/ கலி காலம்: பாரத பட்ஜெட்டும் பிளாஸ்டிக் பக்கெட்டும்

Sunday, April 1, 2012

பாரத பட்ஜெட்டும் பிளாஸ்டிக் பக்கெட்டும்

ஒரு மாதமாக, எந்த  சேனல் திருப்பினாலும் எந்த பத்திரிகை எடுத்தாலும் "பணவீக்கம்" "வரி,வட்டி விகிதம்" போன்ற வார்த்தைகள்தான்... என்னடா நாம் அனைவரும் நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி கவலைப்படும் அளவு பொறுப்பான குடிமகன்கள்  ஆகிவிட்டோமோ என்று எண்ணி என்னைக் கிள்ளிப் பார்க்கும் போதுதான் ஆஹா இது மார்ச் மாதம் budget நேரம் என்று வலித்தது.
அனைவரின் பற்களுக்கிடையில் budget அரைபடும்போது நாம் மட்டும் சும்மா இருக்கலாமா சார்? எனவே என் பங்குக்கு நானும் ஒரு பதிவு போட்டுவிட்டேன்.
முதலில் இந்த "plastic bucket" கதையை பார்க்கலாம்...ஒன்று சொல்லி விடுகிறேன் - நீங்களாக,  கதை, தலைப்பு, பட்ஜெட் இதெல்லாம் "link" செய்து ஏதாவது புரிந்து கொண்டீர்கள் என்றால் நான் பொறுப்பில்லை. இது சாதாரண கதை. உள்நோக்கம் ஏதுமில்லை. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

ஒரு ஊரில் உள்ள வீட்டில் புதியதாய் ஒரு பிளாஸ்டிக் பக்கெட் வாங்கினார்கள். புதியதாய் இருக்கும் எல்லாமே நன்றாகத்தானே இருக்கும்? இந்த பக்கெட் கூட அப்படித்தான். சரியென்று வீட்டில் எல்லாரும் தூய தண்ணீர் பிடிக்க மட்டுமே உபயோகப்படுத்தினார்கள். வருடங்கள் ஆனதும் சாயம் வெளுக்க ஆரம்பித்தது. கைப்பிடியும் கொஞ்சம் பலவீனம் ஆகிவிட்டது("கை"ப்பிடி என்றதும் வேறேதும் நினைக்காதீர்கள்). சரியென்று அதை வீட்டில் துடைத்து மெழுக தண்ணீர் வைப்பதற்கு மாற்றினார்கள். சில வருடங்கள் ஓடின. மேல் பகுதியில் விரிசல்கள்...சரியென்று பாத்திரம் கழுவ பயன்படட்டும் என்று அடியில் மட்டும் தண்ணீர் பிடித்தார்கள். சில வருடங்கள் போனது...அடியிலும் விரிசல்...பேசாமல் குப்பை கொட்டி வைக்கவாவது இருக்கட்டும் என்று மூலையில் வைத்தார்கள். விரிசல் பெரிதாக குப்பையில் கூட கெட்டியான குப்பை மட்டுமே போட முடிந்தது...வீட்டில் எல்லோருக்கும் குழப்பம்...என்ன செய்யலாம்? புது பக்கெட் வாங்கினால் குப்பையை புது பக்கெட்டில் கொட்ட முடியுமா? அல்லது குப்பையை "புது குப்பை" என்று நினைத்து கொள்ள வேண்டியதுதானா? கதை முடிந்தது sir. மறுபடியும் சொல்கிறேன். பக்கெட் கதையை மறந்து விடுங்கள். இப்போது budget பார்க்கலாம்.

ஏன் சார் எப்போதுமே நிதி மந்திரிகள் black / brown color பெட்டி மட்டுமே கொண்டு வருகிறார்கள்? ஒரு பச்சை அல்லது மஞ்சள் என்று கொண்டு வந்தால் TV க்கு போஸ் கொடுக்கும் பொது "பளிச்" என்று இருக்குமில்லையா? எங்கள் ஊரில் அழகர் வைகையில் இறங்கும் போது வருடா வருடம் பச்சை, சிகப்பு, மஞ்சள் நிறப் பட்டாடையில் எழுந்தருள்வார். எந்த நிறத்தில் பட்டு உடுத்தி வருகிறாரோ அதை பொறுத்து அந்த வருடம் உலகத்திற்கு அமையுமாம். இதே போல, பட்ஜெட் பெட்டி கலரை வைத்து மகா ஜனங்கள் அந்த வருடம் தங்கள் பொருளாதாரத்  தலைவிதி எப்படி இருக்கும் அறிந்து கொள்ளலாம் இல்லையா சார்...
இந்த 2012 வருட budget highlight "கறுப்பு பணம் பற்றிய  வெள்ளை அறிக்கை" தான். எனக்கொரு joke ஞாபகம் வருகிறது. ஒரு குறும்புக்கார மாணவன் ஓவிய வகுப்பில் ஏதும் வரையாமல் டிமிக்கி  கொடுத்துக்கொண்டிருந்தான்.
டீச்சர் அவனை திட்டியவுடன் "சும்மா திட்டாதீர்கள் நான் வரைந்திருப்பதை பாருங்கள் என்று ஒரு "வெள்ளை வெற்றுத்தாளை" நீட்டினான். டீச்சர் "படம் எங்கே?" என்று கோபமாக கேட்க "நாய் எலும்பைத் திங்கும் காட்சியை எப்படி வரைந்திருக்கிறேன் பாருங்கள்" என்றான். டீச்சருக்கு படுகடுப்பு.
"வெறும் paper வைத்து பொய்யா சொல்கிறாய்" என்று அடிக்கப்போனார். மாணவனோ "எலும்பை நாய் தின்று விட்டது. சாப்பிட்ட பின் நாய் சும்மா நிற்குமா? ஓடிப் போய்  விட்டது.அதான் பேப்பரில் நாயும் இல்லை எலும்பும் இல்லை" என்றானாம். ஜோக் படித்து சிரிக்கலாம். நம் நாட்டை நினைத்து அழலாம்.

பிறகு, இந்த வருமான வரி விலக்கு...இந்தியா போன்ற நாட்டிற்கு நிதி மந்திரியாக இருப்பதற்கு எவ்வளவு திறமை வேண்டும்? இவரின் தந்திரத்தை பாருங்கள்...5-10 லட்சம் வருமானம் உள்ளவர்கள் பயன்பெறுமாறு ஒரு விலக்கு. நம் நாட்டில் எத்தனை பேர் சார் 8 லட்சம் 10 லட்சம் வருமானம் வாங்குகிறார்கள்? இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் கிட்டத்தட்ட அனைத்து தட்டு மக்களும் பயன்படுத்தும் பொருட்களுக்கு 2% சேவை வரி அதிகரிப்பு! இரண்டையும் சேர்த்துப் பாருங்கள். எவருக்கும் பயனில்லை என்பது தெளிவாகும்.

இனி நாம் பட்ஜெட்டை எப்படி அறிந்து கொள்வது என்று பார்ப்போம். பத்திரிகைகளுக்கும் டிவிக்கும் நம் அறிவு மேல் அவ்வளவு நம்பிக்கை. அதுவும் சில குறிப்பிட்ட பத்திரிகைகள் budget news போடும் விதமே தனி. "நிதி மந்திரி" என்று ஒரு paragraph தலைப்பு. இதில் மந்திரியின் பெயர், பூர்வீகம், உடை, நடை, சிரிப்பு போன்றவை அடங்கும் (ஒரு வேளை தினம் தினம் மந்திரிகள் மாறுவதால் இந்த செய்தி நமக்கு தேவைதானோ?). அடுத்த "பத்தி" ["paragraph"], "பெட்டி" என்ற தலைப்புடன் இருக்கும். இதில் மந்திரி பெட்டியை கொண்டு வந்த விதம், எந்த கையில் அதிக நேரம் பிடித்திருந்தார், அவருடன் வந்தவர்கள் எத்தனை பேர் யார் யார் , பெட்டிக்குள் இருக்கும் paper எத்தனை பக்கம், என்ன கலர் போன்றவை...அப்புறம்தான்  main விஷயம்...அதாவது budget படிக்கையில் மந்திரி எத்தனை முறை இருமினார், யார் யாரையெல்லாம் திரும்பி பார்த்தார், எத்தனை முறை தண்ணீர் குடித்தார் (பட்ஜெட் உரை கேட்ட பொதுமக்களுக்கு எத்தனை முறை விக்கல் வந்தது என்று ஏன் இவர்கள் போட மாட்டேன் என்கிறார்கள்?), ஆதரவாக எத்தனை முறை மேஜையை தட்டினார்கள் போன்ற மிக முக்கியமான விஷயங்கள்...இதற்குள் நம்மை "5 ஆம் பத்தி பார்க்க...8 ஆம் பத்தியில் தொடரும்..." என்று பத்தி பத்தியாக சுத்த வைத்து, பக்கம் பக்கமாக திருப்ப வைத்து வெறுப்பேற்றிய பின், போனால் போகிறது என்று மனமிரங்கி, வரும் ஆண்டிற்கான செலவு இவ்வளவு போன்றவற்றை மேம்போக்காக சொல்வார்கள். இதற்கு நடுவில், இலியானா விரும்பும்  இதழ் சாயம் என்ன கலர், தமன்னா தமிழ் கற்றுக்கொண்டாரா, ஆர்யா அமலா பால்  இடையே என்ன சண்டை போன்ற உலகை உலுக்கும் செய்திகளையும் நாம் கடந்து போக வேண்டியிருக்கும். "English" பத்திரிகைகளும் இதற்கு சளைத்தவையல்ல. "இந்தியாவின் காலத்தை" பிரதிபலிக்கும் பத்திரிக்கை ஒன்றில் சமீபத்தில் நாடெங்கும் பரபரப்பான "Dirty Picture" நடிகை, budget பற்றி தன் "கருத்துக்களை"  வாரி இறைத்திருக்கிறார். நாட்டின் பிரதமர் எதற்கும் வாயைத்  திறக்காதவராக இருந்தால் நாட்டில் யார் யாரெல்லாம் எதைப்  பற்றியெல்லாம் கருத்து சொல்கிறார்கள் பாருங்கள்! (என்னையும் சேர்த்துதான் சார் சொல்கிறேன்)
வாழ்க பாரத பட்ஜெட்! வளர்க பத்திரிகைகளின் பட்ஜெட் தொண்டு!

"என்னய்யா? பட்ஜெட் என்று தலைப்பில் போட்டுவிட்டு அதைப்பற்றி பேருக்கு ஏதோ எழுதி விட்டு வேறு எதையெல்லாமோ பேசிக்கொண்டிருக்கிறாய்?" என்கிறீர்களா? நம் மந்திரிகள் "நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் பட்ஜெட்" என்று தலைப்பில் சொல்லி அதற்கு அதிகம் தொடர்பில்லாமல் ஒரு பட்ஜெட் வெளியிடுகிறார்கள் இல்லையா? மந்திரிகளை பின்பற்றுவது மக்களின் கடமையில்லையா?
நான் கடமை மிக்க மக்களில் ஒருவன் சார். சரி, அந்த பக்கெட் கதையை மறந்து விட்டீர்கள்தானே...(ஒன்றை மற மற என்று சொன்னால் ஞாபகம் வைத்து கொள்வதும், மறக்காதே மறக்காதே என்றால் மறந்து விடுவதும் நம் இயல்பு என்பதும் உள்நோக்கம் ஏதுமில்லை என்று சொன்னால் ஏதோ உள்நோக்கம் இருக்கும் என்பதும் உங்களுக்கும் எனக்கும் தெரியாதா என்ன!)

இனி இந்த வார "pinch":

நம் பிரதமர் இந்த மூன்று குறள்களை படித்து புரிந்து கொண்டால் என்ன நினைப்பார்?

"காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்"

[முதல் வரி போல்தானே நாம் இருக்கிறோம்...ஆனாலும் இரண்டாவது வரி போல ரிசல்ட் இல்லையே!]

"வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்"

[Spectrum நடைபெறுவதற்கு முன் எனக்கு இந்த திருக்குறளை யாரும் சொல்லவில்லையே!]


"நிலத்தியல்பான் நீர்திரிந்தற்றாகும் மாந்தர்க்
கினத்தியல்ப தாகும் அறிவு"

[என்னுடைய 10 வருடங்களை 2 வரியில் புட்டு புட்டு வைத்து விட்டாரே திருவள்ளுவர்!]

திருக்குறளை நினைத்தால் புல்லரிக்கிறது இல்லையா? உலகில் எவருக்கும் அவருக்கு பொருத்தமான அர்த்தம் தருவதும், அதை இரண்டே வரியில் அடைத்து வைப்பதும் எப்படி நடந்தது? இந்த புல்லரிப்பை நமக்குள் மட்டும் பகிர்ந்து கொள்வோம். இல்லையென்றால் தற்போது சினிமா பாட்டு எழுதுபவர்கள் "குறள் போன்றது உன் குரல்; கைகளுக்கு பத்து விரல்" என்று "காலத்தை வெல்லும் காதல் பாட்டு" எழுதினாலும் எழுதி விடுவார்கள். அதோடு நில்லாமல் "Making of Thirukkural song" என்று வெளிநாட்டில் வெளியீட்டு விழா வைத்து CD release செய்தாலும் செய்வார்கள். அத்தகைய நிலை நம் திருக்குறளுக்கு வரக்கூடாது என்று வேண்டிக் கொள்வோமாக...










 
 

1 comment:

  1. என்னமோ சொல்ல வரீங்க...என்னது அது...

    ReplyDelete