/ கலி காலம்

Wednesday, December 5, 2012

காலம் கெட்டுப் போச்சு சார்...! பகுதி 2


சென்ற பதிவில், திருப்பரங்குன்றம் கோயிலில் நுழைந்த உடனேயே, "காலம் கெட்டுப் போச்சு" என்பதற்கு கந்தன் காட்டிய "sample" பார்த்தோம். அப்படியே "யானை மகால்" பக்கம் சென்றேன். சுத்தமாக இருந்த அந்த விசாலமான அறையில் யானையின் போட்டோவிற்கு மாலை போட்டு வைத்திருந்தார்கள். அறை முழுதுவதும் யானை வாசம் இன்னும் வீசிக்கொண்டிருந்தது. இப்படித்தானே சார் நம் எல்லோருக்கும், கால யானை கடந்து போன பின்னும் மன அறையில் ஞாபக வாசனை வீசிக் கொண்டிருக்கிறது...

"புது யானை எப்போ வரும்" என்று அங்கிருந்தவரிடம் கேட்டேன். என் "யானை(க்) காதல்" தெரிந்திருக்க வாய்ப்பில்லாத அவர், "லூசா நீ" என்பது போல் என்னைப் பார்த்து விட்டு, நாகரீகம் கருதி "கொஞ்ச நாள் ஆகுங்க" என்றார். முப்பது வருடங்களுக்கு முன், என் அப்பாவின் பாதுகாப்பில், நான் வாரம் தோறும் வருடிக் கொடுத்த திருப்பரங்குன்றம் யானையின் கரும்புள்ளிகள் நிறைந்த ரோஸ் நிற தும்பிக்கை நிழல் படமாய் வீற்றிருக்க, அங்கிருந்து நகர்ந்து, உள்ளத்திற்கு உவகை தரும் பொய்கைக்கு போனேன்.

சரவணப் பொய்கையில் முன்னரெல்லாம் பொரி தூவிய சில நிமிடங்களில் அதற்கான அடையாளமே நீரில் இருக்காது. கால் வைத்த மறு நொடி, மீன்கள் கூட்டம் கூட்டமாக கடிக்கத் துவங்கும். இப்பொழுதோ, ஒரு மீன் கூட கண்ணிலும் காலிலும் படவில்லை. யாரோ எப்பொழுதோ போட்ட பொறி கூட நீரில் மிதக்கிறது...நம் பொய் வாழ்க்கை முறையை எள்ளல் செய்யும் விதமாக பொய்கையிலும் மீன்கள் பொய்த்து போனது போலும்...கோயில் குளத்து மீன்கள் நம்மை விட்டு விலக சில ஆண்டுகள் என்றால், நம் கோயில்களில் இருந்து கடவுள்கள் புறப்பட்டு போய் பல நூற்றாண்டுகள் ஆகியிருக்குமோ? logic சரிதானே சார்?

அங்கிருந்து சன்னதிக்கு வரும் வழியில் நந்த‌வனத்தில் ஒரு பெருங்குரங்கு பூச்செடிகளை சேதம் செய்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது. தமிழ் தெரிந்த குரங்கோ என்று எனக்கொரு சந்தேகம் ‍ அதாவது "உள்ளுறை உவமம்" வைத்து நம்மையும் நம் சமூகத்தையும் நக்கல் செய்கிறதோ அந்த குரங்கு என்று தோன்றியதில் வெட்கம் வந்ததால் வேகமாக நடையைக் கட்டினேன்...

கோயில் நிர்வாகம் பக்தர்களை குஷிப்படுத்த புதிர் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது சார்...அதிர்ச்சியடையாதீர்கள்! பத்திரிகைகளில் ஒரு சிக்கலின் ஒரு நுனியில் நுழைந்து மறு நுனியில் வெளியில் வரச் சொல்லி புதிர் வருமே...அது போல, ஏகத்துக்கும் அங்கிட்டும் இங்கிட்டுமாய் சாரம் கட்டி வழியை மறித்து, மறைத்து...பாவம் முதியவர்கள்... படிகள் நிறைந்த கோயிலில் இந்த "புதிர்கள்" வேறு அலைக்கழிக்க, பெருமூச்சுடன் பேரின்பம் தேடி நடந்தார்கள்.

மலையின் பாறைகள் தெரிவதனால், அவையே கூரையாக இருப்பதால், இந்த சன்னதி எனக்கு எப்பொழுதுமே பிடித்தமான ஒன்று. எத்தனை யுகமாக‌ அவை இங்கிருக்கிறதோ...எத்தனை தலைமுறைகளின் வேண்டுதல்களை அவை பார்த்துக் கொண்டிருக்கிறதோ...!

சட்டென்று என் கையில் ஒரு "அபிஷேக பாட்டில்" ஒன்றை கொடுத்தார் பட்டர். பிளாஸ்டிக் மூடி இன்னும் திறக்கப்படாததால், கடையில் இருந்து "direct"டாக‌ வந்தது என்று தெரிந்தது. கொடுத்ததோடு மட்டுமல்லாமல் "இருபது ரூபாய்" என்றார். அவரிடம் பாட்டிலை திருப்பிக் கொடுத்தேன். முருகனின் முகம் அசைவற்று இருந்தது. கலி காலத்தில் இப்படித்தான் நடக்கும் என்று முருகனுக்கு முன்னரே தெரிந்திருந்து தான் அசைவின்றி இருக்கிறார் என்று நாம் எதிர்பார்ப்பது நியாயம்தானே சார்?

Friday, November 16, 2012

இவர்களின் தீபாவளி ரகசியங்கள்...


என்ன சார்...ரகசியம் என்றவுடன் நமக்கு ஆர்வமாய் இருக்குமே...அதுவும் அடுத்தவர் பற்றிய ரகசியம் என்றால் வெறும் வாயில் போட்ட அவல் என்பதை விட வெல்லத்தில் போட்ட‌ அவல் போல நமக்கு இனிக்குமே...சரி, விஷயத்திற்கு வருவோம். பதிவை படித்த பின், நீங்கள் எதிபார்த்தது வேறு இங்கு இருப்பது வேறு என்றால் என்னை குற்றம் சொல்லாதீர்கள் என்று இப்போதே சொல்லி விடுகிறேன் சார்.

நாம் பார்க்கப் போகும் "இவர்கள்" யார்?

தீபாவளி அன்று காலை நம் அரசு பேருந்தை கடமையுடன் ஓட்டிக் கொண்டு போகும் ஓட்டுனர் மற்றும் அவரது குடும்பத்து தீபாவளி எப்படி இருக்கும்? பல வருடங்களுக்கு முன், சில தாமதங்கள் காரணமாக, முன்னரே ஊர் சேர்ந்திருக்க வேண்டிய நான், தீபாவளி காலையில் மதுரை நோக்கிய பேருந்தில் இருந்தேன். கைபேசி தன் கைவரிசையை சமூகத்தில் காட்டத் துவங்காத காலம் அது. சுமார் பதினோறு மணியளவில் வண்டியை ஒரு சிற்றூரின் துவக்கத்தில் இருந்த பெட்டிக்கடையை ஒட்டி நிறுத்தியவர், பயணிகளை நோக்கி சத்தமான குரலில், தான் நேற்றிரவே "trip" முடித்து வீடு செல்ல வேண்டியவர் என்றும், இன்னமும் "duty"யில் இருப்பதாகவும், வீட்டில் காத்துக் கொண்டிருப்பவர்களிடம் பேசிவிட்டு வருவதாகவும் சொல்லி இறங்கினார். பயணிகள் அனைவரும் அவரின் மேல் கரிசனம் கொண்டதோடு மட்டுமல்லாமல், பெரும்பாலோருக்கு தங்கள் வீடு மனதில் ஓட, அந்த "telephone booth" நீளமானது...அந்த ஓட்டுனர் தொலைபேசியில் தனது குழந்தையிடம், "கட்டாயம் இரவு வரும் பொழுது பட்டாசு வாங்கி வருகிறேன்" என்று  மன்றாடியதும், மதுரை வந்து சேர்ந்த பொழுது இரவாகிப் போனாலும், அப்பொழுதும் அக்கறையுடன் சில பயணிகள் பேருந்திலிருந்து இறங்கும் பொழுது ஓட்டுனரிடம், "மறக்காம பட்டாசு வாங்கிட்டு போங்க பிள்ளைங்க காத்துக் கிடக்க போகுதுங்க..." என்று சொல்லிப் போனதும்  ஒரு படி மேலே போய் ஒருவர் தான் கொண்டு போகும் மத்தாப்புகளில் ஒன்றை அவரிடம் கொடுத்ததும் இன்றும் நினைவில் நிற்கிறது.! இனி நம் சமூகத்தில் இக்காட்சி மீண்டும் நிகழ்வது அரிதினும் அரிது.

தீபாவளிக்கு முந்தைய நாட்களில் அனைத்து கடைத்தெருக்களிலும் அலைமோதும் கூட்டத்தின் நடுவே "எலி மருந்து" விற்பவர் ஒரு சிறு அட்டையில் சக்கரத்தை பொருத்தி தள்ளிக் கொண்டே போவதை பார்த்திருப்போம்.... அந்த விற்பனை பொருட்களின் மொத்த மதிப்பே இன்றைய வேகமான உலகின் சில "mobile recharge"களுக்குள் அடங்கி விடும். எலி மருந்து விற்று வரும் வருமானத்தில் ஊசலாடிக் கொண்டிருக்கும் இவரைச் சார்ந்தவர்களின் தீபாவளி எதிர்பார்ப்பு எத்தனை துயரமிக்கது? அதை சுமக்கும் இவரின் முகத்தை நாம் கூர்ந்து நோக்கியிருக்கிறோமா?

தீபாவளியை காரணம் காட்டி, பல வித உணவுகளை அதிகமாக புசித்து, அதன் காரணமாக மதியம் நீண்ட தூக்கம் போட்டு, மாலையில் மறுபடியும் கேளிக்கைகளுக்குத் தயாராகும் நம் கண்ணில், தெரு முழுதும் குவிந்து கிடக்கும் வெடிப் பேப்பர்களுக்கிடையில், வெடிக்காத வெடிகளை தேடிக் கொண்டிருக்கும் சிறுவனின் முகம் கவனத்தில் விழுந்திருக்கிறதா? அந்த சிறுவனிடம் தீபாவளியை பற்றிய எத்தகைய எண்ணம் ஓடிக் கொண்டிருக்கும்?

"இவர்கள்" பார்த்த பின் "இவரை" பார்ப்போம்...

சென்ற வாரம் பிரபல வார இதழின் தீபாவளி சிறப்பிதழில் வந்திருக்கிறது இவரின் பேட்டி. "தீபாவளி கொண்டாடுவதில்லை" என்ற தலைப்பைப் பார்த்து, "ஆஹா, ஒரு வேளை சமூக அவலங்களையும் மேற்கூறியன‌வற்றை போன்ற மனதில் வலி ஏற்படுத்தும் காட்சிகளையும் கண்டு கங்கையென பொங்கியெழுந்த மங்கை எடுத்த முடிவோ..." என்று ஆர்வத்துடன் பக்கத்தை திருப்பினால், அவரோ, "என் நாய்க்கு வெடிச்சத்தம் கண்டு பயம் எனவே நான் தீபாவளி கொண்டாடுவதில்லை" என்று போட்டிருக்கிறார் ஒரு போடு!

அடுத்த வருடம், இந்த பேட்டி வந்த இதழின் பக்கம், ஒரு லட்சுமி வெடியின் சிதறிய‌ பேப்பராக வீதியில் கிடக்கையில், வெடிக்காத வெடி தேடி வீதி வீதியாக  வரும் சிறுவன்  அந்த பேப்பரை வெறுப்புடன் வீசியெறியும் குப்பையிலிருந்து குப்பென்று அடிக்குமே ஒன்று...அதற்கு ஆன்றோரும் சான்றோருமாய் சேர்ந்து வைத்திருக்கும் பெயர் "சமூகம்".

பின் குறிப்பு: தற்காலத் திரையுலகத் தாரகைகள் மற்றும் தமிழகத்தை தாங்கிப் பிடிக்கும் புரட்சி நாயகர்கள் தங்கள் தீபாவளி ரகசியங்களை பகிர்ந்து கொள்ளும் பதிவோ என்றெண்ணி இங்கு வந்தவர்கள் என்னை மன்னித்து அருள்வார்களாக...


Friday, November 9, 2012

தீபாவளி விளம்பரங்கள்...உஷார்!

அனுஷ்கா ஆடியபடி வந்து தீபாவளி தள்ளுபடி விலையில் பூச்சிக் கொல்லி மருந்து வாங்குங்கள் என்று விளம்பரம் செய்து விவசாயிகளின் வாழ்வில் தீப ஒளி ஏற்ற முயல்வதை பார்த்திருக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். தீபாவளிக்கு வரும் விளம்பரங்களைப் பார்த்தால், எங்கேயாவது இது போன்ற விளம்பரமும் வந்து விடுமோ என்று பயந்து கொண்டிருந்தேன். நல்ல வேளை அப்படி ஏதும் நடைபெறவில்லை. விவசாயிகள் தப்பித்தார்கள்.

ஆனால் மற்ற வகை விளம்பரங்களில் நமக்கு இந்த அதிர்ஷ்டம் கிட்டவில்லை சார். இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு வரை, தீபாவளி தள்ளுபடி என்பது துணிக்கடையில் மட்டுமே இருந்தது. பின்னர் மெதுவாக Mixie, Grinder, TV, Fridge எனப் பரவத்துவங்கியது. இன்றோ, பொதுக் கழிப்பறையில் "சிறுநீர் கழிக்க 1 ரூபாய் தீபாவளி சிறப்பு தள்ளுபடி" என்று போடாதது ஒன்றுதான் பாக்கி.

அதிலும் இந்த "பம்பர் பரிசு" இருக்கிறதே சார் பம்பர் பரிசு...எனக்கொரு தீராத சந்தேகம். ஏன் சார் நமக்கோ, நமக்கு தெரிந்தவர்களுக்கோ அல்லது நமக்குத் தெரிந்தவர்களுக்குத் தெரிந்தவர்களுக்கோ பம்பர் பரிசு விழுவதே இல்லையே?

கவிவேந்தன் மட்டும் இன்று இருந்திருந்தால்,

பம்பர் பரிசு உண்டெனும்
வம்பர் வார்த்தை பொய்
அன்பர் நன்மைக்கு - இந்த‌
கம்பர் சொல்வது மெய்.

என்று பாடியிருப்பார்!

சில நாட்களுக்கு முன் ஒரு பிரபல நிறுவனத்தின் தீபாவளி பம்பர் பரிசு விளம்பரம் பார்த்தேன். ‍அதில், இந்த தீபாவளி சீசனில், இதுவரை பரிசு பெற்றவர்கள் போட்டோ வேறு! இதில் காமெடி என்னவென்றால், பொய்யை சரியாக செய்யத் தவறி விட்டார்கள். ஒரே போட்டோவை, பக்கத்தின் இரண்டு இடத்தில், வெவ்வேறு பொருளுக்கு பரிசு பெற்றவராக, வெவ்வேறு முகவரியுடன் போட்டு விட்டார்கள்...அனேகமாக அந்த விளம்பர மேலாளருக்கு சீட்டு கிழிந்திருக்கும் என்று நம்பலாம்.

தொலைக்காட்சியின் எந்த சேனல் பக்கம் திரும்பினாலும் அல்லது பத்திரிகைகளின் எந்தப் பக்கம் திருப்பினாலும், தீபாவளி விளம்பரங்கள் எப்படியிருக்கின்றன? அந்த பொருளுக்கு சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, ஒரு நவநாகரீக யுவதியோ அல்லது பண்பாட்டு திலகம் போன்ற பழந்தமிழ் நங்கையோ செயற்கை புன்னகை காட்டியபடி ஒரு அகல் விளக்கின் தீபம் கைகளில் ஏந்தி செயற்கை புன்னகை சிந்துகிறார்கள்.! அதாவது அவர்கள் விளம்பரப் படுத்தும் பொருள் மூலம் நம் வீட்டில் மகிழ்ச்சி தீபம் ஒளிருமாம்...

சும்மா சொல்லக் கூடாது சார்...நம் ஆட்கள் உண்மையிலேயே "ரூம் போட்டு" யோசிப்பவர்கள் தான். இந்த வகையில், எனக்கு ஒரு விளம்பரம் பிடித்திருந்தது ‍"தீபாவளிக்கு தலையில் எண்ணெய் வைக்காமல் குளிக்கின்ற‌ வருத்தமா?" என்று கேள்வி கேட்டு, "சிகிச்சைக்கு முன்" "சிகிச்சைக்கு பின்" என்று இரண்டு போட்டோக்கள். முன்னதில் வழுக்கையுடன் இருக்கும் ஒருவர் பின்னதில் பாகவதர் போல இருக்கிறார். அதன் கீழே "விரைந்து வாருங்கள்...சிறப்பு தள்ளுபடி..." என்று நீள்கிறது விளம்பரம்!

ஆனால் நான் கீழே எழுதியிருப்பது போல் ஒரு விளம்பரத்தை இந்த வருட தீபாவளிக்கு எதிர்பார்த்தேன்:

1. ஒரு இல்லத்தரசி கம்பி மத்தாப்பை நீட்டியபடி சமையல் செய்கிறார். நாம் வியப்புடன் பார்க்கையிலேயே, "இது abc கம்பி மத்தாப்பு. நீண்ட நேரம் எரியும். சமையலே செய்யலாம்னா பாருங்களேன்..." என்பது போன்ற விளம்பரம்.

அனேகமாக, வரும் வருடங்களில் இது போன்றதொரு விளம்பரம் வந்தாலும் வியப்பில்லை:

2. தீபாவளியன்று அனைவரும் வீட்டில் அவரவரது TV அல்லது mobile phone உற்று பார்த்துக் கொண்டிருக்கின்றனர் - cut - பயங்கரமான தொடர் பட்டாசு சத்தம் - cut -  பின்னே ஒரு குரல், "வெளியில் சென்று, வெடியை பத்த வைத்து...எதற்கு இத்தனை கஷ்டம்...எங்கள் smart phone / smart tv மூலம் வீட்டில் அமர்ந்தபடி பற்ற வைத்து,   உட்கார்ந்த இடத்திலிருந்தே வெடி வெடித்து, அதை அப்படியே கண்டு மகிழுங்கள்..." என்பது போன்ற விளம்பரம்.

கலி காலத்தில் கண்டதெல்லாம் கெட்டுக் கிடக்கையில் தீபாவளி மட்டும் அப்படியே பழைய மாதிரியாகவேவா இருக்கும்?

Friday, October 26, 2012

காலம் கெட்டுப் போச்சு சார்...! பகுதி 1


மனுசப் பயலுக பல தினுசு. அந்த ஒவ்வொரு தினுசுக்குள்ளே எத்தனை எத்தனை விதமான மனசு....அப்பப்போ பழைய நினைப்பை நிகழ்காலத்தில முக்கி எடுத்து மனசுக்குள்ள காயப் போடற பழக்கம் உள்ளவங்க ஒரு தினுசு. நான் அந்த வகை ஆசாமி. இந்தப் பதிவை படிக்கற உங்கள்ல நிறைய பேரும் அப்படித்தானே சார்? வீட்டுல இருக்கற பொருளையே அப்பப்போ தூசி தட்டி, சுத்தம் செய்யறோம்...எப்பேர்பட்ட காலம்...! அதுல எத்தனை எத்தனை பேரோட எத்தனை விதமான நினைப்பு ஒட்டிகிட்டுருக்கு...அதை எவ்வளவு பத்திரமா சுத்தப்படுத்தி வச்சுக்கனும் ? நான் சொல்றது சரிதானே?

இந்த திருப்பரங்குன்றம் யானை இறந்த செய்தி படிச்சு, ஒரு மாசமா மனசோட மூலையில ஒரு "நினைப்பு" நீந்திக்கிட்டே இருந்துச்சு சார். சமீபத்துல மதுரைக்கு போயிருந்த போது, இந்த "தூசி தட்டற" வேலைக்காக திருப்பரங்குன்றம் கோயிலுக்கு போயிருந்தேன். சின்ன வயசுல நூத்துக் கணக்கான  செவ்வாய் கிழமைகள் இந்தக் கோயிலுக்கு அப்பாவோட போனதுண்டு. முருகனை பார்க்க முந்தி அடிக்கற கூட்டத்துக்கு நடுவிலே, கோயிலுக்கு உள்ளே நுழைஞ்சு, கடைகளைத் தாண்டிப் போனவுடன், கண் தானாகவே வலது பக்கம் போகும் சார். அங்கே தான் தலையை ஆட்டியபடி நம்ம ஆள் நிக்கும். யானைக்கு அபார நினைவாற்றல் என்ற நம்பிக்கை எப்போதுமே எனக்கு உண்டு. அது தலையாட்டும் அழகைப் பார்த்தால், நம்மை ஞாபகம் வைத்துக் கொண்டு வரவேற்கிறதோ என்பது போல இருக்கும். அந்த யானை இருந்த இடத்தையும், காலடி நீளத்துக்கு நம்ம கால் விரலை கடிச்சு விளையாடும் மீன்கள் கூட்டம் கூட்டமாத் திரியும் சரவணப் பொய்கையையும் பார்க்கப் போயிருந்தேன்.

கோயில் படிகளேறி உள்ளே போனதும், இடது பக்கம் ஒரே சத்தம். நமக்குத்தான் ஏதாவது சண்டை பார்த்தா என்னன்னு கவனிக்காம‌ தாண்டிப் போனா மண்டை வெடிச்சுடுமே...சரின்னு காதைக் கொஞ்சம் தீட்டிக்கிட்டேன். விஷயம் இதுதான் சார் ‍ வெளியூர் வாசிகள் இரண்டு பேரு வெள்ளந்தி மனசோட, கோயில் அப்படின்னா அங்க நல்லவங்கதான் இருப்பாங்கன்னு வந்திருக்காங்க பாவம். காளி சிலை முன்னாடி பவ்யமா ஒருத்தர் "வெண்ணெய் சாத்துங்க" அப்படின்னு அரை நெல்லிக்காய் size வெண்ணெய் உருண்டை இரண்டு கொடுத்திருக்கார். அவங்களும், "ஆஹா...இப்படி ஒரு புண்ணிய சேவையா" அப்படின்னு அகமகிழ்ந்து போய் ஆளுக்கு ரெண்டா வாங்கி காளி மேல வீசியிருக்காங்க.

அவங்க புன்னகையை புஸ்வானம் ஆக்கற மாதிரி, 20 ரூபாய் கொடுங்க என்று வெண்ணெய் காரர் கேட்டிருக்கிறார். "நடந்து போனவனங்கள கூப்பிட்டு கொடுத்துட்டு காசு கேக்கறீங்க..." என்று அவர்கள் கேட்க, "போற வரவங்களுக்கு வெண்ணெய் சும்மா கொடுக்க நான் கேனயனா?" என்று நம்மூர்காரர் எகிற, வேலனை பார்க்க வந்த கூட்டம் வந்த வேலையை மறந்து விட்டு  குஷியாகி, வேடிக்கை பார்த்தது. கூட்டம் என்று இருந்தால் உபதேசம் செய்ய அங்கு ஒருவர் இருப்பாரே! அதுதானே நம்மூர் வழக்கம். இங்கும் ஒருவர் தோன்றினார்.

"ஏன்யா, ஒரு போர்டு கீர்டு இல்ல. சும்மா ஒரு basin வெண்ணெய் உருண்டை வெச்சுகிட்டு, போறவங்களை கூப்பிட்டு கொடுத்தா அவங்களுக்கு எப்படிய்யா தெரியும் நீ வெண்ணெய் விற்பனை செய்யறன்னு" என்று ஆரம்பித்தார். ஆளாளுக்கு ஒருவர் மற்றவரை வார்த்தை சாக்கடையில் புரட்டி எடுத்தனர். அதனால் வீசிய "நாற்றத்தை" ரசிக்கவும் கூட்டம் தவறவில்லை. எல்லாவற்றையும் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்த காளியைப் பார்த்தேன். முப்பது ஆண்டுகள் முன்னால் என் அப்பா தன் தோள் மேல ஏத்தி, நான் வீசின வெண்ணெய் உருண்டையோட பிசுபிசுப்பு இன்னும் இந்த காளி சிலையோட ஏதோ ஒரு துளியில் ஒட்டியிருக்கும்னு தோணிச்சு - அந்த ஞாபகம் எனக்குள்ள ஒட்டியிருக்கற மாதிரி! காலம் தானே சார் கடவுள்...

என்னப்பா நீ? காலம் தான் சாமி அப்படின்னு சொல்லிட்டு "காலம் கெட்டுப் போச்சு" தலைப்பு வச்சுருக்க என்று உங்களுக்கு கேள்வி தோணுமே? அதான் சார், நாம கதவு மேல மோதிட்டு "கதவு இடிச்சுருச்சு" அப்படின்னு சொல்லுவோமே..அது மாதிரி "காலம் கெட்டு போச்சு" சார்!

சரவணப் பொய்கை கதை என்னாச்சுன்னு அடுத்த வாரம் பார்ப்போம்.

Thursday, October 18, 2012

காவிரி ‍ - ஏமாளிகளும் கோமாளிகளும்

நேரம் வந்தாச்சு. வருடம் தவறாமல் நடக்கும் காவிரி தமாஷ் இந்த வருடமும் அதே பொலிவுடன் நடைபெற ஏராளமானோர் காமெடி செய்யும் நேரம் வந்தாச்சு. ஏதோ நாம் எல்லாவற்றையும் பக்காவாக செய்வது போல, பக்கத்து மாநிலத்தை மட்டும் குற்றம் சொல்வதை தள்ளி வைத்து விட்டு நம் லட்சணத்தையும் கொஞ்சம் பார்க்கலாம் சார்...

முப்போகம் என்பதெல்லாம் முன்னோர் கதை என்றாகி, இப்போது இயற்கை இருக்கும் நிலையில், தமிழ் நாட்டில் எவரேனும், தொலைநோக்கில் ஒரு துரும்பையாவது கடந்த முப்பது நாற்பது வருடங்களில் கிள்ளிப் போட்டிருக்கிறார்களா? காமராஜருக்குப் பிறகு நம்மூரில் ஒரு அணை கூட‌ கட்டப்படவில்லை சார். அணைகளை விடுங்கள். தடுப்பணை (check dams) கட்டுவதற்குள்ளேயே நமக்கு தட்டுத் தடுமாறி தலைசுற்றுகிறது.

நல்ல வேளை, இவர்கள் சாலை மற்றும் பாலம் கட்டும் லட்சணம் பார்த்த பின்பு அணை கட்டக் கிளம்பாமல் பேசாமல் இருக்கிறார்களே என்று நிம்மதி அடைய வேண்டியதுதான். சாலை பல்லைக் காட்டினால், மக்கள், தங்கள் தலைவிதி என்று மேடுபள்ளங்களை ஏற்றுக் கொள்ளப் பழகி விட்டார்கள். அணை பல்லைக் காட்டினால் பல ஊர்கள் காணாமல் விடுமே சார்! அது நேராமல் நம்மை காப்பாற்றும் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் அநேக வந்தனங்கள்!

ஆழியாரிலிருந்து பரம்பிக்குளம் செல்லும் வழியில் top slip வனச்சரக அலுவலகத்தில் பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்தின் மாதிரி வைத்திருக்கிறார்கள். அதீத வசதிகள் ஏதுமற்ற காலத்தில்  மலையை குடைந்து (tunnel) ராட்சஸ குழாய் இறக்கியிருக்கிறார்கள். அதை பராமரிப்பதற்குக் கூட இன்று நாம் திணறிக் கொண்டிருக்கிறோம். நம்மூர் தெருவில் சாக்கடைக் குழாய் உடைந்தாலே சரி செய்ய பல நாட்கள் ஆகிறது! என்ன செய்வது சொல்லுங்கள்?

காமராஜரை பற்றி படித்தவையும் கேட்டவையும் நினைவுக்கு வருகிறது சார். அவர் ஆட்சி காலத்தில் எத்தனை புதிய அணைகள் மூலம் எத்தனை அற்புதமான நீர் பாசன திட்டங்களை அறிமுகம் செய்தார் என்று நாம் அறிந்து கொண்டால், கடந்த நாற்பது வருடங்களில் இவர்கள் அனைவரும் எத்தனை காமெடி செய்து (அவர் பெயரைச் சொல்லியே பிழைப்பை ஓட்டும் கட்சியையும் சேர்த்து) தமிழ்நாட்டை எப்படி சீரழித்திருக்கிறார்கள் என்பது புரியும்.

ஆழியார் மட்டுமல்ல, வைகை, மணிமுத்தாறு, சாத்தனூர் என்று எத்தனை அணைகள் காமராஜரால் கட்டப்பட்டன! இதில் மற்றுமொரு நம்ப முடியாத ஆச்சரியம், தன்னை எதிர்த்த பக்தவக்சலத்தையே விவசாய மந்திரியாக ஆக்கி இத்திட்டங்களை செயல்படுத்தியது!

இப்படியிருந்த நாம், எப்படி சார் இப்படி கெட்டுப் போனோம்? காரணம் இருக்கிறது - ‍‍ நாம் நன்றி கெட்ட ஜென்மங்கள். மேற்கூறிய நீர்வளத் திட்டங்கள் மட்டுமல்லாது மற்ற துறைகளிலும் மக்களின் தேவைகளுக்காகவே உழைத்த காமராஜரை, அவரின் சொந்த ஊரில், அரசியல் அரிச்சுவடி கூடத் தெரியாத ஒருவரை வைத்து தோற்கடித்த அற்பர்கள் அல்லவா நாம்! "தெய்வம் நின்று கொல்லும்" என்பார்கள். தெய்வம் இருக்கிறதா இல்லையா என்பது நமக்கு இங்கு தேவை இல்லை. ஆனால், நம் கண் முன்னே, அனைத்தையும் காலம் பார்த்துக் கொண்டிருக்கிறது. காலம் நின்று கொல்லும். எனவே தான், காவிரிக்கு கர்நாடகத்திடமும், கிருஷ்ணாவிற்கு ஆந்திராவிடமும், பெரியாருக்கு கேரளாவிடமும் பழியைப் போட்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் கட்சிகளை வேடிக்கை பார்க்க வைத்து, என்ன செய்வதென்று தெரியாமல் நம்மை தவிக்க வைத்து, நம் மூலமே தமிழ் நாட்டை  தண்ணீருக்காக ஏங்க‌ வைத்திருக்கிறது காலம்!

பரவாயில்லை விடுங்கள் சார். "கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை" என்றொரு நல்ல பழைய பாட்டு இருக்கிறது. இன்புற கேட்போம் வாருங்கள்!



Tuesday, October 2, 2012

குத்தானந்தாவின் குத்துப் பாட்டு பகுதி 2

அடுத்த விடுமுறை எப்போது? எந்த ஊர் சுற்றிப் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் காலண்டர் தேதிகளை பார்த்துக் கொண்டிருக்கையில் பின்னாலிருந்து குரல் கொடுத்தபடி வந்தார் குத்தானந்தா. "என்ன சிஷ்யா...காந்தி ஜெயந்தி அன்று காலண்டரை பார்த்தபடி நின்று கொண்டிருக்கிறாய்?" என்றார். "அடுத்த லீவ் எப்போது என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்றேன். "நல்ல வேளை. நான் கூட, வருடா வருடம் நடக்கும் காவிரி கூத்தை இப்போது காலண்டரிலும் "காவிரி பந்த். அரசு விடுமுறை" என்று போட்டு விட்டார்களோ என்று நினைத்து விட்டேன்." என்றார் கண் சிமிட்டியபடி.

"சாமி, இந்த காவிரி சிக்கல் தீரவே தீராதா?" என்றேன். "நல்ல கேள்வி தம்பி. நம்ம "புரட்சி" "எழுச்சி" பட்டமுள்ள அல்லது பட்டமற்ற நாயகர்கள் மற்றும் கலைச்சேவை செய்யும் தவப்புதல்விகள் அனைவரும் நெய்வேலிக்கு போய் கூலிங்கிளாஸ் அணிந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தால் சிக்கல் தீர்ந்துவிடுமே" என்றார். "சிக்கல் பற்றி பேசினால் நக்கல் அடிக்கிறீர்கள் மக்கள் தவறாக நினைக்க மாட்டார்களா?" என்றேன். "அடப்போப்பா, நம்ம எல்லாரும் காவிரி பத்தி உண்மையாகவே கவலைப்பட்டிருந்தா, இந்நேரத்துக்கு என்ன செஞ்சிருப்போம் தெரியுமா?" என்றவர் தொடர்ந்தார்..."நாம தினமும் முப்பது, நாப்பது ரூபாய் கொடுத்து தண்ணீர் can வாங்கறோமே... ஆளாளுக்கு காவிரி பேரைச் சொல்லி அடிக்கிற லூட்டியை வேடிக்கை பார்க்காம, ஒரே ஒரு மாசம் அந்த தண்ணீர் can வாங்க‌ செய்யற‌ செலவை ஒவ்வொரு வீடும் கொடுத்தா, மக்களே நதி நீர் இணைப்பு செய்யலாமே....ஆனா, நம்ம வீட்டுக் குழாய்ல தண்ணி நின்னு போனாத்தானே நமக்கு ரோஷம் வரும். அப்பக்கூட பக்கத்து வீட்டிலும் "தண்ணி வருதா" என்று கேட்டு விட்டு ஆறுதல் அடையறது தானே நமக்கு பழக்கம்" என்றார்.

"ரொம்ப சூடா இருக்கீங்க போல...இந்த வார குத்து சொல்லுங்க" என்றேன்.

"விவசாயத்தை மதிக்காத வெக்கங்கெட்ட நாடு
வாய்கிழிய பேசியே பிடிச்சது பார் கேடு
தண்ணியே பார்க்காம வறண்டு போச்சு காடு
வறுமையின் வயித்திலே ஈரத்துண்டு போடு"

என்று குத்தானந்தா குதித்தார்.

"சாமி, எனக்கு எதுவும் சொல்லத் தெரியலை. ஆனா என்னமோ வருத்தமா இருக்கு. சரி விடுங்க...போன வாரம் ஏதோ நான் செய்யனும்னு சொன்னீங்களே...அதச்சொல்லுங்க" என்றேன். "டேய்,அடுத்த வாரத்திலே இருந்து ஒரு நல்ல தமிழ் இலக்கியத்திலே இருந்து நீ ஏதாவது கொண்டு வந்து விளக்கம் சொல்" என்றார். "சாமி, நல்லாருக்கு. ஆனா இலக்கியம் அப்படினா என்ன?" என்றேன். என்னை மேலும் கீழுமாக பார்த்த குத்தானந்தா,

"படிச்சா பத்திக்கணும்
மனசோட ஒட்டிக்கணும்
மண்டையில‌ ஏத்திக்கணும்
ஆயுசுக்கும் யோசிக்கணும்"

இப்படி இருக்கற எழுத்து தான் இலக்கியம் என்றார். "கிளப்பிட்டீங்க சாமி. இப்படிப்பட்ட சரக்கு தமிழ் முழுக்கக் கொட்டிக் கிடக்கு. நமக்குத் தான் தெரியல" என்றேன். "ஆனா சாமி..." என்று இழுத்த நான், "why this kolaveri பாட்டுக் கூட நிறைய பேருக்கு நீங்க மேல சொன்ன மாதிரியே இருக்குன்னு சொல்றாங்களே...அதுவும் இலக்கியமா?" என்றேன். "கலிகாலம் தம்பி கலிகாலம்"  என்று தலையில் இரண்டு கைகளாலும் அடித்துக் கொண்ட‌ குத்தானந்தா, "இன்னிக்கு காந்தி ஜெயந்தி. எப்படியும் குத்தாட்டம் கும்மாளம் என்று அர்த்தமில்லாமல் ஆண்டு முழுவதும் ஓ(ட்)டிக்கொண்டிருக்கும் சேனல்கள் ஏதாவது ஒன்றில், சம்பந்தமில்லாமல் "காந்தி" படம் இன்று போடுவார்கள். அந்தப் படத்துல காந்தி பத்தி Albert Einstein சொன்னதா ஒரு வரி காட்டுவாங்க "Generations to come, will scarce believe that such a man as this one ever in flesh and blood walked upon this Earth". நம்ம நாட்டுக்காரங்களுக்கு எதையுமே வெளிநாட்டில் இருந்து யாராவது சொன்னாத்தான் ஏத்துப்பாங்க‌............... பாவம் Einstein. அவர் சொன்னது பலிக்க இருநூறு முன்னூறு வருடங்களாவது ஆகும் அப்படின்னு நம்பியிருப்பார். அவருக்கு இந்தியா பத்தி தெரியல. நாமெல்லாம் யாரு? எப்படி வேகமா வளர்ந்து கிழிக்கிறோம்...அவர் சொன்ன வார்த்தைகளை எவ்வளவு சீக்கரமா எழுபது வருஷத்திலேயே உண்மையாக்கிட்டோம் பார்த்தியா..." என்றபடி டாடா காட்டினார் குத்தானந்தா...




   .

Saturday, September 22, 2012

விருப்பப்படி விலையேற்றுவோம் ‍- சிதம்பரம் அதிரடி!



டீசல் விலை உயர்வுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுக்கிறது. கட்சிகளும் வழக்கம் போல தங்கள் நாடகங்களை ஆரம்பித்துள்ளன. நம் நாட்டில் தான் என்ன வேண்டுமானாலும் நடக்கலாமே சார். எனவே, வரும் வாரம் இந்தப் பதிவில் வருவதைப் போல ஏதேனும் நடந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது. அப்படி ஏதும் நிகழ்ந்து விடாமல் இருக்க பாரத மாதாவை வேண்டிக் கொள்வோம். இனி கற்பனைக்கு போகலாம். இன்றைய கற்பனை நம் நாட்டில் நாளைய செய்தி ஆகாது என்று என்ன சார் நிச்சயம்?

டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு குறித்து மன்மோகன் சிங், சிதம்பரத்திற்கு போன் செய்கிறார். "என்னப்பா சிதம்பரம், மக்கள் எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே...நாம் எதில் கை வைத்தாலும் கதை கந்தலாகிறதே...ஏதாவது செய்யப்பா" என்கிறார். சிதம்பரம், "கவலைப்படாதீர்கள். நம் மக்கள் எந்த எதிர்ப்பையும் நாலு நாள் செய்வார்கள். பிறகு ஆர்வம் வேறு விஷயங்களின் மீது போய் விடும். இருந்தாலும், நான் என் கடமையை செய்யாமல் இருக்க முடியுமா? நாளையே பத்திரிகையாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறேன். நான் பேசுவதற்கு தலையாட்ட இரண்டு அமைச்சர்களை வரச்சொல்லுங்கள்" என்கிறார்.

கூட்டம் ஏற்பாடாகிறது. "Times Now" போன்ற TV channels நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. இனி பத்திரிகையாளர்களின் கேள்விகளையும், சிதம்பரத்தின் பதில்களையும் பார்ப்போம்:

பத்தி: சார், மீண்டும் ஒரு விலையேற்றமா என்று மக்கள் கொதிக்கிறார்கள். அரசு என்ன செய்யப் போகிறது?

சிதம்பரம்: நீங்கள் அரசின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பாராட்டுகிறேன். எதையுமே செய்ய முடியாத அரசை பார்த்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று ஆக்கபூர்வமாக கேள்வி கேட்டதற்கு நன்றி.

பத்தி: நீங்கள் இன்னும் கேள்விக்கு பதில் சொல்லவில்லை.

சிதம்பரம்: மன்மோகன் சிங் ஏற்கனவே, ஒரு மெளனம் ஓராயிரம் பதில்களுக்கு சமம் என்று உங்களிடம்தானே போன வாரம் சொன்னார்? அவரின் அமைச்சரின் மெளனம் ஐநூறு மெளனங்களுக்காவது சமம் என்பதுதான் என் பதில்.

பத்தி: டீசல் விலை ஏறினால் அனைத்து பொருட்களின் விலையும் ஏறி விடுமே?

சிதம்பரம்: நாங்கள் இறங்கி விடும் என்று சொன்னோமா?

பத்தி: நீங்கள் மூத்த அமைச்சர். மக்கள் உங்களிடமிருந்து தீர்வுகளை எதிர்பார்க்கின்றனர்.

சிதம்பரம்: நான் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். ஐந்து வருடங்களுக்கு முன் உங்கள் சம்பளம் எவ்வளவு? (நிருபர் சொல்கிறார்). இப்போது எவ்வளவு? (நிருபர் சொல்கிறார்). (இன்னொருவரை எழுப்பி இதே கேள்வி கேட்கிறார். அவரும் பதில் சொல்கிறார்). பாருங்கள், அனைவரின் சம்பளமும் வருடா வருடம் கூடிகிறது. விலைவாசி கூடினால் மட்டும் குறை சொல்கிறீர்கள்? சம்பளம் கூடினால் வரும் அதிக பணத்தை விலைவாசி கூடினால் தானே செலவழிக்க முடியும்? (பதிலைக் கேட்ட பலர் மயக்கம் போட்டு விழுகின்றனர்!).

பத்தி: அப்படியென்றால் எந்த பொருளின் விலை உயர்ந்தாலும் நீங்கள் தடுக்க மாட்டீர்களா?

சிதம்பரம்: நாங்கள் டீசல் விலையைத்தான் உயர்த்தினோம். மற்ற பொருட்களின் விலை உயர்ந்தால், அந்தந்த அமைச்சர்கள் உங்களுக்கு விளக்கம் கொடுப்பார்கள்.

பத்தி: இந்த காஸ் சிலிண்டர் ரேஷன் முறை....(அவர் முடிக்கும் முன் சிதம்பரம் பதில் சொல்கிறார்)

சிதம்பரம்: என்ன கேள்வி இது? நம்ம நாட்டில் எத்தனை வீட்டில் தினமும் சமைக்கிறார்கள்? Pizza சாப்பிட்டு விட்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு சிலிண்டர் எதற்கு?

பத்தி: சார், உங்க ice cream - அரிசி விளக்கம் மாதிரிதானே சார் இதுவும்? நல்லா தெளிவாயிடுச்சு. நன்றி.

சிதம்பரம்: தலைப்புச் செய்தியா போடுங்க. அது மட்டுமில்லை. விருப்பப்பட்டா நாங்க விலையேத்துவோம்.அதையும் தெளிவாக போடுங்க...

(இதைக் கேள்விப்பட்டு நாடே கொந்தளிக்கிறது. நிலைமையை சமாளிக்க அடுத்த நாளே மற்றொமொரு பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடாகிறது)

சிதம்பரம்: பத்திரிகையாளர்கள் பொறுப்புடன் செய்திகள் போட வேண்டும். நான் "விருப்பப்படி விலையேற்றுவோம்" என்று சொன்னேன். ஆனால் யார் விருப்பப்படி என்று நீங்கள் கேட்டீர்களா? கேட்டிருந்தால், "மக்கள் விருப்பப்படி விலையேற்றுவோம்" என்று தெளிவுபடுத்தியிருப்பேன்...இப்போது பாருங்கள்...நான் சொன்னது எவ்வளவு தவறாக மக்களிடம் போய்ச்சேர்ந்திருக்கிறது...


என்ன பேசுவது என்று தெரியாமல் வாய் பிளந்தபடி நின்றிருந்த நிருபர்கள் வாயில் சிவகங்கையிலிருந்து சிறப்பாக வரவழைக்கப்பட்டிருந்த அல்வா வைக்கும்படி தன் உதவியாளரிடம் சொல்லிக்கொண்டிருந்தார் சிதம்பரம்.

நிருபர்களுக்கு மட்டுமா? நம் அனைவருக்குமே கொடுக்கக் கூடிய திறமையுள்ளவர்தானே அவர்!