/ கலி காலம்: ஆடையில்லா மனிதனும் Android கைபேசியும் பகுதி 1

Saturday, July 14, 2012

ஆடையில்லா மனிதனும் Android கைபேசியும் பகுதி 1



ஆடையில்லா மனிதன் அரை மனிதன் என்றார்கள் நம் முன்னோர்கள். இப்போதோ, ஆள் பாதி Android மீதி என்று ஆகி, காலைக்கடன் தவிர மற்ற அனைத்து "கடன்"களையும் mobile போனிலேயே செய்யக் கூடிய நிலை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். ஊரே வடக்கு பக்கம் போகும் போது நாம் வராண்டாவில் உட்கார்ந்து வானத்தை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? பழமொழிகள் எல்லாம் எதற்கு இருக்கின்றன? நமக்கு ஏற்றபடி பயன்படுத்திக் கொள்ளத் தானே? எனவே "ஊரோடு ஒத்து வாழ்" என் உதவிக்கு வர, நானும் "latest" android mobile ஒன்றை வாங்க முடிவு செய்தேன்.

முன்னரெல்லாம் தள்ளுவண்டியில் பேரிச்சம்பழத்தை மலை போல் குவித்து கூவி விற்பார்கள். கிட்டத்தட்ட அந்த நிலையில் தான் மொமைல் சந்தையும் இருக்கிறது. ஆனால் நாம் ரோட்டில் விற்கும் பொருட்களை வாங்குவோமா? எனவேதான் மொமைல் கம்பெனிகள் குளுகுளு கடையில் புன்னகை பொருந்திய விற்பனை பிரதிநிதிகளின் புழுகு மூட்டைகளுடன்ன் ஒன்றுக்கு பத்தாய் விலை சொல்லி விற்கிறது. அதில் ஒன்றை வாங்கி கையில் வைத்துக்கொண்டே திரிந்தால் தானே நமக்கு ஒரு கெத்து?

பல் குத்தும் குச்சியில் கூட "brand" பார்த்து வாங்கும் இன்றைய காலத்தில் ஏதோ ஒரு மொபைலை வாங்கி விட முடியுமா? ஆராய்ச்சி தேவைபடுகிறது sir ஆராய்ச்சி!.முதலில் நாம் வாங்க வேண்டிய பொருளுக்கு சந்தையில் உள்ள‌ "brands" பற்றி ஊரில் என்ன பேச்சு உலவுகிறது என்று கண்ணையும் காதையும் தீட்டி வைத்துக் கொண்டு சில நாட்களோ வாரங்களோ கழிக்க வேண்டும்.

"Phone for humans" என்றொரு mobile phone விளம்பரம் வருகிறது. அதாவது "நீ மனுசனா இருந்தா இந்த போன் வாங்கு" என்பதை நாசூக்காக சொல்கிறார்களாம். கூடவே ஒரு டம்பளரில் தண்ணீர் வைத்துக் கொண்டே இதைப் பார்ப்பது நலம். இதன் விலை கேட்டால் "மனுசனுக்கு" விக்கல் வருவது நிச்சயம். நாற்பதாயிரம் ரூபாயாம். ந‌ம் மன்மோகன் சிங்கின் பொய் கணக்கு படி பார்த்தால் கூட, வறுமைக் கோட்டின் கீழ் இருக்கும் நான்கு குடும்பங்களின் ஆண்டு வருமானம் இது. எப்படி இப்படிப்பட்ட விலையில் போன் விற்கிறார்கள்? இந்த விலையில் போன் வாங்கினால் நம் வாழ்க்கை சாமியார் பூனை வளர்த்த கதை ஆகி விடாதா சார்? இந்த போனை வைத்து கொண்டு பஸ்ஸில் போக முடியுமா? கார் வேண்டியிருக்கும். ரயிலில் போக முடியுமா? கொஞ்சம் அசந்தால் நம்மூர் ரயில்களில் நம்மையே அள்ளிக் கொண்டு போய் விடுவார்கள்...போனை விடுவார்களா? எனவே விமானத்தில் தான் போக வேண்டும். போன் பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்து பார்த்தே ஏதேனும் "mobile phone syndrome" ஏதேனும் வந்தாலும் வந்து விடும். எனவே இந்த "மனுசனா இருந்தா இந்த போனை வாங்கு" விளம்பரம் பார்க்கும் போது பூனை "மியாவ் மியாவ்" என்று காதில் கத்துகிறது. ஒரு சிக்கல் பெரிதாகிக் கொண்டே வந்தால் உடனே பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு மன்மோகன் சிங் ஏற்பாடு செய்து விளக்கம் சொல்வது வழக்கம். அது போல் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்து, "பாருங்கள் பத்திரிகையாளர்களே, எங்கள் அரசின் வறுமை கோடு விளக்கத்தை விமர்சித்தீர்களே...நம் நாட்டில் எத்தனை நாற்பதாயிரம் போன்கள் விற்கின்றன பாருங்கள் இன்னுமா நாட்டில் ஏழைகள் இருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள்" என்று கேட்டால் நாம் வாயை மட்டுமா மூடிக்கொள்வோம்? ஒன்பது வாசல்களும் தானே மூடிக்கொள்ளாதா என்ன?

Android phone வாங்கும் திட்டத்தை செயல்படுத்த காத்திருந்த ஒரு நாள், busஸில் செல்லும் பொழுது ஒரு இளைஞர் கூட்டம் ஏறியது. அவர்கள் பேச்சில் "ginger bread வந்து மாதக்கணக்காச்சு,  ice cream sandwich வர இவ்வளவு தாமதமாகும் என்று நினைக்கவில்லை. எவ்வளவு பேர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்" என்று காதில் விழுந்தது. ஆஹா! நம் இளைஞர்கள் சுயநலம் மிக்கவர்கள், சமூக நலன் பற்றிய அக்கறை குறைவு என்று யார் சொன்னது என்று எனக்குள் ஆத்திரம் பொங்கியது. எத்தியோப்பியாவில் ரொட்டி கூட கிடைக்காமல் அன்னிய நாடுகளின் உதவிக்காக உணவின்றி காத்திருக்கும் மக்களைப் பற்றித் தான் இந்த இளைஞர் கூட்டம் அக்கறை காட்டுகிறதோ என்று நினைத்து அவர்களை உச்சி முகர நினைத்து எழுந்தேன். உள்மனம் என்னை இரண்டு உதை விட்டு "பேசாமல் கிட. அவர்கள் android latest version ice cream sandwich பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்" என்று அமர வைத்தது. நல்ல வேளை. நாடு அதன் போக்கில்தான் இருக்கிறது என்ற நிம்மதியுடன் பயணத்தை தொடர்ந்தேன்...

நானும் ஆன்ட்ராய்ட் சமூகத்தின் அங்கத்தினன் ஆகப் போகிறேன் என்பதை கேள்விப்பட்ட நண்பன், "tablet" வாங்கு என்றான். எனக்கோ இந்த tablet விளம்பரங்கள் பார்க்கும் பொழுது ஒரே கவலையாக இருக்கும். உலகம் போகும் போக்கில், ஏதேனும் ஒரு "காந்தக் கண்ணழகி" தொலைக்காட்சி விளம்பரத்தில் தோன்றி, "இன்னும் நீங்கள் சாப்பாடா சாப்பிடுகிறீர்கள்...தினமும் ஒரு மணி நேரம் சாப்பாட்டில் வீணடிக்கலாமா? எப்படி உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும்? இந்த tablet வாங்கினீர்கள் என்றால் சாப்பிடத் தேவையில்லை. tabletடே உங்களை நாள் முழுதும் தேவையான energy கொடுத்து சார்ஜ் செய்து விடும்" என்று ஏதேனும் சொல்லித் தொலைத்தால் நாம் சும்மா இருப்போமா? வாங்கி விடுவோமே...நல்ல வேளை, விஞ்ஞானம் அந்தளவு இன்னும் வளரவில்லை போலும். தப்பித்தோம். இப்போது வரைக்கும் tablet அதன் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பது நாம் செய்த புண்ணியம்.

ஒரு வழியாக சில phone மாடல்களையும் brandகளையும் மனதில் நிறுத்தி கடைக்கு கிளம்பினோம். இது நாள் வரை "விரல் நுனியில் உலகம்" என்ற android வலையிலிருந்து தப்பித்திருந்த ஆடு, தன் தலையில் தானே மஞ்சள் தண்ணியை ஊற்றியபடி mobile phone கடைக்குள் நுழைவதை மகிழ்ச்சியுடன் பார்த்தபடி உடன் வந்தார் மனைவி. கடையில் கண்ட கதைகளை அடுத்த வாரம் பார்ப்போம்.

7 comments:

  1. ரொம்பவே சுவையாக எழுதியிருக்கிறீர்கள். ஏன் தொடரும் போட்டீர்கள் என்று கேட்கத் தோன்றுகிறது.

    நக்கல் நடை தங்களுக்கு நன்றாக வருகிறது.

    இதே நடையைக் கையாண்டு நிறைய எழுதுங்கள்.

    சாதிக்கலாம்.

    பாராட்டுகள். வாழ்த்துகள்.

    நன்றியும்கூட நண்பரே.

    ReplyDelete
  2. அடுத்த பகுதியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் தலைவா...

    ReplyDelete
  3. //அவர்கள் பேச்சில் "ginger bread வந்து மாதக்கணக்காச்சு, ice cream sandwich வர இவ்வளவு தாமதமாகும் என்று நினைக்கவில்லை. எவ்வளவு பேர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்" என்று காதில் விழுந்தது.//
    அவர்கள் Android நிரலி எழுதும் வேலை செய்பவர்களாக இருந்தால் அவர்கள் பேச்சு ஆரோக்கியமானதுதான்.

    ReplyDelete
  4. ஆடு மாட்டிக்கிச்சா.... :(

    அடுத்த பகுதிக்கான காத்திருப்புடன்....

    ReplyDelete
  5. For one, who can not live for himself on his own terms, but wants to do as others do, this experience is a must indeed.

    ReplyDelete
  6. m..m.. same story. same feeling.

    ReplyDelete