/ கலி காலம்

Friday, October 26, 2012

காலம் கெட்டுப் போச்சு சார்...! பகுதி 1


மனுசப் பயலுக பல தினுசு. அந்த ஒவ்வொரு தினுசுக்குள்ளே எத்தனை எத்தனை விதமான மனசு....அப்பப்போ பழைய நினைப்பை நிகழ்காலத்தில முக்கி எடுத்து மனசுக்குள்ள காயப் போடற பழக்கம் உள்ளவங்க ஒரு தினுசு. நான் அந்த வகை ஆசாமி. இந்தப் பதிவை படிக்கற உங்கள்ல நிறைய பேரும் அப்படித்தானே சார்? வீட்டுல இருக்கற பொருளையே அப்பப்போ தூசி தட்டி, சுத்தம் செய்யறோம்...எப்பேர்பட்ட காலம்...! அதுல எத்தனை எத்தனை பேரோட எத்தனை விதமான நினைப்பு ஒட்டிகிட்டுருக்கு...அதை எவ்வளவு பத்திரமா சுத்தப்படுத்தி வச்சுக்கனும் ? நான் சொல்றது சரிதானே?

இந்த திருப்பரங்குன்றம் யானை இறந்த செய்தி படிச்சு, ஒரு மாசமா மனசோட மூலையில ஒரு "நினைப்பு" நீந்திக்கிட்டே இருந்துச்சு சார். சமீபத்துல மதுரைக்கு போயிருந்த போது, இந்த "தூசி தட்டற" வேலைக்காக திருப்பரங்குன்றம் கோயிலுக்கு போயிருந்தேன். சின்ன வயசுல நூத்துக் கணக்கான  செவ்வாய் கிழமைகள் இந்தக் கோயிலுக்கு அப்பாவோட போனதுண்டு. முருகனை பார்க்க முந்தி அடிக்கற கூட்டத்துக்கு நடுவிலே, கோயிலுக்கு உள்ளே நுழைஞ்சு, கடைகளைத் தாண்டிப் போனவுடன், கண் தானாகவே வலது பக்கம் போகும் சார். அங்கே தான் தலையை ஆட்டியபடி நம்ம ஆள் நிக்கும். யானைக்கு அபார நினைவாற்றல் என்ற நம்பிக்கை எப்போதுமே எனக்கு உண்டு. அது தலையாட்டும் அழகைப் பார்த்தால், நம்மை ஞாபகம் வைத்துக் கொண்டு வரவேற்கிறதோ என்பது போல இருக்கும். அந்த யானை இருந்த இடத்தையும், காலடி நீளத்துக்கு நம்ம கால் விரலை கடிச்சு விளையாடும் மீன்கள் கூட்டம் கூட்டமாத் திரியும் சரவணப் பொய்கையையும் பார்க்கப் போயிருந்தேன்.

கோயில் படிகளேறி உள்ளே போனதும், இடது பக்கம் ஒரே சத்தம். நமக்குத்தான் ஏதாவது சண்டை பார்த்தா என்னன்னு கவனிக்காம‌ தாண்டிப் போனா மண்டை வெடிச்சுடுமே...சரின்னு காதைக் கொஞ்சம் தீட்டிக்கிட்டேன். விஷயம் இதுதான் சார் ‍ வெளியூர் வாசிகள் இரண்டு பேரு வெள்ளந்தி மனசோட, கோயில் அப்படின்னா அங்க நல்லவங்கதான் இருப்பாங்கன்னு வந்திருக்காங்க பாவம். காளி சிலை முன்னாடி பவ்யமா ஒருத்தர் "வெண்ணெய் சாத்துங்க" அப்படின்னு அரை நெல்லிக்காய் size வெண்ணெய் உருண்டை இரண்டு கொடுத்திருக்கார். அவங்களும், "ஆஹா...இப்படி ஒரு புண்ணிய சேவையா" அப்படின்னு அகமகிழ்ந்து போய் ஆளுக்கு ரெண்டா வாங்கி காளி மேல வீசியிருக்காங்க.

அவங்க புன்னகையை புஸ்வானம் ஆக்கற மாதிரி, 20 ரூபாய் கொடுங்க என்று வெண்ணெய் காரர் கேட்டிருக்கிறார். "நடந்து போனவனங்கள கூப்பிட்டு கொடுத்துட்டு காசு கேக்கறீங்க..." என்று அவர்கள் கேட்க, "போற வரவங்களுக்கு வெண்ணெய் சும்மா கொடுக்க நான் கேனயனா?" என்று நம்மூர்காரர் எகிற, வேலனை பார்க்க வந்த கூட்டம் வந்த வேலையை மறந்து விட்டு  குஷியாகி, வேடிக்கை பார்த்தது. கூட்டம் என்று இருந்தால் உபதேசம் செய்ய அங்கு ஒருவர் இருப்பாரே! அதுதானே நம்மூர் வழக்கம். இங்கும் ஒருவர் தோன்றினார்.

"ஏன்யா, ஒரு போர்டு கீர்டு இல்ல. சும்மா ஒரு basin வெண்ணெய் உருண்டை வெச்சுகிட்டு, போறவங்களை கூப்பிட்டு கொடுத்தா அவங்களுக்கு எப்படிய்யா தெரியும் நீ வெண்ணெய் விற்பனை செய்யறன்னு" என்று ஆரம்பித்தார். ஆளாளுக்கு ஒருவர் மற்றவரை வார்த்தை சாக்கடையில் புரட்டி எடுத்தனர். அதனால் வீசிய "நாற்றத்தை" ரசிக்கவும் கூட்டம் தவறவில்லை. எல்லாவற்றையும் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்த காளியைப் பார்த்தேன். முப்பது ஆண்டுகள் முன்னால் என் அப்பா தன் தோள் மேல ஏத்தி, நான் வீசின வெண்ணெய் உருண்டையோட பிசுபிசுப்பு இன்னும் இந்த காளி சிலையோட ஏதோ ஒரு துளியில் ஒட்டியிருக்கும்னு தோணிச்சு - அந்த ஞாபகம் எனக்குள்ள ஒட்டியிருக்கற மாதிரி! காலம் தானே சார் கடவுள்...

என்னப்பா நீ? காலம் தான் சாமி அப்படின்னு சொல்லிட்டு "காலம் கெட்டுப் போச்சு" தலைப்பு வச்சுருக்க என்று உங்களுக்கு கேள்வி தோணுமே? அதான் சார், நாம கதவு மேல மோதிட்டு "கதவு இடிச்சுருச்சு" அப்படின்னு சொல்லுவோமே..அது மாதிரி "காலம் கெட்டு போச்சு" சார்!

சரவணப் பொய்கை கதை என்னாச்சுன்னு அடுத்த வாரம் பார்ப்போம்.

Thursday, October 18, 2012

காவிரி ‍ - ஏமாளிகளும் கோமாளிகளும்

நேரம் வந்தாச்சு. வருடம் தவறாமல் நடக்கும் காவிரி தமாஷ் இந்த வருடமும் அதே பொலிவுடன் நடைபெற ஏராளமானோர் காமெடி செய்யும் நேரம் வந்தாச்சு. ஏதோ நாம் எல்லாவற்றையும் பக்காவாக செய்வது போல, பக்கத்து மாநிலத்தை மட்டும் குற்றம் சொல்வதை தள்ளி வைத்து விட்டு நம் லட்சணத்தையும் கொஞ்சம் பார்க்கலாம் சார்...

முப்போகம் என்பதெல்லாம் முன்னோர் கதை என்றாகி, இப்போது இயற்கை இருக்கும் நிலையில், தமிழ் நாட்டில் எவரேனும், தொலைநோக்கில் ஒரு துரும்பையாவது கடந்த முப்பது நாற்பது வருடங்களில் கிள்ளிப் போட்டிருக்கிறார்களா? காமராஜருக்குப் பிறகு நம்மூரில் ஒரு அணை கூட‌ கட்டப்படவில்லை சார். அணைகளை விடுங்கள். தடுப்பணை (check dams) கட்டுவதற்குள்ளேயே நமக்கு தட்டுத் தடுமாறி தலைசுற்றுகிறது.

நல்ல வேளை, இவர்கள் சாலை மற்றும் பாலம் கட்டும் லட்சணம் பார்த்த பின்பு அணை கட்டக் கிளம்பாமல் பேசாமல் இருக்கிறார்களே என்று நிம்மதி அடைய வேண்டியதுதான். சாலை பல்லைக் காட்டினால், மக்கள், தங்கள் தலைவிதி என்று மேடுபள்ளங்களை ஏற்றுக் கொள்ளப் பழகி விட்டார்கள். அணை பல்லைக் காட்டினால் பல ஊர்கள் காணாமல் விடுமே சார்! அது நேராமல் நம்மை காப்பாற்றும் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் அநேக வந்தனங்கள்!

ஆழியாரிலிருந்து பரம்பிக்குளம் செல்லும் வழியில் top slip வனச்சரக அலுவலகத்தில் பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்தின் மாதிரி வைத்திருக்கிறார்கள். அதீத வசதிகள் ஏதுமற்ற காலத்தில்  மலையை குடைந்து (tunnel) ராட்சஸ குழாய் இறக்கியிருக்கிறார்கள். அதை பராமரிப்பதற்குக் கூட இன்று நாம் திணறிக் கொண்டிருக்கிறோம். நம்மூர் தெருவில் சாக்கடைக் குழாய் உடைந்தாலே சரி செய்ய பல நாட்கள் ஆகிறது! என்ன செய்வது சொல்லுங்கள்?

காமராஜரை பற்றி படித்தவையும் கேட்டவையும் நினைவுக்கு வருகிறது சார். அவர் ஆட்சி காலத்தில் எத்தனை புதிய அணைகள் மூலம் எத்தனை அற்புதமான நீர் பாசன திட்டங்களை அறிமுகம் செய்தார் என்று நாம் அறிந்து கொண்டால், கடந்த நாற்பது வருடங்களில் இவர்கள் அனைவரும் எத்தனை காமெடி செய்து (அவர் பெயரைச் சொல்லியே பிழைப்பை ஓட்டும் கட்சியையும் சேர்த்து) தமிழ்நாட்டை எப்படி சீரழித்திருக்கிறார்கள் என்பது புரியும்.

ஆழியார் மட்டுமல்ல, வைகை, மணிமுத்தாறு, சாத்தனூர் என்று எத்தனை அணைகள் காமராஜரால் கட்டப்பட்டன! இதில் மற்றுமொரு நம்ப முடியாத ஆச்சரியம், தன்னை எதிர்த்த பக்தவக்சலத்தையே விவசாய மந்திரியாக ஆக்கி இத்திட்டங்களை செயல்படுத்தியது!

இப்படியிருந்த நாம், எப்படி சார் இப்படி கெட்டுப் போனோம்? காரணம் இருக்கிறது - ‍‍ நாம் நன்றி கெட்ட ஜென்மங்கள். மேற்கூறிய நீர்வளத் திட்டங்கள் மட்டுமல்லாது மற்ற துறைகளிலும் மக்களின் தேவைகளுக்காகவே உழைத்த காமராஜரை, அவரின் சொந்த ஊரில், அரசியல் அரிச்சுவடி கூடத் தெரியாத ஒருவரை வைத்து தோற்கடித்த அற்பர்கள் அல்லவா நாம்! "தெய்வம் நின்று கொல்லும்" என்பார்கள். தெய்வம் இருக்கிறதா இல்லையா என்பது நமக்கு இங்கு தேவை இல்லை. ஆனால், நம் கண் முன்னே, அனைத்தையும் காலம் பார்த்துக் கொண்டிருக்கிறது. காலம் நின்று கொல்லும். எனவே தான், காவிரிக்கு கர்நாடகத்திடமும், கிருஷ்ணாவிற்கு ஆந்திராவிடமும், பெரியாருக்கு கேரளாவிடமும் பழியைப் போட்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் கட்சிகளை வேடிக்கை பார்க்க வைத்து, என்ன செய்வதென்று தெரியாமல் நம்மை தவிக்க வைத்து, நம் மூலமே தமிழ் நாட்டை  தண்ணீருக்காக ஏங்க‌ வைத்திருக்கிறது காலம்!

பரவாயில்லை விடுங்கள் சார். "கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை" என்றொரு நல்ல பழைய பாட்டு இருக்கிறது. இன்புற கேட்போம் வாருங்கள்!



Tuesday, October 2, 2012

குத்தானந்தாவின் குத்துப் பாட்டு பகுதி 2

அடுத்த விடுமுறை எப்போது? எந்த ஊர் சுற்றிப் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் காலண்டர் தேதிகளை பார்த்துக் கொண்டிருக்கையில் பின்னாலிருந்து குரல் கொடுத்தபடி வந்தார் குத்தானந்தா. "என்ன சிஷ்யா...காந்தி ஜெயந்தி அன்று காலண்டரை பார்த்தபடி நின்று கொண்டிருக்கிறாய்?" என்றார். "அடுத்த லீவ் எப்போது என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்றேன். "நல்ல வேளை. நான் கூட, வருடா வருடம் நடக்கும் காவிரி கூத்தை இப்போது காலண்டரிலும் "காவிரி பந்த். அரசு விடுமுறை" என்று போட்டு விட்டார்களோ என்று நினைத்து விட்டேன்." என்றார் கண் சிமிட்டியபடி.

"சாமி, இந்த காவிரி சிக்கல் தீரவே தீராதா?" என்றேன். "நல்ல கேள்வி தம்பி. நம்ம "புரட்சி" "எழுச்சி" பட்டமுள்ள அல்லது பட்டமற்ற நாயகர்கள் மற்றும் கலைச்சேவை செய்யும் தவப்புதல்விகள் அனைவரும் நெய்வேலிக்கு போய் கூலிங்கிளாஸ் அணிந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தால் சிக்கல் தீர்ந்துவிடுமே" என்றார். "சிக்கல் பற்றி பேசினால் நக்கல் அடிக்கிறீர்கள் மக்கள் தவறாக நினைக்க மாட்டார்களா?" என்றேன். "அடப்போப்பா, நம்ம எல்லாரும் காவிரி பத்தி உண்மையாகவே கவலைப்பட்டிருந்தா, இந்நேரத்துக்கு என்ன செஞ்சிருப்போம் தெரியுமா?" என்றவர் தொடர்ந்தார்..."நாம தினமும் முப்பது, நாப்பது ரூபாய் கொடுத்து தண்ணீர் can வாங்கறோமே... ஆளாளுக்கு காவிரி பேரைச் சொல்லி அடிக்கிற லூட்டியை வேடிக்கை பார்க்காம, ஒரே ஒரு மாசம் அந்த தண்ணீர் can வாங்க‌ செய்யற‌ செலவை ஒவ்வொரு வீடும் கொடுத்தா, மக்களே நதி நீர் இணைப்பு செய்யலாமே....ஆனா, நம்ம வீட்டுக் குழாய்ல தண்ணி நின்னு போனாத்தானே நமக்கு ரோஷம் வரும். அப்பக்கூட பக்கத்து வீட்டிலும் "தண்ணி வருதா" என்று கேட்டு விட்டு ஆறுதல் அடையறது தானே நமக்கு பழக்கம்" என்றார்.

"ரொம்ப சூடா இருக்கீங்க போல...இந்த வார குத்து சொல்லுங்க" என்றேன்.

"விவசாயத்தை மதிக்காத வெக்கங்கெட்ட நாடு
வாய்கிழிய பேசியே பிடிச்சது பார் கேடு
தண்ணியே பார்க்காம வறண்டு போச்சு காடு
வறுமையின் வயித்திலே ஈரத்துண்டு போடு"

என்று குத்தானந்தா குதித்தார்.

"சாமி, எனக்கு எதுவும் சொல்லத் தெரியலை. ஆனா என்னமோ வருத்தமா இருக்கு. சரி விடுங்க...போன வாரம் ஏதோ நான் செய்யனும்னு சொன்னீங்களே...அதச்சொல்லுங்க" என்றேன். "டேய்,அடுத்த வாரத்திலே இருந்து ஒரு நல்ல தமிழ் இலக்கியத்திலே இருந்து நீ ஏதாவது கொண்டு வந்து விளக்கம் சொல்" என்றார். "சாமி, நல்லாருக்கு. ஆனா இலக்கியம் அப்படினா என்ன?" என்றேன். என்னை மேலும் கீழுமாக பார்த்த குத்தானந்தா,

"படிச்சா பத்திக்கணும்
மனசோட ஒட்டிக்கணும்
மண்டையில‌ ஏத்திக்கணும்
ஆயுசுக்கும் யோசிக்கணும்"

இப்படி இருக்கற எழுத்து தான் இலக்கியம் என்றார். "கிளப்பிட்டீங்க சாமி. இப்படிப்பட்ட சரக்கு தமிழ் முழுக்கக் கொட்டிக் கிடக்கு. நமக்குத் தான் தெரியல" என்றேன். "ஆனா சாமி..." என்று இழுத்த நான், "why this kolaveri பாட்டுக் கூட நிறைய பேருக்கு நீங்க மேல சொன்ன மாதிரியே இருக்குன்னு சொல்றாங்களே...அதுவும் இலக்கியமா?" என்றேன். "கலிகாலம் தம்பி கலிகாலம்"  என்று தலையில் இரண்டு கைகளாலும் அடித்துக் கொண்ட‌ குத்தானந்தா, "இன்னிக்கு காந்தி ஜெயந்தி. எப்படியும் குத்தாட்டம் கும்மாளம் என்று அர்த்தமில்லாமல் ஆண்டு முழுவதும் ஓ(ட்)டிக்கொண்டிருக்கும் சேனல்கள் ஏதாவது ஒன்றில், சம்பந்தமில்லாமல் "காந்தி" படம் இன்று போடுவார்கள். அந்தப் படத்துல காந்தி பத்தி Albert Einstein சொன்னதா ஒரு வரி காட்டுவாங்க "Generations to come, will scarce believe that such a man as this one ever in flesh and blood walked upon this Earth". நம்ம நாட்டுக்காரங்களுக்கு எதையுமே வெளிநாட்டில் இருந்து யாராவது சொன்னாத்தான் ஏத்துப்பாங்க‌............... பாவம் Einstein. அவர் சொன்னது பலிக்க இருநூறு முன்னூறு வருடங்களாவது ஆகும் அப்படின்னு நம்பியிருப்பார். அவருக்கு இந்தியா பத்தி தெரியல. நாமெல்லாம் யாரு? எப்படி வேகமா வளர்ந்து கிழிக்கிறோம்...அவர் சொன்ன வார்த்தைகளை எவ்வளவு சீக்கரமா எழுபது வருஷத்திலேயே உண்மையாக்கிட்டோம் பார்த்தியா..." என்றபடி டாடா காட்டினார் குத்தானந்தா...




   .

Saturday, September 22, 2012

விருப்பப்படி விலையேற்றுவோம் ‍- சிதம்பரம் அதிரடி!



டீசல் விலை உயர்வுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுக்கிறது. கட்சிகளும் வழக்கம் போல தங்கள் நாடகங்களை ஆரம்பித்துள்ளன. நம் நாட்டில் தான் என்ன வேண்டுமானாலும் நடக்கலாமே சார். எனவே, வரும் வாரம் இந்தப் பதிவில் வருவதைப் போல ஏதேனும் நடந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது. அப்படி ஏதும் நிகழ்ந்து விடாமல் இருக்க பாரத மாதாவை வேண்டிக் கொள்வோம். இனி கற்பனைக்கு போகலாம். இன்றைய கற்பனை நம் நாட்டில் நாளைய செய்தி ஆகாது என்று என்ன சார் நிச்சயம்?

டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு குறித்து மன்மோகன் சிங், சிதம்பரத்திற்கு போன் செய்கிறார். "என்னப்பா சிதம்பரம், மக்கள் எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே...நாம் எதில் கை வைத்தாலும் கதை கந்தலாகிறதே...ஏதாவது செய்யப்பா" என்கிறார். சிதம்பரம், "கவலைப்படாதீர்கள். நம் மக்கள் எந்த எதிர்ப்பையும் நாலு நாள் செய்வார்கள். பிறகு ஆர்வம் வேறு விஷயங்களின் மீது போய் விடும். இருந்தாலும், நான் என் கடமையை செய்யாமல் இருக்க முடியுமா? நாளையே பத்திரிகையாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறேன். நான் பேசுவதற்கு தலையாட்ட இரண்டு அமைச்சர்களை வரச்சொல்லுங்கள்" என்கிறார்.

கூட்டம் ஏற்பாடாகிறது. "Times Now" போன்ற TV channels நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. இனி பத்திரிகையாளர்களின் கேள்விகளையும், சிதம்பரத்தின் பதில்களையும் பார்ப்போம்:

பத்தி: சார், மீண்டும் ஒரு விலையேற்றமா என்று மக்கள் கொதிக்கிறார்கள். அரசு என்ன செய்யப் போகிறது?

சிதம்பரம்: நீங்கள் அரசின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பாராட்டுகிறேன். எதையுமே செய்ய முடியாத அரசை பார்த்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று ஆக்கபூர்வமாக கேள்வி கேட்டதற்கு நன்றி.

பத்தி: நீங்கள் இன்னும் கேள்விக்கு பதில் சொல்லவில்லை.

சிதம்பரம்: மன்மோகன் சிங் ஏற்கனவே, ஒரு மெளனம் ஓராயிரம் பதில்களுக்கு சமம் என்று உங்களிடம்தானே போன வாரம் சொன்னார்? அவரின் அமைச்சரின் மெளனம் ஐநூறு மெளனங்களுக்காவது சமம் என்பதுதான் என் பதில்.

பத்தி: டீசல் விலை ஏறினால் அனைத்து பொருட்களின் விலையும் ஏறி விடுமே?

சிதம்பரம்: நாங்கள் இறங்கி விடும் என்று சொன்னோமா?

பத்தி: நீங்கள் மூத்த அமைச்சர். மக்கள் உங்களிடமிருந்து தீர்வுகளை எதிர்பார்க்கின்றனர்.

சிதம்பரம்: நான் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். ஐந்து வருடங்களுக்கு முன் உங்கள் சம்பளம் எவ்வளவு? (நிருபர் சொல்கிறார்). இப்போது எவ்வளவு? (நிருபர் சொல்கிறார்). (இன்னொருவரை எழுப்பி இதே கேள்வி கேட்கிறார். அவரும் பதில் சொல்கிறார்). பாருங்கள், அனைவரின் சம்பளமும் வருடா வருடம் கூடிகிறது. விலைவாசி கூடினால் மட்டும் குறை சொல்கிறீர்கள்? சம்பளம் கூடினால் வரும் அதிக பணத்தை விலைவாசி கூடினால் தானே செலவழிக்க முடியும்? (பதிலைக் கேட்ட பலர் மயக்கம் போட்டு விழுகின்றனர்!).

பத்தி: அப்படியென்றால் எந்த பொருளின் விலை உயர்ந்தாலும் நீங்கள் தடுக்க மாட்டீர்களா?

சிதம்பரம்: நாங்கள் டீசல் விலையைத்தான் உயர்த்தினோம். மற்ற பொருட்களின் விலை உயர்ந்தால், அந்தந்த அமைச்சர்கள் உங்களுக்கு விளக்கம் கொடுப்பார்கள்.

பத்தி: இந்த காஸ் சிலிண்டர் ரேஷன் முறை....(அவர் முடிக்கும் முன் சிதம்பரம் பதில் சொல்கிறார்)

சிதம்பரம்: என்ன கேள்வி இது? நம்ம நாட்டில் எத்தனை வீட்டில் தினமும் சமைக்கிறார்கள்? Pizza சாப்பிட்டு விட்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு சிலிண்டர் எதற்கு?

பத்தி: சார், உங்க ice cream - அரிசி விளக்கம் மாதிரிதானே சார் இதுவும்? நல்லா தெளிவாயிடுச்சு. நன்றி.

சிதம்பரம்: தலைப்புச் செய்தியா போடுங்க. அது மட்டுமில்லை. விருப்பப்பட்டா நாங்க விலையேத்துவோம்.அதையும் தெளிவாக போடுங்க...

(இதைக் கேள்விப்பட்டு நாடே கொந்தளிக்கிறது. நிலைமையை சமாளிக்க அடுத்த நாளே மற்றொமொரு பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடாகிறது)

சிதம்பரம்: பத்திரிகையாளர்கள் பொறுப்புடன் செய்திகள் போட வேண்டும். நான் "விருப்பப்படி விலையேற்றுவோம்" என்று சொன்னேன். ஆனால் யார் விருப்பப்படி என்று நீங்கள் கேட்டீர்களா? கேட்டிருந்தால், "மக்கள் விருப்பப்படி விலையேற்றுவோம்" என்று தெளிவுபடுத்தியிருப்பேன்...இப்போது பாருங்கள்...நான் சொன்னது எவ்வளவு தவறாக மக்களிடம் போய்ச்சேர்ந்திருக்கிறது...


என்ன பேசுவது என்று தெரியாமல் வாய் பிளந்தபடி நின்றிருந்த நிருபர்கள் வாயில் சிவகங்கையிலிருந்து சிறப்பாக வரவழைக்கப்பட்டிருந்த அல்வா வைக்கும்படி தன் உதவியாளரிடம் சொல்லிக்கொண்டிருந்தார் சிதம்பரம்.

நிருபர்களுக்கு மட்டுமா? நம் அனைவருக்குமே கொடுக்கக் கூடிய திறமையுள்ளவர்தானே அவர்!


Saturday, September 15, 2012

குத்தானந்தாவின் குத்துப் பாட்டு பகுதி 1

ஞாயிறு காலை...சூரியன் முதுகை சுட்டு எழுப்பும் சோம்பல் மிகுந்த வேளை..."உங்கள் tooth pasteல் உப்பு இருக்கிறதா" என்று தொலைக்காட்சியில் ஒருவர் நம்மை விசாரித்துக் கொண்டிருக்க, பற்களின் மேலும் கீழுமாய் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தன எனக்கு நம்பகமான பற்பசையை தாங்கிய tooth brush.

தண்ணீரை முகத்தில் நனைத்து துடைத்தபடி கண்ணாடியை பார்த்தால், என்னைப் பார்த்து சிரித்தபடி ஒரு உருவம் நின்றிருந்தது. ""அய்யா, யார் நீங்கள்?" என்றேன்..."நித்தம் ஓடியாடி சித்தம் ஓய்ந்து போகும் மக்களை குத்துப் பாட்டு மூலம் குஷிப்படுத்த வந்திருக்கும் குத்தானந்தா நான்" என்றார் அவர். "அய்யா, "ஆனந்தா" என்று முடியும் பெயர்கள் கேட்டாலே ஆத்திரத்தில் மக்கள் கொதிக்கும் நேரத்தில் இப்படி ஒரு பெயர் தேவையா?" என்று கேட்க நினைத்தேன். அதற்குள் அவரே,"நான் வெறும் குத்தானந்தா அல்ல. ஸ்ரீ குத்தானந்தா" என்று விளக்கம் கொடுத்தார். இப்பொழுதெல்லாம் தகுதி இருக்கிறதோ இல்லையோ, பெயருக்குப் முன்னாலும் பின்னாலும் எதையாவது சேர்த்துக் கொள்வதுதானே fashion என்று சொல்லத் தோன்றியது. "நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா" என்று கண்ணதாசன் ஒரு பாட்டு வரியில் சொல்வாரே அதைப் போல் பேசாமல் இருந்து விட்டேன்.

"கலிகாலம் சாமி. பன்னாட்டு கம்பெனி போல செயல்படும் ஆன்மீக குருக்கள் புற்றீசல் போல கிளம்பி விட்டார்கள். அவர்களைப் போல உங்கள் புகழும் பல நாடுகள் பரவ வேண்டுமென்றால் ஒரு "ஸ்ரீ " போதாது இரண்டு "ஸ்ரீ " குறைந்தபட்சம் போட்டுக் கொள்ள வேண்டும்" என்றேன். குதூகலமான குத்தானந்தா, "சபாஷ் தம்பி. உன்னை போன்றவர்கள்தான் சிஷ்யர்களாக தகுதி படைத்தவர்கள். இரண்டு ஸ்ரீ  போட்டுக்கொள்ளலாம்" என்று தன் பெயரை "ஸ்ரீ  ஸ்ரீ  குத்தானந்தா" என்று சில முறை சொல்லிப் பார்த்துக் கொண்டார். "ஆனால் சாமி, அதை சற்று தமிழாக்கம் செய்தால் "சீ சீ குத்தானந்தா" என்று வருமே...அழைப்பதற்கும் கேட்பதற்கும் ஒரு மாதிரியாக இருக்குமே..." என்றேன். "ஓ நீ என்னையே ஆழம் பார்க்கிறாயா" என்று கோபம் கொண்டார் குத்தானந்தா. கபால் என்று காலில் விழுந்து "என்னை மன்னித்து சீடனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்ற என் கெஞ்சலுக்கு கொஞ்சம் செவி சாய்த்து, "சரி சரி எழுந்திரு" என்றார்.

நன்றி சாமி. குத்துப்பாட்டு என்பதன் இலக்கணம் என்ன? என்றேன் நான்.

"மிதமிஞ்சிய சந்தம்
குத்துக்கு சொந்தம்
பொருளற்ற சத்தம்
குத்துக்கு குத்தம்"

என்று பாட்டாகவே ஒரு போடு போட்டார். "சாமி இதுவே ஒரு குத்து போல இருக்கிறதே" என்றேன்."ரொம்ப ice வைக்காதே. நான் ஒன்றும் இலவசமாய் உனக்கு குத்துப்பாட்டு சொல்ல மாட்டேன். பதிலுக்கு நீ வாரம் ஒன்று தர வேண்டும். என்னவென்று அடுத்த வாரம் சொல்கிறேன் என்றார். "சரி சாமி" என்று ஒத்துக் கொண்ட நான், "நம் நாட்டில் திட்டம் நல்லாத்தான் போடுவோம். ஆனால் ஒன்றும் வேலைக்கு ஆகாது. அது போல வாரா வாரம் உங்கள் குத்துப் பாட்டை பதிவாக போடும் திட்டத்திற்கு தடையாக நாட்டில் ஆயிரம் அக்கிரமங்கள் நடந்து அதைப் பற்றிய‌ பதிவு போடும்படி தூண்டுமே சாமி என்ன செய்வது?" என்றேன். "அதற்கென்ன சீடா...நம் நாட்டில் நம் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் பேசலாம் செய்யலாம் எவரும் கண்டு கொள்ள மாட்டார்கள். ஜனநாயகம் என்பதற்கு புதிய அர்த்தம் கொடுப்பவர்கள் அல்லவா நாம்" என்று சொன்னதோடு நில்லாமல், "சமீபத்திய எடுத்துக்காட்டு சொல்கிறேன் கேள்" என்றார்...

"சீடா, சென்ற வாரம் ஏதோ ஒரு உப்புச்சப்பில்லாத இலங்கை பல்கலைகழக அணி தமிழ்நாட்டில் விளையாட வந்ததற்காக இங்குள்ள address இல்லா அமைப்புகள் முதல் அரசாங்கம் வரை அப்படியொரு குதிகுதித்து அவர்களை திருப்பி அனுப்பினவே...அடுத்த வாரம் t20 cricket world cup இலங்கையில் நடக்க உள்ளது. இந்திய அணியில் தமிழ்நாட்டின் Ashwin விளையாடுகிறார். அதாவது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் இலங்கை சென்று விளையாடுகிறார். இது மட்டும் சரியா? சொல்லு பார்ப்போம் என்றார். "சாமி நீங்க டேஞ்சரான ஆசாமியா இருப்பீங்க போலிருக்கே, குத்துப் பாட்டு நடுவிலே நிறைய "உள்குத்து" வேற குத்துவீங்க போல..." என்றேன்.

"கண்ணாடியோட என்ன பேச்சு" என்று கடுப்பாகிப் போன என் மனைவியின் குரல் கேட்க அப்புறம் பார்க்கலாம் என்று அவசரமாக காணாமல் போனார் குத்தானந்தா...

Saturday, September 8, 2012

முப்பத்தி இரண்டு பற்களும் தெரியும்படி சிரியுங்கள்!

ஆமாம் சார். நமக்கிருக்கும் தினசரி சிக்கல்களில் சிரிப்பதற்கு எங்கே நேரம் கிடைக்கிறது? ஆனால், அதிகம் சிரித்தால் ஆரோக்கியம் என்று சொல்கிறார்களே! எனவே தான் நம் மத்திய அரசு, "நகைச்சுவை வளர்ச்சித் துறை" என்று தனியே ஒரு இலாகா துவக்கியுள்ளது.

"என்னய்யா இது எந்த பத்திரிகைகளிலும் வராத செய்தியாக இருக்கிறதே!" என்கிறீர்களா? ஏன் சார், அரசாங்க ரகசியங்கள் எல்லாம் வெளிவரும் பொழுது, இது போன்ற, வெளியே  தெரிய வேண்டிய விஷயங்கள் ரகசியமாகத்தானே இருக்கும்?

இந்த "நகைச்சுவை வளர்ச்சித் துறை"யில் நீண்ட நாட்களாகவே சிதம்பரமும் கபில் சிபலும் ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள். நகைச்சுவையிலும், உருக்கமான நகைச்சுவை என்று ஒன்று இருக்க முடியும் என்று அவ்வப்போது மன்மோகன் சிங் நிரூபித்து வந்தார். இவர்கள் மட்டுமே நாட்டு மக்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்தால் போதுமா சார்? பார்த்தார்கள் மற்ற அமைச்சர்கள். எப்படியும் எந்தத் துறையிலும் உருப்படியான வேலை எதுவும் நடைபெறவில்லை. நாமும் ஏன் "நகைச்சுவை வளர்ச்சித் துறை"யில் பணியாற்றக் கூடாது என்று கிளம்பி விட்டார்கள்.

இதில் புதிதாக சேர்ந்திருப்பவர் தான் "பெனி பிரசாத் வர்மா". என்ன சார் இது, கேள்விப்படாத பெயராக இருக்கிறதே...இப்படி ஒரு அமைச்சரா? என்று கேட்பீர்கள்தானே? சரிதான் சார். முன்னரெல்லாம் ஒரு மந்திரி பல ஆண்டுகள் ஒரு துறையில் இருப்பார். வேலையும் செய்வார். நமக்கெல்லாம் அந்த மந்திரியின் பெயர் மட்டுமின்றி மற்ற தகவல்களும் நினைவில் இருக்கும். இப்பொழுதோ நாளொரு மந்திரி பொழுதொரு துறைக்கு வருகிறார் போகிறார். நாட்டுப்பணி என்று எந்த வேலையும் கிடையாது. அப்புறம் எப்படி சார் மந்திரியின் பெயர்கள் நமக்குத் தெரியும்? எனவே, பெனி பிரசாத் வர்மா ஒரு மந்திரி சார். எந்தத் துறை என்பதெல்லாம் நமக்கு எதற்கு? எந்த வேலையுமே நடைபெறாத நாட்டில் எந்தத் துறைக்கு யார் மந்திரியாக‌ இருந்தால் என்ன?

இவர், "நகைச்சுவை அமைச்சகத்தின்" புதிய உறுப்பினராகி சில முத்துக்களை உதிர்த்திருக்கிறார். "விலைவாசி உயர்வு மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாயிகள் பயன்பெறுவார்கள்" என்று சொல்லியிருக்கிறார் இவர். நாம் இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். மன்மோகன் சிங், "விலைவாசி உயர்வு கவலை அளிக்கிறது. தூக்கம் கூட எனக்கு கிடையாது" என்று சொல்லியிருக்கிறார். இந்த வர்மா, சிங்கின் அமைச்சரவையில் உள்ளவர். அவரோ மகிழ்ச்சியில் திளைக்கிறார். மன்மோகனோ துயரத்தில் உழல்கிறார்.
அதுவும் ஒரே விஷயத்திற்காக!

அதாவது, ஒரே விஷயத்திற்காக பிரதமர் கவலைப்படுவதாக கூறுகிறார். அவரின் அமைச்சரோ, அதே விஷயம் சந்தோஷமாக இருக்கிறது என்கிறார். என்ன சார் நடக்கிறது? இப்படி ஆளாளுக்கு தங்கள் விருப்பப்படி பொறுப்பில்லாமல் பேசுகிறீர்களே என்று கேட்டால் போச்சு...அவ்வளவுதான். சிதம்பரமோ கபில்சிபலோ பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து விடுவார்கள். அங்கு அவர்கள் அளிக்கும் விளக்கமோ, சம்பந்தப்பட்டவர் முன்னர் பேசியதே பரவாயில்லை என்ற அளவுக்கு நம்மை கொண்டு போய் விடும்.

எனக்கு இந்த சிதம்பரம் மீது சந்தேகம் சார். அதாவது, முன்னரெல்லாம் சிதம்பரம் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது நடு நடுவே திருக்குறள் சிலவற்றை எடுத்து விடுவார். நமக்கும், "ஆஹா! தமிழர் ஒருவர் நாட்டுக்கு பட்ஜெட் சமர்க்கிறார்...அந்த உரையில் திருக்குறள் வேறு சொல்கிறார்" என்று புல்லரித்து போவோம் (இப்போது இவரது பேச்சுக்கள் செல்லரித்து கிடக்கின்றன என்பது வேறு விஷயம்). ஒரு வேளை இவர் சம்பந்தம் இல்லாமல் "இடுக்கண் வருங்கால் நகுக" குறளை வர்மாவுக்கு சொல்லிக் கொடுத்து, "சும்மா பேசி வைங்க. ஏதாவது சிக்கலாச்சுனா வள்ளுவரே சொல்லியிருக்கார்னு விளக்கம் கொடுத்துரலாம்" என்று சொல்லியிருப்பாரோ?

இப்போது சொல்லுங்கள் நாம் பற்கள் அனைத்தும் தெரியும்படி சிரிக்க வேண்டுமா வேண்டாமா?



Saturday, September 1, 2012

ரயிலில் பயணம் செய்வது எப்படி? பகுதி 8


பாருங்கள்...ஒரு பதிவை ஒரு வாரம் எழுதி அடுத்த வாரம் தொடர்வதற்குள் ஒன்பது ஊழல்கள் நம் நாட்டில். ரயில் திகில் எழுதலாம் என்றால் கரி கிலி கிளப்புகிறது...சரி விடுங்கள், நம் கதைக்கு மீண்டும் வருவோம்.

புதிதாக "கலி காலம்" வருபவர்கள்,  ரயிலில் பயணம் செய்வது எப்படி? பகுதி 7 படித்து விட்டு மீண்டும் இங்கு வரவும். அதன் தொடர்ச்சியே இந்தப் பதிவு.

என்னுடன் வந்த இளைஞர் ரயில் முழுதும் ரோந்து போய்விட்டு வந்தவுடன் என்னை திகிலடைய வைக்கும்படி அப்படி என்னதான் சொன்னார்? "S7 மட்டும் தான் நமக்கு சரிப்படும். இரண்டும் பாத்ரூம் பக்கம். வைப்பதற்கும் கவனிக்கவும் வசதி." மேலும் தனது நண்பரின் பெயரைச் சொல்லி, "அவனைத்தான் பார்த்துக் கொள்ள சொல்லியிருக்கிறேன் எலித் தொல்லை வேறு கடித்து கிடித்து வைத்து விடாமல் இருக்க வேண்டும்" என்றார்.

ஆஹா... ஒரு வேளை ஒயர் கியர் பாத்ரூமில் fit பண்ணியிருப்பார்களோ? என்று என் எண்ணம் எட்டு ஊருக்கு கட்டம் போட மற்றொருவர் என் வயிற்றில் கத்தியை சொருகினார். ஆம். "சரி கத்தி யார்கிட்ட இருக்கு?" என்று அவர் கேட்டவுடன் பசியிலுள்ள வயிறு பச்சை மிளகாய் சாப்பிட்டது போல  ஒரு உணர்வு வாயிலிருந்து வயிறு வரை பரவியது. மணி பதினொன்றை தாண்டியது. அவர்களின் மேல் ஒரு பார்வையை வைத்தபடி, "upper berth" ஏறி காலை நீட்டி படுத்தபடி கண்களை அவர்கள் பக்கம் ஓட்டினேன். அனைவரும் எங்கோ கிளம்பிச் சென்றனர். 1997 டிசம்பரில் Srirangam அருகே Pandian Express ரயிலில் குண்டு வெடித்தபோது நான், குண்டு வெடித்த பாத்ரூமிற்கு பக்கத்து பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அந்த ஞாபகம் மூளையிலிருந்து கிளம்பி கிட்டத்தட்ட கண்களை பிளந்து வெளிவந்து விடும் போல இருந்தது.

12 மணி அடிக்க பத்து நிமிடங்கள் இருக்கையில், பெட்டியின் விளக்குகள் மீண்டும் போடப்பட்டன ‍ அவர்கள் மூன்று பேர் திரும்பி விட்டனர். அவர்களின் கையில் இப்போது ஒரு அட்டைபெட்டி இருந்தது. எல்லாம் ரெடி என்றார் ஒருவர். கட்டை விரலை உயர்த்திக் காட்டினார் மற்றொருவர். வண்டி கிளம்பியதிலிருந்து முதல் முறையாக அவர்கள் அனைவரும் செல்போனை வெளியில் எடுத்தனர். "10 minutesதான் இருக்கு எல்லாரையும் இங்க வந்துர சொல்லு" என்றார் ஒருவர். வரிசையாக நான்கைந்து போன் உரையாடல்கள் சட்சட்டென்று நடந்தேறின. போதாத குறைக்கு "ரயிலையே உலுக்கனும்டா" என்று ஒருவர் punch line வேறு வைத்தார்.அடுத்த ஐந்து நிமிடங்களில் அங்கு 7 பேர் இருந்தனர்.

இயற்கை அழைப்பின் சாக்கில் நான் berth விட்டு கீழே இறங்கினேன். நான் கீழே இறங்குவதை பார்த்த அவர்கள், என்னைப் பார்த்து குறுநகை பூத்தனர். ‍ நானோ, மூன்று நாட்கள் முன்பு செய்த‌ பூரியை வாயில் மெல்லுகையில் சிரிக்கச் சொன்னால் எப்படியிருக்குமோ அதைப் போல அவர்களை பார்த்து "ஒரு மாதிரி"யாக சிரித்து வைத்தேன்.

கழிவறையின் உள்ளே நான் இருக்கையில் "ஹோ" என்ற இரைச்சல் வெளியில் கேட்டது. ஒரு நிமிடம் கழித்து நான் என் இடத்திற்கு வந்தால்...

அந்த அட்டைப் பெட்டி பிரிக்கப்பட்டிருந்தது....ஒருவர் முகம் முழுக்க cake வழிய நின்று கொண்டிருந்தார். வேறொன்றுமில்லை சார்...அந்த நண்பர் குழுவில் ஒருவருக்கு பிறந்த நாள். ஒவ்வொருவரும் வெவ்வேறு பெட்டியில் RACயில் அகப்பட்டு கொண்டதால் இத்தனை களேபரம். அனைவரையும் தேடிப்பிடித்து கூட்டி வந்திருக்கிறார்கள். எனக்கும் சிறிது கேக் கொடுத்தார்கள். அவர்களிடம், "நான் ரயிலில் ஏறியதிலிருந்தே அல்வா சாப்பிட்டுக்கொண்டே தான் வந்தேன்" என்று சொல்ல முடியுமா? கேக், அல்வா இரண்டுமே இனிப்புதான் இல்லையா சார்? நான் வாங்கிக் கொண்ட கேக் அல்வா போன்றே இருந்தது!