/ கலி காலம்: IPL நோய்களும் அநாகரீக பேய்களும்...

Friday, April 6, 2012

IPL நோய்களும் அநாகரீக பேய்களும்...

வந்து விட்டது மற்றுமொரு IPL...Australia மைதானங்களில் பந்து எங்கிருக்கிறது என்று தடவியவர்கள் நம்மூர் கட்டாந்தரை pitchகளில் சிக்சர்களாக பறக்க விடும் IPL வந்து விட்டது. போன மாதம் வரை அவ்வாறு தடவியவர்களை தாளித்த நாமும் இப்போது தலைகால் புரியாமல் ஆரவாரம் செய்வோம். அதிலும் இப்போது ஒரு "youth icon " வேறு நமக்கு கிடைத்திருக்கிறார். அதான் சார் - சமீப காலமாக சதம் சதமாக விளாசுகிறாரே அவரேதான். ஆனால் எனக்கொரு சந்தேகம். தன்னிடம் ஆட்டம் இருக்கிறது என்பதற்காக ஒருவர் என்ன "ஆட்டம்" வேண்டுமானாலும் காட்டலாமா? சில காலம் முன் பல கோடி பேர் பார்க்கையில், தான் ஒரு தேசத்தை represent செய்கிறோம் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் ஒரு சைகை செய்தாரே அது என்ன ஆட்டம்? அதனாலென்ன அவர்தான் சதமடித்து நம் அணியை காப்பாற்றுகிறாரே அது போதுமே நமக்கு. வேறு என்ன மானம் எங்கு கப்பல் ஏறினால் என்ன? கவலையாக இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் இவருக்கு "பத்மஸ்ரீ" போன்ற பட்டங்கள் ஏதேனும் கொடுத்தாலும் கொடுத்து விடுவார்கள். பிறகு அந்த பட்டங்கள் பற்றி தெரியாதவர்கள் விசாரிக்கும் போது எளிதாக அந்த பட்டத்தின் பெருமையை அறிமுகப்படுத்தி விடலாம்...! "அதான் அந்த சைகை செய்தவருக்கு கொடுத்தார்களே அந்த பட்டம்" என்று... பட்டத்துக்கும் அதை வாங்கிய மற்ற தகுதியுள்ளோருக்கும் இதைவிட வேறு கெளரவம் இருக்க முடியுமா? ஏன் நம்மால், இவரைப்  போன்றவர்களின் ஆட்டமே நாட்டுக்கு தேவையில்லை என்று ஒதுக்க முடியவில்லை? அது சரி. நமக்குதான் வைத்தால் குடுமி எடுத்தால் மொட்டை என்றிருப்பதுதானே பழக்கம். 20  வருடங்களுக்கும் மேலாக அணியை தாங்கிப்பிடித்த டெண்டுல்கரையே சிலமாதங்கள் சதம் அடிக்க இயலவில்லை என்றவுடன் விமர்சிக்க தெரிந்தவர்கள்தானே நாம். விமர்சித்ததோடு இல்லாமல் நூறாவது சதம் அடித்தவுடன் அதே வாயால் இவரை போல உண்டா என்று தூக்கி வைப்பதும் நமக்கு கைவந்த கலைதானே. Tendulkar நூறாவது சதம் அடித்த பொழுது நடந்து கொண்ட விதத்தை பார்த்தாவது இந்த சைகைக்காரர் சிறிது கற்றுக்கொள்ளலாம்...இவர் நூறை கடக்கும் பொழுது போதும் குதியாட்டம் என்ன கூப்பாடு என்ன...லாரா அதிகபட்ச ஸ்கோர் எடுத்த போது கூட இந்த ஆட்டம் போடவில்லை. இன்றைய இளரத்தங்கள் இப்படி நடந்து கொண்டால்தான் இளரத்தம் ஆக்ரோஷம் உள்ளது என்று உலகம் நம்பும் என்று எவரேனும் இவர் போன்றவர்களின் காதுகளில் ஓதி வைத்துள்ளனரோ?

இவர் மட்டும் தனியாக இல்லை. சில வருடங்கள் முன் சக அணி வீரரையே அறைந்தாரே அவர்தான் இப்போது Mumbai Indians அணியின் முக்கிய புள்ளி. அடிவாங்கி அழுதவரும் லேசுப்பட்டவரில்லை இவர் stump பார்த்து பந்து வீசத்தவறினாலும் வார்த்தை வீச்சுக்கு குறைவில்லாதவர். இவர்களின் comedy அறைந்து அழுததோடு நிற்கவில்லை. சில மாதங்கள் கழித்து அறைந்தவரும் அழுதவரும் ஈருயிர் ஓருடலாய் ஒரு விளம்பரத்திற்கு pose வேறு கொடுத்தார்கள். எல்லாம் பணம் பண்ணுகிற வேலை சார். அந்த நிறுவனத்திற்கும் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். இவர்கள் அனைவரும் மற்றவற்றில் காட்டுகிற "விவேகத்தை" விளையாட்டில் காட்டினால் நன்றாக இருக்கும்.

முன்னர் மொஹிந்தர் அமர்நாத் என்றொரு வீரர் இருந்தார். இவர் பௌலிங் போட வரும் வேகம், ஒருவேளை இவர் பந்து வீசாமல் தூங்கி விடுவாரோ என்பது போல இருக்கும். ஆனால் இவர் எடுத்த விக்கெட்டுகள் அவ்வளவு நளினமாக இருக்கும். இன்றிருக்கும் பலமற்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் bowling விளையாடவே நாம் திணறுகிறோம் அன்று marshall போன்ற ஜாம்பவான்கள் நிறைந்த west indies பௌலிங்கை  அனாயசமாக ஹூக் செய்வார் அமர்நாத். இப்போது யார் நம் அணியில் hook  shot  எல்லாம் விளையாடுகிறார்கள்...  vengsarkar 50 அடித்தாலும் ஜீரோவில் இருப்பது போலவே இருப்பார். கவாஸ்கர் நூறு அடிக்கையில் துள்ளிக் குதித்து ஓடுவதையோ கபில்தேவ் wicket எடுத்தால் முஷ்டி முறுக்கி கூப்பாடு போடுவதையோ நாம் என்றாவது பார்த்திருக்கிறோமோ? பாவம் பிழைக்கத் தெரியாதவர்கள்...எதிர் அணியில் இருப்பவர்களை வம்புக்கு இழுத்தோ, ஓங்கி ஒரு அறை விட்டோ  ரசிகர்களை பார்த்து தரக்குறைவான செய்கை செய்தோ அடுத்த நாள் அனைத்து ஊடகங்களிலும் படத்துடன் இடம்பெறத் தெரியாதவர்கள். இவர்கள் எல்லாம் விளையாண்ட அணியில்தான் இன்று "இவர்களும்" விளையாடுகிறார்கள். "அட போங்க சார் காலத்திற்கு ஏற்றார் போல மாறுங்கள்" என்கிறீர்களா? அதுவும் சரிதான். அதான் இப்போது கிரிக்கெட் என்ற விளையாட்டே அரைகுறை ஆனதை பிரதிபலிக்கும் வகையில் நடன மங்கையர் வேறு மைதானத்தில் ஆடுகிறார்களே! கவுண்டமணி சொல்லும் "என்னப்பா இது தேள் கொட்டின குரங்கிற்கு பேய் பிடித்தாற்போல ஒரு டான்ஸ்..." ஞாபகம் வருகிறது.

இந்த IPL கூத்தில், இருக்கிறது போதாதென்று பெரும்பாலான ஆட்டங்கள் பகலிரவு ஆட்டமாம். அதனால் நமக்கென...நாம்தான் "earth hour " கொண்டாடி ஒரு மணி நேரம் பூமியை காப்பாற்றி மாபெரும் சேவை செய்து வருகிறோமே...
ஏன் சார் நாமும் இந்த அரசும் நினைத்தால் IPL போன்ற கூத்துக்கள் பகலில் மட்டுமே நடக்க வேண்டும் என்று சட்டம் போட முடியாது? ஒரு பக்கம் மின்சாரம் இல்லை என்று புலம்பல் மற்றொரு பக்கம் "earth hour " "green marathon " போன்றவற்றை சொல்லி இயற்கையின் காவலர்களாய் அக்கறை இருப்பது போல் காட்டிக்கொள்வது இன்னொரு பக்கம் இது போன்ற அதீத மின்விரயம் ஏற்படுத்தும் கேளிக்கைகளில் மூழ்கித் திளைப்பது...எப்படி சார் நம்மால் முரண்பாடுகளின் மொத்த உருவமாக சற்றும் கூச்சமில்லாமல் நடமாட முடிகிறது? பாரதி சொன்ன "நாமிருக்கும் நாடு நமதென்று அறிந்தோம் நமக்கே உரியதாம் என்று உணர்ந்தோம்" [கிடைக்கிற gapல் பாரதியாரை மேற்கோள் காட்டுவதுதான் எப்பொழுதும் popular trend] என்பதை நாம் இப்படியா புரிந்து கொண்டு முடிந்த வரை நாட்டை சின்னாப்ப்பின்னப்படுத்த வேண்டும்? ஏகப்பட்ட சிறு தொழில்கள் மின்சாரம் இல்லாமல் முடங்கிக் கிடந்தால் என்ன? அப்படித் தவிப்பவர்களும் வயிற்றில் ஈரத்துண்டு கட்டிக்கொண்டு  IPL பார்க்க வேண்டியதுதான். எல்லாவற்றிலும் இலவசம் வந்து விட்டதே ஈரத்துண்டும் இலவசமாக தருவோம் என்று சொன்னாலும் ஆச்சர்யபடுவதற்க்கில்லை...நாமும் நம் பாதி நாளை  IPL அரக்கன் தின்னக் கொடுத்து விட்டு, ராணுவத்திலும் ஊழல், மணல் கொள்ளையால் நம் ஆறுகள் அனைத்தும் பாழாய் போவது... இவை எது பற்றியும் கவலை இன்றி சோபாவில் சாய்ந்து நொறுக்குத்தீனி தின்றபடி இரண்டு மாத IPL கூத்தில் பங்கு பெறுவோம். சரி விடுங்கள்...இன்று இரவு நம் "youth icon" virat kohli விளையாடும் ஆட்டம் பார்க்க வேண்டியிருப்பதால் இந்த பதிவை இத்துடன் முடித்து கொள்வோம். சும்மா சொல்லக்கூடாது சார் இவர் அடிக்கும் கவர் டிரைவ், off drives கண்களுக்கு விருந்து தான். மனைவி அற்புதமாய் பஜ்ஜி செய்து வைத்திருக்கிறார் - சுவைத்து கொண்டே ஆட்டம் பார்க்க...மணல் கொள்ளையாவது விரல் சைகையாவது...IPL ரசிப்போம் சார்...
இந்த வார pinch :

பாரதியை போல் நம் மண்டைக்கு ஏறும்படி பாடியவர் எவரேனும் உண்டோ? ஆனால் அவர், நாகரீகம் கருதி ஒன்றை சொல்லவில்லை என்று தோன்றுகிறது -அதாவது - "அற்பப்  பதர்களே.. ஒரு கண்ணாடியை முன்னால் வைத்து உங்கள் முகத்தை நீங்களே பார்த்தபடி என் கவிதைகளை படியுங்கள்" என்று சொல்லாமல் விட்டு விட்டாரா அல்லது நமக்கு எப்படிச்  சொன்னாலும் எருமை மாட்டின் மேல் பெய்த மழை போலத்தான் இருக்கும் என்று நினைத்து சொல்லாமல் விட்டு விட்டாரா? sample பார்ப்போம்:

"ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்றுமில்லா
மாக்களுக்கோர் கணமும் - கிளியே
வாழத் தகுதியுண்டோ?"

"நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத்
தேட்டில் விருப்பங் கொண்டே - கிளியே
சிறுமை யடைவாரடி!"

"பஞ்சத்தும் நோய்களிலும் பாரதர் புழுக்கள்போல்
துஞ்சத்தம் கண்ணாற் கண்டும் - கிளியே
சோம்பிக் கிடப்பாரடி!"

"பாரத ஜனங்களின் தற்கால நிலைமை" என்று நூறு வருடங்களுக்கு முன் ("தற்கால" என்று எப்போதும் பொருந்தும் தலைப்பை கவனியுங்கள்) பாடிய பாடலின் சில வரிகளை பாருங்கள்:

"எண்ணிலா நோயுடையார் - இவர்
எழுந்து நடப்பதற்கு வலிமையிலார்
கண்ணில்லா குழந்தைகள் போல் - பிறர்
காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார்;
நண்ணிய பெருங்கலைகள் - பத்து
நாலாயிரங்கோடி நயந்து நின்ற
புண்ணிய நாட்டினிலே - இவர்
பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்"

நம் சாயங்களை அடித்துத் துவைத்து அப்பட்டமாக காயப்போடும் இது போன்ற பாடல்களை படிக்கையில் எனக்கு கண்ணாடியை பார்த்தால் அருவருப்பாக இருக்கிறது. உங்களுக்கு?

3 comments:

  1. நல்ல பதிவு,,, உங்கள் எழுத்தை ரொம்பவே ரசித்தேன்...

    ReplyDelete
  2. கிரிக்கெட் மோகத்தினால் உலக அரங்கில் ஒலிம்பிக் நம் பதக்கங்களை இழந்து கொண்டிருக்கிறோம்.

    ReplyDelete