/ கலி காலம்: 2014

Sunday, December 28, 2014

அம்மாடி...! ஐயோடி...!

"அம்மாடி...அந்த நாளை மறக்க முடியுமா...!"  இப்படியெல்லாம் இந்தக் காலத்தில் வார்த்தைகளை பயன்படுத்தி கேட்டிருக்கிறோமா?
சிறு வயதில் நம்மூர்களில் ஆச்சரியத்தையும் ஆயாசத்தையும் தெரிவிக்க "அம்மாடி" என்ற சொல் புழக்கத்தில் இருந்தது நம் ஞாபகத்தில் இருக்கக்கூடும். இன்று உலகமயமாக்கலின் சூறாவளியில் இது போன்ற வார்த்தைகள் காணாமல் போனதோடு மட்டுமின்றி பயன்படுத்தினால் நம் இமேஜுக்கு இழுக்கு வந்து விடுமோ என்று தமிழ் சமூகம் அஞ்சும் அளவுக்கு நாம் முன்னேறி விட்டோம்! "சிவப்பாய் இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்டா" என்ற வடிவேலு காமெடி போல், ஆங்கிலம் பேசினால் அவர்கள் அறிவுடையவர்கள் என்ற ஆணித்தரமான நம்பிக்கை நமக்கு உண்டு. அதிலும், நாக்கில் நகாசு வேலை செய்து "wow..." "" என்று உச்சரித்தால் உள்ளூரக் கிடைக்கும் கிளுகிளுப்பு "அம்மாடி"யில் இல்லையோ?

நாகரிக கோமான்கள் என்ற நினைப்பு நம் அனைவருக்குமே உண்டு. உலகமயமாக்கல் அந்த எண்ணத்திற்கு நன்றாகவே தூபம் போட்டு வைத்திருக்கிறது...உதாரணமாக நானும் நீங்களும் தஞ்சாவூர் பெரியகோயிலில் அண்ணாந்து அதன் கோபுரத்தை பார்த்தால் வாயில் "wow..."தான் வருகிறது. "அம்மாடி"யெல்லாம் பிரயோகத்தை விட்டு வெகுதூரம் பிரயாணம் போய் விட்டது.

சரி சரி, விஷயத்துக்கு வாருங்கள் என்கிறீர்களா? சென்ற வாரம் "அஞ்ஞாடி" நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பதாக செய்தி வெளியானது. தலைப்பும் புத்தகத்தின் சைசும் புது வாசிப்பாளர்களை பயப்பட வைக்கும். ஆனால் தமிழ் நாட்டில் 1800களின் இறுதியில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களையும் அதனிடையே மனிதர்களின் உணர்வுகளையும் ஊடாட விட்டு அற்புதமான ஒரு படைப்பை தந்திருக்கும் பூமணி,  பல ஆண்டுகள் உழைத்திருக்கக்கூடும் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.

நாவல் முழுவதும் மண் வாசனை  வீசிக் கொண்டே இருக்கிறது. அவர் பயண்படுத்தும் சொல் வழக்குகள் புழங்கிய பகுதியில் நாமோ நம் மூத்த குடியோ இல்லாதிருந்திருப்பினும் அச்சமூகத்தினுள் கொண்டு போய் நம்மை அமர்த்துகிறது இந்நாவலின் நடை அழகு!

ஆனால், வாசிப்பு ஆர்வம் உள்ள ஒரு சராசரி தமிழன், ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு புத்தகத்தை வாங்குவானா? வாங்க முடியுமா? இது போன்ற ஒரு படைப்பு, எச்சமூகத்தின் பின் புலத்தை முன் வைக்கிறதோ, அதை சார்ந்த மக்களை சென்றடைய வேண்டாமா? 2013 சென்னை புத்தகச் சந்தையில் [அந்த கண்காட்சி பற்றிய பதிவு இங்கே ] "அஞ்ஞாடி" நிறைய இடங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. புத்தகத்தை வாங்க விலையைப் பார்த்து "அம்மாடி!" என்றேன் நான்...ஆமாம் சார், "அஞ்ஞாடி" என்பதன் அர்த்தம் விலையிலும் பிரபலித்தது வருந்தத்தக்க ஒன்று. அற்புதமான புத்தகங்களுக்கு விலையில்லை எனினும், அது, படைப்பின் அஞ்ஞாடியை பரவலாக தடையாகப் போய் விடும்!

அந்த வருடம், கண்காட்சி அரங்கை விட கூட்டம் நிறைந்து வழிந்த கேண்டீனில், பஜ்ஜி வாங்குவதற்கு நின்று கொண்டிருந்த‌ பொழுது, கல்லூரி மாணவி ஒருவர் "அஞ்ஞாடி" என்றால் என்னடி? என்று தோழியிடம் கேட்டுக் கொண்டிருந்தார். வரிசையில் இருந்த இன்னொருவர், "வாழைக்காய் பஜ்ஜி ரொம்ப சிவப்பா இருக்கே...பவுடர் அதிகம் போட்டிருப்பானோ" என்று தன் உறவினரிடம் சத்தமாக‌ கவலைப்பட்டுக் கொண்டிருந்ததால் மற்றொரு மாணவி "அஞ்ஞாடி"க்கு என்ன பதில் சொல்லியிருப்பார் என்ற என் ஆர்வம் பஜ்ஜி வாசனையில் கரைந்து போனது...

இரண்டு வருடம் கழித்து சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கிறது இந்நாவல். தரமான எதுவும் எளிதில் வெளியில் தெரிவதில்லை. தரமான கதைகள் தரும் பூமணியையும் அவரின் கதைகளையும் எத்தனை பேர் அறிந்திருப்பார்கள் என்றும் தெரியவில்லை. இந்த விருது அக்குறையினை ஓரளவேனும் நீக்கும் என்று நம்புவோம். இன்றைய உலக இருப்புக்கு பொருத்தமான பாணியில் அஞ்ஞாடியை சொல்ல வேண்டுமென்றால், "voila! this novel has a wow factor" என்று தூய தமிழில்  சொன்னால்தான் தமிழ் சமூகத்திற்கு இந்நாவல் பற்றிய ஈர்ப்பு பிறக்கும்!

அம்மாடி! ஐயோடி! அஞ்ஞாடி!

Sunday, December 7, 2014

காலம் கெட்டு கெடக்கு...

வழக்கமான மாத மளிகை சாமான் வாங்கிட கடைக்கு போயிருந்தேன். அண்ணாச்சி கடையல்ல. அவை அழியத்துவங்கிதான் ஆண்டுகள் பல ஆகி விட்டதே...வர்ணஜாலங்களுடன் வசீகரிக்கும் வணிகவளாகங்கள் தானே திசையெங்கும் கடை பரப்பி நிற்கின்றன...வாழ்க்கையே வணிகமாகி விட்ட பிறகு இத்தகைய வணிக வசீகரங்கள் சமூகத்தை ஈர்ப்பதில் விசித்திரமுமில்லை வியப்புமில்லை. ஊரோடு ஒத்து வாழ் என்று சும்மாவா சொன்னார்கள்? எனவே அதை சாக்கிட்டு நானும் அந்த பல்பொருள் விற்பனை அங்காடியில் மக்கள் திரள் நடுவே "டிராலி" தள்ளியபடி நகர்ந்து கொண்டிருந்தேன்...

கீரை கிழவிகளை ஊரை விட்டு அனுப்பிய பின், அவர்களிடம் பேரம் பேசி வீரம் காட்டிய நடுத்தர வர்க்கத்து சிங்கங்கள் ஒரு கட்டு பத்து ரூபாயெனினும் பாக்கெட்டிலிருப்பதால் பதவிசானது என்றெண்ணி மெளனமாய் அள்ளிப்போடும் கீரைகள் பகுதி தாண்டி தானியங்கள் பிரிவு அருகில் வருகையில் சத்தமும் குழப்பமுமாய் இருந்தது. தெருவாக இருந்தாலும், பளபளப்பு காட்டும் பலமாடி அங்காடியாக இருந்தாலும், ஏதேனும் சத்தம் வந்தாலே சண்டையாக இருக்குமோ என்ற‌ அவல் கிடைக்கக்கூடும் ஆர்வத்துடன் எட்டிப் பார்க்கும் இயல்பு நமக்குள் ஊறிப் போன ஒன்றாயிற்றே...என்ன நடக்கிறது என்று கூட்டத்திற்குள் நுழைந்து பார்த்தேன்.

கடை சீருடை அணிந்த‌ ஒரு பெண் சிப்பந்தி சற்றே தலை குனிந்தவாறு நின்றிருந்தார். அவரின் மானேஜர் "சாரி மேடம்" என்று தற்கால "முன்னேற்றம் மற்றும் உரிமை" அடையாளங்களின் நாகரீக நகல் போன்று இருந்த ஒரு பெண்ணிடம் சொல்லிக் கொண்டிருந்தார். "you people are cheating. I should complain " என்று மேனேஜரை விளாசிய அவர் அங்கிருந்து விருட்டென்று விலகிப் போன பின் ஆங்காங்கே பேச்சும் சிரிப்பும் கேட்டது. மேனேஜர் சிப்பந்தியிடம் வந்து, "சரி விடும்மா...கஸ்டமராக இருக்கப்போய் இதெல்லாம் பொறுத்துக்க வேண்டியிருக்கு" என்று சொல்லிச் சென்றார்.

நமக்கு இருப்பு கொள்ளுமா? விஷயம் என்னவென்று தெரியா விட்டால் தலை வெடித்து விடுமே...இன்னும் சிலர் அந்த விஷயத்தை பேசிக்கொண்டு இருந்ததால் தலை தப்பியது. இதான் சார் விஷயம். அந்தப் பெண் அரிசி வாங்க வந்திருக்கிறார். பெரிய பெரிய டின்களில் அரிசியும், அதன் மேல் ஒரு அட்டையில் அதன் வகையின் பெயரையும் எத்தனை வருடம் பழையது என்பதையும் எழுதிச் சொருகியிருப்பார்கள் இல்லையா? அதைப் பார்த்து அந்தப் பெண் "ஒரு வருடம்" என்று எழுதிய "பொண்ணி"யில் தருமாறு சிப்பந்தியிடம் கேட்டிருக்கிறார். அடுத்தவருக்கு உதவலாம் என்று நீங்கள் நினைத்தால் பெரும்பாலும் இன்றைய உலகில் ஆபத்து உங்களுக்குத்தானே? பாவம் சிப்பந்தி. "மூணு வருஷம்" போட்டுருக்கறத எடுத்துக்குங்க பழைய அரிசி" என்றிருக்கிறார். நாகரிக நகலுக்கு பெரும் கோபம் வந்திருக்கிறது. புதுசு இருக்க பழையதை தன்னிடம் தள்ளி விடப் பார்க்கிறார் என்ற கோபம்!
பழைய அரிசிதான் நல்லாயிருக்கும் என்று சிப்பந்தி சொன்னதை ஏமாற்று வேலையாக பார்த்திருக்கிறார் அப்பெண்.

இதில் உச்சக்கட்ட தமாஷ் அருகில் இருந்தவர் அடித்த கமெண்ட்தான். "இப்படித்தான் நம்மூர்ல இப்பெல்லாம் குடும்பம் ஓடுது போல" என்ற முதியவரிடம் பக்கத்தில் இருந்தவர், "ஐயா, வீடுகளிலெல்லாம் சமையல் இன்னும் நடக்குதுன்னு நினைச்சு சந்தோஷப்படுங்க..." என்று சொன்ன போது தலை தாழ்த்தி நின்ற சிப்பந்தி அம்மாவும் சேர்ந்து சிரித்தார். அரிசியை கண்ணால் பார்த்தே அதன் வரலாறு பூகோளத்தை புட்டுப் புட்டு வைக்கும் நம் பாட்டிமார்கள் ஞாபகத்துக்கு வந்தனர். ஒரு வேளை "உரிமை", "முன்னேற்றம்", "சுதந்திரம்" என்பதையெல்லாம் விருப்பம் போல அர்த்தம் பண்ணிக் கொண்டால் கால்கள் தரையில் பாவாமல் இப்படித்தான் அரிசி கதை போல் ஆகுமோ சார்? சிகரம் தொடும் பொருட்டு முன்னேறி மேலேறுவது எல்லாம் சரிதான்...ஆனால் தரையில் நடக்கத் தெரியாது, நடக்க‌ விருப்பமுமில்லை என்றால் சிகரத்தில் ஏறி என்ன பயன்? காலம் கெட்டுத்தான் கெடக்கு சார்...!

Sunday, August 17, 2014

டெண்டுல்கர் இப்படி இருக்கலாமா?

சில நாட்களாக ஊடகங்களுக்கு கிடைத்த தீனி டெண்டுல்கர். இவர்கள் அனைவரும் அவரை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடியவர்கள் தான். ஆனால் கிரிகெட் மூலம் இனிமேல் அவரை வைத்து நேரம் ஓட்ட முடியாது. மாற்று வேண்டுமே! இந்த நிலையில் டிவி பத்திரிகைகள் கையில் வகையாய் மாட்டியிருக்கிறார் அவர்.

ஏதோ தேசத்துரோகம் செய்து விட்டது போல அவர் ராஜ்யசபாவிற்கு வராதது குறித்து ஆராயப்படுகிறது. நீங்கள் தானே "ஏற்றி" விட்டீர்கள். அப்போது கண்ணை கட்டிக் கொண்டு ஆதரித்தீர்களே? ஒரு கிரிகெட் வீரர் நாட்டை மாற்ற புரட்சி ஏதேனும் செய்வார் என்று நினைத்தீர்களோ? அவர் பாட்டுக்கு எதைப் பற்றியும் கவலையின்றி ஊர் ஊராகச் சென்று ஏதேதோ நிகழ்ச்சிகளில் போட்டோக்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார். விட்டு விடுங்கள் சார்...புகழின் முக்காடு போட்டுக் கொண்டிருந்த அவருக்கு "எனக்கெதுக்கு இப்பதவி என்னால் ஆக்கபூர்வமாக செயல்பட முடியாது நேரமும் இல்லை" என்று சொல்லும் நினைப்பிருந்திருக்காது. அல்லது அப்படி ஏதும் சொல்லியிருந்தால் நாம் சும்மாதான் விட்டு விடுவோமா? "என்ன ஒரு அகங்காரம்... தாய் மண்ணை காக்கும் பொறுப்பு கொடுத்தும் நேரமில்லை என்று சொல்கிறாரே" என்று அடித்து தூள் பண்ணியிருப்போமே! சொல்லுங்கள் சார், எப்படி பேசினாலும் இடக்காக பார்க்கும் கூட்டம் நிரம்பியிருக்கும் நாட்டில் அவர் என்னதான் செய்வார்? அதனால் தான் மனிதர் வாயே திறப்பதில்லை.

"வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும்" என்பார்கள். அது அனைத்துக்கும் பொருந்தும். நன்றாக விளையாடியவர் என்பதால் சற்றும் சம்பந்தம் இல்லாத பொறுப்பைக் கொடுத்து உட்கார்த்தினால் இந்த லட்சணத்தில் தான் இருக்கும். நல்ல வேளை இந்தியாவின் மானத்தை கிரிகெட்டில் காப்பாற்றியிருக்கிறார் என்பதற்காக ராணுவ தளபதியாக இருந்து தாய்நாட்டை காப்பாற்றுங்கள் என்று ஏதேனும் செய்யாமல் விட்டார்களே என்று நிம்மதி அடைய வேண்டியதுதான்.

சரி டெண்டுல்கர் செய்த தவறு என்ன? அவரவருக்கு ஒரு எல்லை உண்டு. தன் திறமை, பண்பு, ஆர்வம், சாத்தியக்கூறுகள் அனைத்தையும் கலந்து வரையப்பட்ட எல்லை. அந்த எல்லையை அறிதல் ஒரு வகை பக்குவம். அத்தகைய பக்குவம் பெற்றோர் தான் செய்யக்கூடியது என்ன, செய்யத் தகுதியானது என்ன என்பதை அறிந்திருப்பார்கள். கெளரவம் கிடைக்கிறது என்பதற்காக கூப்பிட்ட இடத்துக்கெல்லாம் போய் கொண்டிருக்க மாட்டார்கள். இதைத்தான் செய்யாமல் விட்டிருக்கிறார்.

யாருக்குத் தெரியும், இந்நேரம் அரசியல் பாலபாடம் ஏதேனும் கற்று வந்து, "சபைக்கு வந்தால் தான் மக்கள் சேவையா நான் மக்களுடன் மக்களாக இணைந்து களத்தில் அவர்களுக்காக உழைத்துக் கொண்டிருந்தேன்" என்று ஒரே போடாக போட்டால் நாமெல்லாம் என்ன செய்ய முடியும்?

டெண்டுல்கருக்கு ஒரு வேண்டுகோள். சபைக்கு வாருங்கள். உங்களை விட தகுதியற்றவர்கள் எல்லாம் அங்கு ஊருக்கு உழைக்கும் உத்தமர்களாக உலா வருகிறார்கள். எண்பதுகளில் ஒரு மதுரை எம்பி பற்றி காமெடியாகச் சொல்வார்கள். அவர் வருடத்திற்கு இரண்டு முறை பாராளுமன்றத்தில் பேசுவாராம். கோடைகால கூட்டத் தொடரின் போது "ஃபேன் போடுங்க" என்பாராம். குளிர்கால கூட்டத் தொடரின் போது "ஃபேனை அணைங்க" என்பாராம். அது போலவாவது எதையாவது பேசலாமே(!?) சார்! இல்லையென்றால் "ஒவ்வொரு ஊரிலும் பட்டி தொட்டியெங்கும் கிரிகெட் மைதானங்கள் அமைக்க அரசு திட்டமிட வேண்டும்" என்று அடித்து விட்டால் சபையில் அனைவரும் மேஜையைத் தட்டி ஆரவாரம் செய்து வரவேற்பார்களே! எதற்கென்று தெரியாமலேயே மேஜையை தட்டுவது நம் சபை நாகரிகத்தில் ஒன்றல்லவா? எப்படியிருந்தாலும் மேஜையை தட்டுபவர்கள் பயனுள்ளவற்றுக்கா தட்டிக் கொண்டிருக்கிறார்கள்? எனவே யோசியுங்கள் மிஸ்டர் டெண்டுல்கர். அதற்காக ரொம்பவும் யோசிக்காதீர்கள்...நம் நாட்டில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் ஒன்றும் செய்யாமல் மட்டும் இருந்து விடக் கூடாது. எனவே எதையாவது செய்யுங்கள்! யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். எதையாவது பேசியோ செய்தோ அது குண்டக்க மண்டக்க என்று ஆகிப் போனாலும் கவலையில்லை. மிஞ்சிப் போனால் நாலு நாள் தொலைகாட்சிகளில் அனல் பறக்கும் விவாதம் நடக்கும். அதற்குள் இதை விட அதிக அசிங்கமான அதிர்ச்சியூட்டும் ஏதேனும் ஒரு செய்தி வரும். எல்லோரும் அதைப் பற்றி விவாதிக்க கிளம்பி விடுவோம். இது பாரத நாட்டின் மாண்பு என்பது டெண்டுல்கருக்குத் தெரியாமல் இருக்குமா என்ன?

Sunday, July 27, 2014

அது மட்டுமா அசிங்கம்?

அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று சென்ற வாரம் நம் அனைவருக்குள்ளும் ஊடுருவியது... அதிர்ச்சிகள் எப்படியிருப்பினும் சகித்துக்கொள்ளும் அளவுக்கு புரையோடிப்போன சமூகத்தின் அறிகுறியாய் இருக்கக்கூடிய மற்றுமொரு அதிர்ச்சி அது. பெங்களூரில் பெயர் பெற்ற பள்ளி ஒன்றின் வளாகத்துக்குள்ளேயே ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதும் அதை பள்ளியில் பணிபுரிபவர்களே செய்திருக்கிறார்கள் என்பதுமான செய்திகளை பார்க்கும் பொழுது ஏற்படும் அதிர்வலைகளைத் தாண்டி பள்ளிகள் குறித்த நம் பார்வையும் நம் சிந்தனைக்கு எட்டுகிறதா? எட்டினாற்போல் தெரியவில்லை...!
வழக்கம்போல் சீறியெழுதல்கள், போராட்டங்கள், விவாதங்கள் என பயன் அற்ற பழகிப் போன போலித்தனங்கள் ஒருபுறம் இருக்கட்டும்... இச்சம்பவம் நம் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். எத்தனை நடந்திருக்கிறதோ எத்தனை வெளிவரவில்லையோ! ஆனால் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற லட்சணத்தில் தான் நம் கல்வி வியாபாரம் கடை விரிக்கப்பட்டிருக்கிறது. சம்பவத்தினால் கொதித்தெழும் பெற்றோர் மற்றும் சமூக நோக்குடையோரிடம் சில கேள்விகள்:
1. "இந்த பள்ளியில் என் பிள்ளை / பெண் படிக்கிறார்" என்று சொல்லிக் கொள்ள விரும்பி, அதன்மூலம் சமூக அடையாளங்களையும் ஆதாயங்களையும் அடைய விரும்பி, பகட்டான பள்ளிகள் கேட்கும் பணத்தை அள்ளிக் கொட்டி, முழுத்தொகைக்கும் ரசீது தரப்படாது என்று அடாவடி காட்டும் நிர்வாகத்திற்கு தலையாட்டி நம் பகட்டை வெளிக்காட்ட முயற்சிக்கிறோமே இந்த அவலத்தை எதிர்த்து நிற்கும் தைரியமும் இப்படிப்பட்ட பள்ளிகளில் எதற்கு நம் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற நேர்மை மிக்க யோசைனைத் திறனும் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது? இனியாவது இருக்குமா?
2. பள்ளிகள் பெற்றோரிடம் பல்வேறு கண்டிஷன்கள் அடங்கிய விண்ணப்பத்தில் கையொப்பம் வாங்குகின்றன...அதில் "மாணவ மாணவியருக்கு என்ன நடந்தாலும் பள்ளி பொறுப்பிலை" என்று கூட பல பள்ளிகளில் இருக்கிறது. இந்த‌ விவகாரத்தில் கூட பல பெற்றோர்கள் இந்தப் பள்ளியின் மீது இதே புகாரை வாசித்தனர். இவர்கள் அனைவருமே படித்த அதிமேதாவிகள்! கையெழுத்துப் போட்டு பள்ளியில் சேர்க்கும் பொழுது வாயை மூடிக்கொண்டு ஏன் இருந்தார்கள்? கேள்வி கேட்டால் பேர் பெற்ற பள்ளியில் சீட்டு கிடைக்காது என்பதாலா? இப்போது கூப்பாடு போட்டு என்ன பயன்?
3. கூட்டுக் குடும்பம் என்பது கிட்டத்தட்ட இல்லாமல் ஆகி விட்டது. குழந்தைகள் மீது முழுக்கவனமும் செலுத்த பெற்றோருக்கு நேரமும் இல்லை, தங்கள் "கேரியரை" விட்டுக் கொடுத்து குழந்தையை நன்றாக வளர்க்க எவருக்கும் மனமுமில்லை. இந்த சமூக சீர்கேட்டை பயண்படுத்தி பள்ளிகள் ஏதேதோ "ஆக்டிவிடீஸ்" என்ற பெயரில் பணத்தை பிடுங்குகின்றன. பிள்ளைகள் பள்ளிகளில் நீண்ட நேரம் இருக்கிறார்கள். இத்தகைய பெற்றோருக்கும் எவ்வளவு நேரம் குழந்தை வெளியில் (பள்ளியில்)இருக்கிறதோ அவ்வளவு "பளு" நமக்கு குறைவு என்று நினைக்கின்றனர். எவ்வளவு பணம் குழந்தை மீது செலவழிக்கிறோமோ அவ்வளவு நன்றாக குழந்தையை வளர்க்கிறோம் என்பது அதிமேதாவிகளின் முட்டாள்தனம். அவ்வளவு நன்றாக குழந்தை வளரும் என்பது அதைவிட அதிமுட்டாள்தனம். லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி அதை பள்ளிகளில் கொட்டும் படித்த முட்டாள்களான நமக்கு இது புரியாதா? அல்லது புரிந்தும் ஏதும் செய்ய இயலாத "சமூக விசை" இதில் இருக்கிறதா? அதிக‌ம் ப‌ண‌ம் த‌ந்து பெறும் எதுவும் அதிக‌ த‌ர‌மான‌தாக‌ இருக்கும் என்ற‌ முட்டாள்த‌ன‌ ந‌ம்பிக்கை ந‌ம் மூளைக‌ளில் ஏறி மாமாங்க‌ம் ஆகி விட்ட‌தே!
4. இந்த சம்பவத்தில் பள்ளி நிறுவனர் தனக்கு எதுவும் தெரியாது என்று பச்சைப் பொய் சொல்லியிருக்கிறார் என்பது காவல்துறை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இப்படி ஒரு புளுகு புளுகி தப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையை அவருக்கு அளித்தது யார்? இச்சமூகமே அந்த நம்பிக்கையை அவருக்குக் கொடுத்திருக்கிறது.இன்று கல்வி என்பது மிகப்பெரிய வியாபாரம். பள்ளிகளும் கல்வி நிறுவனங்களும் அதைத்தான் செய்யும். குளுகுளு வகுப்பறைகள் என்றவுடன் மகிழ்கிறோம்...இயற்கையுடனான தொடர்பை சிறு வயதிலேயே துண்டிக்கும் அறிவற்ற தன்மை இதில் இருக்கிறது என்று யோசித்தோமா? ஒரு உல்லாச விடுதிக்கு உரிய அனைத்து வசதிகளும் இருப்பதாக நீண்ட லிஸ்டை பள்ளிகள் நீட்டும் பொழுது நாம் புளுகாங்கிதம் அடைகிறோம். அறிவு மற்றும் பண்பின் பரிமாணங்கள் பயிற்றுவிக்கப்படும் அறிகுறிகள் கொண்ட அம்சங்கள் அந்த லிஸ்டில் இருக்கிறதா என்று யோசிக்கின்றோமா?
5. இப்பொழுது நம் நாட்டில் புதிய புரட்சி ஒன்று புறப்பட்டிருக்கிறது. கேண்டில் லைட் போராட்டம்! ஒரு நாள் மெழுகுவர்த்தி ஏத்தி அதில் அகலக் கூடியதா நம் சமூக அழுக்கு? அதைப் பற்றி என்ன அக்கறை? ஒரு நாள் போராட்டம் நடத்தி விட்டு நாம் அடுத்த வேலையை பார்க்கப் போய் விடுவோம்... சில வாரங்களில் "பழைய குருடி கதவை திறடி" கதை தான் நம் நாட்டில் சாசுவதமானது என்பது அக்கிரமக்காரர்களுக்கும் தெரியும் அவர்களை தண்டிக்க வேண்டிய இடத்தில் இருப்பவர்களுக்கும் தெரியும்.
"உயர் தரம்" என்பதற்குள்ளே உளுத்துப் போனவைகள் இருப்பது இதனால்தான்.  எனவேதான் ஒரு பள்ளியின் உள்ளேயே இத்தகைய வக்கிரம் நடந்த பின்னும் வெளிவர பத்து நாட்கள் ஆனது. வெளிவந்த பின்னும் லட்ச லட்சமாய் கொட்டிக் கொடுத்த பெற்றோர்களின் கூக்குரல்களைப் பொருட்படுத்தாமல் சாவகாசமாக பள்ளி நிறுவனர் முகம் காட்ட இரண்டு நாட்கள் ஆனது...பள்ளிக்குள் நடக்கவில்லை என்று முதலில் பொய் சொல்லி பிறகு மாற்றிப் பேச முடிந்தது...பள்ளிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று காவல்துறையை வைத்துக் கொண்டே பொறுப்பிலிருந்து நழுவ முடிந்தது...இது போன்ற‌ ப‌ள்ளிக‌ளின் மீது கூப்பாடு போட்டு என்னாக‌ப்போகிற‌து? அத்த‌னை பெற்றோர்க‌ளும் சேர்ந்து, அத்த‌னை மாண‌வ‌ர்க‌ளையும், இந்த‌ப் ப‌ள்ளி நமக்குத் தேவையில்லை என்று வில‌க்கிக் கொள்ளும் தைரிய‌ம் ந‌ம‌க்கு இருக்கிற‌தா? அப்ப‌டி ந‌ட‌ந்தால் அடுத்த‌ வ‌ருட‌மே ப‌ள்ளி தானாக‌வே இழுத்து மூட‌ப்ப‌டும். பள்ளிகளுக்கு பயம் வரும். எப்படியெல்லாம் காசு பண்ணலாம் என்று யோசிப்பவர்கள் தரம் பற்றியும் சற்று யோசிப்பார்கள். நம்பகமான ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமாவது பள்ளிகளுக்கு வரும். இதெல்லாம் ந‌ம்மால் முடியாது. ஏனென்றால் பிள்ளைக‌ளின் ஒரு வ‌ருட‌ம் வீணாகி விடுமே! அவ‌ர்க‌ளின் ஐஐடி ஐஐஎம் அமெரிக்கக் க‌ன‌வுக‌ள் என்னாவ‌து? இதே சாக்கடையில்தானே நாமும் காசு கொட்டி பட்டம் பெற்று "செட்டில்" ஆன பின் வீட்டில் சோபாவில் அமர்ந்தபடி "இந்த எஜுகேஷன் சிஸ்டமே மோசமா போச்சப்பா..." என்று நீலிக்கண்ணீர் வடித்து போலித்தனமாய் கதை பேசிக் கொண்டிருக்கிறோம்? இது தான் ந‌ம் ச‌மூக‌ப் பொறுப்பின் ல‌ட்ச‌ண‌ம்.
முத‌லில் பெற்றோர் மற்றும் சமூக பங்களிப்பாளர் என்ற‌ பொறுப்பை நாம் எத்த‌னை ச‌த‌வீத‌ம் நிறைவேற்றுகிறோம் என்று பாசாங்கின்றி யோசிப்போம். ஏகப்பட்ட அழுக்குகள் வெளிவரும்! பிறகு இது போன்ற வக்கிரங்களுக்கு எதிராக குரல் கொடுத்தால் அதில் ஒரு நேர்மை இருக்கும். நேர்மை தோற்றதாக விதி இருக்கிறதா என்ன‌?

Sunday, July 13, 2014

இந்தப் பெண்ணை என்ன செய்யலாம்?



சென்ற வாரம் நம் "தேச பக்தர்கள்" நம்மை புல்லரிக்க வைத்த விதம் அலாதியானது. இதென்ன "தேச பக்தி" போன்ற வார்த்தையெல்லாம் இன்னும் உபயோகத்தில் இருக்கிறதா என்று ஆச்சரியப்படாதீர்கள். அதான் சார் நம் கிரிகெட் ரசிகர்கள் இருக்கிறார்களே... அவர்கள் தானே பாரதத் தாயின் தவப்புதல்வர்களாக வலம் வருகிறார்கள். அவர்களை தேசபக்தர்கள் என்று அழைக்கா விடில் வேறு யார் தேசப்பக்திக்கு எடுத்துக் காட்டாக இருக்கிறார்கள் சொல்லுங்கள்?

சரி, விஷயத்திற்கு வருவோம்...மரியா ஷரபோவா என்னும் டென்னிஸ் வீராங்கனை, டெண்டுல்கர் யார் என்று தெரியாது என்று சொல்லி விட்டாராம். அவ்வளவு தான். ஏதோ பாரதத்தாயை இழிவு படுத்தியது போல பொங்கிப் புறப்பட்டு விட்டது நம் தேசப்பக்தர்கள் படை! வேறெங்கு போகும் இந்தப் படை? இருக்கவோ இருக்கிறது சமூக ஊடகங்கள்! எனவே தரக்குறைவு என்பதற்கு இலக்கணம் வகுப்பது போல திட்டித் தீர்த்து விட்டார்கள் நம் தேசபக்தர்கள்.

எப்போதுமே நம்மை நாமே அதிமேதாவிகளாக பாவிக்கும் நினைப்பு நமக்கு உண்டு. குண்டுச் சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிப் பழகியதால் வந்த அதிமேதாவித்தன நினைப்பு இது. அப்படித்தான் நமக்குத் தெரிந்த கிரிகெட் உலகம் முழுவதும் தெரிந்திருக்க வேண்டும் என்ற முட்டாள்தனமான நினைப்பும் நமக்குள் ஊறியிருக்கிறது.

மரியா ஷரபோவா டெண்டுல்கரை தெரியாது என்று சொன்னது இருக்கட்டும். நம் தேசபக்தர்கள் மூளையை ஒரு கையால் தட்டி, மறுகையை இதயத்தில் வைத்து தனியாக அமர்ந்து ஒரு நிமிடம் யோசிப்பார்கள் எனில், அவர்களின் முட்டாள்தனம் மூளைக்கு எட்டாது போகுமா? நம்மில் எத்தனை பேருக்கு இந்தியாவின் ஹாக்கி அணியின் கேப்டன் சர்தார் சிங் பெயர் தெரியும்? சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதி கூட போகாவிடிலும் ஏகப்பட்ட கோல்களை தடுத்த கோலி ஸ்ரீஜிஷ் என்பவரை நமக்குத் தெரியுமா? அட, நம் நாட்டின் சார்பாக எத்தனை விளையாட்டுகளுக்கு
அணிகள் இருக்கின்றன என்ற விபரமாவது நமக்குத் தெரியுமா?

கிரிகெட் என்றால் என்னெவென்றே அறிய வாய்ப்பில்லாத நாட்டைச் சேர்ந்த ஒருவர் டெண்டுல்கரைத் தெரியாது என்றாராம் இவர்கள் வெகுண்டெழுந்து தங்களின் "பக்தியை" காட்டுவார்களாம்! உலக மக்கள் தொகையில் சொற்பமான மக்கள் ரசிக்கும் விளையாட்டு கிரிகெட். அந்த விளையாட்டை திறமையாக விளையாடுபவர்களில் ஒருவர் டெண்டுல்கர். அவ்வளவே. அதற்கு மேல் எதுவுமே இல்லை. டெண்டுல்கர் என்பவர் உலகம் உய்ய வழி காட்டிய புத்தரும் அல்ல சத்தியத்தின் பாதையை பார் முழுதும் பரப்பிய காந்தியும் அல்ல.

ஆமாம்..."இந்தப் பெண்ணை என்ன செய்யலாம்" என்று தலைப்பு வைத்து விட்டு இப்படி எழுதுகிறீர்களே என்கிறீர்களா? இந்தப் பெண்ணை ஒன்று செய்யலாம். நன்றாக பாராட்டலாம்! தெரியாததை தெரியாது என்று சொன்னதற்கு...அத்தகைய பாராட்டுக்களை யார் தெரிவித்தால் பொருத்தமாக இருக்கும்? நாமேதான்! நம்மவர்களே தான்! ஏனென்றால், தெரியாததை தெரிந்தது போலக் காட்டிக் கொள்வதில் நம்மவர்களுக்கு நிகர் நாம் தானே? வாருங்கள், யார் என்று தெரியாதவரை, தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லாதவரை, தெரியாது என்று சொன்ன மரியா ஷரபாவோவை பாராட்டுவோம்!

Sunday, July 6, 2014

யாருக்கும் வெட்கமில்லை!

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது...தென்னகத்தின் செல்லக் குரலுக்கான பிரம்மாண்டமான தேடல் என்று சொல்லிக் கொள்ளப்படும் நிகழ்ச்சி...பல வருடங்களுக்கு முன், இசையின் மூலம் பெறும் உணர்வுகளின் நெகிழ்ச்சியை உள்ளத்துக்குள் ஊடாட வைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி, கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக இன்று கோமாளிகளின் கூத்து பார்க்கிறோமா அல்லது உண்மையிலேயே இசை நிகழ்ச்சியா என்று நம்மை கிள்ளிப்பார்த்துக் கொள்ளத் தூண்டும் அவலமாக மாறிப்போன ஒரு நிகழ்ச்சி...சரி, என்ன விஷயம் என்கிறீர்களா? நீண்ட நாட்களுக்குப் பின் இந்நிகழ்ச்சியைக் காணும் "பாக்கியம்" மீண்டும் வாய்த்தது. பாக்கியம் மட்டுமா? நம் சமூக முன்னேற்றங்களைக் கண்டு புல்லரிக்கும் வாய்ப்பையும் அல்லவா சேர்த்து வழங்கியது அந்நிகழ்ச்சி...
ஒரு பத்து வயது சிறுவன் பாடுகிறான்...வழக்கம் போல தொகுப்பாளர்கள் தங்கள் சிந்தனை முத்துக்களை, கருத்தாழம் மிக்க காவிய வார்த்தைகளை அவ்வப்பொழுது அள்ளித் தெளிக்கிறார்கள். நாம் மதிப்பு வைத்திருக்கும் பழைய‌ பாடகர்கள் நடுவர்களாக அமர்ந்திருக்கிறார்கள்...பிறகு அந்த புல்லரிக்கும் புதுமை நிகழ்வு நடக்கிறது...எந்த சமூகத்தில் பெண்கள் வன்கொடுமை அதிகரித்துக் கொண்டே போகிறது என்று கூப்பாடு போடப்படுகிறதோ, எந்த சமூகத்தில் ஆண்கள் அனைவருமே பெண்களை போகப் பொருளாக மட்டுமே பார்க்கக் கூடியவர்கள் என்ற சித்தரிப்பு இருக்கிறதோ, எந்த சமூகத்தில் குழந்தைகள் நல்வளர்ப்பு பற்றி வெற்றுப்பேச்சு மட்டுமே நிறைந்திருக்கிறதோ அத்தகைய சிறப்பு வாய்ந்த நம் தமிழ் சமூகம் கண்டு மகிழ்ந்து போற்றும் அந்த நிகழ்ச்சியில், அந்த புல்லரிக்கும் புதுமை நிகழ்வு நடக்கிறது...
அமெரிக்காவிலிருந்து வந்து பாடும் ஒரு இளம்பெண் "கெஸ்டாக" அமர்ந்திருக்கிறார். பத்து வயது கூட நிரம்பாத சிறுவன் ஒருவன் பாடி முடித்தபின் பெண் தொகுப்பாளினி, "என்னை ஆறாவது கேர்ள் பிரண்டாக நீ ஏற்றுக் கொள்வாயா" என்று அந்த அமெரிக்கப் பெண்ணிடம் கேள் என்று அந்தச் சிறுவனைத் தூண்டுகிறார். அரங்கமே கைதட்டி ஊக்குவிக்கிறது! அந்தச் சிறுவனும் கால் மடித்து அமர்ந்து கைநீட்டி அமெரிக்கப் பெண்ணிடம் அவ்வாறே வேண்டுகிறான்...அதைப் பார்க்கும் மற்றொரு பெண் தொகுப்பாளினி, டேய் உனக்கு நானா அமெரிக்கப் பெண்ணா அல்லது அந்த மற்றொரு தொகுப்பாளினியா என்று சொல்லச் சொல்கிறார். அரங்கம் முழுவதும் நிறைந்திருக்கும் சிறு மனங்களில் நச்சின் நாற்றம் வீசப்படுகிறது...

அந்த நாற்றத்தின் சுவாசம் பெற்ற சிறுவனும், "நீங்க ஓல்டு மாடல். அவங்க அமெரிக்கா" என்று தனது தேர்வு முறையை விளக்குகிறான். அரும்பெரும் சொற்பொழிவு கேட்டது போல அரங்கம் புளுகாகிதம் அடைந்து கூச்சலில் குதிக்கிறது. தரமானவர்கள் என்று நாம் நம்பும் நடுவர்களும் கைதட்டிச் சிரிக்கிறார்கள். "தோழி" என்றால் என்ன அர்த்தம் என்று இந்நிகழ்ச்சி பார்க்கும் அத்தனை சிறுவர் சிறுமிகளும் "விபரமாக" புரிந்து கொள்ளும் பெரும்பணியினை செய்த அத்தனை பேரும் பெண்களே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒரு பாடல் வரியின் ஸ்வரஸ்தானங்களில் பாடுபவர்கள் செய்யும் தவறுகளுக்கே ஏகப்பட்ட "டிப்ஸ்" கொடுக்கும் இந்த நடுவர்கள், நாளை ஒரு தலைமுறையாக மாறப்போகும் பிஞ்சுகளின் நஞ்சை விதைத்து சிதைக்கும் அவலம் நேர்கையில் சிரித்து மகிழ்ந்தது ஏன்? நடுவராக வந்த மூவரில் இருவர் பெண்கள். "என்ன நடக்குது இங்க... இப்படியா பொது நிகழ்ச்சியில் அதுவும் சிறுவர்களிடம் உரையாடுவது" என்று கேட்கவா முடியும்? நடுவர் சான்சு போய்விடுமே! சிறுமிகள் கூட கொடுமைக்குள்ளாகும் நிகழ்வுகள் பெருகுவது குறித்து கொதித்தெழும் பெண்ணுரிமை அமைப்புகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? பெண்ணியம் பேசுபவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ஒரு வேளை ஆண்களுக்கு எதிராக மட்டும் தான் இவர்கள் கண்ணைக் கட்டிக் கொண்டு களத்தில் குதிப்பார்களோ?? இந்நிகழ்ச்சியை பார்க்கும் ஒரு சிறுவன் நாளை பள்ளியிலோ சாலையிலோ, இதே போலோ இதையும் மீறியோ ஒரு பெண்ணிடம் நடந்து கொண்டால் குற்றவாளி யார்?

ப‌ல‌ ல‌ட்ச‌ம் பேர் பார்க்க‌க்கூடிய‌ ஒரு நிக‌ழ்ச்சியில், ச‌ற்றும் பொறுப்பின்றி தனக்குத் தோன்றிய‌தை எல்லாம் பேசும் தொகுப்பாள‌ர்க‌ளை என்ன‌ செய்ய‌? தான் பேசுவ‌து போதாதென்று விப‌ர‌ம் அறியா சிறுவ‌ர் சிறுமிக‌ளை த‌ர‌க்குறைவாக‌ ந‌ட‌க்க‌த் தூண்டும் அவ‌ர்க‌ளின் அசிங்க‌ங்க‌ளை என்ன‌ செய்ய‌? இவ‌ற்றையெல்லாம் பார்த்தும் ஆட்சேப‌ம் ஏதும் தெரிவிக்காம‌ல் அல‌ங்கார‌மாய் வீற்றிருக்கும் ந‌டுவ‌ர்க‌ளை என்ன‌ செய்ய‌? த‌ங்க‌ள் க‌ண்ணெதெரிலேயே த‌ங்க‌ள் ம‌ற்றும் பிற‌ குழ‌ந்தைக‌ள் ம‌ன‌தில் விஷ‌ம் விதைக்கும் ப‌ணி ந‌டைபெறுவ‌தை பார்த்தும் பைத்திய‌ங்க‌ள் போல‌ அதில் ப‌ங்கேற்றுச் சிரிக்கும் பெற்றோர்க‌ளை என்ன‌ செய்ய‌? ஒரு ப‌க்க‌ம் அக்கிர‌ம‌ங்க‌ளை க‌ண்டு பொங்குவ‌து போல‌வும் ம‌றுப‌க்க‌ம் அதை மெளனமாய் அனுமதிப்பதும் முடிந்தால் அதையே கூட உள்ளுக்குள் ரசிப்பதுமாய் இர‌ட்டை வேட‌ம் போடும் ந‌ம் அனைவ‌ரையுமே என்ன‌ தான் செய்ய‌? வெட்கம் கெட்ட சமூகத்தில் வாழும் நாம் விவஸ்தை அற்ற மனிதர்களாய் திரிவதில் வினோதம் ஏதும் இல்லையே!

Sunday, May 4, 2014

பிரபலங்களின் ஓட்டு - திடுக்கிடும் தகவல்கள்!

கடந்த வாரம் தேர்தல் நடந்தாலும் நடந்தது... எந்த பத்திரிகையை புரட்டினாலும் சரி ஒரே ஓட்டு சமாச்சாரம் தான்..."ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ" ஞாபகம் வரும் வண்ணம் எப்படியெல்லாம் செய்தி போடுகிறார்கள் சார்! மக்களின் பொது அறிவை மேலும் வளர்க்கும் வண்ணம் எப்பேர்ப்பட்ட பெரும்பணி ஆற்றுகின்றன நம் பத்திரிகைகள்...!இதையெல்லாம் படித்த பின் நமக்கும் செய்தியாளர் ஆகும் ஆசை வராமல் இருக்குமா சொல்லுங்கள்? இதோ நம் கை வண்ணத்தில் "தேர்தல் தினம்" பற்றிய செய்திகள் நீங்கள் படித்து மகிழ...!

          "பிரபலங்கள் ஓட்டு - திடுக்கிடும் தகவல்கள்!"

நமது சிறப்பு நிருபர் ‍-

நேற்று நடந்த தேர்தலில் தமிழ் நாட்டின் பிரபலங்கள் பலர் ஓட்டு போட்டதால் சென்னை முழுவதும் பரபரப்பு நிலவியது. இது குறித்த விபரங்கள் வருமாறு:

தேர்தல்

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. சுதந்திரம் அடைந்தது முதல் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நம் நாட்டில் தேர்தல் நடைபெறுவது வழக்கம். முன் எப்போதும் இருந்திராத அளவில் இந்த முறை தேர்தல் களம் சூடு பிடித்து பல வாரங்கள் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் நேற்று
தமிழகத்தின் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு துவங்கிய காலை ஏழு மணி முதலே ஆண்களும் பெண்களும் கூட்டம் கூட்டமாக வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.

வாக்குப்பதிவு

விறுவிறுப்பாக நடந்த தேர்தலில் சுமார் 73% சதவீதம் வாக்குகள் பதிவானதாக தெரிகிறது. இதில் ஆண்கள் 72% சதவீதமும் பெண்கள் 74% சதவீதமும் வாக்கு பதிவு செய்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நமது சிறப்பு நிருபர் குழு தமிழகம் முழுவதும் திரட்டிய தகவல்களின் படி ஆண்களில் 60% பேர் சர்ட் அணிந்து வந்து ஓட்டளித்ததாகவும் 30% பேர் டி‍‍சர்ட் அணிந்து வந்ததாகவும் தெரிகிறது. வெயில் அதிகம் இருப்பதால் தான் பருத்தியிலான டிசர்ட் அணிந்து வந்திருப்பதாக சேலத்தில் முதல் முறையாக வாக்களித்த சேகர் என்னும் இளைஞர் நமது நிருபரிடம் தெரிவித்தார்.

ஐந்தாம் பத்தி பார்க்க‌...

<<..மர்ம அழகி மாயம்! போலீஸ் வலைவீச்சு....!! >>

இரண்டாம் பத்தி தொடர்ச்சி...

கமல்

நடிகர் கமல்ஹாசன் தனது வீட்டின் அருகில் உள்ள வாக்கு மையத்தில் தனது ஓட்டை பதிவு செய்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், "ஓட்டளிப்பது நம் ஒவ்வொருவரின் ஜனநாயக கடமை. ஜனநாயக உரிமை என்றும் சொல்லலாம். கடமை என்பதே உரிமையான ஒன்று. கடமையற்ற உரிமையும் உரிமையற்ற கடமையும், உரிமைக்கும் கடமைக்கும் உரிமையான கடமைக்குரிய பயன் அளிக்காது. உரிமையாகவோ கடமையாகவோ அது இருக்காது" என்றார். அவர் என்ன சொல்கிறார் என்று புரியாமல் நிருபர்கள் குழம்பிய நிலையில் நின்றிருந்தனர்.

ரஜினி

நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்து பிரபலமானவர் ரஜினி காந்த். இவரின் இயற்பெயர் சிவாஜி ராவ். நேற்றைய தேர்தலில் தான் வசிக்கும் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் முதல் ஆளாக வந்து ஓட்டு போட்டார்.

முதல் ஓட்டு

காலை 7.02க்கு ரஜினி ஓட்டு பொத்தானை அமுக்கி தனது ஒட்டை பதிவு செய்தார். அதற்கு முன் எவரும் அங்கு ஓட்டு போடவில்லை. எனவே ரஜினியின் ஓட்டே முதல் ஓட்டாக அமைந்தது. ஓட்டளித்த பின் வெளியே வந்த ரஜினி தனது மை தடவப்பட்ட விரலை உயர்த்திக் காட்டினார். வெள்ளை உடையணிந்து ரஜினி ஓட்டு பதிவு செய்தார். அவர் தற்போது பெரும்பாலும் வெள்ளை உடை அணிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்

அமராவதி படத்தில் அறிமுகமாகி பிரபலமானவர் அஜித். இவர் தனது மனைவி ஷாலினியுடன் வந்து வாக்களித்தார். பொதுமக்கள் பாராட்டும் வண்ணம் இவர் வரிசையில் நின்று வாக்களித்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கு முன்னும் பின்னும் வரிசையில் பலர் நின்றிருந்தனர். வாக்களிக்க வரும் முன் ஷாலினி அஜித்தின் இடது பக்கமாகவும், வாக்களித்த பின் வலது பக்கமாகவும் நடந்து வந்தார்.

ஜெயலலிதா

தமிழ் நாட்டின் முதல்வரும் அதிமுக தலைவரும் ஆன ஜெயலலிதா, சசிகலாவுடன் இணைந்து வந்து வாக்களித்தார். ஜெயலலிதாவின் கண்ணாடி சசிகலாவின் பையில் இருந்தது. 10.23க்கு தனக்குக் கண்ணாடி வேண்டும் என்று சசிகலாவை நோக்கி ஜெயலலிதா சைகை செய்தார். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது. பிறகு கண்ணாடி அணிந்தபடி ஜெயலலிதா தனது வாக்கை பதிவு செய்தார்.

கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாது தனது ஜனநாயக கடமை ஆற்றினார். நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் கருணாநிதி ஐந்து முறை தொண்டையை செருமிக் கொண்டார். அவரிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளில் இரண்டு கேள்விகளின் போது அவர் இடது கையை வலது கையின் மேல் வைத்தபடி பதிலளித்தார்.

தேனி!

ஒட்டப்பிடாரம் அருகில் உள்ள கம்மாபட்டி கிராமத்தில் வாக்குச்சாவடியின் உள்ளே தேனி ஒன்று பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அறையின் சுவரில் வைக்கப்பட்டிருந்த ஏணியில் தேனி அமர்ந்திருந்ததாகவும் அவ்வப்பொழுது பறந்து வந்து இடையூறு செய்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் தெரிவித்தனர்.

வாக்கு எண்ணிக்கை

நேற்று நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வரும் 16ஆம் தேதி துவங்கும் என்றும் துவங்கிய சில மணி நேரங்களிலேயே முடிவுகள் வெளிவரும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
இந்நிலையில் பிரபலங்கள் நேற்று ஓட்டு அளிக்க பெருமளவில் வந்ததால் சென்னையில் பரபரப்பு நிலவியது.


Saturday, April 5, 2014

இது நம்ம கட்சி!

நமக்கு எல்லாவற்றிலும் சீஸன் உண்டு. அந்தந்த சீஸனில் அதற்கு தகுந்தால் போல் ந‌ம் "பற்று" மாறிக் கொண்டே இருக்கும். இப்போது தேர்தல் சீஸன். எத்தனை நாள் தான் கட்சிகளின் காமெடி டிராமாக்களை பார்த்துக் கொண்டே இருப்பது? நமக்கு போரடிக்காதா சார்?  எத்தனை நாள் தான் ஓட்டை மட்டும் போடுவது? மக்களின் முன்னேற்றத்திற்கு அரும்பாடு படும் ஆசை நமக்கு மட்டும் வாராதா என்ன?

எனவேதான் நாமே ஒரு கட்சி துவங்கினால் என்ன என்று ஒரு யோசனை. திகைத்து நிற்காதீர்கள். முதுபெரும் தலைவர்கள் இருந்த நாட்டில் கட்சியும் அரசியலும் அத்தனை மலிவான கிள்ளுக்கீரை விஷயமாகி விட்டதே என்று நினைக்காதீர்கள். இப்பொழுதெல்லாம் கட்சி துவங்க ஒரு விவஸ்தையும் தேவையில்லை என்று உங்களுக்கும் எனக்கும் தெரிந்ததுதானே?

கட்சி என்றால் கொள்கை வேண்டுமே சார்... என்ன கொள்கை வைக்கலாம்? தமிழ் நாட்டில் அனைத்து கட்சிகளுக்கும் தமிழை காப்பாற்றுவது முக்கிய கொள்கையாக இருக்கிறது. தமிழுக்காக உயிர் விடும் தலைவர்கள் நிறைய பேர் இருப்பதால் தமிழை தொந்தரவு செய்யாமல் விட்டு விடுவோம். பாவம் தமிழ். 
மேடை பேச்சில் மயங்கி மயங்கியே தமிழ்நாட்டை தலைகீழாக மாற்றிய‌ பெருமை கொண்டவர்கள் இல்லையா நாம்? எனவே நமது கொள்கைகளும் கொஞ்சு தமிழ் மொழியில் இப்போதைய கட்சிகளை மிஞ்சுவதாக இருக்க வேண்டாமா? உதாரணமாக,

"ஊழல் அற்ற சூழலுக்கு ஊது குழலாக இருந்து சூதுவாதற்ற அரசு அமைப்போம்" என்று முழங்கலாம்...

கச்சத்தீவு பற்றி பேசாமல் கட்சி நடத்த முடியுமா? "ஆதித் தமிழன் அரிசியை உலையிலும் கடலிலே வலையையும் போட்ட வரலாற்றை பறைசாற்றும் கச்சத்தீவை மீட்க இமயத்தின் உச்சதிற்கும் சென்று போராடுவோம்" என்று பொறி பறக்க பேசினால் தானே நாலு பேராவது நம்புவார்கள். கச்சத்தீவுக்கும் இமயமலைக்கும் என்ன சம்பந்தம் என்று யார் கேட்கப் போகிறார்கள்?

"ரோடு போடுவோம்" என்று சொன்னால் என்ன சார் சுவாரஸ்யம்? "காலை மாலை வேளையில் நீங்கள் வெளியே போகையில் காலை வைக்க சாலை தருவோம்" என்றால் கட்சியின் கவிஞர் அணிக்கு தலைமை தாங்கலாமே. ரோடு போட்டோமா இல்லையா என்று யாருக்கு கவலை?

"ஊசியாய் குத்தும் விலைவாசியை பற்றி யோசி தமிழா யோசி" என்று பிரச்சாரக் கூட்டத்தில் பேசலாம்...

நம் கட்சியில் சேர்பவர்களுக்கு கட்சியே "பட்டம்" கொடுத்து கெளரவிக்கும்.
நம் கட்சியின் தலைவர்கள் பல்வேறு நகரங்களில் இருந்து வரக்கூடும். அவர்களை எல்லாம் பேர் மட்டும் சொல்லி அழைத்தால் அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்கள் நாம் என்ற பழி நேர்ந்து விடாதா? சாதா பேரில் என்ன சார் இருக்கிறது? பட்டம் வேண்டும் சார் பட்டம்... எனவே, நம் கட்சியில் சேர்பவர்களுக்கு கட்சியே "பட்டம்" கொடுத்து கெளரவிக்கும். "நெல்லையின் நெருப்பே" "மதுரையின் குதிரையே" "திருச்சியின் திருப்பமே"  "கொங்கின் சங்கே" என்று என்னவேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம் சார்...

கொள்கையெல்லாம் கிடக்கட்டும் முதலில் கட்சிக்கு என்ன பெயர்? என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. வல்லினம் மெல்லினம் இடையினம் இவற்றில் எல்லாவற்றையும் சீட்டு போட்டு குலுக்கிப் பார்த்தாயிற்று. எந்த காம்பினேஷன் வந்தாலும் ஏதோ ஒரு கட்சிப் பெயரின் சுருக்கம் மாதிரியே இருக்கு. பேசாமல் "மக்களே கட்சியின் உயிர் அப்புறம் எதற்கு பெயர்?" என்று ஒரே போடா போட்டு விடலாமா?

அது சரி தேர்தல் நெருங்கி விட்டதே நாற்பது தொகுதிகளும் வேட்பாளர்களை எப்படி தேர்வு செய்வது என்று கேட்கிறீர்களா? கவலையே இல்லை சார். கட்சியிலே மொத்தம் இருபதே பேர்தான் என்றால் கூட ஆளுக்கு இரண்டு தொகுதிகளில் போட்டியிடலாமே! "அகில இந்திய" என்ற சொல்லை கட்சியின் பெயரின் முன்னே சேர்த்தால் போதும். கட்சியின் பலம் பற்றி யார் சார் கேள்வி கேட்பது? அப்படியென்றால் "சைபர்" தான் கட்சியின் ரிசல்டா என்று கேட்கிறீர்களா? "பூஜ்யம் வெறும் கணக்கு ராஜ்ஜியமே எங்கள் இலக்கு" என்று சிரித்துக் கொண்டே பேட்டி கொடுக்க நமக்குத் தெரியாதா என்ன?

வாங்க சார் வாங்க பொதுக்குழு, செயற்குழு, பாராளுமன்ற குழு, பட்டிமன்ற குழு, நிர்வாகக்குழு, கலைக்குழு கவிதைக்குழு என்று எல்லா குழுக்களிலும் தலைவர் செயலாளர் பதவிகள் காத்திருக்கின்றன மக்கள் தொண்டாற்றும் மாபெரும் பணிக்கு உவகையுடன் அழைக்கிறோம் வாருங்கள்...!

படித்து முடித்து விட்டீர்களா? அநேகமாக இதற்குள் புதிதாக ஏதேனும் ஒரு கட்சி உண்மையிலேயே உருவாகியிருக்கக்கூடும்...அதனாலென்ன? தேர்தல் என்பது நம்மை பொறுத்தவரை அலுவலகத்தில் உணவு வேளையிலும் வீட்டிலும் அமர்ந்தபடி திகட்டத் திகட்ட வெட்டிப் பேச்சு பேசக் கிடைத்த அருமையான சந்தர்ப்பம். பொழுது போக்கு. வேறென்ன அக்கறை? நாம் எப்படிப் பட்டவர்கள் என்று நமக்குத் தெரியாதா என்ன?  உதாரணமாக, 
கக்கன் போன்ற ஒருவரை கவர்மெண்ட் ஆஸ்பத்திரி கட்டாந்தரையில் கவனிப்பாரின்றி கிடக்க விட்ட கூட்டம் நாம். காலம் மெதுவாகத்தான் வேலை செய்யும். இப்போது இருப்பவர்கள் போதாதென்று புதிது புதிதாய் தலைவர்கள் வருவார்கள், நாட்டையும் நம்மையும் சுரண்டுவார்கள். "கூட்டத்தில் கூடி நின்று கூவிப்பிதற்றலன்றி நாட்டத்தில் கொள்ளாரடி கிளியே நாளில் மறப்பாரடி" என்பதற்கு அர்த்தம் விளங்கும் வரை அதுவே நமக்குச் சரியான தண்டனை.