ஸ்ஸ்ஸ்...அப்பாடா...காலை நீட்டி அமர்ந்தாயிற்று. concrete காடுகளுக்குள் கண்ணை மூடிக்கொண்டு நீ ஓட்டும் நகரத்து வாழ்க்கையில் மறந்த இயற்கையின் ஸ்பரிசம் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லியபடி இருபுறமும் இருந்த வயல்களும் மரங்களும் ரயிலை துரத்தியபடி வந்து என் கண்களை வருடியது காற்றின் கரங்களால்...
நம்மில் எத்தனை பேருக்கு சார் கண்ணை மூடியவுடன் தூக்கம் வருகிறது? வீட்டுப் பெண்ணின் திருமணம் முதல் விவேகமற்ற petrol விலையேற்றம் வரை அவரவருக்கு ஆயிரம் கவலைகள்...குடும்பஸ்தர் என்றால் "luggage" மேல் ஒரு கண் வைத்திருக்கும் பழக்கம் தானாகவே வந்து விடும். திருடர்கள் மட்டுமின்றி, நம் ஆதி உலகின் மூத்த குடியினமான "கரப்பான்" மீதும் ஒரு கண் இருக்க வேண்டும். டினோசர் போன்றவை அழிந்து விட, கரப்பான் மட்டும் பல்கி பெருக என்ன காரணம்? இவை சிறு வயதில் Delhi, Mumbai, Chennai போன்ற பெருநகரங்களுக்கு போகும் ரயில்களில் குடும்ப நோக்கில் பயணித்து, பிறகு Kasi, Rameswaram, Sri rangam போகும் ரயில்களில் ஏறி வயதான காலத்தை கழித்து புண்ணியம் தேடிக் கொள்வது போல் தெரிகிறது ...எனவே கடவுள் இதை அழியாத இனமாக ஆக்கி விட்டாரோ என்னவோ? இவற்றை பற்றி இப்படி பேசுவதால் நம் மேல் கரப்பான்களுக்கு கோபம் வருவது இயற்கைதானே? எனவேதான் நாம் அசரும் நொடியில், கழுத்துக்கு பின்புறம் வந்து குறுகுறுப்பு காட்டுவதும், ஊரிலிருந்து எடுத்து வரும் தின்பண்டங்கள் மேல் ஏறிக்கொண்டு நம் வீடு வரை வருவதுமாக பழி தீர்த்து கொள்ளும்.
வடிவேலுவின் "வாம்மா மின்னல்" போல நம் கால்களின் குறுக்கே சரட்டென்று ஓடி மறையும் எலிகளில் நோஞ்சான் எலியை நீங்கள் பார்த்ததுண்டா? வாய்ப்பு இல்லை. ஏனென்றால் நம்மை பற்றி நன்கு அறிந்தே எலிகள் ரயிலில் குடியிருக்கின்றன. வெறும் வாயிலேயே அவல் மெல்லும் நாம் ரயிலில் சதா கொறித்து கொண்டே இருப்போம் என்று எலிகளுக்கு தெரியாதா?. நல்ல வேளை, இதுவரை என்னுடன் எந்த எலியும் வீட்டுக்கு வரவில்லை. நம்முடன் ரயில்வேயும் வளர்ந்து கொண்டே இருக்கிறது சார்! - அதான் சமீபத்தில் பீகாரில் ஒரு ரயிலில் மலைப்பாம்பு வந்திருக்கிறதே! ஒரே ஒரு முறை இதை போய் பெரிது படுத்துகிறாயே என்று சிலர் கோபிக்கலாம்...எலி கூட பல ஆண்டுகளுக்கு முன் முதல் முறையாக ரயிலில் நுழைந்திருக்கக்கூடும் என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும்...
நடைபாதை அருகில் இருக்கும் இருக்கையில் உள்ளவர்கள் கூடுதல் "இடி" தாங்க வேண்டும். நாட்டியப் பயிற்சியை நடுவிலே கைவிட்டது போல் இடையையும் நடையையும் வைத்திருக்கும் சிலர், அவற்றின் சில "முத்திரை" களை நம் மேல் "இடித்து" அபிநயம் பிடிப்பர். பல மணி நேர ரயில் பயணத்தில் பத்து நிமிடம் தூங்குவதற்குள் எத்தனை சிக்கல்கள் ஏகாம்பரனே !
குறட்டை நம் பேச்சை கேட்டா வருகிறது? அதிலும் ஓங்காரத்தை ஓராயிரம் வகையில் வெளிப்படுத்தும் எத்தனை விதமான குறட்டைகள்! குயிலுக்கு தொண்டை கட்டியது போல் சில மென்மையும் கரகரப்பும் சேர்ந்து இருக்கும்...பேருந்தை, bus stand சேர்ந்ததும் டிரைவர் "off" செய்யும் பொழுது "air" release ஆவது போல் சிலர் "ஸ்ஸ்" என்று அதிக சத்தத்துடன் துவங்கி மெதுவாய் குறைந்து நிறைப்பது போல் என்று குறட்டை விடுவார்கள்.... இரண்டு ஆண் சிங்கங்கள் நேரெதிர் பார்த்து கொண்டால் ஒரு கர்ஜனை வருமே...அது போல் சில...அடி பம்பில்
தண்ணீர் "tight" ஆக இருந்து, மெதுவாக அடித்தால் "ஷ்ஷ்" என்று சத்தம் வருமே...அது போல சில...எத்தனை வகை குறட்டைகள்! சமீபத்தில் ஒருவர், ஆற்று பாலத்தின் மேல் ரயில் போகையில் வரும் வித்தியாசமான சத்தத்திற்கு ஏற்ற தாளக்கட்டில் ஒருவர் "ஏறி இறங்கி" குறட்டை ஒலி எழுப்பிக்கொண்டிருந்தார்...கைகுலுக்கி பாராட்ட வேண்டும் போல இருந்தது...
பொருட்களுக்கு ISO தர நிர்ணயம் போல சில மனிதர்களுக்கும் நாம் கொடுக்க வேண்டும் சார்...இவர்களில் சிலருடன் நாம் பயணம் செய்யும் பாக்கியம் கிட்டியிருக்கும்...இவர்கள், டக்கென்று "berth" ஏறி படுத்து விட மாட்டார்கள். முதலில் "சுத்தம்" குறித்து "test" செய்வார்கள். இதற்கெனவே வீட்டிலிருந்து ஒரு பழைய பேப்பர் எடுத்து வந்திருப்பார்கள் .அதை அப்படியே பயன்படுத்தினால் பேப்பர் வேஸ்ட் ஆகிவிடும் என்பதால் அதை கிழித்து, ஒரு சிறு பகுதியை கொண்டு "berth" மேல் தேய் தேய் என்று தேய்ப்பார்கள். நமக்கோ "berth" cushion கரைந்து விடுமோ என்று கவலையாக இருக்கும். வெள்ளை கலர் பேப்பர் பழுப்பு நிறமாக மாறினால்தான் அவர்களுக்கு திருப்தி. ரயில்வேயை நாலு வார்த்தை நாசூக்காக திட்டியபின் அழுக்கு பேப்பரை வெளியே போட்டு விட்டு berth ஏறி படுத்தால்தான் இவர்களுக்கு தூக்கம் வரும். இதை பார்த்து பாடம் படித்த நம்மில் பலருக்கு அடுத்த முறை பேப்பர் எடுத்து வர வேண்டும் என்று தோன்றும். ஆனால், ஒவ்வொரு முறையும் தோன்றுவதோடு சரி.
இதையெல்லாம் ரசிக்கும் பொழுது, முதல் பத்தியில் சொன்ன காற்று நம் கண்களின் மேல் பிளாஸ்திரி ஒட்டுவது போல தூக்கம் கொடுக்கும்...அப்புறமென்ன...ஓராயிரம் குறட்டை வகைகளில் நமக்கென்று இருக்கும் ஒன்றை தேர்ந்தெடுத்து, தூங்க வேண்டியதுதான்...
பி.கு :
போன வாரம் சித்தர் பற்றி சொல்லிவிட்டு அப்படியே விட்டால் எப்படி? என்று தோன்றலாம்...எதையாவது அப்படியே விடும் பழக்கும் நமக்கு உண்டா? சித்தர் புத்தகங்கள் எல்லாம் "டிரங்கு பெட்டி"யில் போட்டு பரணில் போடுவதுதான் சார் ஊர் வழக்கம். ஆமாம், பரண் இருக்கும் வீடுகள் இப்போது எங்கு இருக்கிறது? வீடே பரண் மாதிரியல்லவா இருக்கிறது என்று கேட்கிறீர்களா? அதுவும் சரிதான்.
சொல்ல முடியாது...காலம் போகும் போக்கில் "millennium சித்தர்" [இப்போதெல்லாம் எந்த பெயரும் modern ஆக இருந்தால்தான் நமக்கு ருசிக்கிறது...] என்று தனக்குத் தானே பெயர் வைத்து கொண்ட எவரேனும் "கைகொள்ளா பணம் சேர்த்து கணக்கில்லா இன்பம் பார்த்து
நோகாமல் நொங்கு தின்று வாழ்ந்திருப்பது எக்காலம்?"
என்று பாடினாலும் பாடலாம். ஆஹா! நமக்கும் காலத்துக்கும் பொருத்தமாக இருக்கிறதே என்று இவர் பின் நாம் சுற்றினாலும் சுற்றலாம்...!