என்னங்க? ஊர் உலகம் தேள் கொட்டிய குரங்கு மாதிரி என்னவெல்லாமோ செஞ்சுக்கிட்டுருக்கு...இந்த காலத்துல கடிதம் எழுதவா? என்று என்னை ஏற இறங்க பார்க்காதீங்க...எல்லாம் நம்ம அரும்பெரும் தலைவர்கள் பேணிக் காக்கும் பாரம்பரியத்தை பரப்பும் பணியில் ஏதோ நம்மால் முடிந்த சிறு துளி சார் இது.
சமீபத்தில் உத்திரபிரதேசத்தில் ஒரு IAS அதிகாரியை சஸ்பெண்ட் செய்தது குறித்து நாடு முழுவதும் விவாதம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதன் போக்கில் அது நடக்கட்டும். ஆனால், மத்தியில் அரசாளும் கட்சியின் தலைவர் செயல்பாட்டை நாம் வியந்து பார்க்க வேண்டும். என்னே ஒரு வேகம் என்னே ஒரு விவேகம்...தன் கட்சியைச் சேர்ந்த, தனக்கு கீழே பணி செய்யும் பிரதமருக்கு, தான் நினைத்தால் அடுத்த நிமிடம் பார்க்கக் கூடிய ஒருவருக்கு, இந்த விஷயத்தில் நியாயத்தின் பக்கம் நின்று நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். அதுவும் எப்படி? கடிதம் எழுதி! தகவல் தொழில்நுட்பத்தில் கொடி கட்டிப் பறக்கும் நாட்டில் எப்பேர்ப்பட்ட புரட்சி சார் இது! இவர்களிடம் "ஏன் இப்படி செய்கிறீர்கள்?" என்று கேட்க முடியுமா? ஏற்கெனவே பிரதமர் ஒரு முறை, "தமிழ் நாட்டின் மூத்த தலைவர் மூலமே நாங்கள் ஆலோசனை பெறுகிறோம்" என்று சொல்லியிருக்கிறார். கடிதம் எழுதுவதில் கை தேர்ந்தவரான அவர் தான் இந்த "அட்வைஸ்" தந்திருப்பாரோ? அதற்காக மற்றவர்களை குறைவாக நாம் எண்ணி விடக் கூடாது. இப்பொழுதுள்ள முதல்வரும் முடிந்த வரை மூத்த தலைவரை கடிதம் எழுதும் கலையில் முந்த முடியுமா என்று தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்து வருகிறார். இப்படியாக தமிழகம் நாட்டிற்கு தந்த ஒப்பற்ற கலைவடிவமாக விளங்குகிறது கடிதங்கள்!
நம் பங்குக்கு நாம் என்ன சார் செய்யலாம்? ஒரு உதாரணம் மட்டும் பார்க்கலாம். ஏதாவது பெரிய தீ விபத்து ஏற்பட்டு விட்டது என்று வைத்துக் கொள்வோம்...தீயணைப்புத் துறைக்கு போன் செய்தால் விஷயம் சீக்கிரம் முடிந்து விடுமே? முடிய விடலாமா? கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாமா நமக்கு? தலைவர்களின் தாள் தொட்டு அவர்கள் வழி நாம் நடக்க வேண்டாமா சார்? பற்றி எரியும் தீயை உற்றுப் பார்த்து வருந்தியபடி தபால் நிலையம் நோக்கி ஓட வேண்டும். நடந்தால் இன்னும் நல்லது. கூரியர் எல்லாம் வேகமாக பட்டுவாடா செய்யப்படும் என்பதனால் சாதா அஞ்சல் அட்டையை பயன்படுத்தலாம். தீயணைப்பு நிலையத்திற்கு தீயை அணைக்கும் படி அகம் உருகி ஒரு கடிதம் போட வேண்டும் சார் கடிதம்!
"மதிப்புக்குரிய தீயணைப்பு நிலைய தலைவருக்கு, சமூகத்தில் தீ விபத்துக்கள் அவ்வப்பொழுது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. உங்களின் கடமைமிகு படை வீரர்கள் மூலம் மக்களை தொடர்ந்து காத்து வரும் தொண்டு எங்களை மெய் சிலிர்க்க வைக்கிறது. அந்த சிலிர்ப்புக்கு சிகரம் வைக்கும் தருணம் வந்து விட்டது. நியாய உணர்வுடன் விரைந்து வந்து கொழுந்து விட்டெரியும் கொடிய தீயை
தண்ணீர் கொண்டு தவிடுபொடியாக்கி கண்ணீரில் மிதக்கும் எங்களை பன்னீரில் நனைய வைக்கும்படி மூவுலகிலும் மூத்த குடியாம் தமிழ் குடியின் அடுப்பொடிகளில் ஒருவனாக கேட்டுக் கொள்கிறேன்..." - ஒரு பொறுப்புமிக்க குடிமகனாக இப்படியொரு கடிதம் எழுதினால் முடிந்தது காரியம் சார்.
ஆனால் கடிதங்கள் எழுதியே காலத்தை ஓட்ட முடியுமா? ஒரு கட்டத்தில் போரடிக்குமே? எனவே பாரம்பரியமிக்க பாரதத்தில் பழங்காலத்தில் இருந்த சீர்மிகு தகவல் சாதனமான புறாவுக்கு மீண்டும் உயிர் கொடுப்போம் என்றொரு புரட்சி ஊற்று நம் தலைவர்களின் சிந்தனையில் உதித்தால் நாட்டின் கதி என்ன ஆகும் சார்? கலக்கமாக இருக்கிறதா? அத்தனை கலக்கத்தையும் அறிக்கை விட்டே அழிய வைக்கும் ஆற்றல் மிக்க அரசியல்வாதிகள் வாழும் நாடல்லவா இது! "சுறாவை சுண்டு விரலால் பிடித்த வீரமிகு வரலாறு கொண்ட தேசத்தில் புறாவை கொண்டு கடிதம் அனுப்பும் கலையை போற்றும் பணி செய்வோம் பாரம்பரியம் காப்போம்" என்று ஆரவாரமாக அறிக்கை விடத்தெரியாதவர்களா நாம்?
"புறா பராமரிப்புத் துறை" ஒன்று துவங்கி அரசாங்க தகவல் பரிமாற்றங்கள் மற்றும் மக்கள் தொடர்பு அனைத்தும் புறா அன்றி இரா என்று எதுகை மோனையில் ஒரு சட்டம் இயற்றினால் போதாதா? அப்புறம் நம் அனைவருக்கும் வீட்டுக்கொரு விலையில்லா புறா கிடைக்கும். "புறா தந்த புரவலர்" பட்டம் பெறும் பாக்கியம் நம் நாட்டில் எந்த தலைவருக்கு வாய்த்திருக்கிறதோ! பொறுத்திருந்து பார்ப்போம்!
குறிப்பு: உதாரணத்தை வைத்து நீங்களாக ஏதேனும் உள்ளர்த்தம் செய்து கொண்டால் அதற்கு நீங்களே பொறுப்பு!