/ கலி காலம்: ரயிலில் பயணம் செய்வது எப்படி - பகுதி 2

Sunday, April 29, 2012

ரயிலில் பயணம் செய்வது எப்படி - பகுதி 2

காலையில் காபி நாக்கை நனைக்கா விட்டால் நம்மில் பல பேருக்கு அந்த நாளே நகராமல் நின்று விடும். இத்தகைய மக்களை மகிழ்விக்க ரயில்வே இருவித சுவைகளில் காபி தயாரித்து விற்கிறது. முதல் வகை காபி, வெந்நீரில் வெல்லம் கரைத்தது போல இருக்கும். மற்றொரு வகை, தண்ணீரில்  காபிப் பொடி தூவியது போல மிதக்கும். "பால் எங்கே?" என்று நாம் சண்டை போடக்கூடாது என்பதற்காக, உணவிற்கு உப்பு போல் நீரில் பாலை பெயரளவில் சேர்த்து "வெளுப்பாய்" காபி தரும் ரயில்வே யுக்திகளை பாராட்டுவோம்! இது போன்ற காபியையும் அரை மணி நேரம் அறுசுவை விரிந்து போல் ரசித்து உறிஞ்சும் மனிதர்கள் உண்டு. இன்னும் சிலர் சில்லறை இல்லாமல் 50 , 100 ரூபாய் நோட்டுக்களை காப்பி விற்பவரிடம் நீட்டுவர். காபி விற்பவர் "வரும் போது தருகிறேன்" என்று அடுத்த பெட்டிக்கு போய் விடுவார். காபிக் காரர் வருகையை எதிர்பார்த்து, நடை வழியை எட்டிப்பார்த்து எட்டிப்பார்த்து பயணம் முழுவதையும் "சில்லறை tension " மூலம் வீனடிப்பர் சிலர். அதில் நாக்கு வன்மை உள்ள சிலர் நேரம் கழித்து மீத சில்லறை கொடுக்க வரும் காப்பிக்காரரை "எவ்வளவு நேரம்..." என்று எரிச்சல் காட்டுவதும், பதிலுக்கு, காப்பி விற்றவர்,  "உங்க பணத்தை எடுத்துகிட்டு நாங்க என்ன ரயிலேந்து தப்பிச்சா ஒடப்போறோம்" என்று சொல்வதும் "ஆஹா ஒரு சண்டை பார்த்து பொழுது போக்க வாய்ப்பு இருக்கும் போலிருக்கே" என்று வெறும் வாயில் அவல் தேடும் சக பிரயாணிகள் ஆர்வமாய் காதைத் தீட்டுவதும்...நம் மக்கள் நம் மக்கள்தான்...இவற்றை ரசித்தபடி நாமும் ஒரு கப் வெந்நீர் 5 ருபாய் கொடுத்து குடித்தாயிற்று.
இனி நம் பெட்டியில் உலவும் மாந்தர் ரகங்களை சற்று கவனிப்போம்...

பல்வேறு சைஸ்களில் பல்லைக் காட்டிக்கொண்டிருக்கும் பாக்கெட்டுகளுக்கு இடையில், போனால் போகிறதென்று சிறிதளவு துணி தைத்து pant / drawer என்ற பெயரில் அணிந்து கொண்டு, இளமையின் இறுமாப்புடன் இருபதுகளில் இருக்கும் இளைஞர்கள், பெட்டியின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு போய் வருவார்கள். தின்னமான நடை போடும் இவர்கள், இளம்பெண்கள் இருக்கும் இருக்கைகளை கடக்கையில் மட்டும் அன்னம்  போல நடை போடுவார்கள். இவர்கள் t-shirt, baniyan வாங்கும் கடைகளில் வாசகங்கள் print செய்யப்படாத துணிகளே தட்டுப்படாதா சார்?
இப்படித்தான் சமீபத்தில் ஒரு இரவு நேர ரயில் பயணத்தில், "Am a human bomb" என்ற வாசகம் பொறிக்கப்பட்ட baniyan (மன்னிக்கவும். இதை "round neck tee" என்று சொல்லி விடுவது உத்தமம்) போட்டுக்கொண்டு ஒருவர் பயணம் செய்ய, என்னைப்   போல பலரும், பேசாமல் டிக்கெட்டை cancel செய்து விட்டு பேருந்தில் போயிருக்கலாமோ என்ற கிலியில் அமர்ந்திருந்தனர்.நல்லா கிளப்பறாய்ங்கப்பா பீதியை....(நன்றி: வடிவேலு). அதில் ஒரு முதியவர் இரவு முழுவதும் அவ்வப்பொழுது "human bomb "யை   ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்ததில் எப்படியிருந்த தேசம் இப்படி ஆகிவிட்டதே என்ற ஆதங்கம் தெரிந்தது.
வெய்யிலின் புழுக்கம் சில நேரம் பொது இடத்து நாகரீகங்களை வம்புக்கு இழுக்கும். இதில் பங்கு பெரும் சிலர், இருக்கும் இடம் பற்றிய இங்கிதம் ஏதுமின்றி, தங்கள் சட்டையை கழற்றி விட்டு, காற்றோட்டம் தந்த களிப்புடன் அக்குளை சொறிந்தபடி ஆனந்தமாய் அமர்ந்திருப்பர். இத்தோடு நிற்காமல், இவர்கள் பின்னால் சாய்ந்தபடி,  தலைக்கு மேல் குறுக்குவாட்டில் கைகளை வைத்து கொடுக்கும் "நாக கன்னிகை" போஸில் பெண்களும் மற்றவர்களும் தர்மசங்கடத்தில் நெளிவர்.
ஆங்கில ஏகாதிபத்தியத்தின் கொடுமைகளை பார்க்க நாம் வரலாற்று அருங்காட்சியகத்திற்கு போக வேண்டியதில்லை.  வெய்யில், அதிக வெய்யில், கொடும் வெயில் என்னும் பருவகாலங்களை மட்டுமே ஆண்டு முழுதும் கொண்ட தென்னிந்தியாவிற்கு சற்றும் பொருந்தாத கோட்டு போட்டுக் கொண்டு அதோ வருகிறார் நம் TTE (ஏன் நாம் TTR என்று அழைத்தே பழகி விட்டோம்?). இவரிடம் சிலர் காதில் ரகசியம் பேசுவார்கள். அதான், berth காலியாக இருந்தால் இவர்களுக்கு ஒதுக்கும்படி இவர்கள் கேட்பதை மற்றவர்கள் கண்டறிந்து விடக்கூடாது என்ற ரகசியம். தர்பூஸ் பழத்தை டம்ளரில் மறைக்க முடியுமா? [எத்தனை நாளைக்கு சார் முழுப்பூசணியை சோற்றில் மறைத்துக்கொண்டே இருப்பது? கொஞ்சம் மாறித்தான் பார்ப்போமே!). TTE வேலைக்குத்தான் எத்தனை சோதனை...சில முன்ஜாக்கிரதை முத்தண்ணாக்கள் டிக்கெட்டை ஒரு பர்சுக்குள் வைத்து, அந்த பர்சை பெட்டிக்குள் வைத்து, அந்த பெட்டியையும் சீட்டுக்கடியில் இருக்கும் இரும்பு கம்பியுடன் சங்கிலியால் கட்டிப் பூட்டி விடுவார்கள். இதன் நேரெதிர் உச்சம், மொபைல் போன் மெசேஜ் திறந்து டிக்கெட் காட்டுவது. இரு வேறு இந்தியாக்களின் symbolic  தரிசனம் இது. ஆனால் TTE பாவம். இந்த இரு வித பயணிகளுமே "நிதானம் பிரதானம்" என்ற சொல் வழி நடந்து டிக்கெட் காட்டும் வரை முறைத்து கொண்டே நிற்க வேண்டியதுதான்...இவர் ஒரு பெட்டியிலிருந்து இன்னொரு பெட்டிக்கு செல்ல, கழிப்பறைகள் அருகே படும் பாடு, நம் நாட்டில் எவ்வித இட ஆக்ரமிப்புகளையும் எளிதில் அகற்ற முடியாது என்பதை நமக்கு புரிய வைக்கும்.
சரி. கணிப்பொறிக்கு வாழ்க்கைப்பட்டு காய்ந்து போன கண்களுக்கும் கருத்துக்கும் வயல்வெளிகளின் வாசமும் வருடும் காற்றும் தாலாட்டாக...  அடுத்த வாரம் தொடர்வோம்...

      

4 comments:

  1. பாஸ்! உங்க எழுத்து நடை ரொம்ப நல்லா இருக்கு! எல்லா பதிவையும் படிச்சுண்டு இருக்கேன். ஒரு சின்ன வேண்டுகோள்! பாரா பாராவா கொஞ்சம் பத்தி பிரிச்சு போஸ்ட் பண்ணினா படிக்கர்துக்கு சுலபமா இருக்கும். (ஒருவேளை ரயில் பத்தின பதிவுங்கர்தால ரயில் மாதிரி எழுதரீங்களோ!) :))

    ReplyDelete
  2. தக்குடு!நம்ம ரயில் ஓட்டுனர் காபி,பனியன்,தர்ப்பூசணி டம்ளர்ன்னு புதுக்கவிதை பாடுற லயத்துல பத்தி பிரிக்காமல் விட்டுட்டார் போல!கண்டுக்காமல் உட்காருங்க!

    என்னிடம் கூட மூணாவது கம்பார்ட்மென்ட் கடைசி சீட்டுக்காரர் எஃபக்ட் இருக்கும் போல தெரியுதே:)

    ReplyDelete
  3. தொடர்கிறேன்.... இருபத்தி ஒரு வருடமாக தில்லி-சென்னை பயணங்களில் நான் அனுபவித்து வரும் விஷயங்களை அப்படியே படிக்கும் ஒரு உணர்வு....

    ReplyDelete