/ கலி காலம்: April 2012

Sunday, April 29, 2012

ரயிலில் பயணம் செய்வது எப்படி - பகுதி 2

காலையில் காபி நாக்கை நனைக்கா விட்டால் நம்மில் பல பேருக்கு அந்த நாளே நகராமல் நின்று விடும். இத்தகைய மக்களை மகிழ்விக்க ரயில்வே இருவித சுவைகளில் காபி தயாரித்து விற்கிறது. முதல் வகை காபி, வெந்நீரில் வெல்லம் கரைத்தது போல இருக்கும். மற்றொரு வகை, தண்ணீரில்  காபிப் பொடி தூவியது போல மிதக்கும். "பால் எங்கே?" என்று நாம் சண்டை போடக்கூடாது என்பதற்காக, உணவிற்கு உப்பு போல் நீரில் பாலை பெயரளவில் சேர்த்து "வெளுப்பாய்" காபி தரும் ரயில்வே யுக்திகளை பாராட்டுவோம்! இது போன்ற காபியையும் அரை மணி நேரம் அறுசுவை விரிந்து போல் ரசித்து உறிஞ்சும் மனிதர்கள் உண்டு. இன்னும் சிலர் சில்லறை இல்லாமல் 50 , 100 ரூபாய் நோட்டுக்களை காப்பி விற்பவரிடம் நீட்டுவர். காபி விற்பவர் "வரும் போது தருகிறேன்" என்று அடுத்த பெட்டிக்கு போய் விடுவார். காபிக் காரர் வருகையை எதிர்பார்த்து, நடை வழியை எட்டிப்பார்த்து எட்டிப்பார்த்து பயணம் முழுவதையும் "சில்லறை tension " மூலம் வீனடிப்பர் சிலர். அதில் நாக்கு வன்மை உள்ள சிலர் நேரம் கழித்து மீத சில்லறை கொடுக்க வரும் காப்பிக்காரரை "எவ்வளவு நேரம்..." என்று எரிச்சல் காட்டுவதும், பதிலுக்கு, காப்பி விற்றவர்,  "உங்க பணத்தை எடுத்துகிட்டு நாங்க என்ன ரயிலேந்து தப்பிச்சா ஒடப்போறோம்" என்று சொல்வதும் "ஆஹா ஒரு சண்டை பார்த்து பொழுது போக்க வாய்ப்பு இருக்கும் போலிருக்கே" என்று வெறும் வாயில் அவல் தேடும் சக பிரயாணிகள் ஆர்வமாய் காதைத் தீட்டுவதும்...நம் மக்கள் நம் மக்கள்தான்...இவற்றை ரசித்தபடி நாமும் ஒரு கப் வெந்நீர் 5 ருபாய் கொடுத்து குடித்தாயிற்று.
இனி நம் பெட்டியில் உலவும் மாந்தர் ரகங்களை சற்று கவனிப்போம்...

பல்வேறு சைஸ்களில் பல்லைக் காட்டிக்கொண்டிருக்கும் பாக்கெட்டுகளுக்கு இடையில், போனால் போகிறதென்று சிறிதளவு துணி தைத்து pant / drawer என்ற பெயரில் அணிந்து கொண்டு, இளமையின் இறுமாப்புடன் இருபதுகளில் இருக்கும் இளைஞர்கள், பெட்டியின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு போய் வருவார்கள். தின்னமான நடை போடும் இவர்கள், இளம்பெண்கள் இருக்கும் இருக்கைகளை கடக்கையில் மட்டும் அன்னம்  போல நடை போடுவார்கள். இவர்கள் t-shirt, baniyan வாங்கும் கடைகளில் வாசகங்கள் print செய்யப்படாத துணிகளே தட்டுப்படாதா சார்?
இப்படித்தான் சமீபத்தில் ஒரு இரவு நேர ரயில் பயணத்தில், "Am a human bomb" என்ற வாசகம் பொறிக்கப்பட்ட baniyan (மன்னிக்கவும். இதை "round neck tee" என்று சொல்லி விடுவது உத்தமம்) போட்டுக்கொண்டு ஒருவர் பயணம் செய்ய, என்னைப்   போல பலரும், பேசாமல் டிக்கெட்டை cancel செய்து விட்டு பேருந்தில் போயிருக்கலாமோ என்ற கிலியில் அமர்ந்திருந்தனர்.நல்லா கிளப்பறாய்ங்கப்பா பீதியை....(நன்றி: வடிவேலு). அதில் ஒரு முதியவர் இரவு முழுவதும் அவ்வப்பொழுது "human bomb "யை   ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்ததில் எப்படியிருந்த தேசம் இப்படி ஆகிவிட்டதே என்ற ஆதங்கம் தெரிந்தது.
வெய்யிலின் புழுக்கம் சில நேரம் பொது இடத்து நாகரீகங்களை வம்புக்கு இழுக்கும். இதில் பங்கு பெரும் சிலர், இருக்கும் இடம் பற்றிய இங்கிதம் ஏதுமின்றி, தங்கள் சட்டையை கழற்றி விட்டு, காற்றோட்டம் தந்த களிப்புடன் அக்குளை சொறிந்தபடி ஆனந்தமாய் அமர்ந்திருப்பர். இத்தோடு நிற்காமல், இவர்கள் பின்னால் சாய்ந்தபடி,  தலைக்கு மேல் குறுக்குவாட்டில் கைகளை வைத்து கொடுக்கும் "நாக கன்னிகை" போஸில் பெண்களும் மற்றவர்களும் தர்மசங்கடத்தில் நெளிவர்.
ஆங்கில ஏகாதிபத்தியத்தின் கொடுமைகளை பார்க்க நாம் வரலாற்று அருங்காட்சியகத்திற்கு போக வேண்டியதில்லை.  வெய்யில், அதிக வெய்யில், கொடும் வெயில் என்னும் பருவகாலங்களை மட்டுமே ஆண்டு முழுதும் கொண்ட தென்னிந்தியாவிற்கு சற்றும் பொருந்தாத கோட்டு போட்டுக் கொண்டு அதோ வருகிறார் நம் TTE (ஏன் நாம் TTR என்று அழைத்தே பழகி விட்டோம்?). இவரிடம் சிலர் காதில் ரகசியம் பேசுவார்கள். அதான், berth காலியாக இருந்தால் இவர்களுக்கு ஒதுக்கும்படி இவர்கள் கேட்பதை மற்றவர்கள் கண்டறிந்து விடக்கூடாது என்ற ரகசியம். தர்பூஸ் பழத்தை டம்ளரில் மறைக்க முடியுமா? [எத்தனை நாளைக்கு சார் முழுப்பூசணியை சோற்றில் மறைத்துக்கொண்டே இருப்பது? கொஞ்சம் மாறித்தான் பார்ப்போமே!). TTE வேலைக்குத்தான் எத்தனை சோதனை...சில முன்ஜாக்கிரதை முத்தண்ணாக்கள் டிக்கெட்டை ஒரு பர்சுக்குள் வைத்து, அந்த பர்சை பெட்டிக்குள் வைத்து, அந்த பெட்டியையும் சீட்டுக்கடியில் இருக்கும் இரும்பு கம்பியுடன் சங்கிலியால் கட்டிப் பூட்டி விடுவார்கள். இதன் நேரெதிர் உச்சம், மொபைல் போன் மெசேஜ் திறந்து டிக்கெட் காட்டுவது. இரு வேறு இந்தியாக்களின் symbolic  தரிசனம் இது. ஆனால் TTE பாவம். இந்த இரு வித பயணிகளுமே "நிதானம் பிரதானம்" என்ற சொல் வழி நடந்து டிக்கெட் காட்டும் வரை முறைத்து கொண்டே நிற்க வேண்டியதுதான்...இவர் ஒரு பெட்டியிலிருந்து இன்னொரு பெட்டிக்கு செல்ல, கழிப்பறைகள் அருகே படும் பாடு, நம் நாட்டில் எவ்வித இட ஆக்ரமிப்புகளையும் எளிதில் அகற்ற முடியாது என்பதை நமக்கு புரிய வைக்கும்.
சரி. கணிப்பொறிக்கு வாழ்க்கைப்பட்டு காய்ந்து போன கண்களுக்கும் கருத்துக்கும் வயல்வெளிகளின் வாசமும் வருடும் காற்றும் தாலாட்டாக...  அடுத்த வாரம் தொடர்வோம்...

      

Wednesday, April 25, 2012

IPL நோய்களும் அநாகரீக பேய்களும்...

வந்து விட்டது மற்றுமொரு IPL...Australia மைதானங்களில் பந்து எங்கிருக்கிறது என்று தடவியவர்கள் நம்மூர் கட்டாந்தரை pitchகளில் சிக்சர்களாக பறக்க விடும் IPL 2012 வந்து விட்டது. போன மாதம் வரை அவ்வாறு தடவியவர்களை தாளித்த நாமும் இப்போது தலைகால் புரியாமல் ஆரவாரம் செய்வோம். அதிலும் இப்போது ஒரு "youth icon " வேறு நமக்கு கிடைத்திருக்கிறார். அதான் சார் - சமீப காலமாக சதம் சதமாக விளாசுகிறாரே அவரேதான். ஆனால் எனக்கொரு சந்தேகம். தன்னிடம் ஆட்டம் இருக்கிறது என்பதற்காக ஒருவர் என்ன "ஆட்டம்" வேண்டுமானாலும் காட்டலாமா? சில வாரங்களுக்கு முன் பல கோடி பேர் பார்க்கையில், தான் ஒரு தேசத்தை represent செய்கிறோம் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் ஒரு சைகை செய்தாரே அது என்ன ஆட்டம்? அதனாலென்ன அவர்தான் சதமடித்து நம் அணியை காப்பாற்றுகிறாரே அது போதுமே நமக்கு. வேறு என்ன மானம் எங்கு கப்பல் ஏறினால் என்ன? கவலையாக இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் இவருக்கு "பத்மஸ்ரீ" போன்ற பட்டங்கள் ஏதேனும் கொடுத்தாலும் கொடுத்து விடுவார்கள். பிறகு அந்த பட்டங்கள் பற்றி தெரியாதவர்கள் விசாரிக்கும் போது எளிதாக அந்த பட்டத்தின் பெருமையை அறிமுகப்படுத்தி விடலாம்...! "அதான் அந்த சைகை செய்தவருக்கு கொடுத்தார்களே அந்த பட்டம்" என்று... பட்டத்துக்கும் அதை வாங்கிய மற்ற தகுதியுள்ளோருக்கும் இதைவிட வேறு கெளரவம் இருக்க முடியுமா? ஏன் நம்மால், இவரைப்  போன்றவர்களின் ஆட்டமே நாட்டுக்கு தேவையில்லை என்று ஒதுக்க முடியவில்லை? அது சரி. நமக்குதான் வைத்தால் குடுமி எடுத்தால் மொட்டை என்றிருப்பதுதானே பழக்கம். 20  வருடங்களுக்கும் மேலாக அணியை தாங்கிப்பிடித்த டெண்டுல்கரையே சிலமாதங்கள் சதம் அடிக்க இயலவில்லை என்றவுடன் விமர்சிக்க தெரிந்தவர்கள்தானே நாம். விமர்சித்ததோடு இல்லாமல் நூறாவது சதம் அடித்தவுடன் அதே வாயால் இவரை போல உண்டா என்று தூக்கி வைப்பதும் நமக்கு கைவந்த கலைதானே. Tendulkar நூறாவது சதம் அடித்த பொழுது நடந்து கொண்ட விதத்தை பார்த்தாவது இந்த சைகைக்காரர் சிறிது கற்றுக்கொள்ளலாம்...இவர் நூறை கடக்கும் பொழுது போதும் குதியாட்டம் என்ன கூப்பாடு என்ன...லாரா அதிகபட்ச ஸ்கோர் எடுத்த போது கூட இந்த ஆட்டம் போடவில்லை. இன்றைய இளரத்தங்கள் இப்படி நடந்து கொண்டால்தான் இளரத்தம் ஆக்ரோஷம் உள்ளது என்று உலகம் நம்பும் என்று எவரேனும் இவர் போன்றவர்களின் காதுகளில் ஓதி வைத்துள்ளனரோ?

இவர் மட்டும் தனியாக இல்லை. சில வருடங்கள் முன் சக அணி வீரரையே அறைந்தாரே அவர்தான் இப்போது Mumbai Indians அணிக்கு தலைவராம். அடிவாங்கி அழுதவரும் லேசுப்பட்டவரில்லை இவர் stump பார்த்து பந்து வீசத்தவறினாலும் வார்த்தை வீச்சுக்கு குறைவில்லாதவர். இவர்களின் comedy அறைந்து அழுததோடு நிற்கவில்லை. சில மாதங்கள் கழித்து அறைந்தவரும் அழுதவரும் ஈருயிர் ஓருடலாய் ஒரு விளம்பரத்திற்கு pose வேறு கொடுத்தார்கள். எல்லாம் பணம் பண்ணுகிற வேலை சார். அந்த நிறுவனத்திற்கும் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். இவர்கள் அனைவரும் மற்றவற்றில் காட்டுகிற "விவேகத்தை" விளையாட்டில் காட்டினால் நன்றாக இருக்கும்.

முன்னர் மொஹிந்தர் அமர்நாத் என்றொரு வீரர் இருந்தார். இவர் பௌலிங் போட வரும் வேகம், ஒருவேளை இவர் பந்து வீசாமல் தூங்கி விடுவாரோ என்பது போல இருக்கும். ஆனால் இவர் எடுத்த விக்கெட்டுகள் அவ்வளவு நளினமாக இருக்கும். இன்றிருக்கும் பலமற்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் bowling விளையாடவே நாம் திணறுகிறோம் அன்று marshall போன்ற ஜாம்பவான்கள் நிறைந்த west indies பௌலிங்கை  அனாயசமாக ஹூக் செய்வார் அமர்நாத். இப்போது யார் நம் அணியில் hook  shot  எல்லாம் விளையாடுகிறார்கள்...  vengsarkar 50 அடித்தாலும் ஜீரோவில் இருப்பது போலவே இருப்பார். கவாஸ்கர் நூறு அடிக்கையில் துள்ளிக் குதித்து ஓடுவதையோ கபில்தேவ் wicket எடுத்தால் முஷ்டி முறுக்கி கூப்பாடு போடுவதையோ நாம் என்றாவது பார்த்திருக்கிறோமோ? பாவம் பிழைக்கத் தெரியாதவர்கள்...எதிர் அணியில் இருப்பவர்களை வம்புக்கு இழுத்தோ, ஓங்கி ஒரு அறை விட்டோ  ரசிகர்களை பார்த்து தரக்குறைவான செய்கை செய்தோ அடுத்த நாள் அனைத்து ஊடகங்களிலும் படத்துடன் இடம்பெறத் தெரியாதவர்கள். இவர்கள் எல்லாம் விளையாண்ட அணியில்தான் இன்று "இவர்களும்" விளையாடுகிறார்கள். "அட போங்க சார் காலத்திற்கு ஏற்றார் போல மாறுங்கள்" என்கிறீர்களா? அதுவும் சரிதான். அதான் இப்போது கிரிக்கெட் என்ற விளையாட்டே அரைகுறை ஆனதை பிரதிபலிக்கும் வகையில் நடன மங்கையர் வேறு மைதானத்தில் ஆடுகிறார்களே! கவுண்டமணி சொல்லும் "என்னப்பா இது தேள் கொட்டின குரங்கிற்கு பேய் பிடித்தாற்போல ஒரு டான்ஸ்..." ஞாபகம் வருகிறது.

இந்த IPL கூத்தில், இருக்கிறது போதாதென்று பெரும்பாலான ஆட்டங்கள் பகலிரவு ஆட்டமாம். அதனால் நமக்கென...நாம்தான் "earth hour " கொண்டாடி ஒரு மணி நேரம் பூமியை காப்பாற்றி மாபெரும் சேவை செய்து வருகிறோமே...
ஏன் சார் நாமும் இந்த அரசும் நினைத்தால் IPL போன்ற கூத்துக்கள் பகலில் மட்டுமே நடக்க வேண்டும் என்று சட்டம் போட முடியாது? ஒரு பக்கம் மின்சாரம் இல்லை என்று புலம்பல் மற்றொரு பக்கம் "earth hour " "green marathon " போன்றவற்றை சொல்லி இயற்கையின் காவலர்களாய் அக்கறை இருப்பது போல் காட்டிக்கொள்வது இன்னொரு பக்கம் இது போன்ற அதீத மின்விரயம் ஏற்படுத்தும் கேளிக்கைகளில் மூழ்கித் திளைப்பது...எப்படி சார் நம்மால் முரண்பாடுகளின் மொத்த உருவமாக சற்றும் கூச்சமில்லாமல் நடமாட முடிகிறது? பாரதி சொன்ன "நாமிருக்கும் நாடு நமதென்று அறிந்தோம் நமக்கே உரியதாம் என்று உணர்ந்தோம்" [கிடைக்கிற gapல் பாரதியாரை மேற்கோள் காட்டுவதுதான் எப்பொழுதும் popular trend] என்பதை நாம் இப்படியா புரிந்து கொண்டு முடிந்த வரை நாட்டை சின்னாப்ப்பின்னப்படுத்த வேண்டும்? ஏகப்பட்ட சிறு தொழில்கள் மின்சாரம் இல்லாமல் முடங்கிக் கிடந்தால் என்ன? அப்படித் தவிப்பவர்களும் வயிற்றில் ஈரத்துண்டு கட்டிக்கொண்டு  IPL பார்க்க வேண்டியதுதான். எல்லாவற்றிலும் இலவசம் வந்து விட்டதே ஈரத்துண்டும் இலவசமாக தருவோம் என்று சொன்னாலும் ஆச்சர்யபடுவதற்க்கில்லை...நாமும் நம் பாதி நாளை  IPL அரக்கன் தின்னக் கொடுத்து விட்டு, ராணுவத்திலும் ஊழல், மணல் கொள்ளையால் நம் ஆறுகள் அனைத்தும் பாழாய் போவது... இவை எது பற்றியும் கவலை இன்றி சோபாவில் சாய்ந்து நொறுக்குத்தீனி தின்றபடி இரண்டு மாத IPL கூத்தில் பங்கு பெறுவோம். சரி விடுங்கள்...இன்று இரவு நம் "youth icon" virat kohli விளையாடும் ஆட்டம் பார்க்க வேண்டியிருப்பதால் இந்த பதிவை இத்துடன் முடித்து கொள்வோம். சும்மா சொல்லக்கூடாது சார் இவர் அடிக்கும் கவர் டிரைவ், off drives கண்களுக்கு விருந்து தான். மனைவி அற்புதமாய் பஜ்ஜி செய்து வைத்திருக்கிறார் - சுவைத்து கொண்டே ஆட்டம் பார்க்க...மணல் கொள்ளையாவது விரல் சைகையாவது...IPL ரசிப்போம் சார்...
இந்த வார pinch :

பாரதியை போல் நம் மண்டைக்கு ஏறும்படி பாடியவர் எவரேனும் உண்டோ? ஆனால் அவர், நாகரீகம் கருதி ஒன்றை சொல்லவில்லை என்று தோன்றுகிறது -அதாவது - "அற்பப்  பதர்களே.. ஒரு கண்ணாடியை முன்னால் வைத்து உங்கள் முகத்தை நீங்களே பார்த்தபடி என் கவிதைகளை படியுங்கள்" என்று சொல்லாமல் விட்டு விட்டாரா அல்லது நமக்கு எப்படிச்  சொன்னாலும் எருமை மாட்டின் மேல் பெய்த மழை போலத்தான் இருக்கும் என்று நினைத்து சொல்லாமல் விட்டு விட்டாரா? sample பார்ப்போம்:

"ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்றுமில்லா
மாக்களுக்கோர் கணமும் - கிளியே
வாழத் தகுதியுண்டோ?"

"நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத்
தேட்டில் விருப்பங் கொண்டே - கிளியே
சிறுமை யடைவாரடி!"

"பஞ்சத்தும் நோய்களிலும் பாரதர் புழுக்கள்போல்
துஞ்சத்தம் கண்ணாற் கண்டும் - கிளியே
சோம்பிக் கிடப்பாரடி!"

"பாரத ஜனங்களின் தற்கால நிலைமை" என்று நூறு வருடங்களுக்கு முன் ("தற்கால" என்று எப்போதும் பொருந்தும் தலைப்பை கவனியுங்கள்) பாடிய பாடலின் சில வரிகளை பாருங்கள்:

"எண்ணிலா நோயுடையார் - இவர்
எழுந்து நடப்பதற்கு வலிமையிலார்
கண்ணில்லா குழந்தைகள் போல் - பிறர்
காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார்;
நண்ணிய பெருங்கலைகள் - பத்து
நாலாயிரங்கோடி நயந்து நின்ற
புண்ணிய நாட்டினிலே - இவர்
பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்"

நம் சாயங்களை அடித்துத் துவைத்து அப்பட்டமாக காயப்போடும் இது போன்ற பாடல்களை படிக்கையில் எனக்கு கண்ணாடியை பார்த்தால் அருவருப்பாக இருக்கிறது. உங்களுக்கு?










Sunday, April 22, 2012

ரயிலில் பயணம் செய்வது எப்படி? பகுதி 1

என்ன இது அபத்தமான தலைப்பாக இருக்கிறது என்கிறீர்களா? பட்டொளி  வீசும் மணிக்கொடி பறக்கும் பாரத நாட்டில் பிறந்த அனைவருக்கும் பல special மரபணுக்கள் (gene) உண்டு.
அத்தகைய மரபணுக்களில் சில, நாம் ரயிலில் பயணம் எப்படி பயணம் செய்ய வேண்டும் என்று வழி நடத்துகின்ற விதத்தையும் அதன் மூலம் காணக்கிடைக்கும் நம் "பண்பாட்டு களஞ்சியத்தையும்" விரிவாக பார்ப்போம்...
நமக்கு புதிதான ஒரு ஊரில் இருக்கிறோம் என்று வைத்து கொள்வோம். எப்படி ரயில் நிலையத்தை கண்டு பிடிப்பது? ரொம்ப easy. ரயில்வே துறைக்கு நம் மீது பரிவும் பாசமும் அதிகம். நாம் அலையாமல் எளிதில் கண்டுபிடிக்க வசதியாக பெரும்பாலான ரயில் நிலைய வாயிலருகில் கழிப்பறை கட்டியிருப்பார்கள். இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடாயிற்றே! எனவே நிறைய பேர் நிற்பதற்கு நேரமின்றி ஓடிக்கொண்டிருப்பார்கள் - அதாவது, கழிப்பறை உள்ளே சென்றால் ஒரு நிமிடம் வீணாகி விடுமே என்று வெளியிலேயே "போகும்" முன்னேறத்துடிக்கும் மனிதர்கள்...இவர்கள் உதவியுடன் அந்த வட்டாரம் முழுதும் வீசும் சுகந்தமான வாசம் நம் மூக்கையும் தாக்கும். அதைத் தொடர்ந்து சென்றால் ரயில் நிலையம் சேர்ந்து விடலாம். இது சிற்றூர்களில். இதுவே பெரிய நகரமென்றால் இன்னும் பெரிய idea இருக்கும் - மாநகராட்சி உதவியுடன்...ரயில் நிலையம் அருகில் உள்ள subway மற்றும் நடைபாதைகளில் நீக்கமற நிறைந்திருக்கும் குப்பைகளில் பரவிக்கிடக்கும் பயன்படுத்தப்பட்ட பயணச்சீட்டுக்களை தொடர்ந்து சென்றால் ரயில் நிலையம் சேரலாம். என்ன இது ரொம்ப ஓவரா இருக்கே என்பவர்கள் chennai central railway station அருகில் உள்ள subway உள்ளே நடந்து பார்க்கவும். என்ன இது தரை இவ்வளவு மெத்தென்று இருக்கிறதே என்று நினைப்போம் - குனிந்து பார்க்கும் வரை. "குட்டையில் மூழ்கி ஒருவர் பலி" செய்தி பார்த்திருப்போம் ஆனால் "குப்பையில் மூழ்கி பலி" என்று தினத்தந்தி செய்தி வரும் வாய்ப்பு இந்த இடத்திற்கு உண்டு!
சரி. ரயில் நிலையம் வந்தாயிற்று. உடனே ரயிலையும் நம் இருக்கையையும் அடைந்து விட முடியுமா என்ன? கூட்ட நெரிசலில் "இளங்காதலர்கள்" என்றொரு வகை உண்டு. இவர்கள், "உள்ளே நுழைந்து விட்டேன், தண்ணீர் bottle வாங்கப்போகிறேன், வாங்கிக்கொண்டிருக்கிறேன்,வாங்கி விட்டேன், coach அருகில் வந்து விட்டேன், முதல் படியில் கால் வைத்துவிட்டேன், ஏறி விட்டேன் என்ற ரீதியில் தங்கள் வருங்கால வாழ்க்கைத்  துணைக்கோ அல்லது காதலே ஒரு "time pass" என்ற தார்மீகத்தில் தழைத்தோங்கும் காதலன் or காதலிக்கோ mobile கமெண்டரி கொடுத்தபடி கனவுலக மிதப்பில் நத்தை போல் நடை போடும் இவர்கள் காதில் எந்த சங்கும் ஏறாது. நாம்தான் வளைந்து நெளிந்து இவர்களை கடந்து போக வேண்டும்.
ரயில் வந்து விட்டது...coach வாயிலில் தேனடையில் தேனீக்கள் போல கூட்டம் அம்மும். ஒரு பெட்டியில் இத்தனை பேர்தான் என்பதும், reservation செய்த நம் இடமும் உறுதி என்றாலும் வரிசையாக நின்று ஏறினால் நம் வீரம் என்னாவது? எனவே இடித்து தள்ளிக்கொண்டுதான் ஏற வேண்டும். அதிலும் பெட்டியை வைத்து லேசாக அடுத்தவர் முழங்கையிலோ முட்டியிலோ தட்டிவிட்டு கிடைக்கும் "gap "இல் முன்னே செல்லும் வித்தையை கண்டுபிடித்தவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்த சூழலில், ரயில்வே ஊழியர் ஒருவர், ஒரு கையில் கோந்து வாளியும் மறு கையில் reservation பட்டியலையும் வைத்துக்கொண்டு அதை ஒவ்வொரு  பெட்டியாக ஒட்டிக்கொண்டு வருவார். தங்கள் seat நம்பர் check செய்ய கூட்டம் அங்கும் மொய்க்கும். சிலருக்கு தங்கள் பெயரை மட்டும் பட்டியலில் பார்த்தால்  போதாது. அந்தப்  பெட்டியில் பயணம் செய்யும் அனைவரின் பெயர்கள் மற்றும் வயதை ஒரு "look" விட்டுத்தான்  நகர்வார்கள். அதுவரை நாம் அவர்களின் முதுகை மோப்பம் பிடித்தபடி பின்னால் நிற்க வேண்டும்.
அப்பாடா... ஒரு வழியாய் புழுக்கத்திலும் நெரிசலிலும் அடித்து பிடித்து இடித்து முடித்து நம் இருக்கைக்கு வந்து விட்டோம்! அண்ணாந்து பார்த்தால் fan சுற்றாமல் நம்மை முறைத்து பார்த்தபடி இருக்கும். ரயில்களில் சுற்றாத மின்விசிறியை சுற்றவைப்பது எப்படி என்ற வழிமுறைகளை தலைமுறை தலைமுறையாக ஒரு மரபணு நமக்கு சொல்லித் தந்திருக்கிறது. முதலில் "ச்சே..." என்று நம் எரிச்சலை காட்டியபடி தென்படும் சுவிட்சுகள் அனைத்தையும் (அது light சுவிட்சா fan சுவிட்சா என்று பேதம் பார்க்கக் கூடாது) மாறி மாறி on/off seyya vendum. இதில் சில மின்விசிறிகள் போனால் போகிறதென்று ஓடத்துவங்கும். ஆனால் சில கல்லால் செய்த fan சிற்பம் போல் அசையாமல் இருக்கும். சீப்பை பயன்படுத்தி ரயிலில் மின்விசிறியை சுற்ற வைக்கும் கலை பாரத பாரம்பரியங்களில் பலகாலமாக பின்பற்றப்படும் ஒன்று. இந்த உன்னத கலையை காப்பாற்றவே, நமக்கு வழுக்கையோ தலைமுடி இருக்கிறதோ ரயில் பயணத்தில்  சீப்பு வைத்திருப்பது நலம்.நம் இருக்கையில் கால் வைத்து ஏறினால் நாம் உட்காரும் இடம் அழுக்காகி விடுமே எனவே அடுத்தவரின் இடத்தில் கால் வைத்து ஏற வேண்டும். காலணியுடன் அடுத்தவர் இருக்கையில் கால் வைத்து ஏறுதல் இன்னும் சிறப்பு. இவ்வாறு கால் வைத்து ஏறியவுடன் நம்மிடமிருந்து மின்விசிறியையும், மின்விசிறியிலிருந்து நம்மையும் பாதுகாக்கும் இரும்பு இடைவெளிகளுக்குள் சீப்பை விட்டு லாவகமாக சுற்ற வேண்டும். தகர டப்பாவை தரையில் உருட்டியது போன்ற சத்தத்துடன் fan சுற்றத்துவங்கும். "நான் மின்விசிறியை ஓட வைத்துவிட்டேன்" என்ற பெருமித பார்வையை அருகிலிருப்போர் மீது வீசி விட்டு அமர்வதற்கும், தர்மம் கேட்போர் வருவதற்கும் சரியாக இருக்கும். உடனே நாம் அனைவரும் ஞானி ஆகிவிடுவோம் - எப்படி என்கிறீர்களா? அதான் - எதிலுமே பற்றில்லாதது போல் வானத்தையும் தரையையும் வெறித்து பார்த்து யோசனை செய்வது போல் நடித்து, தர்மம் கேட்பவர் நம் கண்ணை விட்டு மறையும் வரை ஞானி போல் பாவனை செய்கிறோமே...
fan சுற்றுகிறது... காற்று வருகிறது... இப்போது தண்ணீர் குடிக்கத்தோன்றுமே...பிளாட்பாரம்களில் "குடிநீர்" என்று எழுதியிருக்கும் குழாய்களில் வரும் தண்ணீரை இப்போது முகம் கழுவக்கூட நிறைய பேர் பயன்படுத்த தயங்குகிறார்கள். அங்கு வரும் தண்ணீர் மீது நமக்கு அவ்வளவு நம்பிக்கை. அங்கு ஒரு நெளிந்த டம்ளரை இரும்பு சங்கிலியில் கட்டி வைத்திருப்பார்கள். டம்ளரை விட சங்கிலியின் விலை அதிகம் இருக்கும். இது, அரசு மக்களின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை. நமக்கும் அரசுக்கும் என்னே ஒரு பொருத்தம்! இத்தகைய இடங்களில் புது டம்ளர் நாம் யாரேனும் பார்த்திருக்கிறோமா? ஒரு வேளை புதியதாய் வாங்கினாலும் அதை நன்றாக அடித்து நெளித்து பழையதாக்கித்தான் மக்களின் பயன்பாட்டுக்கு கொடுக்க வேண்டும் என்று ரயில்வே விதி இருந்தாலும் இருக்கலாம்...யார் கண்டது? இப்போதெல்லாம் எல்லோரின் கையிலும் "rail neer" இருக்கிறது. விரைவில் "bus neer" வந்தாலும் வரலாம். நமக்கென்ன கவலை? நாம் எந்த நீரையும் விலை கொடுத்து வாங்குவோம். நகரங்களில் உள்ள வீடுகளில் குடிநீர் குழாய் என்று ஒன்று உண்டு என்பதையே நாம் மறந்து பல வருடங்கள் ஆகி விட்டதே! இன்னும் சில வருடங்களில் ஆங்கிலேயர்கள் போல் நீருக்கு பதில் பீர் குடித்தாலும் குடிப்போம். "rail neer" மறைந்து ரயில் நிலையங்களில் "rail beer" விற்பனை அமோகமாக நடக்கும். உலகமயமாக்கல் முழுமை அடைய வேண்டாமா?

அன்பு, பிரிவு, எதிர்பார்ப்பு,  தனிமை, வெறுமை என எத்தனை உணர்வுகளை தின்று ஏப்பம் விடுகின்றன ரயில் நிலையங்கள்...! எத்தனை விதமான மனிதர்கள்...எத்தனை விதமான பாசாங்குகள்...! இவற்றை பார்த்து பார்த்து சலித்து போன ரயில், கூக்குரலிட்டு station விட்டு ஓடத்துவங்கும்...ஓடும் ரயிலில் நாம் அடிக்கும் கூத்துக்களை அடுத்த வாரம் பார்ப்போம்...

 

Friday, April 6, 2012

IPL நோய்களும் அநாகரீக பேய்களும்...

வந்து விட்டது மற்றுமொரு IPL...Australia மைதானங்களில் பந்து எங்கிருக்கிறது என்று தடவியவர்கள் நம்மூர் கட்டாந்தரை pitchகளில் சிக்சர்களாக பறக்க விடும் IPL வந்து விட்டது. போன மாதம் வரை அவ்வாறு தடவியவர்களை தாளித்த நாமும் இப்போது தலைகால் புரியாமல் ஆரவாரம் செய்வோம். அதிலும் இப்போது ஒரு "youth icon " வேறு நமக்கு கிடைத்திருக்கிறார். அதான் சார் - சமீப காலமாக சதம் சதமாக விளாசுகிறாரே அவரேதான். ஆனால் எனக்கொரு சந்தேகம். தன்னிடம் ஆட்டம் இருக்கிறது என்பதற்காக ஒருவர் என்ன "ஆட்டம்" வேண்டுமானாலும் காட்டலாமா? சில காலம் முன் பல கோடி பேர் பார்க்கையில், தான் ஒரு தேசத்தை represent செய்கிறோம் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் ஒரு சைகை செய்தாரே அது என்ன ஆட்டம்? அதனாலென்ன அவர்தான் சதமடித்து நம் அணியை காப்பாற்றுகிறாரே அது போதுமே நமக்கு. வேறு என்ன மானம் எங்கு கப்பல் ஏறினால் என்ன? கவலையாக இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் இவருக்கு "பத்மஸ்ரீ" போன்ற பட்டங்கள் ஏதேனும் கொடுத்தாலும் கொடுத்து விடுவார்கள். பிறகு அந்த பட்டங்கள் பற்றி தெரியாதவர்கள் விசாரிக்கும் போது எளிதாக அந்த பட்டத்தின் பெருமையை அறிமுகப்படுத்தி விடலாம்...! "அதான் அந்த சைகை செய்தவருக்கு கொடுத்தார்களே அந்த பட்டம்" என்று... பட்டத்துக்கும் அதை வாங்கிய மற்ற தகுதியுள்ளோருக்கும் இதைவிட வேறு கெளரவம் இருக்க முடியுமா? ஏன் நம்மால், இவரைப்  போன்றவர்களின் ஆட்டமே நாட்டுக்கு தேவையில்லை என்று ஒதுக்க முடியவில்லை? அது சரி. நமக்குதான் வைத்தால் குடுமி எடுத்தால் மொட்டை என்றிருப்பதுதானே பழக்கம். 20  வருடங்களுக்கும் மேலாக அணியை தாங்கிப்பிடித்த டெண்டுல்கரையே சிலமாதங்கள் சதம் அடிக்க இயலவில்லை என்றவுடன் விமர்சிக்க தெரிந்தவர்கள்தானே நாம். விமர்சித்ததோடு இல்லாமல் நூறாவது சதம் அடித்தவுடன் அதே வாயால் இவரை போல உண்டா என்று தூக்கி வைப்பதும் நமக்கு கைவந்த கலைதானே. Tendulkar நூறாவது சதம் அடித்த பொழுது நடந்து கொண்ட விதத்தை பார்த்தாவது இந்த சைகைக்காரர் சிறிது கற்றுக்கொள்ளலாம்...இவர் நூறை கடக்கும் பொழுது போதும் குதியாட்டம் என்ன கூப்பாடு என்ன...லாரா அதிகபட்ச ஸ்கோர் எடுத்த போது கூட இந்த ஆட்டம் போடவில்லை. இன்றைய இளரத்தங்கள் இப்படி நடந்து கொண்டால்தான் இளரத்தம் ஆக்ரோஷம் உள்ளது என்று உலகம் நம்பும் என்று எவரேனும் இவர் போன்றவர்களின் காதுகளில் ஓதி வைத்துள்ளனரோ?

இவர் மட்டும் தனியாக இல்லை. சில வருடங்கள் முன் சக அணி வீரரையே அறைந்தாரே அவர்தான் இப்போது Mumbai Indians அணியின் முக்கிய புள்ளி. அடிவாங்கி அழுதவரும் லேசுப்பட்டவரில்லை இவர் stump பார்த்து பந்து வீசத்தவறினாலும் வார்த்தை வீச்சுக்கு குறைவில்லாதவர். இவர்களின் comedy அறைந்து அழுததோடு நிற்கவில்லை. சில மாதங்கள் கழித்து அறைந்தவரும் அழுதவரும் ஈருயிர் ஓருடலாய் ஒரு விளம்பரத்திற்கு pose வேறு கொடுத்தார்கள். எல்லாம் பணம் பண்ணுகிற வேலை சார். அந்த நிறுவனத்திற்கும் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். இவர்கள் அனைவரும் மற்றவற்றில் காட்டுகிற "விவேகத்தை" விளையாட்டில் காட்டினால் நன்றாக இருக்கும்.

முன்னர் மொஹிந்தர் அமர்நாத் என்றொரு வீரர் இருந்தார். இவர் பௌலிங் போட வரும் வேகம், ஒருவேளை இவர் பந்து வீசாமல் தூங்கி விடுவாரோ என்பது போல இருக்கும். ஆனால் இவர் எடுத்த விக்கெட்டுகள் அவ்வளவு நளினமாக இருக்கும். இன்றிருக்கும் பலமற்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் bowling விளையாடவே நாம் திணறுகிறோம் அன்று marshall போன்ற ஜாம்பவான்கள் நிறைந்த west indies பௌலிங்கை  அனாயசமாக ஹூக் செய்வார் அமர்நாத். இப்போது யார் நம் அணியில் hook  shot  எல்லாம் விளையாடுகிறார்கள்...  vengsarkar 50 அடித்தாலும் ஜீரோவில் இருப்பது போலவே இருப்பார். கவாஸ்கர் நூறு அடிக்கையில் துள்ளிக் குதித்து ஓடுவதையோ கபில்தேவ் wicket எடுத்தால் முஷ்டி முறுக்கி கூப்பாடு போடுவதையோ நாம் என்றாவது பார்த்திருக்கிறோமோ? பாவம் பிழைக்கத் தெரியாதவர்கள்...எதிர் அணியில் இருப்பவர்களை வம்புக்கு இழுத்தோ, ஓங்கி ஒரு அறை விட்டோ  ரசிகர்களை பார்த்து தரக்குறைவான செய்கை செய்தோ அடுத்த நாள் அனைத்து ஊடகங்களிலும் படத்துடன் இடம்பெறத் தெரியாதவர்கள். இவர்கள் எல்லாம் விளையாண்ட அணியில்தான் இன்று "இவர்களும்" விளையாடுகிறார்கள். "அட போங்க சார் காலத்திற்கு ஏற்றார் போல மாறுங்கள்" என்கிறீர்களா? அதுவும் சரிதான். அதான் இப்போது கிரிக்கெட் என்ற விளையாட்டே அரைகுறை ஆனதை பிரதிபலிக்கும் வகையில் நடன மங்கையர் வேறு மைதானத்தில் ஆடுகிறார்களே! கவுண்டமணி சொல்லும் "என்னப்பா இது தேள் கொட்டின குரங்கிற்கு பேய் பிடித்தாற்போல ஒரு டான்ஸ்..." ஞாபகம் வருகிறது.

இந்த IPL கூத்தில், இருக்கிறது போதாதென்று பெரும்பாலான ஆட்டங்கள் பகலிரவு ஆட்டமாம். அதனால் நமக்கென...நாம்தான் "earth hour " கொண்டாடி ஒரு மணி நேரம் பூமியை காப்பாற்றி மாபெரும் சேவை செய்து வருகிறோமே...
ஏன் சார் நாமும் இந்த அரசும் நினைத்தால் IPL போன்ற கூத்துக்கள் பகலில் மட்டுமே நடக்க வேண்டும் என்று சட்டம் போட முடியாது? ஒரு பக்கம் மின்சாரம் இல்லை என்று புலம்பல் மற்றொரு பக்கம் "earth hour " "green marathon " போன்றவற்றை சொல்லி இயற்கையின் காவலர்களாய் அக்கறை இருப்பது போல் காட்டிக்கொள்வது இன்னொரு பக்கம் இது போன்ற அதீத மின்விரயம் ஏற்படுத்தும் கேளிக்கைகளில் மூழ்கித் திளைப்பது...எப்படி சார் நம்மால் முரண்பாடுகளின் மொத்த உருவமாக சற்றும் கூச்சமில்லாமல் நடமாட முடிகிறது? பாரதி சொன்ன "நாமிருக்கும் நாடு நமதென்று அறிந்தோம் நமக்கே உரியதாம் என்று உணர்ந்தோம்" [கிடைக்கிற gapல் பாரதியாரை மேற்கோள் காட்டுவதுதான் எப்பொழுதும் popular trend] என்பதை நாம் இப்படியா புரிந்து கொண்டு முடிந்த வரை நாட்டை சின்னாப்ப்பின்னப்படுத்த வேண்டும்? ஏகப்பட்ட சிறு தொழில்கள் மின்சாரம் இல்லாமல் முடங்கிக் கிடந்தால் என்ன? அப்படித் தவிப்பவர்களும் வயிற்றில் ஈரத்துண்டு கட்டிக்கொண்டு  IPL பார்க்க வேண்டியதுதான். எல்லாவற்றிலும் இலவசம் வந்து விட்டதே ஈரத்துண்டும் இலவசமாக தருவோம் என்று சொன்னாலும் ஆச்சர்யபடுவதற்க்கில்லை...நாமும் நம் பாதி நாளை  IPL அரக்கன் தின்னக் கொடுத்து விட்டு, ராணுவத்திலும் ஊழல், மணல் கொள்ளையால் நம் ஆறுகள் அனைத்தும் பாழாய் போவது... இவை எது பற்றியும் கவலை இன்றி சோபாவில் சாய்ந்து நொறுக்குத்தீனி தின்றபடி இரண்டு மாத IPL கூத்தில் பங்கு பெறுவோம். சரி விடுங்கள்...இன்று இரவு நம் "youth icon" virat kohli விளையாடும் ஆட்டம் பார்க்க வேண்டியிருப்பதால் இந்த பதிவை இத்துடன் முடித்து கொள்வோம். சும்மா சொல்லக்கூடாது சார் இவர் அடிக்கும் கவர் டிரைவ், off drives கண்களுக்கு விருந்து தான். மனைவி அற்புதமாய் பஜ்ஜி செய்து வைத்திருக்கிறார் - சுவைத்து கொண்டே ஆட்டம் பார்க்க...மணல் கொள்ளையாவது விரல் சைகையாவது...IPL ரசிப்போம் சார்...
இந்த வார pinch :

பாரதியை போல் நம் மண்டைக்கு ஏறும்படி பாடியவர் எவரேனும் உண்டோ? ஆனால் அவர், நாகரீகம் கருதி ஒன்றை சொல்லவில்லை என்று தோன்றுகிறது -அதாவது - "அற்பப்  பதர்களே.. ஒரு கண்ணாடியை முன்னால் வைத்து உங்கள் முகத்தை நீங்களே பார்த்தபடி என் கவிதைகளை படியுங்கள்" என்று சொல்லாமல் விட்டு விட்டாரா அல்லது நமக்கு எப்படிச்  சொன்னாலும் எருமை மாட்டின் மேல் பெய்த மழை போலத்தான் இருக்கும் என்று நினைத்து சொல்லாமல் விட்டு விட்டாரா? sample பார்ப்போம்:

"ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்றுமில்லா
மாக்களுக்கோர் கணமும் - கிளியே
வாழத் தகுதியுண்டோ?"

"நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத்
தேட்டில் விருப்பங் கொண்டே - கிளியே
சிறுமை யடைவாரடி!"

"பஞ்சத்தும் நோய்களிலும் பாரதர் புழுக்கள்போல்
துஞ்சத்தம் கண்ணாற் கண்டும் - கிளியே
சோம்பிக் கிடப்பாரடி!"

"பாரத ஜனங்களின் தற்கால நிலைமை" என்று நூறு வருடங்களுக்கு முன் ("தற்கால" என்று எப்போதும் பொருந்தும் தலைப்பை கவனியுங்கள்) பாடிய பாடலின் சில வரிகளை பாருங்கள்:

"எண்ணிலா நோயுடையார் - இவர்
எழுந்து நடப்பதற்கு வலிமையிலார்
கண்ணில்லா குழந்தைகள் போல் - பிறர்
காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார்;
நண்ணிய பெருங்கலைகள் - பத்து
நாலாயிரங்கோடி நயந்து நின்ற
புண்ணிய நாட்டினிலே - இவர்
பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்"

நம் சாயங்களை அடித்துத் துவைத்து அப்பட்டமாக காயப்போடும் இது போன்ற பாடல்களை படிக்கையில் எனக்கு கண்ணாடியை பார்த்தால் அருவருப்பாக இருக்கிறது. உங்களுக்கு?









Sunday, April 1, 2012

பாரத பட்ஜெட்டும் பிளாஸ்டிக் பக்கெட்டும்

ஒரு மாதமாக, எந்த  சேனல் திருப்பினாலும் எந்த பத்திரிகை எடுத்தாலும் "பணவீக்கம்" "வரி,வட்டி விகிதம்" போன்ற வார்த்தைகள்தான்... என்னடா நாம் அனைவரும் நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி கவலைப்படும் அளவு பொறுப்பான குடிமகன்கள்  ஆகிவிட்டோமோ என்று எண்ணி என்னைக் கிள்ளிப் பார்க்கும் போதுதான் ஆஹா இது மார்ச் மாதம் budget நேரம் என்று வலித்தது.
அனைவரின் பற்களுக்கிடையில் budget அரைபடும்போது நாம் மட்டும் சும்மா இருக்கலாமா சார்? எனவே என் பங்குக்கு நானும் ஒரு பதிவு போட்டுவிட்டேன்.
முதலில் இந்த "plastic bucket" கதையை பார்க்கலாம்...ஒன்று சொல்லி விடுகிறேன் - நீங்களாக,  கதை, தலைப்பு, பட்ஜெட் இதெல்லாம் "link" செய்து ஏதாவது புரிந்து கொண்டீர்கள் என்றால் நான் பொறுப்பில்லை. இது சாதாரண கதை. உள்நோக்கம் ஏதுமில்லை. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

ஒரு ஊரில் உள்ள வீட்டில் புதியதாய் ஒரு பிளாஸ்டிக் பக்கெட் வாங்கினார்கள். புதியதாய் இருக்கும் எல்லாமே நன்றாகத்தானே இருக்கும்? இந்த பக்கெட் கூட அப்படித்தான். சரியென்று வீட்டில் எல்லாரும் தூய தண்ணீர் பிடிக்க மட்டுமே உபயோகப்படுத்தினார்கள். வருடங்கள் ஆனதும் சாயம் வெளுக்க ஆரம்பித்தது. கைப்பிடியும் கொஞ்சம் பலவீனம் ஆகிவிட்டது("கை"ப்பிடி என்றதும் வேறேதும் நினைக்காதீர்கள்). சரியென்று அதை வீட்டில் துடைத்து மெழுக தண்ணீர் வைப்பதற்கு மாற்றினார்கள். சில வருடங்கள் ஓடின. மேல் பகுதியில் விரிசல்கள்...சரியென்று பாத்திரம் கழுவ பயன்படட்டும் என்று அடியில் மட்டும் தண்ணீர் பிடித்தார்கள். சில வருடங்கள் போனது...அடியிலும் விரிசல்...பேசாமல் குப்பை கொட்டி வைக்கவாவது இருக்கட்டும் என்று மூலையில் வைத்தார்கள். விரிசல் பெரிதாக குப்பையில் கூட கெட்டியான குப்பை மட்டுமே போட முடிந்தது...வீட்டில் எல்லோருக்கும் குழப்பம்...என்ன செய்யலாம்? புது பக்கெட் வாங்கினால் குப்பையை புது பக்கெட்டில் கொட்ட முடியுமா? அல்லது குப்பையை "புது குப்பை" என்று நினைத்து கொள்ள வேண்டியதுதானா? கதை முடிந்தது sir. மறுபடியும் சொல்கிறேன். பக்கெட் கதையை மறந்து விடுங்கள். இப்போது budget பார்க்கலாம்.

ஏன் சார் எப்போதுமே நிதி மந்திரிகள் black / brown color பெட்டி மட்டுமே கொண்டு வருகிறார்கள்? ஒரு பச்சை அல்லது மஞ்சள் என்று கொண்டு வந்தால் TV க்கு போஸ் கொடுக்கும் பொது "பளிச்" என்று இருக்குமில்லையா? எங்கள் ஊரில் அழகர் வைகையில் இறங்கும் போது வருடா வருடம் பச்சை, சிகப்பு, மஞ்சள் நிறப் பட்டாடையில் எழுந்தருள்வார். எந்த நிறத்தில் பட்டு உடுத்தி வருகிறாரோ அதை பொறுத்து அந்த வருடம் உலகத்திற்கு அமையுமாம். இதே போல, பட்ஜெட் பெட்டி கலரை வைத்து மகா ஜனங்கள் அந்த வருடம் தங்கள் பொருளாதாரத்  தலைவிதி எப்படி இருக்கும் அறிந்து கொள்ளலாம் இல்லையா சார்...
இந்த 2012 வருட budget highlight "கறுப்பு பணம் பற்றிய  வெள்ளை அறிக்கை" தான். எனக்கொரு joke ஞாபகம் வருகிறது. ஒரு குறும்புக்கார மாணவன் ஓவிய வகுப்பில் ஏதும் வரையாமல் டிமிக்கி  கொடுத்துக்கொண்டிருந்தான்.
டீச்சர் அவனை திட்டியவுடன் "சும்மா திட்டாதீர்கள் நான் வரைந்திருப்பதை பாருங்கள் என்று ஒரு "வெள்ளை வெற்றுத்தாளை" நீட்டினான். டீச்சர் "படம் எங்கே?" என்று கோபமாக கேட்க "நாய் எலும்பைத் திங்கும் காட்சியை எப்படி வரைந்திருக்கிறேன் பாருங்கள்" என்றான். டீச்சருக்கு படுகடுப்பு.
"வெறும் paper வைத்து பொய்யா சொல்கிறாய்" என்று அடிக்கப்போனார். மாணவனோ "எலும்பை நாய் தின்று விட்டது. சாப்பிட்ட பின் நாய் சும்மா நிற்குமா? ஓடிப் போய்  விட்டது.அதான் பேப்பரில் நாயும் இல்லை எலும்பும் இல்லை" என்றானாம். ஜோக் படித்து சிரிக்கலாம். நம் நாட்டை நினைத்து அழலாம்.

பிறகு, இந்த வருமான வரி விலக்கு...இந்தியா போன்ற நாட்டிற்கு நிதி மந்திரியாக இருப்பதற்கு எவ்வளவு திறமை வேண்டும்? இவரின் தந்திரத்தை பாருங்கள்...5-10 லட்சம் வருமானம் உள்ளவர்கள் பயன்பெறுமாறு ஒரு விலக்கு. நம் நாட்டில் எத்தனை பேர் சார் 8 லட்சம் 10 லட்சம் வருமானம் வாங்குகிறார்கள்? இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் கிட்டத்தட்ட அனைத்து தட்டு மக்களும் பயன்படுத்தும் பொருட்களுக்கு 2% சேவை வரி அதிகரிப்பு! இரண்டையும் சேர்த்துப் பாருங்கள். எவருக்கும் பயனில்லை என்பது தெளிவாகும்.

இனி நாம் பட்ஜெட்டை எப்படி அறிந்து கொள்வது என்று பார்ப்போம். பத்திரிகைகளுக்கும் டிவிக்கும் நம் அறிவு மேல் அவ்வளவு நம்பிக்கை. அதுவும் சில குறிப்பிட்ட பத்திரிகைகள் budget news போடும் விதமே தனி. "நிதி மந்திரி" என்று ஒரு paragraph தலைப்பு. இதில் மந்திரியின் பெயர், பூர்வீகம், உடை, நடை, சிரிப்பு போன்றவை அடங்கும் (ஒரு வேளை தினம் தினம் மந்திரிகள் மாறுவதால் இந்த செய்தி நமக்கு தேவைதானோ?). அடுத்த "பத்தி" ["paragraph"], "பெட்டி" என்ற தலைப்புடன் இருக்கும். இதில் மந்திரி பெட்டியை கொண்டு வந்த விதம், எந்த கையில் அதிக நேரம் பிடித்திருந்தார், அவருடன் வந்தவர்கள் எத்தனை பேர் யார் யார் , பெட்டிக்குள் இருக்கும் paper எத்தனை பக்கம், என்ன கலர் போன்றவை...அப்புறம்தான்  main விஷயம்...அதாவது budget படிக்கையில் மந்திரி எத்தனை முறை இருமினார், யார் யாரையெல்லாம் திரும்பி பார்த்தார், எத்தனை முறை தண்ணீர் குடித்தார் (பட்ஜெட் உரை கேட்ட பொதுமக்களுக்கு எத்தனை முறை விக்கல் வந்தது என்று ஏன் இவர்கள் போட மாட்டேன் என்கிறார்கள்?), ஆதரவாக எத்தனை முறை மேஜையை தட்டினார்கள் போன்ற மிக முக்கியமான விஷயங்கள்...இதற்குள் நம்மை "5 ஆம் பத்தி பார்க்க...8 ஆம் பத்தியில் தொடரும்..." என்று பத்தி பத்தியாக சுத்த வைத்து, பக்கம் பக்கமாக திருப்ப வைத்து வெறுப்பேற்றிய பின், போனால் போகிறது என்று மனமிரங்கி, வரும் ஆண்டிற்கான செலவு இவ்வளவு போன்றவற்றை மேம்போக்காக சொல்வார்கள். இதற்கு நடுவில், இலியானா விரும்பும்  இதழ் சாயம் என்ன கலர், தமன்னா தமிழ் கற்றுக்கொண்டாரா, ஆர்யா அமலா பால்  இடையே என்ன சண்டை போன்ற உலகை உலுக்கும் செய்திகளையும் நாம் கடந்து போக வேண்டியிருக்கும். "English" பத்திரிகைகளும் இதற்கு சளைத்தவையல்ல. "இந்தியாவின் காலத்தை" பிரதிபலிக்கும் பத்திரிக்கை ஒன்றில் சமீபத்தில் நாடெங்கும் பரபரப்பான "Dirty Picture" நடிகை, budget பற்றி தன் "கருத்துக்களை"  வாரி இறைத்திருக்கிறார். நாட்டின் பிரதமர் எதற்கும் வாயைத்  திறக்காதவராக இருந்தால் நாட்டில் யார் யாரெல்லாம் எதைப்  பற்றியெல்லாம் கருத்து சொல்கிறார்கள் பாருங்கள்! (என்னையும் சேர்த்துதான் சார் சொல்கிறேன்)
வாழ்க பாரத பட்ஜெட்! வளர்க பத்திரிகைகளின் பட்ஜெட் தொண்டு!

"என்னய்யா? பட்ஜெட் என்று தலைப்பில் போட்டுவிட்டு அதைப்பற்றி பேருக்கு ஏதோ எழுதி விட்டு வேறு எதையெல்லாமோ பேசிக்கொண்டிருக்கிறாய்?" என்கிறீர்களா? நம் மந்திரிகள் "நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் பட்ஜெட்" என்று தலைப்பில் சொல்லி அதற்கு அதிகம் தொடர்பில்லாமல் ஒரு பட்ஜெட் வெளியிடுகிறார்கள் இல்லையா? மந்திரிகளை பின்பற்றுவது மக்களின் கடமையில்லையா?
நான் கடமை மிக்க மக்களில் ஒருவன் சார். சரி, அந்த பக்கெட் கதையை மறந்து விட்டீர்கள்தானே...(ஒன்றை மற மற என்று சொன்னால் ஞாபகம் வைத்து கொள்வதும், மறக்காதே மறக்காதே என்றால் மறந்து விடுவதும் நம் இயல்பு என்பதும் உள்நோக்கம் ஏதுமில்லை என்று சொன்னால் ஏதோ உள்நோக்கம் இருக்கும் என்பதும் உங்களுக்கும் எனக்கும் தெரியாதா என்ன!)

இனி இந்த வார "pinch":

நம் பிரதமர் இந்த மூன்று குறள்களை படித்து புரிந்து கொண்டால் என்ன நினைப்பார்?

"காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்"

[முதல் வரி போல்தானே நாம் இருக்கிறோம்...ஆனாலும் இரண்டாவது வரி போல ரிசல்ட் இல்லையே!]

"வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்"

[Spectrum நடைபெறுவதற்கு முன் எனக்கு இந்த திருக்குறளை யாரும் சொல்லவில்லையே!]


"நிலத்தியல்பான் நீர்திரிந்தற்றாகும் மாந்தர்க்
கினத்தியல்ப தாகும் அறிவு"

[என்னுடைய 10 வருடங்களை 2 வரியில் புட்டு புட்டு வைத்து விட்டாரே திருவள்ளுவர்!]

திருக்குறளை நினைத்தால் புல்லரிக்கிறது இல்லையா? உலகில் எவருக்கும் அவருக்கு பொருத்தமான அர்த்தம் தருவதும், அதை இரண்டே வரியில் அடைத்து வைப்பதும் எப்படி நடந்தது? இந்த புல்லரிப்பை நமக்குள் மட்டும் பகிர்ந்து கொள்வோம். இல்லையென்றால் தற்போது சினிமா பாட்டு எழுதுபவர்கள் "குறள் போன்றது உன் குரல்; கைகளுக்கு பத்து விரல்" என்று "காலத்தை வெல்லும் காதல் பாட்டு" எழுதினாலும் எழுதி விடுவார்கள். அதோடு நில்லாமல் "Making of Thirukkural song" என்று வெளிநாட்டில் வெளியீட்டு விழா வைத்து CD release செய்தாலும் செய்வார்கள். அத்தகைய நிலை நம் திருக்குறளுக்கு வரக்கூடாது என்று வேண்டிக் கொள்வோமாக...