/ கலி காலம்: பன்னீர் சோடாவும் பச்சைத் தமிழரும்...

Friday, March 16, 2012

பன்னீர் சோடாவும் பச்சைத் தமிழரும்...

சமீபத்தில் நானும் என் மனைவியும் எங்கள் சொந்த ஊரும், வளர்ச்சியின்றி நெருக்கடியில் நொந்த ஊருமான மதுரைக்கு சென்றிருந்தோம். மதுரைக்கு செல்லும் பொழுதெல்லாம் மீனாட்சியை [மதுரை மக்கள் மீனாட்சி அம்மனை தங்கள் உறவுக்காரப் பெண்  போல் மீனாட்சி என்றுதான் அழைப்பர்] பரஸ்பரம் குசலம் விசாரிக்க வேண்டும் என்பது என் மனைவியின் அவா. பிறகு கோபுர வாசலுக்கு எதிர்புறம் உள்ள பழரச கடையில் பன்னீர் சோடா குடிக்க வேண்டும் என்பது என் அவா. நான் செல்லும் ஊர்களிலெல்லாம் பன்னீர் சோடா தேடுவதை பார்த்து என் மனைவி "உங்களுக்காகத்தான் இன்னும் இதன் தயாரிப்பே நடைபெறுகிறது" என்று நகைத்தாலும் அவரும் இதை குடிக்கத் தவறுவதில்லை. நாகரீகக்  குதிரை நாலு கால் பாய்ச்சலில் பறக்கும் போது பன்னீர் சோடா போன்றவை பதுங்கு குழியில் கிடப்பதை தவிர வழியுண்டோ? இப்போதெல்லாம் சென்னையில் சைதாபேட்டை பேருந்து நிலையம் அருகிலும் மயிலாப்பூர் தெப்பக் குளம் எதிரிலும் உள்ள கடையிலுமே எப்போதும் "stock" இருக்கிறது. மற்ற இடங்களில் கிடைத்தால் "luck".
நாம் பன்னீர் சோடா கேட்டவுடன் கடைக்காரருக்கு தோன்றும் முகபாவங்கள் பல வகைப்படும். சிலர் "இந்த வஸ்துவை குடிக்கும் ஜந்துக்கள் இன்றும் உள்ளனவா" என்பது போல பார்ப்பர். சிலர், "இந்த மாசத்திற்கு ஒன்றாவது விற்றதே" என்பது போல வேகமாக எடுத்துத் தருவர்.  சில கடைகளில் பன்னீர் சோடா இல்லை வெறும் சோடா வேண்டுமா என்பர். கல்கண்டுக்கும் கல்லுக்கும் என்ன வித்தியாசமோ அதுதான் மேற்சொன்ன இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்று தெரியாதவர்கள் அவர்கள். இப்படிப்பட்ட பன்னீர் சோடாவை குடித்தபடி நின்று கொண்டிருந்தோம் அன்று...


மதுரையின் பிரசித்தி பெற்ற பொறியியல் கல்லூரியில் படிப்பை முடிக்கும் தருவாயில் உள்ள ஒரு மாணவர் பட்டாளம் கடையில் கூடியது. சமூக பேதங்களை நாம் சரி செய்ய முயல்கிறோமோ இல்லையோ மொழியில் உச்சரிப்பு பேதங்களை களையும் அரும்பணி நாம் நிறையவே செய்கிறோம். எப்படி என்கிறீர்களா? அதான் sir, இந்த ழ,ல போன்றவற்றின் மேல் புல்டோசர் விட்டு ஏற்றி அவற்றின் வித்தியாசம் தெரியாமல் சமன் செய்யும் திருப்பணி. இதை அக்குழுவில் பலர் திறம்பட செய்தனர். இப்போதெல்லாம் நமக்கு எல்லாவற்றிலும் "brand" வேண்டும். அதன்படி பலவகை "brand" பானங்கள் அந்த கூட்டத்தின் கைகளுக்கும் போயிற்று. அதில் என்னை போல் ஒரு அரைகுறை பழம்பஞ்சாங்கம் மட்டும் பன்னீர் சோடா வாங்க, கொதித்து போனார் அவரின் சகா. "how much is this machan?" என்று கேட்க "six bucks machan" என்றார் என் சோடா நண்பர் [இப்பொழுதெல்லாம் "ருபாய்" போய் "rupees" போய் "bucks" என்று சொல்வதுதான் நமக்கு அழகு தெரியுமோ?]. "THEN it won't be good da" என்று ஒரே வரியில் ஒரு மாபெரும் சித்தாந்தத்தை உதிர்த்தார் புல்டோசர் நண்பர். அதாவது "விலை குறைந்த எதுவும் நன்றாக இராது" என்பதே கருத்து. நம் இன்றைய வாழ்க்கை முறையை இதை விட புட்டு புட்டு வைக்க முடியுமா?


வட்டையில் காபி குடித்தால் என்னாவது? ஐம்பது ரூபாய் கொடுத்து ஆறிப்போன காபியை கண்ணாடி பளபளக்கும் கடைக்குள் கதை பேசியபடி குடிதால்தானே ஒரு சுகம்? வேக வைத்த மைதா மாவை, உட்கார்ந்தால் முதுகு வலிக்கும் உயரமான இருக்கையில்  முன்னூறு ருபாய் கொடுத்து சாபிட்டால்தானே சம்பாதித்த பணம் செரிக்கும்! உணவை விடுங்கள்...diabetes test எடுக்க ஐம்பது ரூபாய் என்றால் நாம் அந்த ஆஸ்பத்திரியில் எடுப்போமா? இவர்கள் சரியாக எடுப்பார்களோ என்று சந்தேகம் வந்து விடும். செயற்கை புன்சிரிப்புடன் ஒரு nurse நுழைவு வாயிலில் இருந்து நம்முடன் வந்து வழியனுப்பும் வரை உடனிருந்து கவனிக்கும் corporate hospital "கவனிப்பில்", அதே டெஸ்டுக்கு இருநூறு ரூபாயாவது கொடுத்தால்தானே நமக்கு test சரியாக எடுக்கப்படுகிறது என்று நம்பிக்கை! முதுகு வலி என்று போனால் doctor "தினம் யோகாசனம் செய்யுங்கள்" என்றால் எவ்வளவு ஏமாற்றம்! அவர் நீளமான மருந்து list கொடுத்து சில டெஸ்டுகள் செய்யச் சொன்னால்தான் நமக்கு திருப்தி!


எல்லாவற்றிலும் நமக்கு "அதிகம்" வேண்டும் சார் அதிகம் வேண்டும்..."சோத்துக்  கத்தாழை" என்றால் "ச்சே ச்சே" என்போம். "Aloe vera lotion" உங்கள் சருமத்தை பாதுகாக்கும்  என்று தொலைக்காட்சி சொன்னால் அடுத்த வாரம் நாம் shopping mallல் தள்ளிக்கொண்டு போகும் trolley ஒன்றில் அது அமர்ந்திருக்கும். நம் பாட்டிமார்கள் சொல்லும் குறிப்புகளை காது கொடுத்து கேட்காத நாம், "beauty and naturopathy" நிலையங்களில் package (discount உண்டு sir) எடுத்து member ஆனால்தான் பெருமிதம்.  

பன்னீர் சோடா காலியானது தெரியாமல் அதன் சுவையில் ஊறி, உறிஞ்சிக்கொண்டிருந்த என்னைத் தட்டி "போதும் போகலாம்" என்றார் மனைவி. வாகன நெரிசல் மிகுந்த சாலையை கடக்கையில் "காபிப்பொடி தீர்ந்து போச்சு வாங்கிட்டு போகணும்" என்றார்.  எதிரிலேயே இருந்தது கடை. பத்து வரிகளுக்கு முன்னால் "ஆறிப்போன காப்பி" என்று  நக்கலடித்தேனே அதே "brand" கடைதான் sir. என்ன செய்வது சொல்லுங்கள்? வறட்டு சித்தாந்தம் பேசுவதற்கு நன்றாக இருக்கிறது. நடைமுறை வாழ்க்கையில் அவை நம்மை நட்டாற்றில் விட்டு விடும் இல்லையா? எனவே எனது முந்தைய "brand" கேலிகளை ஞாபகமாக மறந்து விட்டு அந்த கடையிலேயேகாபிப்பொடி வாங்கி வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்  [நான் பள்ளி சென்ற வருடங்களில் அதே இடத்தில "நரசுஸ் காபி" இருந்தது. கல்லாவில் அமர்ந்திருக்கும் கதர் சட்டை பெரியவர் "என்ன rank வாங்கற தம்பி" என்று தவறாமல் கேட்பார்.] . உடனே ஒரு கொள்கை முடிவு எடுத்து விட்டேன். ஒரு பொருளை பயன்படுத்தும் போதோ அது நமக்கு பயன்படும்போதோ அப்போதைக்கு அதை குத்தமா கேலியோ சொல்லக்க்கூடாது என்று...  "என்ன  கொள்கை இது? வேண்டும் பொழுது மாற்றி கொள்வது அநியாயமாக இருக்கிறதே?" என்று கேட்கிறீர்களா? முன்னர் எல்லாம் இந்த மாதிரி இடத்துக்கும் நேரத்துக்கும் தகுந்த மாதிரி 
மா(ற்)றிக்கொண்டே  இருந்தால் "பச்சோந்தி" "காரியவாதி" என்று சொல்வார்கள். ஆனால் இப்பொழுது  இதை "பக்குவம்" என்கிறார்கள்! சரி நாமும் சற்று  பக்குவமாய் இருப்போம் என்றுதான்...உத்தமமான கொள்கைதானே sir?

இந்த பதிவை எப்படி முடிக்கலாம்? கைவசம் "punch" ஏதேனும் இருக்கிறதா என்று பார்ப்போம் - ஏனென்றால் இப்போதெல்லாம் எல்லாரும் எல்லாவற்றிலும் "punch" இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். நம் போன்ற சாமானியர்கள் "punch" தர முடியுமா? கீழே இருப்பதில் "punch" இல்லையென்றாலும் "pinch" இருக்கிறதா என்று பாருங்கள்...

நம்மை அழுத்தும் நுகர்வு கலாச்சாரம் ஒரு பக்கம், எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழலும் கலப்படமும் மறுபக்கம். இவற்றினிடையே சகிப்புத்தன்மை நிறைய பெற்று "வேரின் பச்சை" போல அடி மனதில் பழைய புதையல்களை நினைத்து வாழும் நம்மை போன்றவர்களுக்கு "நமக்கு நாமே" [சரியாக படித்து விடுங்கள்...கொஞ்சம் பிசகினால் "நமக்கு நாமமே" என்றாகி விடப்போகிறது!]  திட்டத்தின் அடிப்படையில் "பச்சைத் தமிழன்" பட்டம் கொடுத்து கொள்வது சரிதானே?  

சில வாரங்கள் முன்  நாஞ்சில் நாடனின் "பனுவல் போற்றுதும்" படிக்கையில் அதில் ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான "சூளாமணி" நூலிலிருந்து ஒரு பாடல்  சொல்லியிருந்தார்...அது:

ஆனை துரப்ப அரவு உறை ஆழ்குழி
நாநவிர் பற்றுபு நாளும் ஒருவன் ஓர்
தேனின் அழிதுளி நக்கும் திறத்தது
மானுடன் இன்பம் மதித்தனை கொள்நீ

அதாவது, ஒருவனை யானை துரத்துகிறது, அதிலிருந்து தப்பிக்க ஓடி வந்தால் எதிரே பாழுங்கிணறு அதிலோ பாம்புகள். யானையிடம் மிதிபடுவதா பாம்புகளிடம் கடிபடுவதா? இரண்டுக்குமிடையில் ஒரு புல்புதரை பற்றி கொண்டு யோசிக்கையில் பக்கத்திலிருக்கும் மரத்தில் உள்ள தேன்கூட்டிலிருந்து சொட்டும் தேனை நக்கும் விருப்பமும் தோன்றுகிறதாம்... இதுதான் வாழ்க்கையாம்...இதை இன்றைய நம் வாழ்க்கை சூழலுக்கு பொருத்திப்  பாருங்கள்!
   

8 comments:

 1. Suriyanarayanan and VardhiniMarch 18, 2012 at 3:46 AM

  குமரன் - மிகவும் நன்றாக இருக்கிறது உங்கள் தமிழ் நடை. வாழ்த்துக்கள், அடுத்த பதிப்புக்கு காத்திருக்கிறோம். - நாராயணன் & வர்தினி.

  ReplyDelete
 2. Rightly said Kumaran. I've heard an example told by one of my grandfathers about human mentality - simple thing - You wait for a bus, go all around it to put a towel to get a seat.. If you accomplish that, you are feeling elated, but after you sit, you think, may be a window seat would have been better, may be if I had got a seat in the front, it would have been better etc., You being seated is already taken for granted....
  Also, this reminds me of the quote by Dalai Lama "Man, because he sacrifices his health in order to make money.
  Then he sacrifices money to recuperate his health.
  And then he is so anxious about the future that he does not enjoy the present;
  the result being that he does not live in the present or the future;
  he lives as if he is never going to die, and then he dies having never really lived."

  ReplyDelete
 3. பதிவும் அருமை. பின்னூட்டங்களும் அருமை.
  உங்களது பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  மனப்பூர்வ வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. super... panneer soda.. madurai... ! santhikkalaam..

  ReplyDelete
 5. அப்புறம் என்ன ..பன்னீர் சோடா குடிச்சீங்களா இல்லையா? எனக்கும் இதே ஆதங்கம் உண்டு..நான் கோலி சோடா பிரியன்..இப்போதெல்லாம் அது கிடைப்பதில்லை..அப்படியே கிடைத்தாலும் அதை வாங்கி குடிக்க மனம் இருப்பதில்லை...யாருமே அதை சீண்டாத போது..அது எப்போ தயாரித்து இருப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது.சுகாதாரம் மேல் அக்கறை வருகிறது...

  ReplyDelete
 6. சார், நான் ஒரு பழஜூஸ் பைத்தியம். மீனாட்சி கோவிலுக்குள்ள நுழையர்துக்கு முன்னாடி பழஜூஸ் கடை எங்க இருக்கு?னு நோட்டம் விடர ஆள். :)) போஸ்ட் சூப்பர்!!

  ReplyDelete
 7. very good writing style...

  mano

  ReplyDelete
 8. நாலாவது கம்பார்ட்மென்ட்ல துவங்கி மெல்ல நோட்டம் விட்டுட்டு வருகிறேன்.புதியவைகள் நம்மை ஆக்கிரமிப்பதில் தவறில்லை.ஆனால் பழமைகளை விட்டு விடுவது மனசுக்கு வலியைத்தான் தருகிறது.

  இன்னும் தொடர்வேன்.நன்றி.

  ReplyDelete