/ கலி காலம்: சிங்காரச் சென்னையும் வெங்காய தோசையும்...

Sunday, March 25, 2012

சிங்காரச் சென்னையும் வெங்காய தோசையும்...

கொளுத்தும் கோடையில் சென்னைக்கு போக வேண்டும் என்ற நினைப்பே பச்சை மிளகாய் கடித்த நாக்கு போல சுளீர் என்று இருக்கும். சென்ற முறை நான் பச்சை மிளகாய் கடித்த அனுபவத்தை கேளுங்கள்...central stationஇல் இறங்கியவுடனேயே ஆங்காங்கே "ஸ்" "ஸ்" என்று சத்தம்...என்னடா இது guindy snake park எப்போது சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு மாறியது என்று யோசித்தேன். இது என்ன யோசனை என்கிறீர்களா? ஏன் சார், "அவரும்" "இவரும்" தலைமை செயலகத்தையே மாற்றி மாற்றி விளையாடலாம் என்றால் snake park எந்த மூலைக்கு? தள்ளி கேட்டுக்கொண்டிருந்த சத்தங்களில் ஒன்று பக்கத்திலேயே கேட்டது. வேறொன்றுமில்லை... பலர் போல நானும் வெய்யில் புழுக்கம் தாளாமல் "ஸ்" விட்டுக் கொண்டிருந்தேன்...

பாம்பு சத்தத்துடன்  பசியின் சத்தமும் வந்தது...சரியென்று ஸ்டேஷன் உள்ளேயே இருக்கும் அந்த ஹோட்டலுக்கு சென்று குளுகுளு அறையில் அமர்ந்தேன். சாதா தோசை சொல்லி விட்டு அக்கம் பக்கம் பார்த்தால் சிலர் விக்கிக் கொண்டிருந்தார்கள். காரம் அதிகம் போலும் என்று நினைத்து கொண்டே திரும்பிய என் கண்ணில் பட்ட விலை பட்டியல் பார்த்தவுடன் எனக்கு சாப்பிடும் முன்னரே விக்கல் வந்து விட்டது!
ஒரு தோசை 60 ரூபாயாம்! விக்கல் நின்று விட்டது. எப்படி என்கிறீர்களா? ஒரு அதிர்ச்சியை போக்க இன்னொரு அதிர்ச்சி உதவும் இல்லையா? தோசை விலை பார்த்து வந்த விக்கல் இட்லி விலை பார்த்ததும் போய் விட்டது! இப்போது தெளிவாக விளங்கியது எனக்கு. இந்த ஹோட்டல் சர்வர் கூட எப்படி "technology" உபயோகப்படுத்தி ஆர்டர் எடுக்கிறார் என்று - இவர்கள் போட்டிருக்கும் விலைக்கு சர்வர்  i-phone மூலம் ஆர்டர் எடுத்தால் கூட ஆச்சர்யபடுவதற்கில்லை...

எதிர் table ஒன்றில் பார்த்ததுமே பன்னாட்டு கம்பெனி வாசனை அடிக்கும் "tip top" நபர் ஒருவர் அமர்ந்திருந்தார்...அவர் தோசை பிரியர் என்பது,  சுற்றியிருக்கும்  வயிறுகளுக்குள் போய் கொண்டிருக்கும் வெவ்வேறு வகை தோசைகளை அவர் பார்க்கும் பார்வையிலேயே தெரிந்தது. நீ ஏன் அவரை பார்க்கிறாய் என்கிறீர்களா? என்ன இப்படி கேட்டு விட்டீர்கள்? நம் மரபில் முக்கியமானது ஹோட்டலில் பக்கத்தில் இருப்பவர்கள் என்ன சாபிடுகிறார்கள் என்று கவனிப்பது இல்லையா சார்?
நமக்குத்தான் எத்தனை பெருமைமிகு மரபுகள்? Q வரிசைகளில்  "கொஞ்சம் urgent" என்று இடையில் நுழைய பார்ப்பது..., bus, train [இப்போது நிறைய பேர் வெளிநாடு வேறு பொய் வருவதால் விமானத்தையும் சேர்க்க வேண்டும்] இவற்றில் தூங்குவதோடு மட்டுமின்றி பக்கத்தில் இருப்பவர் தோளில் சாய்ந்து விழுவது...,இளநீர் முழுதும் குடித்து விட்டு "அவ்வளவு taste இல்லை" என்பது [கடைக்காரர் என்ன சார் செய்வார் இளநீர் அப்படியிருந்தால்?] ...தர்மம் கேட்பவர்களிடம் "சில்லறை இல்லை" என்று சொல்வது [இதில் கூட போலித்தனமா? கொடுக்க மனமில்லை என்று சொல்ல வேண்டியதுதானே...] என்று பட்டியல் எழுதிக் கொண்டே போகலாம்...நம்மவர்கள் கில்லாடிகள். உலக மாற்றதிற்கேற்ப மரபிலும் variety காட்டுவார்கள். அந்த வகையில், புதிய மரபுகளாக பக்கத்தில் உள்ளவர் மொபைல் phoneஐ எட்டிப் பார்ப்பது..., காதில் blue tooth அல்லது mp3 player மாட்டிக் கொண்டு தங்களுக்குள் கொப்பள்ளிக்கும் இசை ஊற்றை சாலையில் போகும் வரும் அனைவர் மேலும் தெளிக்கும்படி நடக்கும் மரபு. இந்த மரபு list  எல்லாவற்றையும் நம்மால் கடைபிடிக்க முடியாது என்பதால் ஓட்டல் மரபை மட்டும் காப்பாற்றி வருகிறேன். சரிதானே?
 வந்து விட்டது தோசை - அவருக்குதான்.  இரண்டு spoons எடுத்தார் மனிதர். தோசையை சிறு துண்டாக வெட்ட ஆரம்பித்தார். தோசைக்கு எதுக்கு சார் spoon? இதை அவரிடம் கேட்க முடியுமா? இப்போதெல்லாம் வாயைத் திறந்தாலே "மனித உரிமை மீறல்" வேறு வந்து விடுகிறது.  ஏதோ நம்மால் முடிந்தது, திராணியற்ற அந்த தோசையிடமே நன்றாய்  நான்கு கேள்விகள் கேட்கவேண்டியதுதான்...
என்னப்பா தோசை... உன்னை நாங்கள் காலம் காலமாக நாங்கள் எப்படி அலுங்காமல் குலுங்காமல் எடுத்து சாம்பார் சட்னியில் குளிக்க  வைத்து உன் பிறவிப் பயன் கூட்டுகிறோம் உன்னை அவர் இப்படி சிதைத்துக் கொண்டிருக்கிறார் நீ பேசாமல் இருக்கிறாயே என்று கேட்டேன்.
"என்ன சார்? தோசை எப்படி பேசும்? லாஜிக் இல்லாமல் இருக்கிறதே" என்கிறீர்களா? சமீபத்தில் கோவாவில் ஆறே இல்லாத ஊரில் அரசு "ஆற்று பாலம்" கட்டியிருக்கிறது... தான் நியமித்த, தன் கட்சி மந்திரி போடும் budget , அந்தத் தலைவராலேயே  எதிர்க்கப்படுகிறது... உள்துறை மந்திரி தனக்கு மறதி அதிகம் என்கிறார். இப்படிப்பட்ட logic மிகுந்த பெருமைமிகு தேசத்தில் தோசை பேசாதா சார்?
தோசை என்ன சொல்லியது தெரியுமா? "நான் போராடி தோற்பவன். ஒவ்வொரு முறை spoon என்னை எடுக்கும் பொழுது அதிலிருந்து பெரும்பாலும் குதித்து விடுவேன் அப்படியும் பலமுறை முயன்றே என் ஒரு pieceஐ  அவரால் உண்ண முடியும் தெரியுமா?" என்றது தோசை!
தோசை சொல்லியபடியே அவரும் ஒரு நிமிடம் முயன்று ஒரு விள்ளல் வெற்றி பெற்றிருந்தார்...அடுத்து அவர் லட்டு ஆர்டர் செய்து விடுவாரோ என்று நான் பயந்தபடி இருந்தேன். நல்ல வேளை அப்படி ஏதும் நடக்கவில்லை.

என் தோசைக்கு காத்திருக்கும் நேரத்தில், பக்கத்தில் யாரோ படித்து விட்டு வைத்து போன "தினத்தந்தி" யில் "சென்னையில் இனி குப்பைதொட்டியில் கூட குப்பையை பார்க்க முடியாது" என்று சொல்லி புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்தார் saidhai duraisamy. இவர் படித்தவர், சமூக அக்கறை கொண்டவர் என்பது எல்லோருக்கும் தெரியும். எப்போது இவர் கவிதை உள்ளம் கொண்டவரானார் சார்? அதான் பாரதிதாசன், கண்ணதாசன், வைரமுத்து போன்றோர் எல்லாம் "தீயே உன்னை தீ சுடாதோ" "சாவே உனக்கு சாவு வராதோ" "வறுமைக்கு வறுமையில்லை" என்று பாடியதைப் போல இவர் "குப்பைத்தொட்டியிலும்  குப்பையில்லை" என்று சொன்னது கவிதை தானே? [எனக்கு ஒரு சந்தேகம். நம் பழக்கமோ இருக்கும் இடத்திலிருந்தே குப்பையை தூக்கி எறிவது. அது தொட்டிக்குள் விழுந்தால் தெருவின் அதிர்ஷ்டம். எவர் தலையிலேனும் விழுந்தால் அவர் துரதிர்ஷ்டம். இரண்டைப் பற்றியும் நமக்கு அக்கறை இல்லை. ஒரு வேளை குப்பைத்தொட்டி தவிர மற்ற இடத்தில் எல்லாம் குப்பையை  கொட்டி, சைதை துரைசாமி கனவை தப்பர்த்தம் செய்து கொள்வோமோ?]

என் தோசை வந்து விட்டது. சரியாக விள்ளலிட்டால் 10 கூட தேறாது - அதாவது ஒரு விள்ளல் ஆறு ரூபாய்! அதை பற்றியெல்லாம் யார் சார் கவலைப் படுகிறார்கள்? அரை மணி நேரத்தில் 50-60 தோசை ஆர்டர் போயிருக்கும். இப்படிப்பட்ட பகல் கொள்ளை ஹோட்டல்களில் தான் சார் கூட்டம் கும்மியடிக்கிறது... என்ன செய்ய?..."ரொம்ப பேசுகிறாயே நீ என்ன செய்தாய்?" என்கிறீர்களா? சாதா தோசை சாப்பிட்ட பின் ஒரு வெங்காய தோசை ஆர்டர் செய்தேன். எண்பது  ரூபாய்தான். பேச்சொன்றும் செயலொன்றுமாய் இருக்கும் என்னைப் பார்த்து வெங்காயத்திற்கு கோபம் போலும். நான் எடுக்கும் ஒவ்வொரு  விள்ளலிலும் வெங்காயங்கள் தோசையிலிருந்து வெளிநடப்பு செய்து தட்டில் விழுந்து எதிர்ப்பு காட்டின. பக்கத்திலிருந்த spoon உதவியுடன் அவற்றை கபளீகரம் செய்தேன். முன்னர் சொன்ன  "ஸ்பூன்" தோசைக்காரர் என்னையே பார்ப்பது போல் இருந்தது. கவுண்டமணி ஸ்டைலில் "கலி காலத்தில் இதெல்லாம் சகஜமப்பா..." என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டே நடையைக் கட்டினேன். வெங்காய தோசை உண்டபின் வந்த ஏப்பம் நன்றாக இருந்தது. சாதாரண ஏப்பம் இல்லை சார். எண்பது ரூபாய் ஏப்பம்! நன்றாகத்தானே இருந்தாகே வேண்டும்....

இந்த வார pinch:
தற்போது டிவி சேனல் ஒன்றில் "பொது அறிவு" நிகழ்ச்சி ஒன்று பரபரப்பாக பார்க்கப்படுகிறது. அதில் "சிலப்பதிகாரம்" பற்றி ஒருவரிடம் நடத்துனர் கேட்கிறார். "ஒரு பழைய TAMIL book" என்று தெரியும் என்கிறார் பதில் சொல்பவர். வேதனை இந்த பதிலோடு நிற்கவில்லை.
அரங்கில் இருப்பவர்கள் ஒரு நகைச்சுவை கேட்டது போல் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். கொடுமையிலும் கொடுமை. அதனாலென்ன நமக்குத்தான் கொலைவெறி பாடல் போல பலவெறி பாடல்கள் வந்து கொண்டே இருக்கின்றனவே கேட்டு புளுகாங்கிதம் அடைய...

ஆயிரம் ஆண்டுகள் ஆயினும், வாழ்க்கையை எப்படி வாழலாம் என்று ஆணி அடித்தால் போல் சொல்லும் என்றைக்கும் பொருந்தும் சிலம்பில் வரும் ஒரு பாடலின் சில வரிகளை பாருங்கள். பல வார்த்தைகளுக்கு விளக்கமே தேவையில்லை. இதில் ஏதேனும் ஒன்றையேனும் நம்மால் வாழ்க்கை முழுதும் தாங்கிப் பிடிக்க முடியுமா? எல்லாவற்றையும் சொல்லிவிட்டு பாடலின் இறுதி வரிகளில் வருகிறது "குட்டு" - இவையனைத்தும் இவ்வுலகத்தில் வாழும் நீங்கள் அடுத்து செல்லப்போகும் தேசத்திற்கும் உதவுமாம் !

பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்;
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர் பேணுமின்;
பொய்யுரை அஞ்சுமின்; புறம்சொல் போற்றுமின்;
தானம் செய்யுமின்; தவம்பல தாங்குமின்;
செய்நன்றி கொல்லன்மின்; தீநட்பு இகழ்மின்;
அறவோர் அவைகளம் அகலாது அணுகுமின்; (பெரியவர்களை சேர்ந்திருங்கள்)
பிறவோர் அவைக்களம் பிழைத்தும் பெயர்மின் (தப்பித்தவறி கூட குணத்தில் சிரியவர்களுடன் சேர்ந்து விடாதீர்கள்)
பிறர்மனை அஞ்சுமின்; பிழை உயிர் ஓம்புமின் (துன்பப்படும் உயிர்களுக்கு உதவுங்கள்)
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்; (பயனற்ற பேச்சுக்களை விடுங்கள்)
செல்லும் தேஎத்துக்கு (தேசத்துக்கு) உறுதுணை தேடுமின்;
மல்லல் மாஞாலத்து   வாழ்வீர் ஈங்குஎன்.

   

2 comments:

  1. ரொம்ப நல்லா இருக்கு..உங்க நடை..வாழ்த்துகள்

    ReplyDelete
  2. தோசை சாம்பாருக்குள் முங்கி எழுவதையெல்லாம் ருசிக்கவும் ரசிக்கவும் ரசனை வேண்டும் சார்:)

    ReplyDelete