தலைப்பை படித்தவுடன் நமக்கு மகிழ்ச்சியாக இருக்குமே? ஒருவர் முகத்தில் கரி பூச வேண்டுமென்றால் நம் அனைவருக்கும் வரும் மகிழ்ச்சியை கேட்கவா வேண்டும்! ஆனால் யார் முகத்தில் பூச வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்...
ஒரு வாரமாக "நிலக்கரி வெட்டுவதற்கு ஒதுக்கீடு செய்வதில் ஊழல்" என்று நாடே அல்லோலகல்லோலப்படுகிறது. போதாத குறைக்கு அன்றாட பாராளுமன்ற நடவடிக்கைகளும் நிறுத்தப் படுகின்றன. இவர்கள் "வேலை" பார்ப்பதே ஆண்டுக்கு சில நாட்கள்தான். அதிலும் இப்போது இந்த "புதிய அணுகுமுறை" வேறு! உத்தம சிகாமணிகள் நிரம்பிய எதிர்கட்சிகள், கரித்துறையை வைத்திருந்த உத்தமருக்கும் உத்தமரான பிரதமர், பதவி விலகினால்தான் ஆயிற்று என்று கிளம்பியிருக்கிறார்கள்.
இந்த அரசு "பூசி மெழுகும்" துறை ஒன்றை வைத்திருக்கிறது. "நிதி" இல்லாமல் எதையாவது பூச முடியுமா? எனவே நிதி அமைச்சர் தான் இந்தத் துறையின் தலைவர். எந்தக் கொள்ளை ஊருக்குத் தெரியும்படி "ஒழுக" ஆரம்பிக்கிறதோ உடனே "பூசி மெழுகும்" துறையின் தலைவர் அனைத்து ஊடகங்களுக்கும் பேட்டி என்ற பெயரில் விளக்கம் கொடுப்பார். இப்படித்தான், நிலக்கரி ஒதுக்கீட்டின் ஓட்டைகளை பூசி மெழுக, சில நாட்களுக்கு முன், நம் "ice cream" புகழ் சிந்தனை சிற்பி ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது, நிலக்கரி வெட்டி எடுக்காத வரை ஒரு நட்டமும் இல்லையாம். உரிமம் தானே வழங்கப்பட்டது என்றொரு விளக்கம். அதாவது சார், நமக்கு ஒரு நூறு ஏக்கர் நன்செய் நிலம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம் (கனவில் தான்!). அதை நமக்கு "வேண்டப்பட்டவர்களுக்கு" குறைந்த விலைக்கு ஒத்திக்கு விடுகிறோம். உடனே பொறுப்புள்ள உறவினர் ஒருவர், ஏனப்பா இதனால் உனக்கு எத்தனை நட்டம் என்று கேட்டால், நாம், "என்ன புத்தியில்லாமல் பேசுகிறீர்கள், அவர் இன்னும் அந்த நிலத்தில் விளைச்சல் ஏதும் செய்யவில்லையே? நிலத்தை தானே ஒத்திக்கு விட்டேன்..." என்று நாம் சொன்னால் அதில் எவ்வளவு "புத்தி" இருக்கிறதோ அவ்வளவு அர்த்தமுள்ளது இந்த விளக்கம்.
சரி சார் இப்போது இன்னொரு பக்கம் பார்ப்போம் இந்த எதிர்கட்சி இருக்கிறதே...ஆஹா தேச நலனில் எவ்வளவு அக்கறை பார்த்தீர்களா? இவர்கள் கர்நாடகாவில் அடிக்கும் கூத்தென்ன டெல்லியில் பேசும் பேச்சென்ன! ஆனால் ஒன்று சொல்ல வேண்டும். மற்ற கட்சிகள் போல் இல்லாமல், இவர்களின் வண்டவாளத்தை இவர்களே தண்டவாளத்தில் ஏற்றும் பழக்கம் இருக்கிறது. இதை நாம் பாராட்டாமல் இருக்க முடியுமா?
இந்த கரி விஷயத்திலும் அப்படித்தான். பிரதமரை போட்டுத் தாக்கும் இவர்களின் கட்சியில் ஒரு மாநிலத்தின் முதல்வர், 2007ல் பிரதமருக்கு இவர் கடிதம் எழுதியிருக்கிறார் (தமிழ்நாட்டிலிருந்து மட்டும் தான் டெல்லிக்கு தபால் சேவை இருக்கிறதா என்ன?). இன்னும் துவங்காத ஒரு தனியார் நிறுவனத்தின் விபரம் எழுதி, அதற்கு நிலக்கரி உரிமம் வழங்க வேண்டும் என்று சிபாரிசு செய்கிறார். ஒரு முதல்வருக்கு, இன்னும் ஆரம்பிக்காத ஒரு தனியார் நிறுவனத்தை பற்றிய தகவல்கள் எப்படி தெரியும்? எதற்கு இந்த அக்கறை? இதை எவரேனும் கேட்டால், இந்த எதிர்கட்சி, வாழைப்பழத்தை உறித்து எண்ணெய் உள்ளே போட்டால் போல வழுக்கு வழுக்கென்று வழுக்குகிறார்கள்.
இந்த இரண்டு தேசிய கட்சிகளின் பின்னே சந்தர்பவாதம் மட்டுமே சாக்காய் வைத்து கோஷ்டி கானம் பாடித்திரியும் சுயநலமிக்க உதிரிக்கட்சிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் நான்கைந்து தேறும்.
இப்போது யார் முகத்தில் கரி பூச வேண்டும் என்று கேட்கிறீர்களா? வாருங்கள், ரகசியமாக காதில் சொல்கிறேன். ஆளுக்கொரு கரிக்கட்டையை எடுத்துக்கொள்வோம். வேறு யாரும் அறியாத வண்ணம் கண்ணாடி முன்னால் நின்று நம் முகத்தில் நாமே பூசிக்கொள்வோம். சும்மா பூசிக்கொள்ள கூடாது சார், "பாரத நாடு பழம்பெரும் நாடு நீர் அதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்" என்று கண்ணாடியை பார்த்து உரக்கச் சத்தம் போட்டபடி பூசிக்கொள்ள வேண்டும்! முடிந்தால் கண்ணாடியிலும் கரி பூசி வைப்போம். கண்ணாடியில் மனசாட்சி தெரியும் என்று பெரியவர்கள் சொல்கிறார்களே!
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...
ReplyDelete