/ கலி காலம்

Saturday, August 17, 2013

வாங்க...லெட்டர் போடுவோம்

என்னங்க? ஊர் உலகம் தேள் கொட்டிய‌ குரங்கு மாதிரி என்னவெல்லாமோ செஞ்சுக்கிட்டுருக்கு...இந்த காலத்துல கடிதம் எழுதவா? என்று என்னை ஏற இறங்க பார்க்காதீங்க...எல்லாம் நம்ம அரும்பெரும் தலைவர்கள் பேணிக் காக்கும் பாரம்பரியத்தை பரப்பும் பணியில் ஏதோ நம்மால் முடிந்த சிறு துளி சார் இது.

சமீபத்தில் உத்திரபிரதேசத்தில் ஒரு IAS அதிகாரியை சஸ்பெண்ட் செய்தது குறித்து நாடு முழுவதும் விவாதம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதன் போக்கில் அது நடக்கட்டும். ஆனால், மத்தியில் அரசாளும் கட்சியின் தலைவர் செயல்பாட்டை நாம் வியந்து பார்க்க வேண்டும். என்னே ஒரு வேகம் என்னே ஒரு விவேகம்...தன் கட்சியைச் சேர்ந்த, தனக்கு கீழே பணி செய்யும் பிரதமருக்கு, தான் நினைத்தால் அடுத்த நிமிடம் பார்க்கக் கூடிய ஒருவருக்கு, இந்த விஷயத்தில் நியாயத்தின் பக்கம் நின்று நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். அதுவும் எப்படி? கடிதம் எழுதி! தகவல் தொழில்நுட்பத்தில் கொடி கட்டிப் பறக்கும் நாட்டில் எப்பேர்ப்பட்ட புரட்சி சார் இது! இவர்களிடம் "ஏன் இப்படி செய்கிறீர்கள்?" என்று கேட்க முடியுமா? ஏற்கெனவே பிரதமர் ஒரு முறை, "தமிழ் நாட்டின் மூத்த தலைவர் மூலமே நாங்கள் ஆலோசனை பெறுகிறோம்" என்று சொல்லியிருக்கிறார். கடிதம் எழுதுவதில் கை தேர்ந்தவரான அவர் தான் இந்த "அட்வைஸ்" தந்திருப்பாரோ? அதற்காக மற்றவர்களை குறைவாக நாம் எண்ணி விடக் கூடாது. இப்பொழுதுள்ள முதல்வரும் முடிந்த வரை மூத்த தலைவரை கடிதம் எழுதும் கலையில் முந்த முடியுமா என்று தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்து வருகிறார். இப்படியாக தமிழகம் நாட்டிற்கு தந்த ஒப்பற்ற கலைவடிவமாக விளங்குகிறது கடிதங்கள்!

நம் பங்குக்கு நாம் என்ன சார் செய்யலாம்? ஒரு உதாரணம் மட்டும் பார்க்கலாம். ஏதாவது பெரிய தீ விபத்து ஏற்பட்டு விட்டது என்று வைத்துக் கொள்வோம்...தீயணைப்புத் துறைக்கு போன் செய்தால் விஷயம் சீக்கிரம் முடிந்து விடுமே? முடிய விடலாமா? கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாமா நமக்கு? தலைவர்களின் தாள் தொட்டு அவர்கள் வழி நாம் நடக்க வேண்டாமா சார்? பற்றி எரியும் தீயை உற்றுப் பார்த்து வருந்தியபடி தபால் நிலையம் நோக்கி ஓட வேண்டும். நடந்தால் இன்னும் நல்லது. கூரியர் எல்லாம் வேகமாக பட்டுவாடா செய்யப்படும் என்பதனால் சாதா அஞ்சல் அட்டையை பயன்படுத்தலாம். தீயணைப்பு நிலையத்திற்கு தீயை அணைக்கும் படி அகம் உருகி ஒரு கடிதம் போட வேண்டும் சார் கடிதம்!

"மதிப்புக்குரிய தீயணைப்பு நிலைய தலைவருக்கு, சமூகத்தில் தீ விபத்துக்கள் அவ்வப்பொழுது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. உங்களின் கடமைமிகு படை வீரர்கள் மூலம் மக்களை தொடர்ந்து காத்து வரும் தொண்டு எங்களை மெய் சிலிர்க்க வைக்கிறது. அந்த சிலிர்ப்புக்கு சிகரம் வைக்கும் தருணம் வந்து விட்டது. நியாய உணர்வுடன் விரைந்து வந்து கொழுந்து விட்டெரியும் கொடிய தீயை
தண்ணீர் கொண்டு தவிடுபொடியாக்கி கண்ணீரில் மிதக்கும் எங்களை பன்னீரில் நனைய வைக்கும்படி மூவுலகிலும் மூத்த குடியாம் தமிழ் குடியின் அடுப்பொடிகளில் ஒருவனாக கேட்டுக் கொள்கிறேன்..." - ஒரு பொறுப்புமிக்க குடிமகனாக இப்படியொரு கடிதம் எழுதினால் முடிந்தது காரியம் சார்.

ஆனால் கடிதங்கள் எழுதியே காலத்தை ஓட்ட முடியுமா? ஒரு கட்டத்தில் போரடிக்குமே? எனவே பாரம்பரியமிக்க பாரதத்தில் பழங்காலத்தில் இருந்த சீர்மிகு தகவல் சாதனமான புறாவுக்கு மீண்டும் உயிர் கொடுப்போம் என்றொரு புரட்சி ஊற்று நம் தலைவர்களின் சிந்தனையில் உதித்தால் நாட்டின் கதி என்ன ஆகும் சார்? கலக்கமாக இருக்கிறதா? அத்தனை கலக்கத்தையும் அறிக்கை விட்டே அழிய வைக்கும் ஆற்றல் மிக்க அரசியல்வாதிகள் வாழும் நாடல்லவா இது! "சுறாவை சுண்டு விரலால் பிடித்த வீரமிகு வரலாறு கொண்ட தேசத்தில் புறாவை கொண்டு கடிதம் அனுப்பும் கலையை போற்றும் பணி செய்வோம் பாரம்பரியம் காப்போம்" என்று ஆரவாரமாக‌ அறிக்கை விடத்தெரியாதவர்களா நாம்?

"புறா பராமரிப்புத் துறை" ஒன்று துவங்கி அரசாங்க தகவல் பரிமாற்றங்கள் மற்றும் மக்கள் தொடர்பு அனைத்தும் புறா அன்றி இரா என்று எதுகை மோனையில் ஒரு சட்டம் இயற்றினால் போதாதா? அப்புறம் நம் அனைவருக்கும் வீட்டுக்கொரு விலையில்லா புறா கிடைக்கும். "புறா தந்த புரவலர்" பட்டம் பெறும் பாக்கியம் நம் நாட்டில் எந்த தலைவருக்கு வாய்த்திருக்கிறதோ! பொறுத்திருந்து பார்ப்போம்!

குறிப்பு: உதாரணத்தை வைத்து நீங்களாக ஏதேனும் உள்ளர்த்தம் செய்து கொண்டால் அதற்கு நீங்களே பொறுப்பு!

Sunday, July 21, 2013

மெதுவா தந்தி அடிச்சானே...

என்ன சார்...தலைப்பு பார்த்து விதவிதமான எதிர்பார்ப்புக்களுடன் படிக்க ஆரம்பித்து விட்டீர்களா? எதிர்பார்ப்பு நிறைவாகிறதா இல்லை ஏமாற்றமா என்று இறுதியில் தெரிந்து விடும். இப்பொழுது விஷயம் என்னவென்று பார்ப்போம்.

தாத்தாவிற்கு தாத்தா காலம் தொட்டு அவசர நேரங்களில் தகவல் பரிமாற உதவிய தந்திக்கு அந்திம காலம் சென்ற வாரம் முடிந்தது நாம் அனைவரும் அறிந்ததே...இந்த நேரத்தில் தந்தியுடன் நாம் கொண்ட தொடர்பு குறித்து நமது நினைவலைகள் புரண்டு கொண்டிருக்கும். எனக்கு, நான் முதன் முதலாய் தந்தி கொடுக்கச் சென்ற அனுபவம் ஞாபகம் வந்தது. ஞாபகம் என்றால் நம் சொல் கேட்குமா சார்? ஒன்றிலிருந்து இன்னொன்று என்று அது போன போக்கில் போய் கொண்டேதானே இருக்கும்? நாமும் அதன் போக்கில் போக வேண்டியதுதானே...

அப்போது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஒரு உறவினரின் மறைவுச் செய்தியை பல பேருக்கு தந்தி மூலம் தெரிவிக்கும் பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டது. சூழல் காரணமாக எப்படி தந்தி அனுப்புவது என்று எவரிடமும் கேட்க இயலாமல் நேரே "தந்தி ஆபிஸ்" சென்றேன். கையில் பேப்பரில் நிறைய முகவரிகள். தந்தி கவுண்டரில் நல்ல கூட்டம். மகிழ்ச்சி, துக்கம் என வெவ்வேறு ஸ்வரங்களை மாறி மாறி அடிக்கும் "டக் டக்" சத்தம் தொடர்ந்து கேட்க, வரிசையில் நிற்போர் "கதை" பேசாமல் மெளனம் காக்கும் விசித்திரமான இடமாக தெரிந்தது தந்தி ஆபீஸ்.

அனைவரும் வயதில் என்னை விட மிகப் பெரியவர்களாக இருந்தார்கள். ஒரு வேளை பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் தந்தி அனுப்ப முடியுமோ என்று ஒரு திடுக் சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. அப்படியென்றால் வீட்டில் என்னை அனுப்பியிருக்க மாட்டார்கள் என்று மனம் சமாதானம் சொன்னாலும், அத்தனை நீள வரிசையில் நின்று இறுதியில் வயதாகவில்லை என்று சொல்லி விட்டால் என்ன செய்வது என்ற கவலை வேறு! ஒருவரிடம், நேரடியாக வயது வரம்பு பற்றி கேட்கத் தயங்கி, "தந்தி அனுப்ப address proof வேணுமா?" என்றேன். அட்ரஸ் இருந்தா போதும் புரூப் வேண்டாம் என்றார். மதுரைக்காரர் என்றாலே பதிலை ருசியாகத்தானே சொல்வார்? அடுத்து, "ஸ்கூல் படிக்கறவங்க அனுப்பலாமா?" என்றேன். என்னை ஒரு மாதிரியாக பார்த்தவர், கவுண்டரை கைகாட்டி "அங்க போய் கேளு" என்றார்.

பெரிய குங்குமப் பொட்டுடன் ஒரு பெண்மணி கவுண்டரில் இருந்தார். "மேடம் நான் பத்தாவது படிக்கறேன். தந்தி அனுப்பலாமா" என்று பொட்டென்று போட்டு உடைத்தேன். ஒரு பெரும் பாரம் இறங்கியது போல் இருந்தது. "யார் வேணாலும் அனுப்பலாம்பா" என்று form ஒன்றை கொடுத்தார். ஏற்கெனவே முகவரிகளை எண்ணி வைத்திருந்த நான், கொஞ்சம் "extra" இருக்கட்டுமே என்று சற்று கூட்டி, ஒரு ஐம்பது form கொடுங்க" என்றேன். அங்கிருந்தவர்கள் அனைவருமே என்னை பார்வையால் துளைப்பது போல இருந்தது. பெண்மணி ஒருவரை பெயர் சொல்லி அழைக்க, எங்கிருந்தோ வந்தவரிடம், "5 நிமிஷம் பார்த்துக்கங்க" என்று சொல்லி விட்டு என்னை பார்த்தபடி எழுந்தார். "ஆஹா... ஐம்பது எல்லாம் கேட்கக்கூடாது போலிருக்கே" என்று எனக்கு படபடப்பானது. சுற்றி நடந்து வெளியே வந்தவர், "இப்படி வாப்பா தம்பி" என்று அருகிலிருந்த பெஞ்சுக்கு கூட்டிப் போனார்...

சரி...தனியாக அழைத்துச் சென்று திட்டும் அளவுக்கேனும் பக்குவப்பட்டவராக‌ இருக்கிறாரே என்ற எண்ணத்துடன் அவரின் பின்னே சென்றேன். யார் இறந்தது என்று விசாரித்து, சுவற்றின் மேலே தொங்க விடப்பட்டிருந்த "தந்தி விதிமுறைகள்" போர்டை காட்டி, ஒவ்வொரு சொல்லுக்கும் காசு உண்டு என்று விளக்கி, நான் ஒரு form முடிக்கும் வரை சரி பார்த்து, "மற்றவற்றை எழுதிக் கொண்டு வா" என்று சொல்லி விட்டு போய் விட்டார்.

ஐந்து நிமிடம் கழித்து அனைத்தையும் "ரெடி" செய்து நிமிர்ந்த நான் மீண்டும் வரிசையில் நிற்க வேண்டுமா என்ற பிரமிப்புடன் மெதுவாக வரிசை நோக்கி நகர்ந்தேன்...கவுண்டரில் இருந்த அவர், சத்தமாக "வரிசை வேண்டாம் இங்க வா" என்றார். அனைத்தையும் சரி பார்த்து அனுப்பி, "acknowledgement" கொடுத்து, கரெக்டா போயிரும் போயிட்டு வா" என்றார். எத்தனை உணர்வு பூர்வமான வேலையை இவர்கள் செய்கிறார்கள் என்று அனுபவத்தில் அறியும் அற்புதமான வாய்ப்பு அன்று எனக்கு கிடைத்தது.

சில‌ வருடங்கள் கழித்து, ஒரு மாலை நேரத்தில், மதுரை சக்தி சிவம் தியேட்டரில்,  புதிய‌ வகையில் தந்தியடிக்கும் முறைகள் குறித்து அரவிந்த் சாமியும் சிவரஞ்சனியும் "மெதுவா தந்தி அடிச்சானே..." என்ற பாடல் மூலம்   செயல்முறை விளக்கங்களுடன்  மக்களுக்கு மாபெரும் ஞானம் அளிக்க‌ தங்கள் கலைத்தொண்டு மூலம் முயன்று கொண்டிருந்தனர். "தாலாட்டு" படத்தில் வரும் இப்பாடலை நண்பர்களுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

சரிதான்...இரண்டிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? அதான் சொன்னேனே சார்...ஞாபகம் என்றாலே எங்கெங்கெல்லாமோ சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் நம் மனதை திரிய வைத்து எப்படியோ ஒரு சம்பந்தத்தை எதன் இரண்டிற்கோ இடையில் கொண்டு சேர்த்து விடும் என்று... எனவே இதிலும் சம்பந்தம் இருக்கு சார் இருக்கு. எனது முதல் தந்தி அனுபவ ஞாபகமும் "மெதுவா தந்தி அடிச்சானே" பாட்டு ஞாபகமும் எப்படியோ சேர்ந்து இப்பொழுது எனக்கு ஒரு கவலையைத் தந்திருக்கிறது...அதாவது, இன்னும் ஒரு நானூறு ஐநூறு ஆண்டுகள் கழித்து எஞ்சியிருக்கும் தமிழ் தெரிந்த எவரோ ஒருவர், "முற்கால தமிழ் அகராதி" என்று எதையேனும் தயாரிக்க முயன்று கொண்டிருக்கையில் அவர் காதில், "மெதுவா தந்தி அடிச்சானே" பாடல் விழுந்து, ஆர்வம் உந்தித் தள்ள அந்த பாடல் காட்சியை பார்க்கும் அவலமும் நேர்ந்து, அதன் மூலம் அவர் அறிவுக்கு எட்டியதை, "தந்தி என்ற சொல், பண்டைய தமிழ் நாட்டில் காதலர்கள் ஒருவரை ஒருவர் கையாளும் முறையை குறிக்கும்" என்ற ரீதியில் எதையேனும் எழுதி வைத்தால் என்ன செய்வது சார்?

Sunday, June 9, 2013

எப்படியிருந்த கிரிகெட்...

அது ஒரு பிற்பகல் வேளை. நான் சென்று கொண்டிருந்த பேருந்தை திடீரென்று சாலையோரம் நிறுத்தி விட்டு ஒரு கடை நோக்கி இறங்கிப் போன டிரைவர், திரும்பி வந்து பயணிகளிடம் "Chetan Sharma செஞ்சுரி அடிச்சுட்டான்" என்று உற்சாக அதிர்ச்சியை உரக்கச் சொல்லி விட்டு வண்டியை எடுத்த தினம் நடந்து இருபத்தைந்து ஆண்டுகள் இருக்கும். பேருந்து முழுவதும் "Chetan Sharma" மந்திரமாக ஒலித்தார். அதற்கு சற்று காலம் முன்பு கடைசி பந்தில் சிக்ஸ்ர் கொடுத்த போது திட்டித் தீர்த்த பல வாய்களே அந்த பேருந்தில் அன்று இருந்திருக்கக் கூடும். எனினும் அனைவருக்கும் அன்று அது நினைவில் இல்லை. எவரும் "எதுக்குய்யா வண்டியை நிப்பாட்டின?" என்று கேள்வி கேட்கவில்லை. இப்படித்தான் நம் தேசம் கிரிகெட் கிறுக்கு பிடித்து வருடக்கணக்கில் அலைந்தது.

பரந்த மைதானத்தில் விளையாடும் ஆட்டம் என்றாலும் பத்துக்குப் பத்து ரூமுக்குள் கூட, வீட்டு பீரோ நெளிந்து போக, கண்ணாடி உடைபட விளையாட வைத்தது...ரப்பர் பந்து பிய்ந்து போனால், அதன் ஒரு பகுதியை வைத்தே விளையாடினாலும் உற்சாகம் தந்தது...தரிசு நிலங்களில் உடைந்த மரப்பட்டையை பேட்டாகவும் உலர்ந்த சோளத்தட்டையை பந்தாகவும் உருமாற வைத்தது...காற்றில் கைகளை சுற்றி பெளராகவும், விதவிதமான ஷாட்களுக்கு வாயினாலேயே "டொக்" என்று சத்தம் கொடுத்து பந்துமில்லாமல் பேட்டுமில்லாமல் கற்பனையிலேயே விளையாடியபடி தெருவில் நடந்து போகும் சிறுவர்களைக் கொடுத்தது...சின்னஞ்சிறு மைதானத்தில் எந்தப் பந்து எந்த "மேட்சில்" இருந்து வருகிறது என்று கண்டுபிடிப்பது கூட கடினமாக குறுக்கும் நெடுக்குமாக பல குழுக்கள் விளையாடினாலும் பொறுத்துக் கொள்ள வைத்தது...

கிரிகெட் நம் நாட்டில் பரவுவதற்கு பெருமளவு பங்காற்றியது தூர்தர்ஷன் என்பதை நாம் மறந்து விட முடியாது. "ஆடி அசைந்து" விளையாடுவதற்கு பெயர் பெற்ற ரவி சாஸ்திரி "ஆடி" கார் பரிசு பெற்ற 1985 ஆண்டின் "" போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பி பட்டி தொட்டியெங்கும் கிரிகெட் மோகத்தை கிளறியது தூர்தர்ஷன். ஆஸ்திரேலியாவில் நடந்த இந்தப் போட்டிகளை, வெறும் கோடுகள் மட்டுமே திரையில் தெரியும் போதே டிவியை ஆன் செய்து, இரண்டு முந்திரி வடிவங்கள் இசையுடன் திரையில் சுற்றி வருகையில் சற்று உற்சாகம் தொற்றி, பல் துலக்கிய கையோடு டிவியின் முன் தவம் கிடந்த வீடுகள் பல உண்டு.

டி.வி என்பது வசதி படைத்தவர்கள் வாங்க யோசிக்கும் இருந்த அந்நேரத்தில், ஏதேனும் ஒரு டிவி ஷோ ரூமின் வாசலில் நின்று "Dyanora" மற்றும் "Solidaire" வகையறாக்கள் வழியாக ஓடிக்கொண்டிருக்கும் கிரிகெட் மாட்சை சாலையில் போகும் பிச்சைகாரரும் பிசினஸ்மேனும் அருகருகே நின்று ஆனந்தமாக பார்த்துச் சென்ற "கலாச்சாரம்" தோன்றியது.ரிக்க்ஷா ஓட்டுபவர் "ஒரு நிமிஷம்" என்று சவாரியை நிறுத்தி கடைசி ஓவர் பார்ப்பதும், தெருவை அடைத்தபடி கூட்டம் நிற்பதுமாய், கிரிகெட் என்ற "மதம்" பரவியது.


ஒரு முறை உறவினர் ஒருவரை பார்க்க மருத்துவமனை சென்ற பொழுது, ஆபரேஷன் தியேட்டரிலிருந்து கொண்டு வரப்பட்டு அப்போதுதான் நினைவு திரும்பிய‌ ஒருவர் "இந்தியா தப்பிச்சாச்சா" என்று ["டை" ஆன சென்னை டெஸ்ட் போட்டியின் போது] கேட்டது ஞாபகம் இருக்கிறது.

எனது பெரியப்பா ஒருவர், வீட்டில் டிவி வராத காலங்களிலேயே, உலகில் எந்த மூலையில் டெஸ்ட் போட்டி நடந்தாலும் தனது டிரான்ஸிஸ்டரை எப்படியோ தட்டித் திருகி , ABC... BBC என்று எதிலாவது மாட்சை பிடித்து விடுவார். எங்கேனும் காதை கழற்றி ரேடியோவிற்குள் போட்டு விடுவாரோ என்று பயப்படும் அளவு ரேடியோவை காதோடு வைத்து, பெரும் இரைச்சலுக்கு நடுவே ஸ்கோரை "கண்டு பிடித்து" விடுவார்.

ஞாயிற்று கிழமைகளில் போட்டி நடந்தால் மகிழ்ச்சிக்கு பதில் பதட்டம் தோன்றும். ஏன் என்றால், தூர்தர்ஷனில் பாதி நேரம் போட்டியை ஒலிபரப்புவதற்கு பதில் அதன் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பிக் கொண்டிருப்பார்கள். "ரோம் எரியும் பொழுது பிடில் வாசிப்பது" என்பதை போல நாம் " ஸ்ரீகாந்த் என்னவானோரோ" என்று பரபரக்கும் மதியம், காது கேளாதோருக்கான செய்தி ஓடிக்கொண்டிருக்கும். நாட்டில் அனைவருக்கும் நன்றாக காது கேட்கும் நிலை வந்து விடாதா என்று ஏங்குவோம். சில சமயம் அசாரூதின் பவுண்டரிகளாக அடித்து கொண்டிருக்கையில் இவர்கள் அசாம் தேயிலை தோட்டத்தில் இலைகளில் பூச்சி மருந்து எப்படி அடிப்பது என்று விளக்கிக் கொண்டிருப்பார்கள். போட்டியின் இறுதிக் கட்டம் நெருங்கும் போது "ந் ந்ர்" என்று நரோத்தம் பூரி வந்து விடுவார். இவர், பஞ்சாபில் நடந்த கிராமிய விளையாட்டுகளில் வழுக்கு மரம் ஏறுவது, தேசிய பில்லியட்ஸ் போட்டிகள் (இப்படியொரு விளையாட்டி இருக்கிறது என்பதே பாதி இந்தியர்களுக்கு இந்த நிகழ்ச்சி மூலமே அன்று தெரிய வந்திருக்கும்) என்றெல்லாம் சுற்றி முடித்து, நடந்து கொண்டிருக்கும் கிரிகெட் போட்டிக்கு கனெக்க்ஷன் கொடுப்பார். இருப்பினும், மதியம் துவங்கி, எந்த நேரத்தில் போட்டியை காட்டுவார்களோ என்ற தவிப்பில், மேற்கூறிய அனைத்தையும் பார்த்துத் தவித்தோம். ஒரு வேளை, இந்தியர்களிடம் சகிப்புத்தன்மை என்பதே இதிலிருந்துதான் ஏகத்துக்கும் வளர்ந்து விட்டதோ என்று கூட சந்தேகம் வரலாம்.

1980களின் நடுவே ஒரு முறை மதுரைக்கு இந்திய அணி வந்திருந்தது. அவர்கள் இரண்டு பிரிவாக பிரிந்து ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் "சும்மா" போட்டி ஒன்றில் விளையாடினார்கள். சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஊரே திருவிழா கோலம் பூண்டது போல கூட்டம் கூட்டமாக மைதானம் நோக்கி படையெடுத்தது. கம்பு கட்டைகளால் அமைக்கப்பட்ட இருக்கைகள், வேலிகளை கடந்து, கபில் தேவின் கைகளை தொட்டுப் பார்த்த‌ அந்த நொடியின் மகிழ்ச்சி இன்றும் மனதில் பதிந்திருக்கிறது.

இன்று காரிலிருந்து இறங்கி, தொலைக்காட்சி கேமிராக்கள் தொடர‌ திமிருடன் நடந்து போகும் கோட்டு போட்ட கோமாளிகள் எவராலும் கிரிகெட் வளரவில்லை. அந்த விளையாட்டின் எளிமையில் இருக்கிறது அதன் உயிர். நமக்கு உற்சாகம் அளித்த இந்த விளையாட்டிற்கு நாம் ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்தால் ஒன்றே ஒன்று போதும் IPL போன்ற கூத்துக்களை புறக்கணித்து, மைதானங்கள் இரண்டு வருடங்கள் காற்றாடினால் போதும். "ஆட்டம்" மட்டும் நிலைத்து நிற்கும். மற்ற "ஆட்டங்கள்" சிறிது சிறிதாய் அடங்கி விடும்.

Sunday, May 5, 2013

நாம் எப்பவுமே இப்படித்தானா?


"ஜம்பக்கு ஜம்பக்கு" என்று நாம் கூத்தடித்துக் கொண்டிருக்கையில், ஒரு பக்கம் பார்த்தால் பாகிஸ்தான் நம் ஆட்களை அவ்வப்பொழுது பார்சல் கட்டி அனுப்பிக் கொண்டே இருக்கிறது. மற்றொரு பக்கம் சீனா பனிமலையில் என்ன, பக்கத்து தெருவில் கூடாரம் போட்டாலும் கூட, அடை மழையில் அசையாது நிற்கும் எருமை மாடு போல செயலற்று இருக்க உறுதி பூண்டிருக்கிறோம் நாம். நாளொரு ஊழல் நாற்றமெடுக்கும் நாட்டில், ஒரு புதுவித மோசடியும் அதைவிட புதுவிதமான சமாளிப்பும் நடந்திருப்பதை நாம் அறிந்தால் நமக்கு கூடுதல் பொழுதுபோக்கு தானே?

சமீப காலமாக நாளிதழ்களில் அரைப் பக்க விளம்பரம் ஒன்றை நாம் அடிக்கடி பார்த்திருக்கலாம். பல்வேறு தொழில்களில் இறங்கியிருக்கும் ஒரு பெரிய "பரிவாரம்" தரும் விளம்பரம் அது. பாரத மாதாவை தொழுவது மட்டுமே தங்கள் நிறுவனத்தின் கொள்கை என்ற ரேஞ்சில் இருக்கும் இந்த விளம்பரங்கள். அதுவும் கடந்த சில தினங்களாக அந்த குழும நிறுவனம் கொடுக்கும் விளம்பரம் நகைச்சுவையின் எல்லை! வேறொன்றுமில்லை சார்...மே ஆறாம் தேதி ஒரு நாள் நாம் அனைவரும் "ஜனகனமன" பாட வேண்டுமாம். பண்பாட்டுக்கும் தனி மனித மற்றும் சமூக ஒழுக்கத்திற்கும் நாம் தான் எப்போதோ ஜனகனமன "பாடி" விட்டோமே என்கிறீர்களா? சரிதான் சார். ஆனால் இந்த விளம்பரம் மூலம் இவர்கள் கேட்பது, நாம் வீட்டிலோ, தெருமுனையிலோ கூட்டம் கூட்டமாக கூடி தேசிய கீதம் பாட வேண்டுமாம். என்னே ஒரு தேசப்பற்று என்று நமக்கு உடம்பெல்லாம் புல்லரிக்குமே? நாம் கூட்டமாக தேசிய கீதம் பாடி அதை வீடியோ எடுத்து சமூக வலைதள ஊடகங்களில் upload செய்ய வேண்டுமாம். கின்னஸ் சாதனையாம். இதில், மோசடி பரிவாரத்தின் ஒரு லட்சம் ஊழியர்கள் வேறு லக்னோ நகரில் தேசிய கீதம் பாடுவார்களாம்! இதைப் படித்தவுடன் "கூட்டத்தில் கூடி நின்று கூவி பிதற்றலன்றி நாட்டத்தில் கொள்ளாரடி" வரி வேறு ஞாபகம் வந்து தொலைக்கிறது சார்.  சரி விடுங்கள். இப்பொழுது, எதற்கு இவர்கள் திடீரென்று இப்படி பாரதத் தாயின் பாதத்தை பற்றியிருப்பதாக கூவிக் கூவி விளம்பரம் கொடுக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? வாருங்கள்...

இந்த நிறுவனம் தங்கள் "சேவை"யை விரிவுபடுத்த மக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் நிதி திரட்டியது. அதாவது, கடனாகக் கொடுத்ததை மக்கள் பங்காக பெற்றுக் கொள்ளலாம் என்பது போலத் திட்டம். "செபி" அமைப்பிடம் அனுமதி பெறாமல், இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி இந்த வழியில் பணம் திரட்டியது நம் தேசபக்தி நிறுவனம். இவர்களை தட்டிக் கேட்க முடியாமல் தவித்த‌ செபி அமைப்பு வேறுவழியின்றி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குப் போட்டது. திரட்டிய முதலீட்டை மக்களிடம் திருப்பித் தர வேண்டும் என்று உத்தரவிட்ட உச்ச நீதி மன்றத்திற்கும் செபிக்கும் ஒரே கல்லில் இரண்டு அடி போட திட்டம் போட்டது பாலைவனத்தை தன் பெயரில் வைத்திருக்கும் நிறுவனம்.

தாங்கள் அந்த பணம் முழுவதையும் செபியிடம் கொடுத்து விடுவதாகவும், அவர்களே அதை மக்களிடம் திருப்பித் தரட்டும் என்றும் நீதிமன்றத்தில் சொல்லி, அதற்கான முதல் தவணையை செபியிடம் கொடுத்தது. தனது முதலீட்டார்கள் பலருக்கு வங்கிக் கணக்கு கூட இல்லையென்றும், அவர்களுக்கு தபால் மூலம்தான் பணம் வழங்க முடியுமென்றும் புருடா விட்டது. முதல் கட்டமாக ரிஜிஸ்டர் தபாலில் செபி அனுப்பிய அனைத்து முகவரிகளும் தவறு என்று திரும்பி வந்து விட்டன. பொறுப்பை ஏற்றுக் கொண்ட செபி தலையை பிய்த்துக் கொண்டு நிற்கிறது.

ஊழல் செய்ததோடு நில்லாமல், முக்கிய‌ அமைப்பான செபியையே மாட்டி விட்டு மகிழ்ச்சியில் திளைக்கிறது இந்த "பாலைவன பரிவாரம்". இப்படிப்பட்டவர்கள்தான் நம்மை தேசிய கீதம் பாடுமாறு அழைக்கிறார்கள். தனது பொய்புரட்டும் வெளியில் வந்து விட்டதால், அதை மக்களின் மனதிலிருந்து மறக்கடிக்கச் செய்யத்தான் இந்த தேசபக்தி புல்லரிப்புகள்!


சரி சார். நேரமாகிறது...பூனே அணி விளையாடும் ஆட்டம் பார்க்க வேண்டும். நம் தேசபக்தி வழியும் மோசடி நிறுவனம் தானே பூனே அணிக்கு சொந்தக் காரர்கள். இதன் குழுமத்தலைவர் எவரேனும் குளிர்கண்ணாடி அணிந்தபடி சிக்ஸர்கள் பறப்பதை பார்த்து குதூகலிப்பதை தொலைக்காட்சியில் zoom செய்து காட்டுவார்கள். அதை நாம் பார்த்து மகிழ வேண்டாமா? ஊழலாவது புடலங்காயாவது? நாடு எக்கேடு கெட்டால் என்ன சார்? நமக்குத் தேவை "ஜம்பக்கு ஜம்பக்கு" கூத்து.

மறுமுறை ஒரு முறை சொல்லிப் பார்ப்போம் சார். நமக்காகவே,  நம் அனைவருக்காகவே எழுதியது போல இருக்கிறதே சார்..."கூட்டத்தில் கூடி நின்று கூவிப் பிதற்றலன்றி நாட்டத்தில் கொள்ளாரடி..." அதாவது, நம்மூர் நகைச்சுவையாளர் தொனியில் சொன்னால், "நாம எப்பவுமே இப்படித்தானா அல்லது இப்படித்தான் எப்பவுமேவா?"

Sunday, April 21, 2013

கவலைகள் போக்க எளிய வழி!


பங்களாவில் வசித்தாலும் சரி பிளாட்பாரத்தில் வசித்தாலும் சரி, வாழ்க்கையில் மேடுபள்ளங்களும், அதனால் ஆளாளுக்கு ஒரு வண்டி கவலைகளும் நம் அனைவருக்குமே இருக்கிறது...ஆனால் நுனி விரல் நோகாமல் நொங்கு தின்பதுதான் நமக்குப் பிடிக்கும். தத்துவ விசாரங்கள், பிறப்பை உய்வதற்கான‌ வழிகள் என்றெல்லாம் பேசினால் கலிகாலத்தில் எடுபடுமா சார்? கருத்தான வாழ்க்கை என்பதையெல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு அனைத்தையும் காமெடியாக்கி திரிந்தால்தானே சார் நாமும் கலிகாலத்தில் வாழ்ந்தோம் என்ற பெருமை கிட்டும்...எனவே அந்த வழியிலேயே சென்று கவலை நீக்க வழி கிடைத்தால் கொண்டாட்டம்தானே நமக்கு?

காலையின் பரபரப்புக்குத் தயாராகும் பொழுதும், களைத்துப் போய் இரவில் வீடு திரும்பிய பிறகும், சிறிது நேரம் டிவிக்கு கண்ணைக் கொடுக்கையில் தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. நம் தொலைக்காட்சி சேனல்கள் எத்தனை போற்றத்தகு மக்கள் சேவை ஆற்றுகிறது என்ற ஞானமும் எனக்குக் கிட்டியது.  காமெடி நிகழ்ச்சிகள் பல சேனல்களின் வந்தாலும், மக்களின் கவலை தீர்க்கும் அருமருந்தாக, "காமெடி நிகழ்ச்சி" என்ற அறிவிப்பில்லாமல், பல சேனல்களில் ஒரு நிகழ்ச்சி வருகிறது சார்..."கண்டிப்பாக இந்த நிகழ்ச்சி நகைச்சுவை நிகழ்ச்சி அல்ல" என்று ஒரு கார்டு போட்டால் நன்றாக இருக்கும்!

நமக்கான "கனவு வீடு" எப்படி வாங்குவது என்று பல்வேறு நில பிரமோட்டர்கள் தங்கள் சரக்கை கடை விரிக்கும் விளம்பரங்கள் தான் அந்த நிகழ்ச்சி.

முதலில் அதிரடி பிண்ணனி இசையுடன் (ஏதாவது பாடலில் இருந்து கடன் வாங்கிய இசைதான்) ஒரு பொட்டல் காடு லாங் ஷாட்டில் காட்டப்படும். அதுவே நம் கனவு வீட்டிற்கான "site". இந்தப் பொட்டலைச் சுற்றி மயிலாடும் மாந்தோப்பும் புறா பறக்கும் பூந்தோப்பும் இருப்பது போன்ற ஒரு பில்டப் அந்தக் காட்சியில் இருக்கும்!

பரபரப்பான அறிமுகக் காட்சி முடிந்தவுடன், பஸ்கள் பறக்கும் நெடுஞ்சாலையில் நின்று கொண்டு தமிழ் கூறும் நல்லுலகிற்கு வணக்கம் தெரிவிப்பார் பல சீரியல்களில் அழுது முடித்து, இந்த நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் நடிக்க சம்மதித்திருக்கும் தொலைக்காட்சி நடிகை ஒருவர். சில வருடங்களுக்கு முன் தாம்பரத்தில் ஆரம்பித்த இவரின் வணக்கம் இப்போது வந்தவாசி தாண்டி வந்திருக்கிறது.

இந்நிலையில், நாம், நமக்கான சிரிப்பு மருந்து தயாராகி விட்டது என்று உணர்ந்து அதை சுவைக்கத் தயாராக இருக்க வேண்டும்.எந்த "கனவு வீடு" நிகழ்ச்சி எந்த வகை காமெடியில் நம் கவலை போக்கும் என்று நமக்குத் தெரியாது. அவை அதிர்ச்சி ரகமாகவும் இருக்கும்.

உதாரணமாக, ஒரு நிகழ்ச்சியில், காக்கை அமர்ந்து போவதற்குக் கூட மரக்கொப்பற்ற வெட்டவெளியில் நின்றிருந்த நடிகர் ஒருவர், தொலைவில் இருந்த ஒரு குளிர்பான ஆலையை காட்டி, "பன்னாட்டு ஆலை பாருங்கள்...உங்கள் மனையின் பக்கத்தில்...!" என்று கூவிக் கொண்டிருந்தார். நமக்கோ, "நாங்க ஏன்டா நடுராத்திரி சுடுகாட்டுக்கு போகப்போறோம்" என்ற வடிவேலுவின் காமெடி நினைவிற்கு வரும். இவர்கள் எதை விளக்க வருகிறார்கள்? ஒரு வேளை தண்ணீர் தாகம் எடுத்தால், "whole sale" விலையில் குளிர்பானம் வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளலாம் என்றா? ஓ...பன்னாட்டு ஆலை இருப்பதானால் அந்த ஏரியா டெவலப் ஆகுதாம் சார் டெவலப்!

ஞாயிற்றுக் கிழமை என்றால் சிறப்புக் (சிரிப்பு?) குலுக்கல்கள் உண்டு. இதில் கலந்து கொள்வோர்களுக்கு பிரியாணி முதற்கொண்டு பலமான "கவனிப்பு"! அதையும் விடாமல் நிகழ்ச்சியில் காட்டுகிறார்கள். சிலசமயம் நன்றாக "கவனிக்கப்பட்டவர்கள்" பேட்டி வேறு கொடுப்பார்கள். மனையின் அருமை பெருமை...இந்த வாய்ப்பை விட்டால் வாழ்க்கையே முடிந்தது என்ற ரேஞ்சில் இவர்களுக்கு சொல்லித் தரப்பட்டிருக்கும் டயலாக்குகளை சிலர் மறந்து போய் உளறிக் கொட்டுவார்கள். இப்படித்தான், சமீபத்தில் ஒருவரிடம் நிகழ்ச்சி நடத்துனர், "எங்களிடம் மனை வாங்கிய‌ உங்க அனுபவத்தை சொல்லுங்க" என்று ஆவலுடன் கேட்க, "வெஜிடபிள் பிரியாணி ரொம்ப நல்லா இருக்கு" என்றார். அப்பொழுது சிரிக்க ஆரம்பிக்கும் நீங்கள் நாள் முழுதும் சிரிப்பீர்களா மாட்டீர்களா?

இவர்கள் இது போன்று நமக்கு அள்ளித் தரும் நகைச்சுவைகள் எத்தனை எத்தனை...வரும் வாரம் தொடர்வோம்...

Sunday, March 31, 2013

அடக்கடவுளே...உனக்குமா இந்த...?

முன்னரெல்லாம் மொட்டை அடித்துள்ள எவரையேனும் பார்த்தால் "திருப்பதியா?" என்று கேட்போம். இனிமேல், நீளமாக "punk style " முடி வைத்திருப்பர்களைப் பார்த்தால் "திருப்பதியா?" என்று கேட்க வேண்டும் என்ற நிலைமை வந்து விட்டது சார்...

அதான்...ஏப்ரல் மாதம் முதல் 31 அங்குலத்திற்கு மேல் முடி காணிக்கை கொடுப்பவர்களுக்கு இலவச லட்டு என்றுஅறிவித்திருக்கிறார்களே...புரட்சிகரமான திட்டங்களை அரசியல்வாதிகள் தான் அறிவிக்க வேண்டும் என்று யார் சொன்னது? வணிகத்தின் வாயில்களாகி விட்ட கோயில்கள் கூட நம் நாட்டில் "புரட்சி" செய்யலாம் சார்...

சரி, பக்தர்களை "பரவசப்படுத்தும்" பணியே தங்கள் கடமை என்று நினைத்திருந்தால், முடி காணிக்கை செய்வோருக்கு கூடுதல் நேர தரிசனம் என்று சொல்லியிருக்கலாம்..அதை விட்டு இதென்ன சார் காமெடி? ஒரு வேளை "மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது" என்பது இது தானோ?

ஏற்கெனவே முடி வணிகம் எப்படிப்பட்ட "பிஸினஸ்" என்பது நமக்குத் தெரியும், இந்தப் புதுப் புரட்சி மூலம், முடிக் காணிக்கை செலுத்தும் இடத்திற்கு அருகிலேயே "தைலம்" விற்கும் கடைகளுக்கு காண்ட்ராக்ட் விட்டு கூடுதல் "பிஸினஸ்" பார்க்க‌த் திட்டம் போட்டிருக்கிறார்களோ என்னவோ...

ஆனால் நாம் பேசாமல் லட்டு வாங்கி வந்து விடுவோமா என்ன? நம்மூர்காரர்களுக்கும் முடிவெட்டுபவர்களுக்கும் என்னவெல்லாம் "உரையாடல்" நிகழுமோ...உதாரணமாக:

(i)"அதென்னங்க 31 அங்குலம்? இருபது, முப்பது அப்படின்னு அளக்க வசதியா வைக்காம 31? ஒரு அங்குலம் கமிஷன் அடிச்சிருவீங்களா?" என்று எவரேனும் கேட்கலாம்...

(ii)"எனக்கு முடி உதிரும் problem இருக்கு. அதனால பூந்தியாவது கொடுங்க" என்று புதுத்திட்டத்தில் பாதிப்படைந்த ஒருவர் வேண்டுகோள் விடுக்கலாம்.

(iii)இப்போது காலம் போகும் வேகத்தில் இருபது வயது காரர்களுக்கே நரைத்து விடுகிறது. கோயில் நிர்வாகம், நரை முடிக்கு இலவச லட்டு உண்டா என்று தெளிவாக சொல்லாததால் குழப்பம் ஏற்படலாம்...முடியின் வண்ணம் குறித்து வாக்குவாதம் நடந்தால், சமாதானம் செய்யும் பொருட்டு "police பந்தோபஸ்து" போடப்படலாம்.

அவ்வளவு ஏன் சார்? இலவசங்களை கொடுத்தே நம்மை இளிச்சவாயர்களாக இருக்க வைக்க முயற்சி செய்யும் நாட்டில், லட்டு சும்மா கொடுப்பதோடு நிறுத்தினால் நன்றாக இருக்குமா? விலையில்லா மடிக்கணிணி, மிக்ஸி, போல வீடுதோறும் விலையில்லா தலைமுடித் தைலம் கொடுத்தால் நாம் வேண்டாம் என்று சொல்லி விடுவோமா? அத்துடன், திருப்பதிக்கு இலவச பேருந்து சர்வீஸ், மாதந்தோறும் "திருப்பதி உதவித் தொகை" என்று அமர்க்களப்படுத்தலாமே சார்...பொறுத்திருப்போம். நம் நாட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். 

நல்ல வேளை. மக்களின் எதிர்ப்பினால் இந்த "பக்திப் புரட்சி" கைவிடப்பட்டிருப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால், எதிர்த்தால் தான் எதுவுமே மூளைக்கு ஏறும் என்றால், "சுய புத்தி" என்ற சொல் இப்போது எந்த நிர்வாகத்திலும் புழக்கத்தில் இல்லையோ?

இது போன்ற கன்றாவிகளை பார்க்கச் சகிக்காமல் கடுப்பாகிப் போன‌ கடவுள்கள், மனிதர்கள் பார்க்க இயலாத மறைவான இடத்திற்கு மாற்றலாகிப் போய் பல மாமாங்கம் ஆகியிருக்குமோ?

Sunday, March 3, 2013

இதுவும் ஒரு வகை அசிங்கமே...


பரபரப்பை மட்டுமே மூலதனமாக வைத்து பிழைப்பை வெற்றிகரமாக ஓட்டுவது எப்படி என்று நம் டிவி சேனல்கள் கற்றுத் தேர்ந்து விட்டன. எதையும் விட்டுவைக்காமல் அதில் செயற்கை பரபரப்பைத் திணித்து அவர்கள் போடும் ஆட்டம் பல சமயங்களில் காமெடியாகவும் கவலை தருவதாகவும் இருப்பதை என்னவென்று சொல்வது...

சில நாட்கள் முன்னர் +2 தேர்வுகள் துவங்கின. ஆண்டாண்டு காலமாக ஆயிரக்கணக்கானோர் எழுதி வரும் தேர்வு தான். ஆனால் அதை வெறும் செய்தியாக சொன்னால் அதில் என்ன சார் சுவாரஸ்யம்? எனவே, அன்று நம் டிவி சேனல்கள், தங்கள் புத்திசாலித்தனத்தில் புகுந்து விளையாட கிடைத்த வாய்ப்பாக +2 தேர்வுகளை பயன்படுத்திக் கொண்டன.

ஒரு பள்ளியின் உள்ளே நம் "சிறப்பு நிருபர்" நின்றிருந்தார். தேர்வு பற்றிய ஆர்வத்துடனும் கவனத்துடனும் போகும் மாணவர்களை மடக்கிப் பிடித்தார் நிருபர். "முதல் நாள் தேர்வு எழுதப்போகும் அனுபவம் எப்படி இருக்கிறது?" என்று கேள்வியை வீச, அதை "செய்தி நிலையத்திற்கு" நேரலை செய்து கொண்டிருந்தார். நமக்கு புத்தி மிகவும் பிசகி விட்டதோ சார்? அது சரி, மாணவர்களை பற்றிய அக்கறை இருந்தால், இவற்றிற்கு பள்ளி உரிமையாளர் (வியாபரம் என்றால், கடை வைத்திருப்பவர்களை உரிமையாளர் என்று தானே அழைக்க முடியும்) சம்மதித்திருப்பாரா? இது போன்று கவனச்சிதறல் செய்வது கோமாளித்தனம் என்று டிவி சேனல் ஆட்களை வெளியில் தள்ளியிருக்க மாட்டார்? சரியா போச்சப்பா...எந்த காலத்தில் இருக்கிறாய் நீ? பள்ளி டிவியில் வந்தால் எத்தனை விளம்பரம்...அது தெரியாமல் மாணவர்களாவது கவனச் சிதறலாவது என்கிறீர்களா? நீங்கள் சொல்வது சரியே!

இந்த நிருபர் கேட்ட கேள்விகள் சிலவற்றை பார்க்கலாம் சார்..."தம்பி எத்தனை நாட்களாக படித்து வருகிறீர்கள்?" இதற்கு சிலர் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நிருபரையே பார்த்தபடி இருந்தார்கள்...
"ஏன்யா பள்ளி செல்வதே தினமும் படிப்பதற்கு தானே இது என்ன கேள்வி" என்று நினைத்திருப்பார்கள் போலும். இவ்வாறு சிலரிடம் கேட்டது, தேவையான பரபரப்பு கிட்டாததால், தன் புத்தியை கூராக்கிய நிருபர், "தீவிரமாக" என்ற வார்த்தையை அந்த கேள்வியில் சேர்த்தார். இருந்தாலும் அவர் எதிர்பார்த்த அளவு "emotion" அல்லது "sentiment" கிடைக்கவில்லை. தற்காலத் தலைமுறை நிதானமும் யதார்த்தமுமாக பதிலளித்தது. ஒருவர் வைத்திருந்த திருநீறு பார்த்து "தேர்வு அன்று கோயிலுக்கு போய் விட்டு வருவது பழக்கமா?"  என்றார். ஒரு மாணவியிடம் "டென்ஷனாக" இருக்கிறதா என்று கேட்டார். அவர் நார்மலாக இருக்க, நிருபருக்கு ஏமாற்றமாக போயிற்று. டென்ஷன் ஏற்றுவது தானே தனது வேலை என்று முடிந்த அளவுக்கு கேள்விகளை மாற்றி மாற்றி கேட்டும் அந்தப் பெண் அசராமல் இருக்க, அடுத்த பலிகடாவை தேடியது நிருபரின் பார்வை.

அடுத்த வருடம் இன்னும் பயிற்சியுடன் இத்தகைய நிருபர்கள் களமிறங்கி வெளுத்துக் கட்டுவார்கள் என்று எதிர்பார்ப்பதோடு நாம் நின்று விடமுடியுமா சார்? அவர்களுக்கு உபயோகமான சில டிப்ஸ் கொடுக்கலாம்...

பள்ளிக்குள் நின்றால் போதுமா? தேர்வு அறையிலேயே போய் உட்கார்ந்து விட வேண்டும். "இதுதான் கேள்வித்தாள். இதில் கேள்விகள் எல்லாம் அச்சடிக்கப்பட்டிருக்கும்" என்று நிருபர் ஒரு கேள்வித்தாளை காட்ட, காமெரா அதை zoom செய்யலாம்.அறையில் இருக்கும் பெஞ்சுகளை நிருபர் சுட்டிக் காட்டியபடி "இதில் அமர்ந்து தான் மாணவர்கள் தேர்வு எழுதுவது வழக்கம்" என்று அரிய கருத்து சொல்லி நமக்கு புரிய வைக்கலாம். சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி என்று முக்கிய நகரங்களில் நிருபர்களை நிற்க வைத்து, "அங்கு தேர்வு நிலவரம் எப்படி இருக்கிறது" என்று செய்தியாளர் கேட்க, "மதுரையில பார்த்தீங்கனா காலையிலிருந்தே மாணவ மாணவிகள் கூட்டமாக கூட்டமாக பள்ளிகள் நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்..." என்று போர் நிலவரம் போல buildup கொடுக்கலாம்...+2 என்பதை பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு என்றும் அழைப்பார்கள் என்று கூடுதல் தகவல் சொல்லி நம்மை புல்லரிக்க வைக்கலாம்...

பறக்கும் படையினர் எவரையேனும் காப்பியடிக்கும் போது பிடித்தால், முக்கிய செய்தியாக "flash news" போட்டுக் கலக்கலாம். அதைவிட, எவ்வாறு பிடிபட்டார் என்பதை "live relay" செய்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை...என்ன...ஒரே ஒரு கவலை..."தேர்வு வரலாற்றில் முதன் முறையாக‌ உங்கள் abcd தொலைக்காட்சியில்..." என்ற அறிவிப்போடு, தேர்வு தினத்திற்கு முன்னரே வினாத்தாளை சேனல்கள் leak செய்து விட்டால்...இன்னும் அது மட்டும்தானே சார் பாக்கி?