/ கலி காலம்: அடக்கடவுளே...உனக்குமா இந்த...?

Sunday, March 31, 2013

அடக்கடவுளே...உனக்குமா இந்த...?

முன்னரெல்லாம் மொட்டை அடித்துள்ள எவரையேனும் பார்த்தால் "திருப்பதியா?" என்று கேட்போம். இனிமேல், நீளமாக "punk style " முடி வைத்திருப்பர்களைப் பார்த்தால் "திருப்பதியா?" என்று கேட்க வேண்டும் என்ற நிலைமை வந்து விட்டது சார்...

அதான்...ஏப்ரல் மாதம் முதல் 31 அங்குலத்திற்கு மேல் முடி காணிக்கை கொடுப்பவர்களுக்கு இலவச லட்டு என்றுஅறிவித்திருக்கிறார்களே...புரட்சிகரமான திட்டங்களை அரசியல்வாதிகள் தான் அறிவிக்க வேண்டும் என்று யார் சொன்னது? வணிகத்தின் வாயில்களாகி விட்ட கோயில்கள் கூட நம் நாட்டில் "புரட்சி" செய்யலாம் சார்...

சரி, பக்தர்களை "பரவசப்படுத்தும்" பணியே தங்கள் கடமை என்று நினைத்திருந்தால், முடி காணிக்கை செய்வோருக்கு கூடுதல் நேர தரிசனம் என்று சொல்லியிருக்கலாம்..அதை விட்டு இதென்ன சார் காமெடி? ஒரு வேளை "மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது" என்பது இது தானோ?

ஏற்கெனவே முடி வணிகம் எப்படிப்பட்ட "பிஸினஸ்" என்பது நமக்குத் தெரியும், இந்தப் புதுப் புரட்சி மூலம், முடிக் காணிக்கை செலுத்தும் இடத்திற்கு அருகிலேயே "தைலம்" விற்கும் கடைகளுக்கு காண்ட்ராக்ட் விட்டு கூடுதல் "பிஸினஸ்" பார்க்க‌த் திட்டம் போட்டிருக்கிறார்களோ என்னவோ...

ஆனால் நாம் பேசாமல் லட்டு வாங்கி வந்து விடுவோமா என்ன? நம்மூர்காரர்களுக்கும் முடிவெட்டுபவர்களுக்கும் என்னவெல்லாம் "உரையாடல்" நிகழுமோ...உதாரணமாக:

(i)"அதென்னங்க 31 அங்குலம்? இருபது, முப்பது அப்படின்னு அளக்க வசதியா வைக்காம 31? ஒரு அங்குலம் கமிஷன் அடிச்சிருவீங்களா?" என்று எவரேனும் கேட்கலாம்...

(ii)"எனக்கு முடி உதிரும் problem இருக்கு. அதனால பூந்தியாவது கொடுங்க" என்று புதுத்திட்டத்தில் பாதிப்படைந்த ஒருவர் வேண்டுகோள் விடுக்கலாம்.

(iii)இப்போது காலம் போகும் வேகத்தில் இருபது வயது காரர்களுக்கே நரைத்து விடுகிறது. கோயில் நிர்வாகம், நரை முடிக்கு இலவச லட்டு உண்டா என்று தெளிவாக சொல்லாததால் குழப்பம் ஏற்படலாம்...முடியின் வண்ணம் குறித்து வாக்குவாதம் நடந்தால், சமாதானம் செய்யும் பொருட்டு "police பந்தோபஸ்து" போடப்படலாம்.

அவ்வளவு ஏன் சார்? இலவசங்களை கொடுத்தே நம்மை இளிச்சவாயர்களாக இருக்க வைக்க முயற்சி செய்யும் நாட்டில், லட்டு சும்மா கொடுப்பதோடு நிறுத்தினால் நன்றாக இருக்குமா? விலையில்லா மடிக்கணிணி, மிக்ஸி, போல வீடுதோறும் விலையில்லா தலைமுடித் தைலம் கொடுத்தால் நாம் வேண்டாம் என்று சொல்லி விடுவோமா? அத்துடன், திருப்பதிக்கு இலவச பேருந்து சர்வீஸ், மாதந்தோறும் "திருப்பதி உதவித் தொகை" என்று அமர்க்களப்படுத்தலாமே சார்...பொறுத்திருப்போம். நம் நாட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். 

நல்ல வேளை. மக்களின் எதிர்ப்பினால் இந்த "பக்திப் புரட்சி" கைவிடப்பட்டிருப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால், எதிர்த்தால் தான் எதுவுமே மூளைக்கு ஏறும் என்றால், "சுய புத்தி" என்ற சொல் இப்போது எந்த நிர்வாகத்திலும் புழக்கத்தில் இல்லையோ?

இது போன்ற கன்றாவிகளை பார்க்கச் சகிக்காமல் கடுப்பாகிப் போன‌ கடவுள்கள், மனிதர்கள் பார்க்க இயலாத மறைவான இடத்திற்கு மாற்றலாகிப் போய் பல மாமாங்கம் ஆகியிருக்குமோ?

2 comments:

  1. தல உங்களுக்கு விஷயம் சரியாக தெரியல...

    31 அங்குல முடியின் மதிப்பு 30 ஆயிரத்துக்கும் மேல்....

    மகளிர் முடியை சேகரித்து தனியாக வெளிநாடுகளுக்கு ஏலம் விட்டு அதன் மூலம்பெரிய தொகை தேவஸ்தானத்திற்கு வருகிறது.

    மக்களை அதிகமாக இழுக்கவே இந்த அறிவிப்பு...

    பக்தியெல்லாம் போச்சி... தற்போது எல்லாம் காசுதான்...

    ReplyDelete