின் ஒரு நுனியில் நுழைந்து மறு நுனியில் வெளியில் வரச் சொல்லி புதிர் வருமே...அது போல, ஏகத்துக்கும் அங்கிட்டும் இங்கிட்டுமாய் சாரம் கட்டி வழியை மறித்து, மறைத்து...பாவம் முதியவர்கள்... படிகள் நிறைந்த கோயிலில் இந்த "புதிர்கள்" வேறு அலைக்கழிக்க, பெருமூச்சுடன் பேரின்பம் தேடி நடந்தார்கள்.

மலையின் பாறைகள் தெரிவதனால், அவையே கூரையாக இருப்பதால், இந்த சன்னதி எனக்கு எப்பொழுதுமே பிடித்தமான ஒன்று. எத்தனை யுகமாக‌ அவை இங்கிருக்கிறதோ...எத்தனை தலைமுறைகளின் வேண்டுதல்களை அவை பார்த்துக் கொண்டிருக்கிறதோ...!

சட்டென்று என் கையில் ஒரு "அபிஷேக பாட்டில்" ஒன்றை கொடுத்தார் பட்டர். பிளாஸ்டிக் மூடி இன்னும் திறக்கப்படாததால், கடையில் இருந்து "direct"டாக‌ வந்தது என்று தெரிந்தது. கொடுத்ததோடு மட்டுமல்லாமல் "இருபது ரூபாய்" என்றார். அவரிடம் பாட்டிலை திருப்பிக் கொடுத்தேன். முருகனின் முகம் அசைவற்று இருந்தது. கலி காலத்தில் இப்படித்தான் நடக்கும் என்று முருகனுக்கு முன்னரே தெரிந்திருந்து தான் அசைவின்றி இருக்கிறார் என்று நாம் எதிர்பார்ப்பது நியாயம்தானே சார்?

1 comment:

  1. நீங்களும் தமிழ் தெரிந்த குரங்கோ :) சமூகத்தை இந்த வாரு வாருகிறீர்கள்!

    ReplyDelete