/ கலி காலம்: பால் ஐஸ் சாப்பிடுவாரா ப.சிதம்பரம்?

Saturday, July 21, 2012

பால் ஐஸ் சாப்பிடுவாரா ப.சிதம்பரம்?

சிறுவயதில் தொலைக்காட்சியில் சிதம்பரத்தை பார்க்கும் பொழுது அவரின் நடையின் பொலிவும் பேச்சின் தெளிவும் பார்த்து, இவர் உண்மையிலேயே நாட்டுக்காக உழைப்பதற்கு மந்திரியானவர் போலும் என்று எண்ணியிருக்கிறேன். நாம் எவரை அதிகம் நம்புகிறோமோ அவர்களிடம் அதிகம் ஏமாறுவதுதானே சார் உலக வழக்கம். இதிலும் அப்படித்தான். சில வருடங்களாகவே சிதம்பரம் "படிப்படியாக‌ இறங்கி" வருகிறார். உங்கள் வேகம் போதாது என்று எவரேனும் இவரிடம் சொல்லியிருப்பார்கள் போலும். சமீப காலமாக இரண்டு இரண்டு படிகளாக தாவித் தாவி "இறங்க" முயற்சி செய்கிறார். அவரின் பேச்சுக்கள் அப்படித்தான் இருக்கின்றன.

அதான் சமீப காலமாக இவர் வாயைத் திறந்தாலே என்ன பேசப் போகிறாரோ என்று பயமாக இருக்கிறது. சில மாதங்கள் முன்னர் ஊழல் பற்றிய முக்கியமான கேள்விக்கு, "எனக்கு மறதி அதிகம்" என்றார். மக்களுக்கு மறதி அதிகம் என்று தெரிந்துதானே இவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசுகிறார்கள், பிறகு தங்கள் வசதிக்கேற்ப மாற்றி சொல்லிக் கொள்ளலாமே...
மறதி அதிகமாக இருப்பவர் கையிலா நம் தேசத்தின் முக்கியமான பொறுப்புகளை கொடுத்து வைத்திருக்கிறோம்? சரி விடுங்கள். போன மாதம், தான் election வழக்கில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி ஆன போது, தனக்கே வெற்றி என்றார். என்ன சார் இது? தான் தாக்கல் செய்த மனு தள்ளுபடி ஆனால் தனக்கு வெற்றி என்று சொல்வதை மூளைக்குள் எப்படி விட்டுப் பார்த்தாலும் logic உதைக்கிறதே...சரி இதையும் விடுங்கள். சென்ற வாரம் இவரின் அறிவு ஊற்றில் பெருகி வழிந்த சிந்தனை ஆற்றில் சராசரி மக்கள் மூச்சு முட்டியல்லவா போனார்கள்?



சிதம்பரம் என்ன சொல்கிறார்? மக்களே, நாளும் பொழுதும் இருபது ரூபாய் கொடுத்து ice cream சாப்பிடுகிறீர்களே, அரிசி விலை ஒரு ரூபாய் ஏறினால் ஏன் கூப்பாடு போடுகிறீர்கள் என்கிறார். இதற்கு எதிர்ப்பு வந்த பின் அவர் தந்த பின் விளக்கம் அதை விட அற்புதம். இந்த விலையேற்றம் செய்வதே விவசாயிகள் வாழ்வை உயர்த்தத்தானாம்...நல்ல வேளை நம் ஊரில் காது குத்தும் பழக்கம் இன்னும் இருக்கிறது. விவசாயிகள் வாழ்வா? நாற்பது ஆண்டு காலத்தில் நதிகளை தேசியமயமாக்கவும், இணைப்பு செய்யவும் ஒரு கல்லை கூட நகர்த்தாத  இவர் சார்ந்திருக்கும் அரசு, விவசாயம் பற்றி பேசுகிறது! உணவு கோடவுனில் லட்சக்கணக்கான தானியங்கள் வீண் செய்தாலும் செய்வோம். இலவசமாக ஏழைகளுக்கு கொடுக்க மாட்டோம் என்று சொல்லிய இவர் சார்ந்திருக்கும் அரசு விவசாயிகளின் ஏற்றம் பற்றி பேசுகிறது! சபாஷ் போடுவோம் சார்.

மினரல் வாட்டர் விலை கொடுத்து வாங்கி குடிக்கத் தெரிகிறதே என்கிறார்...அய்யா சிதம்பரம் அவர்களே, நாங்களா மினரல் வாட்டர் குடிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டா வளர்ந்தோம்? தேசத்தின் குறுக்கும் நெடுக்கும் உள்ள ஆறுகளில் மண் அள்ளப்படுவதை மௌனமாக பார்த்துக் கொண்டிருக்கும் அரசுகள், நாடு வளர்கிறது என்ற பெயரில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சொகுசு கட்டடங்கள் கட்ட ஊக்குவிக்கும் அரசுகள், முறையான கழிவு நீரேற்றுத் திட்டம் போடக்கூடத் தெரியாத அரசுகளினால் குடி நீரில் கலக்கும் கழிவு, எந்த தொழிற்சாலையும் எந்த ஆற்றிலும் எதையும் கலக்கலாம் என்ற உங்கள் அரசின் பெருந்தன்மை இதெல்லாம் சேர்ந்து வீட்டில் குழாய் நீர் இன்றி எங்களை பாட்டில் நீர் குடிக்க வைத்திருக்கிறது திரு சிதம்பரம் அவர்களே...

இருபது வருடங்கள் முன்பு வரை, நம் தெருக்களில் மதிய வேளையில் "ஐஸ் பால் ஐஸ்" என்று கூவிக்கொண்டே "டப் டப்" என்று ஐஸ் பெட்டி மூடியை திறந்து மூடியபடி வண்டியை தள்ளிக் கொண்டு வருவாரே...அந்த பால் ஐஸ் தான் நம் நாட்டில் கோடிக் கணக்கான பேர் அறிந்த "ice cream". கைக்கும் வாய்க்கும் சரியாக இருக்கும் வருமானத்தில் வாழ்க்கை நடத்தும் கோடிக்கணக்கான குப்பன்களும் சுப்பன்களும் குளுகுளு அறையில் அமர்ந்தபடி ice cream சாப்பிடுவதில்லை. இருபது ரூபாய் இ சாப்பிடுகிறீர்களே என்கிறார் நம் நாட்டின் மூத்த அமைச்சர்!

சரி, இவர் சொல்லும் வாதத்தையே வைத்துக் கொள்வோம். அப்படி என்றால் வசதி படைத்தவர்களுக்கு அதிக‌ விலை ஏழைகளுக்கு குறைந்த‌ விலை என்றல்லவா சொல்ல வேண்டும். அப்படி இவர் சொல்லவில்லையே? என்ன வேண்டுமானாலும் பேசலாம் பிறகு எப்படி வேண்டுமானாலும் விளக்கம் சொல்லலாம் என்று இருக்கும் நாட்டில் இவர் இத்தோடு விட்டாரே என்று நிம்மதியாக போக வேண்டியதுதான்.


இல்லையென்றால்,

"தினமும் காபி குடிக்காமலா இருக்கிறீர்கள்? பால் விலை உயர்ந்தால் மட்டும் ஏன் பொங்குகிறீர்கள்" என்று இவர் கேட்டாலும் கேட்பார்.

"தெருவில் வடை கடைகளில் எப்போதும் கூட்டமாக இருக்கிறதே...பஜ்ஜி வடை சாப்பிடத் தெரிகிறது எண்ணெய் விலை ஏறினால் எதற்கு கேள்வி கேட்கிறீர்" என்று இவர் கேட்கலாம்.

"எல்லோரும் மாட்டு வண்டியிலா போகிறீர்கள்? ஏதோ ஒரு வாகனத்தில் தானே போகிறீர்கள். பெட்ரோல் டீசல் விலை உயரத்தானே செய்யும்?" எனலாம்.

தான் பேசியது தவறு, பொறுப்பற்றது மற்றும் அர்த்தமற்றது என்பதை சிதம்பரத்திற்கு எப்படி புரிய வைக்கலாம்? அன்பால் அரவணைப்பது தான் தமிழர் பண்பாடு. எனவே இவரின் தொகுதி மக்கள் அடுத்த தேர்தல் முடிந்தபின் ஐந்து வருடங்கள் இவரை சிவகங்கையிலேயே வைத்துப் பார்த்துக் கொள்ளலாம். தினமும் ஒரு பால் ஐஸ் மற்றும் மினரல் வாட்டர் கேன் கொடுத்து உபசரிக்கலாம். ஓய்வாக‌ வீட்டில் அமர்ந்து இவர் யோசிக்கையில், தான் பேசியது தவறு என்று தோன்றாமல் போய் விடுமா என்ன?

ஒரு மிகப்பெரிய நாட்டின் மூத்த அமைச்சர், உலகமே பார்க்கும் தொலைக்காட்சியில் இவ்வளவு பக்குவமின்றி பேசுகிறார் என்றால், இவர்கள் நான்கு சுவர்களுக்குள் நடத்தும் மந்திரி சபை கூட்டங்களில் எப்படியெல்லாம் பேசுவார்கள்? "முகமது பின் துக்ளக்" படத்தில் சோ நடத்தும் மந்திரிசபையை தூக்கிச் சாப்பிட்டு ஏப்பம் விட மாட்டார்கள்?

3 comments:

  1. ஒரு மிகப்பெரிய நாட்டின் மூத்த அமைச்சர், உலகமே பார்க்கும் தொலைக்காட்சியில் இவ்வளவு பக்குவமின்றி பேசுகிறார் என்றால், இவர்கள் நான்கு சுவர்களுக்குள் நடத்தும் மந்திரி சபை கூட்டங்களில் எப்படியெல்லாம் பேசுவார்கள்? "முகமது பின் துக்ளக்" படத்தில் சோ நடத்தும் மந்திரிசபையை தூக்கிச் சாப்பிட்டு ஏப்பம் விட மாட்டார்கள்?

    சுருக்கமாகச் சொன்னால்
    பணத்திமிர் பதவித் திமிர் எனத்தான் சொல்லவேண்டும்
    என்ன செய்வது இவர்கள் என்ன செய்தாலும்
    என்ன பேசினாலும் ஐந்து ஆண்டுகள்
    சகித்துத்தான் ஆகவேண்டுமென்பது நம் விதி
    அனைவரின் ஆதங்கத்தையும் மிக அழக்காகப்
    பிரதிபலிக்கும் அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    (ப.சியும் நிச்சயம் தொடருவார் )

    ReplyDelete
  2. உங்கள் கட்டுரைக்கு பதில்

    கலி காலம்.

    ReplyDelete
  3. பதவி தந்த தைரியம் தான்..... :(

    ReplyDelete