/ கலி காலம்

Sunday, August 26, 2012

முகத்தில் கரி பூசலாம் வாருங்கள்!


தலைப்பை படித்தவுடன் நமக்கு மகிழ்ச்சியாக இருக்குமே? ஒருவர் முகத்தில் கரி பூச வேண்டுமென்றால் நம் அனைவருக்கும் வரும் மகிழ்ச்சியை கேட்கவா வேண்டும்! ஆனால் யார் முகத்தில் பூச வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்...

ஒரு வாரமாக "நிலக்கரி வெட்டுவதற்கு ஒதுக்கீடு செய்வதில் ஊழல்" என்று நாடே அல்லோலகல்லோலப்படுகிறது. போதாத குறைக்கு அன்றாட பாராளுமன்ற நடவடிக்கைகளும் நிறுத்தப் படுகின்றன. இவர்கள் "வேலை" பார்ப்பதே ஆண்டுக்கு சில நாட்கள்தான். அதிலும் இப்போது இந்த "புதிய அணுகுமுறை" வேறு! உத்தம சிகாமணிகள் நிரம்பிய எதிர்கட்சிகள், கரித்துறையை வைத்திருந்த உத்தமருக்கும் உத்தமரான பிரதமர், பதவி விலகினால்தான் ஆயிற்று என்று கிளம்பியிருக்கிறார்கள்.

இந்த அரசு "பூசி மெழுகும்" துறை ஒன்றை வைத்திருக்கிறது. "நிதி" இல்லாமல் எதையாவது பூச முடியுமா? எனவே நிதி அமைச்சர் தான் இந்தத் துறையின் தலைவர். எந்தக் கொள்ளை ஊருக்குத் தெரியும்படி "ஒழுக" ஆரம்பிக்கிறதோ உடனே "பூசி மெழுகும்" துறையின் தலைவர் அனைத்து ஊடகங்களுக்கும் பேட்டி என்ற பெயரில் விளக்கம் கொடுப்பார். இப்படித்தான், நிலக்கரி ஒதுக்கீட்டின் ஓட்டைகளை பூசி மெழுக‌, சில நாட்களுக்கு முன், நம் "ice cream" புகழ் சிந்தனை சிற்பி ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது, நிலக்கரி வெட்டி எடுக்காத வரை ஒரு நட்டமும் இல்லையாம். உரிமம் தானே வழங்கப்பட்டது என்றொரு விளக்கம். அதாவது சார், நமக்கு ஒரு நூறு ஏக்கர் நன்செய் நிலம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம் (கனவில் தான்!). அதை நமக்கு "வேண்டப்பட்டவர்களுக்கு" குறைந்த விலைக்கு ஒத்திக்கு விடுகிறோம். உடனே பொறுப்புள்ள உறவினர் ஒருவர், ஏனப்பா இதனால் உனக்கு எத்தனை நட்டம் என்று கேட்டால், நாம், "என்ன புத்தியில்லாமல் பேசுகிறீர்கள், அவர் இன்னும் அந்த நிலத்தில் விளைச்சல் ஏதும் செய்யவில்லையே? நிலத்தை தானே ஒத்திக்கு விட்டேன்..." என்று நாம் சொன்னால் அதில் எவ்வளவு "புத்தி" இருக்கிறதோ அவ்வளவு அர்த்தமுள்ளது இந்த விளக்கம்.

சரி சார் இப்போது இன்னொரு பக்கம் பார்ப்போம் இந்த எதிர்கட்சி இருக்கிறதே...ஆஹா தேச நலனில் எவ்வளவு அக்கறை பார்த்தீர்களா? இவர்கள் கர்நாடகாவில் அடிக்கும் கூத்தென்ன டெல்லியில் பேசும் பேச்சென்ன! ஆனால் ஒன்று சொல்ல வேண்டும். மற்ற‌ கட்சிகள் போல் இல்லாமல், இவர்களின் வண்டவாளத்தை இவர்களே தண்டவாளத்தில் ஏற்றும் பழக்கம் இருக்கிறது. இதை நாம் பாராட்டாமல் இருக்க முடியுமா?

இந்த கரி விஷயத்திலும் அப்படித்தான். பிரதமரை போட்டுத் தாக்கும் இவர்களின் கட்சியில் ஒரு மாநிலத்தின் முதல்வர், 2007ல் பிரதமருக்கு இவர் கடிதம் எழுதியிருக்கிறார்  (தமிழ்நாட்டிலிருந்து மட்டும் தான் டெல்லிக்கு தபால் சேவை இருக்கிறதா என்ன?). இன்னும் துவங்காத ஒரு தனியார் நிறுவனத்தின் விபரம் எழுதி, அதற்கு நிலக்கரி உரிமம் வழங்க வேண்டும் என்று சிபாரிசு செய்கிறார். ஒரு முதல்வருக்கு, இன்னும் ஆரம்பிக்காத ஒரு தனியார் நிறுவனத்தை பற்றிய தகவல்கள் எப்படி தெரியும்? எதற்கு இந்த அக்கறை? இதை எவரேனும் கேட்டால், இந்த எதிர்கட்சி, வாழைப்பழத்தை உறித்து எண்ணெய் உள்ளே போட்டால் போல வழுக்கு வழுக்கென்று வழுக்குகிறார்கள்.

இந்த இரண்டு தேசிய கட்சிகளின் பின்னே சந்தர்பவாதம் மட்டுமே சாக்காய் வைத்து கோஷ்டி கானம் பாடித்திரியும் சுயநலமிக்க உதிரிக்கட்சிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் நான்கைந்து தேறும்.

இப்போது யார் முகத்தில் கரி பூச வேண்டும் என்று கேட்கிறீர்களா? வாருங்கள், ரகசியமாக காதில் சொல்கிறேன். ஆளுக்கொரு கரிக்கட்டையை எடுத்துக்கொள்வோம். வேறு யாரும் அறியாத வண்ணம் கண்ணாடி முன்னால் நின்று நம் முகத்தில் நாமே பூசிக்கொள்வோம். சும்மா பூசிக்கொள்ள கூடாது சார், "பாரத நாடு பழம்பெரும் நாடு நீர் அதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்" என்று கண்ணாடியை பார்த்து உரக்கச் சத்தம் போட்டபடி பூசிக்கொள்ள வேண்டும்! முடிந்தால் கண்ணாடியிலும் கரி பூசி வைப்போம். கண்ணாடியில் மனசாட்சி தெரியும் என்று பெரியவர்கள் சொல்கிறார்களே!


Friday, August 17, 2012

ரயிலில் பயணம் செய்வது எப்படி? பகுதி 7


இப்போதெல்லாம் நம்மூர் ரயிலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் சார். பெண்ணைத் தூக்கி வெளியில் வீசுகிறார்கள், பெட்டி திடீரென்று தீப்பிடித்து எரிகிறது, கழிவறையில் மலைப்பாம்பு பயணம் செய்கிறது...இப்படி கற்பனைக்கு எட்டாத களேபரங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே ஒவ்வொரு ரயில் பயணமும் "எதிர்பார்ப்பு" மிக்கதாக ஆகி விட்டது இல்லையா?

சமீபத்தில் மதுரையிலிருந்து பெங்களூருக்கு இரவு நேரத்தில் ரயில் ஏறினேன். அமர்ந்த சற்று நேரத்தில் மூன்று இளைஞர்கள் அருகிலுள்ள இருக்கைகளுக்கு வந்தார்கள். இந்த காது இருக்கிறதே சார் காது...நாம் சும்மா இருந்தாலும் அது சும்மா இருக்காமல் அக்கம் பக்கத்து பேச்சுகளை வாங்கி மூளைக்கு அனுப்பியபடியே இருக்கும். பயணங்களில் ஒரு "பக்க" பேச்சு மட்டும் கேட்டால் போதுமா? எனவேதான் இரண்டு காதுகள் நமக்கு இருக்கிறது போலும்!

அந்த இளைஞர்கள் "புதிதாக வேலை"க்கு சேர்ந்தவர்கள் என்பதும் பெங்களூரில் ஒன்றாக அறை எடுத்து தங்கியிருக்கிறார்கள் என்பதும் சில நிமிடங்களிலேயே புரிந்து போனது. மூவருமே "நான் அடிச்சா தாங்க மாட்ட" என்று பாட்டுப் பாடும் தகுதி பெற்ற திடகாத்திரமான உடல்வாகுடன் இருந்தனர். திடுக்கிடும் திருப்பங்கள் இனிமேல் தான் துவங்கின."அந்தப்பக்கம் காட்டுப்பள்ளம், இந்தப்பக்கம் உச்சிமலை. நடுவில இருக்கிற மூங்கில்காடு வழியா போனா  check post போகலாம்" என்று ஒரு map வைத்துக் கொண்டு காட்டில் தீவிரவாதிகளை பிடிப்பதற்கு திட்டம் போடுவாரே விஜயகாந்த்...அது போல ஒரு பேப்பரை மூன்று பேரும் சூழ்ந்து குசுகுசுவென ஏதோ பேசிக்கொண்டனர்.

ஒருவர் சத்தமாக பேசினால் கூட கவனிக்காமல் விட்டுவிடுவோம். ஆனால் ரகசியம் பேசுவது போல பேசினால் நம் காது சும்மா இருக்குமா சார்? எனவே காதை தீட்டிய போதுதான் ஒரு இளைஞர் என் வயிற்றில் "குண்டு" போட்டார். "S7ல‌ இரண்டு, S11 ஒன்னு, S4ல‌ இரண்டு" என்று அவர் சொல்ல, S7ல‌ இரண்டுமே toilet பக்கம் இருக்கு.வைக்கறதுக்கும் கவனிக்கறதுக்கும் வசதியாக இருக்கும்." என்று மற்றொருவர் சொல்ல...சந்தேகப் பொறி சட்டென மனதில் அமர்ந்தது. இவர்களை பார்த்தால் அப்படிப்பட்ட செயல்கள் செய்பவர்கள் போலத்தெரியவில்லையே என்று ஒரு மனது சொன்னாலும், இந்தக் காலத்தில் எவரையுமே நம்ப முடியாது என்று மற்றொரு மனது சொல்ல, இவர்களிடம் பேசித்தான் பார்ப்போமே என்று பேச்சு கொடுத்தேன்...

நட்பு பூசிய சிரிப்புடன் அவர்களும் பேச, நம்பிக்கை பூத்தது எனக்கு. ஆனாலும், நம்ப வைத்து கழுத்தறுப்பதில் நாம் அனைவருமே கைதேர்ந்தவர்கள் ஆயிற்றே...எனவே சந்தேக சைத்தான் மீண்டும் எனக்குள் ஏறியது.

மூவரில் ஒருவர் வேகமாக எங்கோ போனார். போனவர் சுமார் பதினைந்து நிமிடங்கள் கழித்துத் திரும்பினார். இந்த இடைவெளியில் " "நான் ஈ புகழ்" நடிகை சமந்தாவுக்கு கடல்நீர் அலர்ஜியா?" போன்ற நாட்டை உலுக்கும் சிக்கல்களையும், திரிஷா வீட்டின் மூன்று நாய்குட்டிகளின் பெயர்களை அறிந்து கொள்ள வாய்ப்பளிக்கும் "பொது அறிவு" களஞ்சிய பக்கங்களையும் கொண்ட பத்திரிகைகளைப் புரட்டி முடித்தேன் நான்.

போனவர் திரும்பி வந்தார். ரயில் பெட்டிகள் அனைத்திற்கும் சென்று வந்திருப்பார் போலும். அவர் அமர்ந்தபடி மற்றவரிடம் சொன்ன வரிகளை கேட்டு, மீனாட்சி பவனின் வாங்கி வந்த இட்லியை சாப்பிட ஆரம்பித்திருந்த எனது நம்பிக்கை அந்த இட்லிகளுக்கடியில் இருந்த சட்னி போல நசுங்கியது.

அப்படி என்ன சொன்னார் அவர்? அடுத்த வாரம் தொடர்வோம்...ஏன் சார், தொடர்கதையிலும் சினிமாவிலும் தான் suspense வைக்கலாமா? வலைப்பதிவிலும் வைத்துப் பார்ப்போமே சார்.


Sunday, August 12, 2012

ஆடையில்லா மனிதனும் Android கைபேசியும் பகுதி 2


நம்மூர் பேருந்து நிலையங்களில் இருக்கும் பெட்டிக்கடைகளில் கூட, அங்கு தொங்க விடப்பட்டிருக்கும் தண்ணீர் பாட்டில், பழங்களுக்கு இடையில் "இங்கு சிம் கார்டு கிடைக்கும்" என்று அட்டையில் எழுதி தொங்க விட்டு சில ஆண்டுகள் ஆகி விட்டன. அந்த அளவு "முன்னேற்றம்" கண்டிருக்கிறது நம் நாடு. இப்படிப்பட்ட நிலையில்தான் android phone வாங்க கடையில் நுழைந்த அந்த நன்னாள் வந்தது.

கடையில் நுழைந்ததும் கண்ணில் பட்டது ஒரு மாணவர் கும்பல். நம் காலத்தில் மாணவர் கூட்டம் கடலை மிட்டாய் வாங்கும். மிஞ்சிப் போனால் நீளமான பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட பெப்ஸி ஐஸ் வாங்கும். இப்போது செல் போன் வாங்குகிறது. அதில் ஒரு மாணவர் போன் கேமராவை பரிசோதிக்கும் பொருட்டு தெருவில் போய் வருபவர்களை குறிப்பாக பெண்களை படம் எடுத்து போனை "பரிசோதனை" செய்து கொண்டிருந்தார். அவரைப் போன்றவர்களின் விரலில், வயது, விஷம் ஏற்றாமல் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வதைத் தவிர நம்மால் வேறு என்ன செய்ய முடியும்?

"tie" கட்டிக் கொண்டிருந்த ஒரு விற்பனையாளர், விருந்தோம்பலின் சாயலில் என்னை "tablet" இருந்த வரிசை பக்கம் தள்ளிக்கொண்டு போனார். சமீபகாலமாக விற்பனையில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் ஒரு நிறுவன "tablet" ஒன்றை கையில் எடுத்தேன். அவர் விற்பனை மந்திரங்களை "side"ல் ஓதத்துவங்கினார். அதாவது, இது கையில் இருந்தால் உலகத்தில் சகல சம்பத்துக்களோடும் நீங்கள் 24 மணி நேரமும் "தொடர்பில்" இருக்கலாமாம். பொதுவாக "tablet" மாடல்களில் போன் வசதி இருக்காது. இதில் voice call வசதியும் உண்டாம். "பத்து ரூபாய்க்கு மேல் கொடுத்தவங்க எல்லாம் கையை தூக்குங்க" என்னும் "தாயத்து" காமெடி ஞாபகம் இருக்கிறதா? அதில் வடிவேலு சொல்வாரே..."நாங்க ஏன்டா தாயத்தை கட்டிகிட்டு நடு ராத்திரி சுடுகாட்டுக்கு போகப்போறோம்" ‍- அதுதான் என் நினைவுக்கு வந்தது. விலைமதிப்பற்ற ஒரு நாளை எப்படி பயன்படுத்தப்போகிறோம் என்பதை ஒரு தகவல் தொழில்நுட்ப சாதனம் தீர்மானிக்க முடிகிற நிலையில்தான் நாம் உறவுகளையும், நம்மையும் வைத்திருக்கிறோம் போலும். அதனால்தான் நம்மால் உலகின் மறு கோடியில் இருப்பவருடன் "இன்று இட்லிக்கு சட்னியா" என்று கேட்க முடிகிறது. பக்கத்து வீட்டுகாரருடன் பேசி பல நாட்கள் ஆகிறது.முன்னேற்றம் சார் முன்னேற்றம்.

சமீபத்தில் கொடைக்கானலில் ஒரு பெண்மணி மாலை முரசை நான்காக மடித்தது போன்ற சைஸில் இருந்த  "tablet" பயன்படுத்தி போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார். பொருத்தமற்ற வசதிகளை ஒரே சாதனத்தின் உள்ளே வைத்தால் எப்படியிருக்கும்? கொடுமையாகத்தான் இருக்கும். அதைவிட அவரின் குடும்பத்தினர், அவர் அதை கீழே போட்டுவிடப்போகிறாரே என்ற டென்ஷனுடன் உலவியதை பார்க்க தமாஷாக இருந்தது. அனேகமாக டூர் முடிந்து ஊர் திரும்பும் வரை அவர்கள் நிம்மதியாக இருந்திருக்க மாட்டார்கள். பாவம், அவர்கள் எந்த நிம்மதி பெற சுற்றுலா வந்தார்களோ?

நான் "tablet" வாங்கப்போகும் ஆளாகத் தெரியவில்லை என்று நொந்து போன விற்பனையாளர், அடுத்த பிரிவுக்கு நான் போவதற்கு காத்திருந்தார். போகும் வழியில் ஒரு பெண் ஒரு போனை பார்த்தபடி உதட்டுச்சாயம் பூசிக்கொண்டிருந்தார். உலகம் போகும் போக்கில், போன் உள்ளேயிருந்து உதட்டுச்சாயம் ஊறி வந்தாலும் ஆச்சரியப்படமுடியாதுதான். நல்ல வேளை. இந்த போன் அவ்வளவு தூரம் போகவில்லை. ஆனால் "கண்ணாடி" வைத்திருக்கிறார்கள் (உண்மையிலேயே இந்த வெள்ளை கலர் போனைத் தயாரிக்கும் சீனா கம்பெனி, ரூம் போட்டு யோசித்திருப்பாய்ங்களோ?). போதாத குறைக்கு இந்த போனை சுற்றி டை"மண்டு"கள் வேறு!

சரி சார், கடை முழுதும் கும்பலாய் இருக்கிறதே...ஆளாளுக்கு ஒரு போனை எடுத்து "நோண்டி"க் கொண்டிருக்கிறார்களே...ஒருவர் கூட போனின் அடிப்படை  வேலையான, voice  நன்றாக கேட்குமா...அலைவரிசை துல்லியம் எவ்வளவு என்றெல்லாம் பார்ப்பதாக தெரியவில்லை. அதாவது, ஒரு கல்யாணப் பந்தியில் முழுதும் பரிமாறப்பட்ட இலையில், ஓரத்தில் இருக்கும் ஊறுகாய் போன்றவை நன்றாய் இருக்கிறதா என்று பார்த்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் நாம் போன் வாங்குகிறோம்...என்ன பைத்தியக்காரனாக இருக்கிறாய்? உனக்கு பழைய காலத்தில் விரல் விட்டு சுழற்றும் சிகப்பு கலர் கறுப்பு கலர் போனே போதுமே உன்னை யார் கடைக்கு போகச்சொன்னது என்கிறீர்களா?

அடப்போங்க சார்... பழைய போனை வைத்து நாம் என்ன சாதித்தோம்? ஆனால் இந்த மொபைல் போனைப் பாருங்கள்...நம் நாட்டுக்குள் புகுந்து பதினைந்து ஆண்டுகள் கூட ஆகவில்லை...ஆனால் அதை வைத்து குருவி என்ற உயிரினத்தையே காலி செய்த நம் சாதனை சாதாரணமானதா?  முன்னெல்லாம் மாலைப்பொழுதில் வானத்தைப் பார்த்தால் கூட்டம் கூட்டமாக பறவையினங்கள் கூடு நோக்கிப் பறக்கும் காட்சி உள்ளத்தை நிறைக்கும். இப்போது வானத்தை பார்க்கவே நமக்கு நேரமில்லை. இதில் கொக்காவது குருவியாவது?

ஊருக்குள் பறவைகளை காலி செய்த மகிழ்ச்சி மட்டும் போதுமா நமக்கு? எனவேதான் நாம் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறோம். என்ன என்கிறீர்களா? அதான் சார், நாம் உழைத்து உழைத்து களைத்துப் போனால் இப்போது "உல்லாச சுற்றுலா" என்ற பெயரில் இயற்கை வளமிக்க இடங்களுக்குப் போகிறோமே...அங்கெல்லாம் கூட்டம் பின்னியெடுக்கிறதே ...அங்கெல்லாம் சும்மா போக முடியுமா? மொமைல் போன் சகிதமாகத் தானே போகிறோம். போதாத குறைக்கு, வனாந்தரத்தில் சிக்னல் கிடைக்கவில்லை என்று கோபம் வேறு நமக்கு வரும். இன்னும் ஒரு இருபது முப்பது வருடங்களில் மற்ற பறவையினங்களையும் அழித்தால் தானே சார் நமக்கு திருப்தி? அப்புறம் ஒய்யாரமாக உட்கார்ந்து "angry birds" விளையாடி மகிழலாமே? அது போரடித்தால் "angry மயில்" "angry குயில்" என்று விதவிதமாய் விளையாட்டு கண்டுபிடிக்க மாட்டோமா என்ன? உயிருள்ள மயிலையும் குயிலையும் பற்றி கவலைப்பட நமக்கு என்ன பைத்தியமா?

Wednesday, August 1, 2012

இந்தியர்களுக்கு எதிரான ஒலிம்பிக்ஸ் சதிகள்...


நூறு கோடிக்கு மேல் மக்கள் தொகை இருந்தால் என்ன? நூறு பேர் கூட லண்டன் ஒலிம்பிக்ஸுக்கு தகுதி பெற முடியாத வெட்கக்கேட்டை எப்படி எதிர்கொள்வது?கவலை வேண்டாம். மக்களுக்காகவே வாழும் நம் அரசியல்வாதிகளின் ஐடியாவையே நாமும் கடைபிடிப்போம். அதான் சார், ஒரு சிக்கலை எதிர்கொள்ள முடியாவிட்டால், "இதில் அன்னிய சக்திகளின் சதி இருக்கிறது" என்று அறிக்கை விடுகிறார்கள் இல்லையா, அது போல நாமும் இதில் சதி இருக்கிறது என்று சொன்னால் போயிற்று!எப்படிப்பட்ட சதி என்று பார்ப்போம் வாருங்கள்.

குதிரையேற்றம்: இப்படி ஒரு விளையாட்டு இருக்கிறது என்பதே நமக்கு ஒலிம்பிக்ஸ், ஆசிய விளையாட்டு போட்டிகளை பார்க்கும் போதுதான் ஞாபகம் வரும். இந்தியர்கள் குண்டுச்சட்டியில் மட்டுமே நன்றாக குதிரை ஓட்டுவார்கள் என்று உலகத்திற்கு நன்றாக தெரிந்திருக்கிறது. நம் வாழ்க்கை முறையும் அப்படித்தானே இருக்கிறது. போனால் போகிறது என்று வாழ்க்கையின் மறக்க முடியாத அனுபவமாக ஊட்டி, சிம்லா போன்ற இடங்களில் குதிரையில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்வதோடு சரி. எனவே தான் நிஜக்குதிரை ஏற்றம் என்று விளையாட்டை சேர்த்திருக்கிறார்கள். வன்மையாக கண்டிப்போம் சார். ஏன் கழுதையேற்றம் இல்லை என்று நாம் போர்க்கொடி தூக்குவோம்.

வில்வித்தை: கண்ணைக் கட்டிக் கொண்டு வில்லால் மாம்பழம் அடித்தவர்களை புராணத்தில் படித்து விட்டு நம்மவர்களின் வில்வித்தை பார்க்க வேண்டும் சார். பார்க்கும் குறி இருக்கிறதே...அப்பப்பா! எவ்வளவு அதிக நேரம் குறி பார்க்கிறார்களோ அவ்வளவு குறைவாக "மதிப்பெண்" வாங்கும் விசித்திரம் நமக்கு மட்டுமே சாத்தியம். அதுவும், நாட்டுப்பற்று தேவைக்கு அதிகமாகவே உள்ள நம் வர்ணனையாளர்கள், "காற்று அதிகம் வீசி விட்டது", "மழைத் தூறல் குறிக்கீடு" என்று நம் வீரர்களை சாக்கு மூட்டைக்குள் அமுக்கும் போது நம்மால் சிரிப்பை அடக்காமல் இருக்க முடியாது. மற்ற வீரர்களும் அதே காற்று மழையில்தான் விளையாடுகிறார்கள் என்று பார்ப்பவர்களுக்கு தெரியாது என்று நினைத்து விட்டார்கள் போதும். இது நம்மவர்களே நமக்கு செய்யும் சதி."எங்கள் சொல் ஒவ்வொன்றும் வில்" என்று மேடையில் முழங்குபவர்களை வேண்டுமானால் அனுப்பிப் பார்க்கலாமா சார்?

வாள்வீச்சு: எத்தனை முறை பார்த்தாலும் இந்த விளையாட்டின் விதிகள் தெரிய மாட்டேன் என்கிறது சார். நம்மூர்களில் இதை விளையாடுபவர்களை விரல் விட்டு எண்ண, கால் கூட தேவைப்படாது என்பது உறுதி. இந்த விளையாட்டில் நம் மக்களுக்கு ஈடுபாடு இல்லாததற்கு சரித்திரமே சதி செய்து விட்டது. பின் என்ன சார்? புலியை கூட முறத்தால் விரட்டுவோம் நாம் என்று தெரிந்தபின் வாள் எதற்கு சார் நமக்கு?

ஜிம்னாஸ்டிக்ஸ்: மற்ற நாட்டு வீரர்கள் "நாட்டியம்" ஆடும் இந்த களத்தில் நம் ஆட்கள் நடந்து போகவாவது மாட்டார்களா என்ற ஏக்கம் நமக்கு இருக்கும் (துவக்க விழாவில் திடீரென்று புகுந்த நம்மூர் பெண், gymnastics அரங்கத்தில் புகுந்திலிருந்தாவது "gymnastics அரங்கில் இந்தியப் பெண்" என்ற பெயர் கிடைத்திருக்கும்!). இந்த விளையாட்டிலிருந்து நாம் விலகியிருப்பது மேற்கத்திய நாடுகளின் சதி சார். நாம் "மொழி உணர்வு" மிக்கவர்கள் என்று தெரிந்து கொண்டு சரியான தமிழ் பெயர் கிடைக்காமல் இவர்கள் திண்டாடட்டும் என்று வேண்டுமென்றே "gymnastics" என்று பெயர் வைத்திருக்கிறார்கள். தமிழில் பெயர் வைக்க முடியாததால் gymnastics விளையாட தன்மானம் இடம் தரவில்லை என்று நாம் அறிக்கை விட்டால் முடிந்தது கதை!

ஜூடோ (Judo): உண்மையிலேயே நாம் அதிர்ச்சி அடைய வேண்டியது இந்த விளையாட்டுக்காகத்தான். அடுத்தவரை கவிழ்த்துவதும், கீழே தள்ளி அமுக்குவதில்லும் நாம் தலைமுறை தலைமுறையாக எப்படி சிறந்து விளங்குகிறோம் என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிவோம். ஆனால் ஜூடோவில் கூட நாம் சோடை போவது ஏன்? புரியவே இல்லை சார். பேசாமல் ஒரு விசாரணை கமிஷன் வைத்தால்தான் காரணம் தெரியும். அது வரை, "ஜூடோ ரத்னம்" சினிமாவுக்கு போனதால்தான் நமக்கு ஒரு பதக்கம் போயிற்று என்று சொன்னால் யார் எதிர் கேள்வி கேட்கப்போகிறார்கள்?

படகுப் போட்டி: அநியாயத்தை பாருங்கள்! நீரில் பலம் யாருக்கு என்று போட்டி வைக்கிறார்களே, கரையில் பலம் யாருக்கு என்று போட்டி வைத்தார்களா? தேம்ஸ் நதிக்கரையில் மண் அள்ளும் போட்டி வைத்தால் நாம் மண்ணையும் பதக்கத்தையும் சேர்த்தே அள்ளிக் கொண்டு வருவோமே...சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் சதி வேலை சார் இது. பாவம். அப்படி ஒரு போட்டி வைத்தால் நம்மவர்கள் புண்ணியத்தில் இங்கிலாந்து மக்கள் தேம்ஸ் நதியை தேட வேண்டியிருக்கும் என்று அவர்கள் பயந்திருக்கக் கூடும்...


என்னய்யா நீ? நம் நிலை பற்றி கவலைப்படாமல் கிண்டல் பேச்சு பேசுகிறாய் என்று கேட்கிறீர்களா? நம் நூறு கோடி பேர்களுக்கும் சேர்த்து கவலைப்படுவதற்கென்றே நாம் ஒருவரை டெல்லி செங்கோட்டையில் அமர்த்தியிருக்கிறோம். அவர் அனைத்துக்கும் கவலைப்படுவார். சீனாவின் அத்துமீறல் துவங்கி சீயக்காய் விலை உயர்வு வரை தினமும் கவலைப்படுவது மட்டுமே அவர் வேலை. அதுவும் "மக்களில் ஒருவராக" கவலைப்படுவார். விரைவில் "ஒலிம்பிக்ஸ் போட்டியில் நாம் பதக்கங்கள் குவிக்காததற்கு மக்களில் ஒருவனாக நான் கவலைப்படுகிறேன்" என்று அறிக்கை விட்டாலும் விடுவார். அப்புறம் எதற்கு சார் நமக்கு கவலை?

பின் குறிப்பு: இந்தப் பதிவை "சாமானியனின் ஒலிம்பிக்ஸ் கனவுகள்... பகுதி 2" என்றும் தலைப்பாக வைத்துக் கொள்ளலாம்.


Sunday, July 29, 2012

சாமானியனின் ஒலிம்பிக்ஸ் கனவுகள்...பகுதி 1


இந்த ஒலிம்பிக்ஸ் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரும் போது நம் விளையாட்டுத் துறை மற்றும் பல்வேறு வாரியங்களின் நகைச்சுவை உணர்வு நாட்டு மக்களுக்கு நல்லதொரு பொழுது போக்கைத் தரும். இந்த இரண்டு போட்டிகளுமே நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்தாலும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இதில் ஏதேனும் ஒன்று மாறி மாறி வந்து இவர்களை காப்பாற்றி விடும்.

எப்படிகாப்பாற்றும்? ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒரு நிர்வாகக் குழு உண்டு. இதன் தலைவர் தன் வாழ்நாள் முழுவதும் அந்தப் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பார். ஆசிய விளையாட்டுப் போட்டி வந்தால், "ஆஹா, இது எங்கள் அடுத்த ஒலிம்பிக்ஸுக்கு சரியான பயிற்சி களம்!" என்பார். அடுத்து வரும் ஒலிம்பிக்ஸ் போட்டியின் போது, "அடுத்த தலைமுறை வீரர்களுக்கான‌ பயிற்சி களம் இது!" என்பார். இப்படியே மாற்றி மாற்றி அறிக்கை விட்டே அவர் காலத்தை ஓட்ட, வீரர்கள் ஓய்வு பெற்று அவர்களின் பேரன் பேத்திகள் வயதுடையோர் "பயிற்சி" செய்ய ஆரம்பித்து விடுவார்கள். நம்மவர் அப்பொழுதும் அந்தப் பதவியில் இருப்பார் ஏராளமான சொத்துக்கள் மற்றும் மாறாத அதே பேச்சுடன்...!

சீனா போன்ற நாடுகள் 2028 ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு இப்போதே பயிற்சி திட்டங்கள் தீட்டிக் கொண்டிருக்கின்றன. பெருமைமிகு பாரதத் திருநாட்டில், நாளை லண்டன் செல்ல வேண்டிய தடகள வீரர், தனக்கு "shoe" இல்லை என்று பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். விளையாட்டுத் துறை அமைச்சரோ, தன் கோடி ரூபாய் காரின் கண்ணாடியை ஜம்பமாக இறக்கி விட்டபடி லண்டன் ஒலிம்பிக்ஸில் இந்தியா பதக்கங்கள் அள்ளும் என்று பேட்டி கொடுக்கிறார்.
வாழ்க பாரதம்!

சார், சுமார் நாற்பது வருடங்கள் "hockey" என்ற ஒன்றை வைத்தே காலத்தை ஓட்டினோம். நம் நாட்டில் ஒரு அற்புத பழக்கம் உண்டு. ஒன்றை அவமானம் செய்ய வேண்டுமென்றால் அதை "தேசிய அடையாளம்" என்று அறிவித்தால் போதும். தானாகவே அது அவமானப்பட்டு விடும். இப்படித்தான் புலி "தேசிய விலங்கு" என்றார்கள். முடிந்த வரை  அதை உண்டு இல்லை என்று ஒருவழி செய்தோம்.. இப்போது ஆயிரம் புலிகளே இருக்கின்றன என்றவுடன் நம் சிந்தனை செம்மல்கள் என்ன செய்யலாம் என்று முழித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படித்தான் ஹாக்கியும்...ஒலிம்பிக்ஸில் எட்டுத் தங்கம் என்று வீராப்பு பேசியே வீணான நாம், 1980 முடிந்தவுடன், "தேசிய விளையாட்டு"க்கு "தேசிய வினை" பிடித்து
சறுக்குகிறது என்று தெரிந்தவுடன் அடுத்து எதை வைத்து காலம் கழிக்கலாம் என்று பார்த்தோம். மாட்டினார் P.T Usha. ஏன் சார், இத்தனை பெரிய தேசத்தில், இரண்டு ஒலிம்பிக்ஸை, எட்டு வருடங்களை இந்த ஒரே ஒருவரின் பெயரைச் சொல்லியே கழித்தோமே...அநியாயமாக இல்லை?

Mohammad Shahid என்றொரு ஹாக்கி வீரர் என்பதுகளில் இந்திய அணியில் இருந்தார். அவரின் stick work கண்கட்டு வித்தை போல் அற்புதமாய் இருக்கும். kapil dev மேல் மட்டுமே கண் வைத்திருந்த நாம், இவரை கவனிக்கவில்லை. நாம் மட்டுமில்லை. ஹாக்கி அமைப்பும் முடிந்த வரை அவமானப்படுத்தியது. பிறகு தன்ராஜ் பிள்ளை வந்தார். கிரிகெட் போல் எங்களையும் கவனியுங்கள் என்று கத்திப் பார்த்தார். விடுவோமா நாம்? நமக்குத் தோதான விளையாட்டைதானே சார் நாம் பார்ப்போம்? கிரிகெட் என்றால் ஒரு பந்துக்கும் மற்றொரு பந்துக்கும் இடையே ஊர் கதை, உலகக் கதை பேசலாம், ஒரு நாள் முழுதும் உட்கார்ந்தே பொழுதை தேய்க்கலாம்...இதுதானே சார் நமக்கு சரி வரும். அதை விடுத்து ஒரு நொடி கூட நிற்காமல் லாவகமாய் பந்தை தட்டிக் கொண்டு போவதும், நமக்கு கண் சிமிட்டக் கூட நேரம் இல்லாமல் ஆட்டம் பறப்பதும் நமக்கு ஒத்து வருமா சார்? அதான் ஹாக்கி மட்டைகளை நாம் பள்ளிகளில் சாக்கில் கட்டி வைத்து விட்டோம். விளையாடுவதை விடுங்கள் சார். யாரேனும் டிவியில் ஹாக்கி போட்டி பார்க்கிறேன் என்று சொன்னால் அவரை "யார் இந்த விசித்திர பிராணி" என்று பார்க்கும் அளவிற்கல்லவா நாம் ஹாக்கியை ஆக்கி வைத்திருக்கிறோம்...

தொடர்வோம்...

பின் குறிப்பு: சிதம்பரத்தின் பேச்சும் ஒலிம்பிக்ஸும் வந்து நம் ஆடையில்லா மனிதன் சொன்ன ஆன்ட்ராய்ட் கதையின் அடுத்த பகுதியை தள்ளிப் போட்டு விட்டது சார்!

Saturday, July 21, 2012

பால் ஐஸ் சாப்பிடுவாரா ப.சிதம்பரம்?

சிறுவயதில் தொலைக்காட்சியில் சிதம்பரத்தை பார்க்கும் பொழுது அவரின் நடையின் பொலிவும் பேச்சின் தெளிவும் பார்த்து, இவர் உண்மையிலேயே நாட்டுக்காக உழைப்பதற்கு மந்திரியானவர் போலும் என்று எண்ணியிருக்கிறேன். நாம் எவரை அதிகம் நம்புகிறோமோ அவர்களிடம் அதிகம் ஏமாறுவதுதானே சார் உலக வழக்கம். இதிலும் அப்படித்தான். சில வருடங்களாகவே சிதம்பரம் "படிப்படியாக‌ இறங்கி" வருகிறார். உங்கள் வேகம் போதாது என்று எவரேனும் இவரிடம் சொல்லியிருப்பார்கள் போலும். சமீப காலமாக இரண்டு இரண்டு படிகளாக தாவித் தாவி "இறங்க" முயற்சி செய்கிறார். அவரின் பேச்சுக்கள் அப்படித்தான் இருக்கின்றன.

அதான் சமீப காலமாக இவர் வாயைத் திறந்தாலே என்ன பேசப் போகிறாரோ என்று பயமாக இருக்கிறது. சில மாதங்கள் முன்னர் ஊழல் பற்றிய முக்கியமான கேள்விக்கு, "எனக்கு மறதி அதிகம்" என்றார். மக்களுக்கு மறதி அதிகம் என்று தெரிந்துதானே இவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசுகிறார்கள், பிறகு தங்கள் வசதிக்கேற்ப மாற்றி சொல்லிக் கொள்ளலாமே...
மறதி அதிகமாக இருப்பவர் கையிலா நம் தேசத்தின் முக்கியமான பொறுப்புகளை கொடுத்து வைத்திருக்கிறோம்? சரி விடுங்கள். போன மாதம், தான் election வழக்கில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி ஆன போது, தனக்கே வெற்றி என்றார். என்ன சார் இது? தான் தாக்கல் செய்த மனு தள்ளுபடி ஆனால் தனக்கு வெற்றி என்று சொல்வதை மூளைக்குள் எப்படி விட்டுப் பார்த்தாலும் logic உதைக்கிறதே...சரி இதையும் விடுங்கள். சென்ற வாரம் இவரின் அறிவு ஊற்றில் பெருகி வழிந்த சிந்தனை ஆற்றில் சராசரி மக்கள் மூச்சு முட்டியல்லவா போனார்கள்?



சிதம்பரம் என்ன சொல்கிறார்? மக்களே, நாளும் பொழுதும் இருபது ரூபாய் கொடுத்து ice cream சாப்பிடுகிறீர்களே, அரிசி விலை ஒரு ரூபாய் ஏறினால் ஏன் கூப்பாடு போடுகிறீர்கள் என்கிறார். இதற்கு எதிர்ப்பு வந்த பின் அவர் தந்த பின் விளக்கம் அதை விட அற்புதம். இந்த விலையேற்றம் செய்வதே விவசாயிகள் வாழ்வை உயர்த்தத்தானாம்...நல்ல வேளை நம் ஊரில் காது குத்தும் பழக்கம் இன்னும் இருக்கிறது. விவசாயிகள் வாழ்வா? நாற்பது ஆண்டு காலத்தில் நதிகளை தேசியமயமாக்கவும், இணைப்பு செய்யவும் ஒரு கல்லை கூட நகர்த்தாத  இவர் சார்ந்திருக்கும் அரசு, விவசாயம் பற்றி பேசுகிறது! உணவு கோடவுனில் லட்சக்கணக்கான தானியங்கள் வீண் செய்தாலும் செய்வோம். இலவசமாக ஏழைகளுக்கு கொடுக்க மாட்டோம் என்று சொல்லிய இவர் சார்ந்திருக்கும் அரசு விவசாயிகளின் ஏற்றம் பற்றி பேசுகிறது! சபாஷ் போடுவோம் சார்.

மினரல் வாட்டர் விலை கொடுத்து வாங்கி குடிக்கத் தெரிகிறதே என்கிறார்...அய்யா சிதம்பரம் அவர்களே, நாங்களா மினரல் வாட்டர் குடிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டா வளர்ந்தோம்? தேசத்தின் குறுக்கும் நெடுக்கும் உள்ள ஆறுகளில் மண் அள்ளப்படுவதை மௌனமாக பார்த்துக் கொண்டிருக்கும் அரசுகள், நாடு வளர்கிறது என்ற பெயரில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சொகுசு கட்டடங்கள் கட்ட ஊக்குவிக்கும் அரசுகள், முறையான கழிவு நீரேற்றுத் திட்டம் போடக்கூடத் தெரியாத அரசுகளினால் குடி நீரில் கலக்கும் கழிவு, எந்த தொழிற்சாலையும் எந்த ஆற்றிலும் எதையும் கலக்கலாம் என்ற உங்கள் அரசின் பெருந்தன்மை இதெல்லாம் சேர்ந்து வீட்டில் குழாய் நீர் இன்றி எங்களை பாட்டில் நீர் குடிக்க வைத்திருக்கிறது திரு சிதம்பரம் அவர்களே...

இருபது வருடங்கள் முன்பு வரை, நம் தெருக்களில் மதிய வேளையில் "ஐஸ் பால் ஐஸ்" என்று கூவிக்கொண்டே "டப் டப்" என்று ஐஸ் பெட்டி மூடியை திறந்து மூடியபடி வண்டியை தள்ளிக் கொண்டு வருவாரே...அந்த பால் ஐஸ் தான் நம் நாட்டில் கோடிக் கணக்கான பேர் அறிந்த "ice cream". கைக்கும் வாய்க்கும் சரியாக இருக்கும் வருமானத்தில் வாழ்க்கை நடத்தும் கோடிக்கணக்கான குப்பன்களும் சுப்பன்களும் குளுகுளு அறையில் அமர்ந்தபடி ice cream சாப்பிடுவதில்லை. இருபது ரூபாய் இ சாப்பிடுகிறீர்களே என்கிறார் நம் நாட்டின் மூத்த அமைச்சர்!

சரி, இவர் சொல்லும் வாதத்தையே வைத்துக் கொள்வோம். அப்படி என்றால் வசதி படைத்தவர்களுக்கு அதிக‌ விலை ஏழைகளுக்கு குறைந்த‌ விலை என்றல்லவா சொல்ல வேண்டும். அப்படி இவர் சொல்லவில்லையே? என்ன வேண்டுமானாலும் பேசலாம் பிறகு எப்படி வேண்டுமானாலும் விளக்கம் சொல்லலாம் என்று இருக்கும் நாட்டில் இவர் இத்தோடு விட்டாரே என்று நிம்மதியாக போக வேண்டியதுதான்.


இல்லையென்றால்,

"தினமும் காபி குடிக்காமலா இருக்கிறீர்கள்? பால் விலை உயர்ந்தால் மட்டும் ஏன் பொங்குகிறீர்கள்" என்று இவர் கேட்டாலும் கேட்பார்.

"தெருவில் வடை கடைகளில் எப்போதும் கூட்டமாக இருக்கிறதே...பஜ்ஜி வடை சாப்பிடத் தெரிகிறது எண்ணெய் விலை ஏறினால் எதற்கு கேள்வி கேட்கிறீர்" என்று இவர் கேட்கலாம்.

"எல்லோரும் மாட்டு வண்டியிலா போகிறீர்கள்? ஏதோ ஒரு வாகனத்தில் தானே போகிறீர்கள். பெட்ரோல் டீசல் விலை உயரத்தானே செய்யும்?" எனலாம்.

தான் பேசியது தவறு, பொறுப்பற்றது மற்றும் அர்த்தமற்றது என்பதை சிதம்பரத்திற்கு எப்படி புரிய வைக்கலாம்? அன்பால் அரவணைப்பது தான் தமிழர் பண்பாடு. எனவே இவரின் தொகுதி மக்கள் அடுத்த தேர்தல் முடிந்தபின் ஐந்து வருடங்கள் இவரை சிவகங்கையிலேயே வைத்துப் பார்த்துக் கொள்ளலாம். தினமும் ஒரு பால் ஐஸ் மற்றும் மினரல் வாட்டர் கேன் கொடுத்து உபசரிக்கலாம். ஓய்வாக‌ வீட்டில் அமர்ந்து இவர் யோசிக்கையில், தான் பேசியது தவறு என்று தோன்றாமல் போய் விடுமா என்ன?

ஒரு மிகப்பெரிய நாட்டின் மூத்த அமைச்சர், உலகமே பார்க்கும் தொலைக்காட்சியில் இவ்வளவு பக்குவமின்றி பேசுகிறார் என்றால், இவர்கள் நான்கு சுவர்களுக்குள் நடத்தும் மந்திரி சபை கூட்டங்களில் எப்படியெல்லாம் பேசுவார்கள்? "முகமது பின் துக்ளக்" படத்தில் சோ நடத்தும் மந்திரிசபையை தூக்கிச் சாப்பிட்டு ஏப்பம் விட மாட்டார்கள்?

Saturday, July 14, 2012

ஆடையில்லா மனிதனும் Android கைபேசியும் பகுதி 1



ஆடையில்லா மனிதன் அரை மனிதன் என்றார்கள் நம் முன்னோர்கள். இப்போதோ, ஆள் பாதி Android மீதி என்று ஆகி, காலைக்கடன் தவிர மற்ற அனைத்து "கடன்"களையும் mobile போனிலேயே செய்யக் கூடிய நிலை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். ஊரே வடக்கு பக்கம் போகும் போது நாம் வராண்டாவில் உட்கார்ந்து வானத்தை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? பழமொழிகள் எல்லாம் எதற்கு இருக்கின்றன? நமக்கு ஏற்றபடி பயன்படுத்திக் கொள்ளத் தானே? எனவே "ஊரோடு ஒத்து வாழ்" என் உதவிக்கு வர, நானும் "latest" android mobile ஒன்றை வாங்க முடிவு செய்தேன்.

முன்னரெல்லாம் தள்ளுவண்டியில் பேரிச்சம்பழத்தை மலை போல் குவித்து கூவி விற்பார்கள். கிட்டத்தட்ட அந்த நிலையில் தான் மொமைல் சந்தையும் இருக்கிறது. ஆனால் நாம் ரோட்டில் விற்கும் பொருட்களை வாங்குவோமா? எனவேதான் மொமைல் கம்பெனிகள் குளுகுளு கடையில் புன்னகை பொருந்திய விற்பனை பிரதிநிதிகளின் புழுகு மூட்டைகளுடன்ன் ஒன்றுக்கு பத்தாய் விலை சொல்லி விற்கிறது. அதில் ஒன்றை வாங்கி கையில் வைத்துக்கொண்டே திரிந்தால் தானே நமக்கு ஒரு கெத்து?

பல் குத்தும் குச்சியில் கூட "brand" பார்த்து வாங்கும் இன்றைய காலத்தில் ஏதோ ஒரு மொபைலை வாங்கி விட முடியுமா? ஆராய்ச்சி தேவைபடுகிறது sir ஆராய்ச்சி!.முதலில் நாம் வாங்க வேண்டிய பொருளுக்கு சந்தையில் உள்ள‌ "brands" பற்றி ஊரில் என்ன பேச்சு உலவுகிறது என்று கண்ணையும் காதையும் தீட்டி வைத்துக் கொண்டு சில நாட்களோ வாரங்களோ கழிக்க வேண்டும்.

"Phone for humans" என்றொரு mobile phone விளம்பரம் வருகிறது. அதாவது "நீ மனுசனா இருந்தா இந்த போன் வாங்கு" என்பதை நாசூக்காக சொல்கிறார்களாம். கூடவே ஒரு டம்பளரில் தண்ணீர் வைத்துக் கொண்டே இதைப் பார்ப்பது நலம். இதன் விலை கேட்டால் "மனுசனுக்கு" விக்கல் வருவது நிச்சயம். நாற்பதாயிரம் ரூபாயாம். ந‌ம் மன்மோகன் சிங்கின் பொய் கணக்கு படி பார்த்தால் கூட, வறுமைக் கோட்டின் கீழ் இருக்கும் நான்கு குடும்பங்களின் ஆண்டு வருமானம் இது. எப்படி இப்படிப்பட்ட விலையில் போன் விற்கிறார்கள்? இந்த விலையில் போன் வாங்கினால் நம் வாழ்க்கை சாமியார் பூனை வளர்த்த கதை ஆகி விடாதா சார்? இந்த போனை வைத்து கொண்டு பஸ்ஸில் போக முடியுமா? கார் வேண்டியிருக்கும். ரயிலில் போக முடியுமா? கொஞ்சம் அசந்தால் நம்மூர் ரயில்களில் நம்மையே அள்ளிக் கொண்டு போய் விடுவார்கள்...போனை விடுவார்களா? எனவே விமானத்தில் தான் போக வேண்டும். போன் பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்து பார்த்தே ஏதேனும் "mobile phone syndrome" ஏதேனும் வந்தாலும் வந்து விடும். எனவே இந்த "மனுசனா இருந்தா இந்த போனை வாங்கு" விளம்பரம் பார்க்கும் போது பூனை "மியாவ் மியாவ்" என்று காதில் கத்துகிறது. ஒரு சிக்கல் பெரிதாகிக் கொண்டே வந்தால் உடனே பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு மன்மோகன் சிங் ஏற்பாடு செய்து விளக்கம் சொல்வது வழக்கம். அது போல் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்து, "பாருங்கள் பத்திரிகையாளர்களே, எங்கள் அரசின் வறுமை கோடு விளக்கத்தை விமர்சித்தீர்களே...நம் நாட்டில் எத்தனை நாற்பதாயிரம் போன்கள் விற்கின்றன பாருங்கள் இன்னுமா நாட்டில் ஏழைகள் இருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள்" என்று கேட்டால் நாம் வாயை மட்டுமா மூடிக்கொள்வோம்? ஒன்பது வாசல்களும் தானே மூடிக்கொள்ளாதா என்ன?

Android phone வாங்கும் திட்டத்தை செயல்படுத்த காத்திருந்த ஒரு நாள், busஸில் செல்லும் பொழுது ஒரு இளைஞர் கூட்டம் ஏறியது. அவர்கள் பேச்சில் "ginger bread வந்து மாதக்கணக்காச்சு,  ice cream sandwich வர இவ்வளவு தாமதமாகும் என்று நினைக்கவில்லை. எவ்வளவு பேர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்" என்று காதில் விழுந்தது. ஆஹா! நம் இளைஞர்கள் சுயநலம் மிக்கவர்கள், சமூக நலன் பற்றிய அக்கறை குறைவு என்று யார் சொன்னது என்று எனக்குள் ஆத்திரம் பொங்கியது. எத்தியோப்பியாவில் ரொட்டி கூட கிடைக்காமல் அன்னிய நாடுகளின் உதவிக்காக உணவின்றி காத்திருக்கும் மக்களைப் பற்றித் தான் இந்த இளைஞர் கூட்டம் அக்கறை காட்டுகிறதோ என்று நினைத்து அவர்களை உச்சி முகர நினைத்து எழுந்தேன். உள்மனம் என்னை இரண்டு உதை விட்டு "பேசாமல் கிட. அவர்கள் android latest version ice cream sandwich பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்" என்று அமர வைத்தது. நல்ல வேளை. நாடு அதன் போக்கில்தான் இருக்கிறது என்ற நிம்மதியுடன் பயணத்தை தொடர்ந்தேன்...

நானும் ஆன்ட்ராய்ட் சமூகத்தின் அங்கத்தினன் ஆகப் போகிறேன் என்பதை கேள்விப்பட்ட நண்பன், "tablet" வாங்கு என்றான். எனக்கோ இந்த tablet விளம்பரங்கள் பார்க்கும் பொழுது ஒரே கவலையாக இருக்கும். உலகம் போகும் போக்கில், ஏதேனும் ஒரு "காந்தக் கண்ணழகி" தொலைக்காட்சி விளம்பரத்தில் தோன்றி, "இன்னும் நீங்கள் சாப்பாடா சாப்பிடுகிறீர்கள்...தினமும் ஒரு மணி நேரம் சாப்பாட்டில் வீணடிக்கலாமா? எப்படி உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும்? இந்த tablet வாங்கினீர்கள் என்றால் சாப்பிடத் தேவையில்லை. tabletடே உங்களை நாள் முழுதும் தேவையான energy கொடுத்து சார்ஜ் செய்து விடும்" என்று ஏதேனும் சொல்லித் தொலைத்தால் நாம் சும்மா இருப்போமா? வாங்கி விடுவோமே...நல்ல வேளை, விஞ்ஞானம் அந்தளவு இன்னும் வளரவில்லை போலும். தப்பித்தோம். இப்போது வரைக்கும் tablet அதன் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பது நாம் செய்த புண்ணியம்.

ஒரு வழியாக சில phone மாடல்களையும் brandகளையும் மனதில் நிறுத்தி கடைக்கு கிளம்பினோம். இது நாள் வரை "விரல் நுனியில் உலகம்" என்ற android வலையிலிருந்து தப்பித்திருந்த ஆடு, தன் தலையில் தானே மஞ்சள் தண்ணியை ஊற்றியபடி mobile phone கடைக்குள் நுழைவதை மகிழ்ச்சியுடன் பார்த்தபடி உடன் வந்தார் மனைவி. கடையில் கண்ட கதைகளை அடுத்த வாரம் பார்ப்போம்.