/ கலி காலம்

Sunday, April 21, 2013

கவலைகள் போக்க எளிய வழி!


பங்களாவில் வசித்தாலும் சரி பிளாட்பாரத்தில் வசித்தாலும் சரி, வாழ்க்கையில் மேடுபள்ளங்களும், அதனால் ஆளாளுக்கு ஒரு வண்டி கவலைகளும் நம் அனைவருக்குமே இருக்கிறது...ஆனால் நுனி விரல் நோகாமல் நொங்கு தின்பதுதான் நமக்குப் பிடிக்கும். தத்துவ விசாரங்கள், பிறப்பை உய்வதற்கான‌ வழிகள் என்றெல்லாம் பேசினால் கலிகாலத்தில் எடுபடுமா சார்? கருத்தான வாழ்க்கை என்பதையெல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு அனைத்தையும் காமெடியாக்கி திரிந்தால்தானே சார் நாமும் கலிகாலத்தில் வாழ்ந்தோம் என்ற பெருமை கிட்டும்...எனவே அந்த வழியிலேயே சென்று கவலை நீக்க வழி கிடைத்தால் கொண்டாட்டம்தானே நமக்கு?

காலையின் பரபரப்புக்குத் தயாராகும் பொழுதும், களைத்துப் போய் இரவில் வீடு திரும்பிய பிறகும், சிறிது நேரம் டிவிக்கு கண்ணைக் கொடுக்கையில் தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. நம் தொலைக்காட்சி சேனல்கள் எத்தனை போற்றத்தகு மக்கள் சேவை ஆற்றுகிறது என்ற ஞானமும் எனக்குக் கிட்டியது.  காமெடி நிகழ்ச்சிகள் பல சேனல்களின் வந்தாலும், மக்களின் கவலை தீர்க்கும் அருமருந்தாக, "காமெடி நிகழ்ச்சி" என்ற அறிவிப்பில்லாமல், பல சேனல்களில் ஒரு நிகழ்ச்சி வருகிறது சார்..."கண்டிப்பாக இந்த நிகழ்ச்சி நகைச்சுவை நிகழ்ச்சி அல்ல" என்று ஒரு கார்டு போட்டால் நன்றாக இருக்கும்!

நமக்கான "கனவு வீடு" எப்படி வாங்குவது என்று பல்வேறு நில பிரமோட்டர்கள் தங்கள் சரக்கை கடை விரிக்கும் விளம்பரங்கள் தான் அந்த நிகழ்ச்சி.

முதலில் அதிரடி பிண்ணனி இசையுடன் (ஏதாவது பாடலில் இருந்து கடன் வாங்கிய இசைதான்) ஒரு பொட்டல் காடு லாங் ஷாட்டில் காட்டப்படும். அதுவே நம் கனவு வீட்டிற்கான "site". இந்தப் பொட்டலைச் சுற்றி மயிலாடும் மாந்தோப்பும் புறா பறக்கும் பூந்தோப்பும் இருப்பது போன்ற ஒரு பில்டப் அந்தக் காட்சியில் இருக்கும்!

பரபரப்பான அறிமுகக் காட்சி முடிந்தவுடன், பஸ்கள் பறக்கும் நெடுஞ்சாலையில் நின்று கொண்டு தமிழ் கூறும் நல்லுலகிற்கு வணக்கம் தெரிவிப்பார் பல சீரியல்களில் அழுது முடித்து, இந்த நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் நடிக்க சம்மதித்திருக்கும் தொலைக்காட்சி நடிகை ஒருவர். சில வருடங்களுக்கு முன் தாம்பரத்தில் ஆரம்பித்த இவரின் வணக்கம் இப்போது வந்தவாசி தாண்டி வந்திருக்கிறது.

இந்நிலையில், நாம், நமக்கான சிரிப்பு மருந்து தயாராகி விட்டது என்று உணர்ந்து அதை சுவைக்கத் தயாராக இருக்க வேண்டும்.எந்த "கனவு வீடு" நிகழ்ச்சி எந்த வகை காமெடியில் நம் கவலை போக்கும் என்று நமக்குத் தெரியாது. அவை அதிர்ச்சி ரகமாகவும் இருக்கும்.

உதாரணமாக, ஒரு நிகழ்ச்சியில், காக்கை அமர்ந்து போவதற்குக் கூட மரக்கொப்பற்ற வெட்டவெளியில் நின்றிருந்த நடிகர் ஒருவர், தொலைவில் இருந்த ஒரு குளிர்பான ஆலையை காட்டி, "பன்னாட்டு ஆலை பாருங்கள்...உங்கள் மனையின் பக்கத்தில்...!" என்று கூவிக் கொண்டிருந்தார். நமக்கோ, "நாங்க ஏன்டா நடுராத்திரி சுடுகாட்டுக்கு போகப்போறோம்" என்ற வடிவேலுவின் காமெடி நினைவிற்கு வரும். இவர்கள் எதை விளக்க வருகிறார்கள்? ஒரு வேளை தண்ணீர் தாகம் எடுத்தால், "whole sale" விலையில் குளிர்பானம் வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளலாம் என்றா? ஓ...பன்னாட்டு ஆலை இருப்பதானால் அந்த ஏரியா டெவலப் ஆகுதாம் சார் டெவலப்!

ஞாயிற்றுக் கிழமை என்றால் சிறப்புக் (சிரிப்பு?) குலுக்கல்கள் உண்டு. இதில் கலந்து கொள்வோர்களுக்கு பிரியாணி முதற்கொண்டு பலமான "கவனிப்பு"! அதையும் விடாமல் நிகழ்ச்சியில் காட்டுகிறார்கள். சிலசமயம் நன்றாக "கவனிக்கப்பட்டவர்கள்" பேட்டி வேறு கொடுப்பார்கள். மனையின் அருமை பெருமை...இந்த வாய்ப்பை விட்டால் வாழ்க்கையே முடிந்தது என்ற ரேஞ்சில் இவர்களுக்கு சொல்லித் தரப்பட்டிருக்கும் டயலாக்குகளை சிலர் மறந்து போய் உளறிக் கொட்டுவார்கள். இப்படித்தான், சமீபத்தில் ஒருவரிடம் நிகழ்ச்சி நடத்துனர், "எங்களிடம் மனை வாங்கிய‌ உங்க அனுபவத்தை சொல்லுங்க" என்று ஆவலுடன் கேட்க, "வெஜிடபிள் பிரியாணி ரொம்ப நல்லா இருக்கு" என்றார். அப்பொழுது சிரிக்க ஆரம்பிக்கும் நீங்கள் நாள் முழுதும் சிரிப்பீர்களா மாட்டீர்களா?

இவர்கள் இது போன்று நமக்கு அள்ளித் தரும் நகைச்சுவைகள் எத்தனை எத்தனை...வரும் வாரம் தொடர்வோம்...

Sunday, March 31, 2013

அடக்கடவுளே...உனக்குமா இந்த...?

முன்னரெல்லாம் மொட்டை அடித்துள்ள எவரையேனும் பார்த்தால் "திருப்பதியா?" என்று கேட்போம். இனிமேல், நீளமாக "punk style " முடி வைத்திருப்பர்களைப் பார்த்தால் "திருப்பதியா?" என்று கேட்க வேண்டும் என்ற நிலைமை வந்து விட்டது சார்...

அதான்...ஏப்ரல் மாதம் முதல் 31 அங்குலத்திற்கு மேல் முடி காணிக்கை கொடுப்பவர்களுக்கு இலவச லட்டு என்றுஅறிவித்திருக்கிறார்களே...புரட்சிகரமான திட்டங்களை அரசியல்வாதிகள் தான் அறிவிக்க வேண்டும் என்று யார் சொன்னது? வணிகத்தின் வாயில்களாகி விட்ட கோயில்கள் கூட நம் நாட்டில் "புரட்சி" செய்யலாம் சார்...

சரி, பக்தர்களை "பரவசப்படுத்தும்" பணியே தங்கள் கடமை என்று நினைத்திருந்தால், முடி காணிக்கை செய்வோருக்கு கூடுதல் நேர தரிசனம் என்று சொல்லியிருக்கலாம்..அதை விட்டு இதென்ன சார் காமெடி? ஒரு வேளை "மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது" என்பது இது தானோ?

ஏற்கெனவே முடி வணிகம் எப்படிப்பட்ட "பிஸினஸ்" என்பது நமக்குத் தெரியும், இந்தப் புதுப் புரட்சி மூலம், முடிக் காணிக்கை செலுத்தும் இடத்திற்கு அருகிலேயே "தைலம்" விற்கும் கடைகளுக்கு காண்ட்ராக்ட் விட்டு கூடுதல் "பிஸினஸ்" பார்க்க‌த் திட்டம் போட்டிருக்கிறார்களோ என்னவோ...

ஆனால் நாம் பேசாமல் லட்டு வாங்கி வந்து விடுவோமா என்ன? நம்மூர்காரர்களுக்கும் முடிவெட்டுபவர்களுக்கும் என்னவெல்லாம் "உரையாடல்" நிகழுமோ...உதாரணமாக:

(i)"அதென்னங்க 31 அங்குலம்? இருபது, முப்பது அப்படின்னு அளக்க வசதியா வைக்காம 31? ஒரு அங்குலம் கமிஷன் அடிச்சிருவீங்களா?" என்று எவரேனும் கேட்கலாம்...

(ii)"எனக்கு முடி உதிரும் problem இருக்கு. அதனால பூந்தியாவது கொடுங்க" என்று புதுத்திட்டத்தில் பாதிப்படைந்த ஒருவர் வேண்டுகோள் விடுக்கலாம்.

(iii)இப்போது காலம் போகும் வேகத்தில் இருபது வயது காரர்களுக்கே நரைத்து விடுகிறது. கோயில் நிர்வாகம், நரை முடிக்கு இலவச லட்டு உண்டா என்று தெளிவாக சொல்லாததால் குழப்பம் ஏற்படலாம்...முடியின் வண்ணம் குறித்து வாக்குவாதம் நடந்தால், சமாதானம் செய்யும் பொருட்டு "police பந்தோபஸ்து" போடப்படலாம்.

அவ்வளவு ஏன் சார்? இலவசங்களை கொடுத்தே நம்மை இளிச்சவாயர்களாக இருக்க வைக்க முயற்சி செய்யும் நாட்டில், லட்டு சும்மா கொடுப்பதோடு நிறுத்தினால் நன்றாக இருக்குமா? விலையில்லா மடிக்கணிணி, மிக்ஸி, போல வீடுதோறும் விலையில்லா தலைமுடித் தைலம் கொடுத்தால் நாம் வேண்டாம் என்று சொல்லி விடுவோமா? அத்துடன், திருப்பதிக்கு இலவச பேருந்து சர்வீஸ், மாதந்தோறும் "திருப்பதி உதவித் தொகை" என்று அமர்க்களப்படுத்தலாமே சார்...பொறுத்திருப்போம். நம் நாட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். 

நல்ல வேளை. மக்களின் எதிர்ப்பினால் இந்த "பக்திப் புரட்சி" கைவிடப்பட்டிருப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால், எதிர்த்தால் தான் எதுவுமே மூளைக்கு ஏறும் என்றால், "சுய புத்தி" என்ற சொல் இப்போது எந்த நிர்வாகத்திலும் புழக்கத்தில் இல்லையோ?

இது போன்ற கன்றாவிகளை பார்க்கச் சகிக்காமல் கடுப்பாகிப் போன‌ கடவுள்கள், மனிதர்கள் பார்க்க இயலாத மறைவான இடத்திற்கு மாற்றலாகிப் போய் பல மாமாங்கம் ஆகியிருக்குமோ?

Sunday, March 3, 2013

இதுவும் ஒரு வகை அசிங்கமே...


பரபரப்பை மட்டுமே மூலதனமாக வைத்து பிழைப்பை வெற்றிகரமாக ஓட்டுவது எப்படி என்று நம் டிவி சேனல்கள் கற்றுத் தேர்ந்து விட்டன. எதையும் விட்டுவைக்காமல் அதில் செயற்கை பரபரப்பைத் திணித்து அவர்கள் போடும் ஆட்டம் பல சமயங்களில் காமெடியாகவும் கவலை தருவதாகவும் இருப்பதை என்னவென்று சொல்வது...

சில நாட்கள் முன்னர் +2 தேர்வுகள் துவங்கின. ஆண்டாண்டு காலமாக ஆயிரக்கணக்கானோர் எழுதி வரும் தேர்வு தான். ஆனால் அதை வெறும் செய்தியாக சொன்னால் அதில் என்ன சார் சுவாரஸ்யம்? எனவே, அன்று நம் டிவி சேனல்கள், தங்கள் புத்திசாலித்தனத்தில் புகுந்து விளையாட கிடைத்த வாய்ப்பாக +2 தேர்வுகளை பயன்படுத்திக் கொண்டன.

ஒரு பள்ளியின் உள்ளே நம் "சிறப்பு நிருபர்" நின்றிருந்தார். தேர்வு பற்றிய ஆர்வத்துடனும் கவனத்துடனும் போகும் மாணவர்களை மடக்கிப் பிடித்தார் நிருபர். "முதல் நாள் தேர்வு எழுதப்போகும் அனுபவம் எப்படி இருக்கிறது?" என்று கேள்வியை வீச, அதை "செய்தி நிலையத்திற்கு" நேரலை செய்து கொண்டிருந்தார். நமக்கு புத்தி மிகவும் பிசகி விட்டதோ சார்? அது சரி, மாணவர்களை பற்றிய அக்கறை இருந்தால், இவற்றிற்கு பள்ளி உரிமையாளர் (வியாபரம் என்றால், கடை வைத்திருப்பவர்களை உரிமையாளர் என்று தானே அழைக்க முடியும்) சம்மதித்திருப்பாரா? இது போன்று கவனச்சிதறல் செய்வது கோமாளித்தனம் என்று டிவி சேனல் ஆட்களை வெளியில் தள்ளியிருக்க மாட்டார்? சரியா போச்சப்பா...எந்த காலத்தில் இருக்கிறாய் நீ? பள்ளி டிவியில் வந்தால் எத்தனை விளம்பரம்...அது தெரியாமல் மாணவர்களாவது கவனச் சிதறலாவது என்கிறீர்களா? நீங்கள் சொல்வது சரியே!

இந்த நிருபர் கேட்ட கேள்விகள் சிலவற்றை பார்க்கலாம் சார்..."தம்பி எத்தனை நாட்களாக படித்து வருகிறீர்கள்?" இதற்கு சிலர் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நிருபரையே பார்த்தபடி இருந்தார்கள்...
"ஏன்யா பள்ளி செல்வதே தினமும் படிப்பதற்கு தானே இது என்ன கேள்வி" என்று நினைத்திருப்பார்கள் போலும். இவ்வாறு சிலரிடம் கேட்டது, தேவையான பரபரப்பு கிட்டாததால், தன் புத்தியை கூராக்கிய நிருபர், "தீவிரமாக" என்ற வார்த்தையை அந்த கேள்வியில் சேர்த்தார். இருந்தாலும் அவர் எதிர்பார்த்த அளவு "emotion" அல்லது "sentiment" கிடைக்கவில்லை. தற்காலத் தலைமுறை நிதானமும் யதார்த்தமுமாக பதிலளித்தது. ஒருவர் வைத்திருந்த திருநீறு பார்த்து "தேர்வு அன்று கோயிலுக்கு போய் விட்டு வருவது பழக்கமா?"  என்றார். ஒரு மாணவியிடம் "டென்ஷனாக" இருக்கிறதா என்று கேட்டார். அவர் நார்மலாக இருக்க, நிருபருக்கு ஏமாற்றமாக போயிற்று. டென்ஷன் ஏற்றுவது தானே தனது வேலை என்று முடிந்த அளவுக்கு கேள்விகளை மாற்றி மாற்றி கேட்டும் அந்தப் பெண் அசராமல் இருக்க, அடுத்த பலிகடாவை தேடியது நிருபரின் பார்வை.

அடுத்த வருடம் இன்னும் பயிற்சியுடன் இத்தகைய நிருபர்கள் களமிறங்கி வெளுத்துக் கட்டுவார்கள் என்று எதிர்பார்ப்பதோடு நாம் நின்று விடமுடியுமா சார்? அவர்களுக்கு உபயோகமான சில டிப்ஸ் கொடுக்கலாம்...

பள்ளிக்குள் நின்றால் போதுமா? தேர்வு அறையிலேயே போய் உட்கார்ந்து விட வேண்டும். "இதுதான் கேள்வித்தாள். இதில் கேள்விகள் எல்லாம் அச்சடிக்கப்பட்டிருக்கும்" என்று நிருபர் ஒரு கேள்வித்தாளை காட்ட, காமெரா அதை zoom செய்யலாம்.அறையில் இருக்கும் பெஞ்சுகளை நிருபர் சுட்டிக் காட்டியபடி "இதில் அமர்ந்து தான் மாணவர்கள் தேர்வு எழுதுவது வழக்கம்" என்று அரிய கருத்து சொல்லி நமக்கு புரிய வைக்கலாம். சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி என்று முக்கிய நகரங்களில் நிருபர்களை நிற்க வைத்து, "அங்கு தேர்வு நிலவரம் எப்படி இருக்கிறது" என்று செய்தியாளர் கேட்க, "மதுரையில பார்த்தீங்கனா காலையிலிருந்தே மாணவ மாணவிகள் கூட்டமாக கூட்டமாக பள்ளிகள் நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்..." என்று போர் நிலவரம் போல buildup கொடுக்கலாம்...+2 என்பதை பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு என்றும் அழைப்பார்கள் என்று கூடுதல் தகவல் சொல்லி நம்மை புல்லரிக்க வைக்கலாம்...

பறக்கும் படையினர் எவரையேனும் காப்பியடிக்கும் போது பிடித்தால், முக்கிய செய்தியாக "flash news" போட்டுக் கலக்கலாம். அதைவிட, எவ்வாறு பிடிபட்டார் என்பதை "live relay" செய்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை...என்ன...ஒரே ஒரு கவலை..."தேர்வு வரலாற்றில் முதன் முறையாக‌ உங்கள் abcd தொலைக்காட்சியில்..." என்ற அறிவிப்போடு, தேர்வு தினத்திற்கு முன்னரே வினாத்தாளை சேனல்கள் leak செய்து விட்டால்...இன்னும் அது மட்டும்தானே சார் பாக்கி?

Sunday, February 17, 2013

அட கிறுக்குப் பய புள்ளைகளா...


பதிவின் தலைப்பு வடிவேலுவிடமிருந்து வாங்கியது. ஆனால் உள்ளே இருக்கும் விஷயம் என்னவென்று பார்க்கலாம் வாருங்கள். சில வாரங்களுக்கு முன்னர் ஒரு நாள், மனித மந்தையின் நெரிசல் மிகுந்த காலை நேர வாழ்க்கை சந்தையில் நானும் ஒரு ஆடாய் பேருந்தில் சிக்கியிருந்தேன். பேருந்தும் போக்குவரத்து நெரிசலில் ஒரு கல்லூரி வாசலருகே சிக்கியிருந்தது.

ஒரு நாட்டின், சமூகத்தின், சீரழிவை அதன் கல்விக் கூடங்கள் எந்தளவு வியாபர நோக்கில் செயல்படுகின்றன என்பதை வைத்தே நாம் சொல்லி விடலாம் இல்லையா சார்? எப்பொழுது கல்வி நிலையங்களும் மருத்துவமனைகளும் விளம்பரம் செய்யத் துவங்கி விட்டனவோ அப்பொழுதே சீரழிவு துவங்கி விட்டனவே...

அங்கே ஒரு "advertisement banner" கண்ணில் பட்டது. "fall admission" என்ற தலைப்பில் கல்லூரியின் "ஆள் சேர்க்கை" விளம்பரம். ஏன் சார், நம்மூரில் மரங்களையே காணோம்...அப்புறம் ஏது சார் "இலையுதிர்காலம்"? நாம் பார்ப்பதெல்லாம் கடுங்கோடை, கோடை, சற்று வாடை. இந்த மூன்றிலேயே ஆண்டின் அனைத்து பருவங்களும் போய் விடுகின்றன...இந்த லட்சணத்தில் இவர்களுக்கு "fall admission" என்று தலைப்பு வேண்டியிருக்கிறது.

வேறொன்றுமில்லை சார், மேற்கத்திய மோகம் தலைக்கு ஏறினால் இப்படித்தான் நடக்கும். மேலை நாடுகளில் எத்தனையோ நல்ல விஷயங்கள் நடக்கின்றன. அதையெல்லாம் நாம் பின்பற்றுகிறோமா? "fall colors" என்று அங்குள்ள தாவரங்களில் அபாரமாக வெளிப்படும் நிறமாற்றத்தை அவர்கள் கொண்டாடினால் அது பொருந்தும். நமக்கேது சார் "fall"? அதுவும் கல்லூரி அட்மிஷனுக்கு!

இப்படித்தான் நாம் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த பேருந்து பயணத்திலேயே அதற்கு மற்றொரு உதாரணமும் சொல்லி விடலாம். முன்னரெல்லாம், அழுக்கு படிந்த உடையுடன், குடித்து விட்டு பேருந்தில் எவரேனும் ஏறுவார். அவரின் வாயில் அச்சிலேற்ற முடியாத தரமற்ற வார்த்தைகள் சத்தமாக வரும். அனைவரும் அருவருப்புடன் அவரை பார்த்து ஒதுக்குவர். இப்போது என்ன சார் நடக்கிறது? பள்ளி கல்லூரிகளில் இருக்கும் இளம் மாணவர்கள் வாயிலிருந்து ஆங்கிலத்தில் சரமாரியாக அதே அர்த்தம் தொனிக்கும் வார்த்தைகள், அவர்கள் பேசும் வரிகளுக்கிடையில் வந்து போகிறது. ஆனால் முன்னர் சொன்னவரை பார்க்கையில் வரும் அருவருப்பு இப்போது வரவேண்டுமே? ஹூஹூம்...ஏனென்றால் இவர்கள் ஆங்கிலத்தில் அல்லவா சொல்கிறார்கள்...நமக்குத்தான் ஆங்கிலத்தில் மலம் என்று சொன்னாலும் மல்கோவா போல இருக்குமே...அருவருப்பின் அளவுகோல்களைக் கூட‌ நம் விருப்பப்படி அசிங்கப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் மிக்கவர்கள் தானே நாம்?...

ஒரு முறை என்னுடன் ஒரு "டிப்டாப்" ஆசாமி பயணம் செய்தார். மனிதர் பயங்கர பிஸி போலும். போன் மேல் போன் போட்டு, பொது இடத்தில் சத்தமாக பேசி அனைவரையும் எரிச்சலடைய வைத்துக் கொண்டிருந்தார். நாகரீகம் மிகவும் உச்சத்தில் போனால் அப்புறம் இடம் பொருள் ஏவல் எல்லாம் இருக்குமிடம் தெரியாதோ சார்? இருப்பினும் அவரின் நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேருந்தே மயங்கிக் கிடப்பது போலத் தெரிந்தது. ஒவ்வொரு வரி இடையிலும் ஒரு வார்த்தை வந்து கொண்டே இருந்தது. பாவம், இயற்கை உபாதை இறக்க வழியின்றி தவிக்கிறார் போலும் அடக்க முடியாமல் வாய்விட்டு சொல்கிறார் என்று முதலில் நினைத்தேன். பிறகு, அது மாட்டிற்கு இயற்கை உபாதை என்று மாறியது. வேறொன்றுமில்லை, "மாட்டுச்சாணம்" "மாட்டுச்சாணம்" என்று அவர் வரிக்கு வரி சொல்லிக் கொண்டிருந்தார். நம் பேருந்துகள் சரியாக பராமரிக்கப்படாதவை தான். ஆனால் மாடு பேருந்துக்குள் புகுந்து சாணம் போட்டுச் செல்லும் அளவு இன்னும் மோசமாகவில்லையே என்று யோசித்தேன். அப்புறம் தான் சார் தெளிவானேன் இது மாட்டின் கழிவு இல்லை வார்த்தையின் கழிவு என்று...

வார்த்தைகள் மட்டுமல்ல சார், வழக்கமே போலித்தனமாக மாறி விட்டதே...மனைவி சமீபத்தில் ஒரு நாள் மாலை தோசை வாங்கி வரச்சொல்லியிருந்தார். மனைவி சொல்லே மந்திரம் என்ற தந்திரம் தானே வாழ்க்கை எந்திரம் ஓடுவதற்கு வசதியான எண்ணெய்? எனவே மசால் தோசை வேண்டி மாலை பொழுதில் ஒரு ஓட்டலில் நின்றிருந்தேன். கவுண்டரில் "பார்சல்" என்ற வார்த்தைக்கு பதில் "take away" என்று போட்டிருந்தார்கள். இப்போதெல்லாம் இப்படித்தான் சார். எதில் போட்டி போடுகிறோமோ இல்லையோ, மேம்போக்காய் மேலைநாடுகளை காப்பி அடிப்பது தான் நம் வேலை. "பார்சல்" அழித்து "take away" என்று போட்டால் அமெரிக்காவில் அமர்ந்தபடி அரிசி மாவு தின்பது போலத் தோன்றுமோ?

சரி சார். ஊருக்கு உபதேசம் முடிந்தது. இனி நம் விஷயத்திற்கு வருவோம். "take away" என்று சொல்லிப்பார்த்தேன். பார்சல் என்ன சார் பார்சல்? "டேக் அவே" என்று சொன்னால் தித்திக்கிறதே சார்... அது மட்டுமல்ல, ஒரு "கெத்து" இருக்கிறது இல்லையா? கூட்டத்திலிருந்த மற்றொருவர், "2 ஊத்தப்பம் to go" என்று பில்லை நீட்டினார். நானும், கவுண்டரில் இருந்தவரிடம் போட்டேன் சார் ஒரு போடு..."மசால் தோசா டேக் அவே" என்று.

தலைப்பு யாருக்கு என்று இப்போது தெளிவாகி இருக்குமே...நமக்குத்தான்... நமக்கே தான்...!

Sunday, February 3, 2013

இட்லி புராணம்...

இந்த இட்லி இருக்கிறதே சார் இட்லி, அதை இத்தனை விதமாக சாப்பிட முடியுமா என்று ஆச்சரியமும் அதிர்ச்சியும் நமக்கு ஏற்படும் வண்ணம் நம்மவர்கள் "உள்ளே இறக்கும்" நளினம் இருக்கிறதே...அதில் துவங்குகிறது ந‌ம் இட்லி புராணம்.

சிலர், இட்லிக்குள் தங்களுக்கு ஏதேனும் ரகசிய செய்தி இருக்கிறதா என்பது போல் சுரண்டிப் பார்ப்பார்கள். சிலர், இட்லியின் இரண்டு பக்கங்களையும் கண்ணாடியில் முகம் பார்ப்பது போல திருப்பிப் பார்ப்பார்கள். சிந்தனை சிகரங்கள் சில பேர் ஒரு துண்டு இட்லியை பிய்த்து கைகளில் வைத்துக் கொண்டே பல நிமிடம் உரையாடுவார்கள். உரையாடல் உச்சத்தில் இருக்கும் பொழுது வாய் வரைக்கும் இட்லி வந்து வந்து போகும்.

எப்படி இன்று தனிக் கட்சி ஆட்சி என்பது ந‌ம் நாட்டில் சாத்தியமில்லையோ அது போல், சட்னி அல்லது சாம்பார் கூட்டணி இன்றி எந்த ஒரு தட்டிலும் இட்லி ஆட்சி செய்ய முடியாது. சிலர் இட்லியின் துண்டை சாம்பாரில் போட்டு அது மூழ்கும் வரை காத்திருப்பார்கள். அந்த இடைவெளியில் வாழ்க்கையை ஒரு ரவுண்ட் சுற்றி வந்து விடுவார்கள். சாம்பாரில் முக்கிய பின் சட்னியை லேசாக தொட்டு சாப்பிடுவதும், முதலில் சட்னியில் இட்டபின் சாம்பாரில் முக்குவதுமாய் இரு வேறு மனித பிரிவுகள் இட்லி சாப்பிடும் முறையை உலகில் நிர்வகிக்கின்றன.

முன்னரெல்லாம் "பார்சல்" இட்லியை இலையில் வைத்து பேப்பரில்தான் கட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மேல் இலையை நீக்கினால் அடி இலையில் நசுக்கப்பட்ட சட்னியின் தரிசனம் கிடைக்கும். அந்த இலை நீக்கும் நொடி அற்புதமானது. சட்னி மெல்ல மெல்ல காட்சி கொடுக்கும் பொழுது, அளவு சரியாக இருக்கிறதா, குறைவாக வைத்து விட்டாரா என்று சராசரி உலகில் விடப்பட்ட நம் மேன்மைமிகு ஆன்மா பரிதவிக்கும் நொடி அது.

இவ்வாறு பேப்பரில் இட்லி பார்சல் வாங்கும் பொழுது, சாம்பாருக்கு தூக்கு வைத்திருக்கிறீர்களா என்று பார்சல் போடுபவர் கேட்பார். இரண்டு இட்லி பார்சல் சொல்லி விட்டு குடம் சைஸில் இருக்கும் தூக்கை நீட்டும் புத்திசாலிகள் நம்மில் பலர் இருந்தார்கள். ஒட்டல்காரரோ, "நான் எத்தனுக்கு எத்தன்டா" என்பது போல் ஒரு நக்கல் சிரிப்புடன், தற்போது அணைகளில் இருக்கும் காவிரி நீர் அளவு போல் பெரிய தூக்கின் அடியில் எட்டிப் பார்த்தால் மட்டுமே தெரிவது போல் சாம்பார் ஊற்றித் தருவார். "இன்னும் கொஞ்சம் சாம்பார் ஊத்துங்க" என்று சொல்லாத வாய் தமிழ் நாட்டில் இருந்ததா என்று தெரியவில்லை. இப்பொழுதோ, எந்த பேச்சுவார்த்தைக்கும் வழியின்றி plastic கவரில் மெளனமாகி கிடக்கிறது சாம்பார்.

இப்படி ஊரெங்கும் உலா வரும் இட்லி, சில வருடங்களாக மினி இட்லி அவதாரமும் பல ஓட்டல்களில் எடுத்திருக்கிறது. சமீபத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள ஓட்டலில் உணவுக்குச் சொல்லி விட்டு காத்திருந்த போது விலைப் பட்டியல் கண்ணில் விழுந்தது. அதில் மினி இட்லி (3cm) என்று bracket போட்டிருந்தார்கள். நான் கணிதம் பயின்றவன் என்ற கர்வம் ஏற்படும் வண்ணம் மூளை ஒரு கேள்வி எழுப்பியது ‍ இட்லியோ வட்ட வடிவம். 3cm என்பது அதன் diameter or radius? அதை விட, இவ்வாறு இட்லியின் அளவை எழுத வைக்கும் அளவுக்கு என்ன நடந்திருக்கும்? ஒரு நிமிடம் ஓட்டலில் அனைவரும் scale உதவியுடன் இட்லியை அளந்து அளந்து சாப்பிடுவது போல் காட்சி மனதில் தோன்ற, பதறியபடி கனவையும் கணிதத்தையும் விரட்டினேன்.


இதை விட அதிர்ச்சி மற்றொரு ஓட்டலில் காத்திருந்தது. அங்கு "அனிமல் இட்லி" ["animal idli"] என்று போட்டிருந்தார்கள். ஆர்வம் தாங்காமல் சர்வரிடம் அதென்ன அனிமல் இட்லி என்று கேட்டேன். காட்டை காலி செய்து விட்டோம். எனவே மீதமிருக்கும் கொஞ்ச நஞச புலி சிங்கங்களையும் "animal idli" என்று தீர்த்துக் கட்டுகிறோமோ என்று கலக்கம் பரவியது. நல்ல வேளை. "பல வித மிருகங்கள் வடிவில் இட்லி செய்து தருகிறோம். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்" என்றார்...!

"என்னப்பா நீ? பதிவில் எப்போதும் "கருத்து" சொல்வாய். இட்லி புராணத்தில் punch message இல்லையா?" என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நாம் இட்லி வைத்தே ஒரு பஞ்ச் மெசேஜ் ரெடி பண்ணி விடலாம்...

இந்த இட்லியை பாருங்கள்...சாதி, மதம் என்று வேறுபட்டு அடித்துக் கொள்ளும் சமூகத்தில் இட்லியை தீண்டாதவர்கள் உண்டா? அமைதியின் வண்ணமான வெள்ளை நிறத்துடன் சமூக நல்லிணக்கத்தின் சான்றாக இருக்கிறதே சார் இட்லி. வர்க்க பேதத்தை கூட எடுத்துக் கொள்ளுங்கள். அன்றாடங்காய்ச்சிகள் "அக்கா கடை இட்லி" சாப்பிடுகிறார்கள். "rich" மக்கள் நட்சத்திர ஓட்டலில் "rice cake" சாப்பிடுகிறார்கள். உள்ளே போவது என்னமோ அரிசியும் உளுந்தும் தான். நடுத்தர வர்க்கமோ, தாங்கள் பிசாக்களுடன் பிறந்து பர்கர்களிலேயே வளர்ந்தது போல பாவனை காட்டினாலும், அவர்கள் போகும் இடங்களில் எல்லாம் துரத்தி, இப்போது pizza கடைகளிலும்  coffee day உள்ளேயும் புகுந்து, நீக்கமற நிறைந்து தன் ஆளுமையை பறைசாற்றி கொண்டிருக்கிறதே சார் நம் இட்லி! நம்மூரில் யார் யாரோ "சமூக நீதி காவலர்" பட்டத்துடன் உலா வருகிறார்கள். இட்லிக்கு அந்தத் தகுதி இல்லையா சார்? நீங்களே சொல்லுங்கள்...

Sunday, January 20, 2013

புத்தகக் கண்காட்சியும் மிளகாய் பஜ்ஜியும்...

வாகன வரிசை புழுதியைக் கிளப்ப சாரை சாரையாக மக்கள் கூட்டம் திருவிழா நெரிசல் போல இருக்க‌ நந்தனம் மைதானத்தில் உண்மையிலேயே புத்தகத் திருவிழா உச்சக் கட்டத்தை எட்டியிருக்கிறது.

இடமும் வலமுமாக மொத்தம் இருபத்தாறு வரிசைகளில் நமக்குத் தேவையான பதிப்பகத்தையும் நினைவில் வைத்திருக்கும் நூல்களையும் கண்டுபிடிக்க‌, சற்று "உழைப்பு" தேவைப்பட்டாலும் அது மனதுக்கு உற்சாகம் தரும் உழைப்பு. பதிப்பக வரிசையை பெரிய வெள்ளைத் தட்டியில் ஒவ்வொரு வரிசை முன்பாக பெரிதாக வைத்திருந்தாலும் அதன் பயன் முழுவதுமாக கிடைக்க நாம் விட்டு விடுவோமா? எனவே பலர் அதன் அருகே  chair போட்டு தங்களால் இயன்ற அளவு மறைத்தபடி அமர்ந்திருந்தனர்.

"who is வை.மு. கோதைநாயகி" என்று கேட்ட சிறுவனுக்கு பொறுமையாக பதிலளித்து, அவரின் புகைப்படத்தை காட்டுகிறேன் என்று ஒரு stall நோக்கி அழைத்துப் போன ஒரு அம்மா ஆச்சரியமும் மகிழ்ச்சியும் பட வைத்தார்.

வழக்கம் போல "முன்னேற்றம் காண முத்துக்கள் நூறு" போன்ற "வளர்ச்சி" பற்றிய புத்தகங்கள் நிரம்பிய ஸ்டால்களில் மக்கள் அலைகடலென திரண்டு இடித்துப் பிடித்தபடி "முன்னேற" முயன்று கொண்டிருந்தனர்.

"இங்கு RSS புத்தகங்கள் கிடைக்கும்" என்ற board தொங்கும் stall எதிரே பெரியார் புத்தகங்கள் பெருமளவு கிடைக்கும் ஸ்டால். ஜனநாயகம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தென்படுவதில் நாம் பெருமிதம் கொள்ளலாம் சார்...

சிறுகதைத் தொகுப்புகளை தேர்ந்தெடுப்பதில் நமக்கு மிகுந்த கவனம் வேண்டும். வெவ்வேறு தொகுப்புக்களில் ஒரே கதை மீண்டும் மீண்டும் இடம் பெறுவதை பல பதிப்பகங்களில் பார்க்க முடிந்தது. ஜெயகாந்தன் போன்றவர்களின் கதைகளுக்கு இந்த நிலை நிறைய நேர்ந்திருக்கிறது.

உயிர்மை உள்ளே லா.ச.ரா சிறுகதை தொகுப்பின் அட்டையில் வரையப்பட்டிருக்கும் அவர் முகத்தை சற்று நேரம் பார்த்தபடி இருந்தேன். அவர் எழுத்தின் மூலம் நாம் காலத்தையே வார்த்தைகளில் நிரப்பி நிரப்பி சாப்பிடலாம் இல்லையா சார்?

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தில் வழக்கமாக சில அரிதான பழைய புத்தகங்கள் கிடைக்கும். இந்த முறை எதுவும் சிக்கவில்லை. வருடங்கள் போகப்போக, chennai book exhibition என்பது தேடுதல் அதிகமாகவும் தேர்ந்தெடுக்கும் புத்தகங்கள் குறைவாகவும் தருவது போலத் தோன்றுகிறது. உங்களுக்கு?

முன்னரே திட்டமிட்டபடி, பத்து பதினைந்து பதிப்பகங்களில் சுமார் நான்கு மணி நேரம் நன்கே கழிந்த பின், வயிறு "நானும் இருக்கிறேன்" என்று கூவத் துவங்க, "சாப்பிட வாங்க" அழைப்பை ஏற்க நேர்ந்தது...அங்கு எனக்கு முன் "cash counter" வரிசையில் நின்றிருந்த ஒருவர், தினமும் ஒரே menuவா இல்லை வேறு வேறா என்று விசாரித்து தெரிந்து கொண்டார். பக்கத்திலிருந்த அவரின் நண்பரிடம் "நாளைக்கு மிளகாய் பஜ்ஜி try பண்ணலாம்டா" என்றார். நான் அவரைப் பார்க்கவும் அவர் என்னைப் பார்க்கவும், இருவரும் லேசாய் சிரித்துக் கொண்டோம். அப்பொழுதே நான்  மிளகாய் பஜ்ஜி "try"  பண்ணுவதற்காகத்தான் வரிசையில் நிற்கிறேன் என்று அவருக்குத் தெரியாது!

பிறகு பஜ்ஜி வாங்குவதற்கு நிற்கும் பொழுது, கல்லூரி மாணவி ஒருவர் "அஞ்ஞாடி" என்றால் என்னடி? என்று தோழியிடம் கேட்டுக் கொண்டிருந்தார். இன்னொருவர், "வாழைக்காய் பஜ்ஜி ரொம்ப சிவப்பா இருக்கே...பவுடர் அதிகம் போட்டிருப்பானோ" என்று தன் உறவினரிடம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். எத்தனை விதமான மனிதர்கள் சார்!

Thursday, January 17, 2013

பவர் ஸ்டார் புதுக்கட்சி துவக்கம்?

என்னய்யா இது புதுசாய் ஒரு குண்டு வீசுகிறாய் என்று ஆச்சரியமா? பதிவை படித்து முடித்த பின் ஆச்சரியம் போய் எதிர்பார்ப்பும் ஒரு வித "பாசப் பிணைப்பும்" நம் பவர் ஸ்டார் மீது வருவதற்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது...வாருங்கள், என்ன சேதி என்று பார்ப்போம்...

சில மாதங்கள் முன்பு வரை சிலர் மட்டுமே அறிந்திருந்த பவர் ஸ்டார், நீயா நானா கோபிநாத் "உபயத்தில்" பலரின் நெஞ்சுக்குள் இடம் பிடித்தார். பிறகு நடந்ததெல்லாம் சரித்திரம்! தற்போது கிட்டத்தட்ட தமிழ்நாடே லட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது...

பவர் ஸ்டாரின் பண்புகள் இன்றைய அரசியலுக்கு எப்படி பொருந்தி வருகிறது என்று பட்டியலிட்டு ஒப்பிட்டு பார்ப்போம்:

பண்பு 1: பத்திரிகைகள் இவரை கோமாளி போலவே நடத்தின. இவரின் பேட்டிகளை காமெடி போல பிரசுரித்தன. பின்னர் சேனல்களில் அழைத்து, நையாண்டி என்ற பெயரில் முடிந்த அளவு அவமானப் படுத்தினர். இவை அனைத்திற்கும் இவரின் முகத்திலிருந்து சிரிப்பு மட்டுமே பதிலாக இருந்தது.

நியாயமாக கேட்கப்படும் நிருபரின் கேள்விகளுக்குக் கூட "வரியா சேர்ந்து தீக்குளிக்கலாம்" என்று தப்பிக்கும் அரசியல்வாதிகளும், நாக்கைத் துருத்தும் நாகரீகம் அற்ற அரசியல்வாதிகளும், தன்னை எதிர்த்து ஒரு வார்த்தை பேசினால் முடிந்தது கதை என்ற நிலையில் அனைவரும் தன் காலில் விழுந்து கிடக்க வேண்டும் என்று நினைக்கும் அரசியல்வாதிகளும் நிறைந்திருக்கும் தமிழ்நாட்டில், அனைவரின் நக்கல்களுக்கும் சிரித்துக் கொண்டிருக்கும் நம்மவருக்கு "புன்னகை தலைவர்" என்று பட்டம் கொடுக்கலாம் தானே சார்?

பண்பு 2: இவர் தனக்கு 5 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்வது காமெடிதான். ஆனால் இன்று பல letter pad கட்சிகள் தங்களுக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கின்றனர் என்று அடித்து விடுகிறார்களே அதை விடவா சார் இவர் காமெடி செய்கிறார்? அரசியல் அரிச்சுவடியை சரியாகத்தானே செய்கிறார்?

பண்பு 3: தானே தயாரித்து நடித்து வெளியிட்ட படத்தை பார்க்க எவரும் வராமல் தியேட்டர் காற்றாடியதால், தானே காசு கொடுத்து படத்தை ஓட்டுவதாக இவர் மீது விமர்சனம் இருக்கிறது. என்ன சார் இது அநியாயம்? நம் அரசியல்வாதிகள் நாட்டை சுரண்டி தங்களை வளப்படுத்திக் கொள்வதை விட இது எவ்வளவோ மேல் இல்லையா? அவர் பணத்தை வைத்துக் கொண்டு அவர் publicity செய்தால் நமக்கென்ன வந்தது...

பண்பு 4: இவர் விளம்பர பிரியராம். எனவே எப்படியாவது தன் பெயர் வெளியில் தெரியுமாறே எல்லா வேலைகளையும் செய்வாராம்...ஏதாவது சாக்கில் போஸ்டர்களில் பல்லைக் காட்டிக் கொண்டு திரியும் விளம்பர மோகம் பிடித்த‌ தமிழ் நாட்டில் இதெல்லாம் ஒரு விஷயமா சார்?

குறிப்பு: சமீபகாலம் வரை அனைத்து பேட்டிகளிலும் cooling glass அணிந்து வந்தவர், இப்போது மாறி விட்டார். அற்புதமான வாய்ப்பையும் நழுவ விட்டு விட்டார். அவரின் கண்ணாடி பழக்கம் பற்றி நக்கலாக கேள்விகள் கேட்கும் பொழுது, தனது cooling glassஐ தடவியபடி, "இருட்டறையில் உள்ளதடா உலகம்" என்னும் பாரதிதாசன் வரி என்னை மிகவும் பாதித்து விட்டது. சமூகத்திற்கு வெளிச்சம் ஊட்டுவதே என் பணி என்று எப்போதும் நினைவில் நிறுத்தவே cooling glass மூலம் என்னை நானே இருட்டாக்கிக் கொள்கிறேன்" என்று ஒரு போடு போட்டிருந்தார் என்றால், நாமும் "ஆஹா, என்னே ஒரு தமிழ் ரசனை, என்னே ஒரு சமூக அக்கறை" என்று மெய்சிலிர்த்துப் போய் "பக்குவத் தமிழன் பவர் ஸ்டார்" என்று பட்டம் கொடுத்து பாராட்டியிருப்போம்...பட்டம் கொடுத்தே கெட்ட கூட்டம்தானே சார் நாம்...

இப்போது சொல்லுங்கள்...இந்த பதிவின் தலைப்பு விரைவில் உண்மையாகும் வாய்ப்பு நிச்சயமாக இல்லை என்று நம்மால் சொல்ல முடியுமா?